Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 8

“நம்ம எங்க நல்லாருக்கோம்…??!!”

உமையாளின் இக்கேள்வி, பசுபதிக்கு தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். சிறிதும் யோசிக்காது உமையாள் சட்டென்று கேட்டுவிட, அதனை செவிகளில் வாங்கியவனுக்குத் தான், அப்படியொரு உணர்வு பிழம்பு..

இவள் என்ன அர்த்தத்தில் சொல்கிறாள் என்று??!!

‘இவள் என்னோடு நன்றாய் இல்லையா??!!’

அப்படியொரு எண்ணம் இருந்தால் தானே இப்படியொரு வார்த்தை வரும்??!!

ஆக அதுவே மனதில் பதிந்து உமையாள் ‘நான் உன்னோடு நன்றாக இல்லை…’ என்று சொன்னதாகவே அவனுக்கு மனதில் பதிய, அவனின் ‘ஆண்..’ என்ற அந்த ஈகோ வெகுவாய் வெகுண்டெழுந்தது.

‘என்ன சொல்றா இவ?? என்ன நல்லா இல்லையாம் இவளுக்கு?’ என்ற கேள்விகள் பிறக்க,

“என்ன?? என்ன சொன்ன நீ…??” என்றான், முற்றிலும் ஒரு இலகு பாவனை விட்டு.

“என்ன நான் சொல்லிட்டேன்??!!”  என்றாள் உமையாள்.

அவளுக்கு அவள் கேட்ட கேள்வியின் வீரியம் தெரியவில்லை போலும்.

“என்ன கேட்டியா?? என்ன கேட்டன்னு தெரியாதா உனக்கு?? உனக்கு என்ன குறைச்சல் இங்க?? சொல்லு டி என்ன குறைச்சல் இங்க…” என, உமையாளுக்கு திடீரென்று இவனுக்கு என்னானது என்ற யோசனை.

அவள் முகமும் அதனையே காட்ட “என்ன உமையாள்…??!! பதில் பேசு…” என்றவன், அவள் தோள் பிடித்து இழுத்து நிறுத்த, உமையாளுக்கு கொஞ்சம் பயம் வந்தது நிஜமே.

அப்போதும் கூட தான் என்ன தவறாய் கேட்டுவிட்டோம் என்ற எண்ணம்.

“பதில் பேசுன்னு சொன்னேன்…”

“இல்.. இல்ல.. அ.. அது.. நம்ம…”

“நம்ம இல்ல நீ… நீ தான்… நான் உன்னோட சந்தோசமா தான் இருக்கேன்.. ஆனா நீ.. நீ தான் அப்படி இல்லை சொல்லிட்டியே…” என்றவன்,

“எனக்கு அப்படியே ரொம்ப சந்தோசமா இருக்கு…” என்று இரு கைகளையும் அசைத்து சொல்ல,

‘அச்சோ..!!!’ என்று பார்த்தாள் உமையாள்.

‘இப்படி அர்த்தம் பண்ணிட்டாங்களா??!!!’ என்று அவளுள்ளம் பதற, “நா.. நான் அப்படில்லாம் சொல்லலைங்க…” என,

“அப்படித்தான் சொன்ன… அப்படியேத்தான் சொன்ன.. எப்படி அப்படி சொல்ல முடிஞ்சது உன்னால…” என்றவன்,

“ஹேய்.. இங்க பாரு… என்னோட வாழ்றது புடிக்கலன்னா இப்போவே சொல்லிடு..” என்றும் சொல்லிட,

‘ஐயோ..!!!’ என்று உதடுகள் அசைய, தன் நெஞ்சில் கை வைத்துவிட்டாள் உமையாள்.

“ஏங்க.. ஏன்.. ஏங்க இப்படி சொல்றீங்க??!!”

“ஆமா அப்படித்தான்.. உனக்கு தான் எல்லாமே குத்தமே.. நீ அழகா இருக்கன்னு சொன்னா கூட குத்தம்.. இதோ வீட்ல நம்மள தவற யாருமே இல்லை. உன்னோட கொஞ்சம் நல்லவிதம டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தா, நீ…” என்று அவள் சொன்னதையே சொல்ல வந்தவன்,

சொல்ல முடியாது “ச்சே…” என்று கைகளை உதறி, முகத்தை சுறுக்க, உமையாளுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை.

“நிஜமா நான்.. நான் தப்பா சொல்லலை..”

“நீ சரியா தான் சொன்ன… உன் மனசுல என்ன இருக்கோ அதைதானே சொல்லிருக்க…” என்றவன், “உன்ன எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு நினைச்சேன் தெரியுமா??” என்று கேட்டபடி அவளருகே வர, பயத்தில் உமையாளின் கால்கள் தன்னைப்போல் பின்னே நகர, அப்படியே பசுபதியும் நின்றுவிட்டான்.

இருவருக்கும் இடையே ஒருவர் நிற்கலாம். அவன் எதற்கு நெருங்க முயன்றானோ, அவளின் விலகளில் அவனுக்கு இன்னமும் மனம் வேதனையுற,

“சொல்லு உமையாள், என்னை உனக்கு புடிக்கலன்னா சொல்லிடு..” என,

உமையாளுக்கும் பொறுமை விட்டுப் போனது. தான் இல்லை இல்லை என்று சொல்ல, இவன் சொன்னதையே திரும்ப சொல்ல  என்று இருக்க,

“அப்படி சொன்னா என்ன செய்வீங்க??” என்றாள் நேருக்கு நேரே அவனைப் பார்த்து.

‘சொல்லிடுவாளோ…’ என்ற அதிர்வு இருந்தாலும்,

“உனக்கு புடிக்கலன்னா…” என்று இழுத்தவன் “உனக்கு என்ன பிடிக்குமோ அதை நீ செஞ்சுக்கலாம்..” என,

“ம்ம்ம்…” என்று அவனையே பார்த்தவள் பின் நிறுத்தி நிதானமாய் “எனக்கு இப்படியொரு வாழ்கை தான் வேணும்னு உரிமையா கேட்க, அப்பா அம்மா என்னை வளர்கல. இந்த வாழ்க்கை பிடிச்சாலும் சரி பிடிக்கலைன்னாலும் சரி, வாழ்ந்து தான் ஆகனும்னு ஒரு மன நிலையில நிற்கிற சூழ்நிலைல தான் நான் வளர்ந்தேன்..” என்றவள், அதற்குமேல் எதுவும் சொல்லாது சென்றுவிட்டாள்.

பெரும் நிசப்தம் அங்கே..!!

உமையாள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும், அவனுள் ஒலித்துக்கொண்டே இருக்க, ‘அப்பா அம்மா வளர்கல…’ என்றதில் இளகிய மனம், ‘பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் வாழ்ந்து தான் ஆகணும்…’ என்ற வார்த்தைகள் மேலும் பேரிடியை தான் இறக்கியது.

இதற்கு காரணமும் இருந்தது. இவர்கள் மறுவீட்டிற்கு என்று சென்னை சென்றபோது மாணிக்கம் இவனிடம் “நாங்க எங்களோட பொறுப்புள வளர்த்த பொண்ணு. அத்தைன்னா அவளுக்கு அவ்வளோ பாசம்.. எங்களுக்கு தெரிஞ்ச அளவு நல்லபடியாவே வளர்த்து இருக்கோம்…” என,

அவனும் பார்க்கையில், பிரேமா உமையாளிடம் நன்கு பேச, பாசம் காட்ட என்று இருக்க, இவளுமே அங்கே வாயாடிக்கொண்டு இருக்க, செல்லமாய் வளர்த்திருப்பார்கள் போல என்று எண்ணிக்கொண்டான்.

அப்படி இருக்கையில் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகிட வேண்டிய கட்டாயம் என்ன வந்தது இவளுக்கு??!!

‘இந்த மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொல்லிருந்தா இவளை என்ன செஞ்சிருக்கப் போறாங்க…’ என்று பசுபதி நினைக்க,

‘இந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கா…’ என்ற கேள்வியே அவள்முன் வைக்கப் படவில்லை என்பது இவனுக்கு யார் சொல்வார்?!

அறைக்குள் நுழைந்த உமையாளுக்கோ அப்படியொரு அழுகை. இதுநாள் வரைக்கும் இப்படியொரு அழுகை வந்ததில்லை..

‘பிடிக்கலன்னா.. பிடிச்சது செஞ்சிக்கலாமாம்… நான் கேட்டேனா??!! இல்லை நான் கேட்டேனா எனக்கு பிடிச்சது எல்லாம் செய்யனும்னு…’ என்று தனக்குள் தானே பேசியபடி, கட்டிலில் படுக்க, அவளுக்கு அங்கே படுக்கவும் கூட இப்போது பிடிக்கவில்லை.

‘அப்போ.. இவங்களுக்கு என்னை கொஞ்சம் கூட புரியலையா??!!’ என்று அழுகையினூடே முனுமுனுத்தபடி, கீழே பாய் போட்டு படுக்க, அவள் படுத்த நேரம் சரியாய் வந்தான் பசுபதி.

ஏற்கனவே பல குழப்படிகள், இப்போது அவள் கீழே வேறு படுக்க சொல்ல வேண்டியதே இல்லை.

அவன் வரும் சத்தம் கேட்டு, முகத்தை தலையணையில் மறைக்க, நின்று பார்த்தவனோ “இதோ இதுலயே தெரியுதே உனக்கு என்ன மனசுலன்னு…” என்றபடி அவனும் சட்டையை கழட்டிவிட்டு கட்டிலில் படுக்காது, இன்னொரு பக்கம் பாய் போட்டு படுக்க,

அவன் சொன்னதில் திரும்பியவள், அவனும் கீழே படுப்பது கண்டு  “நீங்க எதை மனசுல வச்சிட்டு பேசுறீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா கொஞ்சம் கூட என்னை புரிஞ்சுக்கலைன்னு நல்லா தெரியுது.. கல்யாணம் அன்னிக்கு என்னோட ஒவ்வொரு பார்வைக்கும் நீங்க அர்த்தம் புடிச்சு சொன்னப்போ எனக்கு அவ்வளோ சந்தோசமா இருந்தது.. ஆனா இப்போ…” என்றவள் பேச்சினை பாதியில் விட,

“என்ன ஆனா இப்போ??!!” என்றான் படுத்தபடி.

இருவரும் கட்டிலின் கீழே இந்தபக்கம் அந்தபக்கம் படுத்திருக்க, இடையே இருந்த இடைவெளியில் தான் முகத்தைப் பார்த்து பேசிக்கொண்டு இருக்க, அவன் கேட்ட கேள்விக்கு அவளுக்கு பதில் தெரியவில்லை.

கண்களில் கண்ணீர் நிற்காது வந்துகொண்டு இருக்க, முகமே சிவந்து போனது உமையாளுக்கு.

“எனக்குத் தெரியலை..!!” என்றவள், இதற்குமேல் தாங்காது என்றெண்ணி புரண்டு படுத்துவிட, அவனுக்கோ இவளுக்கு தன்னோடு பேசிட இஷ்டமில்லை என்பதாகவே பட்டது.

“ஆமாமா… உனக்கு தான் என்னோட வாழ்ந்தே ஆகணும்னு கட்டாயம்.. அது பிடிச்சாலும் சரி.. பிடிக்கலைன்னாலும் சரி… அதனால உனக்குத் தெரியாது…” என,

அவன் வார்த்தைகள் தாங்காது காதினை பொத்திக்கொண்டாள்..

கண்களை இறுக மூடி, அவள் அழுதுகொண்டு இருக்க, பசுபதிக்கோ எவ்வகையில் அவனின் ஆத்திரத்தை தணிப்பது என்று விளங்கவில்லை. சண்டை போட்டாலாவது பதிலுக்கு பதில் பேசலாம். இப்படி மௌனமாய் முதுகு காட்டி படுத்திருப்பவளை எழுப்பியா சண்டையிடுவது??!!

‘ச்சே.. சண்டை போடக் கூட இவளுக்கு என்னோட பேச புடிக்கல போல…’ என்றெண்ணி, அவனுக்கு அந்த நிமிடம், அந்த சூழல் வெறுத்தே போனது.

‘இப்படி பண்றாளே…’ என்று அவனுக்குத் தவிப்பாய் இருந்தாலும், தவறாய் புரிந்து கொண்ட வார்த்தைகளின் அர்த்தம் மாற நாட்கள் பிடிக்குமே..

நெற்றி சுறுக்கங்களோடு அவனுக்கும், கண்ணீர் விழிகளோடு அவளுக்கும் அன்றைய இரவு நகர, இருவருக்குமே ‘இது எப்படி இருந்திருக்க வேண்டிய பொழுது…’ என்ற ஏக்கமும் எட்டிப் பார்த்தது.

மருநாளிலோ பெரும் அமைதி..!!

ஏற்கனவே வீட்டினில் ஆட்கள் இல்லாது அமைதியாகிருக்க, இப்போது இவர்களின் மௌனமும் சேர்ந்துகொள்ள எதோ யோசனையிலேயே உமையாள் காபி கலந்து எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்னே வைக்க ‘தனக்கு பிடித்த டீ வருமா??!!’ என்று பார்த்தவனுக்கு, அவள் வைத்து சென்ற காபி, கசப்பைத் தான் கொடுத்தது.

‘அப்.. அப்போ.. எனக்கு புடிச்சதெல்லாம் செய்யனும்னு சொன்னது எல்லாம் சும்மா வெளி பேச்சுக்கு.. யாருமில்லைன்னாலும் அதெல்லாம் செய்ய வராது…’ என்று பசுபதி நினைத்து அவளைப் பார்க்க, அவளோ அடுப்படியில் இருந்து வெளி வரவேயில்லை.

ஆசையாய் இருந்தது உமையாளுக்கு. அவனுக்கு பிடித்த உணவுகளை செய்ய. சண்டைகள் தாண்டி, உணவு விசயத்தில் கோளாறு செய்யும் அளவு அவள் கோளாறானவள் இல்லையே. இருந்தும், அப்படி செய்தால், அதற்கும் ஏதேனும் சொல்வானோ என்று அச்சமாய் இருக்க, எண்ணங்களை அதன் போக்கில் விட்டு, கைகளை அதன் போக்கில் சமைக்க விட்டிருந்தாள்.

விளைவு எதோ ஒரு காலை உணவு. அதன் ருசி கூட அவள் பார்க்கவில்லை.

பசுபதிக்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர, இன்றைய நாள் வீட்டிலேயே இருந்திட வேண்டும் என்று முதல் நாள் மாலை வரை எண்ணியிருந்தவன், அதனை மறந்து கூட போனான்.

வீட்டினில் பெரியவர்களோ இல்லை வேறு யாரேனுமோ இருந்தால் கூட என்னவென்று கவனித்து புத்திமதி சொல்லி இருவரும் புரிய வைத்திருப்பர். இவர்களுக்கு தனிமை கொடுத்து என்று அவர்கள் சென்றிட, தனிமையாய் தான் பொழுதுகள் இருந்தது.

அவசரமாய் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைப்பு வர “இதோ வர்றேன்…” என்றவன்,

“நான் ஸ்கூல் போறேன்…” என்று ஹாலில் இருந்தபடியே சொல்லிவிட்டு அப்படியே கிளம்பியும் விட்டான்.

“சாப்பிட்டு…” என்று சொல்லிக்கொண்டே அவள் ஹால் வர, பசுபதி வாசல் தாண்டி இருந்தான்.

‘நான் செய்றதை சாப்பிட கூட பிடிக்கலையோ..’ என்றுதான் உமையாளுக்குத் தோன்றியது.

“ச்சே…” என்று அங்கேயே அமர்ந்துவிட, பிரேமா அழைத்துவிட்டார்..

முதல் நாள் முழுவதம் பேசவில்லை தானே.. ஆக இன்று அவரே அழைத்துவிட, உமையாளுக்கு இருந்த மன நிலையில் “உமையா எப்படி இருக்க??” என்ற பிரேமாவின் குரலில், மடை திறந்த வெள்ளமாய் அழுது விட்டாள்.

“அட.. உமையா?? என்னாச்சு.. ஏன் அழற நீ…” என்று பிரேமா பதற,

“நீங்க.. நீங்க ஏன் அத்தை இப்படி பண்ணீங்க… ஏன் என்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க?!!” என்று அழுகையினூடே அவள் கேட்க,

“உமையா?? என்னடா என்னாச்சு..?? ஏன் இப்படி பேசுற நீ.. என்ன பிரச்சனை…” என்று கேட்டவருக்கு உள்ளம் பதறியது.

“எனக்கு எதுவுமே பிடிக்கலை அத்தை.. நான் கேட்டேனா எனக்கு வசதியான வாழ்க்கை அமைச்சுக் கொடுங்கன்னு.. வசதி கம்மியா இருந்தாலும் அங்க உங்களோட நான் நல்லாதானே இருந்தேன்… இங்க எல்லாம் இருந்தாலும்.. நான் நல்லாவே இல்லை…” என்று சொல்லி அழ, பிரேமாவிற்கு அப்படியொரு அதிர்ச்சி..

சடுதியில் மனது என்னென்னவோ நினைத்துவிட, ‘அச்சோ பெண்ணுக்கு தப்பான வாழ்வை அமைத்துக் கொடுத்தோமோ…’ என்ற நினைப்பே, அவருக்கு நாடித் துடிப்பை எகிறச் செய்ய, உமையாளோ அது உணராது அழுதுகொண்டே பேச,

இது அனைத்தும் திரும்ப வீட்டினுள் வந்த பசுபதி காதிலும் விழுந்தது…

‘வேலை நிறைய இருக்கிறது.. வர தாமதம் ஆகும்..’ என்று சொல்ல வந்தவன் அப்படியே ஆணி அடித்தது போல் நின்றுவிட்டான்.

‘இதோ அவளே சொல்லிட்டாளே… அவளுக்கு பிடிக்கலைன்னு… நல்லா கேட்டுக்கோடா பசுபதி.. இதுதான் அவன் மனசு…’ என்று மனமே குரல் கொடுக்க, பசுபதி என்பவன் சிலையாகித்தான் நின்றான்.

எனக்கு இப்படியொரு வாழ்வா என்றெண்ணி.              

Advertisement