Advertisement

                   மனம் அது மன்னன் வசம் – 7

பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘என்னடா இது…’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன் தான். இருந்தும் மனைவியை எப்படி சரி செய்து சமாளிப்பது என்பது அவனுக்கு இன்னமும் புரிபடவில்லை.

‘நீ அழகாய் இருக்கிறாய்..’ என்றால், எந்தவொரு பெண்ணும் மகிழ்ச்சி தான் அடைவாள். அதிலும் புதிதாய் திருமணமானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கோ இந்த வார்த்தைகளே பிரச்சனைகள் கிளப்பும் என்று அவன் என்ன கனவா கண்டான்.

என்ன அவன் மட்டுமே ‘நீ அழகாய் இருக்கிறாய்…’ என்று சொல்லியிருந்தால் எதுவுமில்லை. ஆரம்பத்தில் இருந்தே, பெண் அழகாய் இருப்பதால் தான் திருமணமே என்றொரு பேச்சிருக்க அதுதான் பிசகாகிப் போனது.

இதற்கு பசுபதியும் பொறுப்பாகிட முடியாதுதான். ஆனாலும்  அவன் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். உமையாள் இயல்பான குடும்ப வாழ்வில் இருந்து வந்தவள் அல்ல.

தன் விருப்பங்கள் என்னவென்றே உணராது வளர்ந்தவள் என்று பசுபதி சற்றே மனதில் பதிய வைத்திருக்கவேண்டும். இல்லையோ திருமணத்திற்கு முன்னமே, அவளோட அவ்வப்போது அலைபேசியில் பேசி, தான் தன் குடும்பம் எல்லாம் எப்படி என்று சொல்லியிருக்கவேண்டும்.

கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல், தாலி கட்டி அவளை இங்கே வந்து விட்டு, அனைவர்க்கும் ஏற்றபடி இரு என்றால் அவள்தான் என்ன செய்வாள்??!!

பொருந்திப் போக நாள் பிடிக்கும். புதியவர்கள் என்கிற எண்ணம் போய், நம்மவர்கள், நம் குடும்பம் என்ற நினைப்பு மனதில் பதிய இன்னும் பலநாள் ஆகும் என்பது யார் சொல்வர்.

பனிமலரோ “அவ புது பொண்ணுடா.. நீதான் பார்த்து செய்யணும்…” என,

பால்நிலாவோ “அவளுக்குன்னு என்ன ஆசை எல்லாம் இருக்கும். உனக்கு செய்யனும்னு நினைச்சா விடேன்.. சித்தி சொல்றப்போ பார்த்துக்கலாம்…” என்று சொல்ல,

இவர்களின் கணவன்மார்களோ “மாப்ள நீ பேசாம தங்கச்சிய கூட்டிட்டு ஒருவாரம் பத்து நாள்னு எங்கயாவது போய்ட்டு வா.. வேலை எல்லாம் அப்புறம் வந்து பார்த்துக்கலாம். முதல்ல நீங்க ரெண்டுபேரும் ஒரு நிலைக்கு வாங்க..” என்று சொல்ல,    

ஊர் திருவிழா என்று சென்றிருந்த விநாயகம் அழைத்து “மினிஸ்ட பிஏக்கிட்ட பேசிருக்கேன்.. ரெண்டு நாள்ல எப்போனாலும் போன் வரும். நீ இன்னிக்கு சென்னை கிளம்பிடு…” என்று சொல்ல, இவர்களில் யார் சொல்வதற்கு செவி சாய்ப்பது என்று அறியாது அப்படியே அமர்ந்துவிட்டான் பசுபதி.

“சார்.. நாளைக்குள்ள அப்ரூவல் வந்திடுச்சுன்னா, லோன் ரெடி பண்ண ஈஸியா இருக்கும்…” என்றும் பேங்கில் இருந்து போன் வந்துவிட, அவன் அடுத்து மதுரை கிளம்பும் நிலை.

வீட்டினில் ஒருவரும் இல்லை என்றதும், அக்காள்கள் இருவரும் வந்துவிட, அடுத்து அவர்களை அழைத்துக்கொண்டு செல்லவென்று அவர்களின் கணவர்களும் வந்துவிட, வீட்டினில் கொஞ்சம் சமைத்து பின் கடையில் கொஞ்சமும் வாங்கியாகி விட்டது.

உமையாள் பசுபதிக்குத்தான் தனியாய் அழைத்துக் கேட்டாள்  “அண்ணிங்க எல்லாம் வந்திருக்காங்க.. மதியம் அண்ணங்க எல்லாம் வருவாங்களாம்.. என்ன செய்ய??” என்று.

“வந்திருக்காங்களா??!!” என்றான் லேசாய் அதிர்ந்து.

வருகிறோம் என்று யாருமே சொல்லவில்லை. இதற்கு முன்னே வேறு. இப்போது சொல்லத்தானே வேண்டும். திடீரென வந்து நின்றால், அவள் ஒருத்தியாய் இருக்கையில் என்ன செய்வாள்??

மனம் இப்படி போக “வீட்ல ஒரு கூட்டு பொறியல் வெள்ள சாதம் பண்ணிடு. கடைல இருந்து பிரியாணி மத்தது எல்லாம் டிரைவர் வந்து கொடுப்பார்….” என,

“அப்.. அப்போ.. நீங்க..??” என்றாள் மனைவி.

“நான் என்ன??!!”

“நீங்க சாப்பிட வரலையா??” என்று கேட்கும்போதே உமையாளுக்கு சத்தம் குறைந்துவிட்டது.

“இல்ல.. எனக்கு மதுரைல வேலை ஒன்னு இருக்கு. முடியவும் தான் வருவேன்..” என்றதும் முகமும் சேர்த்து வாடிட,

“ம்ம்… வேற யாரையும் அனுப்ப முடியாதா??” என்று உமையாள் கேட்க, அது அவனுக்கு சரியாய் விளங்காது “அதான் டிரைவர் வந்து கொடுப்பார் சொல்றேன்ல…” என்றான் எரிச்சலுடன்.

காலையில் கூட பனிமலரோடு பேசினான். அப்போது கூட சொல்லவில்லை வருகிறோம் என்று.

“ம்ம்ச்…” என்று சலித்தவன் “உமையாள்…” என்றழைக்க, அவள் அதற்குள் அழைப்பை துண்டித்து இருந்தாள்.

‘இதுவேறா…. போச்சுடா…’ என்று பார்த்தவன், பின் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து, பியூனிடம் பேசி, கடைக்கு ஆள் அனுப்ப சொல்லி, தேவையானதை வாங்கிக் கொண்டு போய் வீட்டிற்குக் கொடுக்கச் சொல்லி வைக்க, அடுத்து பால் நிலா அழைப்பில் வந்துவிட்டாள்.

“வா க்கா…” என்றான் அவனின் உணர்வுகளை மறைத்து.

“நாங்க வந்தது இருக்கட்டும் டா.. நீ எப்போ வர்ற..??!! நீ வரலையாம்.. உமையா முகமே எப்படியோ போச்சு…” என,

‘சுத்தம்… அவளே சும்மா இருந்தா கூட நீ விடுவியா என்ன??’ என்றுதான் அவனுக்குத் தோன்ற,

“ஒரு வேலை மதுரைக்கு வந்துட்டேன்.. முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு தான்..” என்றான் அடக்கப்பட்ட குரலில்.

“ம்ம் என்னவோ போ… வீட்ல யாருமில்ல.. நீ வந்தா சிலது எல்லாம் கலந்து பேசிடலாம்னு பார்த்தோம்…” என,

“க்கா… தயவு செஞ்சு… இப்போதைக்கு எதுவும் வேணாம்.. சும்மா இருங்க.. வந்தோமா சந்தோசமா இருந்தோமான்னு இருக்கணும்.. அதைவிட்டு…” என்றவன் பாதியில் பேச்சினை நிறுத்த,

“அக்கா… இங்க பாரேன் தம்பி என்ன சொல்றான்னு…” என்று அப்படியே பால்நிலா பனிமலரிடம் பசுபதி பேசியதை பேச,  அக்காள்கள் இருவருக்குமே முகம் வாடிட,

‘எதுவும் சண்டையோ…??!’ என்று அஞ்சிப் போய் பார்த்துக்கொண்டு இருந்தாள் உமையாள்.

திருமணமாகி, கணவன் மனைவி ஒருவரில் ஒருவர் பொருந்திப் போவதற்குள் எத்துனை எத்துனை இடையூறுகள்..!!!

பசுபதிக்கு அந்த நொடியில் சுத்தம்மாய் வெறுத்துப் போனது. ‘கொஞ்சம் எங்கள எங்க போங்குல விடுங்களேன்…’ என்று உடன் பிறப்புக்கள் இருவரிடமும் கத்த வேண்டும் போல் இருந்தாலும், அப்படி செய்திட முடியாது தானே.

அவர்களுக்கும் அவன் ஒருவன் தானே..!!!

கண்களை இறுக மூடி, சற்றே தன்னை சமன் செய்தவன், “க்கா..!!!” என்றான்..

அங்கோ பால்நிலாவும், பனிமலரும் ஏதேதோ உமையாளிடம் பேசி அங்கலாய்ப்பது இவனுக்கு நன்கு கேட்க “ஆண்டவா..!!” என்று நொந்துகொண்டான்.

அபிராமியோடு உமையாள் ஒருவிதத்தில் ஒத்துப் போவது பசுபதிக்கு சந்தோசமே என்றாலும், அக்காக்கள் இருவரும் அதை இதை சொல்லி எதையும் தூண்டிவிடக் கூடாது என்பது இருந்தாலும், யாருக்காகவும் யாரையும் பகைக்கவோ வேண்டாம் என்று ஒதுக்கவோ முடியாது.

அது உமையாளுக்கு புரியவேண்டுமே..!!

இவர்களின் பேச்சினை கேட்டு அவள்பாட்டில் ஏதேனும் மனதில் ஒன்றை கற்பனை செய்துவிட்டால்??!!

இவனுக்கு இப்படி என்றால், உமையாளுக்கு கேட்கவா வேண்டும். இவர்கள் பேசுவதில் பாதி அவளுக்கு விளங்கவில்லை.

“அன்னிக்கு அப்படி சொன்னாங்க… இன்னிக்கு இப்படி செய்றாங்க…” என்று இருவரும் என்னென்னவோ பேச, நல்லவேளை இன்னும் இருவரின் கணவர்களும் வந்து சேரவில்லை.

பசுபதி என்ன சொல்லி அக்காக்களின் வாய் மூட என்று யோசிப்பதற்குள் அடுத்தடுத்து வேலைகள் வந்துவிட ‘அட போங்கடா…’ என்று இதனை கிடப்பில் போட்டு, அதனைப் பார்க்கச் சென்றுவிட்டான்.

திரும்ப அவன் வீடு செல்லவே இரவு எட்டாகிட, வீடே அமைதியாய் இருந்தது. தெரியும் வேலையாட்கள் யாரும் இந்நேரம் வரைக்கும் இருந்திட மாட்டார்கள் என்று. முன் பக்க கதவு பூட்டி இருக்க, எப்போதும் அவன் வீட்டினுள் செல்லும் வழியில் உள் செல்ல, அத்தனை பெரிய வீட்டில், யாருமே அல்லாது அப்படியொரு அமைதி.

‘என்ன செய்றாளோ…’ என்று பார்த்தபடி “உமையாள்…” என்று சத்தமிட,

“இங்க இருக்கேங்க…” என்று சமையல் அறையில் இருந்து சத்தம் கேட்டது.

யாருமில்லா தனிமை.. எங்களைத் தவிர இங்கே யாருமே இல்லை என்ற நினைப்பே பசுபதிக்கு மற்றதை விடுத்து உள்ளத்தில் ஒரு உற்சாகம் தர “மேடம் என்ன செய்றீங்க??” என்றபடி அவளை பின்னிருந்தே அணைத்து நிற்க,

“என்னங்க.. என்ன??!! என்ன செய்றீங்க..” என்று சற்றே அரண்டு தான் திமிறினாள் உமையாள்.

அடுப்படி பக்கம் எல்லாம் அங்கே ஆண்கள் வந்து பழக்கமில்லை..!!

“நான் என் பொண்டாட்டிய கட்டிப் பிடிக்கிறேன்…” என,

“அச்சோ…!!” என்று தலையில் அடித்தவள், “தள்ளுங்க.. சட்னி தாளிக்கணும்…” என,

“அடிப்பாவி..!!” என்றான் பசுபதி.

இருவருக்கும் நடந்த சண்டைகளும் அப்படியே தான் இருந்தது. காலையில் இங்கே உடன்பிறப்புக்கள் செய்த  வாக்குவாதங்களும் அப்படியே தான் இருந்தது. இருந்தும் இந்த பொழுது அவனுக்கு ஆசைகளை கிளரிட, மனைவியை நெருங்கிடவே விருப்பம் கொண்டான்.

“ஏய் என்ன டி ரொம்ப பண்ற??” என்றவன் அணைப்பை இறுக்கிட,

“பண்றது எல்லாம் நீங்க.. இதுல சொல்றது என்னையா ??” என்றாள் பதிலுக்கு.

“ஷ்..!!! உமையாள்… நினைச்சு பாரு.. யாருமே இல்லை… சுத்தியும் பாரு.. நீயும் நானும் மட்டும் தான்.. இப்படியொரு டைம் வீட்ல இனி கிடைக்குமா தெரியாது.. மத்தது எல்லாம் விடு.. நம்மை நினைச்சுக்கோ.. நம்மை மட்டும் நினைச்சுக்கோ…” என்று அவள் கன்னம் பற்றி, கண்ணோடு கண் பார்த்து சொல்ல,  அவன் சொன்ன விதத்தில் அவளுக்குமே உள்ளூர ஓர் மாற்றம் தான்.

பார்வையை சுற்றிலும் ஓட விட்டவள், பின் ஏதோ தோன்ற “தோசை சுடுறேன்…” என்றுவிட்டு திரும்ப,

“இது நான் சொன்னதுக்கு பதிலா??!!” என்றான்.

“இல்லைதான்.. ஆனாலும் இப்போதைய வேலை சாப்பிடுறது.. முதல்ல அதை முடிக்கணும்…” என,

“அடுத்து??!!” என்றான் ஆவலாய்..

“அதை அப்புறம் பாக்கலாம்…” எனும்போதே, அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அவன் மீது கோபம் எல்லாம் இல்லை.. இருந்தும் சில குழப்பங்கள் இருந்தது நிஜமே. அதுவும் கூட இந்த சூழலில் எங்கோ சென்று ஒளிந்துகொள்ள, இருவருக்கும் அந்த உணவு நேரம் ரம்யமாய் தான் கழிந்தது.

அவன் அவளுக்கு தோசை சுட்டு வைக்க “அட உங்களுக்கு இது தெரியுமா??” என,

“தெரியும்னு இப்போதான் எனக்குத் தெரியும்..” என்றான் கெத்து குறையாது..

“ஓ..!!” என்றவள், “எதுக்கும் நீங்களும் ஒரு வாய் சாப்பிடுங்க.. அப்போதான் சேப்டி…” என்று சொல்லி சிரிக்க,

“அடி…!!” என்று கரண்டி கையோடு ஓங்கியவன், அடுத்தும் அவளுக்கு சுட்டு வைக்க, உமையாளுக்கு மற்றது எல்லாம் மறந்தே போனது என்று கூட சொல்லலாம்.

பேச்சு சிரிப்புமாய் தான் பொழுது நகர, இருவருக்கும் உறக்கம் என்பது கிஞ்சித்தும் வரவில்லை. ஹால் சோபாவில் அமர்ந்து பேச, பேச்சு செல்ல செல்ல பசுபதி உமையாள் மடிமீதே படுத்துக்கொள்ள, இதெல்லாம் இவர்களுக்கு இங்கே முதல் முறை.

என்னவோ அவனுக்கு அந்த நொடி “சொல்லு உமையாள்.. எங்க போலாம்… நீயும் நானும்.. எங்க போலாம்..” என,

“எப்போ..??!!” என்றாள் வேகமாய்.

“ம்ம்.. இப்போதைக்கு இல்ல.. ஆனா கண்டிப்பா போலாம்.. எங்கன்னு சொல்லு.. உன்னோட விருப்பம்…”

“ம்ம்ம் அப்போ போறோம்னு சொல்றப்போ சொல்றேன் சரியா…” என்று கேட்க,

“ஹ்ம்ம்..!! அதுவும் சரிதான்…” என்றுவிட்டான்.

“சூப்பரா இருக்குல்லங்க… சுத்திலும் யாருமில்லை.. நம்மலே நம்ம மட்டும்தான்.. இத்தனை நாள் ஹால்ல நீங்க இருந்தாலும் கூட இந்த பக்கம் வர யோசிக்கணும்…” என்றாள், அவன் கேசம் அளந்தபடி.

“இங்க அப்படித்தான் பழக்கம்.. எங்க தாத்தா முன்னாடி, எங்கம்மா எல்லாம் வரக்கூட மாட்டாங்க…” என,

“ம்ம்.. சின்னண்ணி சொன்னாங்க.. மேல போர்சன் தனியா பண்ணிட்டா, நீங்கபாட்டுக்கு இருக்கலாம்…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.

“உமையாள்..!!!” என்று அதட்டிவிட்டான்.

அதட்டியவன் அப்படியே எழுந்தும்விட ‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன்…’ என்று அவள் பார்க்க,

‘பொறுமைடா பசுபதி…’ என்றெண்ணியவன் “நீ என்ன சொன்ன அதுக்கு??” என்றான், சாய்ந்து அமர்ந்தபடி.

மனதில் எங்கோ எச்சரிக்கை மணி அடித்தது..!!

“நான் ஒன்னும் சொல்லலை…” என்றவளின் தொனியே மாறிட,

“ம்ம்.. அப்புறம்…” என்றான்.

“என்ன அப்புறம்.. அண்ணி சொன்னாங்கன்னு தானே சொல்லிட்டு இருந்தேன். உடனே அப்படி அதட்டுறீங்க..” என்றவள்,

“இங்க பாருங்க.. அண்ணிங்க வந்தாங்க, பேசினாங்க எல்லாம் சரி. ஆனா எனக்கு அதுல பாதி புரியல.. அவங்கள கவனிச்சு நல்லபடியா அனுப்பனும்னு தான் எனக்கு இருந்துச்சு. நீங்களாவது வருவீங்கன்னு பார்த்தா.. அதுவும் இல்லை.. அவங்க பேசினதை சொல்ல வந்தா, முழுசா கேட்காம என்னைய அதட்டுறீங்க..” என்று பதிலுக்கு அவளும் படபடவென பொரிய,

அவனோ அமைதியாகவே அவள் முகம் பார்த்து அமர்ந்திருந்தான்.

“என்ன அமைதியாகிட்டீங்க..??!!”

“தப்புதான்… ஆனா இந்த பேச்சு சித்தி சித்தப்பா இருக்கப்போ நடந்திருந்தா என்னாகிருக்கும் சொல்லு..” என,

“என்னாகிருக்கும்..??!!” என்றாள் புரியாது.

“அவன் வேலை முடிஞ்சதும் தனியா போயிட்டான்னு என்னை சொல்வாங்க.. இல்லை புருசன தனியா கூட்டிட்டு வந்துட்டான்னு உன்னை சொல்வாங்க.. ஒரே வீடுதான்னு இருந்தாலும் பேச்சு இப்படிதான் வரும்..

அக்கா ரெண்டு பேருக்கும் சித்தி கூட அவ்வளோ ஒட்டுதல் இல்லை. ஆனா உனக்கு செட்டாகுது தானே.. அதைமட்டும் நினை போதும்..” என்றான் சற்றே இலகுவான குரலில்.

“இப்போ நான் என்ன வேற சொல்லிட்டேன்…??!!”

“வேற எதுவும் சொல்லிட யோசிக்கக் கூடாதுன்னு தான் சொல்றேன்.. அக்காவுங்க யார் இதைபத்தி அடுத்து உன்கிட்ட பேசினாலும், நாங்க நல்லாத்தானே இருக்கோம்.. ஏன் தனியா போகணும்னு ஒரு வார்த்தை திருப்பிக் கேளு.. நான் பேசினா அது வேற மாதிரி ஆகும்..” என்று எடுத்து சொல்ல,

“நம்ம எங்க நல்லாருக்கோம்..??!!” என்றாள் பட்டென்று..                  

Advertisement