மனம் – 3

 “அப்பா அப்பா… அம்மா அப்பா எங்க ??”  என்று வேகமாக  கேட்டபடி வீட்டினுள் நுழைந்தான் விபுவரதன்..

“ என்ன ராஜா?? வீட்டுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடியே அப்பாவ கேட்டுட்டு வர ?? ஏன் டா விபு ஏதும் பிரச்சனையா ?? ” என்று சற்றே பதற்றமாக கேட்டார் வேதவிநாயகி…

அதற்கு விபு பதில் கூறும்முன்னே அவனது தங்கை தேவசேனா அங்கே வந்து “ நல்ல பாருங்கமா உங்க பையன் யாரையாது கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்து இருக்க போறான்.. எதுக்கும் அவனுக்கு பின்னால யாராது மறைஞ்சு நிக்கிறாங்களான்னு பாருங்க  மா “ என்றாள் கிண்டலாக..

“ தேவி “ என்று தன் அன்னை முறைக்கவும்..” சரி சரி நான் எதுவும் பேசல “ என்று கைகட்டி வாய்பொத்தி சைகை செய்த தன் தங்கையை பார்க்க சிரிப்பு தான் வந்தது..

ஆனாலும் தன்னை வம்பிளுப்பவளை வெறுமெனே விடுவதா என்று எண்ணிய விபு தன் முகத்தை கொஞ்சம் இறுக்கமாக மாற்றி “ ஆமா மா ரொம்ப முக்கியமான விஷயம்.. அதும் நம்ம தேவிய பத்தி “ என்று தன் தாயை கூர்ந்து பார்த்து கூறினான்..

அவனது அந்த ஒற்றை பார்வையில் வேதா புரிந்து கொண்டார்.. சரி மகன் தன் மகளிடம் எதுவோ விளையாடி பார்க்க போகிறான் என்று.

அவரும் மனதிற்குள் சிரித்தபடி “ என்ன விபு சொல்லுற?? தேவி பத்தியா ?? அதும் முக்கியமான விசயமா?? ஏன் கண்ணா இவ எதுவும் வெளிய போன இடத்துல எதா பிரச்சனையை இழுத்துட்டாலா ?? ” என்று தன் பங்கிற்கு எடுத்து குடுத்தார்..

 “ ஹ்ம்ம் நான் என்னமா சொல்ல .. அப்பாவும் இருந்தா கொஞ்சம் பிரச்சனைய சுலபமா பேசி தீக்கலாம்னு பாத்தேன்.. ஆனா உங்க கிட்ட இப்ப சொன்னா  நீங்க தான் டென்ஷன் ஆவிங்க “ என்று கூறி தன் முகத்தை சோகமாக வைத்துகொண்டான்..

இதை எல்லாம் பார்த்துகொண்டு இருந்த தேவசேனாவிற்கு தலையே சுற்றியது.. “ அண்ணன் என்ன சொல்லுறான் ?? அம்மா வேற நம்மள முறைகிறாங்க.. ஹ்ம்ம் நாம என்ன தப்பு பண்ணோம்..” என்று ஒரு நிமிடம் யோசித்தவள்..

“ ஹெலோ ஹெலோ .. முதல ரெண்டு பெரும் பேசுறதை நிறுத்துங்க.. என்ன என்னைய வச்சு எதா ப்ளே பண்ணலாம்னு நினைக்கிறிங்களா ?? ” என்று போட்டு வாங்கினாள்..

மனதிற்குள் தன் மகளின் புத்திசாலிதனத்தை மெச்சினாலும் “ என்ன தேவி இப்படி எல்லாம் பேச கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை நான் சொல்லி இருக்கேன்.. ஆமா சொல்லு வெளிய போனப்ப யாருகிட்ட என்ன பிரச்னை பண்ணிட்டு வந்து இருக்க ?? “  என்றார்

“ அம்மா ஏன் மா நீங்க வேற?? இந்த அண்ணன் ஏதோ பொய் சொல்லுறான்.. அதை நீங்களும் நம்பிக்கிட்டு.. அம்மா நிஜமா நான் எதுவுமே பண்ணல மா “ என்றாள் முகத்தை ஒரு முழத்திற்கு தூக்கி வைத்து..

“ எதுவும் பண்ணாமையா அண்ணன் வந்து சொல்லுறான்.. நீ சொல்லு விபு இவ என்ன பண்ணி வச்சு இருக்கா ?? ” என்றார் தன் மகனை பார்த்து..

“ ஏன் மா என்னைய பாத்து கேக்குறிங்க?? எல்லாம் பண்ணுன இவளுக்கு தெரியாதா ?? பாருங்க எவ்வளோ அமைதியா நிக்கிறான்னு.. அவகிட்ட கேளுங்க மா “ என்று மீண்டும் தன் தங்கையை கை காட்டினான்..

அவ்ளோதான் இதற்குமேல் பொறுமையாக இருந்தால் அவள் தேவசேனா இல்லையே “ டேய் அண்ணா .. இங்க பாரு நான் சும்மா தான் உன்னைய கிண்டல் பண்ணேன்.. அது.. அதுக்காக எல்லாம் என்னைய இப்படி அம்மாகிட்ட கோத்து விடாத என்ன.. நான் எதுவும் பண்ணலை. அது எனக்கு நல்லா தெரியும் “ என்று கூறிவிட்டு தரையை தொம் தொம்மென்று மிதித்து அங்கிருத்த சாய்விருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்..            

அவளது செய்கையில் மனம் இளகிய அண்ணனும் அன்னையும் ஒருவரை ஒருவர் பார்த்து பலமாக சிரித்துகொண்டனர்..   

அவர்களது சிரிப்பில் இருந்த அர்த்தத்தை புரிந்துகொண்ட தேவியும் “ நல்லா சிரிங்க.. ஏன் என்னைய பாக்குறிங்க ?? அம்மாவும் பையனும் இன்னும் நல்லா பல்லு சுளுக்குற அளவுக்கு சிரிங்க.. உங்களுக்கு இன்னிக்கு நான் தான் கிடைச்சேனா.. அப்பா வரட்டும் “ என்று முகத்தை திருப்பி அமர்ந்து கொண்டாள்..

“ என்ன விபு.. தேவி கோவிச்சுகிட்டா “ என்பது போல பார்த்தார் வேதா தன் மகனை.. “ பொறுங்கள் நான் பார்த்துகொள்கிறேன் “ என்பது போல் கண்ணசைத்துவிட்டு தன் தங்கையிடம் சென்று அமர்ந்தான்..

“தேவி… தேவி குட்டி “ என்று தன் தங்கையை கொஞ்சினான்..

அவளோ பதிலேதும் பேசாமல் “ ஹ்ம்ம் “ என்று முகத்தை இந்த புறம் திருப்பிகொண்டாள்..

“ என்ன டா அண்ணன் மேல கோவமா ?? நான் சும்மா உன்கிட்ட விளையாடுனேன் ” என்றான் தன் தங்கையின் முகம் பார்த்து..

“ அப்படி வா வழிக்கு “ என்று மனத்தில் நினைத்துகொண்டு “ ம்ம்.. சரி இப்ப அதுக்கு என்ன ?? ” என்றாள் இன்னும் கறாராக..  

“ என்ன தேவி நீ மட்டும் என்னைய வம்பிலுக்கலாம்.. நான் உன்னைய ஏதும் சொல்ல கூடாதா ?? என்றான் அப்பாவியாக..

ஆனால் இதற்கெல்லாம் நான் மசியமாட்டேன் என்பது போல பார்த்துவிட்டு “ ஹ்ம்ம் உனக்கு அம்மாவும் சப்போர்ட்டா ?? போங்க நான் ரெண்டு பேரு மேலையும் கோவமா தான் இருக்கேன்..” என்று கூறி அமைதியாக இருந்தாள்..

“ என்ன தேவி  இது நானும் அண்ணனும் உங்கிட்ட சும்மா தானே பேசுனோம். நீ எங்க கிட்ட வாயடிக்கிறது இல்லையா ?? ” என்றபடி தன் மகளிடம் வந்து அமர்ந்தார் வேதா.

யார் என்ன சொன்னாலும் நான் இப்படிதான் இருப்பேன் என்று அமைதியாக அமர்ந்து இருந்தவளை கண்ட விபு “ சரி சரி தேவி குட்டி நல்ல பொண்ணாம்.. தங்கமான பொண்ணாம்… இப்ப சிரிப்பாளாம்” என்று தங்கையை பார்த்து சிரித்தான்..

“பேசிகிட்டே இருக்கானே இன்னும் விசயத்துக்கு வரமாற்றானே “ என்று எண்ணியவள் “ ஹ்ம்ம் முடியாது போ “ என்று கூறினாள்..

அவனுக்கும் அவனது தங்கையை பற்றி தெரியும் தானே. “ இப்ப சமாதானம் ஆனா இந்த வாரம் நான் உன்னைய ஷாப்பிங் கூப்பிட்டு போவேன்.. இல்லாட்டி நீ  இப்படியே இரு “ என்று கூறி தன் ஓர கண்ணால் அவளை பார்த்தான்..

தன் பிள்ளைகள் இருவரும் வளர்ந்துவிட்டாலும் இன்னும் சிறுபிள்ளைகள் போல விளையாடுவதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார் வேதா.

“ இப்பதான் ஷாப்பிங்ன்னு  சொல்லி இருக்கான்.. இன்னும் கொஞ்சம் நம்ம பில்ட் அப் பண்ணனும் “ என்று மனதிற்குள் நினைத்துகொண்டு “ எனக்கு சிரிப்பு வரலை “ என்றாள் மெதுவாக.

“ சரி சிரிக்கவேணாம்.. இப்படி அமைதியா இருக்காத தேவி.. பேசவாது செய்யி.  நான் நீ கேக்குறது எல்லாம் வாங்கி தரேன் சரியா ??” என்று அவன் கூறவும்  தான் அவள் முகத்தில் பழைய சிரிப்பு வந்தது..

“ மகனே மாட்டுனியா” என்று எண்ணிக்கொண்டு “ ம்ம் சரி எதோ நீ இவ்வளோ கெஞ்சுரதுனால போனா போகுதுன்னு நான் சிரிக்கிறேன் “ என்று கூறி இ என்று இளித்தாள்..

“ சரியான வாலு ” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே அவர்களின் அப்பா அங்கு வந்து சேர்ந்தார்..

“ என்ன இங்க எல்லாரும் கூடி உக்காந்து பேசிகிட்டு இருக்கீங்க.. என்னைய மட்டும் விட்டிட்டு “ என்று அவர் பேசிக்கொண்டே வந்து தன் மகனிடம் அமர்ந்தார்..

உடனே வேதா “ ஆமாமா பேசிகிட்டு தான் இருந்தோம்.. பேருக்கு தான் இதுங்க ரெண்டும் வளந்து இருக்குதுங்க.. ஒன்னா வீட்டுல இருந்தா எனக்கு தான் டென்ஷன்.. காலாகாலத்துல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும் சொன்னா நீங்க கேக்குறதே இல்லை “ என்று சம்பந்தமே இல்லாமல் குண்டை தூக்கி போட்டார்..

இதென்ன புது கதை.. இத்தனை நேரம் அம்மா தங்களோடு பேசிக்கொண்டு நன்றாக தானே  இருந்தார்கள்.. இப்பொழுது என்ன திடீரென்று இப்படி பேசுகிறார்கள் என்பது போல திகைத்துப்போய் பார்த்தனர் இருவரும் தன் அன்னையை..

அவர்களது பார்வையின் கருத்தை புரிந்து கொண்டாலும் அதை கண்டுகொள்ளாது “ தேவிக்கு வயசு 23 முடியபோது, இவனுக்கும் 28ஆச்சு.. ஒன்னு வீட்டுக்கு முதல்ல ஒரு மருமகனையோ இல்ல ஒரு மருமகளையோ கொண்டு வாங்க அப்பதான் ரெண்டு பேருக்குமே கொஞ்சம் வாலு குறையும் “ என்று மெல்ல கூறி சிரித்தார்..

இதை கேட்டதும் “ அம்மா “ என்று இருவரும் ஒரே நேரத்தில் கோரஸ் பாடினர்..

ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை வேதா. மீண்டும் தன் வாதத்தை சந்திர வரதனிடம் கூறிக்கொண்டு இருந்தார்.. அவரும் அதற்கு எதுவோ பதில் கூறிக்கொண்டு இருந்தார்..

ஆனால் இதெல்லாம் விபு மற்றும் தேவியின் காதுகளில் விழவில்லை.. “ டேய் அண்ணா என்னடா இது இப்படி அம்மா திடீர்னு அந்தர் பல்டி அடிக்குறாங்க “ என்று தன் அண்ணனிடம் காதை கடித்தாள்..

“ ஆமா தேவி இதை நானும் எதிர்பாக்கல.. சரி விடு ஒரு அண்ணனா என் தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சிட்டு தான் அடுத்து எனக்குன்னு நான் சொல்லிடுறேன்.. நீ ஏதும் கவலை படாதா” என்று சந்தடி சாக்கில் அவன் தப்பிக்க பார்த்தான்..

அவனை ஒரு முறை முறைதவள் எதுவோ கூர வருமுன் விபுவின் போன் அடித்தது.. அனைவரின் பேச்சும் அத்தோடு தடைபட்டது..

“ ஹலோ.. ம்ம் சொல்லுடா.. எஸ்… எஸ்.. வீட்டுல தான் இருக்கேன்..”

……

“ இப்பதான் அப்பா வந்தாரு டா.. நான் தான் பேசிட்டு ஒரு நல்ல முடிவு சொல்லுறேன்னு சொன்னேன்ல”

…..

“ ஹ்ம்ம் சரி சரி… நான் ஒரு 15 நிமிசத்துல உனக்கு பதில் சொல்லுறேன் “ என்று கூறி போனை வைத்தான்..

“ என்ன விபு என்ன விஷயம் ??? அப்பா கிட்ட கேட்டு சொல்லறேன்னு சொன்ன ?? ” என்று கேட்டார் விபுவின் தந்தை..

“ அது ஒண்ணுமில்ல பா, என் பிரின்ட் ஒருத்தன் சினிமா இன்டஸ்ட்ரில  இருக்கான்.. அவங்க கம்பெனி எதோ சீரியல் எடுக்க போறங்களாம்.. சிட்டிக்கு வெளிய ஒரு தனி விடு வேணும் ஷூடிங்குன்னு சொன்னான்.. அதான் நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்கே.. உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன் பா “ என்றான்..

“ ஐ !!! சினிமா ஷூட்டிங்கா ?? அதும் நம்ம வீட்லையா ?? சூப்பர்.. அப்பா அப்பா சீக்கிரம் சரி சொல்லுங்க பா.. “ என்று குதூகலித்தாள் தேவி.. அவளது அன்னை அவளை அடக்குவது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு

“ என்னங்க அமைதியா இருக்கீங்க ?? விபு சொல்றான்ல..” என்று தன் கணவரின் முகம் பார்த்தார்.. விபுவும் தன் அப்பாவின் முகம் பார்த்தான்.

“எல்லாம் சரிதான் விபு.. ஆனா அந்த வீடு ரொம்ப நாலா பூட்டியே இருக்கு. அப்படியே நாம ஷூட்டிங்கு விட்டாலும் எல்லாம் அல்டெர் பண்ணி நல்லா குடுக்கனும்.. அதான் யோசிக்கிறேன்.. ”   என்றார் சந்திரவரதன் 

“ ஹ்ம்ம் ஆமா பா.. ஆனா எப்படி இருந்தாலும் ஒருநாள் நம்ம அந்த வேலை செஞ்சு தானே பா ஆகனும்.. இப்ப பண்ணிட்டோம்னா அவங்க திரும்பி நம்மகிட்ட கீ குடுக்கும் போது எல்லாம் சரி பண்ணி குடுத்துட சொல்லலாம்.. வீடுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது..” என்றான் விபு..

ஒரு நிமிட யோசனைக்கு பின் “ நீ சொல்லுறதும் சரிதான் விபு.. சும்மா கிடக்குற வீடுதானே.. எல்லாம் சுத்தம் பண்ணி சரி பண்ணி குடுத்துடலாம்.. ஆனா திரும்ப சாவி நம்மகிட்ட வரும்போது நாம எப்படி கொடுத்தோமோ அப்படியே வீடு இருக்கனும்.. அதை மட்டும் கண்டிப்பா சொல்லிடு “ என்றார் சந்திரன்..

“ ஹ்ம்ம் சரி பா.. நானும் அசோக்கும் இந்த வாரம் கடைசியில போயி அங்க என்ன என்ன பண்ணனும்னு பாத்துட்டு வந்துடுறோம்.. அக்ரீமென்ட் நம்ம வீட்டுல வச்சு போட்டுடலாம்..” என்றான் விபு..

“ சரி கண்ணா.. பாத்து பண்ணு.. எதுக்கும் எல்லாம் சரி பண்ணிட்டு அங்க ஒரு பூஜை போட்டு அதுக்கு அப்புறம் அவங்க கிட்ட சாவி குடுக்கலாம் “ என்று கூறி சென்றுவிட்டார்..

வேதாவும் தன் கணவரோடு பேசிக்கொண்டே சென்று விட்டார்.. தேவி மட்டும் அவனை முறைத்து கொண்டு நின்று இருந்தாள்..

“ ஹே !!! என்ன இப்படி முட்ட கண்ண வச்சு ஏன் என்னய முறைக்கிற ?? ” என்றான் விபு வரதன்..

“ பின்ன முறைக்காம?? கொஞ்ச நேரம் முன்னாடிதானே என்கிட்டே பெரிய இவன்னாட்டம் இந்த வாரம் கடைசியில ஷாப்பிங் கூட்டி போறேன்னு சொன்ன.. அதுக்குள்ள இப்ப என்னடான்னா நீ வேற ஏதோ பிளான் போடுற “ என்று எகிறினாள் அவனின் அன்பு தங்கை..

“ அடடா.. இருந்து இருந்து இவகிட்டையா மாட்டனும்” என்று மனதிற்குள் நொந்துகொண்டு “ ஓ !!! என் அன்பு தங்கச்சியே… சாரி மா.. நான் மறந்துட்டேன். இப்ப என்ன உனக்கு ஷாப்பிங் போகணும் அவ்வளோதனே நாளைக்கு கூட்டிட்டு போறேன். தயவு செஞ்சு இப்ப என்னைய விடு “ என்று கூறி வேகமாக ஓடாத குறையாக நடந்து சென்று விட்டான்.

“ ஹ்ம்ம் பையனுக்கு இன்னும் மனசுல என்கிட்டே பயம் இருக்கு “ என்று கூறிக்கொண்டே தன்னறைக்கு சென்றாள் தேவி..

மறுநாள் “ அம்மா அம்மா பாருங்க மா.. அண்ணன இன்னும் வரலை.. 5 மணிக்கு எல்லாம் வந்து என்னைய கூப்பிட்டு போறேன்னு சொன்னான்.. இப்ப மணி பாருங்க “ என்று கத்தி கொண்டு இருந்தவளின் காதை திருகி

“ மணி என்ன டி 5.5 தானே ஆகுது.. ஒரு 5 நிமிஷம் பொறுக்க முடியாதோ.. அங்க என் பிள்ளை கஷ்ட பட்டு சம்பாரிக்கிறது எல்லாம் நீ போயி அங்க தேச்சு தீக்கணும் “ என்று செல்லமாக கடிந்தார்..

“அப்போ நான் உங்க பிள்ளை இல்லையா ?? போங்க எனக்கு ஒன்னும் வேணாம்.. நான் வேலைக்கு போறேன்.. நானே சம்பாரிச்சு நானே செலவு பண்ணிக்கிறேன் “ அவளும் பதிலுக்கு தன் அன்னையிடம் வம்பிழுத்தாள்..

“ ஹேய் வாலு!! இன்னும் கிளம்பாம என்ன அங்க அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருக்க ?? சீக்கிரம் சீக்கிரம் “ என்று தன் தங்கையை அவசர படுத்திக்கொண்டே வந்தான் விபு..

“எல்லாம் நான் ரெடி தான்.. ஆமா ஏன் இவ்வளோ அவசர படுத்துற.. வேற யாரையும் ஷாப்பிங் கூட்டி போறதா வாக்கு குடுத்து இருக்கியா ?? ” என்று கேலி செய்தாள்..

இப்படிதான் இவர்கள் ஏதாவது பேசி கடைசியில் தன் தலையை உருட்டுவார்கள் என்று எண்ணி வேதா அங்கிருந்து நகர்ந்துவிட்டார்..

“அப்படியே நான் வேற யாரையாது கூட்டி போகனும்னாலும் தைரியமா முதல்ல வீட்டுக்கு தான் கூட்டி வருவேன் புரியுதா ?? ” என்று தன் புருவம் தூக்கினான்..

“ ஹ்ம்ம் நீ பண்ணுனாலும் பண்ணுவ “ என்று அவள் கூறவும் இருவரும் இப்படியே பேசியபடி கிளம்பி சென்றனர்..

“ தேவி நீ உள்ள போ நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன்.. யப்பா இவ்வளோ கூட்டமா இருக்கு “ என்று கூறி தன் தங்கையை ஷாப்பிங் மாலின் நுழைவு வாயிலில் இறக்கி விட்டு சென்றான்.

அவன் திரும்ப வரும் பொழுதும் தேவசேனா அதே இடத்தில் தான் நின்று இருந்தாள்.. ஆனால் உடன் வேறு யாரோ ஒரு பெண்ணும் நின்று பேசுவது போல இருந்தது..

 இதோ என் அண்ணன் வந்து கொண்டிருக்கிறான் என்று தேவி அவனை நோக்கி கை காட்டுவது தெரிந்தது அவனுக்கு.. ஆனால் இவன் அவர்களை நெருங்குவதற்குள்  அப்பெண் வேகமாக நகர்ந்து சென்றுவிட்டாள்..

அவனுக்கு ஏனோ இது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.. தன் உடன்பிறப்பிடம் வந்து “ என்ன தேவி யாரு அது ?? யாரு கூட பேசிட்டு இருந்த ?? ” என்று கேட்டான்..

“ அவளா னா.. அவ பேரு நித்யமல்லிகா.. எங்க காலேஜ் தான்.. ஆனா வேற டிபார்ட்மென்ட்.. செம ஸ்டுடென்ட் தெரியுமா ?? அவளை சுத்தி எப்பயும் ஒரு கூட்டமே இருக்கும்.. எந்த போட்டி நாலும் இவதான் முதல்ல நிப்பா… ஆனா இப்ப பாரு அப்படியே மாறி போயிட்டா “ என்று அவள் கூறுவது எதுவுமே விபுவின் மனதில் பதியவில்லை..

நித்யமல்லிகா என்ற பெயரை கேட்டதுமே என்னவோ அவனது இதயம் பந்தய குதிரை போல படபடவென்று ஓடியது..

“ மறுபடியும் இந்த பேரா ?? ஒருவேள அசோக் சொன்ன அவளும் இவளும் ஒண்ணா ??” என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே “ டேய் அண்ணா “ என்று தேவி அவனை உலுக்கினாள்..

“ என்ன இப்படி கனவு கண்டு நின்னுட்ட..” என்றாள்

“ ஹா !! என்ன டா என்ன சொன்ன ?? ” என்று அவன் வினவவும் அவனை முறைத்தபடி  மறுபடியும் முதலில் இருந்து கூறினாள்..

“ காலேஜ்ல எப்படி இருப்பா தெரியுமா னா ?? ஆனா இப்ப ஏன் இப்படி மாறி போயிட்டா தெரியல.. அழகா இருப்பானா… ஆனா இப்ப அவ டிரஸ், அவ போட்டு இருக்க கொண்டை.. அவ கண்ணாடி.. எல்லாமே அப்படியே தலைகீழ் மாற்றம்..  “ என்று புலம்பியபடி வரும் தங்கையை என்வென்று கூறி அவன் சமாதானம் செய்வான்..

முதலில் அவன் மனமே அவனது பேச்சை கேட்காமல் தவிக்கிறது.. அவள் யார் என்று கூட தெரியாது.. வெறும் பெயர் மட்டுமே தான் தெரியும். ஆனால் இந்த ஒற்றை பெயரே நம்மை இத்தனை பாடு படுத்தினால் அந்த பெயர் பெயர் கொண்டவளை நேரில் சந்தித்தால், பேசினால், பழகினால் என்று அவன் மனம் தறிகெட்டு ஓடியது..

தன் மனதை அடக்க எண்ணி “ அடடா விடு தேவி.. சந்தோசமா ஷாப்பிங் பண்ண வந்தோமா ?? இல்ல இப்படி புலம்ப வந்தோமா ??” என்று எதோ போல் முகத்தை வைத்து கூறியவனை ஆச்சரியமாக பார்த்தாள் அவனின் தங்கை..

இதற்குமுன் தன் அண்ணனை அவள் இப்படி ஒரு முக உணர்வோடு பார்த்தது இல்லை.. அவனையே ஒரு நொடி ஆராய்வது போல பார்த்தாள்.. பின் அமைதியாக இருந்துவிட்டாள்.. ஆனாலும் விபுவின் இந்த மாற்றம் அவளது மனதில் பதிந்து விட்டது..

“ என்னவோ இருக்கிறது “ என்று மட்டும் மனதிற்குள் கூறிக்கொண்டாள்..

இதை எல்லாம் அறியாத விபுவோ மனதிற்குள் “ நித்யமல்லிகா” என்ற பெயரை உறுப்போட்டபடி நடந்துகொண்டு இருந்தான்.