Advertisement

     தோற்றம் – 9

“பொன்னி இந்தா மாப்பிள்ளைக்கு இந்த துண்டை குடு..” என்று மங்கை ஒரு புதிய துண்டினை நீட்ட, பொன்னியோ மங்கையை ஏகத்திற்கும் முறைத்து நின்றாள்..

“ஏய் என்னடி முறைக்கிற.. போ.. போய் குடு.. மாப்பிள்ள குளிக்க போனார்ல போய் குடுத்துட்டு வா…” என்று மங்கை விரட்ட,

“ம்மா இதெல்லாம் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்.. அவர் துண்டெல்லாம் எடுத்துட்டு தான் வந்தார்…” என்று பொன்னி சலிக்க,

“இருந்தாலும் நம்ம கவனிக்கிறதுன்னு ஒண்ணு இருக்குள்ள.. போ டி.. போய் அவருக்கு என்ன வேணும்னு பார்த்து பண்ணு…” என்று மங்கை அவளை விரட்ட, வேறுவழி இல்லாது வேண்டா வெறுப்பாய் துண்டினை வாங்கிக்கொண்டு அவளின் அறைக்குச் சென்றாள் பொன்னி..

ஆனால் புகழேந்தியோ குளிக்கவும் கிளம்பவில்லை ஒன்றுமில்லை.. ஹாயாக கட்டிலில் படுத்து காலைக் ஆட்டிக்கொண்டு இருக்க, அவனைப் பார்த்தவள்,

“நீங்க குளிக்க போகல??” என,

“போகலாம்னு தான் இருந்தேன்.. அத்தை பேசினது கேட்டுச்சா சோ உனக்காக வெய்ட் பண்ணேன்…” என்றான் அவனோ வந்த சிரிப்பை அடக்கியபடி..

“ஓ.. சரி சரி.. துண்டு இந்தாங்க..” என்று அவள் நீட்ட,

“ம்ம் தேங்க்ஸ்…” என்றவன் பாத்ரூம் வரைக்கும் சென்று, திரும்பிப் பார்க்க, “என்னங்க??”என்றாள் அவளும்..

“இல்ல அத்தை.. என்னவோ அவருக்கு என்ன வேணும்னு பார்த்து பண்ணுன்னு சொன்ன மாதிரி கேட்டுச்சு… அதான்..” என்று இழுக்க,

“அதுக்கு???” என்றாள் அவளும் இழுத்து..

“வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணா நல்லாருக்கும்…”

“அஹான்.. ஹெல்ப்பா… அதெல்லாம் எனக்கு செஞ்சு பழக்கமில்ல.. வேணும்னா சுடுதன்ணியே அப்படி ஊத்தி விடுறேன்…” என்று இப்போது அவள் சிரிப்பை அடக்கி சொல்ல,

“நோ தேங்க்ஸ்.. எங்களுக்கும் கை இருக்கு.. தன் கையே தனக்குதவி…” என்றபடி வேகமாய் குளியலறை கதவை அடைத்துக்கொண்டான் புகழேந்தி..

பொன்னியும் சிரித்தபடியே, நேற்று கழற்றி போட்டிருந்த துணிகளை எடுத்து துவைக்க போட்டுவிட்டு, அசோக்கிடமும், மங்கையிடமும் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு திரும்பவும் அறைக்கு வர, புகழேந்தியின் அலைபேசி அலறிக்கொண்டு இருந்தது..

எடுக்கலாமா வேண்டாமா என்றே யோசனையில் ஒருநொடி நின்றவள், பாத்ரூம் கதவின் அருகே சென்று நின்று “என்னங்க…” என்றழைக்க,

“ம்ம் சொல்லு கண்ணு…” என்றான் அவனும்..

“போன் அடிக்குது.. சந்துருன்னு வருது.. எடுக்கவா??” என்று கேட்கையில் அவனே கதவை திறந்துகொண்டு வந்துவிட்டான்.

தலையில் ஈரம் சொட்ட, அதனை துவட்டிக்கொண்டே வந்தவன், அவளிடம் அலைபேசிக்காக கை நீட்ட, அவளோ அவனை கொஞ்சம் திகைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்..

மங்கை கொடுத்திருந்த டர்க்கியை இடுப்பில் கட்டி, குற்றால துண்டை வைத்து தலையை துடைத்துக்கொண்டு வந்தவனை கண்டு கொஞ்சம் பொன்னிக்கு ஒருமாதிரி சங்கோஜமாய் தான் இருந்தது..

அங்கே புகழின் வீட்டில், எப்போதும் பொன்னி முதலில் குளித்து தயாராகி வெளியே வந்திட, இவன் எழுந்து எப்போது குளிப்பான் என்றெல்லாம் அவளுக்கு தெரியாது..  வீட்டில் ஆட்களும் ஜாஸ்தி இருக்க, இருவருக்குமான தனிப்பட்ட பொழுதுகள் கம்மியே..

ஆனால் இங்கே அப்படியில்லாது, இன்று இவனை இப்படிக்காண, கொஞ்சம் தடுமாறித்தான் போனாள் பொன்னி..

“கண்ணு…” என்று அவளை உலுக்க, “ஹா.. உ.. உங்க போன்.. சந்துரு…” என்று உளற,    

“ஹ்ம்ம் தெளிவா உளறு…” என்று கொஞ்சம் அவளை உரசி நிற்க,

“ம்ம்ச் என்னதிது..” என்று அவள் விலகி நின்றாள்..

“ஹே.. என்ன.. நீதான என்ன அப்படி பார்த்த.. இப்போ இப்படி சொல்ற??” என்று புகழ் கொஞ்சம் கெத்தாய் கேட்பதுபோல் கேட்க,

“நான் பார்க்கவுமில்ல, எதும் சொல்லவுமில்ல.. நீங்க ரெடியாகி வாங்க.. எல்லாரும் சாப்பிட வெய்ட் பண்றாங்க…” என்று சொல்லி வேகமாய் வெளியே வந்துவிட்டாள்..    

இவர்களுக்குள் இயல்பாய் ஒரு பேச்சும், ஒரு பிணைப்பும் உருவாகியிருந்தது.. திருமணத்திற்கு பிறகு.. நீ என் மனைவி என்று அவனும்.. நீ என் கணவன் என்று அவளும் ஒருவரை ஒருவர் மனதில் நிறுத்தி அதனைக் கொண்டே தங்களின் உறவைத் தொடங்கியிருந்தனர்.. இல்லையெனில் இருவருக்குமே இத்தனை இயல்பு சாத்தியமில்லை என்றே தோன்றியது இருவருக்கும்..  

திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது.. முதல்நாள் தான் மறுவீட்டிற்காக இங்கே வந்திருந்தனர்.. பொன்னியே நினைக்கவில்லை, இத்தனை சீக்கிரம் இவர்களின் திருமணம் நடக்கும் என்று..

‘நான் மும்பை போறதுக்குள்ள எங்க வீட்டு ஆளுங்களோட வந்து பேசுறேன்…’ என்று சொல்லி சென்ற புகழேந்தி, அதை அப்படியே செய்தும் காட்டினான்..

மங்கை இப்படி அமைந்து வந்த சம்பந்தம் முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தமாய் இருக்க, வீட்டிலும் ஒருசில உறவுகள் கொஞ்சம்பேர் இருந்தனர்.. ஆக யார் முன்னிலும் எதுவும் பேச வேண்டாம் என்று அசோக் அனைவரும் செல்ல நேரம் பார்த்துகொண்டு இருந்தான்..

மதியத்திற்கு மேல் தான் அனைவரும் கிளம்ப, மங்கையோ “ஹ்ம்ம் நல்ல இடம்னு நினைச்சோம் இப்படியாகிடுச்சே…” என்று பபுலம்ப, அசோக் தான் அவரை ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தான்..

பொன்னி வெறுமெனே அமர்ந்திருக்க, அந்த பக்கத்து வீட்டு பாட்டியோ,  “நம்ம ஊர்லையே மாப்பிள்ளைய வச்சிக்கிட்டு ஏன் வேற மாப்பிள்ளைக்கு போகணும்…” என்று முணுமுணுக்க,

“என்ன பெரிம்மா சொல்ற???” என்றார் மங்கை..

ஆனால் அசோக்கிற்கும் பொன்னிக்கும் அவர் எதை சொல்கிறார் என்று புரிந்திட, பொன்னி கொஞ்சம் கலவரமாய் தான் பார்த்தாள் அசோக்கை.. பொன்னி தைரியமானவள் தான் ஆனால் அவளுக்கு இந்த விசயத்தினை மங்கையிடம் பேச அத்தனை தைரியமில்லை.. அசோக்கோ நான் பேசிக்கொள்கிறேன் என்பதுபோல் சைகை செய்தவன்,

“பாட்டி.. நீ போய் கொஞ்சம் தூங்கு… காலையில இருந்து உட்கார்ந்துட்டே இருந்த…” என்று அவரை கிளப்ப முயல,

“இரு அசோக் பெரிம்மா என்னவோ சொல்றாங்க…” என்று மங்கை தடுக்க, “இல்லம்மா நான் சொல்றேன்…” என்றவன், அந்த பாட்டியை கிளப்பிவிட்டான்.  

மகனின் நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கவும் “என்ன அசோக்.. எனக்கு எதுவும் புரியலை..” என்று மங்கை சொல்ல,

“ம்மா.. நீ.. வா.. இப்படி உக்காரு…” என்று பொன்னியின் அருகே அமர வைத்தவன், “நீ.. நீ புகழேந்தியைப் பத்தி என்ன நினைக்கிற???” என்று கேட்க, மங்கைக்கோ சட்டென்று யாரவன் என்று தெரியவில்லை..

“யா… யாரு..??” என்று கேட்க,

“அதான்ம்மா.. அமுதாவோட அண்ணன்.. ரெண்டாவது அண்ணன்..” என்று அசோக்கும் சொல்ல,

“அந்.. அந்த தம்பிக்கு.. என்ன..” என்றவர் மகள் அமைதியாய் இருப்பதை உணர்ந்து, தன் மக்கள் இருவரையும் பார்த்து, “என்ன?? என்ன விஷயம்…” என்றார் உணர்வுகள் வெளிப்படாத குரலில்..     

பொன்னிக்கு என்னவோ இந்த சூழலை அத்தனை எளிதாய் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. ஒருவித பயம்.. ஒருவித தயக்கம்.. ஒருவித சங்கடம் எல்லாம் கலந்து அவளை ஆட்டிப்படைக்க, மங்கை என்ன சொல்வாரோ என்று பார்த்துகொண்டு இருந்தாள்..

‘அம்மா பதில் சொல்றது எல்லாம் இருக்கட்டும்.. நீ என்ன சொல்ற.. அப்போ அவனை பிடிச்சிருக்கா???’ என்று அவளின் மனமே கேட்க,

‘பிடிச்சிருக்கா.. ஓ…நோ…’ என்று சொன்னவளுக்கு அதற்குமேல் எண்ண முடியவில்லை..

‘அப்போ அவனை பிடிக்கலையா???’ என்று அவளின் மனம் கேட்க, அதற்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை..

‘சரி அப்போ வாழ்ந்து பார்த்து தெரிஞ்சுக்கோ…’ என்று அவளது மனமே முடிவை சொல்லிட, இப்போது மங்கையின் முடிவு என்னவோ என்று பார்த்திருந்தாள்..

புகழேந்தியோடு வாழ்ந்து பார்த்துவிடுவோம் என்று பொன்னி ஷண நேரத்தில் எடுத்த முடிவு, அவளுக்கே ஆச்சர்யமே.. திருமணம் என்றால் என்னவென்று தெரியாத சின்ன பாப்பா இல்லை அவள்.. அவளுக்கென்று சில பல கனவுகளும் இருக்க, அதெல்லாம் இனி புகழேந்தியோடுதான் என்று நினைக்கையில் அவளுக்கே அவளை முன்னிட்டு ஆச்சர்யமே..

இவளின் யோசனையில் மங்கையும் அசோக்கும் என்ன பேசினார்கள் என்பது பாதியை கவனிக்காது விட்டவள், “என்ன பொன்னி.. நீ என்ன சொல்ற??..” என்ற அசோக்கின் கேள்வியில்,

“ஆ.. என்ன.. என்ன அசோக்…” என்று முழித்தாள்..

“அதுசரி இவ்வளோ நேரம் நானும் அம்மாவும் பேசினது கேட்கலையா???” என்று அசோக் கேட்க, “என்ன.. என்ன பேசினீங்க??” என்றாள் குழப்பமாய்..

“நான் அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் பொன்னி…” என்று அசோக் சொல்ல,  “என்னது…!!!!!” என்று திகைத்தாள்..

“ம்ம் ஆமா…” என்று அசோக் சொல்ல, “அண்ணனும் தங்கச்சியும் இவ்வளோ விஷயம் மறைச்சிருக்கீங்க…” என்று மங்கை கடிந்தார்..

‘ஓ..!! அமுதா விஷயம் சொல்லிருக்கானா…’ என்று கொஞ்சம் மூச்சை இயல்பாய் விட்டவள் ஏன் சொன்னாய் என்பதுபோல் அசோக்கைப் பார்த்தாள்..

“பின்னாடி யார் மூலமாவோ தெரிய வர்றதுக்கு நம்மலே சொல்லிட்டா பெட்டர் இல்லையா???” என,

“ம்ம் அதும் சரிதான்…” என்றாள் மெல்லமாய்..  

ஆனால் அன்று பொன்னி மன்னவனிடம் சொன்னதுபோல் மங்கையினால் இதனை எளிதாய் எடுத்துகொள்ள முடியவில்லை..

“எவ்வளோ பெரிய விஷயம்.. ஆனா என்கிட்ட வாயே திறக்கலை ரெண்டுபேரும்..” என்று வருந்த,

“ம்மா சொல்லகூடாதுன்னு இல்லை.. ஆனா எல்லாமே கொஞ்சம் சரியாகட்டும்னு இருந்தோம்..” என்றாள் பொன்னி..

என்ன இருந்தாலும் தப்பே செய்யாது அத்தனை பெரிய அபாண்டம் சுமந்து, ஊரில் அனைவரின் முன்னும் அடி வாங்கியது அவரின் மகனல்லவா.. அதெல்லாம் மங்கைக்கு கண் முன்னே வந்துபோக, “ம்ம்ச் என்னவோ..” என்று சலிக்க,

“ம்மா என்னம்மா.. அமுதா நல்ல பொண்ணும்மா…” என்றாள் பொன்னியும்..

“நல்ல பொண்ணுதான்.. இது இதோட முடிஞ்சிருந்தா சரி.. ஆனா இப்போ இன்னொன்னு கிளம்பிருக்கே.. இதுக்கு எப்படி பேச்சு வரும்னு தெரியாதே..” என,

அசோக்கோ “ம்மா அவங்க வந்து பேசட்டும் முதல்ல.. நீயா எதுவும் முடிவு பண்ணாத.. ப்ளீஸ்..  புகழ் நல்ல டைப்பா தான் இருக்காப்ல..” என்றான் பொன்னியை ஒருமுறை பார்த்து..

“ஹ்ம்ம் என்னவோ நல்லதுன்னு நினைச்சு பண்ணீங்க.. ஆனாலும் இது பின்னால என்னமாதிரி பேச்சு வரும்னு சொல்ல முடியாது..” என்றவர், “அதாவது உனக்கும் அந்த புகழ் தம்பிக்கும் கல்யாணம் நடந்தா…” என்று  அவரும் பொன்னியைப் பார்த்து சொல்ல, பொன்னிக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரிந்தது..

“இல்லம்மா அது வந்து…” என்று அசோக் சொல்லும்போதே,

“நீ சும்மா இருடா..” என்றவர்,

“இங்கபாரு பொன்னி.. சில விஷயங்கள் நம்ம முன்னாடியே யோசிச்சு வைக்கிறது ரொம்ப நல்லது.. நடந்து முடிஞ்சது எந்தமாதிரி பிரச்சனைன்னு தெரியும் உனக்கே.. அது இப்போ சரியாகிடுச்சு.. ஆனா நடந்ததை மாத்த முடியாது.. அந்த குடும்பத்துல போய் உன்னால நிம்மதியா வாழ முடியும்.. இல்ல இதுக்கப்புறமும் என்ன சூழ்நிலை வந்தாலும் நான் சமாளிப்பேன்னு  உன்னால திடமாவும், உனக்கு ஒண்ணுன்னா அந்த தம்பி உருதுணையா நிப்பாருன்னு நீ உறுதி குடுத்தா மட்டும் தான் நான் சம்மதிப்பேன்….” என்றார் மங்கை உறுதியாய்..

ஒரு அன்னையாய் அவர் பேசியது சரிதான்.. ஆனால் பொன்னிக்கு?? அவர் கேட்கும் உறுதியினை எப்படி அவளால் கொடுக்க முடியும்.. முடியுமா?? முதலில் அங்கே எப்படி என்ன சூழல் என்று தெரியவில்லை.. புகழேந்தி அவனைப் பார்த்ததே இந்த கொஞ்ச நாட்களில்தான்.. அப்படியிருக்கையில் அவன் சார்பாகவும் அவளால் எப்படி மங்கை கேட்ட உறுதியைக் கொடுக்க முடியும்..

பதில் சொல்ல முடியாமல், பொன்னி அமைதியாய் இருக்க, “யோசி.. யோசிச்சு முடிவு பண்ணு…” என்றுவிட்டு போய்விட்டார் மங்கை..

ஆனால் அவளோ அவனோடு வாழ்ந்து பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்து நொடிகள் ஆனது என்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்..

“பொன்னி என்ன அமைதியா இருக்க??” என்று அசோக் கேட்க, “நான்.. நான் அவர்கிட்ட பேசணுமே..” என்றாள் தாழ்ந்த குரலில்..

“ம்ம்ம்.. சரி.. என்கிட்ட நம்பர் இருக்கு..” என்றபடி அவனின் அலைபேசியில் அழைக்கப் போக,

“இல்.. இல்ல நம்பர் கொடு.. நான்.. நானே பேசிக்கிறேன்..” என்றவள் புகழேந்தியின் எண்ணை வாங்கி அவளின் போனில் இருந்து அழைத்தாள்..

முதலில் அழைப்பு எடுக்காமலே போக, அவளுக்கு கொஞ்சம் டென்சனாய் தான் போனது.. பின் திரும்ப அவனே அழைத்து “ஹலோ யாரு…” என்று கேட்க,

“நான்.. நான் பொன்னி பேசுறேன்…” என்றாள் வேகமாய்..

“பொ.. கண்ணு…” என்றவனின் குரலில் இருந்த உற்சாகமும் துள்ளலும் அவளால் நன்கு உணர முடிய, கண்களை இறுக மூடித் திறந்தாள்..

“க.. கண்ணு.. சொல்லு.. என்ன??” என்று அவன் படபடக்க,

“இல்ல.. அ.. அது..” என்று இழுத்தவள், ‘ஷ்.. பொன்னி இது உன்னோட சுபாவம் இல்லை..’ என்றெண்ணி, மங்கை பேசினதை சொல்ல, புகழேந்தி அமைதியாய் இருந்தான் பதில் சொல்லாது..

“ஹலோ..” என்று பொன்னி திரும்பக் கேட்க,

“ஹ்ம்ம் இப்போக்கூட நானே வந்து உங்கம்மாக்கிட்ட பேசிடுவேன்.. ஆனா அது மரியாதையா இருக்காது… நான் பெரியவங்களோட வந்து பேசுறேன்..” என்றுசொல்ல,

“ம்ம்…” என்றுமட்டும் சொன்னாள்.

அவளுக்குமே அதற்குமேல் என்ன கேட்பது என்று தெரியவில்லை.. அவனை ஒரேதாய் பிடித்து அழுத்தவும் முடியாதல்லவா.. சொல்லப்போனால் இதுதான் முதல் முறை அவளாக அவனிடம் அழைத்து பேசுவது.. அதுவும் இந்த விஷயமாய்.. ஆக அதற்குமேல் என்ன பேசுவது என்று அவளுக்குத் தெரியாமல் போக,

“கண்ணு…” என்றான் அவன்..

“,ம்ம் சொல்லுங்க..”

“என்னை நம்பு.. சரியா… உங்கம்மாக்கிட்ட இதை மட்டும் சொல்லு, நான் சொன்னேன்னே சொல்லு.. எந்த பிரச்சனை இனி நடந்தாலும் கண்டிப்பா நான் உன்னை விட்டுக்கொடுத்திட மாட்டேன்.. அந்த உறுதி என்னால எப்பவுமே கொடுக்க முடியும்…”என்றான் ஆழ்ந்த குரலில்..

அவனது குரலே அவனின் உறுதியை காட்ட, “ம்ம் சரி..” என்றுசொல்லி வைத்துவிட்டாள்..

புகழ் சொன்னதை அப்படியே மங்கையிடம் சொல்ல, மகளின் முகத்தை பார்த்தவர், “அப்போ நீ சமாளிச்சுப்ப…??” என்றவருக்கு, வேகமாய் தலையை ஆமாம் என்று ஆட்டினாள்.

“ம்ம் சரி.. அவங்க வந்து பேசட்டும்.. பாப்போம்..” என்றவர் அதன்பின் இதைப் பத்தி பேசவில்லை..

ஆனால் பொன்னிக்குத்தான் இருப்பேகொள்ளவில்லை.. புகழேந்தியும் அடுத்து அவளுக்கு அழைக்கவில்லை.. இவளுக்கும் அடுத்து அழைத்து பேசும் எண்ணமும் இல்லை..

மறுநாள் முழுக்க அப்படியே ஒருவித அமைதியில் கழிய, புகழேந்தி மும்பை கிளம்புவதற்கு இன்னமும் இரண்டு நாட்களே இருந்தது..

அசோக்கிற்கும் லீவ் முடிய, அவனுமே மறுநாள் சென்னை கிளம்பவேண்டும். அண்ணனும் தங்கையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள மட்டுமே முடிந்தது..

புகழேந்தியின் வீட்டில் என்ன நடக்கிறது என்னவென்று எதுவும் தெரியவில்லை.. அவனிடமிருந்து எந்தவொரு தகவலும் வராது போக, பொன்னியின் முகம் இருந்த நிலையைப் பார்த்து,

“நான் வேணும்னா போய் பார்த்துட்டு வரவா??” என்றான்..

“இல்ல இல்ல வேண்டாம்…” என்று பொன்னி மறுக்க, “இல்ல நானும் ஊருக்கு போகணுமே… லீவ் இல்ல.. இப்படியே இருந்தா எப்படி..??” என்றான் ஒரு அண்ணனாய் வருந்தி..

“இல்ல அசோக்.. நம்ம அவங்களை போர்ஸ் பண்ண மாதிரி இருக்கும்..” என்று சொல்லவும், அவனுக்கும் சரியென்று சொல்வதை தவிர வேறெதுவும் தெரியவில்லை..

ஆனால் அன்றைய தினம் மாலையே மன்னவனும் மகராசியும் பொன்னியின் வீட்டிற்கு வந்தபோது, யாராலும் எதையும் நம்பவே முடியவில்லை.. அதுவும் கையில் தாம்பூல தட்டோடு வந்திருக்க, அவர்கள் உறுதி செய்யும் எண்ணத்தில் தான் வந்திருக்கிறார்கள் என்பது நன்கு புரிந்தது அனைவர்க்கும்..

அதன்பின் என்ன??

அவர்கள் ஊர் வழக்கப்படி மறுநாளே கோவில் பொதுவில் வைத்து அனைவரின் முன்னும் பொன்னி புகழேந்தியின் பரிசம் நடந்தது..     

சும்மாவா சொன்னார்கள், காலமும் நேரமும் கூடிவந்தால் கண் மூடி திறக்கும் நேரத்தில் திருமணம் முடியும் என்று.. அதுபோல தான் புகழேந்தி பொன்னியின் திருமணமும் முடிந்தது..

  

Advertisement