Advertisement

தோற்றம் – 21

புகழேந்தி அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருக்க, பொன்னி அங்கே அறையினில் இல்லை. இது தினமும் நடக்கும் ஒன்றுதான். அவன் ரெடியாகும் போது அவள் அங்கே இருக்க மாட்டாள்..

அவனுக்கு வைக்கவென்றும், கொடுத்தனுப்பவென்றும் சமையல் செய்துகொண்டு இருப்பாள்.. இவன் தயாராகி வருகையில் டைனிங் டேபிளில் ரெடியாய் தட்டும், கொண்டு போகவென்று ஒரு ஹாட் பாக்ஸ் கேரியரும் இருக்கும்..

இன்றோ புகழ் சீக்கிரமே ஆபிஸ் செல்லவேண்டும்.. நேற்றே பொன்னியிடம் சொல்லியும் இருந்தான். ஆக வழக்கத்திற்கு மாறாக இன்னும் கொஞ்சம் வேகமெடுத்து கிளம்ப, பொன்னி எப்போதும் போல் வேலையாய் இருப்பாள் என்றே எண்ணி டைனிங் டேபில் வர, பொன்னி அங்கேயும் இல்லை..

டேபிள் சுத்தமாய் இருக்க, சமையல் அறையோ அங்கே வேலையே எதுவும் ஆகவில்லை என்று சொல்லாமல் சொல்லியது..

“எங்க போனா…” என்றபடி “கண்ணு…” என்றழைக்க, பதிலே இல்லை..

“கண்ணு..” என்று வீட்டின் பின்னே போய் பார்க்க, வீட்டின் பின் பக்க கதவு இன்னும் திறக்கவேயில்லை..

வேகமாய் புகழேந்தி முன்னே போக, அங்கே ஹாலில் பொன்னி சோபாவில் உடலை குறுக்கி படுத்து இருந்தாள்..

“என்னாச்சு…” என்று வேகமாய் அவளின் அருகே வந்தவன், அவள் காதில் மாட்டியிருந்த இயர் போனை கலட்டி மெதுவாய் “கண்ணு..” என்று அவள் தோள் தொட, அசைவே இல்லை..

“கண்ணு..” என்று கொஞ்சம் வேகமாய் அழுத்தி உசுப்ப,  “ஹ்ம்ம்..” என்று பொன்னி லேசாய் உடலை அசைக்க,

“என்னாச்சு?? ஏன் இங்க படுத்திருக்க..??” என்று வினவியவன், அவள் எழுவதற்கு உதவி செய்ய,

“எங்க படுத்திருக்கேன்..” என்றபடி எழுந்தமர்ந்தவள் கண்ணை கசக்கி பார்க்க, அவள் சோபாவில் படுத்திருப்பது புரியவும், “ஓ.. இங்கேயே படுத்திட்டேனா??” என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொள்ள, புகழேந்தி ஒன்றுமே புரியாமல் தான் அவளைப் பார்த்தான்..

“என்னாச்சு கண்ணு.. ஏன் இங்க படுத்திருக்க.. உடம்புக்கு எதும் பண்ணுதா??” என்று அக்கறையாகவே கேட்டவன், அவளின் நெற்றியை தொட்டுப் பார்க்க, உடல் சூடு கூட இல்லை..

அப்போது தான் பொன்னி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. கிளம்பித் தயாராய் நிற்பவனை கண்டதும், நேற்று அவன் சீக்கிரம் போகவேண்டும் என்று சொன்னது நினைவு வர,

“ஷ்… சாரி.. நீங்க சீக்கிரம் கிளம்பனும்ல.. ஒரு பைவ் மினிட்ஸ் பிரெஷ் ஆகிட்டு வந்து டிபன் ரெடி பண்றேன்..” என்று பொன்னி வேகமாய் எழ, 

“ம்ம்ச் இரு..” என்று அவளது கைகளை பிடித்தவன், அவளை அமர வைக்க, “இல்ல நீங்க சீக்கிரம்..” என்று பொன்னி சொல்லும் போதே,

“டென் மினிட்ஸ் லேட்டான ஒண்ணுமில்ல..” என்றான்..

“ஹ்ம்ம்.. சரி காபி போடுறேன்..” என்று பொன்னி மீண்டும் எழ, “பொன்னி இப்போ உட்காருரியா இல்லையா??” என்ற புகழின் குரலில் பேசாமல் அமர்ந்துவிட்டாள்..

“ஏன் இங்க படுத்திருக்க..??”

“நைட் தூக்கம் வரல..”

“ஏன் ஏன் தூக்கம் வரலை??”

‘இதெல்லாம் ஒரு கேள்வியா???’ என்று அவனைப் பார்த்தவள், “தெரியலை..” என்று தோள்களை குலுக்க,

“அதுக்கு இங்க ஏன் வரணும்???” என்றான் விடாது..

“கொஞ்ச நேரம் டிவி பார்க்க வந்தேன்.. அடுத்தும் தூக்கம் வரலை.. தென் சாங்க்ஸ் கேட்டிட்டு இப்படி படுத்திருந்தேன் அப்படியே தூங்கிட்டேன் போல..” என்று, இதெல்லாம் ஒரு பெரிய விசயமா என்று சொன்னவள்,  “ஓகே ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்…” என்று எழ, அத்தனை நேரம் கால்களை குறுக்கி படுத்திருந்தவளுக்கு எழுந்து எட்டு வைக்க முடியவில்லை..

லேசாய் கால் மரத்துப் போனது போல் இருக்க, இரு கால்களையும் மாறி மாறி உதறி பின் நடக்க,

“தூக்கம் வரலைன்னா என்னை எழுப்பிருக்கலாம்ல கண்ணு.. ஏன் தனியா வந்து படுத்த…” என்றபடி புகழும் அவளோடு வர,

அவனை வேகமாய் திரும்பிப் பார்த்தவள் “எழுப்பி…??!!!!!!!” என்று ஒற்றை வார்த்தையில் ஒரு கேள்வியைக் கேட்க, அவளின் பார்வையோ பல ஆயிரம் அர்த்தங்களை காட்டாமல் காட்ட, புகழ் நொடிப் பொழுதில் திகைத்துத் தான் போனான்..

‘எழுப்பி??’ அவள் என்ன செய்வாள்.. எனக்கும் உறக்கம் வரவில்லை என்பாளா?? இல்லை என்னை உறங்க வை என்பாளா??? ஹா ஹா அதுவும் பொன்னியா??? செய்வாளா??? ஆனால் புகழோ ‘ஏன் என்னை எழுப்பினால் என்ன??’ என்று யோசித்தபடி,

“ஏன் ஏன் கண்ணு???” என்று கேட்க, அவளோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு போய் குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்..

“ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு விட்டபடி புகழ் சிறிது நேரம் நிற்க, அவனுக்கு அழைப்பு வந்துவிட்டது..

“ஹலோ சந்த்ரு… ஹால்ப் ஹவர்ல அங்க இருப்பேன்…” என்று சொல்லி முடித்தவன், நேரத்தைப் பார்க்க, இன்னும் இருபது நிமிடத்தில் இங்கிருந்து கிளம்பினால் சரியாய் இருக்கும் என்றெண்ணி, பொன்னி வருவதற்குள் ஒரு காப்பியாவது போட்டு வைப்போம் என்று சமையல் அறை நுழைந்தான்..

பாலை அடுப்பில் ஏற்றியவன், காப்பி தூள் எங்கிருக்கு என்று தேடியெடுக்கும் பால் காய நிற்கும் போதே பொன்னி வந்துவிட்டாள்..

இவன் என்னவோ செய்கிறான் என்று வந்தவள், என்ன என்று பார்க்க, அவளைப் பார்த்தவன், “போ.. போய் தலை வாரிட்டு வா…” என,

“பரவாயில்ல.. தள்ளுங்க நான் காப்பி போடுறேன்.. ஷர்ட்ல எதுவும் கொட்டிட்டா வம்பு..” என்றுசொல்லியபடி அவனை லேசாய் தள்ளி நிற்கவைக்க,

“ஏன் நான் போட்டா என்ன??” என்று அவனோ ஒட்டி நிற்க, இதென்னடா இது என்றுதான் பார்த்தாள் பொன்னி..

“என்ன கண்ணு.. நீ போ.. தலை வாரிட்டு பொட்டு வை.. இப்படியா முகம் கூட சரியா துடைக்காம வர்றது..” என்றபடி அவள் தோளில் கிடந்த துண்டை எடுத்தே அவள் முகத்தினை துடைக்க,

“ம்ம் என்னதிது.. போங்க…” என்று அவனை தள்ளியவள், தானே காப்பி கலக்க, புகழ் நகரவெல்லாம் இல்லை.. அங்கேயே சாய்ந்து நிற்க, பார்வை மட்டும் அவளை பருகிக்கொண்டு இருந்தது..

காப்பி கப்பில் ஜீனி போட்டு ஸ்பூனால் வேகமாய் கலக்கியவளின் கரம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் பார்வையில் வேகத்தை குறைக்க, பொன்னியின் விழிகள் மட்டும் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவள் கையில் இருந்த ஸ்பூனை எடுத்துவிட்டு, அவள் கையோடு சேர்த்தே காப்பி கோப்பையை இவனும் பிடித்து பருக, பொன்னிக்குத் தான் ஒருமாதிரி சங்கடமாய் ஆகிவிட்டது..

கையை நகர்த்தினால் அவன் கையில் இருக்கும் கோப்பையும் சேர்ந்து நகர்ந்து கீழே விழும், ஆனாலும் இப்படியே நிற்கவும் முடியவில்லை..

“என்னது புதுசா…” என்றவளுக்கு பார்வை வேறுபுறம் திரும்ப,

“என்ன என்ன புதுசா???!!!” என்றபடி கோப்பையை கீழே வைத்தவன், அவள் தோளில் இருக்கும் துண்டின் மீதே தன் உதட்டை துடைக்க, என்ன செய்கிறான் இவன் என்று பொன்னி தான் தடுமாறிப் போனாள்.

அவள் தடுமாறி கொஞ்சம் தெளியுமுன்னே புகழ் நிமிர்ந்திட, அவளின் பார்வையில், “என்ன கண்ணு அப்படி பாக்குற???” என்றவன், “இன்னும் தூங்கனும்னா தூங்கு.. வாட்ச்மென் கிட்ட டிபன் வாங்கி கொடுத்து அனுப்புறேன்..” என்றுவிட்டு புகழ் நகர,

“இல்ல பரவாயில்லை…” என்றவள் “நீங்க சாப்பிடலையே…” என்றபடி பின்னே வர, “நான் பார்த்துக்கிறேன்.. நீ ரெஸ்ட் எடு..” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

அவன் போவதை வாசலில் நின்று பார்த்துகொண்டு இருந்தாள்.. புகழேந்திக்கும் அவளுக்கும் நல்ல புரிதல் இருப்பதாய் முன்னே அவ்வப்போது நினைத்ததுண்டு. ஆனால் இப்போது, சுத்தமாய் புகழேந்தியின் செயல்களை புரிந்துகொள்ள முடியவில்லை..

ஒருவேளை திருமணமான அனைவருக்குமே இப்படிதான் இருக்குமா?? அதுவும் தெரியவில்லை.. அன்பரசியும் நித்யாவும் அவளோடு சகஜமாய் பேசியிருந்தால் அவர்களிடம் ஏதாவது பகிர்ந்திருப்பாளோ என்னவோ… சிலதுகளை மங்கையிடமும் சொல்ல முடியாது.. என்னவோ ஏதோவென்று அவர் நினைத்திடுவார்.

அதற்கெல்லாம் மீறி இங்கே வந்து ஒருவாரம் தானே ஆனது..  ஆக எதையும் அவளால் எளிதாகவும் எடுத்துகொள்ள முடியவில்லை.. போனால் போகிறது என்று சும்மாவும் விடவில்லை..

இவர்களை குடிவைக்கவென்று வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு போகவும் அனைவருமே புகழேந்திக்கு அழைத்து பேசினர்தான்.. ஆனால் ஒருவார்த்தை யாரும் பொன்னியிடம் என்று பேசவில்லை.. பொன்னியிடம் சொல்லிவிடு என்றும் கூட சொல்லவில்லை. இதெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தாள்.. புகழேந்தியிடம் ஒருவார்த்தை கேட்கவில்லை.. அவளும் அடுத்து அவளாய் அவர்களோடு பேசவும் இல்லை..

மகராசி இங்கிருக்கும் போதுகூட ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினார்.. அங்கே போனதும் எதுவுமேயில்லை..

இவை அனைத்திற்கும் மகுடம் சூட்டும் வகையில் தான் புகழின் நடத்தை.. அன்பாய் அக்கறையாய் இருக்கிறானா இல்ல கண்டுகொள்ளாது இருக்கிறானா என்றே புரியாதிருக்க, இந்த குழப்பத்தில் தான் அவளால் உறங்கிட முடியவில்லை..

மனதில் என்னென்னவோ நினைவுகள்.. குழப்பங்கள்.. வெகு நேரம் புகழேந்தியின் முகத்தினை தான் பார்த்து படுத்திருந்தாள்.. இவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.. அவர்கள் ஊரில் அவன் நடந்துகொண்ட விதத்திற்கும் இங்கே அவன் இருப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு என்று அவளுக்குப் புரியாதா என்ன?? 

இதெல்லாம் இப்போது நினைத்தாலும் தலை சூடாவது போல் இருந்தது அவளுக்கு.. வேகமாய் அவளுக்கும் ஒரு கப் காப்பியை கலக்கியபடி முன்னே ஹாலில் பொன்னி வந்தமர, அடுத்த கால் மணி நேரத்தில் வாட்ச்மென் வந்து புகழ் வாங்கிக்கொடுக்க சொன்னதாய் சொல்லி ஒரு டிபன் பார்சல் கொடுத்துவிட்டு போனார்..

அவர் சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில், அவனிடம் இருந்து அழைப்பு வேறு..

“கண்ணு  டிபன் வந்திடுச்சா??” என்று..

“ம்ம்..” என்றுமட்டும் பொன்னி சொல்ல, “மும்பை ஆபிஸ்ல இருந்து வந்திருக்காங்க… நைட் நான் வர லேட் ஆகும்.. நீ பார்த்து இருந்துக்கோ கண்ணு.. லஞ்ச் வேணும்னா வாட்ச்மென் கிட்ட சொல்லு வாங்கிட்டு வந்து தருவார்.. ஈவ்னிங் போர் அடிச்சா அசோக் வீட்டுக்கு கூட போயிட்டு வா..” என்றவனுக்கு,

அப்போதும் “ம்ம்…” என்ற பதில் மட்டுமே பொன்னி கொடுத்தாள்.

“சரி கண்ணு சாப்பிடு.. நைட் பாப்போம்….” என்று அவனாகவே சொல்லி, அழைப்பை துண்டிக்க,

“ச்சே…” என்று எரிச்சலாய் தான் வந்தது பொன்னிக்கு..

உண்டு உறங்கி வேலை செய்தான் இங்கே வந்தாளா??  இதில் கண்ணு கண்ணு என்று அதற்கொன்றும் குறைவில்லை.. அசோக் வீட்டிற்கு போகவேண்டுமாம் எதை காட்ட எண்ணுகிறான் இவன் என்று கத்த வேண்டும்போல் வந்தது..

ஆனால் அதே நேரம் இதுதான் புகழேந்தியின் இயல்போ.. நான்தான் எதையும் தப்பாக நினைக்கிறேனோ என்றும் அவளுக்குத் தோன்ற கூட ஆரம்பிக்க, “நோ.. எதையும் தின்க் பண்ணாத பொன்னி..” என்று அவளுக்கு அவளே சொல்லிகொண்டாள்..

புகழேந்தி சொன்னதுபோல் இரவு தாமதமாகவே வர, உடை மாற்றி ஹாலில் வந்து அமர்ந்தவனுக்கு ஒரு கிளாஸ் பால் மட்டும் கொடுத்துவிட்டு,  சும்மா டிவி சேனல்களை மாற்றிக்கொண்டு இருந்தாள் பொன்னி. புகழ் தான் அவளை திரும்பி திரும்பி பார்த்துகொண்டு இருந்தான்..

அவன் பார்ப்பது தெரிந்தும் பொன்னி எதுவும் கேட்கவில்லை.. கொஞ்ச நேரம் பார்த்தவன், அவள் கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கிவிட்டு “என்ன கண்ணு…” என்றான் கடுப்பாக…

“என்னங்க???” என்று அவள் கேட்க,

“ஒரு வார்த்தை என்ன ஏதுன்னு கேட்காம நீ டிவி பாக்குற..” என, “வேறென்ன செய்யனும்??” என்றாள் ஒன்றும் புரியாதவள் போல்..

“என்ன செய்யனுமா?? என்ன சாப்பிட்டீங்கன்னு கூட நீ கேட்கலைன்னா எப்படி???”

“எப்படியும் உங்களுக்கு பிடிச்சதை தானே ஆர்டர் பண்ணிருப்பீங்க.. இதுல கேட்க என்னயிருக்கு..” என்று பொன்னி மறுபடியும் தோள்களை குலுக்க,

“சரி அப்போ வேற ஏதாவது பேசு…” என்றான்..

“எனக்கு என்ன பேசன்னு தெரியலை…” என்றவள் எழுந்து செல்ல விழைய,

“தெரியலையா???!!!!” என்று அதிர்ந்தவன், எழுந்தவளின் கரங்களை பிடித்து திரும்ப அமர வைக்க, பொத்தென்று பொம்மையாய் அமர்ந்தாள்..

“என்ன கண்ணு நீ??? எனக்கு ஆச்சர்யமா இருக்கு?? நீயா இப்படி.. ஒருவார்த்தை சொன்னா பதிலுக்கு நாலு வார்த்தை பேசுவ.. நீ ஏன் இப்படி இருக்க?? ஏன் இப்படி மாறிப் போயிட்ட.??” என்று புகழ் படபடக்க, அவனை கண்களை சுறுக்கி பொன்னி பார்த்தவள்,

“உங்களுக்கு இப்போதான் கண்ணு தெரியுதா ???” என்றாள் நக்கலாய்..

“ஏய் என்ன கண்ணு???!!” எனும்போதே,

“நிஜமாதான் கேட்கிறேன்.. இப்போதான் உங்களுக்கு நான் இப்படி இருக்கேன்னு தெரியுதா?? ஊருக்கு வந்தீங்க.. நாளைக்கு போலாம் சொன்னீங்க.. அடுத்து இங்கயும் வந்தாச்சு.. வாரம் கூட ஒண்ணு முடிஞ்சது.. இதுக்கு நடுவில நீங்க ஏதாவது என்கிட்டே சொல்லியிருந்தா தான் நானும் பேச முடியும்.. அதைவிட்டு என்னவோ எல்லா கேள்வியும் என்னை கேட்டா எப்படி??” என்று இத்தனை நாள் மனதில் இருந்ததை கொட்டிவிட, புகழேந்தி அமைதியாய் அழுத்தமாய் தான் அவளைப் பார்த்தான்..

“என்ன பாக்குறீங்க?? வீட்ல அவ்வளோ நடந்தது.. சரி நான் சொல்லலை தான்.. ஆனா உங்களுக்கு தெரியாம இருக்கவும் வாய்ப்பில்லைன்னு எனக்கும் தெரியும்.. அதைப்பத்தியும் எதுவும் கேட்கலை…. உங்க மனசுல எதுவுமே இல்லைங்கிற போல அசோக் கூட சகஜமா இருக்கீங்க..  எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க.. ஆனா உங்களுக்கு நடுவில மாட்டிட்டு நான்தான் முழிக்கிறேன்…” என்றவளுக்கு கடைசியில் வார்த்தைகளில் ஒருவித வெறுப்பு தெரிய,

“ஹ்ம்ம் பேசி முடிச்சிட்டியா???” என்றான் அவனோ அசராமல்..

பொன்னியோ பதில் சொல்லாது பார்க்க, “இப்போ இவ்வளோ பேசுற நீ.. வீட்ல அமுதா உன்கிட்ட படிக்கணும்னு ஆசைன்னு சொன்னதுமே என்கிட்டே நீ சொல்லிருந்தா இப்போ இவ்வளோ நடந்தே இருக்காது.. இல்லை அம்மாகிட்ட நேரம் பார்த்தாவது சொல்லிருக்கணும்.. இங்க பாரு கண்ணு.. நீயும் அமுதாவோட நல்லது நினைச்சுதான் பேசின, வீட்ல இருக்கவங்களும் அமுதாக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான் பேசினாங்க..

ஆனா ரெண்டுபேருமே பேசின நேரம்தான் தப்பு.. எங்கப்பா அசோக்குக்கு அமுதாவை கொடுக்கணும்னா ஒண்ணு உங்க அம்மாக்கிட்ட பேசிருக்கணும்.. இல்லை என்கிட்டே சொல்லி உன்கிட்ட பேச சொல்லிருந்தா நான் எப்படி சமாளிக்கனுமோ செஞ்சிருப்பேன்..

இல்லை நீயோ அமுதா மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு என்கிட்டே சொல்லிருக்கணும்.. யாரும் எதுவுமே செய்யாம, இப்போ உனக்கு சப்போர்ட் பண்ணா எங்க வீட்ல என்னை என்னவோ கொலைகாரன் போல பார்க்கிறாங்க.. அவங்களுக்கும் நான் சப்போர்ட் பண்ணி உன்கிட்ட பேச முடியாது…” என்று அவன் சொல்லும்போதே,

“எனக்கு கோவம் அதெல்லாம் இல்லை..” என்றாள் பட்டென்று பொன்னி..

“பின்ன???”

“அவங்க நம்ம கல்யாணம் பண்ணாதே தப்புன்னு போல பேசினாங்க.. நித்யாக்கா அம்மா ஆகட்டும்.. அன்பு மதினி ஆகட்டும் என்னவோ நீங்க என்னை கல்யாணம் பண்ணாதே தப்புன்னு சொல்ற மாதிரி பேசினாங்க அதான் என்னால பொறுக்க முடியலை.. நான் ஒன்னும் ஓடி வரலையே..” என்று பொன்னி சொன்னபோது, புகழேந்திக்கு அத்தனை நேரம் இருந்த ஒரு காட்டம் குறைந்து ஒரு மென்மை மனதினுள் புகுந்துகொண்டது..

“ஹ்ம்ம்.. சரி.. என்ன பண்ணலாம் சொல்லு.. நீ என்ன சொல்றியோ செய்யலாம்..” என்று தன்மையாக அவளின் கரங்களை எடுத்து தன் கைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ள,

“நான் எதுவும் கேட்கலை…. எனக்கு எதுவும் வேண்டவும் வேண்டாம்.. சொல்றதை சரியா புருஞ்சுக்கிட்டா போதும்…” என,

“இதுக்குதான் அத்தனை தரம் சொன்னேன்.. பொறுமையா போ இல்லையா அம்மாகிட்ட சொல்லிட்டு உங்க அம்மாகூட போய் இருன்னு..” என்று புகழ் சொல்லிட, பொன்னிக்கு இன்னும் கோவம் வந்துவிட்டது..

“நான் என்ன கண்டேன் நித்யாக்கா அம்மா வந்து இப்படி எல்லாம் பேச்சு ஆரம்பிப்பாங்கன்னு.. ஏன் நீங்க இல்லைன்னா நான் அங்க இருக்கக்கூடாதா??” என்றவளுக்கு அப்போதுதான் அவனுக்கும் சத்யாவிற்கும் ஏற்கனவே பேசி வைத்திருந்தது நினைவு வர, அவனிடம் அதை கேட்டேவிட்டாள்..

“என்ன சொல்ற நீ??!!!!” என்று புகழ் முகத்தை சுளிக்க,

“இதை வைச்சுதான் பிரச்சனையே.. சொல்லுங்க உங்களுக்குத் தெரியாம பேசி முடிவு பண்ணிருப்பாங்களா??” என்று பொன்னி கேட்க,

“ம்ம்ச்.. எனக்கு அப்படி அவங்க பேசி வச்சதே தெரியாது.. மே பீ.. இளங்கோக்குக்கு பெரிய பொண்ணை கொடுத்ததுபோல எனக்கு சத்யாவை கொடுக்கணும்னு அத்தை நினைச்சிருக்கலாம்.. ஆனா அவங்க நினைக்கிறதுக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது.. எனக்கு பிடிக்கணும்.. முக்கியமா எனக்கு பொண்டாட்டியா வர்றவளுக்கு என்னை பிடிக்கணும்..” என்று நிறுத்தி அவளின் முகத்தினைப் பார்க்க, இதற்கு என்ன பதில் சொல்ல என்றுதான் பொன்னி பார்த்தாள்..     

“என்ன கண்ணு பதில் சொல்லு..??”

“ஹ்ம்ம் சத்யாக்கு உங்களை பிடிக்கலைன்னு நினைக்கிறீங்களா??” என, அவள் கேள்வியில் எரிச்சளுற்றவன், “அது பத்தி எனக்கு கவலை இல்லை.. உனக்கு என்னை பிடிச்சிருக்கா..??” என்று கேட்க, பொன்னிக்கும் அவன் கேள்வி எரிச்சல் தான் கொடுத்தது..  

எப்போது வந்து என்ன கேட்கிறான் என்று..

“ஹ்ம்ம் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லுன்னு சொன்னதா நியாபகம்..”

“அது அப்போ கேட்டேன்.. ஆனா இப்போ சொல்லு என்னை பிடிச்சிருக்கா???” என்று புகழ் கேட்க,

“சொல்ல மாட்டேன்..” என்றவள் எழுந்து வேகமாய் உள்ளே சென்றுவிட்டாள்..

“ஏன்.. ஏன் சொல்லமாட்ட…” என்றபடி புகழும் பின்னே வர,

“இதுக்கெல்லாம் பதில் என்கிட்டே இல்லை.. கல்யாணம் பண்ணிட்டு இத்தனை நாள் கழிச்சு கேட்கிற கேள்வியா இது…” என்றவள் தூங்கப் போக,

“ஏன் கேட்டா என்ன?? லாஸ்ட் வரைக்கும் கூட கேட்பேன் என்னை பிடிச்சிருக்கான்னு.. நீ பதில் சொல்லு…” என்றவன் அவளோடு பேட்ஷீட்டினுள் புக, ஐயோ இதென்ன பிடிவாதம் என்று பார்த்தாள் பொன்னி..

“நீ எப்படி பார்த்தாலும் பதில் சொல்லித்தான் அகனும்..”

“முடியாது….”

“ஏன்??”

“எனக்குத் தெரியலை.. நீங்க அன்னிக்கு கேட்டபோ நான் சரின்னு சொன்னேன்.. ஆனா பிடிச்சிருக்கா எல்லாம் சொல்லத் தெரியலை…” என்று பொன்னி விளையாட்டுக்குத் தான் சொன்னாள்,

ஆனால் புகழோ “ஹ்ம்ம் இதைத்தான் வீட்லயும் சொன்னேன்.. நான் சொன்னதுக்காக மட்டும்தான் சரின்னு சொன்னா.. என்னை அவளுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு கூட இன்னும் தெரியலை.. ஆனா நீங்க எல்லாம் பண்றதைப் பார்த்தா கண்டிப்பா என்னை பிடிக்காம பண்ணிடுவீங்கன்னு…” என,

“இப்படியேவா சொன்னீங்க???!!!!” என்று அதிர்ந்து பார்த்தவளை, இன்னும் ஒட்டி படுத்தவன், அவள் கண்களைப் பார்த்து,

“வேறெப்படி சொல்லிருக்கணும்…” என்றான் மெது மெதுவாய்..

“இல்ல அது…..”

“அப்போ என்னை பிடிக்கலையா???”

“அப்படியில்ல…..”

“பிடிச்சிருக்கு அப்படித்தானே??” என்றவன் ஒவ்வொரு கேள்விக்கும் அவளிடம் இன்னும் நெருக்கம் காட்ட,

“இப்படி கேட்டா நான் என்ன சொல்ல…” என்றவள் அவனை காண முடியாது கண்களை மூடிக்கொள்ள,

“சரி சொல்ல வேண்டாம் பட் நானே தெரிஞ்சுப்பேன்…” என்று புகழ் அவள் கழுத்தினில் முகம் புதைத்து அவளின் வாசத்தை சுவாசம் செய்ய, உடல் கூசினாலும், மனது லேசாய் ஆட்டம் கண்டாலும்,   

“ஏன் ஏன்?? இத்தனை நாள் தெரிஞ்சுக்க தோணலையா?? இன்னிக்கு மட்டும் என்ன??” என்ற அவளது கேள்வியில், வேகமாய் நிமிர்ந்தவனின் அணைப்பு இறுகியிருக்க,

“அப்போ அதுக்குதான் ஹால்ல படுத்தியா???” என்றவனின் பார்வை மேலும் தீவிரம் காட்ட,

“அப்போ நான் ஹால்ல படுத்துனால தான் இதுவா…” என்றவளின் இதழில் நக்கல் இழையோட,

“நக்கலு…!!!!!” என்றவனின் இதழ்களோ அவளின் இதழ்களில் பதிந்து எழ, அப்போதும் அவளின் பார்வையில் அதே உணர்வே தெரிய,

மீண்டும் மீண்டும் அவளின் இதழில் முத்தமிட்டவன், பின் நிமிர்ந்து “பிடிச்சிருக்கா???” என்றுகேட்க,

“ஹா ஹா உங்களை பிடிச்சிருக்கா தெரியலை.. பட் இது….” என்று அவனின் இதழை தொட்டு, “பிடிச்சிருக்கு நினைக்கிறேன்…” என்று மெதுவாய் சொல்ல,

“அடிப்பாவி புல்லுக்கட்டு….” என்றவன் மேலும் மேலும் அவனை பிடிக்கவைக்க முயன்றான்..  

அவனோடு வாழ்ந்து பார்த்துவிடுவோம் என்றுதானே பொன்னியும் இந்த திருமணத்திற்கு சரியென்று சொன்னாள்.. இதோ வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தாகிவிட்டது.. இனி யாருக்கு யாரை பிடிக்கும்..?? பிடிக்கும் என்பதையும் தாண்டி வேறெதுவும் உணர்வுகள் பிறக்குமா??? யார் அறிவார்..??

  

Advertisement