Advertisement

“ யெஸ் மல்லி.. நான் முடிவு பண்ணிட்டேன்.. கண்டிப்பா குறிச்ச தேதியில் இன்னும் ஒரு வாரத்துல நம்ம கல்யாணம் நடக்கும்.. எங்க வீட்டுல எல்லா வேலையும் ஆரம்பிச்சுட்டாங்க.. இப்பதான் உன் அண்ணனுக்கும் போன் பண்ணி சொல்லிட்டு வந்தேன்.. “

இம்முறை அவள் அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்தாள்.. ஆனால் எதுவும் கூறவில்லை.. அவளது முக மாற்றங்களை அவனும் மனதில் குறித்து கொண்டான்..

“ உன் பயம் தெளியும் மல்லி.. நான் தெளிய வைப்பேன்.. கண்டிப்பா நம்ம ரொம்ப வருசத்துக்கு நல்லா வாழுவோம்.. உன் மனசும் மாறும் மல்லி.. அதுக்காக நான் உன்னைய எதற்கும் கட்டாய படுத்த மாட்டேன்..”

“ நீயா என்னைக்கு உன் பயம், தயக்கம் எல்லாம் தெளிந்து என்னைய முழு மனசோட ஏத்துக்கிறையோ அன்னைக்கு நம்ம எல்லா புருஷன் பொண்டாட்டி போலவும் வாழலாம்.. என்னடா இப்படி சொல்லிட்டு கல்யாணம் நடக்கும் சொல்றானேன்னு பாக்குறியா ??”

“ அது என் மனசு திருப்திக்கு.. நம்ம வீட்டு பெரியவங்க மனசு நிம்மதிக்கு.. உனக்கு இதில் விருப்பம் இல்லைன்னு உன்னால சொல்ல முடியாது.. உனக்கு இருக்கிறது பயம் தான் அது தெளியனும்னா கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கனும் மல்லி”  என்றான் உறுதியாக..

அவனது குரலே நான் சொன்னதை செய்வேன் என்று அவளுக்கு உணர்த்தியது.. அவன் தன்னிடம் சிறு குழந்தைக்கு எடுத்து சொல்வது போல பேசுவதே நித்யாவிற்கு மனம் வலித்தது..

உதட்டை கடித்தபடி தலை குனிந்து அமைதியாக நின்றாள்.. அவளை தன் தோளில் சாய்த்து கொண்டு “ என்ன டா ?? என்ன மல்லி.. ஏதாவது பதில் பேசு..”

“நீ.. நீங்க.. இப்படி என்கிட்டே கெஞ்சுறதே எனக்கு கஷ்டமா இருக்கு விபா.. எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா நான் உங்களை விட்டு விலகி போகணும்னு.. ஆனா என் மனசு ஒவ்வொரு விசயத்தையும் நினைச்சு பார்க்கும் பொழுது வாழ்க்கை மேல நம்பிக்கையே வரலை விபா.. நான் என்ன செய்ய..?? ”

“ நீ எதுவும் செய்ய வேண்டாம்.. சந்தோசமா நல்ல பொண்ணா கல்யாணத்துக்கு தயாராகு.. மத்த எல்லா விசயத்தையும் நான் பார்த்துக்கிறேன்.. நீ எதுவும் தலையில் போட்டு குழப்பாத.. “

“ நல்லா கேட்டுக்கோ மல்லி.. நீ என் நல்லதுக்காக விலக நினைக்கிற.. அதுவும் எனக்கு புரியுது.. ஆனா எனக்கு உன்கூட வாழுறதுதான் வாழ்க்கை டி.. எனக்கு நீ தான் வேணும்.. உன்கூட மட்டும் தான் என்னால முழு காதலோட வாழ முடியும் டி.. அது ஒரு நாளா இருந்தாலும் சரி ஒரு ஜென்மமா இருந்தாலும் சரி “ என்றான்.. இதை கூறும் பொழுது அவளது உடலில் ஒரு அதிர்வு ஓடியது.. அதை அவனும் உணர்ந்தான்..

“ ஆமா மல்லி.. நான் முடிவு பண்ணிட்டேன்.. சாவு மனுசனுக்கு எப்ப வேணாலும் வரும்.. ஏன் உலகத்துல 70 வயசு ஆளுங்களுக்கு மட்டும் தான் மரணம் வருதா ?? பொறு மல்லி அழுக ஆரம்பிக்காத.. நான் சொல்லுறது வாழ்க்கையோட நிதர்சனம்..”

“ பிறந்த குழந்தைக்கு கூட மரணம் வருது.. அதுக்கு எல்லாம் யார் காரணம்.. நமக்கு மேல கடவுள்னு ஒருத்தர் இருக்கார் மல்லி.. அவர் பார்த்துப்பார்.. அதை விட்டு நம்மலா எதா நினைச்சுகிட்டு இருக்க வாழ்கைய நம்ம கெடுத்துக்க கூடாது..”

“என்னைய பொறுத்த வரைக்கும் வாழ்ந்தாலும் செத்தாலும் அது உன் புருசனா தான் மல்லி.. இதுக்கு மேல நீதான் சொல்லணும் “ என்று தான் பேச வேண்டியது எல்லாம் பேசி முடித்து விட்டேன் என்பது போல அமைதியாக இருந்தான்..

மல்லி எதுவும் பேசவில்லை ஆனாலும் அவனது கைகளை பற்றியபடி விபுவின் தோள்களில் சாய்ந்து தான் இருந்தாள்.. அவள் மனதில் “ இவனுக்கு எப்படி இவ்வளோ பாசம்.. அதுவும் என்மேல.. இதுவரைக்கும் அவனை நான் சந்தோஷ படுத்துற மாதிரி எதுவுமே பண்ணது இல்லை.. ஆனா இவன் வாழ்கை முழுக்க என்கூடன்னு உறுதியா நிக்கிறானே.. கடவுளே நான் என்ன செய்யட்டும் ?? ” என்றும் இறைவனிடம் முடிவை கேட்டாள்..

“ ஹ்ம்ம் சரி மல்லி.. நான் சொல்லுறதை எல்லாம் சொல்லிட்டேன்.. இதுக்கு மேல உன் விருப்பம்.. ஆனா ஒன்னு நீ விலகி போயிட்டா கொஞ்ச நாள் அப்புறம் எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுப்பேன் அப்படி இப்படின்னு எல்லாம் நீயா கற்பனை பண்ண வேண்டாம் சரியா?? ஏன்னா எனக்கு எப்பயுமே இந்த நித்யமல்லிகா மட்டும் தான்.. என் மனசு முழுக்க இந்த மல்லியோட வாசம் மட்டும் தான்..”

“ சோ என்னைய விட்டு எப்படி விலகலாம்னு யோசிக்காம எப்படி நம்ம சேர்ந்து சந்தோசமா வாழலாம்ன்னு யோசி மல்லி “ என்று கூறி அவளது உச்சியில் தனது இதழ் பதித்து எழுந்து வெளியே வந்தான்..

அங்கே வெளியே ஹாலில் தேனு பாட்டி, தேவி , சிந்து என்ன ஆனதோ என்று காத்துகொண்டு இருந்தனர்.. விபு சிரித்த முகமாக தான் வெளியே வந்தான்..

“ டேய் அண்ணா அவகிட்ட பேசிட்டயா ?? என்ன சொன்னா ?? ” என்று சற்றே பதற்றமாக கேட்டால்தான் தேவி

“ எல்லாம் பேசியாச்சு.. மேடம் கொஞ்சம் யோசனையில் இருக்காங்க.. சோ நம்ம தொல்லை செய்யாம கிளம்பலாம்.. சாயங்காலம் நல்ல முடிவா சொல்லுவா.. வா எனக்கு நிறைய வேலை இருக்கு போயி மண்டபம் வேற பார்க்கணும்.. பாட்டி நீங்களும் உங்க சைடு பார்க்க வேண்டிய வேலை எல்லாம் ஆரம்பிங்க  “ என்று சந்தோசமாக கூறிவிட்டு தேவியையும் சிந்துவையும் அழைத்துக்கொண்டு சென்றான்..

தேனு பாட்டிக்கு இப்பொழுது தான் மனம் நிம்மதி அடைந்தது.. உடனே அசோக்கிற்கும் , பூபதிக்கும் போன் செய்து பேசினார்..

சிந்துவிற்கோ மனம் இருப்பு கொள்ளவில்லை..  “ இவனை யாரு இப்ப நித்யா வீட்டுக்கு வர சொன்னது.. ஐயோ என்ன பேசுனான்னு தெரியல.. அவ வேற என்ன சொல்ல போறாளோ.. நான் பேசி அவ மனசை கொஞ்சம் குழப்பி விடலாம்ன்னு பார்த்தா என்னைய பேசவே அண்ணனும் தங்கையும் விடலை..” என்று மனதிற்குள் திட்டி தீர்த்தாள்..

“ ஆண்டவா எனக்கு எப்படியாவது இந்த V.S க்ரூப்ஸ் ஓட ஷேர்ஸ் வேண்டும்.. எனக்கும் அதில் ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்.. அதுக்கு நான் நினைச்சது நடக்கணும்.. சோ விபுக்கு இந்த நித்யாக்கும் கல்யாணம் இப்ப நடக்க கூடாது.. என் வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு ரெண்டு பேரும் என்னவோ செய்யட்டும் “ என்று யோசித்தவள்

“ விபு என்னை அந்த எண்டுல கொஞ்சம் இறக்கி விடுங்க.. கொஞ்சம் வேலை இருக்கு “ என்றாள்..

அவனோ “ என்ன சிந்து இப்ப எல்லாம் உனக்கு வெளிய தான் வேலை நிறைய இருக்கு போல.. இப்படி ஊரு சுத்த தான் கம்பெனிய மறுபடி அப்பா கிட்ட குடுத்தியா என்ன ?? ” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு வண்டியை நிறுத்தினான்..

அவளும் “ தேங்க்ஸ் “ என்று கூறிவிட்டு இறங்கி சென்றுவிட்டாள்.. அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்த தேவி “ அண்ணா இந்த சிந்து கொஞ்சம் கூட இப்ப முன்ன மாதிரி இல்ல.. அடிகடி வெளிய போறா.. கேட்டா பிரண்ட்ஸ் பாக்க போறேன்னு சொல்லுறா..”

“ இங்க அவளுக்கு யாரு அப்படி க்ளோஸ் பிரன்ட்ன்னு தெரியல.. நான் கேட்டதுக்கும் சரியான பதில் சொல்லல.. அதுவும் இல்லாம அடிகடி ரொம்ப யோசிக்கிறா.. அப்புறம் யாரு யாருக்கோ போன் செஞ்சு பேசுறா.. கேட்டா பாரின்ல இருக்க பிரண்ட்ஸ் கூட பேசுனேன்னு சொல்லுறா..”

“ எனக்கு என்னவோ இவளை நினைச்சா மனசே சரியில்ல அண்ணா.. அம்மானால ஒரு அளவுக்கு மேல சொல்ல முடியல.. “ என்றாள் தன் அண்ணனிடம்..

விபுவிற்கு தெரியும் தன் தங்கை ஒரு விஷயம் கூறுகிறாள் என்றால் அது சரியாக இருக்கும் என்று.. அவள் கூறுவது அனைத்தயும் பொறுமையாக கேட்டவன் “ ஹ்ம்ம் இது பத்தி நான் அப்பாகிட்ட பேசுறேன் தேவி.. நீ எதுவும் மனசுல போட்டு வொர்ரி பண்ணாத.. முதல்ல என் பிரச்னை கொஞ்சம் முடியட்டும் “ என்று கூறவும் அவளும் சரி என்று தலையை ஆட்டினாள்..

ஆனால் பாவம் விபுவிற்கு தெரியவில்லை.. தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணமே இந்த சிந்து தான் என்று.. அவன் கவலை எல்லாம் தேவை இல்லாமல் இவள் வேறு எதாவது வம்பில் மாட்டி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தான்..

நித்யாவின் பிறந்த நாள் அன்று நடந்த எந்த சம்பவத்தையும் விபு தன் அன்னையிடம் கூறவில்லை.. ஆனால் தன் தந்தையிடம் கூறிவிட்டான்.. எதற்கு வீட்டில் கூறி தேவை இல்லாமல் தன் தாய் மனதை குழப்ப வேண்டும் என்று எண்ணினான்.. ஆனால் சிந்து இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டாள்..

ஒன்றும் தெரியவதவள் போல அனைத்தையும் வேதாவிடம் கூறிவிட்டு அமைதியாக இருந்து கொண்டாள்..

இரவு விபு வரவும் அனைவரும் அமர்ந்து திருமண வேலைகள் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.. வேதா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.. சந்திரவரதன் “ உன் அம்மாவிடம் பேசு “ என்று தன் மகனுக்கு ஜாடை காட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்.

விபுவும் மெல்ல எழுந்து தன் தாயின் அருகில் அமர்ந்து “ அப்புறம் அம்மா.. என்ன அமைதியா இருக்க ??? இப்பவே உங்க முகத்தில் மாமியார் கலை வந்திடுச்சு.. ஹ்ம்ம் எங்களுக்கு ட்ரீட் எல்லாம் எதுவும் கிடையாதா மா..” என்றான் கிண்டலாக..

அவர் பதில் பேசாமல் முறைக்க மட்டும் தான் செய்தார்..” ட்ரீட்டா எதுக்கு அண்ணா அம்மாகிட்ட போயி கேட்கிற?? ” என்று எடுத்து குடுத்தாள் தேவி..

“ அது ஒண்ணுமில்ல தேவி குட்டி.. உள்ளதுலேயே பெரிய அதிகாரம் கொண்ட விஷயம் என்னனா மாமியார் ஆகுறது தான்.. அதான் நம்ம அம்மா ஆக போறாங்க.. அதுக்கு தான் ட்ரீட் கேட்டேன்..” என்று கூறவும் வேதாவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.. ஆனாலும் அடக்கி கொண்டார்..

அதை கவனித்த விபு “ அம்மா இப்ப என்ன நடந்திடுசுன்னு இப்படி இருக்கீங்க ??? ஏன் மா என் மேல எதுவும் கோவமா ??” என்றான் பரிதாபமாக..

அவனது முகத்தையே இரண்டு நிமிடம் பார்த்த வேதா “ கோவம் எல்லாம் இல்லை விபு.. ஆனா என் மகன் என்கிட்டே எந்த ஒரு விசயத்தையும் மறைக்க மாட்டான்னு நினைச்சேன்.. இப்ப அது பொய்யாகவும் மனசு ரொம்ப வருத்தமா இருக்கு “ என்றார் வேதனை நிரம்பிய குரலில்..

விபுவரதனுக்கு புரிந்து விட்டது.. தன் தங்கையை பார்த்து முறைத்தான்.. அவள்  “ நான் எதுவும் கூறவில்லை “ என்பது போல தலையை அசைத்தாள்.. அடுத்து சிந்துவை பார்த்தான் அவளோ தன் பார்வையை வேறு எங்கோ பதித்து இருந்தாள்.. அவனுக்கு புரிந்து விட்டது.. இது சிந்துவின் வேலை என்று.. ஆனாலும் முதலில் தன் தாயை சரி செய்ய வேண்டுமே..

“ அம்மா ப்ளீஸ் வருத்தபடாதிங்க.. நான் உங்க கிட்ட மறைக்கனும்னு நினைக்கல ஆனா உங்களை ஏன் தேவை இல்லாம டென்சன் பண்ணிக்கிட்டுன்னு தான் எதுவும் சொல்லல.. உங்களுக்கு தெரியுமே மா பிசினஸ் பண்ணறதுன்னா சும்மாவா.. இது போல எத்தனையோ நடக்குமே “ என்று கூறி அவரது மடியில் தலை சாய்த்து கொண்டான்..

சிந்துவிற்கோ உள்ளே படக் படக் என்றது.. அவள் மனம் எல்லாம் வேதா நடந்த இந்த விபத்திற்கு நித்யாவின் ராசி தான் காரணம் என்று கூறி இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் குறைந்த பட்சம் இந்த திருமணத்தை தள்ளியாவது போட வேண்டும் என்று எண்ணினாள்..

அவர் அப்படி கூற வேண்டும் என்று தானே அனைவரும் வீட்டிற்கு வரும் முன்னே இவள் வந்து நல்ல பிள்ளை போல அழுது அவரிடம் அன்பொழுக நடந்த விஷயங்கள் அனைத்தையும் கொளுத்தி போட்டாள்..

ஆனால் அவள் கூறும் அனைத்தையும் கேட்டுவிட்டு வேதா பதிலே கூறாமல் சென்றது தான் அவள் மனதில் இன்னும் உறுதி கொண்டு இருந்தது.. தன் காதுகளை நன்றாக தீட்டி கொண்டு இருந்தாள் வேதா என்ன கூற போகிறார் என்று கேட்க..

” நீ சொல்லுறது எல்லாம் சரி விபு.. இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்.. பார்த்து நடந்துக்க வேண்டாமா ?? நித்யாவுக்கு எதா ஆயிருந்தா என்ன பண்ண முடியும்.. ஹ்ம்ம் என் மருமக எந்த குறையும் இல்லாம இந்த வீட்டுக்கு வரணும்டா.. பார்த்து செய் எது செய்றதுனாலும் “ என்று தன் மகனுக்கு அறிவுரை கூறினார்..

விபுவிற்கு இப்பொழுது தான் இயல்பாக மூச்சு விட முடிந்தது.. அவனுக்குமே உள்ளே ஒரு பயம் தான் எங்கே வேதா வேறு ஏதாவது முடிவு எடுத்து விடுவாரோ என்று.. ஆனால் அவர் இப்படி கூறவும் அவரை கட்டி அணைத்து “ தேங்க்ஸ் அம்மா.. நீங்க இருக்க வரைக்கும் எனக்கு எந்த கவலையும் இல்லை “ என்று கூறி அவரது முகத்தில் ஒரு முத்தத்தை பதித்து தன் அறைக்கு வேகமாக சந்தோசமாக படி ஏறி சென்றான்..

இந்த முறையும் சிந்துவிற்கு பெருத்த ஏமாற்றமே..” ச்சே என்ன இந்த ஆன்ட்டி.. நான் அவ்வளோ சொல்லியும் இப்படி பண்ணிட்டாங்க.. கொஞ்சம் கூட மகன் வாழ்கை மேல அக்கறையே இல்லை போலவே..”

“ நான் சொல்லும் போது அப்படி கேட்டாங்க இப்ப என்னடான்னா மகன் கிட்ட இப்படி இளிக்கிறாங்க.. இப்படின்னு தெரிஞ்சு இருந்தா இன்னும் பெருசா வேற ஏதா பண்ணி இருப்பேனே “

“ லாரிகாரன் அப்பையே கேட்டான் லேசா கார இடிக்கிறேன்னு.. நான் தான் வேணாம் இடிக்கிற மாதிரி போ போதும்ன்னு சொல்லி காரியத்தை கெடுத்துட்டேன்.. எல்லாம் என் தப்பு “ என்று தனக்குள்ளே தன்னை திட்டியவள்

“ அந்த பின்னால வந்த கார் காரன் யாரு ?? நான் எதுவும் ஏற்பாடு செய்யலையே.. யார் கார் அது.. அதை வேற கண்டு பிடிக்கணுமே “ என்று எண்ணியபடி உறங்க சென்றாள்…

அங்கே நித்யாவிற்கோ விபு கூறிய வார்த்தைகள் தான் காதில் ரீங்காரம் அடித்து கொண்டு இருந்தன.. “ நைட் போன் பண்ண சொல்லிட்டு போயிட்டான்.. ஆனா போன் செஞ்சு என்ன சொல்ல ?? “

“ இவன் வேற எதையாவது பேசி பேசியே என் மனசை அவன் இஷ்டத்துக்கு மாத்திட்டு போயிடுறான்.. நான் கிடந்தது இப்படி தவிக்க வேண்டியதா இருக்கு.. எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன ?? ஆனா என் மனசு முழுக்க பயம் இருக்கே நான் என்ன செய்ய ??” என்று யோசித்து கொண்டு இருந்தவளின் கைகள் தானாக விபுவின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தது..

                       மனம் – மயக்கும்

                                          

Advertisement