Advertisement

 

 

மனம்- 11

 “நித்யா மா நீ பண்ணுறது ரொம்ப தப்பு டா “ என்று அமைதியாக அதே நேரம் அழுத்தமாக பேசிக்கொண்டு இருந்தார் பூபதி..

அவர் கூறுவதற்கு பதில் எதுவும் கூறாமல் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் நித்யமல்லிகா. “ நல்லா சொல்லுங்க அண்ணா.. நாலு நாளா இப்படி தான் இருக்கா.. பழசை எதுவும் நினைக்காதன்னு சொன்னாலும் கேக்குறது இல்லை.. “ என்று குறை பாடினார் தேனு பாட்டி..

“ என்ன நித்யா.. நாங்க உன் கெட்டதுக்கு எதுவும் சொல்லிடுவோமா என்ன ?? எங்க மேல நம்பிக்கை இல்லையா ?? ” என்று அவளை பார்த்து வினா எழுப்பினார் பூபதி..

அவரது கேள்வியில் நிமிர்ந்தவள் “ என்ன தாத்தா இப்படி கேட்கறிங்க ?? நம்பிக்கை இல்லாமலா இத்தனை வருசமா உங்க கூட இருக்கேன்..?? ஆனா எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்படி கேட்டா எப்படி தாத்தா ?? ” என்றாள் அமைதியாக..

அவளது பயம் அவர்களுக்கு புரியாமல் இல்லை.. எங்கே விபுவரதனை நித்யமல்லிகா திருமணம் செய்து கொண்டால் அவனுக்கு எதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள்.. தன் காதலை வெளிபடுத்த தயங்குகிறாள்..

ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை, உப்பு பெறாத விஷயம் என்று அவளுக்கு புரிய வைக்கதான் முயற்சி செய்கின்றனர் மூத்த தலைமுறை..   

யார் என்ன பேசினாலும் அவளது கண்ணீர் நிறைந்த பார்வை தான் பதிலாக கிடைப்பதால் சில நேரம் அனைவரும் அமைதியாக இருந்து விட வேண்டி இருந்தது..

அன்னை மெஸ்ஸின் அன்றைய தினசரி வேலை எல்லாம் முடிந்து, கணக்கு எல்லாம் பார்த்து ஆட்களுக்கு கூலியும் கொடுத்துவிட்டு அனைவரும் சென்ற பின்னும் வீட்டிற்கு கிளம்பாமல் தன் நாற்காலியில் கண்கள் மூடி அமர்ந்து இருந்தாள் நித்யா..

அவளது இந்த நிலையை கண்டு தான் பூபதியும் தேனு பாட்டியும் பேசினர்.. “ இங்க பாரு நித்யா உன் பயம் தேவையே இல்லாத ஒரு விஷயம்.. கல்யாணம் நடந்து உனக்குன்னு ஒரு வாழ்க்கை வந்துட்டா உன்னால வேற எதையுமே நினைக்க கூட நேரம் இருக்காது டா “

அவள் அவரை குழப்பமாக பார்த்தாள்.. அவளது குழம்பிய முகத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு “ ஆமா நித்யா.. இப்போ உனக்கு விபு கூட கல்யாணம் நடந்திடுசுன்னு வைய்யி உனக்கு அங்க இருக்க வீட்டு பொறுப்புகள் அப்புறம் இங்க மெஸ் இதெல்லாம் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும்.. “

“ இதுல உன் பழைய குப்பை எல்லாம் எங்க இருந்து உன்னைய வந்து தொல்லை செய்ய போகுதுன்னு சொல்லு.. உனக்கே உனக்குன்னு ஒரு குடும்பம் வந்துட்டா எல்லாமே மாறிடும் “ என்று எடுத்து கூறவும் அவள் முகம் யோசனையில் ஆழ்ந்தது..

சரி அவளும் படித்த பெண் தானே.. விபுவின் மீது காதலும் இருக்கிறது.. இதெல்லாம் சேர்ந்து கண்டிப்பாக அவளை நல்ல முடிவு எடுக்க வைக்கும் என்று இருவரும் நம்பினர்..

இரவு வீடு வந்து சேர்ந்தவள் அலுப்பாக உணர்ந்ததால் குளித்துவிட்டு வந்தாள்.. அப்பொழுதும் அவளுக்கு பூபதி கூறியதே மனதில் ஒலித்தது.. “ உனக்குன்னு ஒரு குடும்பம்.. உனக்கே உனக்குன்னு ஒரு வாழ்க்கை  “ இதுவே மாறி மாறி அவளது மனதை போட்டு குழப்பியது..

“ இதெல்லாம் சாத்தியமாகுமா ?? “ என்று ஒரு புறமும் “ ஏன் நடக்காது.. என் விபா இருக்கிறானே “ என்று மறுபுறமும் அவளது மனம் இரண்டாக பிரிந்து அவளிடமே பட்டிமன்றம் நடத்தியது..

“ விபா “ என்று எண்ணியதுமே அவளுக்கு ஏனோ உள்ளத்தோடு சேர்த்து உடலும் சிலிர்த்தது.. இது போன்ற உணர்வெல்லாம் தனக்குள் இருக்கிறது என்று யாராவது இரண்டு மாதங்கள் முன் கூறியிருந்தாள் நித்யா பத்திரகாளி அவதாரம் எடுத்து இருப்பாள்..

ஆனால் இன்று.. அவளை அறியாமல் அவளது கால்கள் அவளை கண்ணாடி முன்பு இழுத்து சென்றது.. தன்னையே ஒரு முறை ஆழ்ந்து பார்த்தாள்..

“ அவ்வளோ அழகாவா இருக்கேன் ?? இந்த விபா எப்ப பாரு  அப்படி பார்க்கிறானே ?? ” என்று தானாக கேள்வி கேட்டு கொண்டாள்..

மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பரவுவது போல இருந்தது அவளுக்கு.. உடலில் புது ரத்தம் பாய்வது போல உணர்ந்தாள்.. ஜன்னல் பக்கம் இருந்து காற்று சிலு சிலு வென்று வரவும் அவளுக்கு இன்னும் சுகமாக இருந்தது..

கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.. அவள் மனம் என்ன எண்ணுகிறது என்று அவளுக்கே புரியவில்லை..

“ எனக்கு நல்ல வாழ்க்கை காத்துகிட்டு இருக்குன்னு எல்லாம் சொல்லுறாங்களே.. ஆண்டவா.. இது எல்லாம் சாத்தியபடுமா ?? இல்லை நானா தான் குழம்பி தவிக்கிறேனா ?? ஆனா என்னால விபாவ மறக்க முடியும்ன்னு தோனலையே ?? ”

“ அவர் கிட்ட நான் ரொம்ப பேசுனது இல்ல.. பழகினது இல்லை.. அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது இதெல்லாம் தெரியாது.. ஆனா இந்த நேசம் மட்டும் எப்படி வந்தது.. அது தான் இயற்கையா ??”

“ கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரி ஆகிடும்னு எல்லாம் சொல்றாங்களே?? ஆனா கல்யாணம்னு நினைச்சாலே என் மனசு பதறுதே..” என்று எண்ணியபடி படுத்து இருந்தவளை அவளது அலைபேசி உசுப்பி விட்டது..

யார் என்று எடுத்து பார்த்தவள் அதில் விபுவரதனின் பெயர் தெரியவும் ஒரு நிமிடம் அவள் உள்ளம் நடுங்கியது.. “ இந்நேரம் எதுக்கு போன் பண்ணுறான்?? “ என்று யோசித்தவாறே

“ஹலோ “ என்றாள்..

“ ஹலோ..என்ன மல்லி மேடம், உன் மோன நிலையை நான் கலைச்சுட்டேனா?? ”உல்லாசமாக வந்தது அவன் குரல்..

அவனது உற்சாகம் அவளை தொட்டு கொண்டாலும் அதை காட்டாமல் “ என்ன விஷயம் ??”   என்றாள்..

“ ஹ்ம்ம் என்ன விஷயம்.. சாப்பிடும் போது ஒரே இருமல்.. என்னால சாப்பிடவே முடியல.. அம்மா கூட சொன்னாங்க.. என் மருமக தான் உன்னைய இடைவிடாம நினைக்கிறா போலன்னு.. அதான் என்னைய நினைச்சியான்னு கேட்க போன் பண்ணேன் “ என்றான் கூலாக..

“ இதேதடா புது கதையாக இருக்கிறது “ என்று எண்ணியவள் “ இருமல் வந்தா டோனிக் குடிச்சிட்டு தூங்குங்க.. அதை விட்டு இது என்ன இந்நேரத்துல??“ என்று லேசாக தன் கோவத்தை காட்டினாள்..

“ நினைச்சியான்னு கேட்டா ஆமா இல்லைன்னு பதில் சொல்லு. அதை விட்டு சம்பந்தமே இல்லாம பேசுனா எப்படி மல்லி குட்டி ?? ” என்றான் கொஞ்சலாக..

அவனது கொஞ்சலில் குளிர தொடங்கிய மனதை அடக்கி “ இங்க பாருங்க.. இப்படி வம்பிழுக்க தான் போன் பண்ணிங்கன்னா, நான் வச்சிடுவேன் “

“ ஹா ஹா.. தரலாமா வச்சிக்கோ.. நான் கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்றேன் நீ என்ன வச்சுக்குவான்னு கேக்குற மல்லி செல்லம் “ என்றான் இன்னும் கொஞ்சலாக..

“இன்னைக்கு இவனுக்கு என்ன தான் ஆச்சு ?? ஏன் இப்படி பேசி தொலைக்கிறான்..” என்று மனதில் திட்டியவள் “ம்ம்ச் இங்க பாருங்க விபு இப்படி எல்லாம் என்கிட்ட பேசுற வேலை வேண்டாம்..”

“ சரி.. அப்ப விபான்னு சொல்லு” என்றான் சிறு குழந்தை அடம் பிடிக்கும் குரலில்.. அவன் கூறிய பிறகே அவளுக்கு தோன்றியது தான் விபு என்று அழைத்தது.. ஆனால் அவன் கேட்கவும் அவள் மனம் என்ன நினைத்தோ “ முடியாது “ என்று கூறினாள்..

“ ஹ்ம்ம் ப்ளீஸ் ப்ளீஸ் மல்லி குட்டி… என் மல்லில” என்று கெஞ்சினான்..

“ இங்க பாருங்க மல்லி குட்டின்னு சொல்லாதிங்க. எனக்கு என்னவோ பல்லி குட்டின்னு சொல்ற மாதிரி இருக்கு “ என்று என்றாள் பல்லை கடித்தபடி..

அதை கேட்டு சிரித்தவன்.. “ இது கூட நல்லா இருக்கே.. மல்லி குட்டி என் பல்லி குட்டி.. பல்லி எப்படி சுவத்துல ஒட்டிகிடுதோ அது மாதிரி நீ என் மனசுல ஓட்டிகிட்ட மல்லி..” என்றான் ஆழ்ந்த குரலில்..

இப்படி எல்லாம் பேசினால் அவள் என்னதான் பதில் கூறுவாள்.. ஏற்கனவே மனம் குழம்பி இருந்தவள்.. இவன் இந்நேரத்தில் இப்படி பேசவும் தவித்து விட்டாள்..

“ ஹ்ம்ம் விபா ப்ளீஸ்.. இப்படி எல்லாம் “ என்று அவள் கூற வரும் முன்

“ யூ ப்ளீஸ் மல்லி.. நான் பேசவாது செய்றேனே” என்றான் பாவமாக.. அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..

“ மல்லி மல்லி “ என்று இருமுறை அழைத்தான்.. சிறிது நேரம் கழித்து அவளது விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது..

“ ஹேய் மல்லி.. என்ன.. ஏன் மல்லி இப்ப எதுக்கு அழுகுற ?? நான் ஏதா தப்பா பேசிட்டேனா?? மல்லி ப்ளீஸ் அழாத.. “ என்றான் பதற்றமாக.. அவனது பதற்றமே அவளை இன்னும் உருக்கியது..

மெல்ல விசும்பிக்கொண்டே “ இல்ல விபா நான்.. நான் என்னைய நினைச்சு தான் அழுதேன் “ என்றாள் மெல்ல..

சரி இப்பொழுது தான் இவள் சிறிது மனம் விட்டு பேச ஆரம்பிக்கிறாள் என்று உணர்ந்த விபு “ என்ன மல்லி மா ?? வேற எதுவும் பிரச்சனையா ?? ” என்றான் ஆதுரமாக..

“ ஹ்ஹும் இல்ல “ என்றாள்…

“ பின்ன எதுக்கு அழுகுற?? ஏற்கனவே நீ வாழ்கையில தேவையான அளவு அழுதிட்ட மல்லி போதும்.. நான் இருக்கும் போது நீ எதுக்கும் கவலை பட கூடாது.. அப்படி என்ன உன் மனசுல போட்டு உன்னைய குழப்புது ?? ”

“ அது.. அது.. விபா.. அது வந்து…”

“ ஹ்ம்ம் சரி நான் வேணா அங்க நேரா வரட்டுமா ?? ” என்றான் சற்றே குறும்பாக..

“ அய்யோ அதெல்லாம் வேண்டாம்.. அதுவும் இந்நேரத்துல.. ம்ம்ஹும்.. “ என்றாள் படக்கென்று.. அவளது பதிலை கேட்டு அவன் சிரித்து விட்டான்..

அவனது சிரிப்பில் தான் கவலை எல்லாம் கரைவது போல உணர்ந்தாள்.. கண்கள் மூடி அவனது சிரிப்பை ரசித்தவள் அதை மனதிலும் பதித்து கொண்டாள்.. மீண்டும் அமைதி நிலவுவதை உணர்ந்த விபு “ ஹலோ மக்கு மல்லி.. என்ன நான் ஒரு வார்த்தை சும்மா சொன்ன உடனே அதை நம்பிடுவியா ?? பரவாயில்ல இந்த நம்பிக்கை எப்போவும் இருந்தா சரி “ என்றான்..

“ஹ்ம்ம் “ என்பதை தவிர வேறு எந்த பதிலும் இல்லை அவளிடம்..

“ என்ன ஹ்ம்ம்.. சரி நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு.. உன் மனசுல என்ன பயம் ஓட்டிக்கிட்டு இருக்கு உன்னைய என்கிட்டே நெருங்க விடாம ??” என்று கேட்டே விட்டான்..

அவள் இதற்கு என்ன பதில் கூற முடியும்.. ஒரு நிமிடம் யோசித்தவள் “ அது வந்து..” என்று மீண்டும் இழுத்தாள்..

“ அட டா.. மறுபடியும் வந்தா ??? ஹ்ம்ம் நீ இப்படியே வந்து வந்து சொல்லிட்டு இருந்தன்னு வச்சிக்கோ இந்த ஜென்மமே நமக்கு முடிஞ்சுடும் மல்லி.. “என்றான் சற்றே  வருத்தமாக.

“ இல்ல விபா.. அது.. நான்.. என்னைய.. கல்யாணம் பண்ணிகிட்டா அது.. அது உங்களுக்கு கௌரவ குறைச்சலா இருக்காதா ?? அதும் இல்லாம என்னால உங்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தா அதை என்னால தாங்கவே முடியாது அதான்..” என்று எப்படியோ திக்கி திணறி மனதில் உள்ளதை கூறிவிட்டாள்..

“கௌரவ குறைச்சலா ?? என்ன மல்லி இதெல்லாம் பெரிய வார்த்தை.. அவனவன் என்னென்னவோ பண்ணுறான்.. நான் என் மனசுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் செய்யனும்னு நினைக்கிறது தப்பா “ என்றான் கோவமாக..

“ அதில்ல.. நமக்கு கல்யாணம் ஆனா பின்னாடி, நீங்க போற வர இடத்துல உங்களை மட்டமா பேச மாட்டாங்கள ?? ” என்று கேட்டாள் சிறு பிள்ளையாக..     

அவள் என்ன கூற வருகிறாள் என்பதை விபுவும் சரியாக புரிந்து கொண்டான்.. புரிந்து கொண்டவன் பலமாக சிரித்தான்.. இந்த அவனது சிரிப்பு அவளுக்கு எரிச்சலை தந்தது..

கோவமாக “ம்ம்ச் என்ன இது.. நான் எவ்வளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. உங்களுக்கு என்ன சிரிப்பு வேண்டி இருக்கு.. என்னைய பார்த்தா உங்களுக்கு சிரிப்பு வருதா என்ன ?? ” என்று எண்ணெயில் இட்ட அப்பளமாக பொரிந்தாள்..

அவளிடம் திட்டுகள் வாங்கினாலும் அவனுக்கு அது தித்திப்பாகவே இருந்தது.. “ சரி சரி நான் சிரிக்கலை போதுமா ?? அம்மா தாயே சரியான சர வெடியா இருப்ப போல.. டேய் விபு தெரியாம மாட்டிகிட்ட போலவே ” என்று தனக்கு தானே ஆறுதல் கூறினான்..

அவனது பேச்சில் இன்னும் கடுப்பானவள் “ ம்ம்ச் இப்ப எதுக்கு போன் பண்ணிங்க ?? எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கனும் “ என்றாள் கெத்தாக..

“ சரி தூங்கு.. உனக்கு பேச பிடிக்காட்டி போன் கட் பண்ணிட்டு தூங்கு.. எனக்கு பேச பிடிச்சு இருக்கு நான் பேசுவேன் “ என்றான் பிடிவாதமாக..

“ ச்சே இப்படி இவன் பிடிவாதம் பிடிச்சு பிடிச்சு தான் இந்த அளவுக்கு வந்துட்டான்.. சரியான எமகாதகன்..” என்று நினைத்தவள் “ என்ன விபா இது இப்படி வம்பு பண்றீங்க. என் பயம் உங்களுக்கு புரியலையா ?? ” என்றாள் ஆற்றாமையாக..

“ ஓகே மல்லி ஜோக்ஸ் அபார்ட்.. உன் பயம் உன் தயக்கம் எல்லாம் எனக்கு புரிஞ்சதுனால தான் மல்லி நான் இவ்வளோ நேரம் இப்படி பேசுனேன்.. ஒரு நிமிஷம் நான் சொல்லுறதை நல்லா கேளு..” என்று கூறியவன் சிறு இடைவெளி விட்டு

“ நாளைக்கு எங்க வீட்டுக்கு வரையா ??” என்றான்

அவனது கேள்வியை சரியாகத்தான் கேட்டோமா என்று புரியாமல் “வாட் ??“ என்று கேட்டு திகைத்தாள் மல்லி..

“ ஹ்ம்ம் நீ கேட்டது சரி தான் மல்லி.. நாளைக்கு எங்க வீட்டுக்கு வா.. நான் உன்னைய அங்க கூட்டிட்டு போறேன்.. ஒருவேளை அதுக்கு அப்புறம் உன் மனசுல இருக்க தயக்கம் பயம் எல்லாம் மாறலாம்” என்றான் அழுத்தமாக..

“ நா.. நான் .. உங்க வீ… வீட்டுக்கு.. நோ விபா இதெல்லாம் சரி படாது “ என்றாள் வேகமாக..

“ ஏன் ஏன் சரி படாது..” என்று பதில் கேள்வி கேட்டான் அவனும் அதே வேகத்துடன்.. மறுக்க வேண்டும் என்று மறுத்தவள் என்ன காரணம் கூறுவாள்..

“ இல்ல..அது.. அது.. எனக்கு மனசுக்கு சரின்னு படலை “ என்றாள் அமைதியாக..

“ஆமாமா என்ன பண்ணுறது.. வீட்டுக்கு கூட்டிட்டு போய் அங்க உனக்கு ஜூஸ்ல ஏதா கலந்து குடுத்து உன்னைய நான் எதாவது பண்ணிட்டா.. அப்படிதானே “ என்றான் கோவமாக கேட்பது போல..

அவனது கோவத்தை உண்மை என்று நம்பியவள் “ ஐயோ அப்படி எல்லாம் இல்லை விபா.. ஆனா வீட்டுக்கு வர ஏதாவது காரணம் இருக்கணுமே..” என்று தயங்கினாள்..

விபு மனதிற்குள் “ அப்படி வா வழிக்கு “ என்று எண்ணியவன் “ ஏன் எதுவும் காரணம் இருந்தா தான் வரணுமா ?? ஹ்ம்ம் நாளைக்கு எங்க அப்பா அம்மாக்கு கல்யாண நாள். சரி சரி முதல் முதலா நல்ல நாள் அதுவுமா கூப்பிட்ட நீ ரொம்ப தான் பண்ணுற மல்லி “ என்றான்..

அவள் எதுவோ பதில் கூறும் முன் “ பொறு பொறு நான் பேசிக்கிறேன்.. இங்க பாரு.. நண்டு சுண்டு எல்லாம் இந்த காலத்துல லவ் பண்ணுறேன்னு சொல்லிடு எங்க எங்கயோ சுத்திட்டு வருதுங்க.. ஆனா நான் அப்படியா ?? பாரு இன்னும் நாம லவ் பண்ண கூட ஆரம்பிக்கலை.”

“ சரி கல்யாணம் பண்ணிக்கிட்டு லவ் பண்ணலாம்னு பார்த்தா நீ அதுக்கு வாய்ப்பே குடுக்காம  இருக்க.. உன் அண்ணன் எல்லாம் என்னைய கழுவி கழுவி ஊத்துறான்..”

“ அதை விட எங்க அம்மா, என் பையனை நான் பெரிய ஆளுன்னு நினைச்சேன் ஆனா அவனால அவனுக்கு பிடிச்ச பொண்ணு கிட்ட இன்னும் சம்மதம் கூட வாங்க முடியலைன்னு கிண்டல் பண்ணுறாங்க “

“ என் அப்பா உனக்கு பிசினஸ் தெரிஞ்ச அளவுக்கு வாழ்கைய பத்தி தெரியல போலன்னு சொல்லிட்டு போறாரு.. என் தங்கச்சி எப்ப பாரு கிண்டலா பார்த்தே சிரிக்கிறா.. சோ ப்ளீஸ் மல்லி இவங்க எல்லார் வாயையும் அடைக்கணும்னா நீ நாளைக்கு என் கூட வர..  “

“ காலை ஒரு பத்து மணிக்கு ரெடியா இரு.. நான் ஷார்ப்பா வந்து உன்ன கூட்டிட்டு போறேன் என்ன ?? யப்பா இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.. என்னைய நினைச்சுகிட்டே தூங்கு மல்லி செல்லம் “ என்று என்னவோ அவள் வர சம்மதம் சொன்னது போல நிம்மதியாக போனை வைத்துவிட்டான்..

அவன் போனை வைத்த பிறகும் ங்கே என்று விழித்தபடி போனையே பார்த்து நின்றவள் நித்யாதான்.. அவளுக்கு என்ன செய்வது என்றே பபுரியவில்லை..

“ என்ன இவன் பாட்டுக்கு போன் பண்ணான்.. பேசுனான்.. என்னைய கேள்வி கேட்டான். அழ வச்சான்.. வீட்டுக்கு கூப்பிட்டான்.. நான் பதில் பேசுறதுக்கு முன்னாடி வச்சுட்டான்..” என்று எண்ணியவளுக்கு மறந்தும் கூட அவன் மீது கோவம் வரவில்லை..

“ இப்பதான் புரியுது.. இவன் எப்படி பிஸினெஸ்ல இவ்வளோ சாதிக்கிரான்னு.. களவாணி.. பேசியே எல்லரய்ம் குழப்பிடுவான் போலவே.. அட கடவுளே இப்ப நான் என்ன பண்ணுறது “ என்று யோசித்தவள் மணியை பார்த்தாள் அது நேரம் ஒன்றை காட்டியது..

“ என்ன ??? ஒரு மணி வரைக்குமா நான் விபா ஓட பேசிட்டு இருக்கேன்..” என்று நினைத்தவளுக்கு தூக்கம் வருவதாய் இல்லை.. “ என்ன செய்யலாம்.. ?? நாளைக்கு போகலாமா வேண்டாமா.. அவன் வந்து கூட்டி போறேன்னு சொன்னதுக்கு அப்புறமும் நான் கிளம்பாம இருந்தா நல்லா இருக்காதே “ என்று அவள் மனமே அவளை நன்றாக குழப்பியது..

ஹ்ம்ம் தேனு பாட்டிகிட்ட கேட்டிட்டு அப்புறம் பாத்துக்கலாம் “ என்று எண்ணியவள் “ ஆமா அவங்க என்ன வேண்டாம்னா  சொல்ல போறாங்க.. சந்தோசமா போய்ட்டு வான்னு தான் சொல்லுவாங்க “ என்று நினைத்துகொண்டு இருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்..

எப்பொழுதும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுபவள் இத்தனை நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராதவளை கண்டு தேனு பாட்டி “ ஒரு வேலை உடம்பு கிடம்பு சரி இல்லையோ “ என்று எண்ணியடி உள்ளே சென்று அவரை பார்த்தவருக்கு மனம் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது.

காரணம் தன் நீல கூந்தலை நீவி விட்டபடி அழகான இளம் பச்சை நிற சேலை கட்டி கண்ணாடி முன்பு நின்ருந்தவலை காணவும் தேனு பாட்டிக்கு தான் காண்பது கனவா இல்லை நிஜமா என்றே புரியவில்லை..

“ டேய்… நித்யா கண்ணு.. என்ன மா.. எங்கயும் வெளியா போறயா ??” என்றார் அவளை மேலும் கீழும் சந்தோசமாக பார்த்தபடி…

அவரது முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே நித்யாவிற்கு ஆனந்தமாக இருந்தது “ தன் ஒருத்தியின் மாற்றத்தில் இத்தனை சந்தோசமா ??” என்று எண்ணியவள் “ ஆமா பாட்டி.. எல்லாம் உங்க அருமை பேரன் தான் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க..” என்றாள் முகமெல்லாம் மலர்ச்சியாக..

அவளது முக மாற்றமே தேனு பாட்டிக்கு புரிந்தது.. ஆனால் ஏதாவது கேட்டால் எங்கே மீண்டும் வீம்பு பிடித்து விடுவாளோ என்று எண்ணி “ ஓ !!! சரி கண்ணு சந்தோசமா போயிட்டு வா.. என்னைக்கும் நீ இப்படியே இருக்கனும் “ என்று அவளை உச்சி முகர்ந்தார்..

தன் தலையை சரித்து அவரை பார்த்து “ என்ன பாட்டி அவ்வளோதான் வேற எதுவும் கேட்க மாட்டிங்களா ?? “ என்று கேட்டாள்..

“ என்ன கண்ணு கேட்க சொல்லுற.. நீ இப்படி சந்தோசமா இருந்தா தான் நல்லது.. எங்களுக்கும் அது தான் சந்தோசம்.. எனக்கு வேற எதுவும் தெரிய வேண்டாம்.. சரி சரி நீ எப்ப கிளம்பனும் “ என்று கேட்டு கொண்டு இருக்கும் பொழுதே வெளியே கார் நிற்க்கும் ஓசை கேட்டது..

“ பத்து மணிக்கு வந்து கூட்டிட்டு போறதா தானே சொன்னாங்க” என்று தனக்குள்ளே பேசியவாறே வெளியே சென்று எட்டி பார்த்தவள் திகைத்து நின்று விட்டாள்..

ஏனெனில் வந்தது விபு மட்டுமல்ல.. அவனது குடும்பம் மொத்தமுமே வந்தது.. இதை நித்யா மட்டுமில்லை தேனு பாட்டி கூட எதிர் பார்க்கவில்லை.. முதலில் அவர் தான் சுதாரித்தார்..

“ வாங்க.. வாங்க.. எல்லாரும் வாங்க “ என்று அனைவரையும் வரவேற்றார்.. நித்யா அப்படியே திகைத்து போய் விபுவின் முகம் பார்த்தாள்.. அவனோ எப்பொழுதும் சிந்தும் ஒரு மாய புன்னகையை தவிர வேறு எதுவும் கூறவில்லை..

நித்யா உள்ளே செல்ல திரும்பும் முன் மற்றொரு கார் வந்தது.. அதில் அசோக் குடும்பத்துடன் வந்து இருந்தான்..

நித்யாவை பார்த்ததும் கெளதம் “ அட்ட..” என்று அவள் மீது தொற்றி கொண்டான்.. நித்யாவிற்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை..

“ என் எல்லாரும் வந்து இருக்காங்க.. எதுவும் விசேஷமா” என்று எண்ணியவள் அப்பொழுது தான் நினைவு வந்தது “ இன்று விபா அவங்க அப்பா அம்மாக்கு கல்யாண நாள்னு சொன்னாங்களே “ என்று வேகமாக சந்திர வரதன் மற்றும் வேதா விடம் சென்றாள்..

“ அங்கிள் ஆன்ட்டி ஹாப்பி வெட்டிங் டே..” என்று கூறவும் அங்கே ஒரு சிரிப்பலை பரவியது.. “ என்ன ஏன் எல்லாரும் சிரிக்கிறிங்க ??” என்பது போல சுற்றும் முற்றும் பார்த்தாள்..

தேவி தான் முன்னே வந்து “ என்ன நித்யா.. சாரி சாரி இனிமே உன்னை நான் பெயர் சொல்ல கூடாதோ.. என்ன அண்ணி நாங்க எல்லாம் உன்னை விஷ் பண்ண வந்தா, நீ எங்க அப்பா அம்மாவ விஷ் பண்ணுற?? ” என்றாள் கேள்வியுடன் கேலியாக..

“ என்.. என்ன ?? என்னைய விஷ் பண்ணவா ?? எப்பையும் போல நித்யானே கூப்பிடு தேவி” என்றாள்..

 “ ஹா அது எப்படி.. எனக்கு இருக்கிறதோ ஒரே ஒரு அண்ணன். அவன் லவ் பண்ணுறதோ ஒரே ஒரு பொண்ண.. எனக்கு வர போறது ஒரே ஒரு அண்ணி.. சோ நான் அண்ணின்னு தான் கூப்பிடுவேன்.. சரி சரி பேச்சுவாக்குல எனக்கு ட்ரீட் குடுக்கிறதை மறந்திட கூடாது “ என்று தன் பாட்டுக்கு இன்னும் அவளை குழப்பினால்.

“ ட்ரீட் டா எதுக்கு ??” என்று ஒன்றும் புரியாமல் திகைத்தவளுக்கு விபு உள்ளே இருந்து கையில் கேக்குடன் “ ஹாப்பி பிர்த் டே டூ யூ “ என்று பாடி கொண்டு வந்தான் முகமெல்லாம் சிரிப்பாகவும் கண்களில் காதலை தேக்கி..

அதன் பிறகு தான் நித்யாவிற்கே நினைவு வந்தது இன்று தன் பிறந்த நாள் என்று.. எத்தனை வருடம் ஆகிவிட்டது.. அவளுக்கு அவளுடையே பிறந்த நாள் கூட மறந்து விட்டது.. தன் தாய் தந்தை இறந்த அந்த ஆண்டு தன் பிறந்த நாள் அன்று அழுதே தீர்த்தாள்..

அதன் பிறகு வந்த ஆண்டுகளில் அதை நினைக்க கூட நேரமில்லையோ இல்லை மறந்தது போல இருந்து விட்டாலோ தெரியவில்லை.. ஆனால் அவளது பிறந்த நாள் அன்று மாட்டும் தேனு பாட்டி எதாவது ஒரு இனிப்பு செய்து இருப்பார்..

ஆனால் இன்று நித்யா தன் கவலைகள் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியில் நெஞ்சம் விம்மியபடி விழி விரித்து விபு வரதனையே பார்த்து கொண்டு இருந்தாள்..

தேவி “ ஹே அண்ணி  போதும் எங்க அண்ணனை சைட் அடிச்சது.. மெழுவர்த்தி சூடுள கேக் உருகுதோ இல்லையோ உன் பார்வையில எங்க அண்ணன் உருகிட போறான்” என்று மேலும் கேலி பேசினாள்..

அவளது கிண்டலில் லேசாக முகம் சிவந்தாலும் இன்னும் நடப்பது எல்லாம் நிஜமா என்று அவளுக்கு புரியவில்லை..” தன ஒருத்தியின் மகிழ்சிக்காக, தன் மகன் விரும்பும் பெண் என்ற ஒரே காரணத்திற்காக, இப்படி ஒரு குடும்பமே கிளம்பி வந்து இருக்கிறது என்னை வாழ்த்த.

இப்படிப்பட்ட ஒரு குடும்பத்துல வாழ நான் தானே குடுத்து வச்சு இருக்கனும் “ என்று எண்ணியவளுக்கு மகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்த்தது..

ஆனால் இதெல்லாம் புரியாத கெளதமோ ” அட்ட கேக் வெட்டு “ என்று அவசர படுத்தினான்.. தேனு பாட்டியும் அசோக்கின் மனைவியும் தான் முன்னே நின்று அனைவரையும் கவனித்தனர்.. ஆனால் வேதா தன் பேசினாலும் செய்கையினாலும் நித்யாவை தன்னிடம் நெருக்கமாக்கி கொண்டார்..

அனைவரும் வாழ்த்து பாடல் பாட சந்தோசமாக கேக் வெட்டினாள் நித்யா. வெட்டுவது என்னவோ வெட்டிவிட்டாள் ஆனால் முதல் வாய் யாருக்கு குடுப்பது என்று குழம்பி தவித்து விட்டாள்,..

அனைவரின் முன்னும் விபுவிற்கு குடுப்பதற்கு மனம் தயங்கியது.. வேதாவிற்கு கொடுத்தால் அது ஏனோ சரி என்று தோன்றவில்லை.. இப்படி அவள் தயங்கி நிற்கும் வேலையில் கெளதம் “ எனக்கு டா பர்ஸ்ட்..” என்று கூறி அவளது கையில் இருந்த கேக்கை தானே வாங்கி வாயில் இட்டு கொண்டான்..

நித்யாவிற்கு அப்பாடி என்று இருந்தது.. விபுவோ ஏக்கமான ஒரு பார்வை பார்த்தான்.. “ வந்ததுல இருந்து ஒரு வார்த்தை பேசலை ஆனா பாக்குறதில் மட்டும் குறைச்சல் இல்லை..” என்று எண்ணியவள் அடுத்து வேண்டும் என்றே அவனை கண்டு கொள்ள வில்லை..

சந்திரவரதன் “ நித்யா நாங்க வந்த உடனே எங்களுக்கு ஏதோ விஷ் பண்ணையே ?? ” என்று கேட்டார் தன் மகனை பார்த்தபடி

“ அது.. இன்னைக்கு உங்களுக்கும் ஆன்ட்டிக்கும் கல்யாண நாள் “ என்று அவள் கூறும் பொழுதே “ அப்படின்னு யாரு சொன்னது நித்யா ?? இந்த களவானியா ?? ” என்று தன் மகனை நோக்கி கை காட்டினார் வேதா..

“ பிராட்.. பொய் சொல்லி என்னைய கிளம்ப வச்சு இருக்கான் “ என்று எண்ணியவள் விபுவரதனை நன்றாக முறைத்தாள்.. அவனோ அவள் கேக் குடுக்காத கடுப்பில் நின்று இருந்தான்..                                   

அசோக், தேனு பாட்டி, பூபதி தாத்தாவிற்கு மனம் நிறைந்து இருந்தது.. அவர்கள் அனைவரும் இதை தானே எதிர்பார்த்தனர்.. நித்யாவிற்கு என்று ஒரு வாழ்க்கை.. அவளுக்கென்று ஒரு குடும்பம்.. இதற்கெல்லாம் மீறி அவளை அவளுக்காகவே நேசிக்கும் ஒரு துணை..

அனைவரும் சிறிது நேரம் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.. “ எல்லார் கிட்டயும் வாய் பேசுறா.. இது வரைக்கும் என் கிட்ட வந்து ஒரு வார்த்தை பேசுராலா ?? இவளுக்காக பார்த்து பார்த்து பண்ணுறது எல்லாம் நானு.. செல்லம் கொஞ்சுறது மாட்டும் அம்மா கிட்ட.. ச்சே இந்த பொண்ணுங்களே இப்படி தான் “ என்று மனதிற்குள் குமைந்து கொண்டு இருந்தான் விபு..

அவனது மனதை படித்தவன் போல “ ஆமா மாப்ள.. இந்த பொண்ணுங்களே இப்படி தான்.. நீ வருத்தபடாத.. இன்னும் நிறைய விஷயம் நீ சந்திக்கணும்.. நமக்கு தெரியாமையே நம்மல ஜோக்கர் மாதிரி பயன்படுத்துவாங்க பாரு.. அதெல்லாம் நீ இன்னும் அனுபவிக்க நிறைய இருக்கு டா “ என்று குடும்பஸ்தனாக அறிவுரை கூறுவது போல அவனை கிண்டல் செய்தான் அசோக்..

இதை எல்லாம் நித்யா கவனித்தும் கவனிக்காதது போல தான் இருந்தாள்.. அவள் மனதிற்குள் விபுவின் மேல் எல்லையில்லா நேசம் இருந்தாலும் ஏனோ அவன் மீது சிறு கோவமும் எட்டி பார்த்தது..

வேதா பேசி கொண்டு இருக்கும் பொழுதே “ நித்யா இங்க வா மா “ என்று அழைத்து அவள் என்ன என்று சுதாரிக்கும் முன் அவளது நெற்றியில் குங்குமும் தலையில் நெருக்கமாக தொடுத்த மல்லிகை பூவையும் வைத்து விட்டார்.

நித்யா அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.. அவளது அதிர்ச்சியின் காரணம் அனைவருக்கும் புரிந்தது தானே.. “ ஆ.. ஆன்.. ஆண்ட்டி..”என்றாள் குரலே எழும்பாமல்..

“என்ன நித்யா மா.. இப்படி தான் நீ எப்பவுமே இருக்கனும்.. நீ பழசை எல்லாம் மறந்திடு.. இதோ உனக்காக என் பையன் மட்டுமில்லை எங்க குடும்பமே காத்துக்கிட்டு இருக்கு.. நீ எங்க வீட்டு மருமக டா.. நீ எப்பையும் என் பையன் கூட சந்தோசமா வாழனும் “ என்று கூறினார்..

இதை கேட்ட நித்யா வேதாவை கட்டி கொண்டு அழுது தீர்த்து விட்டாள்.. ஏனோ அவரும் அவளை தடுக்க வில்லை.. அவள் மனதில் இருக்கும் வேதனை எல்லாம் இன்றுடன் இந்த கண்ணீரில் கரையட்டும் என்று அவளை ஒன்று சொல்லாமல் அப்படியே நின்று இருந்தார்..

இந்த காட்சியை பார்த்த அனைவரின் கண்களிலும் நித்யாவை எண்ணி ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவளுக்கு அமைய போகும் வாழ்கையை எண்ணி ஆனந்த கண்ணீரே துளிர்த்தது..

விபு தான் கை முஷ்டி இறுக எதுவும் செய்ய இயலாதவன் போல நின்று இருந்தான்.. அவனுக்கு நித்யா அழுவதை காணவுமே இழுத்து தன் மார்பில் சாய்த்து கொண்டு ஆறுதல் கூற வேண்டும் போல இருந்தது.. உடபின் ஒவ்வொரு செல்லும் துடித்தது.. ஆனால் அதற்கு இது சமயம் அல்ல என்று கஷ்டப்பட்டு பொறுமையாக இருந்தான்..

தேனு பாட்டி, பூபதி, அசோக் மூவருக்கும் மனம் நிறைந்து இருந்தது.. தேவி தான் தன் அண்ணனை கிண்டல் செய்து ஒரு வழி செய்துவிட்டாள்..

வேதா நித்யாவை தன் தொழில் சாய்த்து அமர்ந்து இருந்தார்.. நிதயாவிற்கு ஏனோ இருந்து போன தன் பெற்றோர்களே வந்து வாழ்த்து கூறியது போல இருந்தது.. அவள் தாய் மடியில் உணரும் அதே கத கதப்பை உணர்ந்தாள்..

சந்திர வரதான் திடீரென “ சரி எங்க வீட்டம்மா பூ வச்சு போட்டு வச்சு நிச்சயத்தை ரொம்ப சிம்பிள்ளா முடிச்சுட்டாங்க.. கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம் அதை சொல்லுங்க” என்று பொதுவாக கேட்டார்..

இதை கேட்டு அனைவரும் திகைத்தனர்.. அப்பொழுது தான் புரிந்தது நித்யாவை தங்கள் வீட்டு மருமகளாக கொண்டு வர எத்தனை உறுதியாக இருகின்றனர் என்று.. இதை கேட்கவும் படக்கென்று நிமிர்ந்த நித்யா திரும்பி அசோக், தேனு, தேனு பாட்டி, பூபதி தாத்தாவை பார்த்தாள்..

அவர்கள் சந்தோசமாக தங்கள் பார்வையிலேயே சம்மதம் கூறினார்.. அந்த மகிழ்ச்சி அவள் முகத்திலும் ஒட்டி கொண்டது.. ஆனால் விபுவை பார்த்து மாட்டும் முறைத்தாள்.. பதிலுக்கு அவனும் முறைத்தான்..

இருவரும் பார்வையும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நின்றது.. இங்கே இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க சிந்து காரில் பயணம் செய்து கொண்டு இருந்தாள் அவளது திட்டத்தை செயல் படுத்த..   

                                        மனம் – மயக்கும்..           

                 

Advertisement