Advertisement

            மனம் – 8

வானில் பௌர்ணமி நிலா ஜொலித்து கொண்டு இருந்தது.. இரவு நேரத்தில் காற்று சிலு சிலுவென்று தீண்டி சென்றது.. சுற்றிலும் ஆங்காங்கே மின் விளக்குகளின் ஒளி கரிய வானில் மின்னும் நட்சத்திரங்களை போல மின்னி கொண்டு இருந்தன..

அவள் முகத்தில் அப்பட்டமாக வேதனை தெரிந்தது.. கண்களில் கண்ணீர் வடிந்து காய்ந்த தடம் அப்படியே இருந்தது.. எத்தனை மணி நேரமாக இப்படியே அமர்ந்து இருப்பாளோ அது அவளுக்கே தெரியாது..

அவளது மனமெல்லாம் அவளது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையுமே சிந்ததித்து கொண்டு இருந்தது.. என்ன முயன்றும் அவளால் துக்கத்தை அடக்க முடியவில்லை..

மீண்டும் கண்ணீர் வடிந்தது.. மனம் ஒருமுறை காலையில் விபுவின் இல்லத்தில் நடந்ததை நினைத்து பார்த்தது..

நித்யாவின் மனம் “ ஏன் விபா … ஏன் என் வாழ்கையில வந்திங்க..?? நீங்க என்னைய ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் உங்க கண்ணில் நான் பார்க்கிற அன்பும் நேசமும் உரிமையும் எதற்கு விபா.. ??? என்று மனதிற்குள்ளே அவனிடம் கேள்விகள் கேட்டாள்..

“ உங்கள் ஒரு பார்வையில நான் என்னைய மறந்திடுறேன் விபா.. என் உணர்வுகள் எல்லாம் உங்களை பார்த்தா மாறிடுதே.. நான் என்ன செய்யட்டும்.. ஒரு வேலை இதற்க்கு பெயர் தான் காதலா ??? ” என்று அவளது மனம் எண்ணும் பொழுதே அவள் திடுக்கிட்டு முழித்தாள்..

“ காதலா?? எனக்கா ??? அய்யோ கடவுளே.. எனக்கு காதல் எல்லாம் வரலாமா ?? அதற்க்கு தகுதி இருக்கா எனக்கு.. அதுவும் விபுவரதன் மேல்.. ” என்று பதறினாள்..

“ இது எல்லாம் சரி தானா??? விபாவின் குடும்பம், பின்புலம், செல்வாக்கு, தகுதி எல்லாம் எப்பேற்பட்டது.. ஆனால் நான்.. எனக்கு இந்த காதல் தேவை தானா..?? இல்லை இதை முளையிலேயே கில்லி எரிந்து விட வேண்டும்… விபாவை விட்டு எத்தனை தூரம் விலகி இருக்க முடியுமோ அத்தனை தூரம் விலகி இருக்க வேண்டும்..” என்று முடிவு செய்தாள்..

ஆனால் விபுவரதனை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுதே அவள் இதயம் வெடித்து விடுவது போல விண்டு துடித்தது..

இதற்கு அவர்கள் ஒன்றும் நெருங்கி பழகவில்லை, பேசவில்லை, மற்ற காதலர்களை போல அங்கே இங்கே என்று சுற்றவில்லை..

ஆனாலும் மனதில் நினைத்ததை மாற்ற முடியுமா?? ஒரு நொடி என்றாலும் காதல் தோன்றியது தோன்றியது தானே.. அதை மாற்ற முடியுமா..??

“ மாற்ற முடியுமோ முடியாதோ ஆனால் அவனை மறக்க முடியுமா ?? ” என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை..

அவன் பார்வையும், சிரிப்பும், சீண்டலும், கேலியும் எல்லாமே அவளது உயிர் வரை தீண்டி சென்றதே..

அன்று காலை அவள் விபா என்று கூறியதற்கே அவனது முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் பூரிப்பும் வந்ததே.. மீண்டும் அந்த நினைவுகளில் மூழ்கினாள்.

“ விபா… பார்த்து “  என்று அவனை தன் புறம் பிடித்து இழுத்துவிட்டாள் கம்பி அவனது தோள்களை பதம் பார்த்து விடாமல்.. அவனுக்கு அங்கே கம்பி இருந்ததோ, இல்லை அவள் பிடித்து இழுத்ததோ எதுவும் உணரவில்லை..

நித்யாவின் விபா என்ற அழைப்பே அவனை உறைய வைத்தது.. இப்படி ஒரு பெயரில் யாரும் அவனை அழைத்தது இல்லை.  இவள் தான் முதல் முறை.. “எத்தனை அழகாக இருக்கிறது என் மல்லி என் பெயரை சுருக்கி அழைக்கும் பொழுது “ என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தான்..

“ இதற்கு என்ன அர்த்தம்.. அவளுக்கும் தன்னை பிடித்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.. எனக்கு ஒரு சின்ன காயம் ஏற்பட போகிறது என்றதுமே அவளது முகத்தில் எத்தனை படபடப்பு.. “

“ நெஞ்சில் நேசம் இல்லாமல் இந்த துடிப்பு ஏற்படுமா ??? இல்லை அழைப்பு தான் வருமா?? மனதில் இருப்பது தானே வாயில் வார்த்தையாக வரும்.. அப்படி என்றால் மல்லியின் மனதில் நான் இருப்பதாக தானே பொருள் “ என்று எண்ணியவன் சந்தோசமாக     

“ மல்லி “ என்று கூறி அவளை நெருங்கினான்.. அப்பொழுது தான் உணர்ந்தாள் தான் செய்த காரியத்தை.. அவனது பார்வையில் தெரிந்த காதல் நித்யாவை அந்த இடத்திலேயே கட்டி போட்டது..

இதயம் துடி துடிக்க, இமைகள் படபடக்க, உடல் எல்லாம் பலம் இழந்தது போல உணர்ந்து அவனையே விழி அகலாமல் பார்த்து இருந்தாள்.. அந்த பார்வையில் விபு எதை தேடினானோ தெரியவில்லை..

ஒரு வேலை காணமல் போன தன் மனதை அவளது விழிகளில் தேடினானோ என்னவோ அவளது கண்களையே ஆழ்ந்து பார்த்தான்..

அத்தனை நேரம் இவர்களை கண்டும் காணமல் கவனித்து கொண்டு இருந்த வீட்டினர்கள் இனிமேலும் பொறுமையாக இருப்பது தவறு என்று உணர்ந்தனர்..

தேவி தான் உள்ளே இருந்து வேண்டுமென்றே “ அம்மா “ என்று கத்தினாள்.. அவளது அலறலில் தான் விபுவும் நித்யாவும் சுய உணர்வு பெற்றனர்.. தாங்கள் நின்று இருந்த கோலம் உணர்ந்து விலகி நின்றனர்..

விபு சந்தோசமாக அவளை பார்த்தான்.. ஆனால் நித்யாவின் முகத்தில் அத்தனை நேரம் இருந்த பொலிவு இப்பொழுது இல்லை.. ஒரு நொடியில் தான் தன் மனதிடத்தை எல்லாம் இழந்து விட்டோம் என்று உணர்ந்தவள் மீண்டும் முகத்தை கல்லாக மாற்றி கொண்டாள்..

அவனிடம் இருந்து விலகி செல்ல நகர்ந்தவளை பிடித்து நிறுத்தினான் “ ஹேய் மல்லி நில்லு.. இப்பயே உள்ள போய் என்ன பண்ண போற ??? கொஞ்ச நேரம் இரு மல்லி பேசலாம் “ என்றான் அவளது காதலை உணர்ந்து கொண்ட சலுகையோடு..

நித்யாவிற்கோ மனதிற்குள் ஐயோ என்று இருந்தது.. அவனோடு பேசவேண்டும் என்று துடிக்கும் மனதை அடக்கி “ நீங்களும் நானும் பேச என்ன இருக்கு ?? நமக்குள்ள எதுவுமே இல்லை புரியுதா ??? அதுவும் இல்லாம எல்லாரும் அங்க இருக்கும் பொழுது இப்படி நாம மட்டும் தனியா நின்னு பேசிகிட்டு இருந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க ?? ” என்று கோவமாக பேசுவது போல பேசினாள்..

ஆனால் அவனோ இவளது கோவத்தை எல்லாம் உணரும் நிலையில் இல்லை.. வேண்டுமென்றே இவள் பேசுகிறாள் என்றே நினைத்தான்..

 “ என்ன மல்லி.. நாம பேச எவ்வளோவோ இருக்குமா.. சொல்ல போனா இன்னும் நாம பேசவே ஆரம்பிக்கலை.. யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க..” என்று மீண்டும் அவளை தடுத்தான்..

“ லுக் Mr.விபு வரதன், ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாத என்ன ?? நமக்குள்ள பேச எதுவுமே இல்லை சரியா.. சோ இனிமே இப்படி உரிமை எடுத்து பேசுறது எல்லாம் என்கிட்டே வேண்டாம் “ என்று வேகமாக கூறிவிட்டு அவனது பதிலை கூட கேளாமல் உள்ளே சென்று விட்டாள்..

அசோக்கிற்கு இப்பொழுது தான் அனைத்துமே புரிந்தது..  சுற்றி இருந்தவர்கள் அனைவரின் முகத்தையும் பார்த்தான்.. “ கடவுளே.. டேய் விபு நீ எல்லாம் நல்லா வருவடா.. இதுக்கு தான் சண்டே ஆனா என்கூட சேர்ந்து இங்க வந்தாயா ?? அடப்பாவி இது தெரியாம நான் வேற இத்தனை நாள் என்ன பண்ணேன்..”

“ இதுல விபு ஓட அப்பா அம்மா என்கிட்டே கேட்டா என்ன பதில் பேசுறது.. அதை விட என் தங்கச்சி நிக்க வச்சு கேள்வியா கேட்பாளே.. கடவுளே.. எல்லாருக்கும் நடுவில் நான் தானே மாட்டிகிட்டேன்.. “ என்று யோசித்தவனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. மனதை பரிக்குடுத்தது அவனது அன்பு தங்கையும் தான் என்று..

ஒருவித தவிப்போடு சந்திரவரதனின் முகத்தை பார்த்தான்.. அவரோ பூபதியை அழைத்து கொண்டு வெளியே சென்று கொண்டு இருந்தார்.. “ ஆகா, போச்சு.. இந்த ரெண்டு பெருசுகளும் தனியே போயி என்ன பேச போறாங்கன்னு தெரியலையே..” என்று எண்ணியவன் திரும்பி வேதாவின் முகத்தை பார்த்தான்..

அவர் தேனம்மாவோடு ஏதோ சிரித்து பேசி கொண்டு இருந்தார்.. அவர் முகத்திலிருந்து எதையும் அசோக்கால் கண்டுபிடிக்க முடியவில்லை.. சரி இந்த சிந்துவும் தேவியும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால், அங்கு எதுவுமே நடக்காதது போல இருவரும் அரட்டையில் இருந்தனர்..

“ என்னடா  நடக்குது இங்க…?? எல்லாருமே தெரிஞ்சு இப்படி இருக்காங்களா ?? இல்லை நான் தான் லூசு மாதிரி புலம்பிகிட்டு இருக்கேனா ??” என்று தலையில் கை வைத்தவன்.. வேகமாக விபுவை நோக்கி சென்றான்..

அவன் எதிரே வந்த நித்யா அசோக்கை முறைத்துவிட்டு சென்றாள்.. “ போச்சு.. இவள் முறைக்க ஆரம்பிச்சுட்டா..” என்று எண்ணியபடி “ டேய் விபு “ என்று அழைத்து கொண்டு சென்றான்..

நித்யா நேரே வேதாவிடம் சென்று “ ஆன்டி எனக்கு தலை ரொம்ப வலிக்கிறது.. நான் முன்னே இப்போ கிளம்புறேன்.. பூபதி தாத்தாவும் தேனு பாட்டியும் இருப்பாங்க.. அங்கிள் வந்தா சொல்லிடுங்க..” என்று கூறினாள்..

அனைவரும் அனைத்தையும் பார்த்து கொண்டு தானே இருந்தனர்.. சந்தோசமாக வருவாள் என்று பார்த்தாள் இவள் என்ன தலைவலி என்று வருகிறாள் என்று ஆச்சரியமாக பார்த்தார் வேதா..

“ என்னமா ?? என்னாச்சு.. “ என்று சற்றே பதற்றமாய் கேட்டார் வேதா.. இதற்க்கு அவள் என்னவென்று பதில் கூறமுடியும்..

“ எதுவும் இல்லை ஆன்டி.. கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது.. அதான்.. வேற ஒன்றும் இல்லை.. நான் கிளம்புறேன்  “ என்று கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே  அங்கே தேனம்மாவை அழைத்து கொண்டு சிந்துவும் தேவியும் வந்து சேர்ந்தனர்..

தேனம்மா முகத்தில் ஒரு சந்தோசம் தெரிந்தது.. அதற்கான காரணமும் நித்யாவிற்கு புரிந்தது..

சிந்து மற்றும் தேவியின் பார்வையில் ஒரு கேலியுடன் கூடிய மகிழ்ச்சி தென்பட்டது.. ஆனால் தேவியின் முகத்தில் கூடுதலாக ஒரு குழப்பம் வேறு இருந்தது..

இதை அனைத்தும் ஒரே பார்வையில் கவனித்து விட்டாள்  நித்யா.. ஆனாலும் எதையும் கண்டுகொள்ளவில்லை என்பது போல் முகத்தை வைத்து கொண்டாள்.

“ என்ன கண்ணு இப்பயே நீ கிளம்பி என்ன பண்ண போற ?? இரு எல்லாரும் ஒன்னா கிளம்பலாம் “ என்று அவளது கைகளை பிடித்து கொண்டார் தேனு பாட்டி.

“ இல்ல பாட்டி.. நீங்க இருந்துட்டு வாங்க.. நான் போறேன்” என்று கிளம்புவதிலேயே இருந்தாள்.. அவளது எண்ணம் எல்லாம் விபு இங்கே வருவதற்குள் கிளம்பிவிட வேண்டும்.

எந்த காரணத்தை கொண்டும் அவளது மனதில் இருப்பது யாருக்கும் தெரிந்து விட கூடாது.. அதற்கு அவள் தன்னையே முதலில் சமாதானம் செய்ய வேண்டும்.. அதற்கு தனிமை வேண்டும்..

இப்படி ஒரு வழியாக அனைவரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றுவிட்டாள்… அவள் வந்த பிறகு அங்கே என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியாதே..

அசோக் விபுவிடம் செல்லும் முன், விபு “ இவளுக்கு என்ன ஆயிற்று ?? நல்லா தானே பார்த்தா?? விபான்னு கூப்பிட்டாளே ?? அப்போ அது பொய்யா ?? ஒரு நொடியில் முகத்தை மாத்திகிட்டா.. எது நிஜம் எது பொய்… ஆண்டவா ..” என்று தலையில் கை வைத்துவிட்டான்..

“ டேய் விபு “ எட்ன்று அரட்டியபடி வந்தான் அசோக்.. அவனை என்ன என்பது போல பார்த்தான் விபு.. ஆனால் அசோக்கின் பயந்த மற்றும் குழப்பம் கலந்த முகத்தை பார்க்கவும் விபுவிற்கு சிரிப்பு வந்து விட்டது..

தன் நண்பனை பார்த்து “ அசோக் நீ ஏன் டா எதையோ தின்ன எதுவோ போல இருக்க ?? ” என்று கேள்வி கேட்டான்..

விபுவை முறைத்து கொண்டு “ வேணாம்டா விபு.. நீ பண்ற வேளைக்கு எனக்கு எப்ப உன் குடும்பத்து கிட்ட இருந்து அடி கிடைக்கும்ன்னு பயந்துகிட்டு இருக்கேன்..”

விபு “ஹா ஹா… ஏன் டா அப்படி நான் என்ன பண்ண கூடாத வேலைய பண்ணிட்டேன்?? “

“ டேய் வேணாம்.. ஏன் டா கொஞ்சம் நேரம் முன்னாடி நீ பண்ண வேலைய எல்லாரும் பார்த்தோமே..அது ஒன்னே போதாதா ?? ” என்றான் அசோக்.

அசோக்கையே ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த விபு “ அசோக்.. நான் உன் தங்கச்சிய விரும்புறேன்..” என்று தன் மனதில் உள்ளதை போட்டு உடைத்து விட்டான்..

அதை தான் அனைவருமே பார்த்தனரே.. அசோக்கோ ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு “ வேணாம் விபு.. இது நடக்காது.. நித்யா இதற்க்கு சம்மதிக்க மாட்டா.. விட்று “ என்று கூறினான் வேகமாக..

அவனது பதிலை கேட்ட விபு அதிர்ந்து போனான்.. “ ஏன் டா.. நான் என்ன அவ்வளோ மோசமான ஆளா ?? ஏன் வேணாம் சொல்லுற.. நீயும் ஏன்டா நானும் ஒரு சாதாரண அண்ணன்ங்கிற மாதிரி நடந்துக்கிற..” என்றான் விபு வேதனையோடு..

அவனது வேதனை நிறைந்த முகத்தை காணவும் தான் அசோக்கிற்கு விபுவின் காதலின் ஆழம் புரிந்தது.. ஆனால் நித்யாவின் வாழ்கை பற்றியும் தெரியும் என்பதால் அவன் இதற்கு சரி சொல்ல முடியாத சூழலில் இருந்தான்..

“ இல்லை விபு.. அது.. அது வந்து.. அது அவ” என்று நித்யாவின் கடந்தகாலம் பற்றி கூற தயங்கினான் அசோக்.. அவனையே பார்த்து கொண்டு இருந்த விபு

 “ ஏன் அசோக் என்னைய நம்பி உன் தங்கச்சி பத்தி சொல்ல உனக்கு இன்னும் மனசு வரலையா ?? ” என்று கேட்டான்..

உடனே பதறிய அசோக் “ அப்படி இல்ல விபு.. இத பத்தி பேசவே நித்யாவுக்கு பிடிக்காது.. அதான்.. அவளை கேட்காமல் அவளை பத்தி நான் எப்படி “ என்று மீண்டும் தயங்கினான்..

“ நீ எதுவும் என்கிட்டே சொல்லவேணாம்.. எல்லாமே எனக்கு தெரியும் அசோக் “ என்று கூறிய விபுவின் முகத்தில் வேதனை இன்னும் அதிகரித்தது..

“ என்ன ?? தெரியுமா ?? விபு நீ … நீ … நீ என்ன டா சொல்லுற.. உனக்கு என்ன தெரியுமா.. எப்படி தெரியும்?? யாரு டா சொன்னா ?? ” சராமாரியாக கேள்விகள் தொடுத்தான் அசோக்..

அவனது பதற்றத்தை பார்த்து விபு லேசாக நகைத்தபடி “ ஹ்ம்ம்.. எப்போ உன் தங்கச்சிய பார்த்தேனோ.. எப்ப அவ என் மனசில நுழைந்தாலோ அப்பவே அவளை பத்தி தெரிஞ்சுக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்..”

“ டேய் விபு எல்லாம் தெரிந்துமாடா நீ நித்யாவ லவ் பண்ணுற..??” என்று கேட்டான் அசோக்.. அதற்க்கு தன் அக்மார்க் புன்னகையை மட்டுமே பதிலாக குடுத்தான் விபு..

அவனது கைகளை பிடித்துகொண்ட அசோக் “ டேய் விபு.. இது.. இந்த கல்யணம் மட்டும் நடந்துட்டா என்னைய விட சந்தோஷ படுறது வேற யாரும் இருக்க முடியாது டா.. ரொம்ப தேங்க்ஸ் டா..” என்று கூறி அவனை கட்டிகொண்டவன் பின்

“ டேய் இது எல்லாம் ஒத்துவருமா.. முதல்ல உங்க வீட்டுல சரி சொல்லுவாங்களா ?? நித்யா இதுக்கு சரி சொல்லணுமே “ என்றான் கவலையாக..

“ டேய் அசோக்.. அதுக்கெல்லாம் நான் ஒரு ஆள் வச்சு இருக்கேன் டா.. நீ கவலை பாடாத.. “ என்று விபு கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே

“ அது சரி நித்யாக்கு மேக் அப் போடவே நீ ஆள் வச்சவன் தானே.. “ என்று கூறி கொண்டு வந்தாள் தேவி..

பாவம் அசோக் விபுவிடம் கேட்டு இருக்கலாம் அந்த ஆள் யாரென்று.. தான் பலியாடு ஆகபோவதை உணராமல் சிரித்து கொண்டு இருந்தான். 

“ஆகா கண்டுபிடிச்சிட்டா போலவே “ என்று அசடு வழிந்தான் விபு.. “ ரொம்ப வழியிது.. நீ வழிய வேண்டியவங்க எப்பயோ டா டா சொல்லி கிளம்பியாச்சு.. “

“ என்ன பாக்குற.. இவ்வளோ நேரம் நீங்க பேசிகிட்டு இருந்தது எல்லாம் கேட்டிட்டு தான் இருந்தேன்.. லைப்ல ஒரு உருப்படியான முடிவு எடுத்து இருக்க.. அதுக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா “ என்று கை குலுக்கினால் தேவி..

சில நேரம் இந்த அதிர்ச்சியை விபு மற்றும் அசோக்கால் தாங்கவே முடியவில்லை.. எப்படியும் இவள் வந்து “ அதெப்படி என் தோழியிடம் நீ இப்படி நடந்து கொள்ளலாம் “ என்று கோவப்பட்டு கத்துவாள் என்றே நினைத்தனர்..

ஆனால் இவளோ அதற்க்கு நேர் மாறாக வந்து பேசவும் ஆச்சர்யம் தான்.. விபு “ ஊப்… எங்க நீ சண்ட போடுவியோன்னு நினைச்சேன் தேவி “ என்றான்..

“ ஹ்ம்ம் சண்டையா நானா ?? அட போ னா.. எனக்கு நித்யா முன்ன எப்படி இருந்தான்னு நல்லா தெரியும்.. இப்ப ஏன் இப்படி இருக்கான்னு எனக்கு தெரியாது.. ஆனா எனக்கு உன்மேல நிறைய நம்பிக்கை இருக்குன்னா.. நீ அவளை கண்டிப்பா பழைய நித்யாவா மாத்திடுவன்னு.. அதான் “ என்று கூறி சிரித்தாள்..

அவளது பேச்சை கேட்ட விபு “ தேங்க்ஸ் தேவிகுட்டி” என்று கூறிவிட்டு தன் தாய் தந்தையை பார்க்க சென்றான்.

அங்கே பூபதியோடு பேசிவிட்டு வந்த சந்திரவரதன் முகத்தில் குழப்பமே மிஞ்சி இருந்தது.. அவருக்கு தெரியாது அல்லவா தன் மகனுக்கு நித்யாவை பற்றி அனைத்தும் தெரியும் என்று.. தன் மனைவியிடம் எதுவோ பேசிக்கொண்டு இருந்தார்..

அவரிடம் வந்த விபுவை நோக்கி “ விபு இங்க நம்ம எதுவும் பேசவேண்டாம்.. எல்லாரும் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்.. அங்க போயி நிதனமாக பேசிக்கலாம்..” என்று கூறவும் அவனும் சரி என்று கூறிவிட்டான்..

இதெல்லாம் ஒரு புறம் இருக்க சிந்து தனியாக யோசனை செய்து கொண்டு இருந்தாள்..” எப்படி.. இது எப்படி சாத்தியமாகும்.. நான் ஒரு கணக்கு போட்டு வச்சு இருந்தேனே.. இத்தனை சுலபமா என் கை விட்டு என் கனவுகள் எல்லாம் போயிடுமா என்ன.. கூடவே கூடாது..” என்று மனதிற்குள் கூறிக்கொண்டு

வெளியே தன்னை நோக்கி வரும் தேவியை பார்த்து சிரித்து கொண்டு நின்றாள்..

இப்படி ஒருவாராக அனைவரும் தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.. தேனம்மா வீட்டிற்கு வந்து நித்யாவை தேடினார்.. அவளது அறை உள் பக்கம் பூட்டி இருப்பதை கண்டு

“ இப்பதான் கொஞ்சம் மனசு சந்தோஷ பட்டேன்.. இந்த பொண்ணுக்கு நல்ல வாழ்கை அமைய போகுதுன்னு.. ஆனா அதை இவளே கெடுத்து வச்சிடுவா போல இருக்கே “ என்று எண்ணியபடி

“ நித்யா.. நித்யா கண்ணு கதவை திற டா “ என்று தட்டினார்.. அதற்கு எந்த பதிலும் இல்லை.. மீண்டும் தட்டினார்.. நிசப்தம் மட்டுமே பதிலாக வந்தது..

மனம் பதற பூபதிக்கு போனில் அழைத்தார்.. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரும் வந்துவிட்டார்.. “ என்ன தேனு.. என்னைய ஏன் இவ்வளோ அவசரமா கூப்பிட்ட.  ஆமா நித்யா எங்க ” என்று கேட்கவும் தேனம்மா நடந்ததை கூறினார்..

உடனே செயல்பட்ட பூபதி வேகமாக பின் வாசல் வழி சென்று நித்யாவின் அறையை எட்டி பார்த்தார்.. அங்கே அவள் இருந்ததற்கான அடையாளம் மட்டுமே இருந்தது.. அவள் இல்லை..

அதே நேரம் அவரது அலைபேசிக்கு “ எனக்கு மனம் சரியில்லை.. கொஞ்சம் நேரத்தில் நானே வீட்டிற்கு வந்துவிடுவேன்.. என்னை தேட வேண்டாம் “ என்று நித்யாவின் நம்பரில் இருந்து குறுந்தகவல் வந்தது..   

அதை படித்துவிட்டு தேனு பாட்டியிடம் கூறிய பூபதி “ இப்பதான் இவள் வாழ்கைய சரி பண்ண ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு.. இத்தனை நாள் நாம கவலை பட்டதுக்கெல்லாம் சேர்த்து ஒரு விடிவு வர போகுதுன்னு நினைச்சா நித்யா ஏன் இப்படி பண்ணுறா தேனு..??” என்றார் கவலையாக..

இங்கே இப்படி இருக்க அங்கே விபுவரதனின் வீட்டில் அனைவரும் அமைதியாக அமர்ந்து இருந்தனர்..

அசோக் தான் முதலில் பேச ஆரம்பித்தான் “ அப்பா.. அம்மா.. நித்யா “ என்று அவன் ஆரம்பிக்கும் பொழுதே சந்திரவரதன் “ எல்லா விசயமும் எங்களுக்கு தெரியும் அசோக்” என்றார்..

“ என்ன “ என்று இம்முறை அதிர்ச்சி அடைந்தது விபுவும் சேர்த்து தான்.. தேவிக்கு இங்கே என்ன நடக்கிறது என்று ஒரே ஆச்சரியம்..

மூவரும் திகைத்து போய் பெரியவர்களை பார்த்து கொண்டு இருந்தனர்.. சிந்து தன் கம்பெனி வேலையாக முக்கியமான ஒரு நபரை சந்திக்க வேண்டும் என்று வந்ததும் கிளம்பி விட்டாள்..

விபு “ அப்பா தெரிந்துமா நீங்க அமைதியா இருக்கீங்க “ என்றான்..

“ வேற என்ன பண்ண சொல்லுற விபு.. எங்க பையன் ஆசை பட்டுட்டானே.. அதுவும் இல்லாம நாம ஒன்னும் பிற்போக்கு சிந்தனை உள்ள குடும்பம் இல்லையே… என்ன வேதா நான் சொல்வது சரிதானே ” என்றார் சிரித்தபடி விபுவின் தந்தை..

அவரது சிரிப்பை பார்த்தபின் தான் விபு மனதில் நம்மதி பரவியது.. “அப்பாடி வீட்டில் எப்படி சம்மதம் வாங்க போகிறோம் ?? என்று தவித்ததற்க்கு நல்ல பதில் கிடைத்துவிட்டது ” என்று நிம்மதி பேரு மூச்சு விட்டான்..

அவனை பார்து வேதா “ இங்க பாரு விபு நித்யா நம்ம வீட்டுக்கு மருமகளா வருவதில் எங்களுக்கு முழு சம்மதம்.. ஆனா நீ இப்ப அவசர பட்டு காதல் மயக்கத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு பின்னால அந்த பொண்ணு மனசு நோகுற மாதிரி நடந்திட கூடாது.. “

“அதுனால நீ இன்னொரு தடவ நல்லா யோசிச்சு முடிவு எடு.. உன் முடிவு எதுவா இருந்தாலும் அதற்க்கு நாங்க உனக்கு துணையா இருப்போம் “ என்று கூறினார்..                           

அவரது கைகளை பிடித்துகொண்ட விபு “ அம்மா நான் உங்க பையன்மா.. உங்க வளர்ப்பு தப்பா போயிடுமா என்ன ?? என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?? ” என்று கேட்டான்..

“ நம்பிக்கை இல்லாம இல்ல விபு.. நம்ம வீட்டுக்கு வாழ வரபோகும் பொண்ணு சந்தோசமா இருக்கனும்ல அதான்.. அதெல்லாம் சரி நீ முதல்ல நித்யா கிட்ட சம்மதம் வாங்குனையா இல்லையா ?? ” என்று முக்கியமான கேள்வியை கேட்டார்..

அது தானே முக்கியமான வேலை. அவள் சம்மதம் கூறினாள் தானே அனைத்தும் நிறைவாக நடக்கும்..

விபு “ இல்லை மா.. இன்னும் இதை பத்தி நான் தெளிவா பேசலை.. எப்படியும் கொஞ்ச நாள் ஆகும் உங்க மருமக மனசு மாறி மலை இறங்க.. “ என்று கூறி சிரித்தாலும் அவன் மனதில் ஒரு பெரும் அழுத்தம் குடி கொண்டது..

“ ஹ்ம்ம் இன்னும் காதலிக்கும் பொண்ணு கிட்ட சம்மதம் வாங்கலை.. ஆனா வீட்டில் சரி சொல்ல வைச்சுட்ட.. அது சரி என் பையன் ஆச்சே “ என்று கூறி சிரித்தார் விபுவின் தந்தை..

அங்கே ஒரு சந்தோஷ சிரிப்பலை பரவியது.. சிறிது நேரம் பேசிவிட்டு அசோக் கிளம்பவும் விபுவின் அப்பா அம்மா இருவரும் தங்கள் அறைக்கு ஓய்வு எடுக்க சென்றனர்..

தேவி “ என்ன இது என்ன நித்யா வாழ்கையில நடந்திச்சுன்னு யாருமே சொல்லல.. அவங்களா பேசி முடிவு பண்ணிட்டாங்க.. ஆனா என்னைய தவிர எல்லாருக்கும் தெரியும் போல இருக்கே.. அப்பா அம்மா கிட்ட போயி கேட்டா சொல்லுவாங்கலா??? இல்லை அண்ணன் கிட்ட கேட்கலாமா ?? ” தன் யோசனையில் மூழ்கி விட்டாள்..

விபுவோ “ எல்லாமே நல்லா தான் நடக்கிறது.. ஆனா என் மல்லி சரி சொல்லணுமே.. அவள் மனசிலும் காதல் இருக்கிறது.. அதை எப்படியாவது வெளியே கொண்டு வரணும்.. கொண்டு வருவேன்” என்று அவன் தன் யோசனையில் இருந்தான்..

அங்கே நித்யாவோ தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தாள்..                                             

                           மனம் – மயக்கும்.

                                                                      

                                                                        

                               

                                          

Advertisement