Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 1
“புத்தம் புது காலை.. பொன்னிற வேளை…” என்றுதான் தான் பாடத் தோன்றியது மானசாவிற்கு.
மனதில் அப்படியொரு உற்சாகம். இருக்காதா பின்னே, புது இடம்.. புது சூழல்.. புதிய மனிதர்கள்.. எல்லாமே புதிது புதிதாய் இருக்க, வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு உற்சாகம் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும் அவள் இங்கே வந்தது நேற்று மாலை தான்.
பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டி. படிப்பெல்லாம் அங்கே கான்வென்டில். மானசாவைப் பார்த்தாலே தெரியும் அவளின் வசதி. ஆனால் அவளின் குணத்திலோ, பேச்சிலோ, செயலிலோ எவ்வித செருக்கும் இருக்காது. மிக மிக இயல்பாய் பழகும் குணமுடையவள்.
அவளின் அப்பாவோ, அக்காவோ இன்றுவரைக்கும் அவளை ஒருவார்த்தை சொன்னதில்லை. சொல்லும்படி நடந்ததுமில்லை. கல்லூரி படிப்பிற்கு சென்னை செல்வேன் என்று சொல்ல, அப்போது மட்டுமே வீட்டினில் மற்றவர்கள் குரல் சற்று உரக்க ஒலித்தது.
அதையும் பேசியே சமாளித்தவள், மூன்றாண்டுகள் இளங்கலை தாவரவியல் முடித்து ஊட்டி செல்ல, “அடுத்து என்னடா செய்யப் போற??” என்று அப்பா செந்தமிழ் கேட்டதற்கு,
“ம்ம்ம்… தெரியலைப்பா…” என்றாள் தோளைக் குலுக்கி..
“நிஜமா எந்த ஐடியாவும் இல்லையா மனு…” என்று தனுஜா கேட்டதற்கு,
“இல்லவே இல்லை தனு..” என்று தலையை ஆட்டிய மானசா, அடுத்து ஆறு மாதங்கள் வீட்டில் வெட்டியாய் கழித்துவிட்டு, இதோ இப்போது ‘சர்ட்டிபிகேட் கோர்ஸ்…’ செய்யப்போகிறேன் என்று ஒரு பிரபலமான பல்கலைகழகத்தில் வந்து அமர்ந்துவிட்டாள்.
‘இதுக்கு நீ மாஸ்டர் டிகிரி பண்ணலாமே டி..’ என்று தனுஜா கேட்டதற்கு,
“போ.. அதுக்கு டூ இயர்ஸ்.. பாப்போம் திடீர்னு தோணிச்சுன்னா அங்கேயே சேர்ந்திடுவேன்…” என்றுவிட்டு தான் வந்திருந்தாள்.
“ப்பா.. இவளை எந்த கேட்டகரிலப்பா சேர்க்கிறது…” என்று தனுஜா கேட்டதும்,
“தெரியலையே ம்மா..” என்று அப்பா சொன்னதும், பின் மூவரும் சிரித்ததும் இப்போதும் நினைத்து தானே சிரித்துக்கொண்டாள் மானசா.
இன்னமும் அவள் மனதில் புத்தம் புது காலை தான் ஓடிக்கொண்டு இருக்க, அந்த ‘பிஜி’ ஹாஸ்டலில் மாடியில் தான் நடந்துகொண்டு இருந்தாள். சுற்றிலும் பச்சை பசேல் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் மரங்கள் தெரிந்தன. இன்னும் கொஞ்சம் தூரமாய் பசுமையான வயல் வெளிகள். அதையும் தாண்டி மலையும் மலை முகடுகளும், அம்முகடில் வந்து மோதும் மேகங்களும் தான் அன்றைய காலை தின காட்சி அவளுக்கு.
பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. இன்னம் எத்தனை நேரம் இப்படி நிற்பாளோ அதுவும் தெரியாது. பத்து மணிக்கு மேலே அவளின் சார்ந்த துறைக்கு சென்று துறை தலைவரைப் பார்த்து, அவளுக்கான ஆசிரியர் யார் என்று கண்டறிய வேண்டும். 
ஆக மானசா எதிலும் அவசரம் காட்டவில்லை. மாடியில் ஒருசிலர் யோகா செய்துகொண்டு இருக்க, அவர்களை தொல்லை செய்யாது இவள் நடந்துகொண்டு இருந்தாள். காடு, விளை நிலங்கள் எல்லாம் அழித்து அதில் கட்டிடங்கள் எழுப்பி, இன்றைய முக்கால்வாசி கல்விக்கூடங்கள் அப்படிதானே உருவாகியிருக்கின்றது.
ஆனால் இந்த பல்கலைகழகமோ, மரங்களுக்கு இடையே இருக்கும் இடங்களில் தேவைக்கு ஏற்ப கட்டிடங்கள் எழுப்பி இருந்தது. அதுவே அதிக பசுமையை கொடுத்திருந்தது. இதில் ஒரு கஷ்டமும் இருக்கத்தான் செய்தது. ஒவ்வொரு துறைக்கும் நடை ஜாஸ்தி. ஆனால் அது உடலுக்கு நல்லது தானே. அனைத்தையும் பார்த்தபடி, மூச்சினை இழுத்து பின் மெதுவாய் விட்டவள்,  கையில் இருந்த காப்பி கோப்பை காலியானது கண்டு மீண்டும் ஒரு புன்னகை..
ஊட்டியில் இருந்தவரை டீ. இப்போது காபி.. இரண்டுமே அவளுக்குப் பிடிக்கும். ஆனால் அதது செய்யும் வகையில் செய்து குடிக்கவேண்டும்.. அப்படியிருந்தால் மட்டுமே பிடிக்கும்..
சிறு சிறு விசயங்களில் கூட வாழ்க்கையை ரசித்து வாழ நினைக்கும் ரசனைக்காரி தான் மானசா. ஆகவே தான் வழக்கமான பல்கலைகழக விடுதியல் சேராது, அங்கேயே தானே சமைத்து உண்டுகொள்ளும் வகையில் இருக்கும் ‘பிஜி’யில் சேர்ந்துவிட்டாள். சமைத்தும் உண்ணலாம்.. இல்லையோ தருவித்தும் உண்ணலாம்.. எல்லாம் பணம் கட்டிவிட்டால் போதும்.
அங்கே ‘பிஜி..’யில் இருப்பவர்கள் பெரும்பாலும், வெளிநாட்டவர், அல்லது வெளி மாநிலத்து மாணவிகள் தான். ஒரு சிலரே தமிழ் ஆட்கள் இருந்தனர். மொழியெல்லாம் மானசாவிற்கு எவ்வித தங்கு தடையும் இல்லை. அவளைப் பொருத்தமட்டில் அவளுக்கும் யாரும் தொல்லை தரக்கூடாது. அவளும் யாருக்கும் தொல்லையாய் இருந்திட மாட்டாள் அவ்வளவே.
இங்குதான் படிக்கப் போகிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும், “என்னடா மனு சொல்ற..” என்று ஆச்சர்யமாய் கேட்டார்.
காரணம் அவள் காட்டிய பல்கலைகழகம், நகர்ப்புறங்களில் எல்லாம் இல்லை. சுற்றிலும் கிராமங்கள் சூழ், ஒரு மலை அடிவாரத்தில் இருந்தது.  சென்னைக்கு இளங்கலைப் படிக்கப் போனவள், இப்போது வந்து இப்படி சொல்ல, யாராலும் நம்பிட முடியவில்லை.
“நிஜமா இங்கதான் ஜாயின் பண்ண போறியா..?” என்று தனுஜா கேட்டுக்கொண்டே இருந்தாள்.
“ஆமா ஆமா…” என்றவளுக்கு இப்போது தன்னை குறித்த ஆச்சர்யம்.
இப்போது வரைக்கும் அவளுக்கு விளங்கவில்லை தான் ‘வெஜிடேட்டிவ் அனாடமி..’ ஏன் தேர்வு செய்தோம் என்பது கூட.
‘படிச்சுத்தான் பாப்போமே… என்னதான் இருக்குன்னு…’ என்று தோன்றியது. ‘பாப்போம் பாப்போம்..’ என்று இப்போதும் சொல்லிக்கொண்டு, கீழே அவளின் அறைக்கு வர, அங்கே ‘பிஜி’ பொறுப்பாளரும், உடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தனர்.
அவர்களை நெருங்கும் முன்னமே மானசாவின் பார்வை அப்பெண்ணை எடைப் போட்டுவிட்டது. எப்படியும் அவள் வயது தான் இருக்கும். பார்த்ததுமே தெரிந்தது கேரளத்து பெண்குட்டி என்று. அவளிடம் ஒரு சிநேக பாவனை காட்டிவிட்டு, “குட் மார்னிங் மேம்..” என்றாள் பொறுப்பாளரிடம்.
“குட் மார்னிங் மானசா..” என்றவர் “ஷி இஸ் ஷில்பா ப்ரம் கேரளா..” என்று அறிமுகம் செய்ய, “ஹாய்…” என்றாள் மலர்ந்த சிரிப்போடு..
பதிலுக்கு ஷில்பாவும் அதே மலர்ச்சியோடு ஹாய் சொல்ல, அவ்வளோதான் மானசாவிற்கு அவளைப் பிடித்துப்போனது. உள்ளார்த்தமான புன்னகை என்பது ஒருவரின் முகத்தினைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இந்த ஷில்பா மட்டும் பெயருக்கு ஒரு புன்னகை வீசியிருந்தால் அவ்வளோதான் மானசா அவளை கிட்டே கூட சேர்த்திருக்க மாட்டாள் என்பது வேறு விஷயம்.
“மானசா… ஒரு த்ரீ டேஸ், ஷில்பா உன்னோட ஸ்டே பண்ணிக்கட்டுமா…?” என்று பொறுப்பாளர் கேட்க,
“ம்ம்..” என்று சம்மதமாய் தலையாட்டியவள் “பட் மேம்.. சிங்கிள் பெர்சன் அலாட்மென்ட் தானே..” என்றாள் அவள் ஏற்கனவே கேட்டிருந்ததை நினைவு கூறும் விதமாய்.
“எஸ்.. மாடி ரூம்ஸ்ல சில வொர்க்ஸ் இருக்கு.. ஒன் ரூம் மட்டும் தான் அவைலபிள்.. அதிலயும் திங்க்ஸ் போட்டு வச்சிருக்காங்க.. டூ டேஸ்ல எல்லாம் செட்டாகிடும். அட்மிசன் வேற போயிட்டு இருக்கு.. சோ த்ரீ டேஸ்ல ஆலோகேட் பண்ணிடலாம்..” என்று அவரும் நிலைமையை விளக்க,
“ஓ… ஓகே மேம்..” என்றவள் “வெல்கம்…” என்று ஷில்பாவை  கண்டு சொல்லியபடி அவளின் அறை கதவை திறந்து உள்ளே போனாள்.
பின்னேயே ஷில்பாவும்.
“நானும் இன்னும் எதும் செட் பண்ணலை.. நேத்து நைட் தான் வந்தேன்…” என்றவள், வேகமாய் அவளின் சூட் கேஸ் ஒதுக்கி, டேபிள் மீது கிடாசி விட்டிருந்த பொருட்களை எல்லாம் ஒரு பக்கம் தள்ளியவள், என்னவோ நொடியில் அறையையே தயார் செய்து ஷில்பாவிற்கு பங்கு கொடுத்தது போல் ஒரு பாவனைப் பார்த்து நின்றாள்.
ஷில்பாவோ “தேங்க்ஸ்…” என்று சொல்ல, “தமிழ் அறியுமோ..?” என்றாள் பதிலுக்கு இவளும்.
“அறியும்…” என்று ஷில்பா புன்னகைக்க,
“அப்போ ஓகே..” என்றவள், கட்டிலைப் பார்த்தாள், ஒற்றை கட்டில் தான் இருந்தது. ஆனால் மேலே ஸ்லாப் மீது மெத்தை ஒன்று கவரினால் சுற்றி வைக்கப்பட்டு இருக்க,
“நீ பெட் யூஸ் பண்ணிக்கிறயா..?” என,
ஷில்பாவோ “வேணாம்.. நான் கீழே..” என்றாள் கொஞ்சம் தயங்கி.
மானசாவோ “அப்போ ரெண்டு பேருமே கீழே..” என்றவள், “நைட் அந்த மெத்தை இறக்கிடலாம்” எனும்போதே, ‘பிஜி..’ பொருப்பாளரோடு தோட்ட வேலை செய்யும் இருவர் ஒரு கட்டிலைத் தூக்கிக்கொண்டு வந்து போட்டனர்.
“த்ரீ டேஸ் தானே மேம்..” என்று ஷில்பா சொன்னதற்கு, அந்த பொறுப்பாளரோ பொத்தாம் பொதுவாய் ஒரு புன்னகை செய்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை.
கட்டில் போட்டு, மெத்தை இறக்கவும், அனைவரும் கிளம்பிட, மானசாவிற்கு புரிந்து போனது ஷில்பா இனி இங்கே தான் என்று.
‘இருந்துட்டு போகட்டும்.. என் சமையல் டெஸ்ட் பண்ண ஒரு ஆள் வந்தாச்சு…’ என்றெண்ணி,  “குக்கிங் தெரியுமா??” என்றாள், அவளின் அடிப்படை சமையல் பொருட்களை காட்டி.
“ம்ம்ம்..” என்று கண்களை விரித்து, புருவம் உயர்த்தியவள், “பட் நான் மெஸ்ல தான்..” என,
“ஏன்… நான் சமைப்பேன் நீ சாப்பிடேன்..” என்றாள் இவளும்..
புதியவளை இப்போதே விரட்டிடுவாளோ என்றுதான் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் பார்த்தது. ஷில்பாவிடம் இருந்து எவ்வித பதிலும் வராது போக, ‘பயந்துட்டாளோ..’ என்று திரும்பிப் பார்த்தவள்,
அவளின் முகத்தினில் தெரிந்த பாவனை கண்டு, “ஹா ஹா பயந்துட்டியா??? ப்ரீயா விடு.. நானுமே மூட் இருந்தா தான் கூக் பண்ணுவேன்.. இல்லையோ மெஸ் தான்..” என்றவள்,
“ஆமா நீ என்ன கோர்ஸ்?” என, “சர்டிபிகேட் கோர்ஸானு…” என்றாள்..
“ஓ.. நானும் நானும்… என்ன எடுத்திருக்க??” என்று அடுத்த கேள்விக்குப் போக,
“வெஜிடேட்டிவே அனாடமி..” என்று ஷில்பா சொல்லி முடிக்கவில்லை, “ஹேய் நானும்…” என்றாள் சந்தோசமாய்..
அதன் பின் என்ன பேச்சு பேச்சு பேச்சு. பேசியபடி, உடை அடுக்கி, பொருட்கள் எல்லாம் அடுக்கி, ஓரளவு அறையை ஒதுங்க செய்து, எல்லாம் முடித்துப் பார்க்க, நேரம் காலை ஒன்பதைக் காட்டியது.
“ஓகே சிப்ஸ்… நான் குளிச்சிட்டு வந்திடுறேன்..” என்றுவிட்டு மானசா குளிக்கப் போக, ஷில்பா அதற்குள் அவளின் வீட்டினரோடு பேசி முடித்திருந்தாள்.
ஒரு மணி நேரத்தில் ஷில்பா, அவளுக்கு சிப்ஸாகியிருக்க, ஷில்பாவிற்கு தான் இன்னமும் சட்டென்று நெருக்கம்கொள்ள முடியவில்லை. புது இடம் என்ற தயக்கமோ, என்னதான் தமிழ் தெரியும் என்றாலும் கூட, வேறு இடம் என்ற ஒரு அடிப்படை பயம் அவளிடம் இருந்தது நிஜமே.
பத்து நிமிடத்தில் மானசா வந்துவிட, அடுத்து ஷில்பா குளித்து முடித்து தயாராகி வர,
“அதெப்படி எண்ணெய் வெச்சிட்டே தலைக்கு தண்ணி விடறீங்க.. பிசு பிசுன்னு இருக்காது…” என்றாள் மானசா, ஷில்பாவின் நெலி நெலியான அடர்த்தியான கேசம் தொட்டு.
மானசா கேட்ட தினுசை கண்டு சிரித்துவிட்ட ஷில்பா “இருக்காது…” என்று சொல்ல,
“ம்ம்ம் சரிதான்.. நாளைக்கு இருந்து நானும் பாலோ பண்றேன்..” என்றவள், “எப்படி மெஸ் போயிடலாமா??” என,
“பூவாம்…” என்றாள் ஷில்பா..
“பூவாம் இல்லை போலாம்…” என்று சொல்லி இருவரும் பேசியபடி மெஸ் சென்று உண்டுவிட்டு, அவர்களின் துறைக்கு வழி கேட்டு செல்லும் நிலை ஆனது.
‘அப்படியே நேரா போய் வலது பக்கம் திரும்புனா பெரிய மரம் ஒண்ணு வரும். அதை தாண்டி ரெண்டு எட்டு வச்சா பாட்டணி தான்…’ என்றார் அங்கே பெருக்கிக்கொண்டு இருந்த ஒரு அம்மா..
“அப்போ கிட்ட தான்..” என்று இருவரும் நடக்க, அந்த அம்மா கூறிய  மரத்தை தொடவே பத்து நிமிடங்கள் ஆனது. அதற்குமேல் இரண்டு எட்டு வைத்தால் எல்லாம் ஒன்றும் வரவில்லை. மேலும் ஒரு பத்து நிமிட நடை அதன் பின்னே தான் அவர்களின் துறை கட்டிடமே கண்ணுக்குத் தெரிய, மானசா அப்போதுதான் கவனித்தாள், விடுதியாட்களும் சரி, இல்லை பிஜியாட்களும் சரி பெரும்பாலானவர்கள் சைக்கில் வைத்திருந்தார்கள்.
‘இதுக்கு தானா அது..’ என்று பார்த்தவள் “நாளைக்கு இருந்து சைக்கிள்ள வருவோமா??” என்றாள் ஷில்பாவிடம்.
“எதுக்கு?? இதென்ன டிஸ்டன்ஸா..??” என்று அவள் கேட்க,  “அப்போ இல்லையா???” என்றாள் இவள்.
“ம்ம்ஹும்… இப்படி போய் அப்படி டர்ன் பண்ணா நம்ம பிஜி..” என்று ஷில்பா சொல்ல, “அடிப்பாவி சிப்ஸ் இதை முன்னாடியே சொல்ல என்ன??” என,
“மார்னிங் இப்படிதான் வந்தேன்.. பட் எனக்கு அப்போ தெரியாதே…” என்று அவளும் சொல்ல,
“நல்லா தெரிஞ்ச போ..” என்று சொல்லியபடி இருவரும் தாவரவியல் துறையினுள் நுழைய, எதிரே வந்த பியூனிடம் “ஹச். ஒ. டி பார்க்கணும்.. அவர் ரூம் எந்த சைட்??” என்றாள் மானசா.
இருவரையும் கண்டதுமே “சர்டிபிகேட் கோர்ஸா??” என்று பியூன் கேட்க, அவன் கேட்ட விதமே ஒரு மட்டமாய் தெரிந்ததுவோ என்னவோ மானசாவிற்கு, சட்டென்று அவள் முகம் மாறிப்போனது..
“எஸ்..” என்று நிமிர்வாய், கொஞ்சம் திமிராய் சொல்ல,
“இப்போல்லாம் சார பக்க முடியாது.. இப்படி உக்காருங்க.. பர்ஸ்ட் பீரியட் கிளாஸ் முடிஞ்சு இப்படிதான் போவார்.. அப்போ பார்த்துக்கோங்க..” என்று விட்டேத்தியாய் பியூன் சொல்ல,
ஷில்பாவோ மானசா முகம் பார்க்க, “சார் தான் டென்னோ கிளாக் வந்து பார்க்க சொன்னார்..” என்றாள் பொறுமையாகவே.
“பார்க்க சொன்னா போய் பார்க்க வேண்டியதுதானே.. பின்ன எதுக்கு என்கிட்டே கேட்கணும்…” என்று பியூன் எரிச்சலாய் மொழிந்தபடி நகரப் போக,
“ஹலோ… நில்லுங்க ஒரு நிமிஷம்..” என்றாள் கொஞ்சம் குரலை உயர்த்தி.
அவளின் உடல் மொழியே அவள் சண்டைக்கு தயாரானது போலிருக்க ஷில்பாவோ “மானசா, பூவாம்…” என்றாள் அஞ்சி.
“ம்ம்ச் இரு.. தெரியலைன்னு தானே கேட்டோம்.. இப்படி பேசினா எப்படி??” என்றவள், “உங்களைதான் நில்லுங்கன்னு சொன்னேன்..” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.
அந்த பியூனோ ‘இதென்னடா தலைவலி..’ என்று மேலும் எரிச்சல் உற்றவன் “இப்படி போய் அப்படி மேல போ ம்மா…” என்று கடுப்பாய் மொழிய,
“அதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன??” என்றாள் இவளும் அதே கடுப்பில்.
“அய்யே… என்னாம்மா பண்ண போறது சர்டிபிகேட் கோர்ஸ்.. இதுல இவ்வளோ பேச்சு..” என்று சொல்லி முடிப்பதற்குள்,
“கணேஷ் அண்ணா..!!” என்ற ஒரு கண்டிப்புக் குரல் பின்னே இருந்து வந்தது.
அடுத்த நொடி அந்த பியூன் சல்யூட் அடிக்காத குறையாக நிமிர்ந்து நின்று “என்ன தம்பி.. செமினார் எல்லாம் முடிஞ்சதா??” என்று பல்லைக் காட்ட,
“ம்ம்..” என்றவன் பார்வை இவர்கள் இருவரையும் தொட்டுவிட்டு, “என்ன??” என்பதுபோல் அந்த கணேஷைப் பார்க்க,
“புதுசு தம்பி… சார் ரூம் எங்கன்னு கேட்டாங்க…” என்று இளித்து வைத்தான்.
“சொல்லிட்டீங்களா.?” என்றவன் பார்வையே, அப்படியொரு கண்டிப்பை காட்டியது.
“சொல்லிட்டு இருந்தேன்…” என்று கணேஷ் இழுக்க, “ம்ம்ம் நானே கம்ப்ளைன்ட் பண்ற மாதிரி வச்சிடாதீங்க..” என்றுவிட்டு மாடி படிகளை இரண்டு இரண்டாய் தாண்டி சென்றுவிட்டான்..
‘யாப்பாடி… என்ன பார்வை இது… லேசர் போல..’ என்றுதான் தோன்றியது மானசாவிற்கு..
யாரோ.. எவனோ.. என்ன பேரோ.. ஊரோ.. தெரியாது.. ஆனால் பார்த்ததுமே ஒரு பிம்பம் அவள் மனதினுள் விழுந்தது நிஜமே..    

Advertisement