Advertisement

     மனம் – 7

                    

கண் மூடி கண் திறப்பதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டது. விபுவின் கெஸ்ட் ஹௌஸ் வேலை ஏறக்குறைய முழுதாக முடியும் தருவாயில் வந்து விட்டது. வேலை நடக்கும் நாட்களில் நடுவில் ஒரு முறை தேவசேனா, சிந்து, இருவரும் வந்து வீட்டை பார்த்துவிட்டு வேறு சென்றனர்..

இதற்க்கு நடுவில் ஒரு முறை நித்யாவும், தேவியும் சந்திக்கும் வாய்ப்பும் அமைய, மீண்டும் அவர்களின் நட்பு தொடர ஆரம்பித்தது… சிந்து கூட நித்யாவுடன் நன்றாக பேச ஆரம்பித்தாள்..

அதற்கு காரணமும் இருந்தது.. இந்த இளம் வயதில் அவளே முன் நின்று ஒரு தொழிலை நிர்வகித்து, அவளுக்கென்று ஒரு இடத்தை சமூகத்தில் உருவாக்கி கொண்டது தான் சிந்துவை நித்யாவின் பக்கம் ஈர்த்தது..

விபுவும் நித்யாவும் சிறிது நாட்களாக தான் சண்டை இல்லாமல் இருந்தனர்.. அவ்வப்போது விபு அன்னை மெஸ்ஸில் வந்து பூபதி மற்றும் தேனம்மாவை பார்த்து இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு செல்வான்..

அந்நேரம் நித்யா அங்கு இருந்தால் இவனை பார்த்து ஒரு தலை அசைப்பு மட்டும் செய்வாள். அவ்வளோதான் இதை தவிர வேறு எதுவும் அவளிடம் எதிர்பார்க்க முடியாது..    

அவளிடம் நெருங்கி பழக வேண்டும் என்று விபுவின் மனது ஒவ்வொரு நாளும் மிகவும் ஏங்கியது.. ஆனால் இது கல்லில் நார் உரிப்பது போல என்று அவனும் உணர்ந்தே இருந்தான்..

எப்பொழுதாவது அசோக்கோடு சேர்ந்து அங்கு செல்ல நேர்ந்தால் நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல அசோக்கிடம் பேசும் பொழுது இவனிடமும் ஓரிரு வார்த்தை பேசுவாள்.. அவ்வளவே..   

இதனால் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான் விபுவரதன்.. அவனுக்கு வாய்ப்பு தானாக தேடி வந்தது.. 

தேவி தான் குழம்பி தவித்தாள்.. அவள் கல்லூரியில் பார்த்த நித்யாவிற்கும் இப்பொழுது இருக்கும் நித்யாவிற்கும் நிறைய வித்தியாசம்.

“ இவள் ஏன் இப்படி இருக்கிறாள்??? எதற்காக இப்படி தன்னை மூடி மறைக்கிறாள்??? இவளுக்கு என்ன தான் பிரச்சனை ?? ” என்று தன்னை தானே கேள்வி கேட்டு கேட்டு அலுத்து போய் ஒரு நாள் பொறுக்க முடியாமல் நேராக நித்யாவிடமே கேட்டுவிட்டாள்..

அவள் கேட்டதை முதலில் நித்யா எதிர்பார்க்கவில்லை.. ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் அவளது முகத்தில் வேதனையின் சாயல் படர்ந்து மறைந்தது..

அது தானாக மறைந்ததோ இல்லை அவளாக முயன்று மறைத்தாளோ தெரியவில்லை..

ஆனால் இது எதுவுமே தேவியின் கண்களில் இருந்து தப்பவில்லை.. “ஹே !!! நித்யா.. பதில் சொல்லு.. நான் கேட்கிறேனே ??? ஏன் டி  இப்படி இருக்க ?? உனக்கு ஏதாவது பிரச்சனையா ?? எதுவா இருந்தாலும் சொல்லு டி.. உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம்  ” என்றாள் கோவமாக..

அவளது கோவத்தில் அக்கறை தான் இருந்தது.. அதை பார்த்து ஒரு முறை லேசாக சிரித்த நித்யா “ ஏன் தேவா ??? உனக்கு இப்ப என்ன திடிர்னு என்னைய ஆராய்ச்சி பண்ணுற வேலை..?? நான் நல்லாதான இருக்கேன்.”

“ இப்ப எதுக்கு பழையது எல்லாம் ?? நானே அதெல்லாம் மறந்திட்டு இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் “ என்று கூறி விட்டு அவள் மேற்கொண்டு பேசாத வன்னம் அகன்று சென்றுவிட்டாள்..

அவள் போவதையே திகைத்து பார்த்த தேவி, தேனம்மாவிடம் “ என்ன பாட்டி இது, இவள் இப்படி இருக்கா ??? அப்படி என்ன பாட்டி இவளுக்கு நடந்திடிச்சு??  “ என்றாள் சலிப்பாக..

தேனம்மா “ என்னைய என்ன கண்ணு பண்ண சொல்லுற ?? நானும் எவ்வளோவோ சொல்லி பார்த்துட்டேன்.. ஹ்ம்ம் தானா இந்த பொண்ணு அது வாழ்க்கைய கெடுத்துக்குது.. அவ்வளோதான் என்னால சொல்ல முடியும்..” என்று கூறி சென்றுவிட்டார்..

தேவியின் மனம் மிகவும் குழம்பியது.. வழக்கம் போல தன் அண்ணனிடம் அனைத்தையும் ஒப்பிப்பது போல இதையும் கூறிவிட்டாள்.. விபுவிடம் பேசிய பிறகுதான் தேவியின் மனம் சற்றே அமைதி அடைந்தது..

ஆனால் இதை எல்லாம் கேட்ட விபுவின் மனமோ இன்னதென்று கூற முடியாத ஒரு உணர்வை பெற்றது.. இத்தனை நாட்களாய் நித்யா அடிக்கடி வெளியில் சென்று வருவதால் தான் தன் உருவத்தை மாற்றி கொள்கிறாள் என்று எண்ணி இருந்தான்..

தன் அழகால் தனக்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என்பதற்காகவே அவள் இப்படி இருக்கிறாள் என்று நினைத்து இருந்தான்..

ஆனால் இன்று தேவி வந்து நடந்ததை கூறவும் தான் அவன் மனதில் “ இதில் வேறு எதுவோ இருக்கிறது “ என்று அவனுக்கு தோன்றியது..

“அப்படி என்ன தான் இவள் வாழ்கையில் நடந்து இருக்கும்.. அசோக்கு கண்டிப்பா இது பத்தி தெரிந்து இருக்கும்.. ஆனா அவன் கிட்ட எப்படி கேட்கிறது.. “ என்று யோசித்து கொண்டு இருந்தவனுக்கு அன்றைய உறக்கம் தொலைந்து போனது..

இரவெல்லாம் யோசித்தான்.. எந்த காரணமும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.. நித்யாவின் பிரச்சனையை கண்டுபிடிப்பதற்கு முன்பு தன் மனதையே அவன் முதலில் கண்டு பிடிக்க வேண்டி இருந்தது..

அவனது மனம் இரண்டாக பிரிந்து ஒன்று கேள்வி கேட்டது, மற்றொன்று பத்தி கூறியது..

“ அவளுக்கு என்ன பிரச்சனையா இருந்தா உனக்கு என்ன ?? அவளே அவள் வாழ்கைய இப்படி தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்து வாழ்ந்துட்டு இருக்கா.. நீ ஏன் இப்படி உன் மனதை போட்டு குழப்பிக்கிற???” என்று கேள்வி கேட்டது.

அதற்க்கு விபுவின் இன்னொரு மனம் “ அப்படி எல்லாம் அவளை யாரோவென்று போனால் போகட்டும் என்றெல்லாம் விட முடியாது.. அவளுக்கு எது நடந்து இருந்தாலும் சரி, உற்ற துணையாக அவளுக்கு நான் இருப்பேன் “ என்று பதில் கூறியது..

“ அப்படியா ?? எந்த உரிமையில் அவளுடன் நீ இருப்பாய்?? அவள் தான் உன்னை கண்டாலே பதினாறடி பின்னே போகிறாளே..?? ” என்று கேள்வியுடன் கேலி செய்தது இன்னொரு மனம்..

“ அவள் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து கொல்லட்டும்.. எனக்கு அதெல்லாம் கவலை இல்லை.. எனக்கு தேவை எல்லாம் என் மல்லி எப்பொழுதும் சந்தோசமாக, நிம்மதியாக இருக்க வேண்டும்.. அவ்வளோதான் ”

“ என்ன உன் மல்லியா ??? உன் மல்லி என்றால் அதற்க்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா உனக்கு ?? ” என்று அவனது மனம் அவனை இடித்தது..

“ எல்லாம் தெரியும்.. ஆமாம் அவள் என் மல்லி தான்.. அவளை நான் எனக்கு மட்டுமே சொந்தமாக்கி கொள்ள போகிறேன்.. அவள் வாழ்கையில் என்ன நடந்தாலும் சரி, நடந்து இருந்தாலும் சரி.. அவளை நான் என்னுடன் என் வாழ்கை துணையாக இணைத்து கொள்வேன் “ என்று பதில் கூறினான்..

“ ஒ!!௧ அப்போ உனக்கு அவளை பார்த்து இறக்கம்.. அதனால் தான் இப்படி எல்லாம் உளறி கொட்டுகிறாய் ” என்றது அவன் மனம்..

“ இறக்கமா?? அதுவும் அந்த சண்டை கோழி மேலா ??? அட கடவுளே… இது இறக்கம் எல்லாம்  இல்லை.. அவள் என்னிடம் என்ன சண்டை போட்டாலும், என்னை எப்படி பேசினாலும் அவளிடம் கோவம் கொள்ளவோ இல்லை வெறுக்கவோ என்னால் முடியவில்லை.. இதற்க்கு பெயர் காதல் என்றால், நான் மல்லியை காதலிக்கின்றேன்..” என்று தன் மனதிற்கே நன்கு உறைக்குமாறு எடுத்துரைத்தான்..

“ ஓ !! காதலா?? அப்போ சரிதான்.. இனி யார் என்ன அறிவுரை கூறினாலும் அது எல்லாம் உன் மனதில் ஏறாது.. “ என்று கூறி அவனது இன்னொரு மனம் அமைதி அடைந்தது..

அப்பொழுது தான் விபுவே நன்றாக உணர்ந்தான்.. “ பார்த்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதுவும் நன்றாக பேசியது கூட இல்லை.. பார்க்கும் நேரத்தில் எல்லாம் சண்டை மட்டும் தான்.. இப்பொழுது அதுவும் இல்லை ”

“ அவளுக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதா என்றே தெரியாது.. முதலில் அவள் வாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் என்ன என்றும் தெரியாது.. இதெல்லாம் யோசிக்காமல் காதல் என்று மட்டும் எப்படி உறுதி ஆனது “ என்று யோசித்தான்..

ஆனால் தான் நித்யாவை காதலிக்கின்றோம் என்ற உணர்வே அவனை மகிழ்ச்சி கொள்ள வைத்தது.. “ ராட்சஸி.. முறைச்சு முறைச்சு பார்த்து, சண்டை போட்டு போட்டே என்னைய கவிழ்த்துட்டா..” என்று கூறி அவனாக சிரித்து கொண்டான்..     சந்தோசமாக உறங்க சென்றான்.                                                       

மறுநாள் விடிந்தாள் அவர்கள் புது வீட்டின் பூஜை.. அதற்க்கு விபு அசோக், நித்யா, பூபதி, தேனம்மாவையும் அழைத்து இருந்தான்..

அவன் மனதில் ஒரு பதற்றம் வேறு இருந்து கொண்டே இருந்தது.. “ இன்னைக்கு பூஜைக்கு அப்பா அம்மா வேற வருவாங்களே.. அவங்க முன்னாடி இவள் இப்படி கொண்டையும் கண்ணாடியுமா வந்து நின்னா நல்லா இருக்காதே.. கடவுளே.. என்ன பண்ணுறது..” என்று யோசித்தவனுக்கு மனதில் ஒரு திட்டம் தோன்றியது..

நேராக தன் தங்கையின் அறைக்கு சென்றான்.. அங்கே அன்று அணிய வேண்டிய உடைகளை மெத்தையில் பரப்பி வைத்து சிந்துவும், தேவியும் பேசி கொண்டு இருந்தனர்..

“ அப்பாடி.. ரெண்டும் இங்க தான் இருக்குதுங்களா.. ?? ரொம்ப நல்லது..” என்று யோசித்து கொண்டே.. ”என்ன இப்பவே ரெடி ஆகிட்டிங்களா ?? ” என்று கேட்டபடி  உள்ளே நுழைந்தான்..

அவனை ஒரு முறை தேவி ஆச்சரியமாக பார்த்துவிட்டு “ இல்ல அண்ணா… இன்னும் ரெடி ஆகலை.. “ என்றாள் குழப்பமாக.. அவளுக்கு மனதில் “ என் அண்ணன் எதுவும் காரியம் ஆகணும்னா தான் இங்க வருவான்.. ஆனா இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கான் “ என்று யோசித்தவளின் பார்வை சிந்து மேல்  விழுந்தது..

“ ஒரு வேலை அண்ணன் சிந்துவ..” என்று யோசிக்கும் பொழுதே, சிந்து  விபுவிடம் “ ஹலோ ப்ரதர் இங்க வேலை உனக்கு??? “ என்று கேட்டாள்..

அதற்க்கு விபுவும் சிரித்து கொண்டே “ ஹலோ!! என் சிஸ்டர்ஸ் ரெண்டு பெரும் என்ன செய்துட்டு இருக்காங்கன்னு பார்க்க வந்தேன் “ என்றான்..  

இவர்கள் பேச்சை கேட்ட தேவி ஒரு நொடி தன் மனம் போன போக்கை எண்ணி தன்னையே தன் மனதிற்க்குள் திட்டி கொண்டாள்..

அதன் பின் “ நாங்க என்னவோ செய்வோம்.. அது எதுக்கு உனக்கு..?? ஆமா நீ இங்க என்ன பண்ணுற அண்ணா?? உனக்கு இப்ப அங்க புது வீட்டுல வேலை எதுவும் இல்லையா ??? ” என்றாள் தேவி..

“ வேலை நிறைய இருக்கு தேவிமா.. நானும் கிளம்பிட்டேன்.. ஆனா பூஜை 10 மணிக்கு மேல தான். இப்பதான் ஆளுங்க வந்து எல்லாம் சுத்தம் செய்துட்டு இருபாங்க.. சோ, இந்த டிரஸ்ஸ நீங்க வரும் பொது கொண்டு வாங்க.. நான் முன்னாடி போறேன்.. நான் அங்க வந்து மாத்திக்கிறேன் ” என்று கூறிவிட்டு தன் தங்கையின் முகத்தை பார்த்தான்..

அவள் ஒரு நொடி யோசித்தவள் “ ஆ !!! அதுசரி.. நீ மட்டும் நல்லா புதுசா போட்டுக்கணும் பூஜைக்கு.. நாங்க மட்டும் இங்க இருந்து போட்டு வர டிரஸ் போட்டுகனுமா ??? இது நல்ல இருக்கே..” என்று தன் இரு கைகளையும் தட்டி கொண்டாள்..

இதற்கு சிந்துவும் ஆமாம் என்று ஆமோதித்தாள்.. விபு மனதிற்குள் “ ட்ரெஸ்ன்னு சொல்லவும் மட்டும் இந்த பொண்ணுங்களுக்கு எங்க இருந்து தான் ஆசை வருதோ..” என்று யோசித்துவிட்டு பின் ” ஹ்ம்ம் நான் வேணா ஒரு ஐடியா சொல்லவா ?? ” என்று கேட்டான்..

“ என்ன ?? என்ன ??” என்று இருவரும் கேட்டனர்..

“ இப்பயே ரெண்டு பெரும் கிளம்புங்க.. அப்பா அம்மா பூஜை நேரத்துக்கு அவங்க கார்ல வரட்டும்.. உங்க புது டிரஸ் எடுத்து வச்சுகோங்க, நான் உங்களை தேவி பிரன்ட் வீட்டுல இறக்கி விடுறேன்..”

“ அவங்களும் தான் பூஜைக்கு வராங்க.. சோ நீங்க எல்லாம் கிளம்பி ஒரேதா ஒன்னா வந்திடுங்க.. சிம்பிள்…” என்று கூறினான்.. அவனை ஒரு முறை வித்தியாசமாக பார்த்து இரு பெண்களும் பிறகு சரி என்று கூறி கிளம்பினர்..

விபுவிர்க்கு தெரியும் எப்படியும் இவர்கள் அங்கு நித்யாவின் வீட்டிற்கு போனால் அவளையும் இவர்களை போலவே கிளப்பி கூட்டி வந்துவிடுவார் என்று..

உடன் அங்கு தேனு பாட்டியும் இருப்பதால் நித்யாவினால் மீர முடியாது.. இதை எல்லாம் சிந்தனை செய்தே விபு இப்பொழுது இவர்களை கிளப்பியது..

விபு என்ன நினைத்தானோ அது தான் நடந்தது.. நித்யமல்லிகா தேவலோக கன்னிகை போல தான் அவன் கண்ணுக்கு தெரிந்தாள்..

இளம் சிவப்பு நிற சில்க் காட்டன் சேலையை அழகாக உடுத்தி, நெற்றியில் எப்பொழுதும் வைக்கும் ஒரு போட்டு அதற்கு மேலே ஒரு சந்தன கீற்று.

காதுகளில் ஒற்றை கல் சிறு ஜிமிக்கி.. கழுத்தில் எப்பொழுதும் அணியும் சங்கிலியை விட கொஞ்சமே கொஞ்சம் பெரிய சங்கிலி.. ஒரு கையில் கடிகாரமும், மறு கையில் ஒற்றை கல் பதித்த ப்ரேஸ்லட் அணிந்து இருந்தாள்..

ஆனால் இதற்கே அவன் தலை சுற்றும் அளவு மயங்கி விட்டான்..” ராட்சஸி.. எப்படி இருக்கா ??? இவ்வளோ அழகா இருந்துட்டு ஏன் தான் அதை மறைச்சு வைக்கிறாளோ ?? யப்பா !!!” என்று பெரு மூச்சு விட்டான்..

இப்படி ஒரு கோலத்தில் அவளை காண வேண்டும் என்று தானே காலையில் விபு தேவியையும் சிந்துவையும் அழைத்து வந்ததே.. 

அசோக் தான் விபுவின் பெற்றோர்களை நித்யாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். அசோக்கின் தங்கை என்று தெரிந்ததும் விபுவின் அப்பாவும் அம்மாவும் வந்து நித்யாவிடமும் தேனு பாட்டி, பூபதி ஆகியோருடனும் வந்து நன்றாக பேசினர்.. வேதாவிற்கு நித்யாவின் அடக்கமான அழகு மிகவும் பிடித்து விட்டது..

நித்யாவிற்கு ஏனோ விபுவிடம் விலகி நிற்பது போல அவனது பெற்றோரிடம் விலகி நிற்க முடியவில்லை.. ஒரு வேலை அவளது பெற்றோர்கள் நினைவால் கூட இருக்கலாம்..

நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்து கொண்டு இருந்த விபுவின் மனம் ஒன்றை மட்டும் நன்றாக உணர்ந்தது..

 ” இந்த மல்லி என் அப்பா அம்மா தங்கச்சி எல்லார்  உடனும்  நல்லா பேசுறா.. ஆனா என் கிட்ட மட்டும் ஏன் இப்படி விலகி இருக்கா ?? இதுல எதுவோ இருக்கே… “ என்று எண்ணியவன் பின்பு

“ நீ தள்ளி தள்ளி போனா என்ன மல்லி ?? இதோ நானே வறேன் ” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு தன் அன்னையிடம் நின்று பேசிக்கொண்டு இருந்த நித்யாவை நோக்கி நகர்ந்தான்..

அவளையே பார்த்தபடி “ அம்மா, இவங்க தான் Ms. நித்யமல்லிகா.. அன்னை மெஸ் முதலாளி.. இவங்க புண்ணியத்துல தான் இன்னைக்கு நமக்கு சாப்பாடே கிடைக்க போகுது..” என்று கூறி சிரித்தான்..

வேதாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. பொதுவாக விபு அவனது அம்மா மற்றும் தங்கையுடன் நன்றாக பேசுவான்.. பின்பு சிந்துவிடமும்.. ஆனால் அவர்களோடு வேறு பெண்கள் யாரவது பேசி கொண்டு இருந்தால் அங்கு இருந்து நகர்ந்து விடுவான்..

“ஆனால் இன்று அசோக் அறிமுகம் செய்து வைத்துவிட்டான் என்று தெரிந்த பின்பும், தன் மகன் தங்களிடம் வந்து அவளை அறிமுகம் செய்து வைக்கிறான். அதுவும் கேலியும்  கிண்டலுமாக பேசிகொண்டு.. என்ன ஆயிற்று இவனுக்கு”  என்று  யோசித்தபடி நித்யாவின் முகத்தை பார்த்தார்..

அவள் முகத்தில் அப்பட்டமாக கோவம் தெரிந்தது.. எந்தவித தயக்கமும் இன்றி அவள் விபுவை முறைத்துகொண்டு இருந்தாள்.. அவளது முறைப்பை பரிசாக வாங்கி கொண்டு இருப்பவனோ அழகாக சிரித்து கொண்டு இருந்தான்..

“ இந்த பொண்ணு நித்யா இவனை இப்படி முறைக்கிறா.. அய்யோ என் பையன் என்ன லூசு மாதிரி சிரிக்கிறான்..” என்று மேலும் ஆச்சரியத்தில் மூழ்கினார்..

“ ஏற்கனவே அசோக் அறிமுகம் செய்துட்டான் விபு.. யாருன்னு தெரியாம தானா நாங்க இவ்வளோ நேரம் பேசிட்டு இருக்க போறோம்?? “ என்று கேட்டார் வேதா..

“ அசோக் அறிமுகம் செய்தது எனக்கும் தெரியும் மா.. இருந்தாலும் நானும் செய்யணும்ல.. அப்புறம் அதுவேற எனக்கு சாப்பாடு போடலைன்னா நான் என்ன பண்ணுறது “ என்று கூறி சிரித்தான்..

“ டேய் விபு இது என்ன வாயாடித்தனம்.. நீ எதுவும் தப்பா நினைக்காத மா. ” என்றார் வேதா நித்யாவை பார்த்து..

அதற்கு நித்யா பதில் கூறும் முன்னே விபு முந்திக்கொண்டான் “ அம்மா என்ன நீங்க இப்படி சொல்றிங்க.. மல்லி தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டா.. இப்ப பாருங்க மல்லின்னு கூப்பிடுறது கூட அவளுக்கு பிடிக்காதுதான். ஆனா நான் அப்படிதான் கூப்பிடுவேன்.. அதை கூட அவ தப்பா எதுவும் நினைக்கலை “ என்று மீண்டும் அவளை சீண்டினான்..

வேதா தன் மகனுக்கு பதில் கூறுவதற்குள் அவரை அங்கு பூஜை செய்யும் ஐயர் அழைக்கவும் நகர்ந்து விட்டார்.. நித்யா முறைத்து கொண்டு நின்றிருந்தாள்..                   

“ நான் முறைக்கிறேன்.. இவன் என்ன கிறுக்கனா ?? சிரிக்கிறான்… ஒரு வேலை அவங்க அம்மா முன்னாடி என்னால எதுவும் சொல்ல முடியாதுன்னு தான் இப்படி பண்ணுறானோ ?? ” என்று யோசனையோடு அவனை ஒரு பார்வை பார்த்தாள் விபுவின் மல்லி..

அவனோ அவளது பார்வையை பார்த்ததும் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி சிரித்தான்.. ஏனோ அத்தனை நேரம் அவனை முறைத்து கொண்டு இருந்த நித்யாவால் இப்பொழுது அவன் பார்த்த பார்வையை எதிர் கொள்ள முடியவில்லை..

தன் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள்.. திரும்பி நின்று தேவி மற்றும் சிந்துவுடன் பேசி கொண்டு இருந்தாள்..

விபுவின் பார்வையை நித்யா தவிர்ப்பதும்.. அவளை தன் பார்வையாலே துரத்தி துரத்தி சுற்றி வளைப்பதுமாக விபு வளம் வருவதும் அங்கே அழகிய  கண்ணா மூச்சி ஆட்டம் அரங்கேறியது..

இதை முதலில் கவனித்தது சிந்து தான்.. “ ஆகா !!! இப்படி போகுதா கதை.. விபு நீ கூடவா இப்படி.. ஹ்ம்ம்.. பரவாயில்லை நித்யா நல்ல பொண்ணு தான் பட் உனக்கு ஒத்து வருவாளோ ??”  என்று யோசித்தபடி தேவியிடம் “ உன் அண்ணனை கவனி “ என்று கண் காட்டினாள்..

தேவிக்கு இதை எல்லாம் பார்த்த பின்பு தான் புரிந்தது காலையில் எதற்காக தன் அண்ணன் தங்களை எல்லாம் இங்கே முதலில் நித்யாவின் வீட்டில் கொண்டு வந்து விட்டான் என்று..

அப்பா அம்மாவின் முன்பு அவள் எப்பொழுதும் இருப்பது போல வந்து விட கூடாது என்றே அவன் எண்ணியிருக்கிறான் என்று தேவி புரிந்து கொண்டாள்.

“அடப்பாவி அண்ணா, கடைசியில உன் ஆளுக்கு அலங்காரம் பண்ண எங்களை இழுத்துட்டு வந்து இருக்க..” என்று எண்ணியவள் மனம் சட்டென்று கவலை உற்றது..

“ நித்யா வாழ்க்கைல என்ன பிரச்னைன்னு தெரியாதே.. அது தெரியாம இவன் வேற மனசுல கற்பனை வளர்த்துட்டா என்ன பண்ணுறது.. ??”

“ இந்த சிந்து லூசுக்கு இதெல்லாம் புரியாது.. ஆனா இந்த நித்யா வேற ஏன் ஒரு தவிப்போட இருக்கா ?? ஒரு வேலை அவளுக்கு அண்ணனை பிடிச்சு இருக்கா ?? ஆ !!! கடவுளே இதுக்கு எல்லாம் ஒரு நல்ல வழிய காட்டுப்பா” என்று மானசீகமாக வேண்டினாள்.

தேவியின் வேண்டுதல் கடவுளின் காதுகளில் விழுந்தது போல.. ஏனெனில் அங்கே நாடக்கும் கண்ணா மூச்சி ஆட்டத்தை வேறு ஒரு நபரும் கவனித்து மனதில் குறித்து வைத்து கொண்டே தான் இருந்தார்.. அது வேறு யாருமில்லை விபுவின் அப்பா சந்திரவரதன் தான்..

அதே நேரம் வேதாவும் தன் கணவரிடம் அனைத்தையும் கூறிவிட்டார்..” என்னங்க இந்த விபுவ பாருங்க.. சும்மா அந்த பொண்ணு கிட்டையே வம்பு பேசுறான்.. “ என்று கூறினார்..

“ வம்பு மட்டு பேசுவது போல தெரியல வேதா.. கொஞ்சம் உன்னிப்பா கவனி. உன் பையன் முகத்துல ஒரு தனி சந்தோசம் தெரியுது  பாரேன் “ என்று கை காட்டினார் விபுவின் தந்தை..

பெற்றோர்கள் இருவரும் தங்கள் மகனின் மனதை புரிந்து கொண்டார்..

இங்கு இத்தனை நடந்து கொண்டு இருக்க, இதற்கெல்லாம் காரணமான விபுவரதனோ ஒன்றும் தெரியாதவன் போல தன் நண்பன் அசோக்கிடம் சென்று நல்ல மனிதன் போல நின்று கொண்டான்..

அசோக்கோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் பூஜையில் மூழ்கி பக்தி பழமாக நின்று விட்டான்..

சிறிது நேரத்தில் நல்ல படியாக பூஜை முடியவும் வெளி ஆட்கள் கிளம்பி விட்டனர்.. வேதா, நித்யா பூபதி தேனம்மா ஆகியோரை இருந்து உண்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டதால் அவர்கள் இருந்தனர்..

அன்னை மெஸ்ஸில் இருந்து தான் மதிய உணவு வந்தது.. அதை பார்க்க என்று நித்யா எழுந்து வெளியே சென்றாள்..

அவளை பின்பற்றி விபுவும் எழுந்து சென்றான்.. அவனுக்கு ஒரு விஷயம் கேட்டே ஆகா வேண்டும் போல இருந்தது.. இவர்கள் இருவரையும் பார்வையால் தொடர்ந்தார் சந்திரவரதன்..

“ மல்லி நில்லு.. உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் “ என்று கூறியபடியே அவள் முன்னே சென்று நின்று அவளை மேற்கொண்டு நடக்க முடியாத வாறு வழியை மறைத்து நின்றான்..

ஒரு நிமிடம் இவன் இப்படி வந்து நின்றதில் திடுக்கிட்டவள் தங்களை யாரும் கவனிக்கின்றார்களா என்று சுற்றி பார்த்தாள்..  பின் “ என்ன என்ன பேசணும் ?? ” என்று பதில் கேள்வி கேட்டாள் விபுவை நோக்கி..

“ எங்க அம்மா அப்பா, தங்கச்சி எல்லார் கூடவும் நல்லா பேசுற, பழகுற.. ஆனா இவங்களை எல்லாம் தெரிவதற்கு முன்னே என்னைய கிட்டத்தட்ட ஒரு மாதமா தெரியும். பின்ன ஏன் என்கிட்ட மட்டும் சரியா பேசுவது இல்லை நீ??” என்று கேட்டான் நேராக அவளது கண்களை பார்த்து..

இப்படி இவன் வந்து முகத்திற்கு நேரே கேட்பான் என்று அவள் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.. இவனது கேள்விக்கு என்னவென்று பதில் கூறுவாள்.

“ உன்னை கண்டால் என் உள்ளமும் உணர்வுகளும் தடுமாறுகின்றது.. உன் கண்களை என்னால் நேராக பார்க்க முடியவில்லை. அதனால் தான் உன்னிடம் இருந்து விலகி நிற்கிறேன் ” என்று அவளால் அவனிடம் கூற முடியுமா..

தன் மனதின் படபடப்பு முகத்தில் தெரியாமல் மறைத்து “ உங்களுக்கு வேலை இல்லைனா போங்க போயி உள்ள யாரிடமாவது பேசுங்க.. எனக்கு வேலை இருக்கு “ என்று கூறி நகர பார்த்தாள்..

“ நான் கேட்டதற்கு இன்னும் நீ பதில் கூறவில்லை..” என்று அங்கு இருந்த தூணில் சாய்ந்து கைகளை மடக்கி நின்றான் அவளது விழிகளையே ஊடுருவும் ஒரு பார்வை பார்த்து..

ஏனோ அவன் நின்ற விதம் நித்யாவின் மனதை நிறைத்தது.. பதில் கூற முடியாமல் அப்படியே நின்று விட்டாள்..

அவள் முன் தன் விரல்களால் சுடக்கு போட்டு “ மல்லி மேடம்.. என்னை ரசிக்கிறது எல்லாம் உங்களுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு.. இப்ப நான் கேட்டதற்கு பதில் சொல்லு “ என்று கூறவும் தான் தன்னிலை பெற்றால்..

அவன் முன் அவள் பதில் கூற முடியாமல் நிற்பதே நித்யாவிற்கு பிடிக்கவில்லை.. “ ஹலோ!! இப்ப எதுக்கு வழிய மறைச்சு பேசுறிங்க.. காலையில இருந்து நானும் பார்க்கிறேன்.. நீங்க கொஞ்சம் கூட சரியே இல்லை.. ” என்று பொரிந்து தள்ளினாள்..

ஆனால் இதற்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல அதே இடத்தில ஆடாமல் அசையாமல் நின்றான் விபு.. “ ஓ !! அப்போ காலையில் இருந்து நீ என்னை தான் பார்த்துகிட்டு இருந்தாயா  மல்லி ?? “ என்ற கேள்வியோடு..

ஒரு பெரிய மூச்சை இழுத்துவிட்டு தன் கோபத்தை அடக்கியவள் “ இங்க பாருங்க விபுவரதன்.. இன்னைக்கு தான் நாம பேசுறது கடைசி.. சோ என்னைய திட்ட வைக்காதிங்க.. சரியா ?? ” என்றாள் தன்மையாக.

அவள் எண்ணியது எல்லாம் இன்றோடு இந்த வீட்டின் வேலை எல்லாம் முடிந்தது.. ஆர்டரும் முடிந்தது.. இனி இவனை பார்க்க போவது இல்லை.. பேச போவது இல்ல என்று தான்.. ஆனால் இந்த எண்ணமே நித்யாவிற்கு மனதில் ஒரு கவலையை தந்தது..

“ ஏன் ஏன்.. இன்னைகோட உலகமே அழிய போகுதா என்ன ?? ஏன் நாம பேச முடியாது ?? அப்புறம் உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா மல்லி, உங்க ஏரியால ஒரு பெரிய ஷாபிங் காம்ப்ளக்ஸ் வர போகுதே.. அதை கட்டுறதே என் கட்டுமான கம்பனி தான்.. சோ இனிமே தினமும் இந்த பக்கம் நான் வருவேன் “ என்று கூறி சிரித்தான்..

அவனது பதிலில் நிம்மதி அடைந்தாலும் அதை வெளிக்காட்டாமல் முறைத்தபடி சமையல் அறை பக்கம் சென்றாள்.. அவள் செல்வதற்குள் ஆட்கள் அணைத்து சாப்பாட்டு பாத்திரங்களையும் இறக்கி வைத்து இருந்தனர்..

அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வெளியே வந்தவள் அங்கு விபு அலைபேசியில் பேசியபடி நடந்து வருவது கண்ணில் பட்டது.. “ இவன் வரும் வழியில் நான் போக கூடாது “ என்று எண்ணியவளுக்கு ஒன்று மனதில் உரைத்தது.

அவன் நடந்து வரும் வழியில் கம்பி ஒன்று நீட்டிகொண்டு இருந்தது.. அவன் அதை கவனித்தது போல தெரியவில்லை.. அவன் வருவதை ஒரு நிமிடம் நின்று கவனித்தாள்..

விபுவோ தனக்காக தான் அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் என்று தவறாக நினைத்து கொண்டு வேகமாக பேசியபடி வந்தான்.. அவன் கண்ணுக்கு சுத்தமாக அவனது மல்லியை தவிர வேறு எதுவும் தெரியவில்லை..

அவன் ஒரு அடி முன்னே எடுத்து வைத்து இருந்தால் நீடிகொண்டு இருந்த அந்த இரும்பு கம்பி அவனது தோள்களில் குத்தி இருக்கும்.. “ விபா.. பார்த்து “ என்று கூறியபடி அவனை வேகமாக தன் பக்கம் இழுத்து நிறுத்தி விட்டாள் நித்யா..

அவளது விபா என்ற அழைப்பு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.. விபுவோ முகமெல்லாம் புன்னகையாக மனமெல்லாம் மகிழ்ச்சியாக அவளை பார்த்து நின்று கொண்டு இருந்தான்..

அவளோ இவன் என்னவென்று கேட்டால் தான் என்ன பதில் கூறுவது என்று தவித்து கொண்டு இருந்தாள்..

இவர்களது காதல் நாடகத்தை அங்கு அனைவரும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்..

                   மனம் – மயக்கும்         

                         

                 

                                                               

Advertisement