Advertisement

                        மனம் அது மன்னன் வசம் – 5

சென்னை வந்திருந்தனர் உமையாளும், பசுபதியும். மறுவீட்டிற்காக. மாணிக்கம் பிரேமாவிடம் கண்டிப்பாய் சொல்லியிருந்தார், எந்த முறையும் விட்டு போய்விட கூடாதென்று.

பிரேமாவிற்கு அதற்குமேல் என்ன வேண்டும்..??!!

பார்த்து பார்த்து தான் செய்தார் எல்லாமே.

ஆனால் பசுபதிக்கு தான் அந்த சிறிய வீட்டினில் பொருந்திட முடியவில்லை. சொல்லப்போனால் அவர்களது சிறு வீடெல்லாம் இல்லை. நான்கு பேர் தாராளமாய் புழங்கும் அளவுகொண்ட வீடே. என்ன பசுபதியின் வீட்டிற்கு இது சின்னதுதான்.

இரண்டு அறைகளில், ஒன்றில் பசுபதியும் உமையாளும் இருக்க, வீட்டினுள்ளே அறை விட்டால் ஹால்.. இப்படித்தான் அமர நேர்ந்தது. அறைக்குள்ளே எத்தனை நேரம் அமர முடியும்.

சரி என்று ஹால் வந்தால், மாணிக்கம் இருப்பார்.. இவனைக் கண்டதும் என்னவோ அவருக்கும் ஒரு பதற்றம் வந்து ஒட்டிக்கொள்ளும். கவனிக்கிறேன் என்கிற பெயரில் அவர் பதற, அவனுக்கு அதுவே ஒருமாதிரி இருக்க, எப்படியோ ஒருநாளை ஒட்டிவிட்டான்..

உமையாளோ பிரேமாவோடும், பூஜாவோடும் பாதி நேரம் பேச்சு பேச்சு பேச்சுதான்..

அப்படி என்னதான் பேசுவாளோ தெரியவில்லை. ஒரே நாளில் இந்த ஒருவாரக் கதையையும் பேசிவிடும் நோக்கமா தெரியவில்லை அங்கே ஊரினில் அவள் வாய் திறப்பது அதிகம் இவனிடம் தான். அதுவும் இரவில் தான். அதிலும் பேச்சுக்கள் இடையில் திசைதிரும்பி விடும்.

பிரேமாவிற்கு கூட சற்று ஆச்சர்யம் தான்..!!

‘எப்படியோ சந்தோசமாய் இருக்கிறாள்…’ என்கிற மகிழ்வும்,  அவளுக்கான கடமையை செய்துவிட்டோம் என்ற நிம்மதியும் அவருக்கு வந்துவிட்டது..

பூஜா கூட “மாமா.. அக்கா இவ்வளோ பேசுவான்னு எங்களுக்கே இப்போதான் தெரியும்…” என்று அன்றைய இரவு உணவின் போது கிண்டலடிக்க,

பிரேமா மகளை அதட்ட, உமையாள் முகத்தினில் தோன்றி மறைந்த பாவனைகள் கண்டு சற்றே பசுபதியின் பார்வையில் சுவாரசியம் கூடியது நிஜமே.

பசுபதியின் வீட்டினில் ஆண்கள் முதலில் உண்டுவிட்டு பிறகு பெண்கள் உண்பது. ஆண்கள் வர தாமதம் என்றால், முதலில் பெண்கள் உண்டுவிடுவர். இங்கே காலையில் இருந்து பசுபதியும் பார்க்கிறான் தானே. அதெல்லாம் இல்லை. யாருக்கு பசித்தாலும் அவருக்கு முதலில். ஆண் பெண்.. முன் பின் என்ற பாகுபாடெல்லாம் இல்லை.

ஆனால் இங்கே வந்து, காலை, மதியும் இதோ இரவும் சரி உமையாள் அருகே நின்று பரிமாற என்னவோ அங்கிருந்ததை விட இங்கே அவள் கொஞ்சம் பயமில்லாது இருக்கிறாளோ என்று தோன்றியது அவனுக்கு.

“இது உங்களுக்கு புடிக்கும் தான.. சாப்பிடுங்க…” என்று சொல்லி காய் வைக்கையில், அவளின் குரலில் தோன்றிய அழுத்தம் அவளை சற்று நிமிர்த்து பார்க்க வைத்ததுதான்.

அங்கேயனால் “வைக்கட்டுமா??!!” என்ற கேள்வி மட்டும்தான் வரும்..

பசுபதி இதனை எல்லாம் கவனித்தபடி உண்டு முடிக்க, அவனோடு சேர்ந்தே சாப்பிட்ட உமையாளும் உண்டு முடித்துவிட,

பிரேமா “நீங்க டிவி பாக்குறதுன்னா பாருங்க.. மிச்ச வேலை நான் முடிச்சிக்கிறேன்..” என்று உமையாளிடம் சொல்ல, அவளோ பசுபதி முகம் பார்த்தாள்.

டிவி பார்க்கலாமா?? இல்லை வேறென்ன என்று?

அவனோ ‘வயிறு புல்லா இருக்கு.. கொஞ்சம் நடந்தா பரவாயில்லை..’ என்று அவளிடம் மெல்ல சொல்ல,

“அத்தை.. கொஞ்சம் நாங்க வெளிய நடந்துட்டு வர்றோம்…” என்று உமையாள் பிரேமாவிடம் சொல்ல,

“ஓ.. சரி பார்த்து போயிட்டு வாங்க..” என்றார் அவர்.

நிச்சயம் சரி என்று சொல்லமாட்டார்கள் என்றுதான் பசுபதியும் எதிர்பார்த்தது. பிரேமா சரி சொல்லிவிட, மாணிக்கமும் “பார்த்து..” என்று சொல்ல, இருவரும் வெளியே கிளம்பினர். அன்றைய தின மதியம் மேலே லேசாய் மழை விழுந்திருக்க, இரவு நேர சில்லிப்பையும் தாண்டி ஒரு குளுமை இருந்தது.

“சொன்னதுமே சரின்னு சொல்லிட்டாங்க…” என்றான் பசுபதி.

“இதுல வேணாம் சொல்ல என்ன இருக்கு??”

“வேண்டாம் சொல்வாங்களோ நினைச்சேன்…” என இருவரும்  பேசியபடி நடக்க, உமையாளுக்கு மனம் மிக மிக சந்தோசமாய் இருந்தது.

நடக்கையில் அவன் கை பற்றிக்கொள்ள, “அட..!!” என்றான் அவனும் சந்தோசமாகவே.

அங்கே அப்படியெல்லாம் நடந்திடமுடியாது. இங்கேயும்தான்.. இப்போது இரவு என்பதால், அதிக ஆள் நடமாட்டமும் இல்லை என்பதால் அவளுக்கு அவன் கை பிடித்து நடக்க ஏதுவாய் இருக்க, அவனுமே இறுக பற்றிக்கொண்டான்..

“இது சென்னைக்கார உமையாள் போல…” என,

“அதெல்லாம் இல்லையே..” என்று அவள் சொல்கையில் ஒரு மென்னகை தோன்றி மறையத்தான் செய்தது.

“இங்க வந்ததுமே பேச்செல்லாம் நிறைய…”

“அதுவும் இல்லை.. என்னவோ இவ்வளோ பேசுறேன்..” என்றவள், “உங்களுக்கு இங்க ஓகேவா??” என்றாள், நடப்பதை விட்டு நின்று அவன் முகம் பார்த்து.

பசுபதி எதனைக் குறித்துக் கேட்கிறாள் என்று யூகிக்க அவள் முகம் பார்க்க, அவனுக்கு இப்போது புரியவே இல்லை. எல்லா நேரங்களிலுமே மனைவியின் பேச்சுக்களும், பார்வையும் கணவன்மார்களுக்கு புரிந்துவிடாது தானே.

“நீ என்ன கேட்கிற??” என்றவன் திரும்பக் கேட்க,

“இல்ல இங்க எல்லாம் உங்களுக்கு கம்பர்டபிலா இருக்கா… அத்தை கேட்க சொன்னாங்க..” என்று உமையாள் சொல்ல,

“ஓ.. நீ என்னோட தானே இருக்க.. சோ கம்பர்டபிலா தான் இருக்கும்.. இல்லைன்னாலும் அதை பெருசு பண்ணக் கூடாது… பெரியவங்களுக்கும் தெரியுமே நம்மள எப்படி கவனிச்சு அனுப்பனும்னு..” என்று பசுபதி சொல்லவும் தான் உமையாளுக்கு நிம்மதியே ஆனது.

அபிராமி சொல்லித்தானே அனுப்பினார். “அவனுக்கு அங்க எந்த குறையும் இருக்க கூடாது..” என்று.

‘ஹப்பாடி..!!’ என்றொரு உணர்வு அவளுக்கு.

மகிழ்வு என்பது வேறு.. நிம்மதி என்பது வேறல்லவா??!!

அந்த மாற்றம் இப்போது அவளிடம் நன்கு வெளிபட,  “என்னாச்சு உமையாள்…” என்றான் பசுபதி.

“ஒன்னுமில்லையே..!!”

“இருக்குனு நல்லாவே தெரியுது… சொல்லு..”

“உங்களுக்கு இங்க செட்டாகுமோன்னு யோசனை இருந்தது..”

“ம்ம்ம்… வசதியா இருக்கிறவன் எல்லாம் அவன் வீட்ல நிம்மதியா தூங்குறான்னு அர்த்தமில்லை…” என, உமையாள் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை.

பேச்சு நடை என்று மாறி மாறி மீண்டும் வீட்டின் சந்துபக்கம் வந்துவிட, “எனக்காகன்னு எல்லாம் எதுவும் ஸ்பெசலா செய்யவேண்டாம் சொல்லிடு உமையாள். எப்பவும் இங்க என்ன பழக்கமோ அது செஞ்சா போதும்..” என,

“மாப்பிள்ளை சார் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது…” என்றவள், மறுநாள் விடியலில் அவனை எழுப்பும்போதே, அன்று அவனின் அக்காள்கள் சொன்ன விதத்தில் அவனுக்கென்று தேநீர் கலக்கி வந்து தான் எழுப்பினாள்.

ஏற்கனவே விழித்துவிட்டான் தான். செய்வதற்கு வேலைகள் இல்லை என்பதால் புரண்டுகொண்டு இருக்க, டீ வாசம் வர, அதோடு சேர்ந்து அவனின் மனைவியும் வர, “உனக்கு இப்படி டீ போட தெரியுமா???!!!” என்று கேட்டாபடி எழுந்தமர்ந்தான்.

“ம்ம்ம் இங்க நிறைய நேரம் டீ தான்…” என்றவள், அவன் முன்னே நீட்ட, வாங்கி பருகியவன், மெதுவாகவே அருந்த,

“அன்னிக்கு அந்த காபிய அவ்வளோ வேகமா குடிச்சீங்க.. அதுவும் அவ்வளோ சூடா…” என்று கேட்டேவிட்டாள்.

‘கவனிச்சிருக்கா…’ என்று பசுபதியின் மனதில் தோன்றிய அடுத்த ஷணம், ஏனோ இன்னும் உமையாள் அவனுக்கு நெருக்கமாகிப் போனாள்.

சில நொடிகள் வரை அவன் பதிலே சொல்லவில்லை. அமைதியாய் இருக்க, “ஏங்க.. உங்களைத்தான்…” என,

“பிடிக்காதத எப்படி குடிச்சா என்ன..??!! எங்கம்மா எனக்கு நல்லா செஞ்சு கொடுத்து பழக்கிட்டாங்க..” என்றவனுக்கு என்ன முயன்றும் தன் ஏக்கங்களை மறைக்க முடியவில்லை.

அவ்வளோதான், உமையாளுக்குள் ‘அச்சோ…’ என்று அவனுக்காக ஓர் குரல் ஒலிக்க, மனமோ பாகாய் உருக, “உங்களுக்கு என்ன என்ன வேணுமோ என்கிட்டே கேளுங்க.. நான் செஞ்சு தர்றேன்…” என்றாள் வேகமாய்.

என்னவோ இப்போதே அவனின் அனைத்து ஏக்கங்களையும் தீர்த்திடும் ஆவல் அவளுக்கு.

அவனோ ஒரு சிறு புன்னகையோடு அவள் முகம் பார்க்க “என்னங்க??” என்றாள் திரும்ப.

“எனக்கு எது புடிக்கும் புடிக்காது தாண்டி, இப்போதைக்கு நம்ம குடும்பத்தோட அமைதி ரொம்ப முக்கியம் உமையாள்..” என்றவனின் குரலில் ஒரு பேதம் தெரிய,

“உங்களுக்கு பிடிச்சதா ஒன்னு செய்றதுனால அப்படி என்ன ஆகிட போகுது.. நான் ஊருக்கு போனதும் அத்தைட்ட சொல்லி…” என்று அவள் முடிக்கவில்லை,

“உமையாள்..!!” என்று அதட்டிவிட்டான்.

நன்கு பேசிக்கொண்டு இருந்தவன், திடீரென அதட்டல் விடவும், உலுக்கிவிழுந்தவள், அரண்டு போய் தான் பார்த்தாள். இதுவரைக்கும் யாரும் அவளை இப்படி அதட்டும் சூழல் எல்லாம் அவளுக்கு வந்ததே இல்லை.

‘இப்போ நான் என்ன சொல்லிவிட்டேன்…’ என்று அவளின் பார்வை கேட்க,

“சொல்றதை கேட்கணும்.. சரியா??” என்றான் அதே குரலில்.

உமையாள் சரி என்றும் சொல்லவில்லை. மாட்டேன் என்றும் சொல்லவில்லை. பார்த்தது பார்த்தபடி தான் இருந்தாள்.

“நீயா உன் இஷ்டத்துக்கு அது இதுன்னு ஏதும் செய்யாத.. புரிஞ்சதா…” என, அவளுக்கு இதனை ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை.

‘இவங்களுக்கு புடிச்சத பண்ணனும்னு நினைச்சா, என் இஷ்டத்துக்கு செய்றேனா???’ என்று தோன்ற, உமையாளுக்கு கோபம் வந்துவிட்டது.

முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு “சரி…” என்றுவிட்டு படுத்துவிட, “ம்ச் உமையாள்…” என்றான் பசுபதியும்.

“ம்ம்…”

“இதென்ன பழக்கம்.. ஒன்னு சொன்னா கேட்கணும்.. அதைவிட்டு இப்படி படுக்கிறது…” என்றவனுக்கும் கோபமே, சொல்ல வருவதை புரியாமல் இருக்கிறாளே என்று.

“நான் என் இஷ்டத்துக்கு எதுவும் செய்யலை… நீங்க இஷ்டப் படுறதை செய்யனும்னு நினைச்சேன்..” என்றவளுக்கு அப்போதும் குரலில் அத்தனை எரிச்சல் வெளிப்பட,

‘இப்போ பேசினா கண்டிப்பா எதுவும் அவளுக்கு புரியாது…’ என்று பசுபதியும் “சரி…” என்றுமட்டும் சொல்லிவிட்டு படுத்துவிட, அவனுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது, உமையாள் இதனை இதோடு விடமாட்டாள் என்று.

நாட்கள் செல்ல  செல்ல, அபிராமியும் வாய் விடுவார் என்பது அவனுக்குத் தெரியும். கல்யாணம் முடிந்த சில நாளிலேயே வீட்டில் பிரச்னைகள் எனில் அவன் யாருக்கு சார்பாய் பேசிட முடியும்??!! உமையாள் மீது தவறே இல்லை என்றாலும் கூட, பகிரங்கமாய் அவளுக்கு சார்ந்து அனைவரின் முன்னமும் பேசிட முடியாது.

கூட்டுக் குடும்பங்களில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும் உமையாளுக்கு இது புரிய வேண்டுமே..!!

சிறிது நேரம் கடக்க, “உமையாள்…” என்றழைத்துப் பார்த்தான். பதில் இல்லை. மெல்ல எழும்பி அவளைப் பார்க்க, நன்கு உறங்கிவிட்டாள் என்று தெரிந்தது.

“ஹ்ம்ம்…” என்ற ஒரு பெருமூச்சோடு அவனும் உறங்கிட, அடுத்து வந்த இரண்டு நாட்களும் ஊர் சுற்றவே சரியாய் இருந்தது. அவளோடு மனம் விட்டு பேச என்று நேரம் பார்க்க, அது முடியவேயில்லை அவனுக்கு.

இதோ, அப்படியே மறுவீடு முடிந்து ஊருக்கு கிளம்ப, பிரேமா ஆயிரம் அறிவுரைகள் சொல்லித்தான் அவளை அனுப்பினார்.

முதலும் முக்கியமாய் ஒன்று ‘தம்பி என்ன சொல்றாரோ அதை கேட்டு நட..’ என்பதுதான்.

‘சொல்றதைக் கேளு…’ இவ்வார்த்தைகள் தானே இதுநாள் வரைக்கும் உமையாளின் வாழ்வை ஆட்சி செய்கிறது.

அவளுக்கு நினைத்துப் பார்த்தால் ஒருவித அயர்ச்சி கூட தோன்றிவிட்டது.!!!

‘அப்போ எனக்கு எதுவுமே தோணாதா??!! மூளை வைக்காம என்னை படைச்சிட்டானா ஆண்டவன்.. அப்படித்தான் எல்லாம் நினைக்கிறாங்களா??!!’ என்று அவளின் மூளை இப்படி யோசிக்கத் தொடங்க, ட்ரைன் ஏறியதில் இருந்து அவள் முகம் யோசனையில் இருப்பது கண்டு பசுபதியும் யோசனைக்கு சென்றுவிட்டான்.

‘இவ எதை யோசிக்கிறா?? என்ன யோசிக்கிறா??’ என்று.

ட்ரைன் கிளம்பிய சில நேரத்தில் “உமையாள்…” என்று அவன் அழைக்க, அவளும் “என்னங்க..?” என்று கேட்க, சரியாய் அவன் பேசத் தொடங்குகையில், பால்நிலாவும், பனிமலரும் மாறி மாறி அவளுக்கு அழைத்துப் பேச, அவனுக்கு எங்கே சென்று முட்டுவது என்றுதான் இருந்தது.

அதிலும் பால்நிலா “ஸ்பீக்கர்ல போடு…” என்றுவிட்டு “நீதான் உமையா எங்க தம்பிய பார்த்துக்கணும்… அவனுக்கு புடிச்சது எல்லாம் நீதான் செய்யணும்.. ஏதும் தெரிஞ்சுக்கணும்னா என்னை கேளு.. சித்தி அது இதுன்னு ஏதாவது சொன்னா, எல்லா நேரமும் அமைதியா இருக்கணும்னு இல்லை. அப்பப்போ பதில் கொடு.. சரியா..??” என்று ஏற்றிவிட,

“அக்கா.. நீ வை முதல்ல…” என்றுவிட்டான் பசுபதி.

இது விபரீதங்களை விளைவிக்கும் தானே. பால்நிலா எப்போதுமே வாய் கொஞ்சம் துடுக்குதான். இருந்தும், அவள் பிறந்த வீட்டு பெண். அதிகம் பேசினாலும் கூட யாரும் அதனை சட்டை செய்வது இல்லை.

அதற்காக உமையாளை அப்படி பேச சொன்னால் ??!!!

“ஏன் டா… பேசி இத்தனை நாளாச்சு…??!!”

“ஊருக்கு வரவும் நேர்ல வந்து பேசு.. இப்போ வை…” என்றவன், உமையாளின் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட “என்ன இது??!!” என்றாள் வேகமாய் அவளும்.

“இங்க பாரு.. இப்படி யாருனா எதும் சொன்னா எல்லாத்தையும் தலையில ஏத்தி கேட்டு வைக்காத.. நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் கேளு போதும்..” என,

“ஏன்??!! அப்படி என்ன நான் பெருசா எதுவும் செஞ்சிட போறேன்.. இல்லை எனக்கு சரியா எதுவும் யோசிக்கத் தெரியாதா என்ன?? எப்போ பார் எல்லாரும் நான் சொல்றதை கேளு… நான் சொல்றதை கேளுன்னு… அப்.. அப்போ.. எனக்குன்னு என்ன இருக்கு?? எனக்கு தெரியலைன்னா உங்கட்ட கேட்பேன் தானே… அதைவிட்டு…” என்று படபடவென பேசியவள், என்ன நினைத்தாளோ அப்படியே அமைதியாகி ஜன்னல் பக்கம் முகம் திருப்பிவிட்டாள்.

Advertisement