Advertisement

தோற்றம் – 8

“இங்க பாரு கண்ணு இதுக்கு நீ சம்மதிக்கவே கூடாது.. அவ்வளோதான்.. நீ மட்டும் கோவில்ல வந்து சரின்னு சொன்ன.. பாத்துக்கோ…” என்று மிரட்டாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி..

அது மிரட்டலா.. இல்லை கெஞ்சலா என்பது பொன்னிக்கும் புரியவில்லை.. புகழேந்திக்கும் புரியவில்லை..

அவன் முகத்திலும் கண்களிலும் இருந்த தீவிரம், அவளோடு பேசும் போது அவனது குரலில் இல்லை.. அழுத்தம் இருந்தாலும் அதனையும் தாண்டிய ஒரு குழைவு அங்கே இருக்கத்தான் செய்ய, பொன்னியோ அதிர்ச்சியில் தான் நின்றிருந்தாள்..

இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிடுவார்கள்.. அதன்பின் பெண் பார்க்கும் படலம்.. மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இருவரையும் பிடித்திருந்தால், அடுத்து இருவீட்டு ஆட்களும் முறை பேசுவர்.. அதன்பின் அங்கேயே பரிசம்.. அனைத்துமே ஊர்பெரிய மனிதர்கள் பொதுவில்தான்..

ஏறக்குறைய படையப்பா படத்தில் வருவதுபோல் தான்.. என்ன அந்த படத்தில் திருமணத்தின்போது கேட்பர்.. இங்கேயோ பரிசம் பொழுதே கேட்டுவிடுவர்.. இந்த ஊரில் பெண் எடுப்பதாய் இருந்தால் கண்டிப்பாய் இந்த பழக்கத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். மாப்பிள்ளையோ பெண்ணோ இருவரில் யார் ஒருவராவாது சம்மதமில்லை என்று சொல்லி அதற்கு தக்க காரணமும் சொல்லிவிட்டாள், சபையோர் அதனை ஏற்றுகொள்வார்..

இதை நன்கு தெரிந்திருந்த புகழேந்தி தான் இப்போது பொன்னியை இந்த வரனுக்கு நீ சரி சொல்ல கூடாது என்று கட்டாயம் செய்துகொண்டு இருந்தான்..

இவர்கள் ஊரின் இந்த பழக்கமே பொதுவாய் யாரும் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ திருமணத்திற்கு கட்டாயம் செய்து சம்மதிக்க  வைக்கக்கூடாது என்பதுதான்.. ஆனால் புகழேந்தியோ வேறொரு விதமாய் அவளை கட்டாயம் செய்துகொண்டு இருந்தான்.

“என்ன பேசுறீங்க நீங்க???” என்று பொன்னி கடுப்பாய் கேட்கவும்,

“ஏன் நான் பேசுறது புரியலையா உனக்கு.. நீ இதுக்கு சரின்னு சொல்ல கூடாது கண்ணு அவ்வளோதான்..” என்றான் இதுவே தான் முடிவு என்பதாய்..

“அதுதான் ஏன்?? இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போக வந்திடுவாங்க.. இப்போ வந்து இப்படி பேசுறீங்க???” என்று பொன்னி பொரிய,

“எல்லாம் எனக்குத் தெரியும்.. கோவிலுக்குத்தான கூட்டிட்டு போனா போகட்டும்.. ஆனா அங்க உன்கிட்ட சம்மதம் கேட்கிறப்போ நீ சரின்னு சொல்ல கூடாது கண்ணு…” என்றான் தீர்மானமாய்..

“ம்ம்ச் இங்க பாருங்க.. முதல்ல நீங்க கிளம்புங்க.. இப்படி நீங்களும் நானும் பேசிட்டு இருக்கிறதைப் யாரும் பார்த்தா, பின்ன எல்லாமே தப்பாகிடும்.. ஏற்கனவே நடந்த பிரச்சனையே போதும்…” என்று பொன்னி அவனை கிளப்ப,

“யார் பார்த்தாலும் எனக்கு கவலையில்லை.. ஆனா ஒண்ணு நீ அங்க வந்து சரின்னு மட்டும் சொன்ன பார்த்துக்கோ..” என,

“என்ன என்ன பண்ணுவீங்க..” என்று எகிறியவள், அவன் பார்த்த பார்வையில்   “நீங்க என்னவோ பண்ணுங்க.. ஆனா இப்போ கிளம்புங்க..” என்று பொன்னி வாசலை நோக்கி கை நீட்டினாள்.

பொன்னியும் அவளுக்குக் காவலாய் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பாட்டியும் மட்டுமே அங்கிருக்க, மற்றவர்கள் அனைவரும் கோவிலில் இருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் வரவும்தான், பொன்னியை வந்து அழைத்து செல்வர். வீட்டில் இருந்து கிளம்பும் போதே புகழ் ஓரளவு இதனை எதிர்பார்த்து தான் கிளம்பினான்..

“டேய் கண்ணு எங்க போற… என்னைய கூட்டிட்டு போடா…” என்று பின்னேயே வந்த மகராசியை,

“தாயே நீ இரு…” என்று சொல்லியவாக்கிலேயே வாசல் தாண்டிவிட்டான் புகழேந்தி..

எதையுமே அவன் யோசிக்கவில்லை.. நேராய் பொன்னியின் வீட்டிற்கு சென்றிட, அங்கே அவளும் பக்கத்து வீட்டு பாட்டியும் மட்டும் இருக்க, அந்த பாட்டியெல்லாம் அவன் கண்ணுக்கே தெரியவில்லை.

“கண்ணு…” என்று உள்ளே நின்று அழைத்தவனுக்கு பதில் அவளே உள்ளிருந்து வந்தாள்..

கொஞ்சம் அலங்காரத்தில், பட்டு சேலையில், தலையில் பூச்சூடி வந்தவள், இவனைப் பார்த்து சற்று திடுக்கிட, புகழேந்திக்கோ உள்ளம் தடதடத்தது..

அந்த பாட்டியோ இருவரையும் பார்க்க, “என்ன வேணும்..” என்று பொன்னி கேட்க,

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றவன், அவளை அவனாகவே உள்ளே ஒரு அறைக்கு இழுத்து சென்றான்.

“ம்ம்ச் என்ன பண்றீங்க…??” என்று பொன்னி அவளின் கைகளை விடுவிக்க,

“நீ இதுக்கு சம்மதம் சொல்ல கூடாது…” என்று ஆரம்பித்திருந்தான்..

அடுத்த பத்து நிமிடங்களும் இதேதான்.. பொன்னிக்கோ நேரம் செல்ல செல்ல பயமாகி போனது.. யாரும் வந்து இருவரையும் இப்படி பார்த்தால் என்னாகும்?? அதுவும் இப்போது தான் ஒரு பிரச்சனை முடிந்த நிலையில் இன்னொன்றா என்று தோன்றியதும்,  கொஞ்சம் பிடிவாதமாகவே அவனை கிளப்ப முயன்றாள் பொன்னி..

“இங்க பாருங்க.. இன்னொரு பிரச்சனை நடக்க கூடாதுன்னு நினைக்கிறேன் சோ, ப்ளீஸ் கிளம்புங்க…” என்று சொல்லும் போதே,

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு கண்ணு…” என்று அவளின் கரங்கள் இரண்டையும் எடுத்து தன் நெஞ்சோடு அழுத்த, அவளோ மேலும் திடுக்கிட்டு முழித்தாள்..

“நான் இவ்வளோ சொல்றேனே.. எனக்காக சொல்ல கூடாதா???” என்று கேட்டவனின் குரலும் பார்வையும் நெருக்கமும் அவளை என்ன செய்ததோ கொஞ்ச நேரம் பேச்சற்று நிற்க,

அவனோ அவளை பிடித்திருந்த கரங்களில் இன்னும் அழுத்தம் கொடுத்து, “கண்ணு எனக்காக.. எனக்காக இதுக்கு நீ சம்மதிக்காத…” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன், அவனின் பார்வையை அவளது பார்வையில் லயிக்கச் செய்ய,

அவளோ வேகமாய் தன் இமைகளை தாழ்த்திக்கொள்ள, “கண்ணு இங்க பாரேன்…” என்று சொல்ல,

“ம்ம்ச்.. நீங்க கிளம்புங்க…” என்றவளின் குரலில் இருந்த வேகம் இறங்கியிருந்தது..

“நீ இங்க என்ன பாரு..” என்று புகழ் அவளை மேலும் தன்பால் இருக்க,

“யாரும் வந்திட்டா பிரச்சனையாகிடும்..” என்றவளோ தவியாய் தவித்துப் போனாள்.

“வரமாட்டாங்க.. இன்னும் நேரமிருக்கு..” என்றவன், “சரி நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு..” என,

அவளோ என்ன என்பதுபோல் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க, “உனக்கு இந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கா…” என்றான்..

அவனையே ஒருநொடி பார்த்தவள், “நேர்லகூட பார்க்காத ஒருத்தரை எப்படி பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியும்…” என,

“அப்… அப்போ… என்னை நேர்ல பார்த்திருக்க.. பார்த்துட்டு இருக்கதான.. இப்போ சொல்லு என்னை உனக்கு பிடிச்சிருக்கா???” என்று புகழ் கேட்க,

‘அய்யோ… என்னதிது…’ என்று கண்களை விரித்தாள் பொன்னி..

நிஜமாய் அவன் வந்து இப்படி பேசவும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. சண்டையா வா.. வந்து பார் என்று தைரியமாய் எதிர்த்திடுவாள்.. ஆனால் இவனோ இப்படி வந்து உருகுவது போல் பேசினால் அவளால் என்ன செய்திட முடியும்..

“சொல்லு கண்ணு.. என்னை பிடிச்சிருக்கா..” என்று அவன் திரும்பவும் கேட்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இவள் முழிக்க, சரியாய் அதே வினாடி அவளின் அலைபேசி அழைக்க,

‘யப்பா…’ என்று வேகமாய் அவனில் இருந்து விலகியவள், அலைபேசியை எடுத்துப் பார்க்க, அழைத்தது அசோக் தான்..

“ஹலோ அண்ணா…” என்று ஒருவித பதற்றமாய்தான் பொன்னி பேச, பதிலுக்கு அவன் என்ன சொன்னானோ, பொன்னிக்கு அவளையும் அறியாது ஒரு நிம்மதி வந்து, கண்களை இறுக மூடித் திறந்தவள்,

“ம்ம் சரி…” என்றுமட்டும் சொல்லி, “எல்லாம் எப்போ வருவீங்க??” என, அதற்கு அசோக் சொன்ன பதிலில் இன்னும் கொஞ்சம் நிம்மதியானது அவளுக்கு..

“ஓகே…” என்றுசொல்லி, பேசி முடிக்க,

“என்னாச்சு???!!!” என்றான் புகழ்..

“மாபிள்ள வீட்ல கிளம்புறப்போ, அவங்க சொந்தத்துல யாரோ ஒரு தாத்தா இறந்துட்டாராம்.. சோ அவங்க வரலை…” என,

“ஹப்பாடி… பாரு.. பாரு.. நம்ம ஒண்ணு சேரணும்னு ஒருத்தர் உயிரையே விட்டிருக்காரு.. அதுக்காகவாது இப்போ நீ என்னை பிடிச்சிருக்கு சொல்லு…” என்றான் அசராது..

பொன்னிக்கு நிஜமாகவே இப்போது புகழேந்தியைக் கண்டு ஆச்சர்யமாய் இருந்தது.. நியாயத்துக்கு அவன் பேசுவதற்கெல்லாம் அவளுக்கு கோபம் வந்து அவனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிருக்க வேண்டும், ஆனால் அவளோ மாப்பிள்ளை வீட்டினர் வரவில்லை என்று நிம்மதி அடைந்து நிற்கிறாள். காரணம் தெரியவில்லை.. அவளுக்கே சரியாய் இப்போது புரியவில்லை தான் என்னமாதிரி மனநிலையில் இருக்கிறோம் என்று..

கொஞ்ச நாட்களாகவே வீட்டில் வரன் பார்த்துகொண்டு தான் இருந்தனர்.. இடையில் அமுதாவினால் ஏற்பட்ட பிரச்சனை அனைவரையும் வருந்த செய்திட, இப்போது இந்த வரன் திடீரென்றுதான் வந்தது.. அசோக்கும், மங்கை பக்கத்து உறவுகள் சிலரும் விசாரித்து நல்ல இடம் என்று சொல்லவும் தான், இந்த ஏற்பாடே ஆனது..

பொன்னியிடம் மாப்பிள்ளையின் புகைப்படம் காட்டபட, அவளுக்கு பெரிதாய் எந்தவொரு விருப்பம் இல்லையென்றாலும், வேண்டாம் என்று சொல்வதற்கும் எக்காரணமும் இல்லது போக, அண்ணன் அம்மா சொல்வதற்கு சரியென்றாள்.

நிச்சயமாய் அவளுக்கு அப்போது புகழேந்தி பற்றிய எண்ணமோ, இல்லை வேறுவிதமான குழப்பமோ வந்திடவில்லை.. ஆனால் இவன் இப்போது வீட்டிற்கு வந்து பேசவும் நிஜமாகவே பொன்னிக்கு மனம் மிகவும் மிகவும் குலம்பிப்போனது..

“என்ன கண்ணு.. அமைதியா இருந்தா எப்படி.. என்னை பிடிச்சிருக்கு சொல்லேன்…” என்று புகழ் கேட்க, பொன்னி அப்படியே திகைத்து விழித்து நின்றாள்..

வந்ததும் சம்மதம் சொல்லக்கூடாது என்றான்.. பின் ‘என்னை பிடிச்சிருக்கா’ கேட்டான்.. இப்போ என்னவென்றால் ‘பிடிச்சிருக்குன்னு சொல்லு..’ என்கிறான்.. இவனுக்கு என்னதான் வேண்டும் என்று தோன்ற, அவனோ எனக்கு நீதான் வேண்டும் என்று பார்த்து நின்றிருந்தான்..

என்ன சொல்வது என்றே பொன்னிக்குத் தெரியாமல் போக, அவளால் ஏன் திடமாய் மறுக்க முடியவில்லை என்பதும் அவளுக்குப் புரியவில்லை.. புகழேந்தியை பார்ப்பதும், பின் பார்வையை திருப்புவதுமாய் இருக்க, அவளையும் அறியாது கடிகாரத்தின் மீது பார்வை செல்ல, மீண்டும் திடுக்கென்றது அவளுக்கு..

“நீ.. நீங்க கிளம்புங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்திடுவாங்க.. ப்ளீஸ்..” என்று பொன்னி சொல்ல,

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு நான் போறேன்..” என்றான் அவனோ விடாது..

“ம்ம்ச் அதெல்லாம் எதும் சொல்லமுடியாது நீங்க.. நீங்க கிளம்புங்க..” என்று சொல்லியபடி அவனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறையின் வாயிலுக்கு வருகையிலேயே, அசோக் உள்ளே வந்துகொண்டு இருந்தான்..  

‘ஐயோ.. அண்ணா…’ என்று பொன்னி அரண்டு பார்த்து நிற்கையிலேயே, அசோக் இவர்களை பார்த்தவனும் கொஞ்சம் அரண்டு தான் போனான்..

பொன்னி புகழேந்தியின் கரங்களை பிடித்திருக்க, அசோக்கின் பார்வை அவர்கள் இருவரையும், இருவரின் கோர்த்திருந்த கரங்களையும் தான் மாறி மாறி பார்த்தது..

“அண்.. அண்ணா… வர ட்வென்டி மினிட்ஸ் ஆகும் சொன்ன..???!!!” என்றாள் பொன்னி, என்ன அர்த்தத்தில் கேட்கிறோம் என்றே புரியாது..

ஆனால் புகழேந்திக்கு புரிந்து அவனுக்கு சிரிப்பு கூட வந்திட்டது, ‘லூசு என்ன கேட்கிறா…’ என்று எண்ணியவன், வேகமாய் பொன்னியின் கரத்தில் இருந்து தன் கரத்தினை விடுத்து, அசோக்கை நோக்கி சென்றவன்,

“நான் உங்கக்கிட்ட பேசணும்…” என,

அசோக் இப்போதும் அவனையும் திகைத்து நிற்கும் பொன்னியையும் பார்த்தவன், “அதுக்கு முன்ன.. நீங்க என்ன பண்றீங்க இங்க??” என்றான் நெற்றியை சுருக்கி..

“அது.. அது….” என்று தயங்கியவன் நொடி பொழுதில் தன்னை திடப்படுத்தி “எனக்கு பொன்னியை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்…” என்றுவிட்டான்..

கல்யாணம் செய்து கொடுப்பீர்களா என்றுகூட கேட்கவில்லை..   கல்யாணம் பண்ணிக்கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தான்..

‘என்ன இதெல்லாம்…’ என்று அசோக் பொன்னியைப் பார்க்க, அவளுக்கோ கலக்கமாய் போனது..

எங்கே அது இதென்று பேசி கைகலப்பு ஆகிவிடுமோ என்று.. புகழேந்தியோ அசருவதாய் இல்லை.. அசோக்கோ இருவரையும் பார்த்த பார்வையே பொன்னிக்கு மனதினுள் பெரும் கலவரம் வெடிக்கச் செய்தது.. இதில் மற்றவர்களும் வந்துவிட்டால் அவ்வளவு தான் கேட்கவே வேண்டாம்..

“அண்… அண்ணா.. ப்ளீஸ் நீ நீ தப்பா நினைக்க வேண்டாம்..” என்றபடி அவள் அருகே வர, அவளின் இந்த பதற்றமும், திக்கல் திணறலான பேச்சும் அசோக்கிற்கு புதிதாய் இருக்க,

“நான் நினைக்கிறது எல்லாம் இருக்கட்டும்.. இங்க என்ன நடக்குது???” என்றான் இருவரையும் பார்த்து..

“ஒன்னும் நடக்கல.. ஆனா இனிமே நடக்கிறது நல்லாதா நடக்கனும்னு நினைக்கிறேன்.. எனக்கு பொன்னியைப் பிடிச்சிருக்கு.. பொன்னிக்கு என்னை பிடிச்சிருக்கு..” என்று புகழ் சொல்ல,

பொன்னிக்கு ‘ஆ….’ என்று பார்க்கும் நிலைதான்        

நேரம் செல்ல செல்ல, புகழின் மனதில் இருக்கும் திடம் கூடிக்கொண்டே தான் போனது.. கண்டிப்பாய் அவனே இதனை நினைத்து வரவில்லை.. பொன்னியை இதற்கு சம்மதம் சொல்ல வைக்கக் கூடாது என்றுதான் வந்தான்.. ஆனால் தானே இப்படி பேசுவோம் நினைப்போம் என்று அவனும் நினைக்கவில்லை..

“அசோக்.. நடந்த பிரச்சனையை மனசுல வச்சு நீங்க இதை யோசிக்க வேண்டாம்..” எனும்போதே,

“இல்ல.. அதெல்லாம் இல்ல..” என்ற அசோக் தங்கையை குழப்பமாய் பார்க்க,

“இங்க பாருங்க.. இப்.. இப்படி வந்து நீங்க பேசினா என்ன அர்த்தம்.. நான்.. நாங்க.. யோசிக்க வேண்டாமா???” என்றாள் பொன்னி..

“நானும்தான் இன்னும் யோசிக்கல.. யோசிக்க என்ன இருக்கு தெரியலை.. உன்னை பிடிச்சிருக்குன்னே.. அதாவது என் லைப் முழுக்க உன்னோட ட்ரேவல் பண்ற அளவு பிடிச்சிருக்குன்னே இப்போ உன்கூட பேசுறப்போ தான் புரிஞ்சது..” என்று புகழ் சொல்ல,  பொன்னி மீண்டும் தன் அண்ணனை தான் அதிர்ச்சியாய் பார்த்தாள்..

ஆனால் புகழோ “நீங்க தப்பா எடுத்துக்காதீங்க அசோக்.. இவளுக்கு என்னை பிடிக்கும்..” என்றவன், பொன்னியை ஒருமுறை பார்த்துவிட்டு,

“சரி என்னை பிடிக்கல சொல்லு நான் இப்போவே போயிடுறேன்…” என,

‘ஐயோ படுத்துறானே…’ என்றுதான் பார்த்தாள் பொன்னி..

அசோக் அப்போதும் இருவரையும் மாறி மாறி பார்க்க, “அண்ணா அவர போக சொல்லு…” என்று பொன்னி சொல்ல,

“பிடிக்கலைன்னு சொல்லு கண்ணு.. நான் போயிடுறேன்.. இந்தபக்கம் என்ன இந்த ஊருக்கு கூட வரமாட்டேன் போதுமா…” என்றவனின் வார்த்தைகள் பொன்னிக்கும் சரி, அசோக்கிற்கும் சரி மனதில் ஒருமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியது..

ஆனால் நொடிபொழுதில் அசோக் கொஞ்சம் தெளிவிற்கு வந்து “புகழ்.. ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.. நீங்க.. நீங்க கொஞ்சம் பொறுமையா போனா நல்லதுன்னு நினைக்கிறேன்…” என,

“இல்லா அசோக்.. எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல மும்பை போகணும்.. ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கேன்…. ஆனா இப்போ பொன்னி சொல்ற பதில் வச்சு தான் எதுவும்..” என்றான் முடிவாய்..

“நீங்க ஊருக்கு போயிட்டு வந்தப்புறம் கூட இதை பேசலாமே..” என்று அசோக் கேட்கும்போதே,

“அண்ணா என்ன நீ இப்படி பேசிட்டு இருக்க..” என்றவள் “நீங்க மும்பைக்கு போங்க இல்ல எங்கயோ போங்க.. ஆனா இப்போ கிளம்புங்க…” என்று வாசலை நோக்கி கை காட்ட,

“பொன்னி என்னதிது…??” என்று அசோக் அரட்டும் போதே,

“பிடிச்சிருக்கு பிடிக்கலை.. ரெண்டுல ஒண்ணு சொல்ல உனக்கு என்ன வந்தது??” என்று புகழும் கேட்க,

பொன்னி இருவரையும் மாறி மாறி பார்த்தவள், “நான் எதுவும் சொல்ல விரும்பலை..” என்றாள்..

அசோக்கிற்கோ இப்போது மற்றவர்களும் வந்திட்டால் தேவையில்லாத பேச்சு கிளம்பும் என்று எண்ணியவன்,

“புகழ் நீங்க போங்க.. நான் பேசுறேன்.. இப்போ எதுவும் வேண்டாம்.. முடிஞ்சா உங்க வீட்டு பெரியவங்கக்கிட்ட பேசிட்டு வாங்க..” என,

“எனக்கு மத்த எல்லார் முடிவையும் விட பொன்னி முடிவு தான் முக்கியம்…” என்றான் அவன்..

“அது உங்களுக்கு.. எங்களுக்கு.. உங்க வீட்டு ஆளுங்க முடிவும் முக்கியம்..” என்று அசோக் திடமாய் சொல்ல,

“ஹ்ம்ம்…” என்று யோசித்தவன், “சரி.. நான் மும்பை போறதுக்குள்ள எங்க வீட்டு ஆளுங்களோடவே வந்து பேசுறேன்..” என்றவன்,

பொன்னியிடம் “அப்போ என்னை நீ பிடிச்சிருக்கு சொல்லுவியா???” என்று அவன் கேட்ட பாவனையில், இல்லை என்று சொல்லவேண்டும் என்று நினைத்தவளின் தலை தன்னப்போல் ஆமாம் என்று ஆடியது..   

காரண காரியமின்றி எதுவும் நடக்காது.. அதுபோலத்தான் இதுவுமோ..?? என்னவோ???

 

Advertisement