Advertisement

மனம் – 12

 “ விபா என்ன இது ?? அங்க எல்லாரும் இருக்கும் பொழுது என்னைய மட்டும் எங்க கூட்டிட்டு போறீங்க ?? இது கொஞ்சம் கூட சரியே இல்லை.. என்ன நினைப்பாங்க நம்மல  பத்தி  “ என்று புலம்பியது நித்யமல்லிகா தான்..

ஆனால் அதை எல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் சந்தோசமாக விசில் அடித்தபடி கார் ஓட்டி கொண்டு இருந்தான் விபு வரதன்…  

அவனை பார்த்தால் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் கோவமாகவே பேசி கொண்டு இருந்தாள் நித்யா.. அதற்கு காரணமும் இருந்தது.. முதல காரணமும் அவளிடம் அவன் பெற்றோர்களின் திருமண நாள் என்று பொய் கூறியது..

இரண்டாவது காரணம் இதோ இப்பொழுது எங்கு செல்கிறோம் என்றே கூறாமல் அனைவரின் முன்னும் இவளை தனியே இழுத்து கொண்டு வந்து இருக்கிறான்..

அவனோடு இருப்பது, அவனோடு பயணிப்பதும் மனதிற்குள் மழை சாரல் அடித்தாலும் வெளியே கோபக்கனலை மட்டுமே காட்டினாள் நித்யா.. ஆனால் இதெல்லாம் அவனுக்கு புரியாமலா இருக்கும்.. அதனால் தான் இவள் என்ன திட்டினாலும் காதில் வாங்காமல் வண்டி ஓட்டி கொண்டு இருக்கிறான்..

நித்யா முதலில் நினைத்தது என்னவோ “சரி பிறந்த நாள் பரிசு வாங்கி தர அழைத்து செல்கிறான்” என்று.. ஆனால் கார் நகர்புறம் நோக்கி செல்லாமல் வேறு வழியாக இருக்கவும் தான் இவள் மனம் குழம்பி தவித்தது..

“ அட்லீஸ்ட் எங்க போறம்னு சொல்லுங்களேன் “ என்றாள் கெஞ்சாத குறையாக.. அவளை பார்த்து முறைத்த விபு “ அட டா என்ன மல்லி இது வண்டி குள்ள ஏறியதுல இருந்து நோய்யி நோய்யின்னு பேசிகிட்டே வர.. கொஞ்ச நேரம் சும்மா வா ” என்று ஒரு அரட்டல் போட்டான்.   

ஏற்கனவே அவன் சொல்லாமல் அழைத்து வந்து விட்டான் என்ற கோவம் வேறு. இப்பொழுது இதுவும் சேர்ந்து முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து விட்டாள் மல்லி.. அவளை இரண்டு முறை திரும்பி பார்த்தவன் பிறகு ஒன்றும் சொல்லாமல் சாலையை நோக்கி வண்டியை செலுத்தினான்..

எத்தனை நேரம் தான் இருவரும் அமைதியாக இருப்பது.. “மல்லி” என்று அழைத்து பார்த்தான்.. அவளிடம் பதில் இல்லை.. மீண்டும் மல்லி என்று அழைத்தான்.. அவனை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்..

“ ம்ம்ஹும் இப்படி எல்லாம் இருந்தா இவளை வழிக்கு கொண்டு வரது ரொம்ப கஷ்டம் “ என்று எண்ணிய விபு வேகமாக காரை திருப்பி சாலையின் ஒதுக்கு புறமாக ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தினான்..

“ எதற்கு நிறுத்தினாய் “ என்பது போல பார்த்தாள் அவனை நித்யா.. அவனும் அவளை நேராக பார்த்தபடி கைகளை கட்டி அமர்ந்து கொண்டான்..

“ இப்ப எதுக்கு இப்படி பார்த்து வைக்கிறான்.. ச்சே வர வர இவன் அலும்பு ரொம்ப தாங்க முடியலை “ என்று எண்ணியவள் கதவை திறக்க முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை.. ரிமோட் கொண்டு அதை லாக் செய்து இருந்தான் விபு வரதன்..

“ம்ம்ச் என்ன விபா இது ?? ஏன் இப்படி நடந்துக்கறிங்க ?? பிரஸ்ட்  கார் கதவை திறங்க.. இப்ப ஏன் வண்டிய நிறுத்துனீங்க ?? ” என்று கேள்வியாக அடுக்கினாள்..

ஆனால் இது எதற்குமே அவனிடம் பதில் இல்லை.. கூலாக கார் ரெமொட்டை தூக்கி போட்டு கையில் பிடித்து கொண்டு இருந்தான்.. அவ்வளோதான் நித்யாவிற்கு மிச்சமிருந்த கொஞ்சம் பொறுமையும் பறந்தது..

“ விபா இப்ப பதில் பேச போறிங்களா இல்லையா ?? ” என்று கத்தியே விட்டாள்..

“ச்ஷ்.. யப்பா.. என்னா ரேஞ்சு… ஹ்ம்ம் ஸ்பீக்கர் ஏதா முழுங்கிட்டியா என்ன ?? ” என்று அவளை சீண்டினான் தன் காதுகளை தேய்த்து கொண்டே..

அவளுக்கு புரிந்தது இவன் சீண்டுகிறான் என்று.. ஆனால் எப்பொழுது பார்த்தாலும் சீண்டி கொண்டும் வம்பிழுத்து கொண்டும் இருப்பவனிடம் வேறு எப்படி தான் நடந்து கொள்வது..

அமைதியாக அமர்ந்து இருந்தாள் நித்யா.. “ ஹ்ம்ம் மல்லி உன்கிட்ட மனசு விட்டு பேச தான் உன்னைய நான் கூட்டிட்டு வந்தேன் “ என்றான் ஆழ்ந்த குரலில்..

“ அது எனக்கு தெரியாதா என்ன ??” என்று மனதிற்குள் நினைத்தவள் அவனை ஏறிட்டு பார்த்தாள்..

“ ஆமா மல்லி.. அங்க எல்லார் முன்னாடியும் உன்கிட்ட ப்ரீயா பேச முடியல அதான்.. “ என்று அவன் கூறி முடிக்கும் முன் “ அதுக்குன்னு அப்படியா இழுத்துகிட்டு வருவிங்க ?? ” என்று பதிலுக்கு சூடாக கேட்டாள் நித்யா..

நிஜமாகவே விபு அவளை இழுத்துக்கொண்டு தான் வந்து இருந்தான்.. கல்யாண பேச்சு எடுக்கவுமே நித்யா மௌனம் ஆகிவிட்டாள்.. என்னதான் மனதில் இன்னும் நெருடல் இருந்தாலும் அதை வெளி காட்டவில்லை..

விபு இத்தனை தூரம் தனக்காக தன் குடும்பத்தையே அழைத்து வந்தது, தன் பிறந்த நாள் கொண்டாடியது, இப்படி ஒவ்வொன்றும் தனக்காக அவன் பார்த்து பார்த்து செய்வதை எல்லாம் எண்ணி மௌனமாக இருந்துவிட்டாள்..

எதுவாக இருந்தாலும் விபுவிடம் தனியே பேசி கொள்ளலாம்.. “ என் மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் அதை எல்லாம் விபா மாத்திடுவான் “ என்று நம்பிக்கை கொண்டாள்..

அவன் மீது கொண்ட நம்பிக்கையால் அமைதியாக நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.. விபுவும் இவளிடம் பேசுவதற்கு என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் நித்யாவை நெருங்கும் பொழுது எல்லாம் யாராவது நந்தி போல குறுக்கே வந்து கொண்டு இருந்தனர்.. அதிலும் முக்கியமாக அவனின் தங்கை தேவியும் நித்யாவின் அண்ணன் அசோக்கும்..

அசோக்கை பார்த்து “ டேய் நீ எல்லாம் ஒரு பிரன்ட்டா டா.. ஏன் டா இப்படி நடுவுல வந்து என் உயிரை வாங்குற ?? இதுக்கு முன்னால நீ உன் தங்கச்சிய பார்த்தது இல்லையா ?? இல்ல பேசுனது இல்லையா ?? ஏன் டா எல்லாம் என் வழியில குறுக்க வரிங்க ?? ” என்று திட்டி தீர்த்தான்..

ஆனால் இதற்கெல்லாம் அசறுவானா அசோக் “ ஹி .. ஹி.. என்ன மாப்ள இவ்வளோ சூடா இருக்கீங்க ?? நான் வேணா ஜூஸ் குடுக்கவா ?? ” என்று மேலும் அவனை கடுபடித்தான்..

இது போதாது என்று தேவி வேறு “ ஹேய் அண்ணா?? என்ன இங்கயே பார்த்துகிட்டு நிக்கிற.. கொஞ்சம் கூட கல்யாண மாப்பிள்ளைன்னு வெட்கம் எல்லாம் இருக்கா ?? பாரு அண்ணிய எவ்வளோ அடக்க ஒடுக்கமா நடந்துக்கிறா.. ஆனா நீயும் இருக்கியே.. ச்சே “ என்று மேலும் அவனை போட்டு வாரினாள்..

இதை எல்லாம் கேட்ட நித்யா அடக்க முடியாமல் சிரித்தாள்.. விபு மனதில் அதை பார்த்து இன்னும் கடுப்பானான் “ சிரி டி.. சிரி… நல்லா சிரி.. சுத்தி உனக்கு எல்லாம் சப்போர்ட் பான்றாங்கன்னு தானே இப்படி சிரிக்கிற.. யாருமே இல்லாத இடத்துக்கு உன்னைய கூட்டிட்டு போறேன் பாரு “ என்று மனதில் கறுவிக்கொண்டான்..

நித்யா அமர்ந்து வேதாவுடன் பேசி கொண்டு இருந்தாள்.. நல்ல பையன் போல தன் தாயிடம் சென்று அமர்ந்தான் விபு.. மகன் வரும் தினுசை பார்த்தே வேதா புரிந்து கொண்டார்..

“ என்ன விபு என்ன வேணும் ?? ஆமா இங்க பண்ணிட்டு இருக்க ஆபீஸ் போகலையா ?? உங்க அப்பா கூட கிளம்பிட்டாரு.. நீ என்ன பண்ணுற அதான் எல்லாம் பேசி முடுச்சாச்சே.. கிளம்பு கிளம்பு.. சாப்பாடு எல்லாம் டிரைவர் கிட்ட குடுத்து விடுறேன்.  “ என்று வேண்டுமென்றே கூறினார்..

இதை கேட்கவும் விபுவின் முகம் அஷ்ட கோணல் ஆனது.. அதை பார்த்த நித்யாவோ சிரிப்பை மிகவும் சிரம பட்டு அடக்கி கொண்டு இருந்தாள்..                               

அவளை ஒரு முறை முறைத்துவிட்டு “ அம்மா “ என்று எதுவோ அவன் கூற வரும் முன் ” என்ன டா எப்ப பாரு அம்மா அம்மான்னு.. உனக்கு கல்யாணம் ஆகா போகுது.. இனிமேலாது என் சேலைய பிடிச்சிட்டு சுத்துறதை நிறுத்து.. “ என்று மேலும் தன் மகனை வாரினார்..

அவ்வளோ தான் இதற்கு மேல் நித்யாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. கல கலவென்று சிரித்து விட்டாள்..

தேனு பாட்டிக்கு அவள் சிரிப்பதை காணவும்  மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..” இந்த வீட்டுல இப்படி சிரிப்பு சத்தம் கேட்டு எத்தனை நாள் ஆச்சு.. நிச்சயம் இவங்க எல்லாம் நித்யாவை நல்லா பார்த்துப்பாங்க..” என்று நினைத்து மனதிற்குள்ளே ஆண்டவனுக்கு நன்றிகள் பல கூறினார்..

விபுவிற்கோ எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல் இருந்தது.. பின்னே எப்படி முயற்சித்தும் நித்யாவிடம் தனிமையில் பேச முடியவில்லை.. அவன் செய்யும் சைகை எல்லாம் நித்யாவின் கண்களுக்கு படுகிறதோ இல்லையோ மற்றவர்கள் கண்களுக்கு தவறாமல் பட்டது..

அசோக்கின் மனைவி குமுதா தான் “ அண்ணா இப்படி எவ்வளோ நேரம் காத்துல படம் வரைய போறீங்க.. போங்க அவளை எங்கயாவது வெளியே கூட்டிட்டு போயிட்டு வாங்க..” என்று யோசனை கூறினாள்..

விபுவிற்கு மிகவும் மகிழ்ச்சி..” தேங்க்ஸ் மா.. இதுக்கு தான் ஒரு பாச மலர் இருக்கனும் சொல்றது..” என்று கூறிவிட்டு நேரே நித்யாவிடம் சென்றான்.. அவளுக்கு இருபக்கமும் வேதாவும் தேவியும் அமர்ந்து இருந்தனர்.

இவன் சென்று அவர்கள் முன் நிற்கவும் மூவருமே அவனை நிமிர்ந்து பார்த்தனர்.. ஆனால் யாரையும் கண்டு கொள்ளாமல் “ கிளம்பு வெளிய போகலாம் “ என்று நேரே நித்யாவின் கண்களை பார்த்து கூறினான்..

அவன் இப்படி கூறவும் நித்யா விழி விரித்து பார்த்தாள் “ ஹா எவ்வளோ தைரியம் இவனுக்கு.. அம்மா தங்கச்சி எல்லாம் இருக்கும் பொழுது இப்படி வந்து கூப்பிடுறானே “ என்று எண்ணியவள் தயங்கியபடியே மற்ற இருவரின் முகத்தையும் பார்த்தாள்..

அங்கே இருந்து எந்த பதிலும் இல்லை.. விபு தான் முறைத்தபடி “ நான் தான் சொல்றேன்ல.. அப்புறம் என்ன இவங்க ரெண்டு பேரையும் பார்த்துகிட்டு இருக்க ?? அதெல்லாம் எதுவும் சொல்லமாட்டாங்க.. நீ கிளம்பு “ என்று கூறினான்..

“ இல்ல.. அது வந்து…” என்று அவள் இழுக்கவும்..

“ கம் ஆன் கெட் அப் மல்லி.. என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு “ என்று கூறி அவளது கைகளை பற்றி எழுப்பினான்.. நித்யாவிற்கு உள்ளே பதறி விட்டது.. என்ன இது இவன் இப்படி நடந்து கொள்கிறான் என்று..

“ இல்ல விபா.. ஒரு நிமிஷம் பொறுங்களேன் “ என்று அவள் மீண்டும் எதுவோ கூற வந்தாள் ஆனால் அதெல்லாம் காதில் விழுந்தால் தானே அவனுக்கு.. “ ஒரு நிமிஷம் என்ன என் வாழ்க்கையே இனிமேல் உன் கூட தான். சோ இப்ப நோ ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம். கிளம்பு கிளம்பு “ என்று அவள் கைகளை பிடித்தவன் விடாமல் ஏறக்குறைய இழுக்காத குறையாக அவளை அழைத்து வந்தான் வெளியே..

வேதா வேறு எதுவும் கூறவில்லை.. இரவு உணவுக்கு அங்கே தங்கள் வீட்டிற்கு வருமாறு மட்டும் கூறினார்.. அவருக்கும் புரியும் தானே இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் இருவரும் மனம் விட்டு பேச வில்லை என்று..

ஆனால் தேவி தான் “ டேய் அண்ணா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.. அசோக் அண்ணா இங்க வந்து பாருங்களேன் இவன் என்ன பண்ணுறான்னு நித்யாவ கடத்திக்கிட்டு போறான் “ என்று கத்தி கொண்டே வந்தாள்.. அதை கேட்டு அங்கே அனைவரும் சிரித்தனர்..

வேகமாக கார் கதவை திறந்து நித்யாவை உள்ளே தள்ளாத குறையாக அமர வைத்தவன் திரும்பி தன் தங்கையிடம் “ஆமா கடத்திகிட்டு தான் போறேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ ” என்று சந்தோசமாக கூறிவிட்டு வண்டியை எடுத்தவன் தான் இதோ இப்பொழுது மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு அவளது முறைப்பை பெற்று கொண்டு அமர்ந்து இருக்கிறான்…   

“ ஆமா நான் நல்ல படியா கூப்பிட்டா மட்டும் நீ வந்து இருக்க போறயா என்ன ?? இப்படி செய்யாட்டி நீயும் வந்து இருக்க மாட்ட.. அதான் இழுத்துகிட்டு வந்தேன்.. இப்ப என்ன அதுக்கு ??” என்று அவனும் எகிறினான்…

“ சரி என்ன சொல்லுங்க ?? ” என்று கொஞ்சம் அடக்கமாக கேட்டாள் நித்யா.. “ ஆகா நம்ம எகிறினா இவ கொஞ்சம் இறங்குறா.. ரொம்ப நல்லது..” என்று மனதிற்குள் மெச்சியவன் “ ஹ்ம்ம் கொஞ்சம் பேசனும்ன்னு தான் கூட்டிட்டு வந்தேன் “ என்று இன்னும் கோவமாக இருப்பது போல..

அவன் முகம் இன்னும் சமாதானம் ஆகாதது கண்டு “ பேசலாம்.. அதை கொஞ்சம் நல்லா சொன்னா தான் என்னவாம்?? ” என்றாள் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து..

விபுவிற்கோ மனதிற்குள் பட்டாம்பூச்சி பறந்தது.. இருக்காதா பின்னே.. முதல் முறை அவளை வெளியே அழைத்து வந்து இருக்கிறான். அதுவும் அவள் பிறந்த நாள் அன்று.. அவளும் அவனுக்கு இதம் தரும் விதமாக நடந்து கொள்கிறாள்.. இதெல்லாம் அவனுக்கு மகிழ்ச்சியை தராமல் என்ன தரும்..

“ ஹ்ம்ம் பேசலாம்.. ஆனா இங்க வேண்டாம். இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு இடம் வரும் அங்க பேசலாம் “ என்றான் மர்மமாக..

“ இன்னும் கொஞ்சம் தூரமா என்ன விபா சொல்றிங்க இப்பையே மணி என்ன தெரியுமா சாயங்காலம் ஆகா போகுது.. மதியம் வேற சாப்பிடல..” என்றாள் முகத்தை வேண்டும் என்றே சுளித்து..

அவள் கூறியதற்கு பின்பு தான் மதியம் உண்ணாதது அவனுக்கு நியாபகமே வந்தது..

“ ஓ !! சாரி மல்லி.. எனக்கு சாப்பிடுற நினைப்பே இல்லை.. சாரி டியர்.. “ என்று நிஜமாகவே வருந்தி மன்னிப்பு கேட்கவும் “ ஐயோ சாரி எல்லாம் வேண்டாம் விபா.. சொல்ல போனா எனக்குமே அந்த நியாபகம் இல்லை.. நான் சும்மா தான் சொன்னேன்..” என்றாள் அவனை சமாதானம் செய்யும் முயற்சியாக..

அதன் பின் அவள் என்ன கூறியும் காதில் வாங்காமல் ஒரு மோட்டலில் சென்று வண்டியை நிறுத்தினான்.. இருவரும் சிறிது உன்னட பின்னரே விபுவின் முகம் சற்று தெளிவானது.. நித்யாவும் உண்டுவிட்டு “ உங்களுக்கு பிடிவாதம் நிறைய விபா “ என்று கூறினாள் மெல்ல நகைத்தபடி..

ஒரு டிஸ்யு எடுத்து தன் வாயை துடைத்தபடி அவளை பார்த்து “ பின்ன பிடிவாதம் இல்லைன்னா வாழ்கையில எதையுமே சாதிக்க முடியாது மல்லி.. ஆனா சில விசயங்கள்ள தான் பிடிவாதம் எல்லாம்.. நான் மட்டும் பிடிவாதம் பிடிக்காட்டி உன்னைய இப்படி கூட்டி வர முடியுமா என்ன ?? ” என்று லேசாக சிரித்தபடி கேட்டான்..

ஆனால் இருவரும் அறியவில்லை தங்கள் இரு விழிகள் கவனித்து கொண்டே இருக்கிறது என்று..

கிளம்பலாமா ?? என்று கூறி இருவரும் மறுபடியும் காரில் ஏறி பயணித்தனர்.. சிறிது இடைவெளி விட்டு மற்றொரு காரும் அவர்களை தொடர்ந்தது..      

விபு நித்யாவை அழைத்து கொண்டு சென்றது ஒரு அழகிய இடம்.. விபுவின் காரை பார்த்ததும் காவலாளி ஒரு வணக்கம் வைத்து கதவு திறந்து விட்டான்..

விபுவின் காரை தொடர்ந்து வந்த மற்றொரு வாகனம் சற்று தொலைவில் இவர்கள் கண் மறைவில் நின்று கொண்டது..     

Advertisement