Advertisement

தோற்றம் – 6

பத்து நாட்கள் கடந்திருந்தது…

அமுதா வீட்டிற்கு வந்தும் ஒருவாரம் சென்றிருந்தது.. புகழேந்தி அவனது விடுமுறையை ஒருமாதம் என நீட்டியிருந்ததான்.. வீட்டில் இருந்து வேலை செய்தான்.. மீண்டும் திருவள்ளூருக்கே ட்ரான்ஸ்பர் கேட்டிருந்தான்..

என்னவோ ஒரு எண்ணம்.. நினைத்தால் வந்து போகும் தூரத்தில் இருக்க வேண்டுமென்று.. வேலை சம்பளம் எல்லாம் ஒருப்பக்கம் இருந்தாலும் வீடும் ஊரும் அவனுக்கு அருகேயே இருந்திடவேண்டும் என்று.. வீட்டில் கூட யாரிடமும் கேட்கவில்லை.. அவனாகவே எல்லாம் செய்தான்.. விடுமுறையில் இருந்து ட்ரான்ஸ்பர் வரைக்கும்..

வெளியூரிலேயே படிப்பு வேலை என்று இருந்ததால் அவனால் சில பல விசயங்களை எளிதாய் எடுத்துகொள்ள முடிந்தது.. அதில் ஒன்று அமுதாவின் காதல்.. அதாவது காதல் தோல்வி.. இதெல்லாம் இப்போது சகஜம் தான் என்ற நிலையில் இருந்து தான் அவளோடு பேசினான்..

“யாருக்குத் தான் லவ் பெய்லியர் இல்லை…. இதுக்கெல்லாம் போய் சாவாங்களா???” என்று தமாசாகவே கேட்டான் அமுதாவிடம்..

ஆனால் வீட்டில் மற்றவர்களால் அப்படி எடுத்துகொள்ள முடியவில்லை.. இத்தனை நாட்கள் உண்மையை மறைத்து அனைவரையும் முட்டாளாக்கி விட்டாளே என்ற கோபம் ஒருப்பக்கம்,

படிக்க அனுப்பினால் அதைவிட்டு காதலாம் கன்றாவியாம்.. அதில் தோத்துப் போனேன் என்று மரணம் வரைக்கும் வேறு. இதெல்லாம் போதாது என்று தன்னை காப்பாற்ற வந்தவன் மீதே பழி விழும்படி செய்துவிட்டாள் என்று.. இப்படி இத்தனை காரணங்கள் வீட்டினர் மனதில்..

மன்னவன் அனைத்தையும் மௌனத்தில் காட்ட, மகராசியோ பேசியே பொழுதை ஓட்டினார். திருமண வயதில் இருக்கும் பெண், அவள் வாழ்வில் இப்படியெல்லாம் பிரச்சனைகள் என்றால் எந்த பெற்றோருக்குத் தான் மகிழ்வாய் இருக்கும்..

மற்றவர்களுக்கும் வருத்தம் தான்.. கோபம் தான்.. அசோக்கை எண்ணி மனதில் குற்ற உணர்வுதான்.. ஆனாலும் அதெல்லாம் இப்போது அமுதா இருக்கும் நிலையில் அவளிடம் காட்ட முடியுமா என்ன??

பொன்னி அன்று வந்தவள் தான். அதன்பின் ஆளே பார்க்க முடியவில்லை.. நீ அழைத்தாய் நான் வந்தேன்.. அவ்வளவே.. அந்த அளவில் அவள் ஒதுங்கி நின்றுவிட்டாள்.. உண்மை இதுதான்.. சொல்லியாகியது.. நம்பினால் நம்புங்கள்.. இதற்குமேல் உங்கள் பாடு என்று.. புகழேந்திக்கும் அப்போதையே சூழலில் வேறு எதையும் நினைக்கும் எண்ணமில்லை..

அமுதா மட்டுமே அவன் சிந்தையில்..

மருத்தவமனையில் மூன்று நாட்கள்.. கிளம்பும் போதே “ஷி நீட் கம்ப்ளீட் மென்டல் ரெஸ்ட்.. சகஜமா பேசுங்க.. வீட்லயே இருக்காம வெளிய கூட்டிட்டு போங்க.. முன்ன எப்படி இருந்தாங்களோ அப்படி இருக்க விடுங்க.. ப்ரோடக்ட் பண்றேன் ப்ரைன் வாஸ் பண்றேன்னு வீட்ல வச்சு கண்டதும் பேசாதீங்க…” என்று புகழிடம் சொல்லியே இருந்தான் வினீத்..

இதெல்லாம் அவனுக்கு புரிந்தது, வீட்டிலிருந்த மற்றவரும் ஓரளவு புரிந்து தான் நடந்தனர்.. ஆனால் மகராசி தான்.. என்னவோ அவரால் இன்னமும் கூட இதெல்லாம் ஏற்றுகொள்ள முடியவில்லை..

வீட்டிற்கு வந்ததுமே “உனக்கு என்ன தெரியும்னு லவ்வு கிவ்வுன்னு போன.. இதுல சாக வேற போயிருக்க..” என்றவர் ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறை வேறு..

அதையும் அமுதா மௌனமாகவே வாங்கிக்கொண்டாள்..

வருத்தம்.. ஆதங்கம்.. அவமானம் எல்லாம் சேர்ந்து அவருக்கு கோபமாய் வெளிவந்துவிட்டது.. என்ன இருந்தாலும் அம்மா இல்லையா.. அப்படி இவள் செத்து கித்துப் போயிருந்தால்?? அதனை நினைக்கவே அவரால் முடியவில்லை..

“ம்மா என்னதிது…” என்று புகழ் வந்து அவரை தடுக்க, இளங்கோ, அமுதாவை தன் மீது சாய்துக்கொள்ள, அன்பரசியும் நித்யாவும் தான் மகரசியை உள்ளே பிடிவாதமாய் இழுத்துக்கொண்டு சென்றனர்.. மன்னவன் அனைத்தையும் பார்த்தவர் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

இளங்கோ அன்பானவன் தான். ஆனால் அவனுக்கு அப்படி ஆர அமர அமர்ந்து பொறுமையாய் பேசுவானா என்றால் தெரியாது.. அன்பரசிக்கும், நித்யாவிற்கும் வீட்டு வேலைகள்.. பிள்ளைகளை கவனிப்பது இதிலே பொழுது போய்விடும்..   

இதனை எல்லாம் பார்த்தவன் தான் புகழேந்தி விடுமுறை எடுத்துவிட்டான்.. அவன் கவனித்த  வரையில் யாரும் அமுதாவிடம் இதைப்பற்றி வெளிப்படையாய் பேசிட தயாராயில்லை.. ஆனால் வருத்தம் இருந்தாலும் புகழேந்தி அடிக்கடி அமுதாவோடு இதனை பற்றி பேசினான்..

முதலில் அமைதியாய் இருந்தவள், அடுத்தடுத்து கொஞ்சமாய் பதில் பேசினாள். வாரம் இருமுறை கவுன்சிலிங் என்று இவன்தான் அழைத்தும் சென்றான்.

ஒருநாள் கிளம்புகையில் “கண்ணு புகழு.. இப்படி கவுன்சிலிங்னு போனா, இவளுக்கு புத்தி சரியில்லைன்னு ஊர்ல சொல்ல மாட்டாங்களா???” என்று மகராசி கேட்க, அவர் கேட்ட தினுசில் புகழ் சிரித்துவிட்டான்..

“என்ன கண்ணு சிரிக்கிற?? எனக்கு அதுதான் அப்போயிருந்து மனசு தவிக்குது..” என்று மகராசி கேட்க, அவரின் அறியாமை அவனுக்குப் புரிந்து,

“ம்மா.. கவுன்சிலிங் போனா பைத்தியம்னு யார் சொன்னா?? உனக்குத் தெரியுமா, இப்போ வேலை பார்க்கிறவங்க நிறைய பேர் டாக்டர்ஸ்கிட்ட போய் கவுன்சிலிங் எடுத்துக்கிறாங்க.. அது அவங்க மனசுக்கு நல்லது.. மனசு நல்லா இருந்தாதான் உடம்பும் நல்லாருக்கும்…” என்று விளக்க,

“அதுக்கில்ல கண்ணு.. கல்யாணமாக போற பொண்ணு..” என்று மகராசி இழுக்க,

“இப்போதைக்கு அம்மு கல்யாணம் பத்தி யாரும் பேசவேணாம்.. கொஞ்ச நாள் போகட்டும்மா..” என்றவன் அமுதாவிடமும் அதையே தான் சொன்னான்..

“நீ எதையும் போட்டு மனசுல குழப்பாத அம்மு.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. எதுவும் மாத்த முடியாது.. ஆனா கண்டிப்பா மறக்க முடியும்.. சரியா…” என, அவளும் மெதுவாய் தலையை உருட்டி அவனோடு கவுன்சிலிங் சென்றுவந்தாள்.

இதற்கெல்லாம் மேலாய், அசோக் ஊருக்கு வந்திருந்தான்.. மன்னவனும் ஜெயபாலும் நேராக பொன்னியின் வீட்டிற்கு சென்று, மங்கையிடம் மன்னிப்பு கேட்க,

“ஐயோ என்னதிது.. மனுசங்க கோபத்துல பார்க்கிறதை தப்பா புரிஞ்சுக்கிறது சகஜம்தான்..” என்று மங்கை பெருந்தன்மையாய் பேசிட, பொன்னி அனைத்தையும் ஒரு பார்வையாளரை போலவே பார்த்து நின்றிருந்தாள்.

“இல்லம்மா.. நடந்தது பெரிய தப்புதான்.. என்ன எதுன்னு கேட்காம நாங்க ரொம்ப மோசமா நடந்துட்டோம்..” என்று ஜெயபால் சொல்ல,

“நடக்கணும்னு இருந்திருக்கு.. நடந்திருச்சு… என்ன எல்லாருக்குமே கஷ்டம்தான். இப்போதான் அசோக் மேல தப்பில்லன்னு புரிஞ்சு போச்சே.. அமுதாவ கேட்டதா சொல்லுங்க..” என்று மங்கை சொல்ல, மன்னவன் ஒருமுறை பொன்னியை தான் பார்த்தார்.

அவர் பார்வையே கேட்டது, ‘அனைத்தும் உன் அம்மாவிற்கு தெரியுமா..??’ என்று, அப்போதும் அமைதியாய் இருந்தவள், அவர்கள் கிளம்புகையில், மெதுவாய் அவரிடம் வந்து,

“அம்மாக்கு இப்பவும் எதுவும் தெரியாது.. சொன்னா அவங்களுக்கு இப்போ இருக்கிற இதே தெளிவு இருக்குமான்னும் தெரியாது.. அவங்களை பொருத்தவரைக்கும் அவங்க பையன் தப்பு செஞ்சிருக்கமாட்டான்னு நம்பிக்கை.. அதுதான் இப்போ வரைக்கும்..” என,

“ம்ம்… அசோக் ஊருக்கு வந்தா சொல்லும்மா… அவனையும் பார்க்கணும்..” என்றுவிட்டு போனார் மன்னவன்..

இது போதாதா.. மங்கையும் பொன்னியும் பேசி பேசி அசோக்கை இங்கே வர வைக்க, அவனோ முதலில் தயங்கினான். ஒருமாதிரி உறுத்தலாய் இருந்தது அவனுக்கு.

“இல்ல பொன்னி.. இப்போவே வேணாம்..” என்றிட,

“ஒழுங்கா வா.. நீ தியாக செம்மலா இருந்தது எல்லாம் போதும்..” என்று பொன்னி மிரட்ட,

“டேய் அசோக்கு.. ஒருதடவ வந்துட்டு போடா..” என்ற மங்கையின் பேச்சை தட்ட முடியவில்லை..  

ஆனாலும் அசோக்கிற்கு இத்தனை நடந்த பின்னும் இலகுவாய் ஊருக்கு வருவது அத்தனை எளிதாய் இல்லை. பின்னே எத்தனை அடி அவனை.. ஊரில் அனைவரின் முன்னும்.. சட்டை கிழிந்து, ரத்தம் கசிந்து.. அதெல்லாம் நினைக்க அவமானமாய் இருந்தது.. ஆனாலும் ஒரு பெண்ணின் மானம் காக்கத்தானே என்று அமைதியாய் இருந்தான்.. இப்போது ஊருக்குச் செல்ல சங்கடமாய் தான் இருந்தது..

பொன்னியோ, “பஸ் விட்டு இறங்கவும் சொல்லு நான் வந்து கூட்டிட்டு போறேன்…” என்றவள் அதுபோலவே அவனை அழைக்க தனது டிவிஎஸில் பறந்திருந்தாள்..

எப்போதோ அசோக் சொன்னான் ‘ஸ்கூட்டி வாங்கிக்கோ..’ என்று…  ‘அதெல்லாம் வேணாம்.. இது அப்பா வண்டி.. இதுவே போதும்…’ என்றுவிட்டிருந்தாள்.

இன்று அசோக்கை அழைக்க செல்கையில், பொன்னிக்கு அவளையும் அறியாது புகழேந்தியின் நினைவு.. ஊரில் தான் இருக்கிறான்.. அது தெரியும்.. ஆனால் அதன் பின்னே அவனைக் காணவில்லை.  

பால்வாடிக்குக்கூட பிள்ளைகளை அழைக்க, அன்பரசியோ நித்யாவோ தான் வந்தனர்.. அதிசயத்தின் அதிசயமாய் இவளைப் பார்த்து புன்னகை வேறு அவ்வப்போது.. சரி எதற்கு வம்பு என்று பொன்னியும் லேசாய் சிரித்து வைப்பாள்..   

புகழை முதல் நாள் பார்த்தது, அவனி  அப்போதையே பேச்சு.. பார்வை.. இதெல்லாம் நினைவில் வர, அவளுக்காய் இதழில் ஒரு புன்னகை.. அவன் புல்லுகட்டின் மீது அமர்ந்து வந்ததும், அவனது பேச்சும்

அவளின் பெயர் தெரியாமல் ‘ஏங்க புல்லுக்கட்டு…’ என்றும் ‘பால்வாடி டீச்சர்..’ என்றும் அழைத்து, பின் பெயர் தெரிந்தபின்னே, “கண்ணு…” என்ற அழைப்பு வேறு..

‘உண்மை என்னனு தெரியாம என்னவச்சு சீன் வேற ப்ளான் பண்ணிட்டான்..’ என்று எண்ணியவள், அப்படியெல்லாம் ஏதாவது அவன் செய்திருந்தால் அப்புறம் இருந்திருக்கும் விசேசம் என்று எண்ணிக்கொண்டாள். அசோக் வேண்டுமானால் சும்மாவிடலாம், ஆனால் பொன்னி அப்படியில்லையே..

காரியம் முடிஞ்சதும் ஆளே காணோம், என்று எண்ணியவளுக்கு, அன்று மருத்துவமனையில் அனைவரின் முன்னும் இப்படிதானே அழைத்தான் என்றும் தோன்ற ‘தைரியம் தான்…’ என்று எண்ணிக்கொண்டாள்.. அதே சிரிப்போடு தான் அசோக்கை தன் பின்னே ஏற்றிக்கொண்டு வந்தாள்.

“பொன்னி இதெல்லாம் ஓவர்.. நான் இதுக்கு நடந்தே போகலாம்…” என்று அசோக் சொல்லிக்கொண்டு வர,

“தோடா.. உன்ன நடந்து வான்னு சொல்லிருக்கணும் அப்போ தெரிஞ்சிருக்கும்..” என்று அவளும் நியாயம் பேசிக்கொண்டு வர, சற்று தூரத்தில் புகழேந்தியின் வண்டு வாகனம் கண்ணில் பட்டது..

பொன்னிக்கு தான் பார்த்ததுமே தெரிந்துப்போனதே அவன்தான் என்று. வேகமாய்  ஒரு தயக்கம், தான் வண்டியை நிறுத்தவேண்டுமா என்று.. இல்லை அவன் நிற்பான என்று.. அசோக் வேறு இப்போதுதான் வந்திருக்கிறான்..  என்ன செய்வது என்ற யோசனையோடு வண்டியோட்ட,

“பொன்னி ஏன் ஸ்லோவா போற??” என்று அசோக் கேட்க, “ஹா எதுமில்லண்ணா..” என்றவள் பழைய வேகமெடுக்க,.. வேகமாய் புகழேந்தியின் நானோவை கடந்துசென்று விட்டாள்.

புகழேந்தியும் தூரத்திலே பொன்னியைக் கண்டவன், கொஞ்சம் மெதுவாய் தான் காரை செலுத்தினான்.. அவனோடு அமுதாவும் இருந்தாள்.. நின்று பேசவில்லை என்றாலும் தன்னை ஒரு பார்வையாவது பார்த்து செல்வாள் என்று புகழ் பார்க்க, பொன்னி வேகமாய் அவனை கடந்து சென்றது என்னவோபோல் இருந்தது..

காரை நிறுத்தியவன், ஜன்னல் பக்கம் தலையை நீட்டி கொஞ்சம் எட்டிப்பார்த்தான். அவளோ எங்கோ சென்றுவிட்டிருந்தாள்.

புகழின் செயலைக் கண்ட அமுதா “அண்ணா.. அது.. அவங்க தான் பொன்னியோட அண்ணா…” என்றுசொல்ல,

“ஓ…” என்றவன் அதற்குமேல் எதுவும் பேசாமல் காரைக் கிளப்பினான்..

அன்று அமுதாவின் முகம் தெளிவாய் இருப்பது போல் இருந்தது.. அதனைக் கண்டவன் “அம்மு.. சும்மா அப்படியே ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வருவோமா…” என, அவளும் தயங்கி தயங்கி சம்மதம் சொல்ல, சும்மாவே காரிலேயே சுத்தலாம் என்று ஓட்டிக்கொண்டு இருக்கையில் தான் பொன்னியும் அசோக்கும் எதிர்பட, இப்போதோ மௌனம்…

அமுதாவும் அமைதியாய் இருக்க, புகழேந்திக்கு முதலில் என்ன பேச என்று தெரியாமல், பின் “என்கிட்டயாவது முன்னமே சொல்லிருக்கலாம்ல அம்மு…” என, பட்டென்று நிமிர்ந்து பார்த்தவள்,

“நான்.. நான் நிஜமாவே பயந்துட்டேன்ணா…” என்றாள் இதழ்கள் நடுங்க..

“பயமா?? எதுக்கு..???!!” என்று புகழ் புரியாமல் கேட்க,

“இல்ல ஒரு வேகத்துல சூசைட்னு போயிட்டேன்.. நடந்த பிரச்சனை எல்லாம் சேர்ந்து எங்க உண்மை எல்லாம் தெரிஞ்சா நீங்க எல்லாம் என்னை தப்பா நினைப்பீங்களோன்னு பயந்துட்டேன். நிஜமாவே பயம்தான்.. அதுக்கும் மேல என்னால ஒருத்தர் அடிவாங்கி, இப்படி ஊருக்கே வராம இருந்து அதெல்லாம் எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு… அசோக்கும் பொன்னியும் கடைசி வரைக்கும் உண்மையை சொல்லமாட்டாங்கன்னு தெரியும் ஆனாலும் அதுவே எனக்கு ஒரு அழுத்தமா போச்சு..

அன்னிக்கு நீ ஊருக்கு கிளம்பவும் அம்மாவும் அப்பாவும் என்னோட கல்யாணம் பத்தி பேசினதும் எனக்கு இதெல்லாம் நினைச்சு ரொம்பவும் ஒருமாதிரி ஆகிடுச்சு…” என்று உள்ளத்தில் இருப்பதை மறைக்காது சொல்ல,

புகழேந்திக்கு அவளது நிலையை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.. இன்று இருக்கும் பெரும்பாலானவர்களின் பிரச்சனை இதுதான்.. தன்னை பிறர் தவறாய் நினைத்துவிடுவாரோ என்று அஞ்சி அஞ்சியே ஒரு தவறை மறைக்க, பல தவறுகள் செய்யும் நிலை.

தண்டனை கடினம் என்றாலும் ஒருமுறை செய்த தவறை ஒத்துக்கொண்டு வெளிப்படையாய் மன்னிப்பும் கேட்டு  இருந்துவிட்டால், அடுத்து யார் என்ன சொல்லப் போகிறார்கள், தவறு செய்தவர்களுக்கும் மனம் லேசாகிப் போகுமே..

புகழேந்தி கொஞ்ச நேரம் அமைதியாய் காரை செலுத்தியவன், “ம்ம் நான் ஒண்ணு கேட்பேன் மறைக்காம பதில் சொல்லணும் அம்மு..” என,

என்ன கேட்க போகிறாய் நீ என்று ஒருவித கலக்கமாய் பார்த்தாள் அமுதா..

“ஹே…!!! டென்சன் ஆகாத.. சும்மாதான்.. ஆமா காலேஜ் டேஸ்ல உன் லவ் எப்படி.. ஏன்னா சூசைட் அளவு போயிருக்கன்னா ரொம்ப தெய்வீக காதலோ…” என்று அவன் ஹாஸ்யமாய் கேட்பது கேட்க, புகழேந்தியின் முகத்தையே பார்த்த அமுதா, கொஞ்சம் சங்கடமாய் உணர்ந்தாலும், அதுவும் அவளின் முட்டாள்தனம் தானே என்று தோன்ற,

“ம்ம்ச்.. நான் ஒரு லூசுண்ணா.. ஒன் சைட் லவ்.. லவ் கூட இல்லை.. அவன் சாதாரணமா பார்த்து பேசி சிரிச்சதை நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. கூட இருந்த பிள்ளைங்க எல்லாம் வேற ஏத்தி விட்டுட்டாளுங்க…” என,

“அடக் கடவுளே.. என்ன இப்படி சொல்ற…” என்று சிரித்தான் புகழேந்தி..

இது கொஞ்சம் பார்த்து பேச வேண்டிய விசயம்தான்.. சீரியசான விசயமும் கூட, ஆனால் அவனுக்கு முகத்தை உர்ரென்று வைத்து, இறுக்கமான குரலில் அமுதாவிடம் இதனை கேட்கப் பிடிக்கவில்லை.. ஆக இதெல்லாம் ஒன்றுமே பெரிதில்லை என்கிற ரீதியில் தான் பேசினான். அது நன்கு வேலை செய்தது..

“ம்ம்.. ஆமா.. இப்போ நினைச்சா நான்தான் முட்டாள் மாதிரி பண்ணிட்டேன்னு தோணுது..” என்று அமுதா சொல்ல,

“ஏன் நினைக்கிற?? ப்ரீயா விடு.. நினைச்சாதானே நீ முட்டாள்னு தோணும்.. நினைக்கலைன்னா உலகத்துலேயே நீதான் பெரிய அறிவாளி.. இனிமே என்ன நடக்கணுமோ அதை யோசி அவ்வளோதான்…” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினான்..

“ம்ம்… சரிண்ணா..” என்று அமுதா கொஞ்சம் திடமாய் தலையை ஆட்ட, அதன்பின்னே தான் வீடு வந்தான், வீடு திரும்புகையில் பார்வை எல்லாம் சாலையை சல்லடை போட்டது.. எங்கேனும் பொன்னி தட்டுபடுகிறாளா என்று.. ம்ம்ஹும் எங்கேயும் காண கிடைக்கவில்லை.

வீடு வந்தவனோ அவனது வேலைகளை பார்த்துவிட்டு, நன்கு உண்டுவிட்டு, படுத்திருக்க, இளங்கோவின் சத்தம் கேட்டு எழுந்துவந்தவன், “ண்ணா அசோக் வந்துட்டான்.. வா போய் சாரி கேட்டு வருவோம்..” என,

“இல்லடா அது..” எனும்போதே, “நானும் மாமாவும் போய் கேட்டோமே புகழு..” என்றான் ஜெயபால்..

“அடிச்சதும் இளங்கோவும்தானே..” என்று புகழ் சொல்ல,

மகராசி “இல்ல போய் கேட்டு வரட்டும்..” என, புகழேந்தியே கொஞ்சம் ஆச்சர்யமாய் தான் பார்த்தான்..

“என்னடா… நிஜமாதான் சொல்றேன்.. அந்த பொண்ண  பார்க்கிறப்போ எல்லாம் நான் எத்தனை பேசிருப்பேன்…” என்று மகராசி சொல்ல,

“தாயே மகராசி.. லாஸ்ட்ல ஸ்கோர் பண்ற நீ…” என்ற புகழ்,

“போவோமா..” என்று இளங்கோவை கேட்க, அவனும் தயங்கியே கிளம்பினான்..           

பின்னே இவன்தானே அசோக்கை புரட்டி புரட்டி எடுத்தது.. அதெல்லாம் கண்முன்னே வந்துபோகுமா இல்லையா.. இன்று அவனிடமே சென்று மன்னிப்புக் கேட்கவேண்டுமெனில் எப்படியிருக்கும்.

ஏறக்குறைய சமவயத்தில் இருப்பவர்கள் வேறு.. ஆக கொஞ்சம் சங்கடமாய்தான் போனது.. இருந்தாலும் என்ன செய்ய, தப்பு யார் பக்கம் என்று மிக மிக தெளிவாய் தெரிந்தபின்னே வேறு வழியும் இருக்கவில்லை..

புகழும், இளங்கோவும் பொன்னி வீடு செல்ல, அவளும் அசோக்கும் அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்துதான் பேசிக்கொண்டு இருந்தனர்.. மங்கை சற்று தள்ளி உள்ளே அமர்ந்திருந்தார்.. இவர்கள் இருவரும் பைக்கில் வந்து இறங்கவும்,

அசோக் குழப்பமாய் பார்க்க, பொன்னி, “அமுதாவோட ரெண்டாவது அண்ணன்..” என்று மெதுவாய் சொல்ல,

அதற்குள் மங்கை, “வாங்க..” என்று வெளிவர, பொன்னி அவரின் பின்னே ஒதுங்கி நின்றுவிட்டாள்.

அசோக் மௌனமாய் இருக்க, இளங்கோவும் அப்படியே நிற்க, புகழின் பார்வை ஒருமுறை பொன்னியை தொட்டு மீள, மங்கையோ “உள்ள வாங்க வெளியவே நின்னுட்டு என்ன…” என்றழைக்க,

“இல்ல இருக்கட்டும்..” என்றவன், அசோக்கிடம் சென்று, அவனது கரங்களைப் பற்றி, “உங்களுக்குத் தேங்க்ஸ் சொல்றதா சாரி சொல்றதா தெரியலை…” என்றான் நிஜமாகவே உணர்ந்து..

“இல்ல பரவாயில்ல அதெல்லாம் வேணாம்..” என்று அசோக் மறுக்கையிலேயே,

“இல்ல தப்பு எங்கபேர்ல தான்..” என்று இளங்கோவும் பேச்சில் இணைய,

“ம்ம்ச் விடுங்க.. இதையே பேசவேண்டாம்…” என்ற அசோக் பொன்னியைப் பார்த்து, “சேர் எடுத்துப் போடு..” என,

“இல்ல அதெல்லாம் வேண்டாம்.. நாங்க இப்படியே உட்கார்ந்துப்போம்..” என்று புகழ் திண்ணையைக் காட்ட,

‘இவன் என்ன இப்படி பேசுறான்..’ என்று இளங்கோ புகழேந்தியை வித்தியாசமாய் பார்க்க,

“என்னண்ணா..” என்றான் அவனின் தம்பி..

“ஒண்ணுமில்ல…” என்றவன் வேறுவழியில்லாமல் திண்ணையில் அமர,

பொன்னிக்கு அப்படியே நிற்க முடியுமா என்ன??

அதிலும் புகழேந்தியின் பார்வை நொடிக்கு ஒரு முறை அவளை தொட, “ம்மா நான் மாட மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போறேன்..” என்று கிளம்பிவிட்டாள்..

வீட்டின் பின்பக்கம் சென்று, பசுவையும், கன்றையும் இழுத்துக்கொண்டு வீட்டின் முன்பக்கம் வந்து தான் தெருவில் இறங்கிப் போனாள், அவளின் பின்னே புகழேந்தியின் பார்வையும் மேய்ச்சலாய் போனது..                           

    

Advertisement