Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 2

திருமணம் முடிந்திருந்தது….!!

பெரிய இடம், தடபுடலாய் திருமணம் நடக்கும் என்று பார்த்தால், பசுபதி வீட்டு குடும்ப வழக்கப் படி, அவர்களின் குலசாமி கோவிலில், மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து, எளிய முறையில் திருமணம். விருந்து எல்லாம் தனியே மண்டபத்தில் நடந்துகொண்டு இருந்தது.

‘எங்க குடும்ப வழக்கப் படி தான் கல்யாணம்…’ என்று முன்னமே சொல்லியிருக்க, மாணிக்கமும் சரி என்று இருந்தார்.

ஆனால் அது பிரேமாவிற்கோ, உமையாளுக்கோ தெரியாதே..

திருமணம் என்றதுமே, அவள் மனதில் குழப்பங்கள் இருந்தாலும், அடிமனதில் சில கற்பனைகளும் இருந்ததுதான்.  இப்படி நடக்கும் அப்படி நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்க, அது இந்த எளிய முறை திருமணத்தில் சற்றே ஏமாற்றம் கொடுக்க, சிறிது ஆச்சர்யமாகவும் கூட இருந்தது.

அது அவளின் முகத்திலும் தெரிய, பசுபதி கவனித்து, அனுமானித்தும் விட்டானோ என்னவோ “கல்யாணம் ஊருக்காக பண்றது இல்லை.. நமக்காக நம்ம நல்லா வாழணும்னு பண்றது.. கடவுள் முன்ன ஆடம்பரம் இருக்க கூடாது.. அமைதியும் ஆத்மார்த்தமும் இருந்தா போதும்…” என்று மெதுவாய், அவளின் செவியின் அருகே சொல்ல,

அவன் பேச பேச, திரும்பி அவன் முகம் பார்த்தவளுக்கு, கண்கள் மேலும் ஆச்சர்யத்தில் விரிந்தது..!!

எப்படியான வார்த்தைகள் இவை..!!

அதை எப்படி எளிதாய் சொல்லி முடித்துவிட்டான்??!!

உமையாளின் விழிகளில் தெரிந்த வியப்பில், பசுபதிக்கு தன்னைப்போல் புன்னகை விரிய “சாமி கும்பிடு..” என்று நேரே கை காட்டி சொல்ல, மனதிற்கு இத்தனை நாட்கள் முரண்டிக்கொண்டது எல்லாம் இப்போது எங்கோ ஓடியதாய் இருந்தது உமையாளுக்கு..

பிரேமாவிற்கோ எல்லாம் நல்லபடியாய் முடிந்த திருப்தி. ஒருபக்கம் நிம்மதியும் கூட. எப்படியோ உமையாளை ஒருவனின் கரத்தில் பிடித்துக் கொடுத்தாகிவிட்டது.

உமையாளிடம் அவர் சொன்னது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் “புத்திசாலித்தனமா நடந்துக்கோ..” என்று..

இவர்கள் ஒரு வேனில் தானே வந்திருக்க, விருந்து முடிந்து, அன்றைய மாலையே கிளம்பிட, பிரேமாவும் பூஜாவும் கிளம்புகையில் உமையாளுக்கு கண்களில் நீர் வேறு.

மாணிக்கமோ “எங்க பேரை காப்பாத்திடு …” என்றுமட்டும் சொல்ல, வந்த கண்ணீர் அப்படியே கண்களோடு நின்றுவிட, அமைதியாய் நின்றுவிட்டாள்.

இதனை எல்லாம் பசுபதி பார்த்தும் பார்க்காதது போலத்தான் பார்த்துகொண்டு இருந்தான். அவளின் நிலையை தான் அவன் எப்போதோ கண்டறிந்து இருந்தானே.

‘நமக்கு அப்பா அம்மா இப்போதான் இல்லை.. இவளுக்கு எப்பவோ இல்லை.. நல்லா வச்சுக்கணும்…’

இதுதான் அவன் மனதில் இருந்தது…!!

என்ன அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவ்வளவே..

ஒருவழியை உமையாளை அங்கே விட்டு பெண் வீட்டினர் கிளம்பிட, “வா உமையா நேரமாச்சு.. அலங்காரம் செய்யணும்…” என்று பால்நிலா அழைக்க, ‘அலங்காரம்…’ என்ற வார்த்தை கேட்டதும், அது எதற்கு என்பது தெரிந்து ஒரு ‘திக்…’ உணர்வு தான் அவளுக்கு.

“அட என்ன நீ.. இப்படி நிக்கிற.. வா வா..” என்று இப்போது வந்து பனிமலர் அழைக்க, அபிராமியும் வந்துவிட்டார் “என்ன இன்னுமா பேச்சு…” என்று கேட்டபடி,

பால்நிலா எதையோ முனுமுனுக்க, பணிமலரோ தங்கையை கடியும் பார்வை ஒன்றை பார்த்து “பேச்சோடவே.. வேலையும் தான் நடக்குது சித்தி…”என,

“ம்ம் நேரமாச்சு…” என்றுவிட்டு போனார் அபிராமி.

அவர் தலை மறையவுமே “இங்கபாரு உமையா… எங்க சித்தி நல்ல டைப் தான்.. அதுக்காக ரொம்ப… நல்ல டைப் எல்லாம் இல்லை.. உனக்கு இங்க முதலும் முக்கியமும் எங்க தம்பிதான்.. அவன் சந்தோசமா இருக்கணும்னு தான் உன்னைய அங்க இருந்து கட்டிட்டு வந்தது.. சித்தி அது இதுன்னு சொன்னா கூட தம்பி என்ன சொல்றானோ அதை கேட்டு நட…” என்று பால்நிலா வேகமாய் அவளுக்கு அறிவுரை சொல்ல,

“ம்ம்ச் நிலா என்ன பேச்சு இது..” என்று அதட்டிய, பனிமலர் “இங்க எல்லாருமே உனக்கு முக்கியம்தான்.. நீயும் எங்களுக்கு அப்படித்தான்.. சித்தி சொல்றபடி கேட்டு வீட்டு பழக்கம் பழகிக்கோ.. தம்பி சொல்றதை கேட்டு அவனை பழகிக்கோ…” என,

அவள் சொன்ன விதத்தில், உமையாளுக்கு சிரிப்பு வந்திட, அதனை அடக்கத்தான் சற்று சிரமமாய் இருக்க, “சிரிச்ச முகமாவே இரு.. பசுபதிக்கு எப்பவும் வீட்டு பொம்பளைங்க சிரிச்ச முகமா இருந்தா புடிக்கும்..” என்று நாத்திகள் இருவரும் மாறி மாறி பேசி, அலங்காரம் செய்து, அவளை பசுபதியின் அறைக்கு அனுப்ப, உமையாளுக்கு வண்டு குடைந்தது மண்டைக்குள்.

யார் சொல்வதை கேட்பது??!!

அங்கே சென்னையில் அத்தை சொல்வதை மட்டுமே கேட்டு வளர்ந்தாகிவிட்டது..

இங்கே இத்தனை பேர் என்கையில் யார் பேச்சினை கேட்க? அதுவும் ஆளாளுக்கு ஒன்று சொல்கையில்??!!

‘யப்பா…!!’ நினைக்கவே ஒரு அயர்வு அவளுக்கு..

பசுபதி வீடு பெரியது என்றாலும், மாடியில் தனி வீடு போலவே எல்லா வசதிகளும் இருக்க, அதிலும் அவனின் அறையில் ஒரு ஓரத்தில் உணவு மேஜை கூட இருக்க, இவளுக்கு அப்போதும் சற்று வியப்புதான்..

அதையும் கூட கவனித்தானோ என்னவோ “சில நேரம் வர லேட்டாகும்.. அப்போ சித்தி மேல கொண்டு வந்து வச்சிட்டு போயிருப்பாங்க.. வந்து நானே போட்டு சப்பிட்டுப்பேன்..” என்று அவன் விளக்கம் சொல்ல,

கேட்காமலேயே கிடைத்த விளக்கத்தில், என்ன உணர்ந்தாளோ “கீழ இருந்துதானே மேல வரனும்…” என்றாள் பட்டென்று.

அவள் அப்படி கேட்டதுமே, ஏனோ ஒரு திருப்தி பசுபதிக்கு.. அது அவனின் முகத்திலும் தெரிய “நம்ம மாடிக்கு அந்த பக்கம் ஒரு கதவு இருக்கு.. அது வழியாவும் கூட வரலாம்.. சாவி எப்பவும் என்கிட்டே தான் இருக்கும்..” என, அவளுக்குப் புரியவில்லை.

“ஏன் கீழ இருந்தும் வரலாம்தானே…” கேட்டேவிட்டாள்.

“வரலாம்தான்…” என்றவன் சற்று நிதானித்து “ம்ம் இப்போதான் நீ வந்துட்டல்ல…” என, சுத்தம் அவளுக்கு முற்றிலும் குழம்பிப்போனது.

அவளின் முகம் பார்த்தே அவனுக்கு அது புரிய “அடடா.. இன்னிக்கே உனக்கு இங்க எல்லாம் புரியாது.. நீயா சிலது கவனிச்சு புரிஞ்சுக்க பாரு. இன்னிக்கு இது போதும்…” என்றவன்,

“கதவு திறக்கிறது பத்தி பேசக்கூடாது.. சாத்துறது பத்தி பேசணும்…” என்றபடி சென்று அவனின் அறை கதவை அடைத்துவிட்டு வர, உமையாளுக்கு சற்றே பதற்றமாய் இருந்தாலும், அவனின் பேச்சில் அவளையும் மீறி ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டது நிஜமே..

கதவை சாத்திவிட்டு, அவளருகே வந்து அமர்ந்தவன், “ஹ்ம்ம் இப்போ சொல்லு…” என,

‘எதைக் கேட்கிறான்??!!’ என்று யோசித்தவள், அவனை கேள்வியாய் பார்க்க, “ஹேய்.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும் நினைச்சேன் மறந்தே போனேன்…” என, அப்போதும் அவளின் பார்வையில் கேள்வி மட்டுமே.

“அன்னிக்கு பேசினப்போ நிஜமா எனக்கு சரியான வேலை.. உன்னோட பேசுறப்போ கொஞ்சம் ரிலாக்ஸா பேசணும்னு தான் அன்னிக்கு அப்படியே வச்சிட்டேன்..” என,

“ஓ..!!” என்றாலும், அவளுக்கு மனது சமாதானம் ஆகிடவில்லை.

இருந்தும் கூட திரும்ப அவன் அடுத்து அழைக்கவில்லை என்று.

“திரும்ப கால் பண்ணிருப்பேன்.. உன்கிட்ட போன் இல்லைன்னு அக்கா சொல்லுச்சு.. போன் வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சா.. இங்க வந்தபிறகு வாங்கிக்கொடுன்னு சித்தி சொல்லிட்டாங்க.. அதான் உன் அத்தைக்கு கூப்பிட்டு உன்னோட பேச சங்கடம்..” என்று அவன் பேசி முடிக்க,

‘அப்பாடி..!! இவன் என்ன நம்ம நினைக்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்றான்..??’ என்று அவள் நினைப்பதற்கு முன்னே, உமையாளின் மனம் நினைத்துவிட்டது.

“என்ன உமையா.. அமைதியாகிட்ட …?” என்று அவன் இலகுவாகவே பேச,

“இ.. இல்ல ஒண்ணுமில்ல..” என்றவள், அடுத்தது என்ன என்று அவனைப் பார்க்க

“நான் ஒன்னு சொல்லணும்.. தப்பா எடுத்துக்க கூடாது…” என்றான் சற்றே அழுத்தம் நிறைந்த குரலில்.

“ம்ம்…” என்று அவள் தலை ஆடினாலும், என்ன சொல்லப் போகிறானோ என்று பார்க்க,

“இங்க சித்தி சொல்றது தான் எல்லாமே.. அதுனால நீயா எதுவும் செய்யனும்னு எடுத்ததுமே நினைக்காத..” எனும்போதே,

“நான் அப்படி நினைக்கலையே…” என்றுவிட்டாள்.

பட்டென்று அவளுக்கு சொல்ல வந்திருந்தது. பசுபதிக்கு அத்தனை நேரமிருந்த பார்வை மாறி “சொல்றதை கேளு…” என,

இந்த வார்த்தைகளை தானே கேட்டு வளர்ந்தாள், இப்போதும் கூட அப்படியா என்று தோன்ற, ஏனோ ஒரு ஏமாற்றம் அவளுக்கு.

“ம்ம்.. சொல்லுங்க..” என்ற குரலில், ஒரு சிறி  பிசிறு தட்ட

 “உனக்கு ஏதாவது செய்யணும், வேணும்னு தோணிச்சுன்னா என்கிட்டே சொல்லு.. நான் அதை பண்ணிடுவேன்.. வீட்ல வேற ஏதாவது மாற்றம் வேணும்னா சித்திக்கிட்ட கேட்டு, அவங்க சரின்னு சொன்னா கூட,   நீயா வேலையாளுங்கக்கிட்ட சொல்லாத.. சித்திய விட்டு பேசு…” என்று பசுபதி சொல்ல,

“தேவைன்னா சொல்றேன்..” என்றவளுக்கு அப்போதைக்கு அப்பேச்சு பிடிக்கவில்லை.

வந்ததுமே அப்படி என்ன நான் இங்கே செய்துவிட போகிறேன்..??!!

அவளின் முக சுருக்கம் அவனுக்குப் புரியாது இல்லை.. இருந்தும் அவனின் நிலையும் அதுதான். இங்கே அனைத்திலுமே அவனுக்கு உரிமையுண்டு.. ஆனால் உறவு என்கையில் சித்தி சித்தப்பா, இருவரும் ஒரு கோடு கண்ணுக்குத் தெரியாத வகையில் போட்டுத்தான் வைத்திருந்தனர்.

அது பல நேரங்களில் நன்மையாகவும் இருந்தது.. ஒரே குடும்பம் என்கையில் அது சில இடங்களில் இடர் கொடுக்கவும் செய்தது.

மூத்தார் பிள்ளைக்கும்., தன் பிள்ளைக்கும் காட்டும் சிறு வித்தியாசம் அபிராமி எப்போதுமே செய்வார்.. சிறு வயதில் இருந்தே. பசுபதியின் அப்பா அம்மா இருக்கும் போதே.. அது மனித இயல்பும் கூட.

இந்த திருமணத்தின் போது கூட “அப்படியே விட்டுடோம்னு யாரும் சொல்லிட கூடாது தானே…” என்று இரண்டொரு முறை சொல்லியும் கூட விட, பால்நிலாக்கும் அவருக்கும் சண்டையாகி கூட இருந்தது.

“ஏன் நாங்க எங்க தம்பிக்கு பொண்ணு பார்க்க மாட்டோமா??!!” என்று.

இதனை எல்லாம் எடுத்ததுமே சொன்னால் நிச்சயம் உமையாளுக்கு புரியவும் புரியாது.. ஆகா சிலதை மேலோட்டமாய் சொல்லி, சிலது அவளே புரிந்துகொள்ளட்டும் என்று நினைத்தால், அவன் சொல்ல வந்தது அவளுக்கு தவறுதலாய் அர்த்தம் கொடுத்துவிட்டது.

சரியோ தவறோ இன்றைக்கு இது போதும் என்று நினைத்தவன் “உனக்கு டயர்டா எதுவும் இருக்கா??!!” என்று கேட்க,

‘இல்லை…’ என்று சொல்ல நினைத்தவளுக்கு, மாறாக ஒரு பிடிவாதம் தோன்ற “ஆமா.. தலை கூட ரொம்ப வலி..” என்று இல்லாத ஒன்றை  சொல்ல,

“அப்படியா??!!”  என்று அவளின் முகம் பார்த்தவன் “அப்படி தெரியலையே??!!” என்றான் யோசனையாய்.

“என் வலி உங்களுக்கு எப்படி தெரியும்??!!”  

அப்போதும் உமையாளுக்கு பட்டென்று பதில் வந்து விழ, பசுபதி என்ன நினைத்தானோ “ம்ம் சரி தூங்கு…” என்றவன் அவனின் அலமாரியில் இருக்கும் தைலம் கொண்டு வந்து தர,

“வேண்டாம்…” என்றாள்.

“தலை வலிக்கு நல்லா கேட்கும்..” என்று அவனும் விடுவேனா என்று சொல்ல, அவன் நீட்டிய தைலத்தை வாங்கிக்கொண்டவள், அதனை தேய்க்கவே இல்லை.

தலையணைப் பக்கத்தில் வைத்துவிட்டு, படுத்துக்கொள்ள, “வலிச்சா தேய்ச்சுக்கோ…” என்றபடி அவனும் படுக்க,

‘தெரிஞ்சுட்டே தான் எல்லாம்…’ என்றவள், அவனை முறைப்போடு தான் பார்த்தாள்.

எங்கிருந்துதான் அவளுக்கு இப்படியானதொரு உரிமையும், பேச்சும் வந்ததோ.. அவளுக்கே சந்தேகம் தான்.

“இப்படி முறைச்சா தலைவலி போகாது.. வரும்…” என்று பசுபதியும் பதில் பேச, பட்டென்று கண்கள் மூடிக்கொண்டாள், இனி எதுவும் பேசப் போவது இல்லை என்பதுபோல்.

“ம்ம்.. தூங்கு தூங்கு நல்லா தூங்கு…” என்றவன், வேண்டுமென்றே சுவர் பக்கத்தில் அவளின் புறம் சற்று தள்ளியிருந்த சுவிட்சை அமர்த்த, என்னவோ என்று பட்டென்று புரண்டவள், அவன் என்று தெரியவும்,

“என்கிட்டே சொன்னா என்னவாம்??!!” என, அவளின் குரலில் தெரிந்த சிறு நடுக்கமோ,  அவனை கேலியாய் பேச வைத்தது,

“உனக்கே தலைவலி.. பாவம்…” என்று..

விரல் சொடுக்கும் நொடிதான் என்றாலும் கூட உமையாளுக்கு அந்த படபடப்பு குறைவேனா என்றிருக்க, “திரும்ப சுவிட்ச் ஆன் செய்யவா??!! உனக்கு படபடப்பு போகும் போல…” என்ற பசுபதி, மீண்டும் சுவர் பக்கம் கை கொண்டு போக,

“நீங்க கொஞ்சம் சும்மாதான் இருங்க…” என்றபடி அவனின் கரம் அவள் பற்றியிருந்தாள்.    

Advertisement