Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 3

“ஹேய்.. என்ன நீ என் கை புடிக்கிற??” என்று பசுபதி கேட்ட தொனியில், உமையாள் பட்டென்று அவன் கை விட்டு, அவனைப் பார்க்க, அவள் பார்த்த பார்வையில், பசுபதிக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.

இருந்தும் இவள் எதுவும் நினைத்துக்கொண்டால், என்ன செய்வது என்று சற்றே திணற, “இப்போ எதுக்கு அப்படி சொன்னீங்க..?? இப்போ ஏன் இப்படி சிரிக்கிறீங்க??” என்று உமையாள் கேட்க,

“நீ ஏன் என் கை விட்ட?” என்றான் பதிலுக்கு.

“நீங்க அப்படி சொன்னீங்களே??” என்றவள் பேச்சினூடே அவன் பக்கம் திரும்பிப் படுத்திருக்க,

“கையை விடுன்னு சொல்லலையே…” என்று அவனும் அவள்புறம் திரும்பியிருக்க,

‘ஆமா..!!’ என்று உமையாளின் உள்ளம் சொன்னாலும், பசுபதியின் முகம் அருகே தெரியவும், கொஞ்சம் பதற்றமாக,

“பேசத்தானே பக்கம் வந்தேன்.. வேறொன்னும் இல்லை.. நீயும் நானும் கொஞ்சம் பழகிக்கலாம்.. ஆனா தொட்டுக்க கூடாதுன்னு எல்லாம் எதுவும் இல்லை..” என்றவன் அவனின் கை நீட்ட, அவளோ ‘இப்போதென்ன..?’ என்பது போல் பார்க்க,

“ம்ம் புடிச்சுக்கோ…” என, முன்னே பிடிக்க வந்தது போல், இப்போது போல் அவளுக்கு வரவில்லை.

நீட்டியிருந்த அவனின் கையையும், அவனையும் மாறி மாறி பார்க்க, அவனோ அவளைப் பார்த்து புன்னகைத்தபடி, சற்றே எம்பி மீண்டும் சுவிட்சை தட்டி ஆன் செய்திட,

“அச்சோ…” என்றவள், வேகமாய் சுவிட்சை ஆப் செய்து, அவனின் கை பிடித்து “இப்போ ஓகே வா…” என்றபடி திரும்பி சுவர் பார்த்து படுத்துக்கொள்ள, அவனின் கரம் அவளின் கரத்தோடு இணைந்து அவள் இடையில் சுற்றியிருந்தது.

இருவரின் முகத்திலும் புன்னகை தான். பேசிக்கொண்டவர்கள் கூட இல்லை இதற்குமுன்னே. எங்கிருந்து வந்தது திடீரென்று இப்படியொரு புன்னகையும் ஒட்டுதலும். அவனுக்கு இவளின் புகைப்படம் பார்த்ததும் ‘இவதான்டா நமக்கு..’ என்ற எண்ணம் வந்துவிட்டது.

இருந்தும் உமையாளுக்கு அப்படியில்லையே..!!

ஆனால் இப்போதோ, அவனுக்கு இணையான புன்னகையும் பூரிப்பும் அவளிடம் இருக்க, அந்த இரவு இருவருக்குமே ஓர் இனிமை கொடுத்தது நிஜம்தான்.

மறுநாள் பொழுது விடிய, உமையாள் முன்னமே விழித்துவிட, ஏற்கனவே பால்நிலாவும், பனிமலரும் சொல்லியனுப்பியது போல, எழுந்து குளித்து உடைமாற்றி, தயாராகி அவர்களின் அறைக்கு வெளியே இருக்கும் வரண்டாவில் வந்து நிற்க, சொல்லி வைத்தது போல, பசுபதியின் அக்காள்கள் இருவரும் வந்துவிட்டனர்.

“வந்து எழுப்பனுமோன்னு நினைச்சுட்டு இருந்தேன்…” என்று பால்நிலா வேண்டும் என்றே கிண்டல் செய்ய,

“ஷ்..!!! நிலா…” என்று அதட்டிய பனிமலரும் கூட உமையாளை புன்னகையோடு பார்க்க,

“அங்க எப்பவும் இதே நேரம் முழிச்சிடுவேன் அண்ணி…” என்றாள் உமையாள்.

“ஆனா அங்க என் தம்பி இல்லல்ல…” என்று பால்நிலா வம்பிழுக்க, உமையாளுக்கு கொஞ்சம் வெக்கமாய் போனது.

“ஓ..!! பரவாயில்ல.. என் தம்பிக்கு எப்பவும் காலம்பர கொஞ்சம் நேரமாகும்.. சில நேரம் நைட் ரொம்ப லேட்டா வந்தா காலைல நாங்க எழுப்பவே மாட்டோம்..” என்று நிலா சொல்ல, அவள் எதற்கு சொல்கிறாள் என்று புரியாதா என்ன??

மனதில் குறித்துக்கொண்டாள் உமையாள்.

இங்கே அனைவர்க்கும் விட, பசுபதிக்கு வேலைப்பளு நிறை என்பது நன்கு புரிந்தது.

“பசுபதிக்கு நல்லா இஞ்சி தட்டி போட்டு ஏலக்கா போட்ட டீன்னா ரொம்ப புடிக்கும்… எங்கம்மா இருந்தப்போ அந்த டீ வாசம் தான் அவனை எழுப்பும்…” என்று பனிமலர் சொல்ல, படிகளில் இறங்கியவளின் கவனத்தில் இதுவும் மனதில் பதிந்தது.

கணவனுக்கு பிடித்தது. இப்போது அவனின் அம்மாவும் இல்லை.. தாய் இல்லை என்றால் என்ன? இப்போது தாரம் இருக்கிறாளே?!

மூவரும் இப்படி பேசியபடி கீழே வர, அபிராமி அப்போதே அடுப்படியில் வேலையாளோடு பேசியபடி நிற்பது தெரிந்தது.

“என்னக்கா சித்தி அதிசயமா ஆள் விட்டிருக்காங்க அடுப்படிக்குள்ள..” என்று பால்நிலா கேட்க,

“ஆளுங்க ஜாஸ்தில்ல.. அதுனாலயா இருக்கும்…” என்ற பனிமலர் “சித்தி என்ன செய்யணும்.. சொல்லுங்க..” என்றபடி அடுப்படியினுள் போக, பால்நிலா உமையாளோடு நிற்க,

“புது பொண்ணு.. விளக்கேத்திட்டு வந்து  வந்து பால் காச்சனும் தானே.. நீ வர்ற என்ன செய்றதுன்னு?” என்றார் உமையாளைப் பார்த்தபடி.

பனிமலர் உமையாளைப் பார்த்து வா என்று தலை அசைக்க, அவளோடு சென்று விளக்கேற்றி வர, “பால் காச்சனும்னு சொன்னா வந்து செய்ய போறா…” என்றாள் பால்நிலா.

அபிராமியோ அவள் சொன்னதற்கு பதிலே சொல்லாது “காபி தான் இங்க எல்லாருக்கும்.. பால் காச்சி எல்லாருக்கும் காபி கலக்கு…” என,

மணமணக்க கணவனுக்கு டீ கலக்கி கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம் அப்படியே அந்தரத்தில் நிற்க, உமையாளின் பார்வை தன்னைப்போல் நாத்திகள் இருவரின் பக்கமும் செல்ல, “அட வா உமா.. நேரமாச்சு பாரு..” என்றார் அபிராமி.

“சரிங்கத்தை…” என்றவள், பால் காய்ச்சி, அனைவர்க்கும் காபி கலக்க, அதற்குள் ஆண்கள் எல்லாம் வெளியே பேசும் சத்தம் கேட்க,

“மலரு நீ போய் எல்லாருக்கும் காபி குடு..” என்ற அபிராமி, “சட்னி சாம்பார் செஞ்சிடு..” என்று அங்கிருந்த பெண்ணிடம் சொல்ல,

நிலாவோ “நீ தம்பிக்கு காபி கொண்டு போ.. உனக்கும் சேர்த்தே கொண்டு போ..” என, சரி அண்ணி என்று அவளும் கிளம்ப

“இது என்ன புது பழக்கம்..??” என்றார் அபிராமி பட்டென்று.

உமையாளே அங்கே புதிது தானே.!! பிறர் சொல்வதை செய்துகொண்டு இருக்கிறாள்.. அவளோ திடுக்கிட்டு பார்க்க,

“ரூமுக்கு கொண்டு போயி கொடுக்கிற பழக்கம் எல்லாம் இங்க இல்லை உமா.. எல்லாம் எழு மணிக்குள்ள எழுந்து வந்திடுவாங்க.. சில நேரம் பசுபதி வர நேரமாகும்.. வந்தப்புறம் குடுத்தா போதும்.. வீட்டு மனுசிங்க எல்லாம் இதோ இப்படி பேசிக்கிட்டே காலை சமையல் பார்த்துட்டே காபி குடிச்சிப்போம்…” என, ஏனோ ஒரு ஏமாற்றம் அவளுள் பரவியது நிஜம்.

அவள் முகம் பார்த்தே பால்நிலாவிற்கு என்ன புரிந்ததோ “சித்தி.. அதெல்லாம் மத்த நாள்ல..” என்று பேச்சை ஆரம்பிக்கும் போதே,

“எந்த நாளா இருந்தாலும் வீட்டுப் பழக்கம் ஒண்ணுதானே..” என்று முடித்துவிட்டார்.

அதற்குள் பனிமலர் வந்து “தம்பியும் வந்துட்டான்.. நீ போய் அவனக்கு காபி கொடு..” என, உமையாளின் பார்வை இதற்கும் என்ன சொல்வாரோ என்று அபிராமியைப் பார்க்க, அவர் எதுவுமே சொல்லவில்லை.

‘போ.. போ…’ என்று நிலா சைகை செய்ய, உமையாளும் பசுபதிக்கு காபி கொண்டு செல்ல, அவனோ அவனின் சித்தப்பா, மற்றும் அக்காள்களின் கணவர்களோடு பேசிக்கொண்டு இருக்க, உமையாளுக்கு சற்று சங்கடமாய் இருந்ததுதான்.

அவர்களோடு பேச வேண்டுமா?? இல்லை கொடுத்துவிட்டு அப்படியே வந்துவிடவேண்டுமா??! இங்கே இவர்கள் பழக்கம் என்ன??!

ஒன்றும் விளங்கவில்லை…!!

உமையாள் வந்ததும் ஆண்களின் பேச்சு நின்றுவிட, பசுபதிக்கு அவள் டம்பளர் நீட்ட, பசுபதி அவளின் முகம் பார்த்தானா என்பது கூட தெரியவில்லை. காபியை வாங்கியவன் ஒரே மடக்கில் முழுதாய் குடித்துவிட, அத்தனை சூடாய் இருந்ததை எப்படி குடித்தான் என்ற யோசனையிலேயே உமையாள் மீண்டும் அடுப்படி வந்துவிட, அங்கே அபிராமி என்ன சொன்னாரோ பால்நிலா முகத்தை தூக்கி நின்றிருக்க, பனிமலர் வேலையாளோடு சேர்ந்து சமையல் பார்த்துகொண்டு இருக்க, உமையாளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க,

பசுபதியோ, மனைவி எங்கேனும் கண்ணில் படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே தான் மீண்டும் மாடியேறினான். அவனின் அப்பா அம்மா இருக்கையில் தனி தனி சமையல் தான். இது அவனின் பாட்டியின் ஏற்பாடு. ‘என்னதான் அண்ணன்  தம்பின்னாலும், நாக்கு ருசி எல்லாருக்கும் வேற வேற… தனி தனியா பண்ணிக்கோங்க..’ என்று அவனின் பாட்டி சொல்லிட, ஒரே சமையல் அறையில் தனி தனி சமையல் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்துகொள்வர்.

விசேச நாட்களில், அசைவ சமையல் நாளில் தான் ஒரே சமையல். அதிலும் அபிராமியை விட பசுபதியின் அம்மா நன்றாகவே சமைக்க, அவர் இருக்கும் வரைக்கும் பசுபதிக்கு அவனுக்கு பிடித்த உணவுகள் தான் எப்போதும்.

இப்போது அதெல்லாம் மறந்துகூட போனதாய் இருந்தது.

மனைவி என்ற ஒருத்தி வந்த பின்னாவது ஒரு மாற்றம் வரும் என்று பார்த்தால், அவனின் சித்தப்பாவோ “மருமக வந்ததுமே தனி சமையல்னு சொன்னா உன் சித்தி ஏதாவது நினைச்சுப்பா.. இத்தனை நாள் பண்ணிட்டா தானே.. கொஞ்ச நாள் போகட்டும்…” என்றுவிட, அந்த கொஞ்ச நாள் எது என்று அவனுக்குமே தெரியவில்லை.

வெளியே வியாபாரத்தில், தொழில் விசயத்தில் அவன் தெள்ளத் தெளிவாய் பேசி முடிக்கும் ஆள் என்றாலும், வீட்டில் அப்படி அனைத்தையும் முடிவு செய்துவிட முடியாது தானே..!!

அதிலும் இத்திருமணமே அபிராமி ஏற்பாடு தான். ஒருவகையில் அபிராமி, மாணிக்கத்திற்கு உறவு முறையாக, அப்படி நடந்தது தான் இத்திருமணம்.

பசுபதிக்கு இன்னும் இரண்டு நாட்கள் வெளி வேலைகள் இல்லை என்றாலும், வீட்டிலேயே இருந்திடவும் முடியாது தானே. சரி உமையாளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவருவோம் என்றாலும் அவளோ கண்ணிலேயே காணோம்.

மீண்டும் மாடி வராண்டாவில் வந்து நின்று பார்க்க, பிரியங்காதான் கீழே தெரிந்தாள்.

“பிரியா…” என்று பசுபதி அழைக்கவும், “என்னண்ணா..??!” என, அதற்குமேல் ‘அண்ணியை கூப்பிடு..’ என்று சத்தமாய் அவனுக்கு சொல்ல முடியவில்லை.

வீட்டில் விருந்தாட்களும் இருக்க, என்ன சொல்ல என்று யோசித்து பசுபதி நிற்க “அண்ணா என்ன??” என்றாள் பிரியங்கா.

“அ.. அண்ணிக்கு… போ.. போன் வந்திருக்கு சொல்லு..” என,

“ஓ..!!” என்று அவனை கிண்டலாய் பார்த்தவள் “அண்ணி உங்களுக்கு போன் வந்திருக்காம்…” என்று உமையாளிடம் சொல்லிக்கொண்டே

“அப்படியே டேபிள் மேல இருக்க அண்ணாவோட போனை எடுத்துட்டுப் போன்கண்ணி..” என்று சத்தமாய் பசுபதிக்கும் கேட்கும் விதத்தில் சொல்ல,

‘ச்சே… சொதப்பல்…’ என்று பசுபதி தலையில் தட்டிக்கொள்ள, உமையாள் வந்த சிரிப்பை அடக்கியபடி அவனின் அலைபேசி எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்தாள்.

‘நல்லவேளை அத்தை இல்ல..’ என்று அவள் மனம் தானாய் நினைக்க, ‘அட என்ன.. வீட்டு பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்..’ என்று தனக்கு தானே ஒரு குட்டும் வைத்துவிட்டு மேல வர,

“போன் எடுத்துட்டு வா சொல்றதுக்கு பதிலா அப்படி சொல்லிட்டேன்…” என்றான் லேசாய் அசடு வழிந்து.

“ம்ம்..” என்று நேருக்கு நேர், அவன் முகம் பார்த்து புன்னகைத்து தலையை மட்டும் ஆட்டியவள், அலைபேசியை அவன் முன் நீட்ட, “உனக்கு யாரோடையும் பேசணும்னா பேசு உமையாள்..” என்று பசுபதி சொல்ல, பட்டென்று அவளுக்கு விழிகள் மலர்ந்தது.

அவள் பெயரை யாரும் அவளறிந்து, முழுதாய் உச்சரிப்பதில்லை..

‘உமா.. உமையா..’ இப்படித்தான்.

பசுபதி ‘உமையாள்…’ என்று சொல்லவும், அவளுக்கு அது நிரம்பவே பிடித்திருக்க, “ம்ம் இப்படியே கூப்பிடுங்க நல்லாருக்கு..” என்றாள் உள்ளத்தை மறைக்காது.

“உமையாள் தானே உன் பேரு..” என்றவன், அவளை ஒட்டி நிற்க,

“ம்ம் ஆனா யாரும் முழுசா அப்படி சொல்ல மாட்டாங்க…” என்றவள், அவனின் அலைபேசியில் அவளின் அத்தையின் இலக்கத்தை அழுத்த, பசுபதியின் பார்வையோ அவளை அழுத்தியது.

கழுத்துத் தாலிச் சரடோடு,  ஒரு சிறு சங்கிலி, உடன் அவன் வீட்டினில் போட்டுவிட்ட பெரிய தாலி கொடி. கையில் திருமணத்திற்கு போட்ட முஹூர்த்த வளையல். தங்கத்தில் எல்லாம் இல்லை. பசுபதி இதெல்லாம் பார்த்து தான் இருந்தான்.

அவனின் அம்மாவின் நகையில் ஒன்றை கொடுக்கவேண்டும் என்பது அவனின் ஆசை. அபிராமி அதற்கு சம்மதிக்கவில்லை.

“வந்ததுமே எல்லாம் தூக்கி கொடுத்திட கூடாது.. கொஞ்ச நாள் ஆகட்டும்..” என்றுவிட்டார்.                                   

இப்போதோ வளையல் மட்டுமாவது அவளுக்கு எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று தோன்ற, ‘அம்மாவின் நகையை எடுத்துக்கொடுத்தால் தானே தப்பு.. புதிதாய் வாங்கிடுவோம்..’ என்று முடிவு செய்தவன்,

உமையாள், பேசிவிட்டு வரவும் “காலை சாப்பாடு முடிச்சிட்டு ரெடியாகு. வெளிய போலாம்.. சரியா..” என, அவளுக்கு சந்தோசமாகிப் போனது.

“ம்ம்…” என்று வேகமாய் தலையை ஆட்ட,

“எங்க போறோம்னு எல்லாம் கேட்க மாட்டியா??” என்றான் பசுபதி.

“இங்க எனக்கு எதுவுமே தெரியாதே.. எங்க போறோம்னு சொன்னா மட்டும் தெரிஞ்சிடுமா.. சோ போறப்போ பார்த்துக்கிறேன்…” என்றவள்,

“தேங்க்ஸ்…” என,

“எதுக்கு??” என்றான் புரியாது.

“அத்தையோட பேசணும்னு நினைச்சேன்.. அதான்…”

“இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்வியா நீ??” என்றவன் “நேத்து என்ன சொன்னேன்.. கொஞ்சம் கொஞ்சம் தொட்டுக்கலாம் சொன்னேன் தான..” என, உமையாளின் புன்னகையில் இப்போது இன்னமும் மலர்வு கூட, அவன் தோள் ஒட்டி நின்றவள், இப்போது தன் தோளை அவன் தோள் மீது சாய்த்து நிற்பது போல் நிற்க,

“ம்ம் இப்படி நின்னா எப்படி??!!” என்றான்.

“ஹா..!! நீங்க தானே இப்போ…” என்று பேச வந்தவள், அவனின் கிண்டல் பார்வையில்,

“கடவுளே..!! நான் கீழயே போறேன்…” என்று செல்லப் பார்க்க,

“ஹேய் ஹேய்.. உமையாள் நில்லு…” என்று கை பிடித்து நிறுத்தினான் பசுபதி.

“என்ன??!!”

“என்னங்கன்னு கேட்கணும்…”

“ஓ..!! சரி சரி.. சொல்லுங்க.. என்னங்க…?” என,

“சித்திக்கிட்ட வெளிய போறோம்னு சொல்லணும்.. நம்மலா கிளம்பிட கூடாது..” என்று சொல்ல,

“நான் எப்படி சொல்ல??” என்றாள் தயக்கமாய்.

“சொல்லி பழகு..”

“ம்ம்ஹும்.. நீங்க சொல்லுங்க.. நான் சொல்ல தயக்கமா இருக்கு…”

“ம்ம்ச் உமையாள்.. நான் சொல்றத கேளு.. சிலது லேடீஸ் தான் பேசி முடிச்சுக்கணும்…” என,

‘நான் சொல்றத கேளு…’ என்ற அந்த வார்த்தைகள் தன்னைப்போல் வேலை செய்து அவளை சரி சொல்ல வைக்க, கீழே சென்று அதுபோலவே அபிராமியிடமும் சொல்ல,

“அப்படியா?? எங்க எங்க போலாம்னு இருக்கீங்க.. ஏன்னா மதியம் சாப்பாடு எப்படின்னு பார்த்துக்கணும்ல..” என்றார் அபிராமி.

“அது தெரியலையே அத்தை…”

“வெளிய போலாம்னு சொன்னவன், எங்கன்னு சொல்லலையா??!!”

“நான் கேட்டுக்கலயே…” என்று உமையாள் சொல்ல, அபிராமி எதுவும் சொல்லவில்லை.

சரி என்றும் சொல்லவில்லை, வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

காலை உணவு முடிந்து, பசுபதி அவனின் கார் எடுத்துவந்து வாசலில் நிற்க, உமையாள் தயாராகி வந்துவிட, “சித்தி என்ன சொன்னாங்க…” என்றபடி தான் காரைக் கிளப்பினான்.

“எங்க எங்க போறோம்னு கேட்டாங்க.. எனக்கு தெரியாதே.. அதான்.. தெரியலை சொன்னேன்.. அடுத்து எதுவும் சொல்லலை…”

“ம்ம்ம்.. சரி…” என்றவன் முகத்தில் யோசனை பரவ, உமையாளோ புதிய ஊரை வேடிக்கைப் பார்க்க, பசுபதியின் மனதில் பலவேறு கணக்குகள்.

அக்காள்கள் எல்லாம் ‘கல்யாணத்துக்கு அப்புறம் நீ உன் வாழ்க்கை.. உன் தொழில்னு இருக்க பாரு.. கூட்டுன்னு எதுவும் வேணாம்.. சித்தப்பாக்கிட்ட பேசி முடிவு எடு..’ என்று சொல்லியிருக்க,

அவனுக்குமே இதுதான் சரி என்று தோன்றினாலும், சடுதியாய் அப்படி எதுவும் செய்ய முடியாது என்பதும் தெரிந்தே இருந்தது.

Advertisement