Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 6

ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த பின்னே அவனுக்கு இருக்கும் வேலைகள் பற்றி சொன்னான். உமையாளும் கேட்டுக்கொண்டாள். பின் சில குடும்ப பேச்சுக்கள். பிரச்சனைக்குறிய விசயங்களை தவிர்த்துவிட்டான்.

உமையாள் அப்படி பேசியதும், அவனுக்கும் சுள்ளென்று வந்ததுதான்.  கோபத்தை அடக்க பெரும்பாடாய் தான் இருந்தது பசுபதிக்கும்.

சொல்ல வருவதை முழுதாய் கூட கேட்காது என்ன இவள் என்று பார்க்க,  அவளுக்கு இங்கே பொருந்த நாள் எடுக்கும் என்பது அவன் முன்னமே யோசித்து வைத்தது எல்லாம் மறந்து போனது.

இருவருக்கும் இடையில் பெரும் மௌனம் வந்து குடிகொள்ள, உமையாளுக்கு பசுபதியின் இந்த அமைதி மனதில் சிறிது அச்சம் கொடுத்தது. யோசிக்காது பேசிவிட்டோமோ என்று தோன்றினாலும், அவளும் தான் என்ன செய்வாள்.

பார்வையை மட்டும் அவன் பக்கம் திருப்ப, அவனோ கண்களை மூடி அமர்ந்திருந்தான். முகமே எப்படியோ இருக்க, உமையாளுக்கு சங்கடமாய் போனது.

“ஏ… என்னங்க..” என, அவனிடம் பதில் இல்லை.

பசுபதியின் கவனம் இங்கில்லை.. உமையாளுக்கோ மற்றது எல்லாம் விடுத்தது இப்போது அவன் மீதே கவனமிருக்க, “என்னங்க..” என்றாள் மீண்டும் அவன் கை தொட்டு.

“ம்ம்.. என்ன உமையாள்…” என்று பார்க்க,

“கோவமா??!!”

“எதுக்கு??”

“இல்ல அமைதியா ஆகிட்டீங்க. முகமே எப்படியோ இருக்கு..” என,

“அதெல்லாம் இல்ல..” என்றவன், “போய் நிறைய வேலை இருக்கு. அதை யோசிச்சேன்..” என்றான்.

பின் என்னென்ன வேலைகள் என்று சொல்லவும் செய்ய,              ‘நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கப்போ இவங்களுக்கு வேலை பத்தி யோசனையா??’ என்ற எண்ணம் ஓடியது.

அப்பா அம்மா இல்லை. அத்தையின் வளர்ப்பு. அவளுக்கு எதெல்லாம் பிடிக்கும் என்று அவள் யோசிக்கும் வாய்புகள் கூட அவளுக்கு இல்லை. இப்போது அவளுக்கென்று ஒரு வாழ்வு, அவளுக்கென்று ஒருவன் வரவும் மனதில் மெல்ல மெல்ல ஆசையில் வேர் விட்டது.

“ஊருக்கு போய்ட்டு அடுத்து ரெண்டு தடவ வெளியூர் போக வேண்டியது இருக்கு உமையாள். அதான் என்ன எப்படின்னு யோசிச்சேன்.. ஸ்கூல் வேலை வேற இழுத்துட்டே போகுது..” என,

உமையாளோ நாம் தனியாய் எங்கும் செல்வோமா?? என்பது பற்றி பேசுவானோ என்று பார்க்க, அப்படி எதையும் பேசியதாய் காணோம்.

அவளுக்குத் தெரிந்தது எல்லாம் சென்னை சென்னை சென்னை மட்டுமே. அங்கேயும் கூட பிரேமா கூட்டி சென்ற இடங்கள் மட்டுமே. ஒரே ஒருமுறை ராமேஸ்வரம் வந்திருக்கிறாள். அதை தாண்டி வேறெங்கிலும் சென்றது இல்லை.

திருமணம் என்றதுமே சஞ்சலப்பட்டு அஞ்சிய மனது, பசுபதியின் பிரியத்தில் இப்போது அப்படியே தலைகீழாய் மாறி இருந்தது.

என் கணவன்..!! என் வாழ்வு..!!

என் வாழ்வை பற்றி எனக்கிருக்கும் ஆசைகள் கனவுகள் என்று அவள் மனதில் பல பல எண்ணங்கள். அது நியாயமும் கூட தானே. வயது இருக்கும் போதே வாழ்ந்து கொள்ளவும் வேண்டும் தானே.

உமையாள் பார்வையில் லேசானதொரு எதிர்பார்ப்பு தெரிய, அப்போதிருந்த மனநிலையில் பசுபதி அதனை கவனிக்கவில்லை. சொல்லப்போனால் பள்ளிக்கூட வேலைகள் நிறைய இருப்பது நிஜமே. சில நேரங்களில் வீடு வர நேரமெடுக்கும் என்பதால் இப்போதே சொல்லிவிடலாம் என்று அவன் சொல்ல, அமைதியாகவே கேட்டுக்கொண்டாள் உமையாள்.  

ஊர் வந்த பின்னும் கூட, அவள் எதுவும் சொல்லவில்லை. அபிராமியின் சித்தி ஒருவர் வந்திருக்க, இவர்களை கண்டதுமே “கல்யாணத்துக்கு வர முடியலை.. அதான் இப்போ பார்க்கலாம்னு வந்தேன்…” என்றவர் பேச, உமையாளுக்கு ட்ரைனில் வந்தது கசகசவென்று இருக்க, சென்று குளித்து வந்தால் தேவலாம் போல் இருந்தது.

சிறிது நேரம் இருந்துவிட்டு “பேசிட்டு இருங்க…” என்று பசுபதி அறைக்கு சென்றுவிட்டான்.

பேச்சுக்கள் பெரும்பாலும் அபிராமியும் அவரின் சித்தியுமே பேசிக்கொள்ள, இவளுக்கு நிறைய விஷயங்கள் புரியவும் இல்லை. உமையாள் வேடிக்கை மட்டுமே எத்தனை நேரம் பார்க்க, பசுபதி வருவானா என்று பார்த்தால், அந்த அரவுமும் இல்லை. பிரியங்காவும் அவள் தம்பியும் இருக்கும் இடம் கூட தெரியவில்லை.

பார்வையை சுற்றி ஓட்டிப் பார்க்க, அதனை கவனித்த அபிராமி “என்ன உமையா..??” என,

“இல்ல பசங்க யாரையும் காணோமே…” என்றாள்.

“எங்க அண்ணன் ஊர்ல திருவிழா.. ரெண்டு நாள் முன்னமே அனுப்பி வைன்னு சொன்னாங்க.. அங்க போயிருக்காங்க.. நானும் அவரும்  நாளைக்கு சாயங்காலம் கிளம்பனும்..” என,

“எப்போ திரும்பி வருவீங்க அத்தை…??” என்றாள் சாதாரணமாய்.

“ஏன்?? அதை தெரிஞ்சு நீ என்ன செய்யப் போற?? கிளம்பி போறவங்களுக்கு வரத் தெரியாதா என்ன??” என்று கேட்டு அபிராமியின் சித்தி கேட்க, உமையாளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

அபிராமியோ அவள் முக மாற்றம் உணர்ந்து “அட என்ன சித்தி.. அவ சாதாரணமா தானே கேட்டா…” என்றபடி “நாளைக்கு நீங்களும் தானே அங்க ஊருக்கு வருவீங்க..” என்று பேச்சினை மாற்ற, உமையாளுக்கு அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை.

“எனக்கு கொஞ்சம் பிரெஷ் ஆகிக்கனும்…” என்றவள், யாரின் பதிலுக்கும் எல்லாம் காத்திருக்காது எழுந்து மேலே வந்துவிட்டாள்.

அவளைப் பொறுத்த மட்டில், அபிராமி இந்த வீட்டின் பெரியவர், அவர் கேட்பவைகளுக்கு பதில் சொல்லலாம். அது அவளின் கடமையும் கூட. அதற்காக வீட்டிற்கு சொந்தம் என்று வருபவர்கள் பேசும் அசட்டு பேச்சுக்களுக்கு  எல்லாம் பதில் சொல்லும் கடமை இல்லை. வந்திருப்பவர்களை நல்லபடி கவனித்து அனுப்புவது மட்டும்தான் செய்திட முடியும்.

முகத்தை உர்ரென்று வைத்து அறைக்குள் நுழைய, பசுபதி அப்போது தான் குளித்து வந்திருக்க “உமையாள் என்ன வந்துட்ட??” என்றான் இலகுவாய்.

அவள் பதிலே சொல்லாது பார்க்க “அட என்னம்மா??” என,

“அப்படியே விட்டுட்டு வந்துட்டீங்க…” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

“வேற நான் என்ன செய்யணும்…?” என்று பசுபதி கேட்க, “கூட இருக்கணும்…” என்றாள் பட்டென்று.

“நீங்க லேடீஸ் பேசுறப்போ நான் இருந்து என்ன செய்ய??” என்று அவனே சொல்லி சிரிக்க, அவளுக்கு எரிச்சலாய் இருந்தது.

நீ என்னவோ சொல் என்பதாய் அவள் பாட்டிற்கு அவளின் உடைகளை எடுத்துக்கொண்டு குளிக்கச் செல்ல, ‘என்ன இவ??’ என்றுதான் பார்த்தான்.

சரி வரட்டும் கேட்போம் என்று பசுபதி இருக்க, அதற்குள் அவனுக்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர, அதில் மூழ்கிப்போனான். உமையாள் குளித்து வந்து, தயாராகி கீழே செல்ல, அப்போதும் அங்கே பேச்சுக்கள் தான். அவள் கீழே செல்வதைப் பார்த்து பசுபதியும் பேசி முடித்து உடன் வர, அங்கே விநாயகம் வந்திருந்தார்.

“என்ன சித்தப்பா…” என்றபடி அவரின் அருகே பசுபதி அமர,

“என்னடா எப்படி போச்சு…” என்றவர், உமையாளிடம் “என்னம்மா…” என்றார் ஒரு பேச்சிற்கு.

உமையாளும் ஒரு புன்னகையோடு நிற்க, “ஒரு பேச்சுக்கு கிண்டல் பேசினேன்டா. உன் பொண்டாட்டிக்கு கோபம் வந்திடுச்சு போல…” என்று அபிராமியின் சித்தி திரும்ப ஆரம்பிக்க, பசுபதிக்கு என்னவோ என்று பார்வை அவளிடம் செல்ல, அவளோ கோர்த்திருந்த தன் கைகளைப் பார்த்து தான் நின்றாள்.

பேச்சிற்கு கூட இல்லை என்று மறுக்கவில்லை.

அபிராமியும் இவள் ஏதேனும் சொல்வாளோ என்று பார்க்க, உமையாள் வாய் திறக்கவே இல்லை.

“சித்தி நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… வா உமையா நைட்டுக்கு என்ன செய்யலாம்னு பாக்கலாம்.. நேரம் போயிடும்.. நீங்களும் சீக்கிரம் சாப்பிட்டு தூங்குங்க…” என்று அவளையும் அழைத்துக்கொண்டு அடுப்படி சென்றுவிட்டார் அபிராமி.

அபிராமி ஏதேனும் சொல்வாரோ என்று காத்திருக்க “சிலது நமக்கு புடிக்காதது எல்லாம் நடக்கும். சட்டுன்னு முகத்துல காட்டக் கூடாது. உனக்கு பதில் சொல்ல பிடிக்கலன்னா சிரிச்சு மட்டும் வை..” என்றார் சட்னிக்கு தேங்காய் துருவிக்கொண்டே.

‘ஓ..!! இப்படியும் இருக்கா…’ என்று எண்ணியவள், “ம்ம்…” என்று சிரிப்போடு தலை ஆட்ட,

“இப்போ இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்??” என்று கேட்ட அபிராமிக்குமே புன்னகை தான்.

என்னவோ அபிராமிக்கும் உமையாளுக்கும் நன்கு ஒத்துப் போனது. பால்நிலாவிடம் பேசுவது போல் அபிராமி பேசுவதில்லை. பசுபதி நினைப்பது போலவும் இருவருக்கும் இடையில் எதுவும் பிணக்கு வரும் வாய்ப்பெல்லாம் இல்லவே இல்லை.

பெண்களை புரிந்துகொள்ள முடியாது என்பது இதுதானோ என்னவோ??!!

இருவரும் தான் பேசியபடி இரண்டு வகை சட்னி செய்து, அடுத்து தோசை வார்க்க, “நான் சுடுறேன்.. நீ பரிமாறு…” என்று அபிராமி சொல்லவும்,

உமையாள் போய் “பாட்டி சாப்பிட வாங்க…” என்று முதலில் அவரின் சித்தியை அழைக்க, அடுத்து “சாப்பிட வாங்க…” என்று ஆண்கள் இருவரையும் அழைக்க,

‘அட..!!’ என்றொரு பார்வை தான் பசுபதியிடம்.

அபிராமி இரண்டு கல்லில் மாறி மாறி தோசை வார்த்துக் கொடுக்க, உமையாளும் இவர்களுக்கு பரிமாற “பரவாயில்ல… அழகான பொண்ணுன்னு மட்டும் தான் நினைச்சேன்.. கொஞ்சம் வழமையும் இருக்கு…” என்றார் அபிராமியின் சித்தி.

அப்போதும் அதே புன்னகை உமையாளிடம்..!!

விநாயகமோ “பின்ன.. நம்ம வீட்டு பொண்ணுங்க என்னிக்கு எதுல கம்மி..” என,

“இல்ல அன்னிக்கு அபி சொன்னா.. பொண்ணு அழகுன்னு சொன்னதுமே, பசுபதி போட்டோ கூட பார்க்கல சரின்னு சொல்லிட்டான் அப்படின்னு.. அதான் அழகு மட்டும் போதுமா குடும்பத்துக்குன்னு யோசிச்சேன்..” என்று இப்படி பேச்சு போக, என்னவோ சுறுக்கென்று அவளுக்கு மனதிற்குள் தைத்தது.

மாணிக்கமும் முதன் முதலில் அதைதானே சொன்னார் ‘பொண்ணு அழகா இருந்தா போதும்..’ என்று.

‘நீ செம்ம அழகு டி…’ என்று அவனே கொஞ்சியிருக்கிறானே..

அப்போது இனிப்பாய் இருந்தது, இப்போது என்னவோ அவளுக்கு அப்படி இனிப்பை கொடுக்கவில்லை. நெற்றி சுறுக்கி யோசனைக்கு சென்றுவிட, “உமையாள்…” என்ற பசுபதியின் குரலில் தான் “ம்ம்…” என்று பார்க்க,

“சித்தப்பாக்கு தோசை வை…” என்றான் ஒரு கண்டிப்புக் குரலில்.

“ஹா… இதோ…” என்றவள், அடுத்து முயன்று அங்கே கவனம் செலுத்த, அன்றைய தினம் உறங்கும் வேளையில் பசுபதி கேட்டே விட்டான் “அப்பப்போ எங்க போகும் உன்னோட யோசனை.??” என்று.

“ஏன்??!!”

“இல்லை.. திடீர் திடீர்னு ஆஃப் ஆகிடுற அதான் கேட்டேன்…”

“ம்ம் தெரியலை…” என்றாள் விட்டேத்தியாய்.

“தெரியலையா? நீ என்ன யோசிக்கிறன்னு கூட தெரியலையா…” என்றவனின் கரம் அவளைச் சுற்றி “சோப்பு வாசம் இழுக்குது..” என்றபடி அவளின் கன்னத்தில் இதழ் பதிக்க, அவளிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை.

“என்ன உமையாள்…” என்றவனின் பிடி இறுக, “ம்ம் ஒண்ணுமில்லை தூக்கம் வருது…??” என, சட்டென்று விலகிவிட்டான்.

அவள் அப்படி சொன்னது பிடிக்கவில்லை என்றில்லை. சொல்லும் அவள் குரலில் இருந்த பேதம் அவனை விலகச் செய்ய,

“என்னாச்சு…” என்றான்.

கேட்க கூடாது என்று நினைத்தும் அவன் வாய் கேட்டிருக்க, “ஒண்ணுமில்லை..” என்று அழுத்தமாய்.

அவள் அப்படி சொல்வதே எதோ ஒன்று இருக்கிறது என்று விளங்க “என்னன்னு சொன்னா மட்டும்தான் தெரியும். இஷ்டம்னா சொல்லு.. இல்லன்னா விடு..” என்று இவனும் புரண்டு படுக்க, இருவரின் முதுகும் தான் பார்த்துக்கொண்டு இருந்தது.

தான் அணைக்கும் வேளையில் கூட இவளுக்கு வேறென்ன யோசனை என்று அவனுக்கு..

‘அழகான பொண்ணுன்னா கொஞ்சம் திமிராவும் இருப்பா போல..’ என்று ஒரு சராசரி ஆணாய் பசுபதியின் உள்ளம் நினைக்க,

அதே நேரம் அவளும் கேட்டாள் “என்னை எதுக்காக கல்யாணம் பண்ணீங்க??” என்று.

“ம்ம்ச் என்ன கேள்வி இது??”

“சொல்லுங்க.. போட்டோ கூட பார்க்கலையாமே…”

“முதல்ல பார்க்கல…” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.

அவளும் கூடத்தானே அவனின் புகைப்படத்தை சரிவர கூட பார்க்கவில்லை. இப்போது அதெல்லாம் அவளுக்கு நியாபகம் இல்லை. அவன் பதில் சொல்லவுமே

“பின்ன.. அழகா இருந்தா மட்டும் போதும்னு நினைச்சீங்களா??” என,

“ஏய் என்ன??” என்றான் பொறுமையை விடுத்தது.

“சொல்லுங்க.. பொண்ணு கேட்டபோவும் கேட்டப்போவும் பொண்ணு அழகா இருந்தா போதும்னு சொல்றாங்கன்னு தான் மாமா சொன்னார்.. இங்க இப்போவும் அந்த பாட்டி அதேதான் சொன்னாங்க.. அப்போ.. அழகு மட்டும்தான் முக்கியமா??” என, அவள் நாக்கில் அந்நேரம் என்ன வந்து அமர்ந்திருந்ததோ, பேசிய பேச்சுக்கள் எல்லாம் பசுபதியிடம் எதிர்வினையே ஆற்றியது.

“தனக்கு வர்ற பொண்டாட்டி அழகா இருக்கணும்னு தான் எல்லாவனும் நினைப்பான்…” என்று பசுபதி  ‘ஆமா அதுக்கென்ன இப்போ…’ என்கிற தொனியில் பேச,

“ஓ..!! அப்போ அழகு போயிடுச்சுன்னா… பொண்டாட்டி மேல பாசமும் போயிடுமா??” என,

“ஏய்..!!” என்றபடி படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்துவிட்டான்.

கடுங்கோபம் வந்துவிட்டது அவனுக்கு. நன்றாய் தானே இருந்தாள், இப்போதென்ன இவளுக்கு பேயா பிடித்துவிட்டது. இதென்ன பேச்சுக்கள் இப்படி என்று.

“என்ன பேச்சு பேசுற?? என்னாச்சு உனக்கு திடீர்னு.. கிளம்பி வர்றப்போ அப்படிதான் பேசுற.. இப்போ என்ன டி உனக்கு?? நீ அழகா இருக்கன்னு தான் கல்யாணம் பண்ணேன்.. இப்போ என்ன அதுக்கு?? பேசுறா பேச்சு…” என்று கத்த,

உமையாளுக்கு மளுக்கென்று கண்களில் நீர் வந்துவிட்டது.

அவள் மனம் என்ன நினைக்கிறது.. என்ன எதிர்பார்க்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை.

கண்களில் நீர் வர, தலையணையில் முகம் புதைத்துகொள்ள, அவள் அழுவது கண்டு அவனுக்கு மேலும் எரிச்சல் கூடியது.

“ம்ம்ச் உமையாள்…” என, அவள் விசும்பல் சத்தம் மட்டுமே.

“நீயா கேள்வி கேட்டுட்டு இப்போ ஏன் நீ அழறா.. நான் சொன்னேனா அழகு மட்டும்தான் எல்லாம்னு..??” என்றவனின் குரல் அப்போதும் கடுப்பாகவே ஒலிக்க,

“என்னவோ போங்க…” என்றாள் முகம் திருப்பாது.

ஒருவித அயர்வு பசுபதிக்குள் வந்து அமர்ந்துகொள்ள ‘என்னடா இது…’ என்றுதான் பார்த்தான்.

Advertisement