Advertisement

தோற்றம் – 4

“ஏதாவது பண்ணு புகழ்.. ஏதாவது செய்…” என்று அவனின் மனம் கூப்பாடு போட, காரை அப்படியே நிறுத்தியிருந்தியவன், பொன்னி அருகே வருவதற்காக காத்திருக்க, ஸ்டியரிங்கில் விரல்கள் தட்டியபடி இருக்க, அவனது பார்வையோ எதிரே வருபவளை பார்த்துகொண்டு இருந்தது.

‘அப்படியே தட்டி தூக்கிருடா புகழ்…’ என்று ஒரு எண்ணம் எழுந்தாலும் அதற்கும் அவன் மனம் ஒப்பவில்லை..

‘என்னடா இது…!!!’ என்று பார்த்தவனின் விழிகள் எதிரே வருபவளையே பார்த்துகொண்டு இருந்தது..

இன்று சுடிதாரில் வந்துகொண்டு இருந்தாள். இதற்கு முன் பார்த்த இரு தருணங்களிலும் சேலையில்.. அதுவும் முதல் முறை.. இழுத்து சொருகி அவளின் டிவிஸ் பிப்டியில்… பின் அன்றே.. அழகாய்.. பாந்தமாய் ஒரு காட்டன் புடவையில் பிள்ளைகளை கையில் பிடித்துக்கொண்டு..

மீண்டும் அந்த காட்சிகள் எல்லாம் மனதில் வந்துபோக, புகழேந்திக்கு மனதில் இருக்கும் பெரும் கசப்பினூடே ஒரு மெல்லிய இனிப்பையும் உணர முடிவதாய் இருக்க, ‘ச்சே….’ என்று தலையை உலுக்கிக்கொண்டான்..  

ஆனால் மீண்டும் பார்வை அவளிடமே…

ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் எப்படி இவள் ஒருத்தியாய் வருகிறாள் என்று புகழேந்திக்கு எண்ணாமல் இருக்க முடியவில்லை.. ஊருக்குள் செல்லவேண்டும் என்றால், இன்னும் அரைமணி நேரமாவது நடந்துசெல்லவேண்டும் என்று யோசித்தபடி பார்த்துகொண்டு இருக்க, பொன்னியும் அங்கே அவனை பார்த்தது தெரிந்தது..

எப்படியும் தன்னை நோக்கி வருவாள், வந்து ஏதாவது கேட்பாள் என்றெண்ணி புகழேந்தி இறங்கி வெளியே நிற்க, அவளோ ஒருமுறை அவனை பார்த்துவிட்டு தன் நடையை தொடர்ந்தாள்.

அவள் தன்னை கடந்து போகிறாள் என் எண்ணத்திலேயே, “ஹலோ பால்வாடி டீச்சர்..” என்று வேகமாய் அழைத்திருந்தான் புகழேந்தி..

மூன்று எட்டு எடுத்துவைத்தவள், அப்படியே நிற்க, புகழ் அவளை நோக்கி சென்றவன், “என்ன அப்படியே போறீங்க…” என்றான் ஒன்றுமே தெரியாதது போலும், ஒன்றுமே நடவாதது போலும்..

நெற்றியை சுருக்கி.. கண்களை இடுக்கி அவனைப் பார்க்க, “அட என்னங்க.. என்ன இந்த பக்கம்..” என,   “இதே கேள்வியை நானும் கேட்கலாமே…” என்றாள்..

“ஹா ஹா.. வொய் நாட்.. தாராளமா.. சென்னை போயிட்டு இருக்கேன்…” என,

“நான் சென்னை போய் வந்திட்டு இருக்கேன்…” என்றாள் அவளும்..

“ஓ..!!!!” என்றவனின் மனம் சன்ன பொழுதில் ஒரு கணக்கு போட்டுவிட்டது..

உறவாடி கெடு என்ற ஒரு பழமொழி உண்டு..

உள்ளத்தில் பகை.. உதட்டில் உறவு என்று.. அதுதான் சிறந்த வழி என்று புகழேந்திக்கு அப்போது தோன்ற, அவனின் கோபத்தை அப்படியே மனதினுள் போட்டு புதைத்தான்..

எப்படியும் இவன் ஏதாவது செய்தால் நிச்சயம் அவனது வீட்டிலும் அது ஒரு பிரச்சனை உண்டாகும்.. ஆக, ஏதாவது செய்யவேண்டும் அதுவும் செய்தது இன்னதென்று.. இன்னாரென்றும் தெரியாமல்.. நோகாமல் அடிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

அவனை பொருத்தமட்டி, அட உடலிற்கு அல்ல.. உள்ளத்திற்கு தரவேண்டும். இன்று அவனது குடும்பமும் அவனின் தங்கையும் எப்படி மௌனமாய் கண்ணீர் சிந்துகிறார்களோ அதுபோல இவர்களை வலிக்க வைக்கவேண்டும் என்றே எண்ணம்..

இதெல்லாம் அவனது மனதில் ஓட, அடுத்து அவளோடு பேச்சை தொடர எண்ண, அவளோ மீண்டும் நடக்கத் தொடங்கியிருந்தாள்..  

“ஏங்க… ஏங்க நில்லுங்க..” என்று அவன் பின்னேயே ஓட,

“ம்ம்ச்.. உங்களுக்கு என்ன வேணும்.. இப்போ ஏன் நிக்க சொல்றீங்க.. சென்னை போறதுன்னா போக வேண்டியது தானே…” என்று படபடத்தாள்..

“அட என்னங்க இப்படி சொல்றீங்க.. நேத்திருந்து உங்களை தேடிட்டு இருக்கேன்.. ஊருக்கு போறதுன்னா சொல்லிட்டு போகவேண்டாமா..???” என்றான் என்னவோ அனைத்துமே அவள் இவனிடம் சொல்லிவிட்டு செல்வதுபோல்..

ஆனால் பொன்னியோ சிறிதும் யோசிக்காமல் “நான் ஏன் உங்கட்ட சொல்லணும்???” என்றாள் வெடுக்கென்று..

‘எப்படி ஒரு பேச்சு.. திண்ணக்கம் டி உனக்கு…’ என்று நினைத்தவன்,

“அட என்னங்க இப்படி கேட்டுட்டீங்க..” என்றவன், வேகமாய் அவனின் நெற்றியில் ஒருதட்டு தட்டி, “எனக்கு இன்னும் உங்க நேம் கூட தெரியலை….” என்றான் பாவமாய்..

பொன்னியின் பார்வை மேலும் அவனது முகத்திலும், அவனது கண்களிலும் கூர்மை பெற, “அட நிஜமா…” என்றான் அவனும்..

“சோ.. நீங்க இன்னும் உங்க வீட்ல கேட்கலை அப்படித்தான…” என,

‘வா டி வா.. இந்த கேள்வி நீ கேட்கனும்னு தானே இவ்வளோ…’ என்று எண்ணியவன், “என்ன? என்ன கேட்கணும் எங்க வீட்ல???” என்றான் ஒன்றும் அறியாதவனாய்..

புகழை ஒருநொடி பொன்னி ஆழ்ந்து பார்த்தவள்,. மேற்கொண்டு எதுவும் சொல்லாதவளாய் “ஒண்ணுமில்ல.. நீங்க கிளம்புங்க…” என்றபடி அவளது நடையை தொடர,

“ஏங்க புல்லுக்கட்டு.. ப்ளீஸ் நில்லுங்க…” என்றவன் வேகமாய் சென்று அவளின் கரங்களை பிடித்து நிறுத்த,

‘ஹேய் என்னதிது…!!!!’ என்று அவனைப் பார்த்தாள் பொன்னி..

பொன்னியின் கண்களில் வந்து போல ஒரு உணர்வு அவனுக்கு என்னவென்று புரியவில்லை என்றாலும், அவள் கரங்களை அவன் விடுவதாய் இல்லை. என்னவானாலும் சரி.. இவளுக்கு வலித்தால் இவளின் அண்ணன் வருவான் என்ற எண்ணம் தோன்ற புகழேந்தியின் பிடி இறுகியது..

“ம்ம்ச்.. என்ன பண்றீங்க.. கையை விடுங்க..” என்று பொன்னி தன் கரங்களை விடுவிக்க முயல, அவனோ இன்னமும் அவனின் பிடியை இறுக்க,

‘நீயாடா புகழ் இப்படி.. ச்சே அறிவில்ல.. அவளோட அண்ணன் தப்புன்னா.. நீயுமா அப்படி ஆகணும்…’ என்று அவனது அறிவு எட்டிப்பார்த்து கேள்வி கேட்க, அவனுக்கே ச்சி என்று தோன்றவும் அவனது கரங்களை விட்டிட்டான்..

பொன்னி அவனை முறைத்தவள் “என்ன இதெல்லாம்..??!!” என்று கேட்க,

“நத்திங்.. நத்திங்..” என்றவன், “நீ.. நீங்க போங்க…” என,  அவளோ, “ம்ம்ச்.. ஏதாவது பேசணுமா..???” என்றாள், அவனையே பார்த்து..

சத்தியமா புகழேந்திக்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவன் எண்ணியதில் ஒரு துளி அளவு கூட எதையும் வெளிப்படுத்த முடியவில்லை..

இவளின் அண்ணன் என் தங்கையிடம் தவறாய் நடக்க முயன்றிருக்கிறான் என்று நினைத்தவனுக்கு அவனது ஆத்திரத்தை காட்டிட முடியவில்லை.. முதலில் அவனாகவே அவனது உணர்வுகளை வெளிப்படுத்தாது அவளிடம் பழகி தான் பழிவாங்க வேண்டும் என்றிருக்க, அவனளவில் கூட அவனால் அதை முழுதாய் நினைக்க முடியவில்லை..

“இல்லை ஒண்ணுமில்ல நீங்க போங்க…” என்று அவன் சொல்ல, “இல்ல பரவாயில்லை சொல்லுங்க…” என்று நின்றாள் பொன்னி..

‘டேய் புகழ்.. என்னடா நீ.. என்ன முடிவு பண்ணிட்டு ஏன் இப்படி பம்மிட்டு நிக்கிற.. பொண்ணு அவளே தைரியமா நிக்கிறா.. அதுவும் தப்பெல்லாம் அவ அண்ணன் பண்ணதுக்கு அப்புறமும்.. ஆனா நீ.. டேய் புகழ்…’ என்று அவனது மனம் தட்டி எழுப்ப,

வேகமாய் தலையை உலுக்கிக்கொண்டவன், பொன்னியை நேருக்கு நேராய் பார்த்து, மெல்ல புன்னகைத்து “அது.. இன்னும் உங்க நேம் சொல்லவேயில்லையே…” என,

அவளோ ‘அடப்பாவி…’ என்பதுபோல் பார்த்தாள்..

“ம்ம்ச் நானும் உங்கள புல்லுக்கட்டு.. பால்வாடி டீச்சர்னு கூப்பிட்டிட்டேன்… இப்பவும் சொல்லலைன்னா எங்கம்மா மாதிரி கண்ணுன்னு சொல்லணும் போல.. என்ன அப்படி சொல்லவா.. கண்ணு…” என்று சொல்லி அவளது கண்களைப் பார்க்க,

“ஹா ஹா.. சொல்லுங்களேன்.. ஆனா உங்க அம்மா முன்னாடி…” என்றவள்

“டைம் ஆச்சு.. வண்டியும் இல்லை சோ கிளம்புறேன்…” என,

“ஏய் கண்ணு.. நேம் சொல்லிட்டு போ…” என்று அடுத்த நொடி அவனாகவே உரிமை எடுத்துகொள்ள, அவனது பிடியும் பார்வையும் ஒருநொடி பொன்னியை திகைக்க வைத்தாலும்,

அவளின் மறு கரத்தால், அவனின் பிடியை விலக்கியவள் “நான் பொன்னி.. ஹோம் சயின்ஸ் படிச்சது சென்னையில.. வேலையும் அங்கேதான்.. இப்போ இங்க அம்மாகூட.. போதுமா..” என்றவள், திரும்ப,

“ஹ்ம்ம் பொன்னி.. அதை விட கண்ணு சொல்றது நல்லாருக்கு..” என்றான் வேகமாய்..

“ஹா ஹா…. நான் கிளம்புறேன்…” என்று பிடிக்கொடுக்காமல் பொன்னி பேச, “இல்ல நான் டிராப் பண்றேன்.. ரொம்ப இருட்டிருச்சு…” என்றான் அவனும் விடாது..

“ஷ்….” என்று பொன்னி கண்களை மூடித்திறக்க, “நான் டிராப் பண்ணுவேன்…” என்று பிடிவாதமாய் சொன்னவன், அவள் பதில் சொல்வதற்கு முன்னமே காருக்கு சென்றிருந்தான்..

‘என்ன இவன் இப்படி பண்றான்.. எல்லாம் தெரிஞ்சு பண்றானா..??இல்லை’ என்று பொன்னி யோசிக்கையிலேயே,

புகழ் காரை யூ டர்ன் போட்டு வர, “இல்ல நீங்க எதுவோ வேலையா போறீங்க.. நீங்க கிளம்புங்க..” என்று பொன்னி தயங்க,

“அட.. எனக்கு அன்னிக்கு நீங்க லிப்ட் கொடுக்கலையா கண்ணு…” என்றவன்,

“கண்ணுக்கு, நீங்க செட்டாகலை.. சோ.. நீ ஓகே வா..” என்று காரின் கண்ணாடி வழியாய் அவளைப் பார்த்து கேட்க,

“நான் இப்போ வரைக்கும் என்னை எப்படி கூப்பிடனும்னு சொன்னேனா?? உங்க வாய் நீங்க கூப்பிடுறீங்க..” என்றவள், “எனக்கு மனுசங்களை மதிக்க தெரிஞ்சா போதும்..” என்று சொல்ல,

‘இந்த டைலாக் எல்லாம் நீ பேசி நான் கேட்கிற நிலைமை…’ என்று எண்ணியவன்,

“அன்னிக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்ண.. இப்போ நான் பண்றேன் கண்ணு…” என்றவன், அவளுக்கு கார் கதவினை திறக்க,

பொன்னி ஒருவித யோசனையான மனநிலையில் தான் ஏறினாள்.. என்னவோ அவன் பேசுவது எல்லாம் அவளால் முழுதாய் ஏற்றுகொள்வதாய் இல்லை.. என்னவோ ஒன்று அவள் மனதினை முரண்ட,

ஏறி அமர்ந்தவள் அவனிடம் “நீ.. நீங்க ஏன் என்னைத் தேடுனீங்க??” என்று கேட்க,

“ஹா ஹா இதுக்கா இவ்வளோ யோசனை..” என்று சிரித்தவன் “வெரி சிம்பிள் உன் நேம் கேட்கத்தான்…” என, அவளோ நம்பமாட்டாமல் பார்த்தாள்..

“அட சத்தியமா கண்ணு..” என்றவன் காரை கிளப்ப, பொன்னி அடுத்து எதுவும் பேசவில்லை.. மனதில் என்னவோ ஒரு யோசனை ஓடிக்கொண்டே இருந்தது..நடப்பது எதுவும் சரியாய் இல்லை என்பதுபோல் ஓர் உணர்வு.. அவ்வப்போது அவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ மௌனமாய் காரை செலுத்தினான்..

முகத்தில் இருக்கும் புன்னகை மட்டும் புகழுக்கு மாறவில்லை.. பொன்னியின் பார்வை யோசனையாய் தன்னை பார்ப்பதை கண்டவன்,

“என்ன கண்ணு எதும் கேட்கணுமா??” என,

“நீங்க.. நீங்க.. உங்க வீட்ல எதுவும் கேட்கலையா???” என்றதும், அவனின் பிடி ஒருநொடி ஸ்டியரிங்கை அழுத்திப் பிடிக்க,

“அது.. உங்க வீட்ல எதுவும் உங்கக்கிட்ட சொல்லலையா??” என்றாள் அடுத்து..

“இல்லையே.. எனக்கு பர்ஸ்ட் என்ன கேட்கிறதுன்னு தெரிஞ்சா தானே கேட்கமுடியும்.. நீயே சொல்லு கண்ணு.. மொட்டையா போய் வீட்ல யார்கிட்ட என்னன்னு கேட்க முடியும்.??” என்றுசொல்ல,

“ம்ம்ம்…” என்று பொன்னி பார்வையை திருப்பும் பொழுதே, வீடுகள் இருக்கும் பகுதிகள் வர, கொஞ்சம் ஆள் நடமாட்டம் இருந்தது..

“உன் வீடு எங்க இருக்கு???” என்று புகழ் கேட்க,

“இல்ல.. இங்கயே இறங்கிக்கிறேன்.. நீங்க வேற கிளம்பிட்டு இருந்தீங்கள்ல…” என்று பொன்னி சொல்ல,

“ஹ்ம்ம் சென்னைக்கு தான்.. ஒரு மீட்டிங்.. நாளைக்கு திரும்பிடுவேன்..” என்றபடி காரை ஓரமாய் நிறுத்தினான் புகழ்..

‘இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு…’ என்று நினைத்தபடி இறங்கியவள், “தேங்க்ஸ்..” என்று சொல்ல, அவனும் இறங்கியவன் “நீயா போயிடுவியா??” என்றான்..

“ஹா ஹா.. இதென்ன.. விட்டா கைபிடிச்சுட்டு வீடு வரைக்கும் வந்து விடுவீங்க போல.. நானே போயிப்பேன்..” என்றவளின் சிரிப்பு அவனையும் தொத்தியதோ என்னவோ,

“ஓகே ஓகே..” என்றபடி திரும்பப் போக,

“என்னம்மா பொன்னி, அண்ணனைப் பார்த்துட்டு வர்றியா???” என்று யாரோ கேட்பது இவனின் காதில் விழுந்ததும், அவனின் புன்னகை அப்படியே மாறிட, வேகமாய் திரும்பினான் யார் என்று பார்க்க.

யாரோ ஒருவர்…

அவரிடம் பொன்னியும் “ஆமா சித்தப்பா..” எனும்போதே, அந்த நம்பரின் பார்வை புகழின் மீது படிந்து “என்ன மாப்ள நீ மெட்ராஸ்க்கு போறதா இளங்கோ சொன்னான்.. இங்க நிக்கிற…” என்று வினவியபடி இருவரையும் மாறி மாறி பார்க்க,

“அது மாமா.. போயிட்டு இருந்தேன்.. பொன்னி தனியா வரவும்.. சரி டிராப் பண்ணலாம்னு…” என்றவன், “நீ.. நீ போயிடுவியா?? இல்லை நான் வரணுமா??” என்று அவளிடம் கேட்க,  

அப்படியே அடுத்த நொடி பொன்னியின் பார்வையும் மாறிவிட்டது..

ஆனால் அந்த நபரோ இருவரையும் இன்னமும் மாறி மாறிதான் பார்த்துகொண்டு இருந்தார்..

“என்ன மாமா??” என்று புகழ் கேட்க,

“ஹ்ம்ம் ஒண்ணுமில்ல.. நீ பார்த்து போம்மா..” என்றவர், “எதுன்னாலும் பார்த்து பண்ணு புகழ்..” என்று சொல்லிவிட்டு நகர,

அவர் போகும் வரைக்கும் காத்திருந்த பொன்னி, “என்ன சார்.. என்னை வச்சு எதுவும் சீன் ப்ளான் பண்றீங்களா???” என்றாள் நக்கலாய்  அவனைப் பார்த்து..

‘கண்டுகொண்டாளோ…’ என்று புகழேந்தி ஒருநொடி எண்ணியவன், அதை மறைத்து,

“ஹேய் என்ன பேச்சு இது.. என்ன சீன்?? எனக்கு புரியலை…” என்று தோள்களை குலுக்க,

“புரியாது.. உங்களுக்குப் புரியாது…” என்று பல்லைக் கடித்தவள், “என்ன நினைச்சீங்க என்னைப் பத்தி.. ஹா???” என்று அழுத்தமாய் கேட்க,

“அட என்ன கண்ணு நீ.. இப்படி பேசுற???” என்றான் இன்னமும் அவனது நடிப்பை தொடர்ந்து..

“எப்படி??? எனக்கு மனுசங்களை கணிக்கத் தெரியாதுன்னு நினைச்சீங்களா??? இது தேர்ட் டைம் நம்ம மீட் பண்றது.. முதல் ரெண்டு தடவ இருந்த எதார்த்தம் இப்போ உங்கட்ட இல்லை.. அது எனக்கு தெரியாது இல்லை புரியாதுன்னு நினைச்சீங்களா…??” என,

“இங்க பாரு நீ சொல்றது போல எல்லாம் இல்லை…” என்று புகழ் மறுக்கும் போதே,

“போதும்…” என்று கரங்களை உயர்த்தியவள்,

“சோ நீங்க உங்க வீட்ல பேசிருக்கீங்க?? அப்படிதானே…” என்று கேட்க,  அதற்குமேல் அவனால் மறுக்கமுடியவில்லை..

இதில் மறுக்க என்ன இருக்கு.. தப்பு தவறு எல்லாம் இவர்கள் பக்கம் வைத்துகொண்டு என்னை கேள்வி கேட்கிறாள் என்று நினைத்தவன்,

“ஆமா கேட்டேன் இப்போ அதுக்கு என்ன? தப்பு பண்ண நீங்களே இவ்வளோ தைரியமா பேசுறப்போ நாங்க ஏன் பேச கூடாது…” என்றான்..

“ஓ…” என்றுமட்டும் சொல்லி அவனைப் பார்த்தவள், “ஹ்ம்ம்.. கொஞ்ச நேரத்துல என்னை முட்டாளாக்கிட்டீங்கல்ல..” என, அவள் முகத்தில் என்ன உணர்வு என்று அவனால் காண முடியவில்லை.. நன்கு இருட்டியிருந்தது..

ஆனால் அவள் குரலில் ஒரு வலி.. ஒரு ஏமாற்றம் இருந்ததுபோல் தோன்ற,

“என்ன???!!!” என்றான் அப்போது முழுதாய் அவனின் கோபம் தொனிக்கும் குரலில்.

“இல்ல இப்போதான் மனுசங்களை கணிக்கத் தெரியாதுன்னு நினைச்சீங்களான்னு கேட்டேன்.. ஆனா அதுதான் உண்மை போல.. அட்லீஸ்ட் உங்களை உங்க வீட்ல பேச விட்டாவாவது உண்மை வெளிய வரும்னு பார்த்தேன்.. ம்ம்ச்…” என்று பொன்னி ஏமாற்றமாய் இதழ்களை வளைக்க,

“ஏய் என்ன சொல்ற??!!!!” என்றான் புகழேந்தி..

“ஹலோ.. மரியாதை.. சரியா.. இப்போ வரைக்கும் நான் எப்படி பேசுறேன்.. அது பாலோ பண்ண தெரியாதா…” என்றவள்,

“போங்க சார் போங்க.. போய் உங்க தங்கச்சிட்ட கேளுங்க.. அதாவது… அவளை மட்டும் தனியா கேளுங்க.. எனக்குத் தெரிஞ்சு இப்போ வரைக்கும் உங்க வீட்ல யாரும் அவக்கிட்ட பேசிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.. சோ அதை நீங்களாவது பண்ணுங்க…” என்றவள்,

“வந்தாச்சு.. ப்ளான் போட்டு.. கண்ணு பண்ணுன்னு சொல்லிட்டு…” என்று முணுமுணுக்க,

“என்ன சொல்ற நீ….???!!!!” என்று புகழ் அப்போதும் அவள் சொல்வதை நம்பாமல் கேட்க,

“என்ன சொல்லணும்.. இங்க பாருங்க.. எந்த ரீசனுக்காகவும் என் வாய்ல இருந்து எதுவும் வராது.. ஆனா அதுக்காக உங்க வீட்டுக்காவது உண்மை என்னன்னு தெரியனும்னு நினைக்கிறேன்.. நானோ இல்லை என் அண்ணனோ எது சொன்னாலும் உங்க வீட்ல யாரும் கேட்க போறதில்லை..

நம்பவும் போறதில்லை. என் அண்ணனும் வாய் திறக்க போறதில்லை.. அவனுக்கு என்ன தலையெழுத்தா இப்படி இருக்க.. சோ இனி எல்லாமே அமுதாக்கிட்ட மட்டும் தான் இருக்கு.. முடிஞ்சா அவக்கிட்ட கேட்டு பதில் வாங்குங்க..” என்றவள் நடந்துவிட்டாள்..

திடமாய்… திமிராய்.. அவள் பேச்சும் இப்போது அவளின் நடையும் இருக்க, புகழேந்தி அப்படியே நின்றிருந்தான்..

அவள் பேச்சில் கொஞ்சமும் பிசிறோ பயமோ இல்லை. தெளிவாய் பேசுகிறாள்.. தவறு செய்தவர்கள் பேசுவதுபோல் ஒரு சிறு அளவு குற்ற உணர்வு கூட அவளின் முகத்திலோ பேச்சிலோ இல்லை.. ஆனாலும் நான் எதையும் கூறமாட்டேன் என்பதில் தான் என்னவோ இருக்கிறது என்று தோன்ற,

‘மீட்டிங்காவது இன்னொன்றாவது.. வீட்டிற்கு போ புகழ்.. அமுதாவிடம் பேசு..’ என்று நினைக்கும் போதே,

அவனின் அலைபேசி அலற, எடுத்தவன் “என்னம்மா???!!!” என்று கேட்க, அங்கே என்ன சொல்லப்பட்டதோ, “என்னது..!!!” என்று அதிர்ந்தே போனான்..

Advertisement