Advertisement

தோற்றம் – 39

“என்ன நீ நான் சொல்லிட்டு இருக்கேன் சிரிக்கிற…??” என்று புகழ் லேசாய் அவளின் தோள்களை அழுத்திப் பிடிக்க,

“ம்ம்ச் ச்சு.. இப்படி எல்லாம் செய்ய கூடாது..” என்று அவன் கைகளை தட்டியவள், மெதுவாய் அவனின் கன்னத்தில் முத்தமிட,

“இதெல்லாம் செல்லாது செல்லாது…” என்றான்..

“செல்லுமோ செல்லாதோ.. இப்போதைக்கு இதான்.. ஊருக்கு வந்திடுவேன் அதுக்காக இப்படி நீங்க இருந்தா நல்லா இல்லை…”

“ஏன் எனக்கென்ன..???” என்றான் இன்னும் சுருதி இறங்காது..

“எப்பவும் போல இருங்க..” என்றவள், கொஞ்சம் எம்பி அவனின் மறு கன்னத்தில் முத்தமிட, அவளின் வயிறு அவனின் உடலில் அழுந்த,

“ஏய் ஏய் என்ன செய்ற நீ.. திரும்புன்னு சொன்னா திரும்பிட்டு போறேன்..” என்றவன், வந்து அவளுக்கு நேராய் அமர்ந்துகொண்டு மெதுவாய் அவளின் வயிற்றினை தடவ,

“ஹ்ம்ம்..” என்றவள் கொஞ்ச நேரம் கண்களை மூடி அவனின் வருடலை ரசிக்க,

“பார்த்து இருக்கணும் கண்ணு..” என்றான்..

“சரி…”

“நேரத்துக்கு சாப்பிடனும்..”

“சரி…”

“சும்மா அலைய கூடாது..”

“சரி..”

“நெக்ஸ்ட் வீக் எப்போன்னு சொல்லு நானே வந்து கூட்டிட்டு போறேன்..”

“சரி..”

“ஓய் என்னடி நக்கலா…??” என்றவன் அவளின் வயிற்றின் அருகே குனிந்து “வர வர உங்கம்மா ரொம்ப பண்றா..” என்று புகார் வாசிக்க,

“ஹா ஹா…” என்று சிரித்தவள் “ரொம்ப பண்றது நானில்ல நீங்கதான்…. தினமும் பேச போறோம்.. ஒன் வீக்ல வந்திட போறேன்.. அதுக்கு இவ்வளோவா.. பொண்ணுங்களுக்கு இந்த டைம்ல பிறந்தவீட்ல இருக்கற மாதிரி வராது..

அசோக் அமுதா கல்யாணம் வருது, அதுனாலதான் அங்க வர்றேன்.. இல்லைன்னா புல்லா இங்கதான் இருப்பேன்..” என,

“இருப்ப இருப்ப.. புல்லு கட்ட தூக்கிட்டு போறதுமாதிரி உன்னை தூக்கிட்டு போயிடுவேன்..” என்றான் வீராப்பாய்..

“ஆ.. பாப்போம் பாப்போம்..” என்று பொன்னியும் சலிக்க, அவளுக்குத் தெரியும் அவனால் இப்போது விடுமுறை எல்லாம் போட முடியாது என்று.. அடுத்த மாதமும் லீவ் எடுக்க வேண்டும்.. அதன் பின்னே குழந்தை பிறந்த பின்னும் லீவ் வேண்டும்.. அதனாலே அவளும் சொல்லவில்லை இருந்துவிட்டு போ என்று.. அவனே நினைத்தாலும் இப்போது லீவ் எல்லாம் முடியவே முடியாது.. ஆக புகழேந்திக்கு எப்போதடா இவள் அங்கு வருவாள் என்றுதான் இருந்தது..

“ம்ம்ம்… சரி.. பார்த்து இருந்துக்கோ..” என்றவன் மனமேயில்லாமல் எழ,

“நீங்களும் தான்.. மதினி வர்றாங்க சோ எனக்கு உங்க சப்பாட்டு கவலை இல்லை..” என்றபடி அவளும் எழ,

“ஹ்ம்ம்..” என்றவன் கொஞ்சம் நேரம் அவளின் கரத்தினை பற்றி நின்றிருந்தான்..

அதற்குள் மன்னவன் அழைத்து “ரொம்ப இருட்டக்குள்ள கிளம்பனும் புகழ்..” என, “இதோ அப்பா வந்துட்டேன்..” என்றவன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்..

போகும்போது பொன்னியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்.. பொன்னி அவனுக்கு தைரியம் சொல்வது போல் பேசினாலும் அவளுக்கும் உள்ளே எப்படியோ இருந்தது.. ஆனால் முகத்தினில் எதுவும் காட்டவில்லை..

மறுநாள் அசோக்கும், வீட்டில் இருக்கும் விருந்தினர்களும் கிளம்பிட, மங்கையும் பொன்னியும் மட்டுமே வீட்டினில்.. இருவருக்குமான பொழுதுகள் நன்றாகவே போனாலும், மங்கை தோட்டத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் நேரம் பொன்னி தனியாய் வீட்டில் இருக்க நேர்ந்தது..

இத்தனை நாள் மாடுகளை புகழேந்தியின் தோட்டத்தில் கட்டியிருந்தார் மங்கை.. அங்கே இருக்கும் ஆட்கள் பார்த்துகொள்வர். இப்போதும் மகராசி அதைதான் சொன்னார்..

“இருக்கட்டும் மதினி.. ஊர்ல இருக்கப்போ நாங்க பார்த்துக்கணும்..” என்று சொன்னவர், மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட,

பொன்னியோ “ம்மா மெதுவா வாக்கிங் போல.. எங்க வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்..” என்றுசொல்லி அவளும் அங்கே கியல்ம்பியிருந்தாள்..

முதல் இரண்டு நாள் யாரும் எதுவும் சொல்லவில்லை.. ஆனால் மூன்றாவது நாள் மகராசி திட்டிவிட்டார்..

“என்ன கண்ணு.. நீ பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லை.. பொழுது சாயுறப்போ இப்படி எல்லாம் வரக்கூடாது. அதுவும் தனியா.. வர்றதுன்னா காலையில வந்திடு.. இல்ல போன் போடு நாங்க யாராது வந்து கூட்டிட்டு போறோம்..” என்றுவிட,

“ம்ம்.. சரிங்கத்தை…” என்று முகத்தினை அமைதியாய் வைத்துகொண்டாள்..

ஆனால் இந்த விஷயம் அப்படியே புகழேந்திக்கு செல்ல “உன்ன என்ன சொல்லிட்டு வந்தேன் அலைய கூடாது சொன்னேன் இல்லையா???” என்று கத்தினான்..

“அங்க இருந்தா வாக்கிங் போவேன்.. இங்க எங்க போறது.. அதான்..”

“அதுக்கு கூட யாரையும் கூட்டிட்டு போ.. தனியா போறது என்ன பழக்கம்.. இதெல்லாம் சரி பட்டு வராது நீ ஊருக்கு ரெடியாகு…” என்று அவன் பிடியில் நிற்க, அடுத்து வந்த நாட்கள் எல்லாம் பொன்னி யாரின் துணைகொண்டு தான் போனாள்.. மங்கை சொன்னார்தான் முதலில். இவள்தான் மறுத்துவிட்டாள்..

இப்போதோ “ நான் சொல்றது எல்லாம் ஏறாது..” என்ற மங்கையின் முணுமுணுப்பும் சேர்ந்தே கேட்கும் நிலை..

ஒருவழியாய் வாரம் கடந்திட, அன்பரசி ஜெயபாலும் ஊருக்கு வந்திருந்தனர்..

திருமண வேலைகள் ஒருப்பக்கம் ஆரம்பமாகி இருந்தது.. புகழ் சொல்லிவிட்டான் “அத்தை நீங்க பொன்னியும் பார்த்துட்டு எதுக்கும் ரொம்ப அலைய வேணாம்.. எதுன்னாலும் ஜெயபால் மாமாக்கிட்ட சொல்லுங்க செஞ்சு கொடுப்பாரு..” என்றிட,

ஜெயபாலும் “அதுக்கென்ன.. அசோக் எனக்கு தம்பி.. நான் செய்ய மாட்டேனா??” என்று ஊரில் இவர்கள் வீட்டு சார்பாய் செய்ய வேண்டியவற்றை ஜெயபால் முன் நின்று செய்ய, அதில் அன்பரசிக்கு தனி பெருமை வேறு..

 “வளர்பிறை வருது..  கல்யாண சேலை எடுக்கணும்.. நம்மதான்டா எடுக்கணும்..” என்று அசோக்கிடம் சொல்லவும், “பொன்னி வர்றபோ எல்லாம் வாங்க எடுத்துக்கலாம் ம்மா..” என்றுவிட்டான் அசோக்..

அதனை முன்னிட்டு அனைவரும் நாள் பார்த்து புதன்கிழமை சென்னை கிளம்ப, “நாங்களே பொன்னிய கூட்டிட்டு வந்துக்கறோம்..” என்று விட்டனர் புகழிடம்..

இதற்கு சரி என்று சொன்னவன், திருமண சேலை எடுப்பதற்கு பொன்னியை வரக்கூடாது என்றுவிட்டான்..

“நான் பார்த்து இருந்துப்பேன்..” என்று அவள் சொல்ல,

“நான் சொல்றத கேட்பியா மாட்டியா???” என்றவன் குரலை உயர்த்த, பொன்னி உர்ரென்று முகத்தினை வைக்க,

“நீ என்ன பண்ணாலும் சரி கண்ணு.. துணி எடுக்க அவ்வளோ கூட்டம் கடைல இருக்கும்.. சரியான முஹூர்த்த நேரம் வேற.. ஒரு கடைல முடியாது.. இந்த நேரத்துல இப்படி அலைய கூடாது நீ..” என்று முடிவாய் சொல்லிவிட,

“ம்ம்ம்ம்.. நீங்க எல்லாம் போவீங்க.. நான் மட்டும் வீட்ல இருக்கணும்…” என்றாள் சோகமாய்..

“பரவாயில்ல.. நான் போய், கல்யாண புடவை எடுக்கவும், உனக்கும் எனக்கும் எடுத்திட்டு வந்திடுறேன்.. மத்தவங்க அவங்களுக்கு வேண்டியதை பார்த்து எடுத்துட்டு வரட்டும்..” என்று சொல்லி கிளம்பிவிட்டான்..

“நாங்க கூட பார்த்துக்க மாட்டோமா..” என்று மகராசி கேட்க, “தாயே நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை..” என்றுவிட்டான்..

அசோக்கிற்கும் அமுதாவிற்குமான உறவு கொஞ்சம் மெருகேறியிருந்தது.. அதிகம் அப்படியொன்றும் சகஜமான பேச்சுக்கள் இல்லையென்றாலும் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டனர்..

அமுதாவிற்கு எடுக்கவும், புகழேந்தி பொன்னிக்கு ஒரு சேலை எடுக்க, “நாங்க பார்த்து எடுக்க மாட்டோமா..??” என்றனர் நித்யாவும் அன்பரசியும்..

“நீங்களும் எடுத்துட்டு வாங்க.. நானும் எடுக்கிறேன்..” என்றவன் அவளுக்குப் பார்க்க, அசோக்கும் கூட மங்கையிடம் “ம்மா பொன்னிக்கு பாருங்க..” என்று சொல்லிக்கொண்டு இருந்தான்..

‘அடேய் ஏன் டா…’ என்றுதான் வந்தது புகழேந்திக்கு.. கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான் அசோக் எதை தேர்வு செய்கிறான் என்று.. அவன் எடுக்கும் நிறத்தை இவன் எடுக்கவில்லை..

பின்னே அனைவரிடமும் சொல்லிக்கொண்டு பில் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்திட,

பொன்னியிடம் “உங்க அண்ணன் ஒரு சேலை எடுத்தான் பாரு.. ப்பா… நீ மட்டும் அதை கட்டின.. பஞ்சு முட்டாய் சேலை கட்டின்னு.. பாட்டுதான் பாடனும்…” என்று கிண்டல் அடித்தபடி அவன் வாங்கி வந்ததை காட்ட,

அவன் சொன்னதை வேண்டுமென்றே முறைத்துகொண்டே வாங்கிப் பார்த்தவள் “வாவ் சேலை சூப்பருங்க…” என்றுசொல்லி அவனின் மலர்ந்த முகத்தை பார்த்துவிட்டு,

“ஆனா இதே கலர்ல கோல்டன் பார்டர் வச்சுதான் என் பர்த்டேக்கு வாங்கிக் கொடுத்தீங்க..” எனவும், புகழேந்தியின் முகம் அப்படியே சுருங்கிப் போனது..

“ம்ம் குடு நான் மாத்திட்டு வர்றேன்…” என்று சத்தமாய் சொன்னவன் “இந்த கலர் உனக்கு அழகா இருக்கும்..” என்று மெதுவாய் முணுமுணுக்க,

“மெதுவா சொல்றதை கொஞ்சம் சத்தமா சொன்னா என்னவாம்…” என்று இவளும் சொல்லிக்கொண்டே அந்த சேலையை அவள் தோள் மீது போட்டுக்காட்டி “நல்லாருக்கா???!!” என்று கேட்க,

“சூப்பர் கண்ணு…” என்றவன் அப்படியே வந்து பின்னே அணைத்துக்கொள்ள,

“ச்சு.. சேலை கசங்கிடும்..” என்றபடி

“உங்களுக்கு என்ன எடுத்தீங்க???” என்று கேட்டபடி அமர, அவனும் அதனை எடுத்து காட்ட,

“எப்படி எப்படி எங்க அண்ணன் எடுத்த சேலை பஞ்சு முட்டாயா??” என்று அவனை சீண்டினால் பொன்னி..

“ஆமா ஆமா அப்படித்தான்.. நான் ஏதாவது செய்யுறப்போ போட்டிக்குன்னே செய்றான்..”

“ஹா ஹா.. உங்களுக்கு பொறாமை..” என்றவள் வேண்டுமென்றே அசோக் வாங்கிக்கொடுத்த ப்ரேஸ்லெட்டை புகழேந்தியின் முன்னே ஆட்டிக் காட்ட,

“ரொம்ப பண்ணாத டி.. என் புள்ள உள்ள இருக்கிறதுனால தான் இதெல்லாம்..” என்றான் கெத்தாய் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு..

ஆட்கள் இத்தனை பேர் இருக்க, ஒரு மாதத்தில் என்ன, ஒரு வாரத்தில் கூட திருமணம் நடத்தி முடித்து விடலாம்.. அப்படித்தானே சீரும் சிறப்பாய் நடந்தது அசோக் அமுதா திருமணம்..

பத்திரிக்கை வைக்கும் நேரம் புகழேந்தி “அத்தை நீங்க போய் பரஞ்ஜோதி அத்தையை கூப்பிட வேண்டாம்..” என்றுவிட்டான் ..

மங்கை தயங்க, “எங்க வீட்ல இருந்து போயிக்கட்டும். நீங்க வேண்டாம்…” என்று உறுதியாய் சொல்லிவிட்டான்..

இதனை இளங்கோவிடமும் சொல்லியிருந்தான் புகழ். அவனும் “அவங்க வீட்டு சார்பா ஜெயபால் மாமா கூப்பிடட்டும்..” என்றுவிட்டான்..

இதனை பரஞ்சோதி சரியாய் திருமணத்திற்கு முதல்நாள் உறவினர்களிடம் சொல்ல, அது கண்ணு காது மூக்கு வைத்து கலகம் வரும் சூழல் உருவாக,

ஜெயபாலோ “நான்தான் அசோக் வீட்டு சார்பா எல்லாம் பண்ணேன்.. ஏன் நான் கூப்பிட்டா வரமாட்டீங்களா??” என்று பேச,

அன்பரசி “அப்போ இவ்வளோதான் நீங்க அவருக்கு கொடுக்கிற மரியாதையா??” என்று கேட்டபடி நித்யாவை முறைத்தாள்..

நித்யாவோ “ம்மா உனக்கு இங்க இருக்க இஷ்டமில்லன்னா நீ கிளம்பிடு.. அதுக்காக தயவு செஞ்சு எதுவும் கெடுத்து வைச்சு நீயும் எதையும் கெடுத்துக்காத..” என்று மிரட்டலாகவும், கெஞ்சலாகவும் சொல்ல, பரஞ்சோதி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக்கொண்டே தான் இருந்தார்..

அவர் அப்படித்தான் என்று தெரியும் என்பதால் அதற்குமேல் யாரும் எதுவும் பெரிதாய் நினைக்கவில்லை.. பொன்னிதான் அண்ணன் திருமணம் என்று ஆடி ஓடி வேலை செய்ய முடியாது ஒரு இடத்தில் அமர்ந்துவிட, அவளே முயன்றாலும் அதற்கு புகழேந்தி விடவில்லை..

மகராசியும் “நீ சும்மா இரு..” என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டிருந்தார்..

மங்கையோ “உங்க வீட்டு ஆளுங்க என்ன சொல்றாங்களோ அதை கேளு..” என்றுவிட, பொன்னி அதற்குமேல் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை..                   

இரண்டு மாதங்கள் கழித்து…

நள்ளிரவு வேளை, புகழ் குடும்பத்தினரும் சரி, அசோக் அமுதா மங்கை என இவர்களும் சரி, அனைவருமே ஒரு பதற்றத்தோடு தான் மருத்துவமனையில் அமர்ந்திருந்தனர்..

அதிலும் புகழேந்தி சொல்லவே வேண்டாம்.. முகமெல்லாம் வியர்த்து பதற்றமாகவே இருந்தான்.. டாக்டர் சொன்ன தேதிக்கு இன்னமும் நான்கு நாட்கள் இருக்க, இப்போதே வலி வந்திருந்தது பொன்னிக்கு..

நன்றாய் தான் இருந்தாள், திடீரென்று வலி வந்திட, நல்லவேளை, அமுதாவிற்கு தாலி பிரித்து கோர்க்கவென்று அனைவருமே சென்னையில் தான் இருந்தனர்.. ஆக அனைவருமே வந்துவிட்டனர்.. சீக்கிரமே வலி வரவும் பொன்னியை விட புகழேந்தி தான் பயந்து போனான்..

பொன்னியை உள்ளே அழைத்துக்கொண்டு போய் ஒருமணி நேரத்திற்கும் மேலாகியிருந்தது, அசோக் ஒருபுறம் டென்சனாய் இருக்க, அண்ணனையும் கணவனையும் அமுதா தான் தேற்றிக்கொண்டு இருந்தாள்.. அமுதா இத்தனை பேசுவாளா என்பது வீட்டினருக்கே அவ்வளவு ஆச்சர்யம்..

ஆம் அசோக்குடனான திருமண வாழ்வு அவளை அத்தனை மாற்றி இருந்தது.. முழுக்க முழுக்க அவளுள் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே.. வீட்டிலிருந்தே கல்லூரி வேறு செல்வதால் அமுதாவிற்கு முன்னிருந்த எந்த தயக்கங்களும் இப்போது இல்லை.. அனைவரோடும் சகஜமாய் இருந்தாள்..

“ஆளே மாறிட்ட அமுதா..” என்று நித்யாவும் சரி, அன்பரசியும் சரி அவளைப் பார்த்து சொல்ல, அதற்குள் டாக்டர் குழந்தையோடு வெளியே வந்துவிட்டார்..

“கங்கிராட்ஸ் புகழ்.. பெண் குழந்தை பிறந்திருக்கு…” என்று வந்து குழந்தையை காட்ட, அனைவர்க்கும் அப்படியொரு சந்தோசம்.. புகழ் மெதுவாய் குழந்தையின் கன்னத்தை வருடிப் பார்க்க,

“தூக்குடா…” என்றான் இளங்கோ..

“ம்ம்ஹும் பயமா இருக்கு..” என, மங்கை மகராசியை முதலில் குழந்தையை வாங்குமாறு சொல்ல, அவரும் சந்தோசமாய் முன்னே வர,

“தாயே.. மக்களை பெற்ற மகராசி பார்த்து வாங்கு…” என்று புகழும் சொல்ல,

“போடா ரொம்பத்தான்…” என்றவர் சந்தோசமா தன் சின்ன பேத்தியை வாங்கிக்கொள்ள, அடுத்த சில நிமிடங்களில் திரும்பவும் பாப்பாவை உள்ளை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டனர்..

பொன்னி கண் விழிக்க மேலும் சில நொடிகள் பிடிக்க, அவள் முழித்து, வேறு அறைக்கு மாற்றலானதுமே புகழேந்தி தான் முதலில் போனான் அவளைக் காண்பதற்கு..

“கண்ணு…” என்றவன் வேகமாய் போய் அவளின் அருகே சென்று மெதுவாய் தலையை வருடி, நின்றுகொள்ள,

“பா.. பாப்பா பார்த்தீங்களா???” என்றாள் உலர்ந்துபோன இதழ்களால் ஒரு மலர்ந்த சிரிப்பினை சிந்தி..

“ம்ம் அவ்வளோ சாப்ட்.. ஆனா தூக்கலை..” என்றவன் இப்போது இவளின் கன்னம் வருட, அப்படியே அவனது கரங்களை பிடித்துக் கொண்டவள்,

“ஏன்..” என்றாள்..

“பயமா இருந்தது கண்ணு… அவ்வளோ சாப்ட் பாப்பா…” என்று சொல்லிக்கொண்டே கண்களை இறுக மூடி உறங்கும் குழந்தையை பார்த்தவன், “அப்படியே உன்ன மாதிரி..” என்றுசொல்ல,  

“ம்ம்..” என்று சோபையாய் முறுவலித்தாள் பொன்னி..

அடுத்து வீட்டினர் அனைவரும் உள்ளே வர, ஆண்களோ இரண்டு நிமிடத்தில் வெளியே போய் நின்றுகொள்ள, அசோக் வந்தவன் பொன்னியை ஆதரவாய் பார்த்து சிரித்துவிட்டு, “பாப்பா அப்படியே உன்ன மாதிரி பொன்னி…”என்றுவிட்டு போக,  பொன்னி புகழேந்தியை பார்த்து சிரித்தாள்..  

“நான் சொன்னதை கேட்டிட்டு…” என்று புகழ் சொல்லும்போதே,

அமுதா வந்து “கங்கிராட்ஸ் அண்ணி…” என்றுசொல்ல,

“ஹலோ எனக்கு எல்லாம் சொல்ல மாட்டியா???” என்றான் புகழ்..

“நீ பயந்து போய் வெளிய இருந்ததுக்கு எல்லாம் சொல்ல முடியாது..” என்று அவனை வாரியவள்,  பொன்னியிடம் எதுவோ பேச,

“தோடா.. என்ன??” என்றபடி புகழ் வர,

“டேய் கண்ணு.. வெளிய போ நீ.. இங்க என்ன வேலை….” என்று மகராசிதான் மிரட்டினார்..

“தாயே.. வேணாம்.. இவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னை திட்டாத…”

“டேய் டேய் எனக்கு உன்னையும் தெரியும்.. அவளையும் தெரியும்..” எனும்போதே,

“என்ன தெரியும் என்ன தெரியும்??” என்றான் புகழ்..

அவன் கேட்டது என்னவோ சும்மாதான், ஆனால் மகராசி “எல்லாம் தெரியும்.. நீ வெளிய போ..” என்று அமுதாவை ஒருபார்வை பார்த்துவிட்டு சொல்ல, அதிலேயே புரிந்துபோனது பொன்னிக்கும் புகழுக்கும் அமுதா அனைத்தையும் சொல்லிவிட்டாள் என்று..

‘அப்படியா??!!’ என்று இருவருமே அமுதாவை பார்க்க, அவளும் ஆம் என்று தலையை ஆட்ட,

“புகழு.. எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ.. இங்க இத்தனை பேர் இருக்க கூடாது..” என்று விரட்ட,  மங்கை அனைத்தையுமே கொஞ்சம் தள்ளி நின்று கண்ணில் திரண்ட நீரோடு பார்த்துகொண்டு இருந்தார்..

பொன்னி மங்கையை பார்த்தவள், “ம்மா…” என்றழைக்க,

அதேநேரம் புகழேந்தியும் “ஹ்ம்ம் மக்களை பெற்ற மகராசி நீ எது சொன்னாலும் சரிதான்..” என்று சொல்லிக்கொண்டே வெளியே போக, மங்கையின் இதழ்களில் லேசாய் சிரிப்பு பூத்தது..

‘பேச்சு மட்டும் இல்லைன்னா.. இவரெல்லாம்…’ என்று நினைத்தது வேறு யாராய் இருக்க முடியும்.. பொன்னியேதான்..

எந்த குடும்பம் ஆகவே ஆகாது என்று புகழேந்தியை முதன்முதலில் சந்திக்கும் போது பாதியில் இறக்கிவிட்டு போனாளோ, இன்று அவனோடும் அவனின் அந்த குடும்பத்தோடும் வாழ்வு முழுமைக்குமான பயணம் அவளுக்கு..

உறவுகள் என்பது இதுதான்.. நாம் எதிர்பார்ப்பது போல் எதுவும் இருக்காது. சில நேரங்களில் இனிப்பாய்.. பல நேரங்களில் சங்கடம் தருபவையாக, இப்படி எப்படி வேண்டுமானாலும் உறவுகளில் மாற்றம் ஏற்படலாம்.. கண்ணில் தெரியும் தோற்றம் ஒன்றாய் இருக்கும். உள்ளிருக்கும் ரூபம் வேறாய் இருக்கும்.. ஆனால் எப்படியான உறவாகினும் புரிதல் எனும் ஆபரணம் சூட்டிவிட்டால், அது மெருகேறி பளிரிடும்.. பொன்னி புகழேந்தியின் வாழ்வினை போல..

                             நன்றி!!! வணக்கம்..!!    

Advertisement