Advertisement

தோற்றம் – 5

சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மருத்துவமனை..

அமுதா அங்கே தான் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.. தனியறை ஒன்றில், கையில் ட்ரிப்ஸ் ஏறி கண்களை மூடிப் படுத்திருக்க, அவளின் அருகே அன்பரசியும், மகராசியும் இருக்க, அறைக்கு வெளியே  மற்றவர்கள் அனைவரும் இருந்தனர்..

பொழுது விடிந்து பல நேரமாகியிருக்க ஆனால் யாரின் முகத்திலும் எவ்வித தெளிவும் இல்லை.. ஒளியும் இல்லை.. மாறாக இதற்குமுன் இருந்ததை விட இப்போது பெரும் கலக்கம்..

புகழேந்தியோ அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தவன், யாரையோ எதிர்பார்த்து இருப்பது போல் பார்வையை அவ்வப்போது திருப்பிக்கொண்டு இருந்தான்..

இளங்கோ நித்யாவிடம் “பசங்களை கூட்டிட்டு எல்லாம் வீட்டுக்கு போங்க.. இங்க எதுக்கு இவ்வளோ கூட்டம்.. நான் அன்பு புகழ் மூணு பெரும் இருக்கோம்…” என்று சொல்லிக்கொண்டு இருக்க, மன்னவனும் ஜெயபாலும் என்னவோ பேசிக்கொண்டு இருக்க, புகழேந்திக்கு இது எதுவுமே மனதில் பதியவில்லை..

பார்வை எல்லாம் ஒருவித எதிர்பார்ப்பில் மட்டுமே..

முதல் நாள், புகழ் வீட்டிற்கு செல்லும் போதே, “ஹலோ சந்துரு… நாளைக்கு மீட்டிங் நீ மட்டும் அட்டன்ட் பண்ணு.. ஒரு பெர்சனல் இஸ்யூ..” என, மறுப்பக்கம் அவனுக்கு என்ன பதிலோ,

“டேய் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. நான்.. நான் நாளைக்கு பாஸ் கிட்ட பேசிக்கிறேன்…” என்றவன் அடுத்து பேசாமல் அழைப்பை துண்டித்து, வீடு போய் சேர்ந்து உள்ளே நுழையும்போதே, இளங்கோ அமுதாவை அப்படியே கைகளில் ஏந்திக்கொண்டு வர, பின்னேயே வீட்டின் பெண்கள் எல்லாம் அழுகையும் பதற்றமுமாய் வர,  

இதனைப் பார்த்தவனுக்கோ பகீரென்று இருந்தது.. புகழின் பார்வை, கண்களை மூடி ஒருபக்கம் சாய்ந்த நிலையில் இருக்கும் அமுதாவை கண்டதும், அவனையும் அறியாது    “என்னாச்சு…” என்றபடி இளங்கோவின் கரங்களைப் பற்ற போக,

“புகழு.. பேச நேரமில்லை காரை எடு.. முதல்ல ஹாஸ்பிட்டல் போவோம்..” என்று இளங்கோ எத்தனை வேகத்திலும் பதற்றத்திலும் சொன்னானோ, அதனை விட வேகமாய் புகழேந்தி காரை கிளப்ப,

அமுதாவை பின்னே அன்பரசி தன்மீது சாய்த்துகொள்ள, இளங்கோ முன்னே இவனோடு ஏறிக்கொள்ள, மகராசியோ தன் மக்கள் மூவரையும் பரிதாபமகாவும் அழுகையினோடும் பார்க்க,

இளங்கோவோ, “நித்யா  மாமாக்கு போன் பண்ணிட்டேன்.. அப்பாவும் மாமாவும் வரவும் நீங்க எல்லாம் அடுத்து வாங்க..  நாங்க முன்னாடி போறோம்…. ம்மா ஒண்ணுமில்ல… நீ அழாத..” என்று சொல்லும்போதே புகழேந்தி காரை செலுத்தத் தொடங்கிட்டான்..

அடுத்த கொஞ்ச நேரத்தில், மன்னவனும் ஜெயபாலும் வீட்டிற்கு வந்திட, மற்றவர்களும் கிளம்பினர்..   இளங்கோ ஜெயபாலுக்கு அழைத்து, “மாமா ஜி.ஹச்க்கு தான் போறோம்..” என்றிட, இவர்களும் அங்கே சென்றனர்..

முதலில் புகழேந்தி அரசு மருத்துவமனை சென்று, அமுதாவை அட்மிட் செய்ய, அடுத்த கொஞ்ச நேரத்தில் மற்றவர்களும் வந்திட, அமுதாவை பரிசோதனை செய்த டாக்டரோ,

“யாராவது ஒருத்தர் மட்டும் உள்ள வாங்க…” என்றழைக்க, புகழேந்தி தான் சென்றான் உள்ளே..  

“நார்மல் மயக்கம் தான்.. ஆனா அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கிறது போல இருக்கு…” என்று டாக்டர் சொல்ல,  “ஸ்ட்ரெஸ்ஸா…!!!” என்றான் புகழேந்தி அதிர்ந்து..

“எஸ்.. ஸ்ட்ரெஸ் தான்… ஓவர் திங்கிங்.. எதையோ நினைச்சு ரொம்ப தின்க் பண்ணிருக்காங்க.. ஸ்ட்ரெஸ் ஆகிருக்காங்க.. அதனால வந்த மயக்கம்… ஒரு ஹால்ப் ஹவர்ல முழிச்சுடுவாங்க.. பட் கண்டிப்பா ஷீ நீட் கவுன்சலிங்…” என,

புகழேந்தி மௌனமாய் தலையசைத்தவன் வெளியே வர, அனைவரும் என்னவென்று அவன் முகம் நோக்க, டாக்டர் சொன்னதை சொன்னவன்,

“என்னதான் ஆச்சு.. டாக்டர் என்னவோ அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்கிற ரேஞ்சுக்கு சொல்றார்..” என்று ஆதங்கமாய் கேட்க,   

“நீ கிளம்பின கொஞ்ச நேரத்துல நாங்க எல்லாம் உட்காந்து பேசிட்டு இருந்தோம் புகழு.. அமுதா கல்யாண விசயமா அப்பா பேசிட்டிருந்தாரு.. இவளும் அங்கதான் இருந்தா.. என்னன்னு தெரியலை கொஞ்ச நேரத்துல ரூமுக்கு போனா, வெளியேவே வரலைன்னு பார்த்தா மயங்கிக் கிடந்தா புகழு..” என்று அன்பரசி சொல்ல,

“ம்ம்ச்.. இத்தனை பேர் வீட்ல இருந்து என்ன பண்றீங்க???” என்ற புகழேந்திக்கு அந்த நேரத்தில் நிச்சயமாய் எரிச்சல் தான் வந்தது..

எதுவோ ஒரு பிரச்சனை ஆகியிருக்கிறது, அதிலிருந்து அவளை மீட்கும் வழி செய்யாது வீட்டில் இத்தனை பேர் இருந்தும் இப்படியொரு நிலையில் அவள் நிற்கும்படி அப்படி என்ன செய்துகொண்டு இருந்தனர் என்று அனைவரின் மீதும் கோபம் கோபமாய் தான் வந்தது புகழுக்கு..

“புகழு கண்ணு… அமுதாக்கு வேறொன்னும் இல்லையே..” என்று மகராசி வந்து கை பிடிக்க, “ஏன் இதுக்குமேல என்ன வேணும்..??” என்றான் கடுப்பாய்.

இளங்கோ “டேய் நீ ஏன்டா இப்போ இப்படி பேசுற..” என,

“வேற எப்படி பேச சொல்ற.. வீட்ல இத்தனை பேர் இருக்கீங்க என்ன கவனிச்சீங்க…. ஸ்ட்ரெஸ்ஸாகி மயக்கம் வர அளவு இருந்திருக்கா..” என்று அவனிடமும் எகிற,

“புகழ்.. எதுன்னாலும் வீட்ல போய் பேசிக்கலாம்..” என்று மன்னவன் சொல்ல,

“வீட்டுக்கா எதுக்குப்பா.. அங்க போயும் நம்ம மட்டும் தான் பேசுவோம்.. அம்மு வாய் திறக்கமாட்டா.. அம்மு முழிக்கவும் வேற ஹாஸ்பிட்டல் போகலாம்..” எனும்போதே, அனைவரும் எதற்கு என்று பார்க்க,

“அவளுக்கு கவுன்சலிங் கொடுக்கணும்..” என்றான் புகழேந்தி..

“என்னடா சொல்ற.. அதெல்லாம் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சா சரியாகி போகும்..” என்று மகராசி சொல்ல,

“ம்மா.. அவளுக்கு கல்யாணம் நடக்கிறப்போ நடக்கட்டும் இப்போ அவ சரியாகணும்.. முதல்ல அவ மனசை அழுத்திட்டு இருக்கிற விஷயம் வெளிய வரணும்..” என்று புகழேந்தி முடிவாய் சொல்லிவிட்டான்..

யாரும் எதுவும் அதற்குமேல் பேச முடியவில்லை.. மன்னவன் மகன் பேச்சினில் எதுவோ புரிந்தவராய் அமர்ந்திட, மகராசி தான் அதுவும் இதுவுமாய் பேசி புலம்ப,

“ம்மா போதும்… இப்படியே நான் கிளம்பிடுறேன்…” என்றான் புகழ்..

“கண்ணு….” “டேய் புகழ்…” என்று ஆளாளுக்கு ஒன்றாய் சொல்ல,

“பின்ன என்ன… அம்முக்கு  ட்ரீட்மென்ட் கொடுத்துத்தான் ஆகணும்.. இல்லையா.. நீங்க என்ன செய்யணுமோ செய்ங்க நான் ஒதுங்கிக்கிறேன்…” என்றான் புகழேந்தி முடிவாய்..

அவன் மனதினில் பொன்னி பேசிய வார்த்தைகளே ஒலித்துக்கொண்டு இருந்தது..

‘முதல்ல உங்க தங்கசிக்கிட்ட பேசுங்க.. எனக்கு தெரிஞ்சு உங்க வீட்ல யாரும் அது பண்ணலைன்னு நினைக்கிறேன்..அட்லீஸ்ட் உங்கக்கிட்ட சொன்னாலாவது உண்மை வெளிய வரும்னு பார்த்தேன்…’ இதே தான் புகழின் மனதில் ஒலித்துக்கொண்டு இருக்க, முதலில் அமுதாவின் மனதில் இருப்பது என்ன என்று தெரிந்தே ஆகவேண்டிய நிலையில் அவனிருந்தான்..

என்னவோ ஒன்று கடைசியில் அமுதா நன்றாகி வந்தால் போதும் என்று தோன்ற, அனைவருமே இப்போது அமைதியாகிட, டாக்டர் சொன்ன அரைமணி நேரத்தில் அமுதா கண்முழிக்க, அதற்குள் புகழேந்தி சில நண்பர்களிடம் விசாரித்து அடுத்து அமுதாவை எங்கே சேர்ப்பது என்று தெரிந்து இப்போது அங்கே  சேர்த்தும் விட்டான்..

அவனின் நண்பன் ஒருவனின் நண்பன் மனநல மருத்துவனாய் அந்த மருத்துவமனையில் இருக்க, அமுதாவை அங்கே சேர்த்துமாகிவிட்டது.

இங்கே வருகையில் அமுதா நன்கு விழித்துத் தான் இருந்தாள். ஆனால் யாரையும் பார்க்கும் நிலையில் இல்லை.. இல்லை என்பதனை விட தன் வீட்டில் இருப்பவர்களை காணவே அவளுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை.. தலை குனிந்து அமர்ந்திருந்தாள் இல்லையோ கண்களை மூடிக்கொண்டாள். புகழேந்திக்கு அவளின் செய்கைகளே புரிந்தது நிறைய நிறை அழுத்தத்தில் இருக்கிறாள் என்று..

இவர்கள் அங்கே வந்ததுமே கொஞ்ச நேரத்திலே டாக்டரும் வந்திட, “ஹாய் ஐம் புகழேந்தி.. நிஷாந்த் பிரன்ட்…” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ள, “ஹாய்.. நான் வினீத்..” என்று வந்தவனும் இலகுவாய் பேசினான்..

சிறிது நேரத்தில் அமுதாவை பரிசோதித்துவிட்டு, ஒரு தனியறை அவளுக்கு கொடுதும்விட்டு, புகழிடம் வந்தவன் “ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க.. த்ரீ டு பைவ் சிட்டிங்க்ஸ்ல சரி பண்ணலாம்… பட் அவங்க கோ ஆப்ரேட் செய்யணும்…” என்று வினீத் சொல்ல,

“எப்படியாவது அமுதா நார்மல் ஆனா போதும்..” என்றான் புகழும்..

“ஷி இஸ் வெரி நார்மல்.. அதை அவங்க பீல் பண்ணனும்….” என்றவன், மேலும் புகழேந்தியிடம், அமுதா பற்றி, அவர்களின் குடும்பம் பற்றி என்று எல்லாம் விசாரித்து, என்ன பிரச்சனை என்றும் விசாரிக்க, புகழேந்திக்கோ என்ன நடந்தது என்று முழுதாய் தெரியாமல்,

வேறு வழியே இல்லாது, பொன்னி சொன்னதையும் சொல்லி, வீட்டினர் சொன்னதையும் சொல்ல,

“ஓ… சம்திங் இஸ் இன் ஹெர் மைன்ட்.. அதான் இவ்வளோ இம்பாக்ட்..” என்றவன், “நீங்க அந்த லேடி அண்ட் அவங்க ப்ரதரை இங்க வர வைக்க முடியுமா???” என்றான்.   

புகழேந்தியின் நிலையை கேட்கவும் வேண்டுமா..

“இல்ல.. அம்மு.. அமுதாவை பேச வைக்க முடியாதா…???” என,

“வைக்கலாம்.. ஆனா அதுக்குமுன்ன நடந்த நிஜமான பிராப்ளம் என்னன்னு எனக்கு தெரியணுமே.. அப்போதானே என்னால ட்ரீட்மென்ட் சரியா பண்ண முடியும்..” என்றான் வினீத்..

ஒரு மருத்துவனாய் அவன் சொல்வது மிக சரியே.. ஆனால் இதனை வீட்டினருக்கு சொல்லி புரியவைக்க வேண்டுமே.. அதற்குமேலாய் பொன்னியும் அவள் அண்ணனும் வரவேண்டுமே என்றிருக்க,

“ஓகே.. வினீத் ஐ வில் ட்ரை..” என்றவன், வெளியே வந்து அவன் சொன்னதை சொல்ல,

“என்னது அவங்க எதுக்கு வரணும்..??!!”  என்று ஆரம்பித்து ஆளுக்கு ஒன்றாய் பேச, மகராசியோ முடிவாய்  முடியவே முடியாது என்றார்..

பொறுத்து பொறுத்து பார்த்தவனோ “மாமா.. ப்ளீஸ்.. எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.. நீங்க எல்லாம் பேசுற பேச்சுல நானும் இங்க அட்மிட் ஆகணும் போல…” என்று எரிந்துவிழ,

ஜெயபாலும் “டேய் மாப்ள.. என்னடா நீ..” என்றவன், “கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா.. இப்போ என்ன அந்த பொண்ணும் அவனும் வரணும்.. அவ்வளோதானே கூப்பிடுவோம்..” என்றுவிட்டு,

ஊரில் யாருக்கோ அழைத்து, பொன்னியின் அலைபேசி எண்ணை வாங்க, “நானே பேசுறேன்…” என்ற புகழ் ஜெயபாலிடம் இருந்து அலைபேசியை பிடுங்க,

அனைவருமே ‘இதென்ன…’ என்பதுபோல் பார்த்தனர்..

புகழேந்தியோ யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை.. அவனுக்கு வேண்டியது எல்லாம் அமுதா சரியாக வேண்டும்.. பொன்னியோ இல்லை அவளின் அண்ணனோ இங்கே வரவேண்டும். அதுமட்டுமே மனதில்..    

பொன்னி அழைப்பை எடுத்து “ஹலோ..” என, அடுத்த நொடி “ஹலோ கண்ணு..” என்றிருந்தான் இவன்..

புகழேந்திக்கு அவன் என்ன சொன்னான் என்று அவனுக்கே நினைவில் இல்லை.. ஆனால் வீட்டினர் அனைவரின் முகமும் ஒருவித கேள்வியாய் அவனை நோக்க, இவனது குரலை கேட்டவளோ, அமைதியாய் இருக்க,

இவனோ “ஹலோ.. நான்..” என்று ஆரம்பிக்கும் போதே, “ம்ம் தெரியுது சொல்லுங்க..” என்றாள் அவள்..

“அது.. அம்மு.. அமுதாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்…” என்று புகழ் சொன்னதுமே,

“அச்சோ என்னாச்சு…??!!!” என்று பதற்றமாய் தான் கேட்டாள் பொன்னி.

ஏறக்குறைய புகழின் வீட்டினர் எத்தனை பதற்றம் கொண்டனரோ அதனை அப்படியே அவளின் குரலில் புகழேந்தியால் உணர முடிந்தது.. அடுத்த நொடி கண்களை இறுக மூடித் திறந்தவன், நடந்தவைகளை சொல்லி,

“நீ.. நீ.. நீயும் உன் அண்ணனும் இங்க வர முடியுமா..??” என்று கேட்கையில் அவனது குரல் பொன்னிக்கு என்ன உணர்த்தியதோ, “அசோக் வேண்டாம்.. நான் வர்றேன்..” என்றாள்..      

“இல்ல கண்ணு.. அது..” எனும்போதே, “நான் தான் வர்றேன் சொல்றேன்ல..” என்றவள் வைத்துவிட்டாள்.

பொன்னிக்கு இதை கேட்டதும் மனம் மிகவும் சங்கடமாய் போனது.. ஒருவேளை தானும் இதற்கு ஒரு காரணமோ என்றும் தோன்ற, ஒருவேளை இதுகூட நல்லது தானோ கடைசியில் அமுதா நலமாவாளே என்றும் புத்தி கூற, பால்வாடியில் சொல்லிக்கொண்டு கிளம்பியவள், நேராய் வீட்டிற்கு போய் மங்கையிடம் சொல்ல,

அவரோ “அய்யோ.. நல்ல பொண்ணு.. ஆனா.. நீ தனிய போகவேணாம்.. நான்.. நானும் வர்றேன்..” என்று கிளம்ப,

“இல்லம்மா.. நான் மட்டும் போறேன்.. நீ அங்க வந்தா டென்சன் ஆவ.. அவங்க எல்லாம் எப்படி பேசுவாங்கன்னு தெரியாது…” என்று பொன்னி மறுக்க,

“எப்படியோ பேசிட்டு போறாங்க.. அவங்க அவங்க பொண்ணுக்காக இப்போ கூப்பிடுறாங்க.. நான் என் பொண்ணுக்காக வர்றேன்..” என்று மங்கை பிடிவாதமாய் சொல்ல,

“ம்மா ப்ளீஸ்.. அப்படி ஏதாவது ஒண்ணுன்னா அசோக்க கூப்பிட்டுப்பேன்.. ப்ளீஸ்.. நீ இரு…” என்றவள் கிளம்பிவிட்டாள்.

அவர்களின் வரவை பார்த்து தான் புகழேந்தி காத்துக்கொண்டு இருக்க, மற்றவர்கள் யாரும் வீட்டிற்கு கிளம்புவதாய் இல்லை.. வினீத் வந்தவன் “இங்க இத்தனை பேர் இருக்கக்கூடாது புகழ்…” என்று சொல்ல, “கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க…” என்றான் அவனும்..

ஆனால் யாருமே கிளம்பும் எண்ணத்தில் இல்லை. பொன்னி வந்த பின்னே தான் போவோம் என்றிருக்க, அப்படி இப்படியென்று மேலும் ஒருமணி நேரம் கழித்து தான் வந்து சேர்ந்தாள்.

வந்தவள் வேறு யாரிடமும் பேசாது, அத்தனை ஏன் வேறு யாரையும் காணாது நேராய் புகழேந்தியிடம் வர,

“வந்துட்டியா கண்ணு.. வா வா.. டாக்டர்ட போவோம்..” என்றவனும், அவளை கையை பிடித்து அழைத்துக்கொண்டு செல்ல, இவை அனைத்தையும் மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்கும் நிலை..

உள்ளே போனவனோ வினீத்திற்கு பொன்னியை அறிமுகம் செய்துவைக்க, அவனோ “எல்லாரையும்  கூப்பிடுங்க புகழ்.. அவங்களும் தெரிஞ்சுக்கட்டும்..” என, புகழேந்தி அனைவரையும் உள்ளே அழைத்தான்..

எல்லாரும் வரவும் வினீத் “சொல்லுங்க பொன்னி. ஆக்சுவல் பிராப்ளம் என்ன??” என்று கேட்க, பொன்னி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், புகழேந்தியை ஒருதரம் தீர்க்கமாய் பார்த்துவிட்டு,

“இதை நான் சொல்லவே கூடாது… ஆனா அமுதாவோட நிலைமைக்காக சொல்றேன்..” என்றவள்,

“அமுதா காலேஜ்ல யாரையோ லவ் பண்ணிருப்பா போல.. படிப்பு முடியவும் அந்த லவ்வும் முடிஞ்சது…” என,

“ஐயோ…” என்று மகராசி நெஞ்சில் கை வைத்தவர்,

“இல்ல.. என் மக அப்படியெல்லாம் பண்ணிருக்க மாட்டா.. அவளுக்கு அந்தளவு தைரியம் எல்லாம் இல்லை…” என்று சொல்ல, பொன்னி புகழேந்தியை தான் முறைத்தாள்..

வினீத்தோ “ஆன்ட்டி ப்ளீஸ்.. அவங்களை பேச விடுங்க.. அப்போதான் நான் சரியான ட்ரீட்மென்ட் தர முடியும்…..” என,

புகழேந்தி அன்பரசியிடம், “க்கா நீ அம்மாவ கூட்டிட்டு போ..” என்றான் கெஞ்சும் பார்வையில்.

ஜெயபாலும், அன்பரசியும் மகராசியை கொஞ்சம் சிரமம்பட்டே மகராசியை வெளியே அழைத்துக்கொண்டு போக, மன்னவன் இறுகிய முகத்தில் அமர்ந்திருந்தார்.. இளங்கோவும் நித்யாவும் அமைதியாய் அமர்ந்திருக்க,

“நீங்க சொல்லுங்க பொன்னி..” என்றான் வினீத்..

“என்ன பிரச்சனை எதுக்காக அவளோட லவ் பெய்லியர் ஆச்சு அதெல்லாம் எனக்கு தெரியாது.. பட் அவ அவங்க தோட்டத்துல இருந்த கிணத்துல குதிச்சு சூசைட் பண்ணிக்க போயிருக்கா, அப்போதான் அசோக்.. அவளைப் பார்த்துட்டு கை பிடிச்சி நிறுத்திருக்கான்.. நான் சாகனும் என்னை விடுங்கன்னு அவ கிளம்ப, அவளை சமாதனம் செஞ்சு அசோக் நிறுத்தும்போது தான்…” என்று சொல்லிக்கொண்டே வந்தவள், மீண்டும் புகழேந்தியைப் பார்க்க,

‘இன்னும் என்ன இருக்கு சொல்ல…’ என்று அவனும் பார்த்தான்..

“ம்ம் சொல்லுங்க பொன்னி.. அடுத்து என்னாச்சு..???” என்று வினீத் ஊக்க,

“அசோக் அமுதாவை தடுக்கும்போது, இவரோட அண்ணாவும் மாமாவும் அந்த பக்கம் வந்தவங்க அவங்க ரெண்டுபேரையும் பார்த்து தப்பா புரிஞ்சிட்டு அசோக்கை போட்டு அடிச்சிட்டாங்க. அமுதாவும் இவங்க வந்ததும் ரொம்ப பயந்து வீட்டுக்கு ஓடிட்டா.. அன்னிக்கு நடந்தது இது தான்.. நான் இதை பார்க்கலை பட் அசோக் சொன்னான்.. அமுதாவும் ஒருநாள் என்கிட்ட சொன்னா…” என,

“என்னது அமுதாவா???!!!” என்றான் இளங்கோ அதிர்ந்து.. அனைவரின் முகத்திலும் அதே அதிர்ச்சி தான்..

ஏனெனில் வீட்டினரிடம் கூட அவள் அத்தனை பேசுவதில்லை இப்போது.. அப்படியிருக்க இவளிடம் தேடிப்போய் அமுதா எப்போது என்ன பேசினால் என்று இருந்தது..

“ம்ம் அமுதா தான்.. அசோக்கை அடிச்சு அது ரொம்ப பிரச்சனையாகி, அவனை ஊருக்குள்ளவே வரகூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.. ஒருநாள் கோவிலுக்கு போயிருந்தப்போ, அமுதாவும் நித்யாக்காவும் வந்திருந்தாங்க.. நித்யாக்கா கோவில் சுத்திட்டு இருக்கப்போ நான் அமுதாவை தனியா கூப்பிட்டு பேசினேன்.. கம்ப்பல் பண்ணேன்னு தான் சொல்லணும்..   

அவளால அசோக் அடி வாங்கி பிரச்சனையானது அவளுக்கு கில்டியா இருந்திருக்கு.. அதுனால லவ் பெய்லியர்னு ஒரு வேகத்துல கிணத்துல குதிக்க போனேன்.. உங்கண்ணா காப்பாத்த முயற்சி பண்ணாங்க.. ஆனா ப்ளீஸ் இதை வெளிய சொல்லிடாதீங்க.. ஏற்கனவே எல்லாரும் என்னென்னவோ பேசுறாங்க இதுல நான் லவ் பண்ணது வேற தெரிஞ்சா இன்னும் அசிங்கம்னு ரொம்ப அழுதுட்டா.. இதுவரைக்கும் எங்கம்மாக்கு கூட இது தெரியாது..

ஆனா நாள் ஆக ஆக எனக்கு இதையும் ஏத்துக்க முடியலை.. எல்லார் பார்வைலயும் அசோக் தப்பா தெரிஞ்சான்.. தப்பே பண்ணாம அவன் ஏன் ஊருக்கு வராம இப்படி ஓடி ஒழியணும்னு எனக்கு அவ்வளோ கோபம்.. அமுதக்காக எத்தனை நாளைக்கு இதை பொறுத்துக்க முடியும் நாங்க.. அதனால தான் இவர்ட பேசுற வாய்ப்பு கிடைக்கவும் சொன்னேன்.. அப்படியாவது உண்மை வெளிய வராதான்னு…” என்று பொன்னி பேசி முடிக்க அங்கே பேரமைதி..               

                           

     

Advertisement