Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 4

உமையாளுக்கு தானா இப்படி மாறிப்போனோம் என்று இருந்தது. அதுவும் இந்த ஒரே நாளில். புதிய இடம்.. புதியவனும் கூட, கணவன் என்றாலும் இன்னும் அத்தனை தூரம் அந்த நெருக்கம் இல்லைதான். இருந்தும் இப்போதோ ஒவ்வொன்றிற்கும் அவனின் முகம் பார்த்து நின்றாள்.

மதுரைக்கு தான் அழைத்து வந்திருந்தான். அவளின் வாழ் நாளில் முதல் முறை மதுரையை காண்கிறாள். ஆக வேடிக்கைக்கு பஞ்சமில்லை உமையாளுக்கு. கடைகளில் மட்டுமே கணவனின் முகம் பார்த்தாள்.

நகை கடை சென்று, பின் துணிக்கடை சென்று, பின் சிறிது நேரம் என்று அவர்களின் வயலுக்கு அழைத்து சென்று, என்று பசுபதி அவளோடு சுற்ற, எப்போதுமே பிரேமா எடுத்து கொடுப்பதையே தனக்கென வைத்தவளுக்கு எதை எடுப்பது என்று தெரியவில்லை.

அவன் சுடிதார் பார்க்க, “இங்க சுடிதார் எல்லாம் வீட்ல போட விடுவாங்களா??!” என,

“ஏன் போட்டா என்ன?? பிரியா எல்லாம் போடுறாளே…” என்றான்.

“இல்ல அதுக்கில்ல.. கல்யாணம் ஆகவும் சேலைதான் கட்டணும்னு சொன்னாங்க..” என்று அவள் இழுக்க,

சித்தியாக இருக்குமோ என்றெண்ணியவன் “யாரு??!!” என்றான்.

“அத்தை சொன்னாங்க…”

“சித்தியா??!!” என்று கேட்கும்போதே, அவனின் முகம் மாற,

“இல்ல இல்ல.. பிரேமா அத்தை சொன்னாங்க…” என்று அவள் வேகமாய் மறுக்க “ஓ..!!” என்றவன், “உனக்கு எப்படி இருக்க புடிக்குமோ அப்படி இரு.. சரியா இருந்தா போதும்..” என்றுமட்டும் சொல்ல,

அவன் ‘சரி…’ என்பதை, எதை சொல்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு.

முகம் தெளிவில்லாது, அவள் உடைகளை பார்க்க, “இந்த கடையில நமக்கு சாப்பாடு எல்லாம் போட மாட்டாங்க…” என்றவனின் குரலில் திரும்பிப் பார்த்தவள், அவன் முகத்தில் இருந்த சிரிப்பைக் கண்டு,

“அச்சோ.. நான் போடுவாங்க அதுவரைக்கும் நேரம் எடுக்கலாம்னு இருந்தேனே…” என்று அவளும் அதே பாவனையில் சொல்ல,

“எப்படி தலைவாழை இலை போட்டு போட சொல்வோமா…” என்று கேட்டபடி “நீ கொஞ்சம் தள்ளு..” என்று அவள் தோள் தொட்டு தள்ளி நிறுத்தியவன்,

“இதெல்லாம் உனக்கு எடுப்பா இருக்கும்…” என்று சொல்லி சில நிறங்களில் இருந்த சுடிதாரை எடுக்க, அந்த நிறத்தில் எல்லாம் பிரேமா அவளுக்கு எடுத்ததே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அங்கே பூஜாவிற்கு எப்படியான நிறங்களோ அப்படித்தான்..

தான் எடுப்பது அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்பதற்காக பசுபதி உமையாள் முகம் பார்க்க, அவளின் யோசனை கண்டு “என்ன உமையாள் பிடிக்கலையா??!” என்றான்.

“இல்ல… இல்ல.. இதெல்லாம் எனக்கு நல்லாருக்குமா??” என்றாள்.

“வேணும்னா போட்டு பாரு…”

“வேணாம்.. வேணாம்…” என்றவள், அவன் எடுத்திருந்த சுடிதார்களை மனதில் தான் போட்டு கற்பனை செய்துகொள்ள,  நன்றாகவே இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு.

“ஓய்..!! என்ன மனசுக்குள்ள போட்டு பாத்தியா.. அதெல்லாம் முடியாது.. வீட்ல வந்து எனக்கு போட்டுக் காட்டு…” என்று பசுபதி சொல்ல,

“ஹா..!!!” என்று பார்த்தவள், “ஆளப் பாரு ஆள…” என்று முணுமுணுக்க, பசுபதி எதுவும் சொல்லவில்லை சிரித்துக்கொண்டான்.

நகைக்கடை சென்று வளவி பார்க்க, “பாரு…” என்றுசொல்லி அவன் அமர்ந்துவிட, அவள் அப்போதும் அவனைத்தான் பார்த்தாள்.

“அட என்னை பார்க்க சொல்லல.. வளவி பாரு.. உனக்கு புடிச்சதா பாரு…” என,

“பார்த்தா எல்லாமே புடிக்கிற மாதிரி இருக்கு…” என்றாள், அவள் முன்னே இருந்த வளையல்களைப் பார்த்து.

“ஓய்..!! நீ இவ்வளோ நேரம் என்னைத்தானே பார்த்த..??”

“நான் இப்போ சொன்னது இதை…” என்று வளையலைக் காட்டியவள், அதிக வேலைபாடுகள் இல்லாத வளையல் ஒன்றை எடுக்க,

“இதுவா??!!” என்றான் பசுபதி.

அவன் கேட்டவிதமே ‘வேண்டாம்..’ என்பதுபோல் இருக்க, “நல்லா இல்லையா??” என்று உமையாள் கேட்க,

“இதெல்லாம் நம்ம வீட்டு லேடீஸ் எட்டி கூட பார்க்க மாட்டாங்க.. நல்லா எடுப்பா எடு…” என்றவன் அடுத்து பார்வையை ஓட்ட,

‘நல்லா கண்டு புடிச்சாங்க எடுப்பா எடு.. எடுப்பா எடுன்னு…’ என்று நினைக்க மட்டுமே அவளால் முடிந்தது.

கணவன் தனக்கு எடுத்துக் கொடுக்கிறான் என்ற சந்தோசம் இருந்தாலும், ஒரே நாளில் இதெல்லாம் வாங்குகிறோமே என்ற தயக்கமும் இருக்க, அவன் தேர்ந்தெடுப்பதை மறுப்பே சொல்லாது வாங்கிக்கொண்டாள்.

“வெளிய போறப்போ இது போட்டுக்கோ.. வீட்ல இருக்கப்போ இது போட்டுக்கோ.. இப்போ இது போதும்.. அடுத்து வேணும்னா வாங்கிக்கலாம்..” என்று பசுபதி சொல்ல, அப்போதுதான் அவனின் அக்காள்கள், சித்தி எல்லாம் போட்டிருந்த வளையல் நினைவு வர, தன்னிடம் தங்க வளையல் இல்லை என்பதனை கவனித்து வாங்குகிறான் என்பதே புரிந்தது.

ஒரு பக்கம் இதமாகவும் இருக்க, யாரேனும் ஏதேனும் சொன்னால் என்ன செய்ய என்றும் இருக்க, ஒரு கலவையான உணர்வு தான் உமையாளுக்கு.

அடுத்து மதியம் உணவை அங்கிருந்த ஹோட்டலில் பார்த்துவிட்டு, பின் இவர்களின் வயல் வந்து ஒரு பார்வை பார்த்து, இவளுக்கு அதில் நடக்கக் கூட தெரியவில்லை. அவனின் கை பிடித்து நடக்கும் அளவுக்கு எல்லாம் இன்னம் தைரியம் வரவில்லை.

“நீங்க பார்த்துட்டு வாங்க நான் இப்படி இருக்கேன்…” என்று மரத்தடியில் நிற்க,

“உனக்கு காட்டணும்னு தான் கூட்டிட்டு வந்தேன்..” என,

“இல்ல.. எனக்கு இதுல நடக்க தெரியாது…” என்று அவள் சொன்னது கேட்டு, “இதுக்கு பேரு வரப்பு…” என்றான்.

“ஓ..!!” என்று அவள் சொல்லும்போதே, “பேசுறப்போ மொட்டையா பேசக்கூடாது.. ஒன்னு மாமான்னு சொல்லு.. இல்ல ங்க போட்டு பேசு..” என,

‘மாமாவா??!!!’ என்று அவள் இதழ் மட்டுமே அசைந்தது.

அதை கண்டவன் ‘இவக்கிட்ட அதெல்லாம் எதிர்பார்க்காதடா…’ என்று நினைத்துக்கொண்டான்.

அடுத்து அவள் ஒன்றுமே சொல்லவில்லை. சிறிது நேரம் இருந்துவிட்டு வீடு செல்ல, வீட்டில் ஆட்கள் நிறைய இல்லை. அவனின் அக்காவின் கணவர்கள் எல்லாம் வெளியே சென்றிருக்க, வீட்டுப் பெண்கள் மட்டுமே இருக்க, அபிராமி எதுவும் கேட்கவே இல்லை.

பால்நிலாவும், பனிமலரும் தான் கேள்வியாய் கேட்க, உடன் பிரியங்கா வேறு. பசுபதி அவர்கள் பேசட்டும் என்று அறைக்கு சென்றுவிட, உடைகள், வளையல் எல்லாம் அங்கே கடை பரப்ப,

“இதெல்லாம் உனக்கு நல்லாருக்கும்…” என்று தம்பியைப் போலவே அக்காள்களும் சொல்ல, அபிராமி மௌனமாய் தான் பார்த்துக்கொண்டு இருந்தார்.

பிரியங்காவோ “அண்ணி வளவி சூப்பர்.. புது டிசைன் இது…” என்று கையில் எடுத்துப் போட்டுப் பார்க்க,

அப்போதுதான் அபிராமி மகளின் தோளில் பட்டென்று தட்டி “வை அதை…” என்று வைதார்..

“ம்மா என்னம்மா..??!!!!”

“உங்கண்ணன் அவன் பொண்டாட்டிக்கு வாங்கினது.. கண்ல தான் பார்க்கணும்.. போட்டு எல்லாம் பார்க்க கூடாது…” என்று அபிராமி சொல்ல, அவர் சொன்ன வார்த்தைகளில் என்னமாதிரியான அர்த்தம் இருந்தது என்று பால்நிலா பனிமலர் இருவருமே யூகிக்க முயல,

உமையாளோ “அதுனால என்னத்தை.. போட்டு தானே பார்க்கிறா…” என்றாள் இலகுவாய்.

“அதான் வேணாம் சொல்றேன்.. இவ என்ன தங்க வளையல் பார்த்ததே இல்லையா??!! உனக்குன்னு முதல்ல வாங்கி தந்திருக்கான்..” என்றவர்,

“நல்ல டிசைன்…” என்று சொல்ல, ‘இவர் என்ன டிசைன்…’ என்று அங்கிருந்த யாருக்கும் விளங்கவில்லை.

பின் இரவு கவிழ்ந்திட, வெளி சென்ற ஆண்களும் வீட்டிற்கு வந்திட, இரவு உணவு ஆண்கள் எல்லாம் முதலில் உண்டு, பின் பெண்கள் உண்ண,

“கல்யாணத்துக்கு வராதவங்க, நாளைக்கு இருந்து விசாரிக்க வருவாங்க.. அதனால நான் சொல்ற வரைக்கும் வீட்ல நல்ல சேலையே கட்டு.. ஆளுங்க வந்தப்போ போய் வேகமா கட்டிட்டு வந்தா நல்லாருக்காது.. அவனோட வெளிய போறப்போ உனக்கு என்ன போடணுமோ போட்டுக்கோ…” என்று அபிராமி சொல்ல, சரி என்று சொல்லிக்கொண்டாள் உமையாள்.

ஆனால் அதன் பின் வந்த நாட்களில் அவன் வாங்கிக் கொடுத்ததை அணியும் வாய்ப்பே அவளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம். பொதுவாய் மூன்று நாட்களில் மறுவீடு செல்வர், இவர்களின் பழக்கம் ஒருவாரம் என்று சொல்லிவிட, பிரேமாவும், மாணிக்கமும் மறுவாரம் தான் வந்து அழைப்பதாய் இருந்தது.

“மாப்பிள்ளையும் பொண்ணையும் அனுப்பி வைக்கிறோம்.. நீங்க ஏன் அலைஞ்சிட்டு. வந்து விடுறப்போ கூட வாங்க…” என்று பசுபதியின் சித்தப்பா சொல்லிட, இடைப்பட்ட நாட்கள் எல்லாம் பசுபதியின் வீட்டிற்கு ஆட்கள் வந்து போனபடி தான் இருந்தனர்..

நாத்திகள் இருவரும் அவரவர் வீடு சென்றிருக்க “மறுவீட்டுக்கு போயிட்டு வாங்க.. பின்ன நாங்க விருந்துக்கு அழைக்கிறோம்…” என்று சொல்லிச் செல்ல, அவர்கள் சென்றதும் உமையாளுக்கு ஏதோ ஒரு பயம் வந்து சூழ்ந்துகொண்டது.

பால்நிலாவும், பனிமலரும் அவளை தனியே இருக்கவே விடவில்லை. பசுபதி வீட்டினில் இல்லாத நேரத்தில் இவர்கள் தான் மாறி மாறி உடனிருக்க, நிறைய விஷயங்கள் சொல்லியும் கொடுத்தனர். ஓரளவு அவர்களின் வீட்டு நடப்பு புரிந்தது.

இப்போது கிளம்பிட, உமையாளின் பொழுதுகள், முக்கால்வாசி நேரம் அபிராமியோடு தான்.

பிரியங்காவும், அவள் தம்பி பிரசன்னாவும் மாலை நேரத்தில் வீட்டில் இருந்தாலும், அபிராமி அவர்களுக்குமே ஏதேனும் சொல்லிக்கொண்டே தான் இருப்பார் வேலைகளை. சில நேரங்களில் அபிராமியின் வார்த்தைகள் கடினமாய் இருந்தாலும், யோசித்துப் பார்க்க சரியாகவும் தோன்றும் உமையாளுக்கு. ஆனாலும் அவள் மனதில் இருப்பதை காட்டிக்கொள்வதில்லை. அவர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே செய்தாள்.

என்ன ஒரு வருத்தம், தன் கணவனுக்கு பிடித்தவைகள் என்று பார்த்து பார்த்து செய்ய முடியவில்லை என்பது.

‘ஒருவாரம் தானே.. நாள் எங்க போயிடும்…’ என்று அவளுக்கு அவளே சமாதானம் செய்துகொள்ள, அன்றைய தினம் இரவு பசுபதி வீட்டுக்கு வருகையில் அவளுக்கு ஒரு அலைபேசி வாங்கி வந்திருந்தான். அனைவரின் முன்னம் தான் கொடுத்தான்.

அக்காள்கள் சொல்லிவிட்டு சென்று இருந்தனர் போலும்..!!

உமையாளுக்கும் இந்த எண்ணம் இருந்தது தனக்கென்று ஒரு போன் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று. பசுபதியிடமே ஏதேனும் கேட்கவேண்டும், பேசவேண்டும் என்றாலும் கூட அவனை எப்படி அணுகுவது??

அபிராமி ஒரு அலைபேசி வைத்திருந்தார். அது முழுதாய் பிரியங்காவிடம் தான் இருக்கும்.  ஓரிரு முறை பசுபதியே அந்த எண்ணிற்கு அழைத்துத்தான் இவளிடம் பேசினான்.

சுடிதாரும் வளையலும் வாங்கியதற்கு சித்தி எதுவும் சொல்லவில்லை என்பதே உறுத்தலாய் இருந்தது. எப்போது எதை எங்கே சொருகி பேசுவார் என்று தெரியாதே. ஆக அலைபேசி சென்னை எல்லாம் சென்று வந்தபின் வாங்கிக்கொள்வோம் என்று இருக்க, அக்காள்கள் இருவரும் “வாங்கு… வாங்கு..” என்று சொல்லி வாங்கி கொடுக்க வைத்திருந்தனர்.

இப்போது அலைபேசிக்கும் யாரும் எதுவும் சொல்லவில்லை.. உமையாளுக்கு அத்தனை சந்தோசமாய் இருந்தது.

இந்த ஒருவாரத்தில் இருவருக்குள்ளும் இடைவெளிகள் நிறையவே குறைந்து இருந்தது. தொட்டுக்கொள்வது என்பதைத்  தாண்டி, கட்டிக்கொள்வது, முத்தமிடுவது, ஜாடை மாடையான பேச்சுக்கள், குறும்புகள் என்று கூடியிருக்க, பசுபதியோ ‘இதெல்லாம் செய்வா ஆனா நான் வாங்கி கொடுத்த ட்ரெஸ் போட மாட்டா…’ என்று மனதிற்குள் தான் எண்ணுவான்.

அவனுக்கு ஆசை, இரவு அறைக்கு வந்த பிறகேனும் அவள் அணிந்து காட்டினால்  என்ன என்று?

உமையாளுக்கும் ஆசைதான்..!! இருந்தும் கொஞ்சம் கூச்சமும் இருந்தது..!!

அவன் போன் வாங்கி வரவுமே, சந்தோசமாய் இருந்தவள், இரவு தூங்கவென அறைக்கு வர, அதற்கு முன்னமே பசுபதி வந்து உடைமாற்றி படுத்திருக்க, “தூங்கிட்டீங்களா…” என்று கேட்டபடி தான் கதவினை சாத்தினாள்.

அவனோ சத்தமே இல்லாமல் இருக்க “என்னங்க…” என, அப்போதும் அவனிடம் சத்தம் இல்லை.

‘தூங்கிட்டாங்க போல…’ என்று தனக்கு தானே சொல்லியவள், தானும் படுத்து, அவன் முகம் பார்க்க, நிஜமாகவே உறங்கியிருந்தான்.

அன்று அவனுக்கு வேலை நிறையவே இருந்தது. தோட்டம் தொறவு என்று இருந்தாலும், அவர்களுக்கு சொந்தமாக ஒரு பள்ளிக்கூடமும் இருந்தது. அதன் முழு பொறுப்பும் பசுபதியிடம் தான்.

பத்தாவது மட்டும் வரைக்குமே இருந்த பள்ளியினை பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் என்று விசதரிப்பு செய்ய, அதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருந்தது. இடையில் திருமணம் என்பதால் சற்று அதனை எல்லாம் தள்ளி வைத்திருந்தான்.

இப்போது மீண்டும் அவ்வேலைகளை கையில் எடுத்துக்கொள்ள, அன்றைய தினம் நிறைய வேலை. அக்காள்களின் நச்சரிப்பு தாங்காது தான்  அலைபேசி வாங்கினான். அதுவும் அவன் செல்லவில்லை. ஆள் அனுப்பிதான்..

அறைக்கு வந்ததும் உறக்கம் வந்திட, உறங்கும் அவன் முகம் தான் பார்த்திருந்தாள் உமையாள். இப்போதெல்லாம் இருவரும் படுக்க வரும் போதே விளக்கணைப்பது இல்லை. படுத்தபின் வேண்டும் என்றே கட்டிலை ஒட்டி சுவர் பக்கமாய் இருக்கும் சுவிட்சை தான் தட்டுவது.

அது இருவருக்குமான விளையாட்டாகவே மாறிவிட, இன்றோ அவளும் ஸ்விட்ச் தட்ட மறந்து அவன் முகம் பார்க்க, அதில் அவனின் அசதி தெரிந்ததோ என்னவோ, மெதுவாய் அவன் நெற்றி கன்னம் என்று வருடிவிட்டால் உமையாள்.

உறங்கித்தான் இருந்தான். ஆனால் அவள் வந்து படுத்த அரவத்தில் விழிப்பு தட்டியிருந்தது. அவள்பக்கம் திரும்புவோம் என்று நினைப்பதற்குள், உமையாளே அவனை நெருங்கி படுத்து வருட,

‘அட…’ என்று பசுபதியின் உள்ளம் துள்ள, ‘சிரிச்சு கிரிச்சு முழிச்சிட்டன்னு காட்டிக் கொடுத்திடாதடா…’ என்று தனக்கு தானே சொல்லியவன், உறக்கத்தில் புரள்வது போல் அவள்பக்கம் இன்னும் நெருங்க, உமையாள் அவன் உறங்கத்தானே செய்கிறான் என்றெண்ணி, அவன் செவியில் “குட் நைட்…” சொல்லி அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, அவ்வளோதான்..!!!

“இன்னும் எத்தனை நாளைக்கு நீ கன்னத்துல கொடுப்ப…” என்றுசொல்லி, அவளை தன் மேல் இன்னும் பசுபதி இறுக்கியிருக்க,

“நீங்க தூங்கலையா??!!” என்று விழிவிரித்து அவள் பார்க்க, “முழிச்சிருந்தா இந்த ஒரு முத்தம் வாங்க முக்காமணி நேரம் ஆகிருக்கும்..” என்றவன் ‘எப்புடி…!!!’ என்று பார்க்க,

“சரியான பிராடு மாமா நீங்க…” என்றாள் சலுகையாய்.

இப்போது இதுவும் அவர்களுக்குள் பழக்கம் ஆகியிருந்தது. தனியே இருக்கையில், அவள் அவ்வப்போது மாமா என்பது.

ஆரம்பத்தில் அவனுக்கு சந்தேகம் இருந்தது நிஜம். தன்னை பிடித்துத்தான் மணக்கிறாளா என்று. பசுபதிக்கு தோற்றத்தில் எவ்வித குறையும் இல்லை. அழகன் என்று சொல்லிட முடியாது. ஆனால் பார்க்க நன்றாகவே இருப்பான். வசதியும் இளமையும் அவனுக்கு இன்னமும் வனப்பு கொடுத்திருந்தது.

என்ன இக்கால இளைஞர்கள் போல் அவனுக்கு ஸ்டைலாய் இருக்கவெல்லாம் வராது. பள்ளிக்கூட பொறுப்பு என்று அவனுக்கு வந்ததோ அப்போதே தன்னிடம் நிறைய மாற்றிக்கொண்டான்.

உமையாளோ பார்த்ததுமே பிறரின் பார்வையையும் மனதையும் கவரும் அழகி தான்.!!

அதனால் தானே அபிராமி பெண் எடுத்ததே..!!

சில நேரம் அவளிடம் ஒட்டாத தன்மைகள் காண, பசுபதிக்கு தன்னை பிடித்து இருக்கிறதா?? என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் இந்த ஒருவாரத்தில் அது மாறியிருக்க, இப்போதோ அவளை அணைத்தவன், பின் விடுவித்து “என்னை உனக்கு புடிக்குமா??!!” என்று கேட்க,

‘இந்த நேரத்துல இப்படி ஒரு கேள்வியா??!!’ என்றுதான் பார்த்தாள் உமையாள்.

பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை.

“சொல்லு உமையாள்…” என, “ஒரு நிமிஷம்…” என்றவள், சுவிட்சை அமர்த்தி, நைட் லேம்ப் மட்டும் போட,

“உமையாள் நான் என்ன கேக்குறேன்…” என்றவனின் குரலில் பொறுமை இல்லை.

ஒருவேளை அவளின் அத்தை மாமா சொன்னதனால் மட்டும் தான் என்று சொல்லிடுவாளோ என்று ஓர் எண்ணம், அவனை பொறுமை இழக்கச் செய்ய, அவளோ கட்டில் விட்டு இறங்கி, பீரோ திறக்க,

“உமையாள்..!!” என்றான் அழுத்தமாய்.

“ம்ம் இருங்க இருங்க…” என்றவள், அவன் வாங்கி தந்த சுடிதார் ஒன்றை எடுத்து போட, அந்த விடிவிளக்கின் ஒளியில் தெளிவாய் எதுவும் தெரியவில்லை என்றாலும், அவள் உடை மாற்றுகிறாள் என்பது நன்கு தெரிந்தது.

“ஓய் என்ன பண்ற நீ???” என்று கேட்டவனின் குரலில் அவனையும் மீறி ஒரு உல்லாசம்.

“ம்ம் பார்த்தாலும் உங்களுக்கு சரியா தெரியாதுதான்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னம் அவன் சுவிட்ச் போட்டுவிட, அவன் இதனை செய்வான் என்றே அவள் வேகமாய் மாற்றி இருந்தாள்.

‘அடடா…’ என்று அவன் பார்க்க,

இப்போது ‘எப்புடி…’ என்று அவள் பார்த்தாள்.

 “எப்படி இருக்கு??” என்றாள் வேண்டுமென்றே அவன் முன்னம் இப்படி அப்படி திரும்பி.

‘புடிக்குமா??’ என்று கேட்டவன் அக்கேள்வியை மறந்து போனான் தான். அவனின் பார்வை வேறு பிடியில் சிக்கிக்கொள்ள, அவள் கேட்ட கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை.

“இன்னொரு ட்ரெஸ் போடு…” என, “நீங்க லைட் ஆப் செய்ங்க..” என்று அவளும் சொல்ல, அவன் வாங்கிக் கொடுத்த உடைகளை இப்படி விளக்கை அணைத்து அணைத்து அணிந்து காட்ட, வேண்டுமென்றே அவன் இடையில் இடையில் சுவிட்சை தட்ட, இறுதியில் அவள் சுடிதாரும் அணியவில்லை. விளக்கும் அணைக்கவில்லை.    

Advertisement