Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 10

பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும் கூட ஹோட்டல் ரூமில் தான் தங்கிக்கொண்டான். உமையாளே அவனோடு ஒன்றி நில்லாத போது, அவனுக்கு அங்கே சென்று  தங்க மனம் வரவில்லை.

வெளி பூச்சுக்கு அவளும் இவனோடு நன்றாய் இருப்பது போல் பேசுவாள். அதெல்லாம் தன்னால் தாங்கிட முடியாது என்றெண்ணி விலகியே இருந்துகொண்டான்.

பிரேமா வீடு சென்ற அன்று, அவரைப் போய் பார்த்தான். அங்கே தங்கும்படி சொல்ல, “ஸ்கூல் வேலை நிறைய இருக்கு. மினிஸ்டர் சைன் ஒன்னு பெண்டிங் இருக்கு. அது சம்பந்தமா ஒருத்தர பார்க்கணும். எப்போ வர சொல்வாங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது.. ஹோட்டல் தான் சரிபடும்…” என்று மறுத்துவிட்டான்.

பிரேமாவோ தனிமையில் உமையாளை பிடி பிடியென பிடிக்க,  “வந்தது வந்துட்டோம்.. உங்களோட இருக்கேனே அத்தை.. அவர் வேலை எல்லாம் முடிக்கட்டும்.. போறப்போ கூட்டிட்டு போகட்டும்…” என,

“புதுசா கல்யாணம் ஆனது போலவா இருக்கீங்க??!! தனியா இருக்கணும்னு ஆசைப் படுவாங்கன்னு பார்த்தா இப்படியா??” என்று கடிய, உமையாள் எதுவும் சொல்லவில்லை.

மாணிக்கம் எந்நேரமும் வீட்டிலேயே இருக்க, பிரேமா ஒரு அளவிற்கு மேலே பேச முடியாது போக, உமையாளுக்கு அழைத்து அபிராமி விநாயகம் எல்லாம் விசாரிக்க, இவர்கள் போக நாத்திகள் இருவரும் விசாரிக்க, அனைவருக்குமே பசுபதி ஹோட்டலிலும், உமையாள் இங்கேயும் தங்குவது வெட்ட வெளிச்சம் ஆனது.

கூட்டுக் குடும்பத்தில், அதிலும் புதிதாய் திருமணம் ஆனவர்கள் இப்படி தனி தனியே தங்குவது என்பது, யாருக்குத் தான் ஏற்க முடியும்.

விநாயகம் அடுத்த நொடி பசுபதிக்கு அழைத்துக் கேட்க “சித்தப்பா.. எனக்கு எப்போ போன் வரும்.. எப்போ கிளம்பி வெளிய போவேன்னு தெரியாது.. அதுதான்  உமையாள் அங்க இருக்கட்டும்னு சொன்னேன்…” என,

“சரி நீ வெளிய போறப்போ மருமகளை அங்க விட்டுப் போக வேண்டியது தானே.. இல்லை நீ அங்க இருக்க வேண்டியது தானே…” என்று அவர் விடாது கேட்க,

“அவங்களே உடம்பு சரியில்லாம இருக்காங்க..” என்று பசுபதியும் சமாளிக்க,

“என்னவோ போ.. ஒன்னும் சரியா படல..” என்று வைத்துவிட்டார். 

அடுத்தடுத்து அக்காள்கள் இருவரும் பேச, மிக மிக கடினப்பட்டே பொறுமையாய் பசுபதி எடுத்துச் சொல்ல,  “இதெல்லாம் நல்லாவாடா இருக்கு.. ஏன் நீ அங்க இருந்தா அவங்க செய்யமாட்டேன் சொன்னாங்களா??” என்று வேறுவிதமாய் பேச்சு வர,

‘இதென்னடா ரோதனை…’ என்றாகிப் போனது அவனுக்கு.

இனி அபிராமி வேறு அழைத்தால் என்ன செய்ய என்று யோசிக்க, அவர் அவனிடம் பேசவே இல்லை. மாறாக உமையாளிடம் பேசினார்.

“அவன் தனியா போறேன் சொன்னா நீ அப்படியே விடுவியா?? ஏன் உன்னோட இருக்க வைக்க தெரியாதா?? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்.. அசலூரு போனா ஒன்னு நீ இருக்க இடத்துல அவன் இருக்கணும். இல்ல அவன் இருக்க இடத்துல நீ கூட இருக்கணும்.. இதெல்லாம் நம்ம குடும்பத்துப் பழக்கம் இல்லை…” என்று கடிந்துவிட, உமையாள் சற்றே ஆடித்தான் போனாள்.

‘கடவுளே இருக்கிற பிரச்சனை எல்லாம் போதாதுன்னு இதெல்லாம் வேறயா..’ என்று வருந்தியவள், வேறு வழியே இல்லாது கணவனுக்கு அழைக்க, அவன் அவளோடு பேச தயாராய் இல்லை.

பிரேமா அமைதியாய் எல்லாம் கவனித்தபடி தான் இருந்தார். அவளே யோசித்து ஒரு முடிவிற்கு வரட்டும் என்று இருக்க, உமையாளோ பசுபதி அழைப்பினை எடுத்தால், அவனை வந்து இங்கே தங்கச் சொல்வோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தாள்.

அப்போதும் கூட உன்னோடு வருகிறேன் என்று சொல்ல தைரியம் வரவில்லை. வீடு இருக்க ஹோட்டலில் ஏன் தங்கிட வேண்டும் என்ற எண்ணம்.

மாணிக்கம் பிரேமாவிடம் “அந்த தம்பி எந்த ஹோட்டல்ல தங்கிருக்கார்னு கேளு.. நானே கூட கொண்டு போய் உமையாவ விட்டுட்டு வர்றேன்…” என,

பிரேமாவும் உமையாளிடம் கேட்க, அவளுக்கு அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்பது தெரிந்தால் தானே சொல்ல முடியும்??!!

“அது… அது…” என்று விழிக்க, அவளுக்கே அசிங்கமாய் போனது.

கணவன் எங்கே தங்குகிறான் என்பதை கூட அறிந்துகொள்ளாது என்ன செய்கிறேன் நான்??!! என்று.

என் வாழ்வு.. என் கணவன் என்று நினைத்திருந்தது எல்லாம் எங்கோ ஓடிப் போனது, இப்போதும் அதே பிடிவாதத்தில் ‘நீங்க என்னோட தான் தங்கணும்.. இல்லை நானும் உங்களோட வர்றேன்…’ என்று சொல்லியிருந்தால், அவன்தான் வேண்டாம் எனப் போகிறானா என்ன??!!

சொல்லப் போனால் அவன் எதிர்பார்த்ததும் அதுதானே..!!

எதிர்பார்ப்புகள் ஆயிரம் ஆயிரம் இருப்பினும், எது நடக்கிறதோ அதுதானே நிஜமாகிறது.

“என்ன உமையா… தம்பி எந்த ஹோட்டல்ல தங்கிருக்காரு…??!!”

“இல்லத்தை.. அது.. அது என்னவோ பேரு சொன்னாரு நான்…” என்று அவள் திணறும் போதே பிரேமாவிற்கு புரிந்துபோனது இவளுக்குத் தெரியாது என்று.

உமையாளை முறைத்துப் பார்த்தவர், “உன்னோட போன்ல இருந்து ஒரு போன் போடு அவருக்கு…” என,

“இல்லத்தை… அவருக்கு வேலை…” என்று தயங்கினாள்.

“ஆயிரம் வேலை இருக்கட்டும்.. எல்லாத்துக்கும் மேல பொண்டாட்டி முக்கியமில்லையா…” என்று அவளிடம் ஒரு போடு போட்டவர், அவள் முன்னே கை நீட்ட,

அவளின் கரமும் தன்னைப்போல் அவனுக்கு அழைப்பு விடுத்து, அவரிடம் போனை நீட்ட, பசுபதியோ எடுக்கவே இல்லை. அவன் அழைப்பினை ஏற்கவில்லை என்றதும், அதற்கும் முறைப்பு உமையாளுக்கே சொந்தமாக,

“அவர் எடுக்கலைன்னா நான் என்ன செய்றது…” என்றாள் முணுமுணுப்பாய்.

“இப்படித்தான் பதிலுக்கு பதில் பேசி வச்சிருப்ப போல.. அதான் எல்லாம் தப்பு தப்பா நடக்குது…” என்றபடி பிரேமா அவரின் அலைபேசியில் இருந்து பசுபதிக்கு அழைக்க, அதுவும் எடுக்கப்படாது போக, அடுத்து அழைக்கவில்லை.

ஆனால் அடுத்து இரண்டொரு நொடியில், பிரேமாவின் எண்ணிற்கு பசுபதி அழைத்துவிட “தம்பி எங்க தங்கிருக்கீங்க…” என்று பதவீசாகவே கேட்டார்.

“ஹோட்டல் காலி பண்ணிட்டேன் சித்தி… என் பிரெண்ட் வீட்ல தங்கப் போறேன்… மினிஸ்டர பாக்குறது விசயமா ஒருத்தர பார்க்கணும் சொல்லிருந்தேன் இல்லையா.. என் பிரெண்ட் தான் அதுக்கு ஏற்பாடு எல்லாம்.. அவங்க வீட்ல ஸ்டே பண்ண சொல்றப்போ மறுக்க முடியலை… ” என்று பசுபதி வேறு கதை பேச,

சரி உமையாளாவது அழைக்கட்டும் என்று பிரேமா “இந்தா நீ பேசு…” என்று அவளிடம் கொடுக்க,

அவளோ அலைபேசி வாங்கி “ஹலோ…” எனுமுன்னே,

“நான் ரூம் வெக்கேட் பண்ணிட்டேன்.. அங்க வர முடியாது…” என்றான் வார்த்தைகளை கடித்துத் துப்புவதாய்.

“ம்ம்.. அப்.. அப்புறம் எங்க தங்குவீங்க…” என்றவளுக்கு ஏனோ நெஞ்சில் பயம்.

“எங்க தங்கினா என்ன?? உனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லைதானே…”

“இல்ல.. அது..”

“ம்ம்ச்… உங்க அத்தைக்கிட்ட சங்கடப்படவேணாம் சொல்லிடு.. ஊர்ல இருந்து யார் பேசினாலும் நான் பார்த்துக்கிறேன்.. நீ நிம்மதியா இரு…” என்றவன் வைத்துவிட்டான்.

‘நீ நிம்மதியா இரு…’ என்று அவன் சொன்னதில் அத்தனை கசப்பு.

அதை அப்படியே உமையாள் உணர, ‘இவருக்கு என்னதான் ஆச்சு…’ என்று எண்ண மட்டுமே முடிந்தது.

எப்படியும் அடுத்து அபிராமி அழைப்பார். அவரிடம் என்ன சொல்வது?!!!

யோசனை இப்படி ஓட, ஒருமுறை பிடிவாதம் பிடித்தேனும் பசுபதியை அழைத்துப் பார்க்கலாம் என்று தோன்றவில்லை.

“என்ன பொண்ணு நீ உமையா.. அருமையான வாழ்க்கை அமைஞ்சு இருக்கு. ஆனா நீ அதை ஒரு பொருட்டா கூட நினைக்கல போல.. உன் புருஷன் சொல்றதை கேட்டு நடக்க வேண்டியதுதானே..!! அப்படி என்ன இடுத்தம் உனக்கு. இங்க வந்து தங்குங்கன்னு வாய் நிறைய கூப்பிட முடியுதா உன்னால..” என்று பிரேமா மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்க,

உமையாளால் பதில் சொல்லிட முடியவில்லை…!!

‘தவறு செய்கிறோமோ…’ என்றும் ‘நான் என்ன செய்தேன்…’ என்றும் அவளே இருவேறாய் நினைக்க, அதனுள்ளேயே தவிக்கத் தொடங்கிவிட்டாள்.

பசுபதியோடு பேசவும் பயமாய் இருந்தது, பேசமால் போனால் இவர்கள் திட்டியே ஒருவழி செய்துவிடுவார்களே என்று அதற்கும் கவலையாய் இருக்க,

“நா… நான் பேசிக்கிறேன் அத்தை…” என்று அவளின் அலைபேசி எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.

‘என்னாச்சு உமையா உனக்கு.. நீ இப்படியா??!! இல்லையே… உன் புருஷன் நீ இங்க இருக்கப்போ உன்னோட இருக்காம வேறெங்கயோ இருக்கேன்னு சொன்னா அதுக்கு நீ சும்மா இருப்பியா??!!’ இப்படி தனக்கு தானே கேள்விகள் கேட்டு, திடம் செய்துகொண்டு, பசுபதிக்கு அழைத்தாள்.

பசுபதிக்கு ஓரளவு இப்படி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததுவோ என்னவோ.. அவள் அழைக்கவும் இப்போது எடுக்காது போகாது, இரண்டு நொடியில் எடுத்தும்விட்டான் “ம்ம்…” என்ற தொடக்கத்தோடு.

“ஹ.. ஹலோ…”

“சொல்லு உமையாள்…”

“இல்ல அது.. நீ.. நீங்க எங்க ஸ்டே பண்றேன் சொன்னீங்க…” என்றவளுக்கு சரியாய் தான் பேசுகிறோமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

“சொன்னேனே…”

“அதில்ல.. பிரெண்ட் வீடுன்னா எப்படி..? யாரெல்லாம் இருக்காங்க…? ”

‘இவ்வளோ தெளிவா யோசிக்கிறா…’ என்று எண்ணியவன் வேண்டுமென்றே “என் பிரெண்ட் கூட அவ வீட்லத்தான்…” என,

தான் சரியாய் தான் கேட்டோமா என்ற கேள்வி வர, “ஹா… என்ன சொன்னீங்க…?” என்றாள் வேகமாய்.

“என்ன சொல்லிட்டேன்.. எத்தன தடவ திருப்பி சொல்ல.. ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாதா?? என்ன எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா நீ உமையாள்…” என்று சத்தம் கூட்ட,

“அச்சோ அப்படியில்ல…” என்றவள் பின் வேகமாய் “நீங்க எங்கவேணா ஸ்டே பண்ணுங்க ஆனா நானும் வருவேன்.. வந்து என்னையும் கூட்டிட்டு போங்க.. அவ்வளோதான்.. இல்லையா இங்க வந்து எங்களோட இருங்க.. என்னன்னு நீங்களே முடிவு பண்ணிட்டு சொல்லுங்க…” என்றுசொல்லி பட்டென்று அலைபேசியை வைத்துவிட்டாள்.

பசுபதிக்கு தெரியும்.. இவள் இப்படித்தான் சொல்வாள் என்று. அதாவது பிரேமா நிச்சயம் ஏதாவது சொல்லியிருப்பார் என்றும்.  பின்னே திருமணத்தன்று அவளின் பார்வைக்கெல்லாம் அர்த்தம் புரிந்தவன் ஆகிற்றே. இடையில் சற்றே திணறித்தான் போனான்.. ஆனால் இப்போது ஒரு தெளிவு வர, ஒரே பிடிவாதம் தான், வெளியே தங்குகிறேன் என்று. உமையாள் தன்னைப்போல் வந்து அழைத்துப் போ இல்லையேல் வா என்று சொல்ல,

‘அப்படி வா வழிக்கு.. மதுரைக்காரன்னா சும்மாவா…’ என்று தன் மீசையை  முறுக்கிக்கொண்டவன், அன்றைய மாலை வரைக்கும் உமையாளுக்கு அழைப்பே விடுக்கவில்லை.

அவளுக்கோ தவிப்பாய் போனது..!!

வருவானா மாட்டானா..

அழைத்துச் செல்வானா… மாட்டானா…

ஒன்றும் புரியாது தவிப்பாகவே இருக்க, பிரேமாவோ “இப்போ என்னாச்சு??!!” என,

“இல்லத்தை.. பேசிட்டேன்.. ஆனா இன்னும் அவர் ஒன்னும் சொல்லல..” என்று தயங்கியவள்,

“அவர் வந்து கூப்பிட்டா நான் கிளம்பட்டுமா??!!”  என,

“கிறுக்கி… இதை நீ என்கிட்டே கேட்கணுமா??” என்றவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

மாலை மங்கி, இரவும் கவிழ, பொறுக்க முடியாது திரும்ப உமையாளே பசுபதிக்கு அழைத்துவிட, “ரெடியா இரு…” என்ற இரு வார்த்தைகளோடு வைத்துவிட்டான்.

அதன்பின் என்ன, மின்னல் வேகம்தான்..

ஒருவேளை இங்கே வந்து தங்குவானோ என்றெண்ணத்தில், அதுவரைக்கும் துணி எடுத்து வைக்காதவள், வேக வேகமாய் தயாராகி.. வேக வேகமாய் எல்லாம் எடுத்து வைத்து வாசல் போய் பார்த்து நிற்க, கால் டாக்சியில் வந்து இறங்கியவன், அவளை ஒரு பார்வை முழுதாய்.. உச்சி முதல் பாதம் வரைக்கும், நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு உள்ளே செல்ல,

‘ஞே…’ என்று முழியோடு அவன் பின்னே செல்ல, வராதவன் வந்ததுபோல் தான் அங்கே வரவேற்பு.

மாணிக்கமோ, அபிராமிக்கு பதில் சொல்லும்படி நேர்ந்துவிட கூடாது என்றெண்ணியே, “அப்போ இருந்து உமையா காத்துட்டு இருக்கா உங்களோட வர…” என்று சொல்ல, அவளின் பக்கம் ஒரு கிண்டல் பார்வையை வீசினான் பசுபதி.  

உமையாள் ஒன்றும் சொல்லாது தலையை குனிந்து நின்றுகொள்ள, பிரேமாவோ “அவ அப்படித்தான்.. ஒன்னு சட்டுன்னு எதையும் பேசிடுவா.. இல்லை பேசவே மாட்டா.. ஆனா மனசுல எதுவும் இருக்காது…” என்று தாங்கிப் பேச,

“ம்ம் எப்படியும் நாளைக்கு ஊருக்கு கிளம்புற மாதிரி இருக்கும்.. அப்படி இல்லைன்னா நாளைன்னைக்கு.. வந்த வேலை முக்காவாசி முடிஞ்சது..” என்று மற்றது பேச,

நேரம் பார்த்தவன் “சரி கிளம்புறோம்…” என்றுசொல்லி எழுந்து நின்று உமையாளைப் பார்க்க, வேகமாய் அவளின் பை எடுத்து வர,

“சாப்பிட்டிட்டு போலாமே…” என்று பிரேமா சொன்னதற்கு,

“இல்ல சித்தி.. என் பிரெண்ட் வீட்ல டின்னர் சொல்லிருக்காங்க..” என்றதும் யாரும் எதுவும் மறுத்துப் பேசவில்லை.

இருக்கும் சூழலை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை யாரும். எப்படியோ இருவரும் சுமுகமானால் சரி. ஒன்றாய் இருந்தால் சரி. மற்ற விசயங்கள் எல்லாம் அடுத்ததுதான்.

உமையாளுக்குத்தான் கொஞ்சம் தாங்களாய் இருந்தது. ஒருவார்த்தை பேசவில்லை. இவனோடு சென்று என்னாகுமோ என்ற அச்சம் வேறு. இன்னொரு சண்டைக்கு எல்லாம் அவள் தயாராய் இல்லை.

‘கடவுளே…! நீதான் காப்பாத்தனும்…’ என்ற வேண்டுதலோடு பசுபதியோடு கிளம்ப, காரினில் எரிய பின்னரும் கூட பேசிடவில்லை இருவரும்.

‘என்ன சொல்லப் போகிறானோ…’ என்ற படபடப்பு அவளுக்கு..

‘ஏதாவது சொல்கிறாளா…’ என்ற அங்கலாய்ப்பு அவனுக்கு..

ஆகமொத்தம் இருவரும் மௌனிகள் ஆகிட, கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேர பயணம்.

இதோ அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட, பசுபதி கார் கதவினைத் திறக்கவும், உமையாள் வேகமாய் இறங்கினாள்.

சுற்றிலும் பார்க்க, “என்ன பார்வை.. உள்ள வர ஐடியா இல்லையா??”  என்றபடி பசுபதி நடக்க,

கீழே மூன்றும், மேலே மூன்றுமாய் ஆறு வீடுகள்..

‘சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்…’ அங்கே தான் அழைத்து வந்திருந்தான் பசுபதி..

இவர்கள் மாடியில் இல்ல ஓர் வீட்டினுள் நுழைய, உமையாளுக்கு புரியவே இல்லை.

அதிலும் பசுபதியே சாவி போட்டுத் திறக்க “எ.. என்ன யாரையும் காணோம்…” என்றபடிதான் உள்ளே நுழைந்தாள்.

“யார் வேணும் உனக்கு??”

“அ.. அது… உங்க பிரெண்ட் வீடுன்னு…”

“ஆமா என் பிரெண்ட் வீடுதான்.. சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்… இங்கதான் தங்க போறேன்னு சொன்னேன்…”

“ஓ..!!!” என்று சுற்றிலும் பார்வை பதிக்க, இரண்டு படுக்கையறைகள் கொண்ட நல்ல வசதியான வீடாகவே இருக்க,

“டின்னர்…??!!” என்றாள் கேள்வியாய்..

சரியாய் அவள் கேட்டு முடிக்கும் முன்னம், காலிங் பெல் அடிக்க, “டின்னர் வந்திடுச்சு…” என்றபடி போய் கதவு திறந்து, உணவு பொட்டலங்களை வாங்கி உள்ளே வர,

‘ஓ..!! நம்மதான் தப்பா புரிஞ்சுக்கிட்டோமோ…’ என்று உமையாள் முனுமுனுக்க,

“அது எப்பவும் நடக்குற ஒண்ணுதானே…” என்றான் பசுபதி.

‘ம்ம்ஹும்… இவன் என்ன பேசுனாலும் வாயே திறக்கக் கூடாது…’ அந்த முடிவில் உமையாள் இருக்க,

“என்ன.. சாப்பிடுறதுக்கு வாய் திறப்பியா இல்லையா??” என்று கேட்டபடி அங்கிருந்த உணவு மேஜையில் அனைத்தையும் அவன் எடுத்து வைக்க, மேலும் அவள் வாய்க்கு கோந்து போட்டு ஒட்டியது போல் நின்றுகொண்டாள்.

“என்ன பாக்குற.. என்னோட வேலை எல்லாம் மதியமே முடிஞ்சது.. இனி நாலு நாளைக்கு இங்கதான் நம்ம…” என்று பசுபதி சொல்லவும்,

‘எது… நாலு நாளைக்கா…??!!!!’ என்று நினைத்த அவளின் மனது, விரிந்த கண்கள் வழியே வெளியே வந்து விழுந்தாலும் ஆச்சர்யம் கொள்வதற்கு இல்லை.                

Advertisement