Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 1

“ம்மா துர்கா தேவி… எனக்கொரு தெளிவு கொடு…” என்று உமையாள் கண்கள் மூடி சுவாமி படங்களின்  முன் நின்று வேண்டிக்கொண்டு இருக்க,

“உமையா….” என்று சற்றே குரலில் அழுத்தம் கொடுத்து அழைத்தபடி வந்தார், பிரேமா.

பட்டென்று விழிகள் திறந்து “அ.. அத்தை…” என்று உமையாள் திரும்ப,

“என்ன முடிவு பண்ணிருக்க??” என்று நேரடியாய் அவர் கேள்விக்கு வர, “அது.. அதுவந்து.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை…” என்று அவள் சொல்ல,

“இங்க பாரு.. உங்க மாமா பத்தி உனக்கு நல்லாவே தெரியும்.. நல்லவர் தான். ஆனா ரொம்ப விசாலமான குணமோ எல்லாம் இல்லை.. இருந்தும் உன்னை இங்க நான் வளர்க்க அவர் எதுவும் சொன்னதில்லை. சொல்ற அளவுக்கு நான் எதையும் கொண்டு போகலை.. உனக்கு வாழ்க்கை அமைச்சு கொடுக்க வேண்டியது எங்க பொறுப்பு.. முக்கியமா என்னோட பொறுப்பு..

உங்க மாமா இதெல்லாம் பொறுப்பெடுத்து செய்வார்னு எனக்கு தெரியலை. இப்போ உன்னோட நல்ல நேரம், அவர் பக்கத்துக்கு சொந்தத்துலயே உனக்கு நல்ல வரன் வந்திருக்கு… புரிஞ்சுக்கோ உமையா.. உனக்கு அமையுற வாழ்கைய கைல புடிச்சிட்டு நல்லபடியா வாழ போ..” என்று பிரேமா பேச, உமையாளுக்கு கண்ணில் நீர் கோர்த்து விட்டது.

அப்பா அம்மா சிறு வயதிலேயே இல்லை.. அவர்களின் முகம் கூட அவளுக்கு நினைவில் இல்லை. ஒரு புகைப்படம் அவ்வளவே. அப்பாவின் தங்கை  தான் பிரேமா. ஐந்து வயதில் இருந்து அத்தை வீட்டினில் தான்.

அத்தை செல்லம் கொடுத்து கொஞ்சி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை என்றாலும், எவ்வித குறையும் இல்லாது நல்லபடியாகவே வளர்த்தார். பிரேமா – மாணிக்கம் இவர்களின் பெண் பூஜாவிற்கு என்னவெல்லாம் அந்த வீட்டினில் கிடைத்ததோ அது எல்லாமே உமையாளுக்கும் கிடைக்கும்.

என்ன இவளை விட, அவள் எழு வருட சின்னவள். அக்கா தங்கை போலவே இருவரும் அத்துனை ஒட்டுதல். பூஜா ஒட்டிய அளவு, பிரேமா ஒட்டவில்லையோ என்று தோன்றும் உமையாளுக்கு. அதையும் விட மாணிக்கம். என்ன என்றால் என்ன அவ்வளவு தான். தேவையில்லாத கரிசனங்கள் எல்லாம் இல்லை. அத்துனை பெரிய வசதிகள் இல்லை என்றாலும், நடுத்தர குடும்ப வாழ்வு என்றாலும், உமையாளுக்கு அத்தை வீடு என்பது சொர்க்கமாகத்தான் இருந்தது.

என்ன அத்தையும் மாமாவும் இன்னும் கொஞ்சம் தன்னிடம் நெருக்கம் காட்டி இருக்கலாமோ என்று நினைப்பாள். முக்கியமாய் பிரேமா.

இப்போது சில தினங்களாய் தான் அத்தையின் இந்த ஒதுக்கம் கூட ஏன் என்று புரிந்தது. தன்னை இங்கே அவர் வைத்திருக்க அந்த கறாரும், ஒதுக்கமும் தான் அவருக்கு உதவியது என்று அவளுக்கு நன்கு புரிந்த பின்னே பிரேமா மீது இன்னும் பாசம் தான் வந்தது. 

காலேஜ் அனுப்புகையில் கூட “அத்தை நான் ஆர்ட்ஸ் க்ரூப் கூட எடுத்துக்கிறேன்..” என்று அவள் சொல்ல,

“உனக்கு என்ன தெரியும்??!! பேசாம இரு… எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதே…” என்று அதட்டி, அவளை சயின்ஸ் க்ரூப் எடுக்க வைத்தார்.

வெறும் டிகிரி வைத்து என்ன வேலைக்கு செல்ல என்று அவள் யோசிக்க, படிப்பு முடிந்து வருகையில் “மேற்கொண்டு படிக்க வைக்க மாமா சரி சொல்வாரா தெரியாது.. அதனால கொஞ்சம் பொறுமையா இரு.. என்ன செய்யலாம்னு பார்ப்போம்..” என்றுவிட்டார் பிரேமா.

அந்த பொறுமையின் வயது முழுதாய் ஓர் ஆண்டு. அந்த ஓராண்டும் கூட அவளை பிரேமா சும்மா இருக்க விடவில்லை. அக்கம்பக்கம் இருக்கும் பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்க வைத்தார். வரும் வருமானம் அப்படியே அவளின் வங்கி கணக்கில் சேமிப்பாய் மாறியது. நிறைய பணம் இல்லை என்றாலும், ஓரளவு அவளின் பெயரில் சேமிப்பு கணக்கில் இருக்க, அந்த ஓர் ஆண்டு முடிகையில் இப்போது திருமணம் பேச்சு..

அதுவும் மாணிக்கத்தின் வகையறா பக்கம்.

“உமையாவ பொண்ணு கேட்கிறாங்க…” என்று வந்து மாணிக்கம் சொல்கையில், பிரேமாவிற்கு அத்துனை சந்தோசமாகி போனது.

‘அவளுக்கு கல்யாணம் பண்ணனும்.. வரன் பார்க்கணும்…’ என்று கணவரிடம் சொல்ல மனதில் ஆயிரம் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தார்.

இப்போது மாணிக்கமே வந்து சொல்ல, பிரேமா அதையே பிடித்துக்கொண்டார். யாருங்க.. எங்க.. எப்படியாப்பட்ட ஆளுங்க என்று பிரேமா விசாரிக்க, அதுவும் கூட தன் ஆர்வத்தை சற்றே மட்டுப்படுத்தி தான் கேட்டார்.

ஏதேனும் ஒரு பேச்சு வந்துவிட்டால்??!!

“அன்னிக்கு எங்க பெரிப்பா பேரன் கல்யாணத்துக்கு போனோமே.. அங்கவச்சு தான் உமையாவ பார்த்திருக்காங்க.. பார்க்கவும் பிடிச்சிருக்கும் போல. விசாரிச்சு எனக்கு இப்போ கேட்டாங்க..” என்று அவர் சொல்ல,

யார் கேட்டது எந்த குடும்பம் என்றெல்லாம் விசாரித்த பிரேமாவிற்கு பெரும் நிம்மதி. நல்ல மனிதர்கள் என்று இவரும் கேள்வி பட்டிருக்கிறார். ஆனால் என்ன இவர்களை விட வசதி கூட.. அதுதான் யோசனையாகவே இருந்தது.

“நம்மள விட வசதி கூடவே..” என்று யோசிக்க,

“அவங்க எதையும் எதிர்பார்க்கல.. பொண்ணு பார்க்க லட்சணமா நல்லாருக்கணும்… அதான் உமையாள பார்த்ததுமே பிடிச்சு போச்சு போல…” என்ற மாணிக்கத்தின் வார்த்தைகள் உமையாள் காதிலும் விழுந்தது.

ஏனோ இந்த வார்த்தைகள் அவளுக்கு இனிக்கவில்லை…

‘அழகு…’ மட்டும்தானா எல்லாம்??!!

நினைக்கவே கசப்பாய் இருந்தது.

அவள் அழகானவள் தான். இருந்தும் அழகே எல்லாமாகிப் போகாதே..

அப்போது ஆரம்பித்தது இந்த பயம். தெளிவாய் ஒரு முடிவிற்கு வராது அவளை படுத்த, பிரேமாவோ இதனை முடித்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார்.

பூஜாவோ “க்கா.. மாப்ள போட்டோ பார்த்தேன்.. செமையா இருக்கார்.. பட்டுன்னு ஓகே சொல்லு…” என, இவளுக்கு பசுபதியின் போட்டோ பார்க்க கூட தோன்றவில்லை.

முதலில் ‘பசுபதி…’ என்ற பெயரை கேட்டதுமே அவளுக்கு படத்தில் வரும் வில்லன்கள் தான் நினைவு வந்தனர்.

இவளுக்கு முழுக்க முழுக்க சென்னை வாழ்வு. மாப்பிள்ளையோ மதுரைக்கு பக்கத்தில் பக்கா கிராமம். பெரும் குடும்பம் வேறாம்.. ஆட்கள் நிறைய என்று பிரேமா சொன்னதைக் கேட்டு ஒரு பயம் வேறு..

குடும்பத்தில் பசுபதிக்கு முன்னே இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தாலும், ஆண் வாரிசு என்கையில் இவன்தான் மூத்தவன்.

அக்காள்கள் இருவரும் திருமணமாகி அருகருகே வெவ்வேறு ஊரினில் இருக்க, பசுபதியின் சித்தப்பாவிற்கு ஒரு ஆண் ஒரு பெண் என்று இரண்டு மக்கள். பசுபதிக்கும் அப்பா அம்மா இல்லை. கடந்த சில வருடங்கள் முன்னம் தான் இருவருமே தவறியிருந்தனர்.

அதிலேயே மனதளவில் அவன் தனிமைப் பட்டுப்போனான்..

முன்னர் இருந்தே கூட்டு குடும்பம் தான். இருந்தும் இப்போது மிகவும் தனிமையாய் உணர, அவனின் சித்தி அபிராமி “ஏங்க.. பெரியவனுக்கு கல்யாணம் பண்ணிடனும்…” என்று அவரின் கணவர் ஜெயசீலனிடம் சொல்ல,

அப்படி பெண் பார்க்க ஆரம்பித்து, எதுவும் தோதாய் அமையாது போக, இதோ சென்னைக்கு ஒரு திருமணத்திற்கு வந்த இடத்தில் உமையாளை பார்த்து மிகவும் பிடித்துப் போனது.

பார்த்தது என்னவோ அபிராமியும் ஜெயசீலனும் தான்..

“பொண்ணு நம்ம பசுபதிக்கு தோதா இருக்கும்ல…” என்று அபிராமி தான் ஆரம்பித்தார்.

இப்படி ஆரம்பித்த பேச்சு இதோ இப்போது பிரேமா, உமையாளை தன் சொல் கேட்கும்படி கிட்டத்தட்ட வருபுறுத்தாத குறையாய் வந்து நின்றது.

“எனக்கு கொஞ்சம் பயமா இருக்குத்தை….” என்று அவள் சொல்லும்போதே,

“என்ன பயம்??!! நீவேனா பாரு.. இங்க விட அங்க நல்லா இருப்ப நீ.. நான் சொல்றதைக்  கேளு…” என்று எப்போதும் போல் வாயடைத்துவிட்டார்.

‘நான் சொல்றதைக்  கேளு…’

இந்த மூன்று சொற்கள் தான் அவளை எப்போதும் ஆட்சி செய்பவை.

அவளையும் அறியாது அதற்கு கட்டுப்பட்டு விடுவாள்..

இப்போதும் கூட அப்படியே..

பெண் பார்க்க என்று வரவில்லை எவரும்.. நேரடியாக தட்டு மாற்றவே வந்தனர். அப்போதும் கூட மாப்பிள்ளை வரவில்லை.

‘இதென்ன மாப்ள வரலையா??’ என்று பூஜா கேட்டதற்கு, “வாய மூடு..” என்று அதட்டிவிட்டார் பிரேமா.

“க்கா.. என்ன இது.. போட்டோ பார்த்தா மட்டும் போதுமா??!” என்று பூஜா உமையாளிடம் புலம்ப, அந்த போட்டோவினைக் கூட அவள் ஒருமுறைக்கு மேல் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்.

“ஷ்.. ஏதாவது சொல்லி அத்தைய டென்சன் பண்ணாத..” என்று உமையாள் சொல்ல,

“உன்கிட்ட சொன்னேன் பார்..” என்று தலையில் அடித்தாள் பூஜா.

“நா உனக்கு பெரிய நாத்தி.. இவ அடுத்து.. இதோ இவ கடைசி.. உன்னவிட சின்னவ தான்..” என்று பசுபதியின் அக்கா, பனிமலர் வந்து பேச, அவர்களின் பட்டு சேலையும், நகையும் பார்த்தே அயர்வாய் போனது உமையாளுக்கு.

“உமையாள் தானே உன் பேரு… ஊமையாள் இல்லையே.. எங்களோட எல்லாம் நல்லா வாய்க்கு வாய் பேசணும்…” என்று அடுத்தவள், பால்நிலா பேச, அவ்வளோதான் திக்கென்றாகி போனது உமையாளுக்கு.

அவளின் அரண்ட முகம் பார்த்து “ச்சே.. நிலா.. அந்த புள்ள பயந்துடுச்சு…” என்ற பனிமலர் “எங்க தம்பிய நல்லா பார்த்துக்கோ அது போதும்..” என,

அவனுக்கும் பெற்றவர்கள் இல்லை என்பது தான் ஒரு வகையில் இந்த திருமணத்திற்கு இவள் சம்மதிக்க ஓர் கரணம் என்பது அவள் மட்டும் தானே அறிந்த உண்மை.

“மதினி… நான் எப்பவும் அங்கன உங்களோட தான் இருப்பேன்…” என்று பிரியங்கா சொல்ல,

“அதுசரி.. உன்னை இன்னும் ரெண்டு வருசத்துல கல்யாணம் செஞ்சு அனுப்பிடுவோம்…” என்றார் அபிராமி.

இப்படியாக, பசுபதி வீட்டு பெண்கள் உமையாளை சூழ்ந்திருக்க, இருவீட்டாரும், தட்டு மாற்றி, திருமண தேதி குறித்து, கை நினைத்தும் சென்றுவிட்டனர்.

அடுத்த மாதம் திருமணம்.. மதுரையில் தான் என்று ஏற்பாடு… எல்லாமே தாங்கள் பார்த்துகொள்வதாய் சொல்ல, இங்கே மாணிக்கத்திற்கு பெரிதாய் வேறு வேலைகள் எல்லாம் இல்லை. திருமணம் என்ற பூரிப்போ இல்லை படபடப்போ எல்லாம் கூட உமையாளுக்கு இல்லை. மாறாக ஒருவித பயம் இருந்தது நிஜம். இங்கே பட்டின வாழ்வு, அவளின் பழக்க வழக்கம் எல்லாமே வேறு.. அங்கே அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் வேறு. இதெல்லாம் நினைத்து அவளுக்கு அச்சமாய் தான் இருந்தது.

பசுபதி அவளோடு பேசியிருந்தால் கூட சற்று அவள் மனது மாற்றம் கண்டு இருக்குமோ என்னவோ??!

அவனோ திருமணம் குறித்த வேலைகள் பற்றி கேட்க, ஓரிரு முறை மாணிக்கம் மற்றும் பிரேமாவோடு பேசினான்.

“மாப்பிள்ளை பேசுறார் பேசு..” என்று பிரேமா வந்து பிரேமா அவசர அவசரமாய் அவளிடம் அலைபேசியை நீட்ட, நிஜமாய் அவளுக்கு அந்த நொடி என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை.

திக்கி திணறி “ஹலோ..” என்கையில்,

பசுபதியோ “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. இன்னொரு நாள் பேசலாமே…” என்று வேகமாய் சொல்லி முடித்திருக்க, உமையாளிடம் இருந்த பதற்றம் கூட இப்போது இருந்த இடம் தெரியாது காணாது போயிருந்தது.

அவள் ‘சரி..’ என்றோ ‘ம்ம்…’ என்றோ கூட சொல்லிடவில்லை. அதற்குள் அழைப்பும் துண்டிக்கப்பட்டு இருக்க, இவள் அலைபேசியை கொண்டு போய் பிரேமாவிடம் கொடுக்க,

“பேசினியா??!!” என்று சற்று ஆர்வமாகவே பார்த்தார்.

“ம்ம்..” என்று தலையை ஆட்டியவள், அவளுக்கும் பூஜாவிற்குமான அறைக்கு வந்துவிட, மனம் ஒருவித பாரமாய் உணர்ந்தது.

யாரோ ஒருவனின் குரல், அதிலும் பேச நேரமில்லை என்பது போன்றான ஓர் வரி பேச்சு, அது ஏன் இப்படி தன் மனதிற்கு பாரம் கொடுத்துவிட்டது என்று உமையாளுக்கு.  

Advertisement