Advertisement

                        கொஞ்சும் ஏழிசை நீ – 6
ஆகிற்று இரண்டு நாட்கள் சித்திரைச்செல்வன் திரும்ப அவனின் பணிக்கு வந்தும். அவன் வந்த முதல் நாள், மானசாவிற்கும் ஷில்பாவிற்கும் வகுப்பு இல்லை. ஆகையால் வழக்கமாய் அவனின் நாள் நகர, பாஸ்கர் கூட அன்று இவர்கள் எல்லாம் அவன் வீடு சென்றது பற்றி எதுவும் கேட்பான், இல்லை தன்னை திட்டவாவது செய்வான் என்று பார்க்க சித்திரைச்செல்வன் அதைப்பற்றி பேசினான் இல்லை.
அதே போலவே தான் மறுநாளும், பெண்கள் வகுப்பிற்கு வந்தபின்னும் கூட அதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.
அத்தனை ஏன் ஷில்பா கூட கேட்டாள் “எந்தா சித்து செட்டா.. அம்மா எப்படியுண்டு..” என்று.
“ம்ம் பைன்மா..” என்றவன் அன்றைய வகுப்பினை எடுக்க,
மானசா ஷில்பா முகத்தினைப் பார்க்க “ம்ம்ஹும்… கவனி..” என்பதுபோல் சைகை செய்தாள் அவள்.
‘இவன் ஏன்தான் இப்படி இருக்கானோ..’ என்றெண்ணியவள், வகுப்பு முடிந்து கிளம்புகையில், அவளே கேட்டாள் “ஆன்ட்டி எப்படி இருக்காங்க..??” என்று.
அப்போதும் அவன் “பைன்…” என்றிட,  இப்போது பெண்கள் இருவரும் பாஸ்கரைக் காண, அவனோ ‘போங்க..’ என்று சைகை செய்ய, இருவரும் மௌனமாய் கிளம்பினர்.
“ஒரு நிமிஷம்..” என்றவன், அவர்கள் நிற்கவும் “இதெல்லாம் டுமாரோ அசைன்மென்ட்…” என்று சிலதை கொடுக்க,
“இந்த டாப்பிக் மெட்டீரியல் இல்லே சித்து சேட்டா…” என்று ஷில்பா சொல்லவும், மானசாவை ஒரு பார்வை பார்த்தவன்,
“ஊரு சுத்த தெரியுது தானே.. லைப்ரரி போக தெரியாதா என்ன?” என்று கேட்க, அப்படியே மானசாவின் பார்வையும் மாறிப் போனது.
‘இவன் வீட்டுக்கு, இவங்கம்மாவை பார்க்க வந்ததும் ஊர் சுத்துறதும் ஒண்ணா..’ என்று எண்ணியவள், அவனிடம் எதுவுமே பதில் சொல்லாது “வா சிப்ஸ்…” என்று அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
“டேய் சித்து ஏன்டா.. ஏன் இப்படி பீகேவ் பண்ற நீ..” என்று பாஸ்கர் வர,
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்..” என்றான் ஒன்றும் அறியாதவன் போல.
“சொல்லாம வந்தது தப்புதான் சித்து.. அதுக்காக நீ இப்படி பீகேவ் பண்றது என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது… வீட்ல தான் அந்த பொண்ணுங்கள நீ சரியா ட்ரீட் பண்ணல..  இங்கயும் இப்படி பண்ணா எப்படி டா??” என,
“இப்போ என்ன செய்யணும் பாஸ்கி.. சொல்லு என்ன செய்யனும்னு சொல்ற..” என்றான் விரைப்பாய்.
என்னவோ அவனின் தோற்றமே ஒரு சண்டைக்கு தயாரானவன் போல இருக்க “டேய்.. என்ன??” என்றான் பாஸ்கரும்.
“இங்க பார் ஐ க்னோ ஹவ் டூ ட்ரீட் மை ஸ்டூடண்ட்ஸ்…” என்றவன், கிளம்பிவிட, ‘இவனுக்கு என்னவோ ஆகிடுச்சு..’ என்று முனங்கியபடி,
“இரு நானும் வந்து தொலையுறேன்..” என்று பாஸ்கரும் அவனோடு சென்றான்.
சித்திரைச்செல்வனுக்கு என்னானது??!! அது யாருக்குமே தெரியவில்லை. அத்தனை ஏன் அது அவனுக்கே தெரியவில்லை. அதுதான் விந்தை.
இவர்கள் அங்கே அவனின் வீடு சென்றது முதலில் ஒரு அதிர்ச்சி தான் என்றாலும் கூட, சரி அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அதனை ஏற்றுக்கொண்டான். பாஸ்கி எப்போதுமே அடிக்கடி வந்து செல்பவன், ஷில்பா அவளைப் பற்றி அவன் மனதில் எவ்வித யோசனையும் இல்லை.
ஆனால் அவனை எரிச்சல் படுத்தவாவது எதையாது செய்வது என்பது மானசா மட்டுமே. அதாவது, அவள் ஒன்றுமே செய்யாது அவளது இயல்பில் இருந்தாலும் கூட, அவளின் ஒவ்வொரு விசயமும் இவனுக்கு ஏதாவது ஒரு உணர்வைக் கொடுத்துக்கொண்டு இருந்தது.
அது அவனுக்குப் பிடிக்கவில்லை.
எப்படியேனும் இவ்வருடம் முனைவர் பட்டம் பெற்றிடவேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் அவனுக்கு, இப்படியொரு தொல்லை சுத்தமாய் பிடிக்கவில்லை.
‘அடேய்.. அவ அவபாட்டுக்கு தானே இருக்கா.. உனக்கென்ன வந்தது..’ என்று அவனின் புத்தியும் சொல்லிவிட்டது.
அவனின் மனது அதனை சம்மதிக்கவேண்டுமே..
‘இல்லை இல்லை.. அவ ரொம்ப பண்ற.. என்னை சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்றா… இடியட்…’ என்று அவளை திட்டவேணும் அவளைத்தான் நினைத்துத் தொலைக்க, சித்திரைச்செல்வன், இது தனக்கு சரிபடாது என்று தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ளா ஆரம்பித்தான்.
அதன் விளைவுதான் இந்த கடுகடுப்பு எல்லாம்.
அதுவும் அன்று வீட்டினில் இவர்கள் எல்லாம் கிளம்பும் போது, “இன்னொரு தடவ ப்ரீயா இருக்கப்போ வாங்கம்மா…” என்று மீனா சொல்ல,
ஷில்பா “சரிம்மா…” என,
மானசாவோ பதிலேதும் சொல்லாது சித்திரைச்செல்வனின் முகம்தான் பார்த்தாள்.
“என்ன மானசா..” என்று மீனா கேட்டதற்குக் கூட, “நாங்க இப்போ வந்ததே சாருக்கு பிடிக்கலை போல ஆன்ட்டி..”  என்று பாவமாய் முகத்தினை வைத்து சொல்ல,
பூபதியிடம் இருந்து “செல்வா…” என்ற ஒரு அதட்டல் தான் வந்தது.
அவரும் பார்த்துக்கொண்டு தானே இருந்தார், இந்த பெண்களிடம் ஒருவார்த்தை அவன் பேசிடவில்லை. பேசத்தான் இல்லை சரி முகத்தினையாவது சற்று நல்லவிதமாய் வைத்திருக்கலாம் தானே. அதுவும் இல்லை. என்னதான் வீட்டினர் நல்லமுறையில் நடந்துகொண்டாலும், சித்திரைச்செல்வனை  வைத்துத் தானே இவர்கள்.
“என்னப்பா…” என்றவன், அப்போதும் அதே முக பாவனையோடு தான் இருக்க,
“அவன் அப்படித்தான் ம்மா.. நீங்க எதுவும் நினைக்கவேண்டாம்…” என்று மீனாதான் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இவர்கள் கிளம்பி வந்த பிறகோ, அப்படியொரு பேச்சு அம்மாவிடம் சித்திரைச்செல்வனிற்கு.
“ஏன்டா நீ இப்படி இருக்க?? உனக்காகத்தானே என்னைப் பார்க்க வந்தாங்க?? நீ இப்படி உர்ருன்னு இருந்தா.. கிளாஸ் எடுக்கும் போதும் இப்படிதான் இருப்பியா நீ.. எல்லாம் உன் அப்பாவை சொல்லனும்..” என்று சம்பந்தமே இல்லாது கணவரை இதில் இழுக்க,
“இப்போ நான் என்ன பண்ணேன்…” என்றார் பூபதி.
“இவன் பண்றதுக்கு எல்லாம் சரி சரின்னு சொல்றீங்கதானே.. அது தப்புன்னு சொல்றேன்…” என,
“ம்மா இப்போ ஏன் நீ இவ்வளோ டென்சன் ஆகுற.. நீ இப்போ ரிலாக்ஸா இருக்கணும்..” என்று சித்து சொல்ல,
“எனக்கு இப்படி அறிவுரை சொல்றதை நிறுத்து நீ…” என்றுவிட்டார்.
அடுத்த நாள் முழுதும் அம்மாவும் மகனும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாது இருக்க, “செல்வா நீ காலேஜ் கிளம்பு.. இங்க வேலைக்கு ரெண்டு பேர் வர சொல்லிருக்கேன்.. பார்த்துப்பாங்க.. நானும் இருக்கேன் தானே.. நீ கிளம்பு..” என்றிட,
“கிளம்பட்டுமா ம்மா…” என்றான் அம்மாவைப் பார்த்து.
“ம்ம் ம்ம்…” என்று மீனாவும் சொல்ல, அதுவும் அவனுக்கு கடுப்பேறியது.
“ம்மா.. நீயும் வர வர ரொம்ப பண்ற…” என்றவன் தான் கிளம்பி வந்திருந்தான்.
ஏனோ அவனால் ஒரு இயல்பினில் இருந்திட முடியவில்லை. அடுத்து வந்த நாட்களிலும் இதுவே நடக்க, பாஸ்கர் கூட அவனின் பேச்சினை அளவோடு வைத்திருக்க,
“என்னடா நீ… உனக்கு நான் பிரண்டா இல்லை அவ பிரண்டா…” என்று சித்து அப்போதும் எகிற,
“இப்போ உனக்கு என்னதான்டா பிரச்சனை..” என்று சலித்தான் பாஸ்கர்.
“ம்ம்ச் எனக்கென்ன பிரச்சனை… நீங்க எல்லாரும் தான் என்னை இரிடேட் பண்றீங்க..” என்று அவனும் சொல்ல,
“ஓ..!!! என்ன பண்ணிட்டோம்??? உன்னை சுத்தி நின்னு இம்சை பண்றோமா?? ஏன்டா நீயா இப்படி இருந்துட்டு, நாங்க இம்சை பண்றோம்னு சொல்ற.. நீ என்னவோ செய் சித்து.. பட் ஒருவிசயம் நீ முன்னமாதிரி இல்லை..” என்று பாஸ்கர் அழுத்தம் திருத்தமாய் சொல்ல,
“நான் எப்படியோ இருந்துட்டு போறேன் போ..” என்று கோபமாய் எழுந்து சென்றுவிட்டான் சித்திரைச் செல்வன்.
அதைவிட வகுப்பினில் மேலும் காய, ஷில்பாவோ வாயே திறந்தாள் இல்லை. மானசாவோ ‘பொறுமை பொறுமை…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு இருந்தாள்.
ஆனால் மானசாவின் பொறுமை எல்லாம் எத்தனை நாளுக்கு??!!
ஷில்பா எதுவோ சந்தேகம் கேட்கையில் தெளிவாய் விளக்கியவன், சிறிது நேரத்தில் மானசா ஒரு சந்தேகம் கேட்க “இவ்வளோ நேரம் இதானே எக்ஸ்ப்ளைன் பண்ணேன்.. என்ன லிசன் பண்ண நீ?? கவனம் எல்லாம் எங்க இருக்கு??” என்று சித்து திட்ட,
தலையை சரித்து அவனை பார்த்தவள் “எந்தா சாரே…??!!” என்று கேட்ட விதத்தில் அப்படியொரு காட்டம் தெரித்தது.
“வேணாம் மனு… உக்கார்…” என்று ஷில்பா அவளின் கையை இழுக்க,
“நீ விடு சிப்ஸ்.. புரியலன்னு கேட்டா இப்படி பேசுறார்.. நமக்கு சொல்லிக் கொடுக்கிறதுக்கு தானே இவர் இருக்கார்.. இப்படி ரீசனே இல்லாம திட்டுறதுக்கு இல்லையே..” என்றவள்,
“இனி உங்க கிளாஸ்க்கு நான் வர்றதா இல்லை.. பை…” என்றவள், அவளின் நோட்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிட,
“அச்சோ மனு…” என்று ஷில்பா அழைக்க, “படிக்க வந்தேன் தான். அதுக்காக எனக்கு ஷெல்ப் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கு…” என்றவளின் கண்களில் கோபத்தோடு கலந்த கண்ணீர் வேறு.
“எந்தா சேட்டா.. அவ என்ன தப்பா கேட்டா..?” என்று ஷில்பா கேட்க, அதற்குள் மானசா வெளியே சென்றிருந்தாள்.
ஷில்பா கேட்ட இக்கேள்விக்கு பதில் இல்லை அவனிடம். மானசா மீது தவறு என்று ஏதாவது இருந்தால்தானே அவன் பதில் சொல்வான். இன்று அவன் எடுத்தது கொஞ்சம் புரிந்துகொள்ள கடிமான பகுதிதான். அது அவனுக்கே தெரியும். அப்படியிருக்கையில் சந்தேகம் வந்து அவர்கள் கேட்டது நல்ல விசயமும் கூட.
ஆசிரியர் பணியில் மாணவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதும் ஒரு அங்கம் தானே.
அப்படியிருக்க இன்று சித்திரைச் செல்வன், அதையே சரிவர செய்திடவில்லை எனில், அவனின் பேராசிரியர் கனவு என்பது கிட்டினாலும் அதில் பூர்த்தி இருக்குமா??!!
நொடியில் நிதானம் இழந்த தன் செயல் எண்ணி, அவனே வெட்கிப் போனான்.
“ம்ம்ச்… நீ போய் அவளைப் பாரு..” என்று ஷில்பாவை அனுப்பியவன், அப்படியே அங்கே அவனின் இருக்கையில் அமர்ந்திட, ஷில்பா வேகமாய் மாடியில் இருந்து இறங்கி வருகையில் பாஸ்கர் மேலேறி வந்துகொண்டு இருக்க,
“பாஸ்கி சேட்டா…” என்று அழைத்தவள், நடந்ததை சொல்ல,
“அடக்கடவுளே.. சரி நீ போய் அவளை சமாதானம் செய்.. நான் போன் பண்ணி பேசுறேன்..” என்றவன், 
“அட கொடுமையே.. இவன் என்ன??!!” என்று தலையில் அடித்துக்கொண்டே, “டேய்…” என்று அழைத்தபடி தான் அவர்களின் அறைக்குள் நுழைய, ‘என்ன??’ என்று நிமிர்ந்து பார்த்தான்.
“இங்க பார்டா, அந்த பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்க பிடிக்கலன்னா ஹெச் ஒ டி கிட்ட  நீயே சொல்லிடு.. அதுக்காக சும்மா சும்மா இப்படி அவங்களை ஹர்ட் பண்ணாத..” என,
“ம்ம்ச்…” என்று மேஜையை குத்தினான் சித்து.
“டேய் எங்க பாரு… எதுவா இருந்தாலும் பிரான்கா பேசு..” என,
“இதுல பேச என்ன இருக்கு..” என்றவன், “என்னை கொஞ்சம் ப்ரீயா விடு..” என்றுவிட்டான்.
நண்பனே என்றாலும் அதற்குமேல் பாஸ்கரால் என்ன சொல்லிட முடியும். சரி அவனே யோசித்து கொஞ்சம் தெளிவு பெறட்டும் என்று விட, அங்கே ஷில்பாவும் வித விதமாய் மானசாவை சமாதானம் செய்ய, முதலில் அவள் இறங்கி வரவேயில்லை.
“என்மேல என்ன தப்பு இருக்கு சிப்ஸ்..” இதனையே தான் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
“நமக்கு கோர்ஸ் முடியனும்.. அதான் முக்கியமான்னு..” என்று ஷில்பாவும் சொல்ல,
“அதுக்காக, தப்பே செய்யாம திட்டு வாங்கனுமா நான்..” என்றாள் அவளும்,
“அதுக்காக நீ கிளாஸ் வரமாட்டேன் சொல்லனுமா??” என்று ஷில்பாவும் கேட்க, பின் சிறிது நேரத்தில் பாஸ்கரும் அவளிடம் பேசி சமாதானம் செய்ய, மறுநாள் வகுப்பிற்கு வந்திருந்தாள்.  
இந்த சித்திரைச் செல்வன் அப்போதாவது சும்மா இருந்திருக்கலாம், அவளைப் பார்த்து நக்கலாய் சிரித்தவன், “என்ன அவ்வளோ ரோசமா போன.. வந்துட்ட..” என,
‘ஐயோ…’ என்று பாஸ்கரும், ஷில்பாவும் பார்க்க, மானசா அலட்சியாமாய் அமர்ந்திருக்க,
“ஹெலோ என்ன??!!” என்றான் அவள் முன் சொடக்கிட்டு.
“என்ன இப்போ??” என்று அவளும் கேட்க,
“நேத்து என்னவோ நான் கிளாஸ் எடுத்தா வரவேமாட்டேன்னு சொல்லிட்டு போன.. இனிமே நான் மட்டும் தான் கிளாஸ் எடுப்பேன்..” என்று சித்திரைச் செல்வன் வேண்டுமென்றே அவளை சீண்டவென்று சொல்ல,
பட்டென்று எழுந்தவள் “நான் பண்ணது தப்பு, நீ கிளாஸ்க்கு வா அப்படின்னு நீங்க சொல்லாம நான் இனி வரமாட்டேன்..” என்றவள்,
“சாரி கைஸ்…” என்று பாஸ்கரிடமும், ஷில்பாவிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
அடுத்த நாள் மானசா வகுப்பிற்கு வரவில்லை. ஷில்பா மட்டும் வந்திருக்க, சித்திரைச்செல்வன் கொஞ்சம் மனதளவில் அதிர்ந்தான் தான். கோபித்துக்கொண்டு செல்வாள், பின் எப்படியும் வகுப்பிற்கு வந்துதானே ஆகிட வேண்டும், வருவாள் என்று இருக்க, அவள் வரவில்லை என்றதும் ‘இவ்வளோ பிடிவாதமா??’ என்றெண்ணினான்.
ஷில்பா வந்தவள் அமைதியாகவே இருக்க, சித்திரைச்செல்வன் “கிளாஸ் ஸ்டார்ட் பண்ணுவோமா??” என, தலை மட்டும் ஆடியது அவளுக்கு.
பாஸ்கரும் அங்கேதான் அமர்ந்திருந்தான். எதுவோ எழுதிக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வன், மார்கர் வைத்து வெள்ளை நிற பலகையில் எழுதிக்கொண்டு இருக்க, ஷில்பாவின் முகமே உம்மென்று இருந்தது.
பாஸ்கர் கவனித்தவன் ‘என்ன..?’ என்று சைகையில் கேட்க,
‘மனு ஊருக்கு போயிட்டா..’ என்றாள் மெதுவாய்.
“என்னது??!!” என்று கண்கள் விரித்து பாஸ்கர் சத்தமாய் கேட்க,  
“என்ன என்னது??” என்று திரும்பினான் சித்திரைச் செல்வன்.
“ஒண்ணுமில்ல.. நானா எதுவோ நினைச்சுட்டு சொல்லிட்டேன்..” என்று பாஸ்கர் சொல்ல, ஷில்பா ஒன்றும் தெரியாதவள் போல் முகம் வைத்துக்கொள்ள,
இருவரையும் பார்த்தவன், திரும்பிட, அங்கே அப்படியொரு அமைதி நிலவியது. ஷில்பாவிற்கும் கவனிக்கும் எண்ணம் வரவில்லை. என்னவோ மானசா இல்லாது தான் மட்டும் இங்கே அமர்ந்திருக்கவும் சங்கடமாய் இருக்க, பொறுத்துப் பார்த்தவள்,
“சித்து சேட்டா…” என்று தயக்கமாய் அழைக்க,
“ம்ம்.. எனி டபுட்??” என்றான்.
“ம்ஹும்..”
“பின்ன என்ன ஷில்பா??”
“அது.. நான்.. அ.. அது.. கிளம்பட்டே..” என, “ஏன் என்னாச்சு??” என்றான் நெற்றி சுருக்கி.
“இல்ல.. அது..” என்று தயங்க,
“ம்ம்…” என்று தலையை அவனாய் ஆட்டியவன், “ஓகே கிளம்பு..” என்று அவளுக்கான வருகை பதிவேட்டை குறித்துக்கொண்டவன்,
“மானசா எங்க??” என,
“அவ லீவ்..” என்றாள்.
“லீவ் பார் வாட்??!!”
“அ.. அது.. பீவர்..” என்றாள், அவள் ஊருக்குச் சென்றதை சொல்லாது.
பாஸ்கரும் எதுவும் சொல்லாமல் இருக்க “பீவரா??!” என்று பார்த்தவன், எதுவும் சொல்லாது “ஓகே.. யு கோ..” என்றுவிட்டான்.
தான் செய்வது தவறு என்று புரிந்தாலும், உடனே இறங்கிப் போய்விட அவனுக்கு மனதில்லை. அவளுக்கு காய்ச்சல் என்று ஷில்பா சொன்னதும், ‘நம்மளும் ரொம்பத்தான் செய்றோம்..’ என்று நினைத்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
ஷில்பா கிளம்பிச் செல்லவுமே பாஸ்கர் “மானசா பீவர்னு வராம இல்லை.. நீ கூப்பிடாம வரமாட்டேன்னு ஊருக்கு போயிட்டா..” என்றிட,
“வாட்???!!” என்று பலமாய் அதிர்ந்தான்.
“என்னடா ஷாக்கா இருக்கா?? ரோசமுள்ள பொண்ணு அதான் செய்யும்.. நீ பண்றது எல்லாம் சரியான்னு நீயே நினைச்சு பாரு..” என, சித்திரைச்செல்வன் எதுவும் பேசவில்லை.
மானசா கிளம்பி ஊருக்குச் சென்றது அவனுக்கே ஒருமாதிரி கஷ்டமாய் இருந்தது. ‘என்னடா சித்து நீ இப்படி பண்ணிட்ட.. படிக்கணும்னு வந்த பொண்ண இப்படி கிளம்பி போக வச்சிருக்க…’ என்று அவன் மனதே அவனைக் கடிய,
அன்றைய நாள் மாலை கூடைப்பந்து விளையாடுகையில் சித்துவால் ஒருமனதாய் விளையாட முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவனின் பார்வை தூரத்தில் எப்போதும் மானசா நின்று பார்க்கும் இடத்திற்கு செல்ல, நிறைய பந்துகளை தவறவிட்டான்.
“டேய் சித்து… பார்த்து ஆடு…” என்று பாஸ்கர் சொல்லியும் அவனால் அது முடியாது போக, அன்றைய விளையாட்டில் அவர்களின் அணி தோல்வியுற
“என்னாச்சுடா..” என்று அவர்கள் அணி ஆட்கள் கூட கேட்க, “நத்திங் கைஸ்…” என்றான்.
சிறிது நேரம் அனைவரும் பேசிவிட்டு கிளம்ப, பாஸ்கர் ஒன்றும் கேட்காது அமைதியாய் வர,
“என்ன சைலண்ட்டா வர..” என்றான் சித்து.
“ஏன்?? என்ன பேச சொல்ற??”
“ம்ம் ஒண்ணுமில்ல..” என்றவன் “அவ நம்பர் இருக்கா??” என்றான்.
“அ..!! யார் நம்பர்..??”
“அதான்.. மானசா…” என்று கேட்க, “ஏன் கால் போட்டு திட்டப் போறியா..” என்றான் பாஸ்கி.
“ம்ம்ச் கொடு டா.. சும்மா ஒரு வார்த்தை சொன்னதுக்கு இப்படியா கோவிச்சுட்டு கிளம்பிப் போறது.. பொறுப்பில்ல கொஞ்சமும்..” என,
“சும்மா ஒருவார்த்தை இல்லடா.. சும்மா சும்மா ஒவ்வொரு வார்த்தையா எப்பவுமே நீ அப்படிதான் சொல்ற..” என்ற பாஸ்கர் மானசாவின் எண்ணை கொடுக்க, சித்திரைச் செல்வனும் வாங்கிக்கொண்டான்.

Advertisement