Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 11

உமையாளுக்கு கிஞ்சித்தும் நம்பிட முடியவில்லை இதனை. முறுக்கிக்கொண்டு திரிந்த பசுபதியா இவன் என்ற பார்வையே அவளிடம். அதுவும் என்னமாய் யோசித்து இப்படி? அந்த வியப்பு அவளுக்குப் போகவேயில்லை.

நொடிகள் கடந்தும் உமையாள் அப்படியே நிற்க, “ஹலோ பொண்டாட்டி.. எவ்வளோ நேரம் இப்படி நிக்கிறது.. டைம் வேற போயிட்டே இருக்கு…” என்றவன்  வந்து தோள் தொட,

“அ..!! என்னது.. என்ன போகுது…?” என்றாள் விளங்காது.

“சுத்தம்…” என்று தலையில் அடித்தவன், “சாப்பிட நேரமாச்சு…” என,

“இதோ.. டி.. டிரெஸ் மாத்திட்டு வர்றேன்…” என்று நகரப் போக,

“டிரெஸ் தானே மாத்துறப்போ மாத்திக்கலாம்.. இப்போ சாப்பிடலாம்…” என்று அவள் கை பிடித்தே அழைத்துப் போக,

“எப்போ மாத்திக்கலாம்…” என்று தானாய் கேள்வி வர,  கேட்டதற்கு பின்னே தான் அதனை அவன் எப்படி எடுப்பான் என்பதும் புரிய ‘அச்சோ’ என்ற ஒரு பார்வை மட்டுமே அவளிடம்.

‘இப்படித்தான் பேசுவியா நீ…’ என்று தன்னை தானே கடிந்துகொள்ள, பசுபதியோ “இப்போ என்ன அவசரம்..? அதராம பதறாம சிந்தாம சிதறாம மாத்தலாம்…” என,

“என்ன புரியலை..?” என்று அப்போதும் அவனிடமே கேட்டு நின்றாள்.

“புரியுற விதத்துல சொன்னா புரியும்.. ஆனா உனக்கு புரிய வைக்க எனக்கு தெம்பு வேணும்.. அதுக்கு நான் சாப்பிடனும்.. அதனால நீயும் சாப்பிட வா…”

“ம்ம்ம்… சரி சரி…” என்றவள், கை கழுவி அவனோடு சாப்பிடச் செல்ல, மேஜையில் இருந்ததில் முக்கால்வாசி அவளுக்கு பிடித்த உணவுகளே.

அனைத்தையும் பார்த்தவள் “இத்தனையும் இன்னிக்கேவா ஆர்டர் பண்ணிருக்கணும்…” என்று பாவமாய் பசுபதியை பார்த்துச் சொல்ல,

“நான் இடியாப்பம் ஆர்டர் கொடுத்து, உனக்கு அப்போன்னு பார்த்து பட்டர்னான் சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா என்ன செய்றது..?” என,

‘இன்னிக்கு என்னாச்சு இவருக்கு…?’ எனப் பார்த்தாள்.

“ரொம்ப பார்க்காத… கண் பட்டுட போகுது…”

“தோடா…!!!” என்று வேகமாய் தலையை சிலுப்பியவள், தட்டில் கவனம் வைக்க, இப்போது பசுபதியின் கவனமெல்லாம் அவளிடமே.

பசுபதி தன்னைத் தான் பார்க்கிறான் என்பதனை உணர்ந்தவள், “ஷ்..!! ரொம்ப பார்க்காதீங்க…” என,

“பார்த்தா என்ன செய்வ?” என்ற கேள்வியில் உண்பதற்கு மட்டுமே உமையாள் வாய் திறக்க, அடுத்த பல நிமிடங்கள் அங்கே மௌனம் மட்டுமே.

பல நாட்களுக்கு பின்னே இருவருமே திருப்தியாய், நிம்மதியாய் உண்டதாய் ஓர் உணர்வு. இருவரும் அதனை உணர்ந்திருக்க, என்ன மற்றாவ்ர்களிடம் அதனை சொல்லிக்கொள்ளவில்லை அவ்வளவே. உணவு மேஜையை இருவரும் சேர்ந்தே சுத்தம் செய்ய,

“நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க.. நான் பார்த்துக்கிறேன்…” என்று உமையாள் சொல்ல, “நான் செஞ்சா என்ன??” என்றான்.

“பரவாயில்ல…”

“என்ன பரவாயில்ல.. சொல்லு உமையாள் நான் செஞ்சா என்ன??” என்று உமையாள் கை பிடித்து பசுபதி நிறுத்த,

“என்னாச்சு உங்களுக்கு..” என்றாள் பொறுக்க முடியாது.

வந்ததில் இருந்தே அவனின் பேச்சு நேரடி பேச்சாய் இல்லையே. எத்துனை நேரம் அவள் தன்னை சமாளித்து நிற்பாள்.

“எனக்கென்னாச்சு..? இங்க இருக்கிறது நம்ம ரெண்டு பேர் மட்டும்தான்.. அதனால எல்லா வேலையும் ஷேர் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்…”

“இப்படியே எப்பவும் நினைச்சா சரிதான்…” என்று உமையாள் வாய்க்குள் பேச,

“நான் என்ன நினைக்கிறேன்னு எல்லாம் உனக்கு புரிஞ்சுடுமா என்ன??” என்று பசுபதியும் கேட்க, அவளோ பதிலே பேசவில்லை.

ஒன்றும் பேசாது நிற்பவளை பார்த்தவன் “இப்படி உக்கார் உமையாள் உன்னோட பேசணும்…” என்று சோஃபாவை காட்டினான்.

‘என்ன வரப் போகிறாதோ…’ என்கிற நினைப்பில் தான் அவள் அமர,

“நீ நினைக்கிறது போல நான் வேற எதுவும் பேசலை உமையாள்.. நம்மள பத்தி மட்டும்தான் பேசப் போறேன்.. அதாவது நமக்குள்ள இருக்க இந்த இடைவெளி…” என்று இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை கை சுட்டிக் காட்ட, உமையாளிடம் வார்த்தையே இல்லை.

“பேசலாம் தானே…” என்றவனின் பார்வை அவளை ஊடுறுவியது.

“ம்ம்…”

“உமையாள்… ஊருக்கு போகவும் நிச்சயம் யாரும் சும்மா இருக்க மாட்டாங்க.. நமக்குள்ள எதுவோ சரியில்லைன்னு எல்லாருக்குமே புரிஞ்சிருக்கும். நேரடியா இல்லைன்னாலும் தனி தனியா நம்மக்கிட்ட விசாரிப்பாங்க…” என,

அவன் சொல்ல சொல்ல, உமையாளுக்கு உள்ளம் லேசாய் கலங்க ஆரம்பித்தது. அத்தை மாமாவை எப்படியோ சமாளிப்பது போல், அங்கே புகுந்த வீட்டினில் மாமியார் நாத்துனார் என்று குடும்பத்தினரை சமாளிக்க முடியாதே.

முகத்தில் தெரிஞ்ச பாவனை கண்டு “நீ டென்சன் ஆகணும்னு நான் சொல்லலை உமையாள். எனக்குமே இது கொஞ்சம் கஷ்டம்தான்.. நம்ம ஆயிரம் சண்டை போடலாம். ஆனா அதெல்லாம் நமக்குள்ள.. மத்தவங்க பேசுற டாபிக்கா நம்ம இருக்கிறது எனக்குப் பிடிக்காது…” என,

“அ.. அதுக்கு.. அதுக்கு நான் என்ன செய்யணும்?” என்றாள் மெல்லிய குரலில்.

“எதுவும் செய்யவேணாம்.. இப்படியே எல்லாம் விட்டு சமாதானமா போயிடலம். போனது எல்லாம் போகட்டும்… ஊருக்கு போறப்போ புதுசா போலாம்  சரிதானா??” என்றவனுக்கு அவள் முகம் தவிர வேறெதுவும் கருத்தில் பதியவில்லை.

உமையாளோ, தன்னிலை விளக்கம் போல் ஏதாவது சொல்வான் என்று பார்த்திருக்க, அவனோ அனைத்து கோட்டையும் அழித்துவிட்டு, புதிதாய் கோடு போடத் தொடங்கவும் சின்னதாய் ஓர் ஏமாற்றம் உணர,

“ம்ம்ம்..” என்றாள் சுரத்தே இல்லாது.

“மனசுல எது இருந்தாலும் பேசிடு உமையாள். உள்ள வச்சிட்டே இருந்தா அது இன்னும் இன்னும் பெருசு தான் ஆகும். கம்மியாகாது…”

“இல்ல அப்படில்லாம் ஏதுவுமில்…” என்று அவள் சொல்லும்போதே “பொய் சொல்லாத நீ…” என்று அதட்டிவிட்டான்.

அதிர்ந்து போய் உமையாள் பார்க்க “இங்க பார்… வாழ்க்கைல குறை நிறை இருக்கும்.. எல்லாமே நல்லாவே இருக்கும்னு யாரும் சொல்லவே முடியாது.. நீ சொன்னியே பிடிச்சாலும் பிடிக்கலன்னாலும் வாழ்ந்து தான் ஆகனும்னு.. கண்டிப்பா இந்த வாழ்க்கை பிடிக்கும்னு நினைச்சு வாழ்ந்து பாரேன்…” என்றான் மெதுவாய் அவள் கன்னம் ஏந்தி.

ஏற்கனவே இப்போது அப்போது என்றிருந்த கண்ணீர் இப்போது அவன் கரம் தொட்டுவிட “நீ அழறதுக்காக இதெல்லாம் பேசலை.. உன்னோட நிலை எனக்கு புரியும் உமையாள். உன்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன்.. அழகு பார்த்ததுமே தெரியுற விஷயம்.. ஆனா வாழ்க்கை அழகா இருக்க, அழகு மட்டுமே காரணம் இல்லை. நான் உன்னோட சேர்ந்து அழகான வாழ்க்கைதான் வாழனும்னு நினைக்கிறேன்  உமையாள். நிச்சயமா அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு இல்லாம எதுவும் முடியாது..”

“இப்.. இப்போ இவ்வளோ சொல்றீங்க.. பின்ன ஏன் நான் என் புருசன்னு உரிமையா ஏதாவது பேசினா கூட அதை சரியாவே தப்பா எடுத்துக்கறீங்க..”

“உரிமையா பேசுறது வேற. வார்த்தைய விடுறது வேற உமையாள்…”

“ம்ம் சரி.. நான் பேசுனது தப்புதான்… விடுங்க.. இனி யோசிச்சு பேசுறேன்..” என்றவள் எழுந்துகொள்ள,

“ம்ம்ச் உமையா…” என்றவன் கை பிடித்து நிறுத்தினான்.

“இதான்… இதான் உன்னோட பிரச்சனை.. நான் சொல்றது நம்மளோட நல்லதுக்குன்னு ஏன் உனக்கு புரியலை… இப்படி பட்டுன்னு எந்திரிச்சு நிக்கிற..” என்றவனும் எழுந்துகொள்ள,

“எ.. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு நிஜமா தெரியலை… ப்ளீஸ்.. இதெல்லாம் நம்ம எதுவும் பேசவேணாம்.. கொஞ்சம் அமைதியாவே இருப்போமே…” என்றாள் அவளும் இறைஞ்சலாய்.

“ம்ம்ம்…” என்று அவளைப் பார்த்தபடியே ஆழ மூச்செடுத்துவிட்டு  “சரி இருக்கலாம்.. அமைதியாவே…” என்றவன் சட்டை பட்டனை கலட்டியபடி பக்கவாட்டில் இருந்த அறைக்குள் செல்ல, அவனோடு சேர்ந்து இவள் கொண்டு வந்திருந்த பையும் சென்றது.

சட்டென்று ஒரு நிசப்தம் வந்து சூழ்ந்துகொள்வதாய் இருக்க, உமையாளுக்கு அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உருவமே இல்லாத எதோ ஒன்று, ஒலியே எழுப்பாது அவளை வந்து தாக்குவது போலிருக்க, வேகமாய் பசுபதி சென்ற அறைக்குச் சென்றாள்.

அவனோ அங்கே உடை மாற்றிக் கொண்டு இருக்க, உள்ளே எத்தனை வேகத்தில் சென்றாளோ, அதே வேகத்தில் அப்படியே அங்கேயே நின்றுகொண்டாள்.

மதுரை வீட்டினில் அவன் உடைமாற்றுகையில் அவள் இருந்ததே இல்லை என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. அவளே கிளம்பினாள் கூட, சில நேரம் பசுபதி அவளை நிறுத்தி வைத்துக் கொள்வான். இப்போது ஏனோ அதெல்லாம் நினைவில் வர, ஒருவித தவிப்போடு தான் கணவனைப் பார்த்தாள் உமையாள்.

அவனோ சத்தமில்லாது விசில் அடிப்பது போல், வாயை வைத்துக்கொண்டு தலையை அவளைப் பார்த்து ஆட்டியவன், கழட்டி போட்ட சட்டையை ஹேங்கரில் மாட்ட,

“என்னங்க….” என்றாள்.

பதிலுக்கு என்னவென்று கேட்காது, பசுபதி திரும்பிப் பார்க்க, “இங்க என்ன இவ்வளோ அமைதியா இருக்கு. இதுவே எப்படியோ இருக்கு…” என,

பசுபதியின் கைகள் அந்த அறையின் மூலையில் இருந்த ஒரு மியூசிக் சிஸ்டமை காட்ட, “எனக்கு இதெல்லாம் போட தெரியாது…” என்றாள்.

‘ஓகே…’ என்று இரு கைகளையும் விரித்து, வாய் திறக்காது பாவனை செய்ய,

“ம்ம்ச்… இப்போ என்னாச்சு உங்களுக்கு…” என்று சலித்தபடி பொத்தென்று கட்டிலில் அமர்ந்துகொள்ள, பசுபதியிடம் இருந்து பதிலே வராது போக, திரும்பிப்பார்த்தாள்.

மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அமைதியாய் பசுபதி நிற்க, “கேட்கிறேன் தானேங்க…” என்றாள்.

‘நீ தானே அமைதியா இருக்கணும் சொன்ன…’ என்று பசுபதி சைகையில் சொல்ல,

“என்ன… என்னது… எனக்கு புரியவே இல்லை..” என்றாலும் சலுகையாகவும், சலிப்பாகவும்.

பசுபதி அப்போதும் சிலையாகவே நிற்க “அட கடவுளே…” என்றபடி எழுந்தவள், அவனருகே வர ‘வா டி வா..’ என்றெண்ணியவன், மேலும் விறைப்பாக,

“பேசமாட்டீங்களா…” என்றாள் மடக்கியிருக்கும், அவன் கரம் மீது கரம் வைத்து. 

“நீதானே அமைதியா இருக்கணும் சொன்ன…” என்றான் மிக மிக மெதுவாய்.

அதாவது அவளின் செவிக்கு அருகே இதழ் வைத்து, அவளுக்கு மட்டுமே கேட்கும்படி, பசுபதி பேச, அவனின் இந்த திடீர் ஸ்பரிசத்தில் லேசாய் ஒரு திடுக்கிடல் இருந்தாலும், அவள் சொன்னதையே அவன் திருப்பி அவளுக்குத் திருப்ப, கண்கள் தன்னைப்போல் விரிந்து பசுபதியைக் கண்டது.

“ம்ம்…” என்று இரு புருவம் தூக்கி, பசுபதி கேட்க ‘ஒண்ணுமில்ல…’ என்று உமையாளின் தலை ஆட,

“ஒண்ணுமே இல்லையா…” என்றான் முன்னைப் போலவே.

“நீ.. நீங்க ஏன் இப்படி பேசுறீங்க…” என்றவள், பின்னே நகர,

“எப்படி பேசினேன்.. இதைவிட அமைதியா பேசினா சத்தம் வராது. நீதான் என் பக்கம் வருவ.. அப்புறம் இப்படித்தான் ஆகும்…” என்றவனின் கரம் அவளை சுற்றி பிடிக்க,

“நா.. நான் எதுவுமே சொல்லலையே…” என்றாள் சற்றே திணறலாய்.

“சொல்லாத…” என்று உமையாள் இதழ் மீது தன் ஒற்றை விரலை வைத்தவன்,

“வேறெதுவும் பேசக்கூடாது சொல்லிட்ட. அட்லீஸ் என் பொண்டாட்டி கூட இத்தனை நாளுக்கு அப்புறமா ப்ரீயா இருக்க ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு.. அதுக்கும் ஏதாவது வேட்டு வைச்சிடாத…” என்று பசுபதி சொன்ன பாவனையில், உமையாளுக்கு சிரிப்பு தானாக வந்துவிட,

தன் விரல்களின் அழுத்தத்தையும் மீறி, அவளின் இதழ் சிரிப்பில் விரிவது கண்டு, பசுபதிக்கு மனதில் ‘எல்லாம் சரியாகும்…’ என்ற எண்ணம் இன்னும் ஆழமாய் பதிந்தது.

“இப்படி சிரிச்சா என்னர்த்தம்…??”

“ம்ம்… ம்ம்…” என்று அவன் விரலை தன் விரல் கொண்டு உமையாள் சுட்டிக்காட்ட, “ஓ… விரல் வச்சா கஷ்டம்.. இதழ் வச்சா இஷ்டம் அப்படியா??” என்று எதுகை மோனையாய் பேச, உமையாளுக்கு அடக்கமாட்டாமல் தான் சிரிப்பு வந்தது.

மனதில் இருக்கும் சஞ்சலங்கள் எல்லாம் எங்கோ ஓடி காணாது போனதாய் இருக்க, இதே தனிமை… இதே இனிமை.. இன்னும் இன்னும் என்று உள்ளமும் உடலும் சேர்ந்தே  சேர்ந்தே ராகம் பாட,

“கஷ்டம்னா கொஞ்சம் கஷ்டம்… இஷ்டம்னா ரொம்ப இஷ்டம்…” என்று அவனை போலவே பாவனை செய்து சொன்னவள், அவள் சொன்னது அவனுக்கு புரியும் முன்னம், உடை மாற்றவென்று குளியலறை புகுந்துகொண்டாள்.

“டி.. உமையாள்… ஏய்.. இதெல்லாம் அராஜகம்…” என்று பசுபதி வெளி நின்று கத்த,

“நான் என்ன செஞ்சேன்…” என்றாள் பாவமாய்.

“நான் மாத்துறப்போ பார்த்த.. இப்போ என்ன உள்ள ஓடிட்ட நீ.. வெளிய வா.. திஸ் இஸ் நாட் குட்…” என,

“பேட் பேட் திங்க்ஸ்க்கு எல்லாம் குட் குட் பார்க்கக் கூடாது…” என்று கிண்டலாய் சொல்ல,

“நமக்குள்ள எதுவும் பேடில்ல…” என்ற பசுபதியின் பேச்சில்..

“அப்போ இதுவும் குட் தான்…” என்று சொல்லி அடுத்து பேசவேயில்லை.   

“உமையாள்….”

உள்ளே நீர் விழும் சத்தம் கேட்க, ‘இவ குளிக்கிறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…’ என்றவன், அங்கேயே இருந்த சோபாவில் அமர்ந்தும் கொண்டான்.

உமையாளுக்கோ, கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. அவளின் கணவன். சொல்லப்போனால் அவன் தன்னிடம் எப்படியெல்லாம் இருந்திட வேண்டும் என்று அவள் ஆசைகொண்டாளோ அதுபோலவே இப்போது நடக்கிறது.

எது எப்படியோ தனக்காகத்தானே இந்த நான்கு நாட்கள் இங்கே தங்குவது என்று அவளுக்குப் புரியாது இல்லை.

ஒரு இணக்கம் வேண்டும் என்பதற்காகத்தானே பசுபதியும் இத்துனை முயல்கிறான் என்று தோன்ற, வெகு நாளைக்கு பிறகு, தனக்கு பிடித்த பாடலை முனுமுனுத்தபடி வெளி வந்தவள், அவனைக் கண்டும் காணாது போல கண்ணாடி முன்னே நிற்க,

“இந்த நைட்ல எதுக்கு மேக் அப்..?” என்றான் கடுப்பாகவே.

“மேக் அப்லாம் இல்லை.. இதுக்கு பேரு பிரெஷ் அப்…”

“இந்நேரம் தலை வாரனுமா??”     

“தலை எந்நேரமும் நம்மக்கூட தானே இருக்கு.. அப்போ எப்பவும் வாரிக்கலம்…”

கண்ணாடி வழியாகப் பார்த்தே தான் இந்த சம்பாசனைகள் எல்லாம்.. ஆளுயர கண்ணாடி என்பதால், பசுபதி அமர்ந்து கொண்டு பேசினாலும், அவளும் அவனுக்குத் தெரிந்தாள். அவனும் அவளுக்குத் தெரிந்தான்.

பேச்சுக்கள் இப்படியே ஏட்டிக்கு போட்டியாய் செல்ல, இப்போது பசுபதி அவளின் அருகே இருந்து தன் விரல்களால் அவள் கேசம் கோத, குளித்து வந்தவளின் வாசம் வேறு அவனை இம்சிக்க,

கோதிய விரல்களை நிறுத்தி, அவளின் கேசம் பற்றியவன், மெல்ல அவள் முகம் நிமிர்த்தி, கொஞ்சம் வன்மையாகவே அவள் இதழில் இதழ் வைக்க, அது அவளுக்கு இஷ்டமாய் தான் ஆனது.

உமையாளும் கூட தன்னிலை மறக்க, அவளின் கரங்கள் கணவனை சுற்றி வளைத்திட, தனிமை அது தரும் இனிமை… சுகம்.. சுகம்… சுகம்… என்று தான் அந்த பொழுதுகள் நீல,

இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்… என்று கெஞ்சி கெஞ்சியே அவளைக் கொஞ்சிக் கொண்டான், உமையாளைக் கொண்டவன்.            

இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்… என்று கெஞ்சி கெஞ்சியே அவளைக் கொஞ்சிக் கொண்டான், உமையாளைக் கொண்டவன்.            

Advertisement