Advertisement

 

 

மனம் – 10

 “ டேய் உனக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லையா ?? ஏன் டா நித்யா கிட்ட போய் பழசை எல்லாம் நியாபகப்படுத்துன ?? அவளை நாங்க இந்த அளவுக்கு மாத்துனதே பெரிய விஷயம் டா.. ஆனா நீ ஏன்டா ?? “ என்று தலையில் அடித்து கொள்ளாதா குறையாக பேசியது அசோக் தான்.. 

தன் நண்பன் பேசுவதை பதில் ஏதும் பேசாமல் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தான் விபு.. அவன் அமைதியாக இருப்பதே அசோக்கிற்கு இன்னும் கோவத்தை தூண்டியது..

“ டேய் என்ன டா ??  நானும் அப்ப இருந்து பார்த்துட்டு இருக்கேன் ஏதோ இமய மலைக்கு போயிட்டு வந்தவன்  மாதிரி திட்டுறதுக்கெல்லாம் அமைதியா நிக்கிற?? ” என்று மேலும் பொரிந்தான் அசோக்..

இதற்கும் விபு எதுவும் பதில் பேசவில்லை.. இதற்க்கு மேல் இவனை என்ன சொல்லி திட்டுவது என்று அவனது முகத்தையே முறைத்து பார்த்துகொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்து விட்டான் அசோக்..

அவனது பார்வையை பார்த்து சிரிப்பு தான் வந்தது விபுவிற்கு.. அதை பார்த்த அசோக் “ டேய் சிரிக்காத.. நானே கடுப்புல இருக்கேன்.. “ என்று மேலும் வாய் திறந்தான் அசோக்..

அவனை நோக்கி தன் கைகளை உயர்த்தி “ பேசிட்டயா ?? ஏன் டா உனக்கு என்னைய பத்தி தெரியாதா ?? நான் வேணும்னே அப்படி பேசி இருப்பேனா ?? சொல்லு.. அப்புறம் இப்ப சொன்னயே இந்த அளவுக்கு அவளை மாத்த நாங்க ரொம்ப கஷ்ட பட்டோம்னு..”

“ ஏன் நல்லா யோசனை பண்ணி சொல்லு முதல்ல மல்லி இப்படி தான் இருந்தாளா ?? நேத்து தான் தேவி அவ காலேஜ் போட்டோஸ் கல்சுரல் போட்டோஸ் எல்லாம் காட்டுனா.. அதுல மல்லி எப்படி இருக்க தெரியுமா ?? அப்படியே தேவதை மாதிரி  “ என்று கூறி தன் கண்களை இறுக மூடி திறந்தான்..

அப்பொழுது தான் அசோக்கிற்கு தன் நண்பனின் வேதனை புரிந்தது.. விபுவின் தோள்களில் கை போட்டு “ சாரி டா.. எனக்கு புரியுது.. நான் எதோ கோவத்துல கொஞ்சம் அவசர பட்டுட்டேன்.. ஆனா அவ பாவம்டா.. வாழ்கையில ரொம்ப பட்டுட்டா.  எதையுமே வெளிய காட்டிக்க மாட்டா “ என்றான் அசோக்..

“ சாரி எல்லாம் வேண்டாம் அசோக்.. நீங்க எல்லாம் மல்லிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நினைக்கறிங்க.. ஆனா நான் அவகூட சேர்ந்து வாழணும்னு ஆசை பாடுறேன் டா.. என்னோட மொத்த வாழ்க்கைக்கும் அவ வேணும்னு நினைக்கிறேன் டா “ என்றான் கவலையாக..

மீண்டும் விபுவே பேச தொடங்கினான் “யோசனை பண்ணி பாரு அசோக்.. மல்லி ஏன் இப்படி இருக்கனும் ?? யாருக்காக தன் உருவத்தையே கூட மாத்திகிட்டு இருக்கனும்?? அவ மனசுல வேற எதுவோ ஒரு பயம் இருக்கு டா.. அதை விட்டு அவ வெளிய வரணும்.. நமக்கு ஒண்ணுன்னா பார்த்துக்க எல்லாரும் இருக்காங்கன்னு மல்லி நம்பனும்..” என்றான்

விபுவின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்த அசோக் “ ஆமா விபு.. இப்பதான் எனக்கும் புரியுது.. நித்யா மனசுல வேற எதுவோ ஒன்னு இருக்கு.. அவங்க அப்பா அம்மா இல்லைங்கிரதையும் தாண்டி அவ மனசுல வேற எதுவோ இருக்கு டா.. நான் தான் இதை எல்லாம் புரிஞ்சுக்காம இருந்துட்டேன்.. ” என்றான்..

“ ஹ்ம்ம் என்னைய பொறுத்த வரைக்கும் மல்லி முழுக்க தன் வேதனை, பயத்தை எல்லாம் விட்டு பழைய மல்லியா என் கூட வாழனும் டா.. அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும் எனக்கும் தெரியும்.. ஆனா அவ மனசு மாறும் வரைக்கும் நான் பொறுமையா இருப்பேன் டா” என்றான் விபு.. இதை கூறும் பொழுது அவனது குரலில் சொல்லொணாத வேதனை இருந்தது..

“ எல்லாமே நல்லதா நடக்கும் டா “ என்று தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் அசோக்..

இங்கே இப்படி நண்பர்கள் பேசி கொண்டு இருக்க, அங்கே வேறு ஒரு இடத்தில தன்  தோழியுடன் பலத்த ஆலோசனையில் இருந்தாள் சிந்து..

அவள் எண்ணியது போல கம்பெனி நிர்வாகம் ஒன்றும் எளியதாய் இல்லை.. வெளிநாட்டில் சென்று படித்து விட்டு வந்து விட்டால் மட்டும் எல்லாம் செய்து விட முடியாது என்பதை புரிந்து கொண்டால்..

தான் நினைத்தது நடக்கவில்லை என்பதை உணரவும் அவளுக்கு மனதில் எரிச்சலாக வந்தது.. சந்திரவரதன் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் கூற முடியாமல் திகைத்தாள்..

அப்பொழுதுதான் அவளுக்கு அவளின் தோழியிடம் இருந்து தவறான ஆலோசனை கிடைத்தது.. அவளது நெருங்கிய தோழி ஒருத்தி கூறினாள் “ ஹேய் சிந்து.. நீ ஏன் இப்படி கஷ்டபடுற.. பேசாம கம்பனியை தூக்கி பழைய மாதிரி உன் அங்கிள் கிட்ட குடு “ என்றாள்.. அதற்கு சிந்து “ நோ .. நோ அப்புறம் எனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டாமா ?? ” என்று மறுத்தாள்..

“ ஹே டியர்,… முதல்ல நான் சொல்லுறதை கேளு.. பேருக்கு தான் உன் கம்பனியை குடுக்க சொன்னேன்.. அவங்க மேற்பார்வை பார்க்கட்டும் ஆனா அது உன் பெயரில் இருக்கட்டும்..”

சிந்து “ அது சரி எல்லாம் அவங்க கிட்ட குடுத்து நான் அப்புறம் ஒவ்வொரு காசுக்கும் அவங்க கிட்ட கை ஏந்தனுமா ?? “ என்றாள் அழாத குறையாக..

அதை கேட்ட அவள் தோழி சிரித்தே விட்டாள் “ சிந்து சிந்து .. நீ ஏன் கை ஏந்தணும் ?? சொல்ல போனா நான் சொல்லுற ஐடியாவில்  நீ VS  குழுமத்திற்கு முதலாளியே ஆகலாம்..” என்று மேலும் தூண்டி விட்டாள்..

சும்மாவே சிந்துவிற்கு தான் பெரிய புள்ளியாக வரவேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசை.. தன் தோழியின் கூற்றை கேட்கவும் லேசாக அவளது மனமும் மயங்க தான் செய்தது..

“ என்ன டி சொல்லுற?? ” என்று கண்கள் விரித்து கேட்டாள்..

அவளது தோழி கூறுவதை கேட்க கேட்க சிந்துவின் முகம் மலர்ந்தது. இனிமேல் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டாள்.. அவளுக்கு நித்யாவின் கடந்த காலம் தன் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..

இது எதுவுமே தெரியாத நித்யமல்லிகா அங்கே தன் அறையில் படுத்து ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் அழுது கொண்டு இருந்தாள்..

அந்நேரம் அங்கே வந்து தேனு பாட்டி இவள் அழுதுகொண்டு படுத்து இருப்பதை பார்த்து மனதில் வேதனை கொண்டார்.. ஆனாலும்  அதை வெளிகாட்டாமல்

“ நித்யா… நித்யா கண்ணு இப்ப ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க ?? ” என்று அவளிடம் சென்று ஆதரவாக கேட்டார்..

அவர் கேட்டதற்கு பதில் கூறாமல் அவரது மடியில் தலை சாய்த்து மீண்டும் கேவி கேவி அழ தொடங்கினாள்..

அவளது முதுகையும் கூந்தலையும் ஆதரவாக நீவியபடி “ நித்யா மா… அழுகாதா டா.. நீ அழுதது எல்லாம் போதும்.. இனி சந்தோசமா இருக்கனும் கண்ணு.. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை காத்துகிட்டு இருக்கு.. அதை நீ சந்தோசமாக வாழனும் “ என்று அவர் கூறவும் விலுக்கென்று நிமிர்ந்து அவரை பார்த்தாள் நித்யா..

“ எப்படி பாட்டி?? எப்படி என்னால எல்லாத்தையும் மறந்திட்டு புதுசா ஒரு வாழ்க்கை வாழ முடியும் ?? என்னால எதுவுமே முடியல பாட்டி.. என்னால எதையுமே மறக்க முடியலையே “ என்றாள் ஆற்றாமையாக..

அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தி “ ஏன் முடியாது கண்ணு ?? இப்ப எதுக்கு இப்படி அழுகுற ?? உன் கழுத்துல தாலி கட்டிட்டு அதுல இருக்க ஈரம் கூட காயமா குடிச்சிட்டு வண்டி ஓட்டி பரலோகம் போயி சேந்தானே அந்த மகராசன நெனைச்சு அழுகை வருதா ?? ” என்று கேட்டார்..

“ ச்சி ச்சி.. பாட்டி என்ன இப்படி கேக்குறிங்க?? எனக்கு நடந்தது எல்லாம் ஒரு கல்யாணமா ?? எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்படி கேட்டா எப்படி பாட்டி ??” என்று மேலும் அழ தொடங்கினாள்..

“அப்புறம் என்ன  கண்ணு?? உனக்கே அதை ஒரு கல்யாணமா ஏத்துக்க முடியல.. சொல்ல போனா அது கல்யாணமே இல்லை.. நீ இன்னும் வாழவே ஆரம்பிக்கலை நித்யாமா.. இப்ப உனக்கு வேணா இதெல்லாம் பெருசா தெரியாம இருக்கலாம்.. ஆனா உனக்குன்னு கண்டிப்பா ஒரு துணை வேணும் கண்ணம்மா “

“ நீங்க சொல்லுறது எல்லாம் எனக்கு புரியுது பாட்டி.. ஆனா விபா.. அவரு.. அவரு..” என்று எதுவோ கூற வந்து கூற முடியாமல் தவித்தாள்..

“ என்ன டா எதுவா இருந்தாலும் சொல்லு  கண்ணு “

“ இல்ல பாட்டி அவரு என் மேல ரொம்ப அன்பு வச்சு இருக்காரு.. ஆனா என்னைய கல்யாணம் செஞ்சுகிட்டா அவருக்கு அது அவமானத்தை குடுக்காதா ?? அவரு போற வர இடத்துல எல்லாம் கேலி பேச மாட்டாங்களா ?? அதுவும் இல்லாம எனக்கு பயமா இருக்கு பாட்டி “ என்று கூறி மீண்டும் அவர் மடியில் தலை சாய்த்து கொண்டாள்..

நித்யாவின் முதுகில் தட்டி குடுத்தபடி பேசினார் தேனு பாட்டி ” நித்யாமா இப்ப உனக்கு 24 வயசு தான் ஆகுது.. இப்ப இருந்து நீ தனியா இருக்கனும்.. அது ரொம்ப கஷ்டம் டா..”

“உனக்கு இப்படி ஆயிடுச்சேன்னு நினைச்சு நினைச்சு உங்க அப்பாவும் அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க.. நீ சந்தோசமா வாழுறதை பார்த்தா தான்டா அவங்க மனசு சாந்தி அடையும்..  “

“ விபு நல்ல பையன்.. அவங்க குடும்பமும் நல்ல குடும்பம்.. உன் மேல அன்பும், மரியாதையும், வச்சு இருக்காங்க.. இதற்க்கு மேல உனக்கு ஒண்ணுன்னா நாங்க எல்லாம் இருக்கோம்டா.. நல்லா யோசிச்சு முடிவு எடு “ என்று அவர் கூறிக்கொண்டு இருக்க

என்ன தவிர்த்தாளும் நித்யாவின் கடந்த காலம் அவளது கண் முன்னே காட்சிகளாக விரிந்தது..

“ ஹலோ லல்லி..  நான் பேசுறது கேட்குதா ?? ஹா எக்ஸாம் ஓவர் லல்லி  இப்பதான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன் லல்லி.. ஆமா இந்த பத்து எங்க?? நான் போன் போட்டதுக்கு எடுக்கவே இல்லை.. சரி அவரை வந்து என்னைய கரெக்ட்டா கூட்டிட்டு போக சொல்லு   “ என்று தன் தாய் லலிதாவிடம் தந்தை பத்மநாபனை பற்றி பேசியது வேறு யாரும் இல்லை நித்யமல்லிகா தான்..

விஷயம் வேறு எதுவும் இல்லை.. அன்று தான் அவளுக்கு கடைசி பரிட்சை.. கல்லூரி வாழ்க்கை முடிந்துவிட்டது..  தங்கள் குலதெய்வ கோவில் திருவிழா என்று நித்யாவின் அப்பாவும் அம்மாவும் இரண்டு நாள் முன்னே கிளம்பி தங்கள் பூர்விக ஊரான மலையம்பாளையம் சென்று இருந்தனர்..

நித்யா பரிட்சை முடித்துவிட்டு அங்கு செல்வதாக ஏற்பாடு.. அதற்கு தான் இப்பொழுது தன் தாயிடம் பேசிக்கொண்டு இருந்தாள்..

“ ஹே லல்லி.. என் டிரஸ் எல்லாம் எடுத்துகிட்டு போயாச்சா ?? நான் எல்லாம் பெட்டி தூக்கிட்டு வரமாட்டேன்.. ஆமா..”

“ சரி சரி பின் பக்கம் நான் வாசல் திறக்கவே இல்லை.. நீ பூட்டிட்டு போனது தான்.. சரி லல்லி டியர் பத்திரமா வந்து சேருவேன்.. பாய் டா டா..  “  என்று கூறி சந்தோசமாக கிளம்பினாள்..

பாவம் அவளுக்கு தெரியவில்லை அங்கே தன் வாழ்க்கையே மாற போகிறது என்று.. ஒரு வழியாக சரியான பேருந்து ஏறி தனக்கான இடத்தையும் பிடித்து அமர்ந்து விட்டாள்..

“ யப்பா என்ன வெயில்.. இன்னும் அங்க போயி சேரவே ராத்திரி ஆகிடுமே “ என்று அழுதவாறே கிளம்பியவளுக்கு முதலில் பொழுது போகமால் இருந்தாலும் அதன் பிறகு தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒரு வயதான பெண்மணியுடன் பேச ஆரம்பித்துவிட்டாள்..

அவருக்கும் இவள் போல பொழுது போகவில்லையோ என்னவோ இருவரும் பேச ஆரம்பிக்கவும் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது கூட தெரியமால் பேசி கொண்டு இருந்தனர்..

ஒருவழியாக நடத்துனர் ஊர் பெயர் சொல்லி அழைக்கவுமே நித்யா இறங்கினாள்.. அவளை வீட்டிற்கு அழைத்து கொண்டு செல்ல அசோக் வந்து இருந்தான்.. “ ஹே அசோக் அண்ணா என்ன நீங்க வந்து இருக்கீங்க ?? அதிசயம் தான் போங்க.. “ என்றாள் உற்சாகமாக..

“ ஏன் நித்யா நான் வரமாட்டேனா?? எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு தங்கச்சி..” என்றான் அவனும் சிரித்தபடி..

“ தங்கச்சி இருக்கிறது எல்லாம் சரி.. இல்லை அண்ணி கிட்ட இருந்து அங்கிட்டு இங்கிட்டு நகர மாட்டிங்களே.. இப்போ குட்டி கெளதம் வேற.. கேட்கவே வேணாம்” என்று கிண்டல் செய்தாள்.. ஆம் அப்பொழுதுதான் கெளதம் பிறந்து ஒரு வருடம் ஆகிறது..

முதல் மொட்டை குலசாமி கோவிலில் போட வேண்டும் என்று அனைவரும் வந்து இருந்தனர்.. “ அட நீ வேற நித்யாமா.. இப்ப எல்லாம் உங்க அண்ணிக்கு என்னைய கவனிக்க எங்க நேரம் இருக்கு “ என்று இருவரும் சந்தோசமாக பேசியபடி நடந்து வீடு நோக்கி சென்றனர்..

ஆனால் நித்யா ஒன்றை மட்டும் அறியவில்லை.. தன்னையே தின்று விடுவது போல இரு விழிகள் அவளை தொடர்வதை மட்டும் அவள் ஏனோ உணராமல் இருந்துவிட்டாள்.. இல்லை தன் அண்ணனை பார்த்த மகிழ்ச்சியில் மற்ற எதுவும் அவளுக்கு பெரிதாக படவில்லையோ என்னவோ..

ஒருவழியாக வீட்டை அடைந்து அனைவரிடமும் கதை பேசிவிட்டு, கௌதமை தூக்கி கொஞ்சிவிட்டு, அசோக் புலம்பலை எல்லாம் அவன் மாணவி குமுதவிடம் போட்டு கொடுத்துவிட்டு தன் தாயிடம் சிறு திட்டையும் வாங்கி விட்டு இப்படி எல்லா கலாட்டாவும் முடிந்து உறங்க சென்றாள் நித்யா..

ஏனோ அவள் மனம் அமைதியாக இல்லை என்பதை உணர்ந்தவள் தண்ணீர் குடித்து விட்டு வந்து படுத்தாள்.. புது இடத்தில் படுத்து இருப்பதால் தான் இந்த படபடப்பு என்று எண்ணிக்கொண்டவள் பின் தூங்கி விட்டாள்..

மறுநாள் கோவிலில் பொங்கல் வைத்துவிட்டு கௌதமிற்கு மொட்டை எடுப்பதாக ஏற்பாடு.. ஆகையால் அனைவரும் வேகமாக கோவிலுக்கு கிளம்பி கொண்டு இருந்தனர்..

“ லல்லி ப்ளீஸ் நான் சுடிதாரே போட்டு வரேனே “ என்று தான் தாயிடம் வால் பிடியாக பின்னே அலைந்து கெஞ்சி கொண்டு இருந்தாள்.. “ அதெல்லாம் இல்ல நித்யா.. சேலை தான் கட்டனும்.. இன்னும் நீ என்ன சின்ன பொண்ணா?? போ போயி ரெடி ஆகு “ என்று அவளை அறைக்குள் தள்ளிவிட்டு சென்றார் லலிதா..

எதிரே வந்த தன் கணவரிடம் “ என்னங்க சின்ன பையன் கெளதம் கூட சொல்ற பேச்சு கேட்டு நடக்கிறான் ஆனா உங்க பொண்ணு இருக்கே.. என் உயிரே போகுது.. சரியான வாய் வேற.. சொல்லறதுக்கெல்லாம் ஏதாவது பதில் பேசிகிட்டே இருக்கா “ என்று கூறியவரின் முகத்தில் பெருமிதமும் கலந்தே இருந்தது..

“ ஆமா இப்படி தான் சொல்லுவ.. இன்னும் ஒரு மாசத்துல அவ வெளியூருக்கு வேலைக்கு போறேன்னு கிளம்புவா அப்ப கிடந்தது என் பொன்னை விட்டு இருக்க முடியாதுன்னு புலம்புவ “ என்று சிரித்தார் பத்மநாபன்..

லலிதா பதில் கூறும் முன்னே அங்கே இருந்த உறவுகளில் சற்று வயதான பெண்மணி “ என்ன லலிதா உன் பொண்ணு வேலைக்கு போக போறாளா ?? இது என்ன ஆண்டவா ?? கலி காலம்.. வயசு பொண்ணு… அதுவும் பாக்க நல்ல லட்சணமா மூக்கும் முழியுமா இருக்கா அவளையா தனியா அனுப்ப போறீங்க “ என்று கேட்ட படி அருகில் வந்தார்..

அவருக்கு என்ன பதில் கூறுவது.. படக்கென்று எதுவும் பேசிவிட முடியாதே.. ” அதெல்லாம் இல்லை அத்தை.. அவள் பார்த்து இருந்துப்பா.. உலக அனுபவம் வேணும் இல்லையா ?? “ என்று கூறி சிரித்தார் பத்மநாபன்..

“ உலக அனுபவமா ?? கல்யாணம் செஞ்சு குடுத்திட்ட எல்லாம் தன்னால தெரிஞ்சிட போகுது.. லலிதா எல்லாம் கடை நிர்வாகம் படிச்சா உன்னைய கல்யாணம் பண்ணா ?? இல்லையே இப்ப பாரு எப்படி எல்லாம் நல்ல கவனிக்கிறா ?? நான் சொல்லுறதை கேளு நல்ல வரன் வந்தா உன் மகளை கல்யாணம் செய்து குடுத்திடு ”என்றார் கறாராக.

அதற்கு லலிதா “ இல்லை சித்தி இன்னும் நாங்க அவ கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்க கூட இல்லை.. நேத்து தான் படிப்பு முடிஞ்சு இருக்கு.. அதுக்குள்ள “ என்று இழுக்கவும்

அந்த பெண்மணி “ என்னவோ பண்ணுங்க.. எல்லாம் பட்டினத்து பழக்கம்.. நான் நல்லதுக்கு தான் சொல்லுறேன்.. அப்புறம் என் பொண்ணு அவன் கூட போயிட்டா இவன் கூட போயிட்டான்னு சொல்லிடு வந்து இங்க நிக்க போறீங்க “ என்று பேசியபடியே சென்று விட்டார்..

இருவருக்கும் கோவம் தலைக்கேறியது.. ஆனாலும் இங்கே இத்தனை சொந்த பந்தங்கள் சொல்ல்திருந்த வேலையில் எதையும் வெளிபடையாக காட்ட முடியாதே.. அதே நேரம் அழகான அரக்கு நிற சேலை கட்டி அதற்கு ஏற்ப நகை அணிந்து தலையில் பூ சூடி அழகு தேவதையாக வந்த நித்யாவை கண்ட இருவருக்கும் தங்கள் கோவம் காற்றோடு கரைந்து போனது..

ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.. அங்கே அசோக்கின் அம்மாவும், நித்யாவின் அம்மாவும் பொங்கல் வைத்தனர்.. குமுதா கௌதமை கவனித்து கொண்டு இருந்ததால் அவளுக்கும், தன் அம்மா மற்றும் பெரியம்மா கேட்கும் உதவிகளை ஓடி ஓடி செய்து கொண்டு இருந்தாள்..

அந்நேரம் அங்கே அந்த ஊரின் சற்று வசதியான குடும்பமாகிய நாகராஜன் குடுப்பம் வந்து இறங்கியது.. நாகராஜன் அந்த வட்டாரத்தில் பெரும்புள்ளி.. அவர் மனைவி நீலவேணி அத்தனை பெரிய குடும்பமும் தன் சொல் பேச்சு கேட்கிறது என்ற ஆணவம் எப்பொழுதும் இருக்கும்..

அவர்களின் மூத்த மகன் பொன்னரசன், அவன் மனைவி சந்தியா.. திருமணம் ஆகி ஆறு மாதங்களே நிறைவடைந்த தம்பதிகள்.. ஆனால் நீலவேணி என்ன சொல்கிறாரோ அதை அப்படியே இருவரும் செய்வர்..

இவர்களின் இரண்டாவது மகன் தான் முகிலரசன். அடாவடி பேர்வழி.. தான் நினைத்ததை சாதிக்கும் ரகம்.. பிடிவாதம் நிறைய.. நீலவேணி கூட தன் இளைய மகனிடம் சற்று யோசித்தே பேசுவார்..

இதுபோக நாகராஜன் உடன் பிறந்தோர், நீலவேணி உடன் பிறந்தோர் என ஒரு கூட்டமே வந்து இறங்கியது…

நித்யாவிற்கு இவர்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது சிரிப்பாக வந்தது.. குமுதவிடம் “ அண்ணி அங்க பாருங்களேன்.. அந்தம்மாவால தன் உடம்பையே தூக்கி நடக்க முடியல ஆனா இதுல இவ்வாளோ நகையையும் மாட்டிகிட்டு எப்படி தான் நடக்கிறாங்களோ ?? பக்கத்துல அது ஒருவேள அவங்க மகளோ இல்லை மருமகளோ அந்த பொண்ணு முழிக்கிறதே பாவமா இருக்கு “ என்று கூறி சிரித்தாள்..

“ச்சு நித்யா சத்தமா பேசாதா.. இந்த கோவில் இருகிறதே அவங்க இடத்துல தான்.. அவங்க வம்பு நமக்கு வேண்டாம்.. சும்மா இரு “ என்று அடக்கினால் குமுதா..

“ அட போங்க அண்ணி “ என்று கூறி கலகலவென்று சிரித்தாள் நித்யா..

அந்த சிரிப்பை கவனித்த முகிலரசன் பார்வை அப்படியே நித்யாவை விழுங்கி விடுவது போல பார்த்தது “அட நம்ம பச்சக்கிளி.. சும்மா சேலையில ஆள தூக்குறாளே.. “ என்று அவளையே மேலிருந்து கீழாக பார்த்தபடி வந்தான்..

தன் மகன் பார்வையை புரிந்து கொண்ட நீலவேணி தன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த தன் தங்கையிடம் “ டீ.. அங்க பாரு அந்த குட்டி யாரு டி ?? சுண்டுனா செவந்திடுவா போல?? யாரு வீட்டு குட்டி ?? இதுக்கு முன்ன பார்த்தது இல்லையே நம்ம ஊருல ?? ” என்று கேட்கவும் பக்கத்தில் இருந்த பெண் விசாரித்து கூறினார்..

இதை கேட்கவும் “ அந்த வீட்டு ஆளுங்களா ?? அவங்க தான் ரொம்ப வருஷம் முன்னாடியே மெட்ராஸ் போயிட்டாங்களே.. ஆனாலும் சொல்ல கூடாது.. பொண்ணு நல்லா தான் இருக்கு.. நம்ம சின்னவனுக்கு தோதா இருக்கும்ல “ என்று கூறி சிரித்தார்..

அதன் பிறகு தன் கணவரின் காதில் எதுவோ கூறினார்.. அதற்கு அவரும் சரி என்பது போல தலை ஆட்டவும் நீலவேணிக்கு முகத்தில் ஒரு புது பெருமை வந்தது.. தன் பேச்சை கேட்க இன்னும் ஒரு புது அடிமை வர போகும் சந்தோசம் போல..

நித்யா போகும் இடம் வரும் இடமெல்லாம் முகிலரசன் பின்னே சென்றான். முதலில் இதை கவனிக்காத நித்யா அதன் பிறகு அசோக்கிடம் சென்று கூறினாள் .. அவனோ “ திருவிழான்னா நிறைய பேர் இப்படி தான் சுத்துவாங்க.. நீ எதையும் கண்டுக்காம இரு போதும் “ என்று கூறவும் இவளும் அமைதியாகி விட்டாள்.. ஆனால் முகிலரசன் விடுவாதாய் இல்லை..

அவனது பார்வையே நித்யாவிற்கு அருவருப்பாக இருந்தது.. தப்பித்தோம் பிழைத்தோம் என்று கௌதமின் மொட்டை முடியவும் வீட்டிற்கு பறந்து வந்து விட்டாள்..” ச்சே என்ன மனுஷன்  இவன்.. அவனும் அவன் பார்வையும்.. “ என்று திட்டிவிட்டு அதன் பின் அதை மறந்தே போனாள்..

மாலை வேலை குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் பொழுது வெளியே மேலதாளம் சத்தம் கேட்டது.. சரி யார் வீட்டிலாவது விசேஷம்  இருக்கும் என்று இருந்தனர்.. ஆனால் சத்தம் தங்கள் வீட்டின் முன் வந்து நிற்கவும் தான் என்ன என்று வெளியே சென்று பார்த்தனர்..

அங்கே நாகராஜன் நீலவேணி குடும்பம் சகிதமாக கையில் தம்புல தட்டோடும், சீர் தட்டோடும் பல பெண்கள் புடை சூழ, மாப்பிள்ளை கோலத்தில் முகிலரசொனோடு நிற்பதை காணவும் அனைவருக்கும் திகைப்பாய் இருந்தது..

லலிதா தேனு பாட்டியிடம் “ யாரு இவங்க எல்லாம் “ என்று விசாரிக்கவும் அவர் விவரம் கூறினார்.. அதற்குள் காலையில் லலிதாவிடம் பேசிய அவர் உறவு பெண்மணியான சரோஜா  “வாங்க வாங்க.. உள்ள வாங்க “ என்று கூறி அனைவரையும் உள்ளே அழைத்து வந்துவிட்டார்..

அசோக்கிற்கு தந்தை இல்லை.. ஆகையால் நித்யாவின் தந்தை மட்டும் தான் அந்த குடும்பத்தில் இருக்கும் தலைக்கட்டு இப்பொழுது.. அனைவரும் உள்ளே சென்று அமரவுமே நாகராஜன் நேராக விசயத்திற்கு வந்தார் “ தப்பா எடுத்துக்க வேண்டாம்.. காலையில கோவில்ல உங்க பொண்ண பார்த்தோம்.. பார்த்ததுமே எங்க பையனுக்கும் வீட்டம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.. அதான் உங்க கிட்ட பேசிட்டு அப்படியே பரிசம் போட்டு போகலாம்னு வந்தோம் “ என்றார்.

அவரது குரலில் அடக்கம் இல்லை,, நான் சொல்வதை நீங்கள் கேட்டு தான் ஆகவேண்டும் என்ற அடக்குமுறை மட்டுமே இருந்தது..

இதை கேட்டு அனைவரும் திகைத்துவிட்டனர்.. வெளியில் என்ன சத்தம் என்று வந்த நித்யா இதை கேட்டு திகைத்துவிட்டாள்.. ஆனாலும் அவளுக்கு மனதில் தைரியம். எப்படியும் தன் அப்பா அம்மா அண்ணன் யாரும் இதற்கு சம்மதிக்க போவது இல்லை என்று.. ஆகையால் நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்..

அவளை பார்த்து ஒரு வெற்றி புன்னகை புரிந்தான் முகில்.. அவளுக்கு ச்சி என்று வந்தது.. அவளிடம் வந்த நீலவேணி அவளை மேலிருந்து கீழாக பார்த்து “படிச்ச பொண்ணு.. பாத்தாலே தெரியுது.. ஹ்ம்ம் என் வீட்டுக்கு வந்திடு உன்னைய ராணி மாதிரி நான் பார்த்துக்கிறேன் என்ன.. நீ தான் என் ரெண்டாவது மருமக.. நான் மட்டும் உன்னைய என் பையனுக்கு பேசலைன்னு வையி திருவிழா முடியவும் என் மகன் உன்னைய தூக்கிட்டு போயி இருப்பான்  ” என்று பெருமையாக பேசி சிரித்தார்..

நித்யாவின் குடும்பத்தினருக்கோ அவரது சிரிப்பே ஒரு பயத்தை தந்தது.. சென்னையில் தானுண்டு தங்கள் வேலை உண்டு என்று வாழும் நடுத்தர குடும்பம்.. இப்படி இத்தனை பேரை அதும் ஆளு அம்பாக, பட்டும் பகட்டுமாக பார்க்கவும் சற்று அதிர்ந்துவிட்டனர்..

இதை கேட்டு முகம் சுளித்த நித்யா திரும்பி தன் பெற்றோர்களை பார்த்தாள்.. அங்கே அந்த சரோஜாவோ “ நான் காலையில தான் சொன்னேன்.. நல்ல இடம் வந்தா உங்க பொண்ண குடுத்திடுங்கன்னு.. பாரு இப்ப எப்படிபட்ட ஒரு வரன்.. அந்த வீட்டுல உன் பொண்ணு வாழ குடுத்து வச்சு இருக்கனும்.. அவ ராணி மாதிரி அங்க இருக்கலாம்.. சரின்னு சொல்லுங்க: என்று தூபம் போட்டு கொண்டு இருந்தார் நித்யாவின் அப்பா அம்மாவிடம்..

அவர்களோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தங்கள் மகளை பார்ப்பதும், சுற்றி இருப்பவர்களை பார்பதுமாக இருக்காவும் நீலவேணி “ அட என்ன சம்பந்தி இப்படி எதுவும் சொல்லாம இருந்தா எப்படி ?? நல்ல நேரம் முடிய போகுது தட்டு மாத்திக்கலாம் வாங்க “ என்று தன் பேச்சில் முன்னேறினார்..

அசோக் தான் “ இல்லை.. இப்ப நாங்க எங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணுற எண்ணத்தில் இல்லை “ என்று வேகமாக கூறினான்..

ஆனால் இதை எல்லாம் சட்டை செய்யாத முகில் நேரே நித்யாவிடம் சென்று “ நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு சரி சொல்லல, நீங்க யாரும் அங்க சென்னை போய் சேர முடியாது சொல்லிட்டேன்..” என்று அவள் காதுகளில் மட்டும் கேட்கும் படி கூறினான்..

அவனது குரலும் பார்வையும் தான் சொல்லுவதை கண்டிப்பாக செய்வேன் என்பதை உணர்த்தியது.. நித்யாவிற்கு முதல் முறையாக பயம் வந்தது.. வேகமாக சென்று தன் அன்னையிடம் நின்று கொண்டாள்..

அவளை பாவமாக பார்த்த லலிதாவோ “ இல்லைங்க நீங்க கேட்டு வந்தது சந்தோசம் தான்.. ஆனா நேத்து தான் எங்க பொண்ணு படிப்பு முடிச்சு இருக்கா.. “ என்று அவர் பேச வந்ததை காதிலேயே வாங்காமல் நாகராஜன்

“ அட என்னமா நீங்க.. உங்க பொண்ணுக்கு நல்ல வாழ்கை வீடு தேடி வந்து இருக்கு அதைவிட்டு கதை பேசுறிங்க.. இப்ப நீங்க சரி சொன்னா நல்ல முறையில கல்யாணம் நடக்கும்.. இல்லைனா நாங்க எதுவும் செய்யமாட்டோம் எங்க பையன் என்ன பண்ணுவான்னு எங்களுக்கு எதுவும் தெரியாது “

“ அப்புறம் எங்க வீட்டு வாசலுக்கு வந்து நின்னு எங்க பொண்ணுக்கு வாழ்க்கை குடுங்க, தப்பு நடந்துபோச்சுன்னு சொன்னா நாங்க எதுவும் செய்ய முடியாது” என்று அக்மார்க் வில்லனாக பேசினார்..

இப்படி ஒரு பேச்சை கேட்டாள் எந்த பெற்றோருக்கு தான் மனம் பதறாது.. இருவருக்கும் முகமெல்லாம் வேர்த்துவிட்டது.. நிதயவிற்கு மேற்கொண்டு தான் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை..

சரோஜாவோ “ இங்க பாரு லலிதா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத.. இது மாதிரி ஒரு சம்பந்தம் கிடைக்க குடுத்து வச்சு இருக்கனும்.. அவங்க சொல்லுறதை கண்டிப்பா செய்வாங்க.. அதுக்கு மேல உங்க விருப்பம் “ என்று அவரும் கூறவும் அங்கே பெருத்த அமைதி நிலவியது.

பத்மநாபன், லலிதா, அசோக் மற்றும் அசோக்கின் தாய் நால்வரும் ஒரு அறைக்குள் சென்று பேசிவிட்டு வந்தனர்.. அவர்களுக்கு நித்யாவின் மானமே பெரியதாக பட்டதால் இந்த திருமணத்திற்கு சரி என்று கூறினார்..

நித்யாவிற்கு நேராக இடியே தன் தலை மேல் வந்து விழுந்தது போல இருந்தது.. ஆனால் அனைவரின் முன்னும் தன் பெற்றோர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக தன் அறைக்குள் சென்று முடங்கி விட்டாள்.

அவளுக்கு உள்ளம் அப்படியே பற்றி கொண்டு இருந்தது.. அவளுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது தனது குடும்பம் எந்த காரணத்தினால் இப்படி ஒரு முடிவை எடுத்தது என்று.. ஒன்றும் செய்ய இயலாதவளாய் அழுது தீர்த்தாள்..

அவளது குடும்பத்தினர் என்ன சமாதானம் சொல்லியும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.. சரோஜா வந்து “ இங்க பாரு நித்யா பார்க்க தான் அவங்க எல்லாம் கரடு முரடா இருப்பாங்க.. ஆனா நீ அங்க சந்தோசமா வாழலாம்.. அந்த பையன் உன்னைய பார்த்து பிடிச்சு போயி தானே இப்படி நடக்குறான்..” என்று தன் பங்கிற்கு பேசினார்.    

இரண்டே நாளில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு அதை நடத்தியும் காட்டிவிட்டனர் நாகராஜன் நீலவேணி குடும்பத்தினர்.. ஆனால் பெயருக்கு கூட நித்யாவின் குடும்பத்தில் யார் முகத்திலும் ஒரு துளி கூட சந்தோசம் இல்லை..

அவளது கழுத்தில் தாலி ஏறும் பொழுது கூட அவளால் அதை உணர முடியவில்லை.. அவளது மனம் மரத்து போய் விட்டது. முகிலரசன் நித்யாவின் காதுகளில் “ என்ன பச்சக்கிளி நான் சொன்ன மாதிரி செஞ்சுட்டேனா?? இனி உனக்கு எல்லாம் நான் தான்.. என்னைய விட்டு நீ எங்கயும் போக முடியாது.. “

“ என்ன பாக்குற.. நான் அடயனும்ன்னு நினைச்ச எந்த பொண்ணையும் அடையாம விட்டது இல்ல.. ஆனா கல்யாணம் பண்ணனும்னு நினைச்சது உன்னைய மட்டும் தான்..” என்று தன் வீர பிரதாபங்களை பேசினான்..

அவளுக்கு இது இன்னும் பேரிடியாக இருந்தது.. மனம் முற்றிலும் நொறுங்கி போனவளாக சிலையென சமைந்து நின்று விட்டாள்.

அவள் எண்ணி இருந்தது எல்லாம் இது தான், பார்த்ததும் பிடித்து போய் இவன் திருமணம் செய்ய துடிக்கிறான் என்று.. ஆனால் அவன் பேச்சை கேட்டதில் இருந்து அவன் அருகில் நிற்க கூட அவளுக்கு கூசியது..

அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்கள் முடிந்து முகிலரசன் வீட்டிற்கு அழைத்து வந்ததனர் மணமக்களை.. அது வீடு அல்ல மாளிகை போல இருந்தது.. அனைவரும் நன்றாகவே பழகவும் நித்யாவின் பெற்றோருக்கு மனதில் ஒரு சிறு நிம்மதி முளைத்தது..

அவசரத்தில் நடந்த கல்யணம் என்றாலும் தங்கள் மகள் இங்கே சந்தோசமாக வாழ்வாள் என்றே எண்ணினர்..

ஆனால் முகிலரசனின் சுயரூபம் அவனது ஒற்றை வார்த்தையில் நித்யாவிற்கு தெரிந்து விட்டதே.. இனி எப்படி அவள் சந்தோசமாக வாழ முடியும்.. யாரிடமும் எதுவும் பேசாமல் தனக்கு ஒதுக்க பட்ட அறையில் அமைதியாக சென்று அமர்ந்துவிட்டாள்..

நேரே முகிலரசன் தடாலென அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.. நித்யவிற்கோ தூக்கி வாரி போட்டது.. பயந்து போய் எழுந்து நின்று விட்டாள்.

அவளை பார்த்து “ என்ன பச்சக்கிளி.. இப்படி நடுங்குற ?? ஹ்ம்ம் அதுவும் நல்லா தான் இருக்கு. அப்புறம் இன்னொரு விஷயம் எனக்கு உன்னைய பிடிச்சு இருந்துச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன்..அதுக்காக எல்லாம் நான் நீ சொல்லுற மாதிரி ஆடுவேன்னு எதிர்பார்க்க கூடாது.. நான் எங்க அம்மா சொன்னா கூட கேட்கமாட்டேன். புரியுதா ?? “

“ என்ன அப்படி பாக்குற?? நான் இப்படி தான் என் இஷ்டபடி தான் நீ இங்க இருக்கனும்.. சரி சரி ரொம்ப முழிக்காத.. நல்ல அலங்காரம் பண்ணி தயாரா இரு.. ராத்திரி வந்து பாத்துகிறேன் என்ன” என்று ஒரு மாதிரி சிரித்துவிட்டு போனான்..

அவளுக்கு சீ என்று இருந்தது.. “ இப்படியா ஒரு பெண்ணிடம் பேசுவான்.. இவனோடு எப்படி என் வாழ்கை முழுவதும் நான் இருக்க போறேனோ “ என்று மனம் வெதும்பி நின்றாள்..

தன் நண்பர்களுக்கு தண்ணீர் விருந்து குடுக்க சென்றவன் வீடு திரும்பினான் உயிரற்ற சடலமாக.. அதீத போதையில் குடித்து விட்டு வண்டி ஓட்டியவன் மீது பின்னே வந்த வாகனம் மோதியதால் வந்த வினை..

எத்தனை வேகத்தில் நித்யமல்லிகாவின் கழுத்தில் தாலி ஏறியதோ அதை விட வேகமாக தாலி அறுக்க பட்டது.. அனைவரும் ஆசிர்வதித்து வைத்த கும்குமம் அன்றே அழிக்கப்பட்டது..

கையில் அணிந்து இருந்த முகுர்த்த வளையல் நொறுக்க பட்டன.. அந்த வீடே மரண ஓலத்தில் நிரம்பி இருந்தது.. நித்யாவிற்கு தனக்கு நடப்பது எல்லாம் கனவா நிஜமா என்றே புரியவில்லை..

அன்று விடிய காலை தான் மணப்பெண் கோலம் பூண்டாள்.. இரவு வருவதற்குள் விதவை கோலம் தரித்து விட்டாள்.. இது தான் விதியா??

தங்கள் மகளின் நிலையை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தனர் நித்யாவின் பெற்றோர்.. “ இவளது ராசியால் தான் திருமண நாள் அன்றே தங்கள் மகன் இறந்துவிட்டான் “ என்று கூறி அவளை வெளியே  அனுப்பியும் விட்டனர் முகிலரசன் குடும்பத்தினர்..

நித்யாவிற்கு தன் வாழ்கையில் நடக்கும் அனைத்தும் எதுவோ மாய மந்திரம் ஆனது போல இருந்தது.. தனக்கு திருமணம் ஆனதையே உணராதவள் தான் விதவை ஆனதையா உணருவாள்..அவளுக்கு அழுகை கூட வரவில்லை..

தங்கள் மகளை மணக்கோலத்தில் தங்கள் வீட்டிற்கு அழைத்து வர கனவு கண்டு இருந்த நித்யாவின் பெற்றோர் அவள் விதவை கோலத்தில் வீடு நுழையவும் மேலும் தூக்கம் அதிகரித்தது..

சென்னையில் நித்யமல்லிகாவின் வீடே சூனியமாக இருந்தது.. அந்த நேரத்தில் தேனு பாட்டியும், பூபதி தாத்தாவும், அசோக்கும் மட்டும் இல்லை என்றால் நித்யாவும் அவளது பெற்றோரும் என்ன ஆகி இருப்பர் என்றே கூறி இருக்க முடியாது..

தன் மகளை இந்த கோலத்தில் காண பிடிக்காமல் கண்கள் மூடி படுத்த பத்மநாபன் விடியலில் கண் விழிக்க வில்லை.. வேதனை தாங்காமல் இறைவனிடம் சென்று விட்டார்..

இது இரண்டாவது பெரிய அதிர்ச்சி.. இதை யாராலும் தாங்க முடியவில்லை.. லலிதாவோ மயங்கி சரிந்துவிட்டார்.. நித்யா அழுது அழுது கண்ணீர் வற்றி போய் கிடந்தாள்..

அனைவரும் “ இந்த பொண்ணு கழுத்துல எந்த நேரத்துல தாலி ஏறுச்சோ புருசனும் போய் சேந்துட்டான், அப்பாவும் அடுத்து போய் சேந்துட்டாரு “ என்று வாய் கூசாமல் பேசினர்..

இதை கேட்ட லலிதா துடித்து கதறினார்.. ஒரே நேரத்தில் தாயும் மகளும் தாலி இறக்கி விட்டு இருந்தால் அந்த இல்லம் என்ன சந்தோசமாகவா இருக்கும். இருள் சூழ்ந்து போய் இருந்தது..

லலிதாவின் உடல் நலம் கவலை கிடமாக இருந்தது.. தன் கணவரின் பிரிவும், தன் மகளின் வாழ்வும் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி எண்ணியே சில நாட்களில் அவரும் இறைவனிடம் சேர்ந்துவிட்டார்..

இது நித்யாவிற்கு மேலும் பேரிடி.. அவ்வளோதான் தன் கூட்டிற்குள் முடங்கி விட்டாள்.. யார் வந்து என்ன ஆறுதல் கூறினாலும் அவளை அவளது அமைதியில் இருந்து மீட்டு கொண்டு வர முடியவில்லை..

உயிர் வாழ எண்ணமே இல்லாமல் இருந்தவளை அசோக் தான் சிறிது சிறிதாக பேசி கொஞ்சம் மாற்றினான்.. தேனு பாட்டியின் கவனிப்பால் கொஞ்சம் உடலும் தேறினாள்.. ஆனால் ஊர் பேசியதை தான் அவளால் தாங்க முடியவில்லை.. “ அனைத்திற்கும் காரணம் அவளது ராசி தான் “ என்று பேசினர்..

ஆனால் வாழ்கையை இழந்து, பெற்றோரை இழந்து தவித்து தனிமரமாக நிற்பவள் அவள் தானே.. வேதனை அவளுக்கு தானே அதிகம். அது யாருக்கும் புரியவில்லை.. அவளை அறியாமல் எதுவோ ஒரு வேகம் பிறந்தது..

தன்னை இப்படி பேசுபவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று துடித்தாள்.. அவளது துடிப்பின் வெளிப்பாடே இன்று அன்னை மெஸ் இப்படி வளர்ந்து நிற்கிறது..

முதலில் சாதரணமாக வெளியே சென்று வந்தவள் அவளது கதை தெரியவும் தான் பழகும் வட்டாரத்தின் பார்வை தவறாக தன் மீது படிவத்தை உணர்ந்து தன் கோலத்தையும் மாற்றி கொண்டாள்..

ஆனால் அவள் மனதில் இருக்கும் கசப்பான நினைவுகளையும், வேதனையையும் மறைந்து போனதாய் மட்டும் தெரியவில்லை..

இப்பொழுதும் அவள் மனத்தில் தோன்றும் “ எதுக்கு நமக்கு அப்படி ஒரு கல்யாணம் நடந்தது.. பின்ன ஏன் உடனே இல்லாமல் போனது.. ??”  இந்த கேள்விக்கு மட்டும் அவள் எத்தனை முறை கேட்டாலும் அவளிடமே பதில் இல்லை..

ஆனால் அனைத்தும் விபுவை காணும் வரை தான்.. அவனை பார்த்த முதல் பார்வையிலேயே அவளது மனம் தன் வசம் இழந்தது.. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை..

விபுவும் தன்னை விரும்புகிறான் என்று தெரிந்த பின் முதல் முறையாக இத்தனை ஆண்டுகள் கழித்து மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.. ஆனால் எங்கே திருமணம் என்று ஆகவும் அதற்க்கு பின் ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்று பயம் கொண்டே தன் மனதை மறைத்தாள் இந்த பேதை..

இன்று அதுவும் இல்லாமல் போனது.. விபு வந்து பேசும் பொழுது அவளால் நிறைய நேரத்திற்கு தன் மனதை மறைக்க முடியவில்லை.. ஆனாலும் தன் பயத்தை விட்டு வெளி வர முடியாமல் இதோ இப்படி அழுது துடித்து கொண்டு இருக்கிறாள்..

மனம் – மயக்கும்       

 

Advertisement