Advertisement

               மனம் – 1

 “ விபு… விபு… போதும் இன்னும் எவ்வளோ நேரம் தான் பைல் பாத்துகிட்டே இருப்ப??? கீழ எல்லாம் உனக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. சீக்கிரம் சாப்பிட வா… விபு  “ என்று அழைத்தது வேறு யாரும் இல்லை விபு என்று அழைக்கப்படும் விபுவரதனின் அன்னை வேதவிநாயகி.. அனைவரும் வேதா என்று அழைப்பர்..

அன்பு, அக்கரை, கண்டிப்பு என்று அனைத்தயும் சரி விகிதத்தில் கலந்து கொடுக்கும் பெண்மணி.. விபுவரதனுக்கு எப்பொழுதுமே தாயின் மீது ஒரு தனி மதிப்பு இருக்கும்.. அது அன்னை என்பதால் மட்டும் அல்ல..

எந்த ஒரு விசயத்திற்கும் அவர் கூறும் யோசனைகளும் முடிவுகளும் மிக சரியானதாய் இருக்கும்.. குடும்பத்தை அழகாக நிர்வகிக்கும் திறன், எந்த ஒரு பிரச்னை என்றாலும் நிதானமாக அதே சமயம் திடமாக சமாளிக்கும் திறன் என்று தாயை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் விபுவிற்க்கு சந்தோசம் தான்..

அதே போல தான் அந்த அன்னைக்கும்.. ஆறடிக்கும் அழகாய், கலையாய், கம்பீரமாய், பொறுப்பாய், சற்றே குறும்புடனும்  அதே சமயம் நல்ல பையன் என்று பெயர் வாங்கி இருக்கும் தன் மகனை காணும் போதெல்லாம் அந்த அன்னைக்கு பெருமைதான் பெருமிதம்தான்.. மகனை பார்த்தபடி நின்றுவிட்டார்…

“இதோ வந்துட்டேன் மா.. இன்னும் ரெண்டே ரெண்டு பக்கம் தான்.. நீங்க போங்க நான் வரேன் மா…“ என்று கூறினான் விபுவரதன்..     

“ ரெண்டு பக்கம் தானே.. சாப்டிட்டு வந்து நிதானமா பாரு… நான் எதுவும் சொல்ல மாட்டேன்..” நீ வந்தா தான் நான் இந்த  இடத்தை விட்டு நகருவேன் என்பதுபோல கையை கட்டி நின்றுவிட்டார் வேதா…

“ஹ்ம்ம் நீங்க இருக்கீங்களே.. சரி சரி வரேன் மா “ என்று கூறியவாறு தன் அன்னையின் தோல் மீது கைபோட்டு அழைத்துவந்தான் மைந்தன்…

இவர்கள் இருவரும் ஒரு கூட்டணி என்றால்.. வீட்டில் இருக்கும் மற்ற இருவரும் ஒரு கூட்டணி.. அது வேறு யாருமில்லை விபுவின் தந்தை சந்திரவரதன், தங்கை தேவசேனா…..

“ அப்பா பாருங்க பா.. எவ்வளோ நேரமா நீங்களும் நானும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.. இந்த அம்மா என்னடான்னா பையன் வந்தாதான் சாப்பாடு சொல்லிட்டாங்க “ என்று தன் அப்பாவிடம் குறை பாடி கொண்டு இருந்தாள் தேவசேனா..

இருபத்தி மூன்று வயது அழகு பிசாசு… இந்த வருடம் தான் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள்… தாய்க்கு உதவியாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவருக்கு பிரஷர் ஏற்றுவதே இவளின் வேலை.. தந்தைக்கு செல்ல மகள்.. அண்ணனுக்கு பிரியமான தங்கை.. மொத்தத்தில் அந்த வீட்டின் தேவதை தேவசேனா.. தேவி என்று செல்லமாக அழைப்பார்கள்.       

“ ஹேய் வாழு… உனக்கு பசிச்சா எடுத்து போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. அதுக்கு ஏன் என் தலைய உருட்டுற…” என்று கூறிக்கொண்டே அவளது அருகே அமர்ந்தான் தேவசேனாவின் அருமை அண்ணன் விபுவரதன்..

“ சாரி பா.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுடேனா “ என்று தன் தந்தை சந்திரவரதனிடம் கேட்டான்..

அவரோ லேசாக புன்னகைத்தபடி “ ரொம்ப நேரம்னு சொல்ல முடியாது.. ஆனாலும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு தான் இருந்தோம்.. நீ ஏன் இவ்வளோ ஸ்ட்ரெயின் பண்ணுற விபு ???“ என்றார்    

சந்திரவரதன் அந்த குடும்பத்தின் தலைவர்.. செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்தாலும் நேர்மை முக்கியம் என்று நினைக்கும் மனிதர். VS குரூப் ஆப் கம்பனிகளின் சேர்மன்.. தன மகனுக்கு தொழில் கற்று கொடுத்த ஆசான். 

மனைவி கண்டிப்பு காட்டும் நேரத்தில் பிள்ளைகளிடம் அரவணைத்து போவார்… அதேநேரம் தான் எந்த நேரத்தில் கண்டிப்புடன் நடக்க வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருப்பார்..

ஆக மொத்தம் கணவனும் மனைவியும் அவர்கள் சுற்று வட்டாரத்தில் மனமொத்த தம்பதி என்று பெயர் வாங்கி இருந்தனர்.. பணம் இருந்தால்  எப்படியும் வாழலாம் என்று எண்ணாமல், எத்தனை உயரம் போனாலும் இப்படிதான் வாழ வேண்டும் என்று நல்ல நெறிகளை தாங்களும் கடைபிடித்து தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக்குடுத்து அதன்படி வாழும் அழகான குடும்பம்..

“ என்னப்பா ??  நீங்களே இப்படி கேட்டா எப்படி “ என்பது போல பார்த்தான் விபு..

“ இல்ல விபு… வேலை எல்லாம் முக்கியம் தான்.. அதே நேரம் உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்ல… இந்த வயசுல இப்படிதான் இருக்கும் எனக்கும் புரியுது. ஆனா நீ உனக்காகன்னு கொஞ்சம் பேமிலி கூட நேரம் செலவு பண்ணனும் “ என்று தன் மகனிடம் கூறினார்..

அதற்கு விபுவும் பதில் கூற அப்படியே பேச்சு தொடர்ந்தது.. “ அடடா அப்பாவும் பிள்ளையும் ஆரம்பிச்சுடிங்களா ??? போதும் பேசுனது.. முதல்ல சாப்பிடுற வேலைய பாருங்க “ என்று வேதா ஒரு அரட்டல் போடவும் அனைவரும் உண்ண தொடங்கினர்..

உண்டு முடித்துவிட்டு அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.. அன்று தினம் வீட்டில் என்ன நடந்தது என்று பெண்கள் கூற, வெளியே ஆபீசில் என்ன நடந்தது என்று ஆண்கள் கூற இப்படியே பேச்சு பரிமாற்றம் நடந்து அனைவரும் உறங்கும் நேரமும் வந்தது.. பேசியபடியே அவரவர் அறைக்கு உறங்க சென்றனர்..

விபு தன் அறைக்கு வந்ததும் போனில் அவன் நண்பன் அசோக்கை அழைத்தான்..” டேய் அசோக் நாளைக்கு நான் மீட்டிங்கு ஒரு 9 மணிக்கு வந்துடுவேன்டா.. நீ எத்தனை மணிக்கு வர ?? ”

….

“ வாட்.. நீ வரலையா ??? ஏன் டா உடம்பு ஏதும் சரி இல்லையா ?? ”

“ என்ன மேன் நீ.. இந்த மீட்டிங்  உனக்கு எவ்வளோ முக்கியம் தெரியும்ல… ஏன் டா உன் கம்பெனிக்கு நீ முதலாளியா இல்ல உன் மேனேஜர் முதலாளியா?? ”

….

“ ஹ்ம்ம் அது யாரு டா நித்யமல்லிகா ?? ”

“ ஏன் டா உனக்கு மட்டும் எங்க இருந்துதான் இப்படி பட்ட பாசமலர் எல்லாம் கிடைப்பாங்கலோ ?? இது எவ்வளோ முக்கியமான மீட்டிங் உனக்கே தெரியும்.. நானே என் வேலைய எல்லாம் விட்டிட்டு உனக்காக தான் அங்க வரேன்..  நீ என்னடான்னா இப்படி சொல்லுற” என்று சலிப்பாக பேசினான்..

அந்த பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ தெரியவில்லை அதே சலிப்புடனே “ சரி சரி… நானே பாத்துக்கிறேன்.. மதியமாது வருவையா ?? ”

“ ஹ்ம்ம் ஒழுங்கா வந்து சேறு.. “ என்று கூறி போனை அனைத்தவனுக்கு இன்னும் கோவம் அப்படியே இருந்தது..


“ச்சே எவ்வளோ பெரிய டீலிங்.. இப்படி ஒரு மீட்டிங்காக தானே இத்தனை நாள் கஷ்டப்பட்டான்.. இப்ப பாத்து யாரோ நித்யமல்லிகவாம் … திடிர்னு எங்க இருந்து இப்படி ஒரு சித்தப்பா பொண்ணு இவனுக்கு கிடைச்சாளோ?? அவளை பாக்க போறேன்னு கிளம்பி நிக்கிறான்” என்று தன் நண்பனை பொரிந்து தள்ளினான்..

ஆனால் அவனுக்கு தெரியவில்லை.. இந்த நித்யமல்லிகா  என்ற பெயர் அவன் வாழ் நாள் முழுவதும் அவனையே சுற்றி சுற்றி வர போகிறது என்று…

மறுநாள் காலை தன் நண்பனுக்காக அவனது வேலையை தனதாக்கி கொண்டு, அணைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று பார்த்து, வந்து இருந்தவர்களை உபசரித்து ஒருவழியாக அன்று நடந்த மீட்டிங்கை வெற்றிகரமாகவும் முடித்துவிட்டான்..

இது தான் விபு வரதன்.. வீட்டில் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளை.. தங்கைக்கு பாசமான அண்ணன்.. ஆனாலும் சிறு சிறு கலாட்டாக்கள் செய்வான்.. தன் நண்பர்கள் மத்தியில் ஒரு ஹீரோ என்றே கூறலாம்.. அவனை நம்பி எதையும் கூறலாம் என்று பெயர் பெற்றவன்..

ஆனால் தொழில் வியாபாரம் என்று வந்துவிட்டால் அவனிடம் நெருங்கவே அனைவரும் யோசிப்பர். எதிலும் யாரும் குறை கூறா வண்ணம் நடந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பான்..

அவனும் அதே போலதான் இருப்பான். ஒற்றை வார்த்தையில் பிறரை அடக்கி விடும் திறனும், ஒற்றை பார்வையில் பிறரை புரிந்துகொள்ளும் திடமும் பெற்றவன்..           

“டேய் மாச்சான் தேங்க்ஸ் டா “ என்று கூறியபடியே வந்தான் அசோக்.. ஆனால் விபுவோ மிக கோவமாக இருந்தான்…

“ டேய் வேணா.. அப்படியே ஓடிபோயிடு.. நான் சரி கோவத்துல இருக்கேன் “ என்றான் பல்லை கடித்தபடி..

ஆனால் இதற்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல “ டேய் என்னடா இதுக்கெல்லாம் கோவபட்டா எப்படி??? ஹ்ம்ம் காலையிலேயே நித்யா சொல்லுச்சு கண்டிப்பா இந்த மீட்டிங் உங்களுக்கு சாதகமாத்தான் முடியும் அண்ணான்னு.. அந்த பொண்ணு வாய்க்கு சக்கரை தான் போடணும் “ என்று தன் நண்பனை பார்த்து சிரித்தான் அசோக்..

ஆனால் இதை கேட்ட விபுவோ கோவத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.. “ ஏன்டா சொல்லமாட்ட ??? ஏன் சொல்ல மாட்ட.. உனக்காக காலையில இருந்து பச்சை தண்ணி கூட குடிக்காம இங்க நானு இருந்தா, நீ  யாரோ ஒரு பொண்ணு வீட்டுல உக்காந்து உனக்கு ஜோசியம் சொன்னாளாம் அவ வாய்க்கு சக்கரை போட கிளம்பிட்ட.. எல்லாம் என் நேரம் டா “ என்று தலையில் அடித்து கொண்டான்..

“சரி சரி வா கிளம்பு வெளிய போகலாம்.. அப்படியே சாப்டிட்டு வரலாம்.. அதுக்காக எல்லாம் என் தங்கச்சிய திட்டாத என்ன ?? ” என்று கூறியபடியே தன் நண்பனை சமாளித்து இழுத்து சென்றான் அசோக்..

ஆனால் இன்னும் விபுவால் தன் நண்பனை நம்ப முடியவில்லை. விபுவிற்கு நன்றாக தெரியும் இன்று நடந்த மீட்டிங் அசோக்கின் வாழ்கையில் அத்தனை முக்கியமானது என்று..

என்னதான் நண்பன் தனக்காக பார்த்து கொல்வான் என்ற நம்பிக்கை இருந்தாலும் தன் வாழ்க்கைக்கு என்று வரும்பொழுது அனைவரும் அதற்கு தானே முக்கியத்துவம் குடுப்பார்கள்..

ஆனால் இன்று அனைத்தையும் தூக்கி எறிவதுபோல எரிந்து விட்டு  சித்தப்பாவின் பெண் அழைத்தால் என்று அவளை பார்க்க சென்று விட்டான்..

அப்படியானால், அவனது முன்னேற்றம், தொழில், லாபம் இது அனைத்தையும் விட அவனது சித்தப்பாவின் பெண் தான் முக்கியமாகி போய்விட்டாள்.. தன் மனதில் தோன்றியதை மறைக்காமல் கேட்டேவிட்டான் அசோக்கிடம்..

அவனது நண்பனோ சிரித்தபடி  “ டேய் உனக்கு நித்யா பத்தி தெரியாது அதான் இப்படி பேசுற.. ஹ்ம்ம் நித்யமல்லிகா.. இது தான் அவ முழு பெயர் “ என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே அலுவலகத்தில் இருந்து போன் வந்து விட்டது..

சரி தன் நண்பன் எதுவோ கூற வந்தானே என்று உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்த விபுவிற்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.. அவனை அறியாமல் அவன் மனம் “ நித்யமல்லிகா…  ஹ்ம்ம் நல்ல பெயர்.. வித்தியாசமா இருக்கு “ என்று எண்ணிகொண்டான்..

அத்தோடு இவர்களின் பேசும் வேறு திசைக்கு மாறியது..  அங்கே சுற்றி இங்கே சுற்றி நண்பர்கள் இருவரும் தங்கள் தொழிலை பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது..

இருவரும் ஒரு ஹோட்டலில் உண்டுவிட்டு தங்கள் வேலையை பார்க்க கிளம்பினர்..  “ சரி அசோக் நான் அப்படியே எங்க ஆபீஸ்க்கு போறேன். அப்பா வேற வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரு..” என்று தன் நண்பனிடம் கை குலுக்கி விட்டு வேகமாக காரில் பரந்தவன் சரியாக வாகன நெரிசலில் சிக்கி கொண்டான்..

“ ச்சே இந்த நேரத்துல இப்படியா ட்ராபிக்ல வந்து நான் மாட்டனும்.. “ என்று எண்ணியவனுக்கு வெளியே ஒரு பைக் காரன் தன்னுடைய போனில் பேசுவது தெளிவாக கேட்டது..

“ நல்ல ட்ராபிக் நித்யா.. சொன்னா கேளு.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன் பிள்ளைய சமாதானம் செஞ்சு வை..” என்று தன் மனைவியிடம் கூறி கொண்டு இருந்தான் போல..

நித்யா என்ற பெயரை கேட்டதும் அவன் மனம் தன்னை அறியாமல் நித்யமல்லிகாவை நினைத்தது.. ஒரு கணம் தன்னையே உலுக்கி கொண்டான்…

“ யாருன்னே தெரியாது.. இதுக்கு முன்ன பார்த்ததும் இல்ல.. கேள்வி பட்டதும் இல்ல.. நான் ஏன் இந்த பெயரை பத்தி இவ்வளோ யோசிக்கணும்..” என்று தன் தலையை குளிக்கிவிட்டு, பச்சை விளக்கு எறியவும் தன் வண்டியை எடுத்தான்..

இதெல்லாம் சிறிது நேரம் தான்.. ஆபீஸில் வேலை என்று வந்துவிட்டால்  வேறு எதுவும் அவனது நினைவிற்கு வராது.. “ தம்பி விபு ,     அந்த மல்லிகா இண்டஸ்ட்ரி கொட்டேசன் பாத்தியா ?? ” என்ற படி உள்ளே வந்தார் சந்திரவரதன்..

 

“ ஹா… என்னப்பா என்ன சொன்னிங்க “ ஒருவேலை தந்தை வேறு பெயர் சொல்லி தனக்கு தான் மல்லிகா என்று கேட்டதோ என்று நினைத்தே இப்படி கேட்டான்..

தன் மகனின் கேள்வியில் ஒரு நொடி வியப்படைந்து “ மல்லிகா இன்டஸ்டிரி கொட்டேசன் பாத்தியான்னு கேட்டேன் விபு “ என்றார் மீண்டும்..

“ மீண்டும் அதே பெயர்” என்று எண்ணிக்கொண்டவன் “ ம்ம் அது ஏற்கனவே பார்த்து முடிச்சுட்டேன் பா.. நீங்க ஒருதடவ சரி பாத்து சைன் போட்டா வேலை முடிஞ்சிடும் ” என்று கூறி சிரித்தான்..

அதே நேரம் உள்ளே வந்த  அலுவலக மேனேஜர் ” சார் ஸ்வீட் எடுத்துகோங்க” என்று கூறியபடி ஒரு ஸ்வீட் பாக்சை நீட்டினார்..

“ என்ன விசேஷம் மாதவன் “ என்று சந்திரவரதனும்,” என்ன அங்கிள் என்ன விசேஷம் “ என்று விபுவும் கேட்டபடியே ஒரு ஒரு இனிப்பை எடுத்து வாயில் போட்டு கொண்டனர்..

மாதவன் அவருக்கு ஏறக்குறைய சந்திரவரதன் வயது தான் இருக்கும் அதனால் விபு அவரை எப்பொழுதும் அங்கிள் என்றே அழைப்பான்.. அவனது தந்தையும் ஒரு நண்பனை போல தான் பழகுவார்..

“ என் பேத்திக்கு முதல் பிறந்தநாள் அதான் “ ஏன்று கூறி சிரித்தார் அவர்..

“ பேஸ்… பேஸ்… பேத்தி வந்தாச்சா… ஹ்ம்ம் குட்டி பேரு என்ன ?? ” என்று கேட்டார் விபுவின் தந்தை..

“ நித்யஸ்ரீ.. இந்த பேரு தான் வைக்கணும்னு என் மருமகளும் என் சம்சாரமும் ஒரே அடம். அதான் இந்த பேரு “ என்று கூடுதலாக ஒரு கொசுறு தகவலையும் சொல்லிவிட்டு விடை பெற்றார்..

இந்த பெயரை கேட்டதும் விபுவிற்க்கு மீண்டும் மனம் ஒரு முறை திடுக்கிட்டது.. “ மல்லிகா.. நித்யா… நித்யமல்லிகா.. காலையில இருந்து இந்த பேரு என்னையவே சுத்தி சுத்தி வருதே.. இல்ல நான் தான் இப்படி யோசிக்கிறேனா ?? ” என்று தன்னை தானே குழப்பிக்கொண்டான்..

மகனின் முகத்தை கண்ட தந்தை என்ன புரிந்து கொண்டாரோ “ விபு நீ கொஞ்சம் சீக்கிரமே வீட்டுக்கு போயிடு.. காலையில வேகமாவே கிளம்பி வந்துட்ட இல்ல.. உங்க அம்மா அங்க எதிர் பாத்து காத்துகிட்டு இருப்பா.. அப்புரோ என் பையன ரொம்ப வேலை வாங்குரிங்கன்னு என்னைய தான் குத்தம் சொல்லுவா “ என்று கூறி ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்…

தன் தந்தைக்கு பதில் கூறிவிட்டு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினான் விபு.. ஆனாலும் அவன் மனம் முழுவது நித்யமல்லிகா என்ற பெயரே வியாப்பித்து இருந்தது..

ஒரு சில நிமிடத்தில் அவன் மீதே அவனுக்கு கோபமாக கூட வந்தது..

” என்ன இது.. ஒரு பேரு.. அதும் யாரு என்னானு கூட தெரியாத ஒருத்தியோட பேரு நம்மல இவ்வளோ தொல்லை பண்ணுதே.. “ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு

“ இல்ல விபு இங்க இருந்தா உனக்கு இன்னும் டென்ஷன் தான் ஆகும். அப்பா சொன்னமாதிரி வீட்டுக்கு கிளம்பு “ என்று அவனுக்கு அவனே கூரிகொண்டான்..

தான் நினைத்தது போல வீட்டிற்கும் கிளம்பி சென்றான்.. விதியும் அவன் பின்னாலே சென்றது..

அங்கே அவனின் அருமை தங்கை தான் ஹாலில் அமர்ந்து இருந்தாள்.. “ ஹே!! அண்ணா… அம்மா அண்ணா வந்தாச்சு..  “ என்று தன் தாய்க்கும் ஒரு அறிவிப்பை குடுத்துவிட்டு “ என்ன னா இன்னிக்கு இவ்வளோ சீக்கிரமே வந்துட்ட?? என்ன விஷயம் ப்ரோ “ என்று நக்கலாக கேள்வி கேட்டாள்..

“ வந்த உடனே அவன் கிட்ட கேள்வி கேட்டு வம்பலக்கனுமா ??” என்று கூறியபடி தன் மகனிற்கு பருக சூடான டீயுடன் வந்தார் வேதா…

“ தேங்க்ஸ் மா “ என்று கூறியபடியே தன் தாய் குடுத்த டீயை ரசித்து பருக ஆரம்பித்தான்..

“ அம்மா நாளைக்கு நித்யா வீட்டு விசேஷம் சொன்னேன்ல.. நான் என்ன சேலை கட்டிட்டு போகட்டும்… அப்புறம் மல்லிகப்பூ வாங்கி வைக்க சொன்னேன்ல.. “ என்று தன் தங்கை தன் அன்னையிடம் கேட்கவும் இவனுக்கு புரை ஏறியது..

“ ச்சே எங்க போனாலும் நித்யமல்லிகா தானா ?? இது என்ன பெரிய கொடுமையா இருக்கே “ என்று முனுமுனுதப்படி இருந்தான்.. ஆனால் அவன் மனமே அவனை இடித்தது.

 “ ஹலோ பாஸ்.. எங்க போனாலும் நித்யமல்லிகா இல்லை… நீ தான்  அப்படி நினைக்கிற.. ஆமா நீ ஏன் எப்ப பாரு அந்த பொண்ணு பேரையே நினைச்சுகிட்டு இருக்க ?? ” என்று அவன் மனம் அவனிடமே கேள்வி கேட்கவும் தான் இந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தான்..

ஆனால் அவனது முக மாற்றங்களை கண்ட அவனது தாயும் தங்கையும் என்னவென்று விசாரிக்கவும் எது எதுவோ சொல்லி அவர்களிடம் இருந்து தப்பி தன் அறைக்கு வந்தான்..


“ விபு இனிமே யாரு என்ன பேசுனாலும் சரி.. யாரு எந்த பேரு சொன்னாலும் சரி.. உனக்கென்ன வந்துச்சு?? உனக்கும் அந்த பேருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்ல புரியுதா.” என்று தனக்கே அறிவுரை கூறி கொண்டான் விபுவரதன்..

ஆனால் விதி நினைப்பது வேறு என்று அவனுக்கு எப்படி தெரியும்.. அந்த பெயருக்கு சொந்த காரியை பார்க்கும் பொழுது அவனால் இப்படி எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்க முடியுமா என்ன ???          

 

                          

            

                 

 

                           

  

             

Advertisement