மனம் – 2

 “எப்பையும் எனக்கு மன தைரியத்தையும், எந்த பிரச்னை வந்தாலும் அதை எதிர்க்கொல்லுற மனத்திடத்தையும், எந்த சூழ்நிலையிலும் தளர்ந்து போகாத மனசையும் எனக்கு குடுங்க“

“எனக்கு பக்கபலமாவும், உருதுனையாவும் நீங்க தான் இருக்கனும்…” என்று தெய்வமாகி போய்விட்ட தன் தாய் தந்தையின் படத்திற்கு முன் கரம் குவித்து கண்கள் மூடி வேண்டி கொண்டு இருந்தாள் நித்யமல்லிகா..

பத்மநாபன் , லலிதா தம்பதியின் ஒரே மகள் தான் நித்யமல்லிகா.. சீராட்டி பாராட்டி வளர்த்த பெற்றோர் அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய சமயத்தில் இறைவனடி சேர்ந்து விட்டனர்..

நித்யமல்லிகா B.sc ஹோம் சயின்ஸ் படித்தவள்.. எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு தனித்துவம் இருக்கும்.. எப்பொழுதும் அவளிடம் ஒரு புன்னகை குடிகொண்டு இருக்கும்.. சந்தோசமாக கலகலவென்று இருப்பாள்.. ஆனால் இதெல்லாம் அவளது கடந்த காலம்..  

இன்று இருபத்தி மூன்று வயது இறுதியில் இருக்கும் அழகு மங்கை.. ஆனால் தன் அழகே தனக்கு ஆபத்தாய் முடியுமோ என்று அதை மறைக்க அணைத்து வழிகளையும் பின்பற்றுவாள்..

இந்த காலத்தில் இவள் வயது பெண்கள் எல்லாம் தன்னை அழகாக காட்டிகொள்ள கண்ணாடி முன் பல மணி நேரம் செலவு செய்தால், இவள் இருக்கும் அழகை எப்படி குறைத்து காட்டாலாம் என்று யோசித்து யோசித்து கண்ணாடி முன்பு நேரம் கழிப்பால்… அதற்கு காரணமும் இருந்தது..

அத்தனை சுலபத்தில் யாரும் அவளிடம் நெருங்கி பேசி விட முடியாது.. அத்தனை கடினம் அவள் பார்வையில் இருக்கும்..

ஆனால் பார்பவர் எல்லாம் எத்தனை சாந்தமான முகம், எத்தனை கம்பீரம், நடையில் ஒரு நிமிர்வு, பார்வையில் ஒரு ஒளி இந்த சிறு வயதில் இப்படி ஒரு பெண்ணா என்றே அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடுவாள் நித்யமல்லிகா…

அவள் சாதரணமாக பேசுவது மூன்றே நபரிடம் தான்.. முதலாவது பூபதி தாத்தா.. நித்யமல்லிகாவின் அப்பா காலத்தில் இருந்து அவளின் குடும்பத்திற்கு நல்ல பழக்கம்… இரண்டாவது தேனம்மா பாட்டி.. அவள் அன்னை வழியின் தூரத்து உறவு..

போக்கிடம் இல்லாமல் வந்தவருக்கு ஆதரித்து அரவணைத்து தன்னுடன் சேர்த்துகொண்டாள்.. மூன்றாவது அவளின் பெரியப்பா மகன் அசோக்..

உறவுகளில் இவள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் காட்டும் நபர் என்றால் அது அசோக் மட்டுமே.. ஆகையால் இவர்கள் மூவரிடம் மாட்டும் தான் தன் சுய ரூபத்தை காட்டுவாள்.. ஆனாலும் பெரும்பாலும் நத்தை தன் கூட்டிற்குள் சுருங்குவது போல சுருங்கி விடுவாள்..

அன்னை மெஸ்… இது அவளது தந்தையும் தாயும் ஆரம்பித்து நல்ல முறையில் நடத்தி வந்த சிறிய உணவகம்.. புறநகர் பகுதியில் இருந்தாலும் நல்ல லாபம் குடுத்தது..

இந்த அன்னை மெஸ்ஸில் தான் பூபதி தாத்தா கணக்கராக வேலை பார்த்தார்.. தேனம்மா பாட்டி வீட்டில் ஒத்தாசையாக இருப்பார்.. ஆனால் தன் அம்மா அப்பா மறைவிற்கு பின் அன்னை மெஸ்ஸில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன..

தன் விடா முயற்ச்சியாலும், கடின உழைப்பாலும் பல படிகள் முன்னேறினாள் நித்யமல்லிகா.. அதற்க்கு மிக உறுதுணையாக, உதவியாக பூபதி தாத்தாவும், தேனம்மா பாட்டியும் அவளுடன் இருந்தனர்..

காலை, இரவு இரு வேலைகளிலும்  சாதாரண உணவகம் போல இருக்கும்.. மதிய வேளைகளில் தான் அசுர வேகம் பிடிக்கும்.. சுமார் ஆயிரத்திற்கும்  மேல் உணவு பார்சல்கள் வெளியே செல்லும்..

சுற்றி இருக்கும் அலுவலகங்கள், கல்லூரிகள், என்று நிறைய தொழிற் கூடங்களுக்கு வண்டிகளில் உணவுகள் பறக்கும்.. இத்தனை முன்னேற்றமும் நித்யமல்லிகாவின் தனிப்பட்ட முயற்ச்சியில் வந்தது..                                           

அவளுக்கு தினம் தினம் சென்று நேரடி கொள்முதலில் பொருட்கள் வாங்குவது, ஆட்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வது, அன்று வந்த வருமானத்தை செலவு கணக்கு பார்த்து மீதியை வங்கியில் போடுவது என்று சரியாக வேலைகள் இருக்கும்..

நித்யா வெளியில் செல்லும் பொழுது உணவகத்தை பூபதி தாத்தா பார்த்துகொள்வார்.. தேனம்மா பாட்டி ஆட்கள் வேலை செய்யும் இடத்தில் நின்று மேற்பார்வை பார்ப்பார்..

தன்னிடம் வேலை பார்க்கும் ஆட்களிடம் அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாது அக்கறையை மட்டுமே வெளிகாட்டுவாள் நித்யா..

உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைப்பதாலும், எந்த நேரம் எந்த உதவி கேட்டாலும் அதை முகம் சுளிக்காமல் செய்து தருவதாலும், நித்யா மீது அனைவர்க்கும் நல்ல மதிப்பும், மரியாதையும் அதே நேரம் இந்த வயதில் இப்படி இந்த பெண் கஷ்டபடுகிறதே என்ற பரிதமும் தோன்றும்..

யாரிடமும் முகம் சுளித்து பேசமாட்டாள். பொறுமையாகவும், அதே சமயம் தன் வட்டத்தில் இருந்து வெளியே வராமலும் அனைவரிடமும் நன் மதிப்பை பெற்று இருப்பவள் நித்யமல்லிகா.  

ஆனால் தப்பி தவறி கூட யாரவது அவளை மல்லிகா என்று அழைத்தாலோ இல்லை மல்லி என்று அழைத்தாலோ அப்படியே ருத்ர தேவியாக மாறிவிடுவாள்..

“ ஜஸ்ட் கால் மீ நித்யா  “ என்று முகத்திற்கு நேரே பட்டென்று பேசிவிடுவாள்..             

காலை ஐந்து மணிக்கு விழித்து குளித்து, தன் தாய் தந்தை படத்திற்கு முன் நின்று வேண்டிக்கொண்டு கிளம்பினாள் என்றாள் அவளுக்கு சரியாக இருக்கும்..

அன்றும் அப்படிதான் உணவகம் கிளம்பி கொண்டு இருந்தாள்.. தேனம்மாவும் கிளம்பி நிற்பதை பார்த்து ” தேனு பாட்டி உங்கட்ட நான் எத்தன தடவ சொல்லுறது.. நீங்க கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க போதும்..” என்றாள் மென்மையாக..

“ இல்ல கண்ணு, வயசு பொண்ணு நீ இந்நேரத்துல தனியா இங்க இருந்து அங்க போகனுமா.. நானும் வரேன் “ என்று பிடிவாதமாக கிளம்பி நின்றார்..

இது இவர்களுக்குள் தினமும் நடக்கும் போராட்டம் தான்.. ஆனால் இருவருமே தன் கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டார்கள்..

“ஹ்ம்ம் ஒரு சந்து திரும்புனா நம்ம கடை வந்திடும்.. அதுக்கு நீங்க கூட வரணுமா.. நான் சொன்னா கேளுங்க ராத்திரியும் என்கூட லேட்டா தான் வீடு திரும்புரிங்க..” என்றாள் சிறு கண்டிப்புடன்..

“ உனக்கு துணையா இருக்குறத விட எனக்கு வேற என்ன வேல இருக்கு சொல்லு கண்ணு “ என்று வெள்ளந்தியாக சிரிக்கும் தேனு பாட்டியை இதற்குமேல் நித்யாவால் எதுவும் சொல்ல முடியாது..

அவள் ஒரு நொடி அமைதியாய் நிற்கும் பொழுதே “ சரி சரி வா கண்ணு, பால் காரன் வந்திடுவான் “ என்று கூறி ஆளுக்கு முன்னே வாசலில் இறங்கி நின்றுவிடுவார்..

“ யப்பா உங்களை திருத்தவே முடியாது தேனு பாட்டி” என்று சிரித்துக்கொண்டே அவளும் கிளம்புவாள்..

அந்த சிரிப்பு அதோடு முடிந்து விடும்… வேலை என்று வந்துவிட்டாள் தன் உணர்வுகளை கூட மறந்து விடுவாள்.. அன்று உண்டோமா என்று கூட தெரியாது.. பூபதி தாத்தாவும், தேனு பாட்டியும் தான் அவளை அரட்டி மிரட்டி உண்ண வைப்பார்கள்..

நித்யா எப்பொழுதும் தன் உடை விசயத்தில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பாள்.. ஒருநாள் வீட்டில் சேலை கட்டி இருந்தாள் அதை கண்ட தேனம்மா “ கண்ணு அப்படியே என் கண்ணே பட்டிடும்  போல இருக்கு.. தேவத மாதிரி இருக்க டி ராஜாத்தி” என்று கூறவும் அன்றிலிருந்து சேலைக்கு விடுமுறை விட்டாள்..

பருத்தி சுடிதார் தான்.. தன் நீல முடியை இறுக தூக்கி கொஞ்சம் தொங்கலாக கொண்டை போட்டு இருப்பாள்.. மீன் போன்ற கண்களை மறைக்க கூலர் அணிந்து கொள்வாள்…

இவளது இந்த கோலத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அவள் இல்லாத நேரத்தில் தேனம்மா பூதியிடம் புலம்பி தீர்ப்பார்..

“ என்ன அண்ணே இந்த பொண்ணு இப்படி இருக்கு.. நீங்களும் நானும் இருக்குற வரைக்கும் சரி.. சின்ன வயசுலேயே இத்தனை சோகத்தையும் தாங்கிட்டு இப்படி இறுகி போயி இருக்காளே.. யாருக்காக தான் இப்படி ஒடி ஓடி சம்பாரிக்கனும் “ என்று தன் மனக்குறையை கொட்டுவார்..

அதற்கு பூபதியோ “ என்ன பண்ண சொல்லுற தேனு.. நம்ம நித்யா இடத்துல இந்நேரம் வேற யாரவது இருந்தா அப்படியே நொடிஞ்சு போயிருப்பா. இல்ல தனக்குன்னு ஒரு வாழ்கைய அமைச்சுக்கிட்டு போயிருப்பா. ஆனா இந்த பொண்ணு..”

“ ஹ்ம்ம் எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் மா.. விடு நித்யாக்கு கண்டிப்பா நல்லதே தான் நடக்கும்” என்று ஆறுதல் கூறுவார்..

“ நல்லது கண்டிப்பா நடக்கணும் அண்ணே.. இல்லாட்டி அந்த சாமிக்கு கண்ணு இல்லாம போயிடும்.. இந்த சின்ன வயசுல இந்த பொண்ணு எத்தனைய தான் தாங்கும்.. “

“ஆண்டவா எங்க நித்யா வாழ்கைய ஏன் இப்படி பாலைவனமா மாத்திட்ட “ என்று பூபதியிடம் பேசியபடி ஆண்டவனிடம் முறையிட்டார்..

இதெல்லாம் நித்யா இல்லாத போது தான் இவர்களால் பேசிக்கொள்ள முடியும்.. அவள் முன்பு அவளது பழைய விஷயங்கள் பேசினால் அவளோதான் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு கடுமையாக வேலை பார்ப்பாள்..

ஒருவேளை தன்னை அந்த வேதனையில் இருந்து வெளிக்கொண்டு வர அப்படி செய்கிறாளா  ?? இல்லை மனம் சோர்ந்து விட கூடாது என்று அப்படி செய்கிறாளா ?? என்று யாருக்கும் புரியாது..

ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தாள் எந்த காரணத்தை கொண்டும் தன் பழைய நினைவுகள் தன்னை பாதித்து விட கூடாது என்று உறுதியாக இருந்தாள்.. அதன் வெளிபாடே அவளது தொழிலில் இத்தனை முன்னேற்றம்..

அன்றும் அப்படிதான் தேனம்மாவுடன் அன்னை மெஸ் சென்று இறங்கினாள்.. அவள் வரும் நேரத்திற்கு முன்னே பால்காரன் வந்து காத்துகொண்டு இருந்தான்..

அவனிடம் பேசி கணக்கு முடித்து அன்றைய காலை பொழுதிற்கான பால் வாங்கி  கடை திறக்கவும் பூபதி மாடியில் இருந்து இருங்கி வந்தார்..

அன்னை மெஸ்ஸின் மாடியில் தான் ஒரு அறை அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாள் நித்யா.. அவரது பிள்ளைகள் அனைவரும் வெளியூரில் இருப்பதால் அவரும் அங்கேயே தங்கிவிட்டார்.

அவரை காணவும் “ என்ன தாத்தா நீங்களும் இப்பயே முழிச்சு வந்துடிங்களா ?? உங்க ரெண்டு பேருக்கும் எத்தனை தடவ சொன்னாலும் புரியாது “ என்றாள் லேசான சலிப்புடன்..

அவரோ இது தினமும் நடக்கும் விசயம்தானே என்று “ ஹ்ம்ம் என்ன பண்ணுறது நித்யாமா மணி அடிச்சது மாதிரி முழிப்பு வந்துடுது..” என்று அவர் கூறி கொண்டு இருக்கும் பொழுதே வேளைக்கு ஆட்கள் வரவும் நித்யா தன் முகத்தை அப்படியே மாற்றி கொண்டாள்..

அதை கண்ட தேனம்மாவும் பூபதியும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்..

இப்படியே அன்னை மெஸ்ஸின் தினசரி வேலை தொடங்கியது.. மாதம் முதல் தேதி என்பதால் வங்கிக்கு கிளம்பி சென்று விட்டாள் நித்யா.. அவள் இல்லை என்று எண்ணி எப்பொழுதும் போல் தேனம்மா தன் மனக்குறையை பூபதியிடம் கொட்டிக்கொண்டு இருந்தார்.. 

கடைக்கு வாங்கவேண்டிய பொருட்கள் லிஸ்ட்டை எடுத்து செல்ல வந்தவள் அனைத்தயும் கேட்டுவிட்டு அமைதியாக அவர்களை பார்த்து கைகட்டி நின்றாள்..

அவளை கண்டதும் திகைத்த தேனம்மா “ ஹி ஹி .. என்ன கண்ணு இங்க நிக்கிற ?? நீ பேங்க் போகல ?? ” என்றார் மழுப்பலாக…

“ ஹ்ம்ம் நான் பேங்க் தான் போக போறேன் பாட்டி.. ஆனா தினமும் நான் இல்லாத சமயத்துல ரெண்டு பெரும் என்னைய பத்தி இப்படி தான் பேசுறிங்களா ?? ” என்றாள் அமைதியாக..

இதை கேட்ட இருவருமே பதறி விட்டனர். ” என்ன நித்யா மா இப்படி சொல்லுற ?? ” என்று கேட்டே விட்டார் பூபதி…

ஆனால் அவளோ லேசாக சிரித்து “ ஹ்ம்ம் சும்மா சொன்னேன் தாத்தா.. பாட்டி நீங்க டென்ஷன் ஆகாதிங்க.. ஆனா என்னைய பத்தி எல்லாம் தெருஞ்ச நீங்களே இப்படி பேசும் போது தான் கஷ்டமா இருக்கு “

“ உன்னைய பத்தி எல்லாம் தெரிஞ்ச நாலதானே நாங்க இப்படி பேசுறோம் கண்ணு.. ஊரு உலகத்துல நடக்காததா நடந்திடுச்சு ??? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா கண்ணு.. எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருப்ப ??” என்று கேட்டேவிட்டார் தேனம்மா..

“ ஹ்ம்ம் ஏன் பாட்டி நான் இப்படி இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா ?? நான் நல்லா தானே இருக்கேன்.. எனக்கென்ன குறை.. என் கூட நீங்க ரெண்டு பெரும் இருகிங்களே போதாதா ?? ” என்றாள் தன் தலையை சரித்து..

பூபதி “ அதான் மா எங்க பயமே.. இப்ப நாங்க ரெண்டு பெரும் உன்கூட இருக்கோம்.. எங்களுக்கு பிறகு உனக்கு கண்டிப்பா ஒரு துணை வேணும் நித்யாமா.. உங்க அப்பா அம்மா உயிரோட இருந்தா இந்நேரம் உன்னைய இப்படி விட்டு இருப்பாங்களா ?? ” என்றார்..

அவளோ ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு “ அதான் இப்ப இல்லையே தாத்தா.. ரெண்டு பெரும் தான் உயிரோட இல்லையே.. அதுனால இனிமே இது பத்தி நாம பேசவேணாம்.. நீங்களும் என்னைய பத்தி கவலை படவேணாம்.. நான் நல்லா தான் இருக்கேன் ” என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே

தேனம்மா எதுவோ கூற வரவும் “ பொறுங்க பாட்டி நான் இன்னும் பேசி முடிக்கலை.. உங்க ரெண்டு பேருக்கும் என்மேல எவ்வளோ அக்கறை பாசம் இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும்.. நான் இப்படி தான் பாட்டி இருக்க போறேன்.”

உங்களுக்கு அப்புறம் யாரு இருக்கானுலாம் கேள்வி கேக்காதிங்க.. ஏனா உலகத்துல யாருமே இல்லாதவங்க கூட நிறைய பேரு இருகாங்க.. அதுனால இனிமே இப்படி எல்லாம் பேசி என்னைய பலவீன படுத்தாதிங்க பாட்டி.. தாத்தா இது உங்களுக்கும் தான்.. ”    

“ தயவு செஞ்சு என் மனச மாத்த முயற்ச்சி பண்ணவேணாம்.. நான் மாறப்போறது இல்லை. எனக்கு இந்த வாழ்க்கையே போதும்.. நீங்களும் மனச போட்டு குழப்பாம இருங்க.. சரியா “ என்று கூறிவிட்டு அவர்கள் பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டாள்..

இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்று இருந்தனர்.. ஒரு சிறு இடைவேளை விட்டு “ என்ன அண்ணே இந்த பொண்ணு இப்படி பேசிட்டு போகுது… நான் கூட கொஞ்சம் கொஞ்சமா பேசி மனச மாதிடலாம்ன்னு நினைச்சேன் “ என்று பெருமூச்சு விட்டார் தேனம்மா..

அதை ஆமோதிப்பவர் போல “ ஆமா தேனு நான் கூட இத்தனை நாளா அவங்க அப்பா அம்மா இல்லன்னு தான் இவ இப்படி இருக்கான்னு நெனச்சேன்.. ஆனா இந்த பொண்ணு மனசுக்குள்ள எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் இப்படி இருக்கு போல..” என்றார் பூபதி..

 

 

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே யாரோ அழைக்கும் சத்தம் கேட்கவும் இருவரும் வேலையே பார்க்க சென்றனர்.. ஆனாலும் அவர்கள் மனதில் நித்யாவை பற்றிய கவலை அதிகரித்து கொண்டே தான் இருந்தது.. 

ஆனால் நித்யாவிற்கு தெரியவில்லை தன்னோடு சேர்த்து தன் வாழ்க்கையே மாறப்போகிறது என்று.. அதுவும் கூடிய விரைவில் மாறப்போகிறது என்று..