Advertisement

தோற்றம் – 37

அசோக் அப்படி சொன்னதுமே, அனைவருக்குமே என்ன இது இப்படி பேசுகிறான் என்றுதான் ஆகியது.. அமுதாவோ மலங்க மலங்க விழிக்க, புகழேந்தி எதுவோ பேச வரவும், பொன்னி ஒன்றும் சொல்லாதே என்று சைகை செய்திட, அசோக் தான் மேலும் பேசினான்..   

“உண்மைதான் அமுதா… எல்லாரும் எல்லாத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க தானே.. உனக்கு எல்லாரும் தப்பா நினைச்சிடுவாங்களோன்னு பயம்.. ஆனா இப்பவும் சொல்றேன் நாங்க யாருமே உன்னை தப்பா நினைக்க போறதில்லை.. உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு.. இல்லை கடைசிவரைக்கும் உனக்கு மனசு இப்படித்தான் இருக்கும்னா தயங்கவே வேண்டாம்..

தாராளமா உன்னோட வீட்ல சொல்ற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ.. அப்பவும் கூட நாங்க யாரும் எதுவும் சொல்ல போறதில்ல..” என்றவன் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு,

“நீங்களும் இனிமே இதைப்பத்தி எதுவும் பேசவேணாம்…” என்று எழுந்துவிட்டான்..

அமுதாவிற்கு இப்போது அழுகை வரவில்லை.. மாறாக என்னவோ நெஞ்சை அடைப்பது போல் இருந்தாலும், மௌனமாய் அசோக்கைத் தான் பார்த்துகொண்டு இருந்தாள்.. அவளுக்கு அவனை பிடிக்கும் என்பதற்கும் மேலாய் அவள் மதிக்கும் ஒருவன் அவன்..

சொந்தம் என்று ஆவதற்கு முன்பே அசோக்கின் மீது அவளுக்கு ஒரு நல்ல எண்ணமே.. ஆனாலும் என்னவோ அவளுக்கு மனதில் உறுத்தலாய் இருக்க, இமைக்காது தான் பார்த்துகொண்டு இருந்தாள்..

புகழேந்தியிடம் வந்தவன் “சாரி புகழ்.. உங்களையும் ரொம்ப படுத்திட்டேன்…” என்றவன், பொன்னியை ஒருபார்வை மட்டும் பார்த்துவிட்டு,

“ம்மா நீ வர்றியா???” என்று மங்கையை பார்த்து கேட்க,

“அ.. என்.. என்னடா..??” என்றார் இத்தனை நேரம் மகன் பேசியது கொடுத்த அதிர்ச்சி மீளாமல்..

“நீ கொஞ்ச நேரம் வந்து என்னோட இருந்தா நல்லாருக்கும்…” என்று அசோக் சொன்னதும்,

பொன்னி சிறிதும் யோசியாமல் “ம்மா நீ போயிட்டு வா.. அவனோட இரு…” என, மங்கையோ அமுதாவை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டே கிளம்பினார்.

இருவரும் கிளம்பிட, பொன்னி அமுதாவிற்கு குடிப்பதற்கு ஒரு கிளாஸ் நீர் கொடுத்தவள், “கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு..” என்றுவிட்டு,

“பார்த்துகோங்க…” என்பதுபோல் புகழேந்தியை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் அண்ணனும் தங்கையும் பேசட்டும் என்று..  

புகழேந்திக்கு யாருக்கு இதில் என்ன சொல்வது என்று தெரியவேயில்லை.. அமைதியாய், யோசனையாய் அமர்ந்திருந்தான்.. பொன்னியை திருமணம் செய்ய கேட்கையில் அவனுக்கு இப்படியான விசயங்கள் எல்லாம் நடக்கும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை.. இரு குடும்பத்திற்கும் இடையில் இருக்கும் சங்கடம் தெரியும்..

இருந்தாலும் இந்த திருமணம் மூலம் அனைவருக்கும் நல்லதுதான் நடக்கும் என்ற எண்ணம் ஆழமாய் அவன் மனதில் இருந்தது.. பொன்னியை பிடித்தது ஒரு காரணம் என்றால், இதுவும் ஒரு காரணமே.. ஆனால் இப்போது??

எல்லாமே சரியாகிவிட்டது, என் வீட்டினர் என் மனைவியை புரிந்துகொண்டனர் என்று எண்ணுகையில், இதோ இப்படி..

அவனும் தான் யாருக்கு சார்ந்து பேச முடியும்.. அமுதாவின் தயக்கமும் பயமும் சரியே.. பொன்னி ஒதுங்கி நிற்பதும் சரியே.. அசோக்கின் நிலையோ அந்தோ பரிதாபம்..

இப்போது அதே பரிதாப நிலைதான் இவனுக்கும்..

எப்படியும் அடுத்து கொஞ்ச நேரத்தில் ஊரில் இருந்து போன் வரும்.. ‘மாப்பிளை போட்டோ பார்த்தியா… உனக்கு என்ன தோணுது.. பொன்னி என்ன சொல்றா…’ என்பது போன்றான விசாரிப்புகள் எல்லாம் வரும்..

அதற்கெல்லாம் அவன் பதில் சொல்வதற்குள் அமுதா என்ன முடிவில் இருக்கிறாள் என்பது மிக மிக முக்கியம்.. ஏனெனில் வாழப் போவது அவள்தான்… இது அவளின் வாழ்க்கை.. அவள் மட்டுமே வாழ்ந்திட முடியும்.. இந்த எண்ணம் வந்திடவுமே, இனியும் பொறுமையாய் போவது சரியல்ல என்றெண்ணி,

“அம்மு…” என்றழைத்தான்..

“ம்ம்…” என்று அமுதா நிமிர்ந்து அவனைக் காண,

“இங்க வா…” என்றவன் சோபாவில் கொஞ்சம் தள்ளி அமர, மெதுவாகவே எழுந்து அவனிடம் சென்று அமர்ந்தாள்..

அவள் போய் அமர்வதற்கும், சரியாய் இளங்கோவும் அழைத்துவிட்டான்.. அழைப்பது இளங்கோ என்றதுமே அவன் என்ன பேச போகிறான் என்பது புகழேந்திக்கு நன்கு புரிந்துபோனது.. எடுத்து பேசுவதா வேண்டாமா என்று யோசித்தவன்,

எப்போது இருந்தாலும் பேசித்தான் ஆகவேண்டும் என்று நினைத்துகொண்டே “ஹலோ சொல்லுண்ணா…” என்றான் சாதாரணமாய்.

“என்னடா எப்படியிருக்க?? பொன்னி எப்படி இருக்கு???”

“எல்லாரும் நல்லாருக்கோம்.. அங்க எப்படி இருக்காங்க எல்லாம்???”

“இங்கயும் வழக்கம் போலத்தான்டா…” என்றவன் “நான் எதுக்கு கூப்பிட்டேன்னு உனக்கே தெரிஞ்சிருக்குமே…” என,

“ஆமாண்ணா.. சொல்லு என்ன விஷயம்…” என்றான் இவனும்..

“அதொண்ணுமில்ல இந்த வரன் கொண்டு வந்ததே பரஞ்சோதி அத்தை தான்.. சத்யாக்கு கல்யாணம் பண்ணாங்கல்ல அந்த வழியில சொந்தமாம்..  சத்யா கல்யாணத்தப்போவே அம்முவ பார்த்திருப்பாங்க போல. பொண்ணு படிக்குதுன்னு சொல்லவும் சும்மா இருந்திட்டாங்க.. இப்போ சரி கேட்டு பாப்போமேன்னு பேசினாங்களாம்..

இங்க எல்லாருக்கும் பிடிச்சு இருக்குடா புகழு.. நம்ம அம்முக்கு ஏத்த மாப்பிள்ளயா இருப்பார்னு தோணுது.. என்னதான் பரஞ்சோதி அத்தை கொண்டு வந்த சம்பந்தம்னாலும் நல்லதுன்னா நம்ம விட்டுட கூடாது இல்லையா..” என்று நீளமாய் இளங்கோ பேச, புகழேந்தி ம்ம் ம்ம்ம் என்று மட்டும் கேட்டுக்கொண்டான்..

“என்னடா ம்ம்னு மட்டும் சொல்ற?? உனக்கு பொன்னிக்கு எல்லாம் பிடிச்சிருக்கா???”

“போட்டோ பார்த்துட்டோம்.. ஆனா இங்க இன்னொரு விஷயம்…” என்று சொல்லிவிட்டான் புகழேந்தி..

என்னவோ இளங்கோவிடம் இதனை சொன்னால் ஒரு தெளிவு கிடைக்கும் என்பதுபோல் இருந்தது.. அமுதா இங்கே இருக்கிறாள் என்பதெல்லாம் சொல்லாது அவனது நிலைக்கான பதிலுக்காய் மட்டுமாய் சகோதரனிடம் பகிர்ந்துகொண்டான்..

“என்னடா?? என்னாச்சு??” என்று இளங்கோ கேட்க,

“அதுண்ணா.. அது.. அத்தை இங்கதானே இருக்காங்க… அசோக் கூட அடிக்கடி இங்க வர்றாப்ல…” என,

“அது தான் தெரிஞ்சது தானே…” என்றான் இளங்கோவும்..

“அதான்.. அத்தைக்கு அமுதாவை கேட்கனும்னு ஒரு எண்ணம் போல.. அசோக் கிட்டவும் பேசிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. அசோக்கும் சரின்னு சொல்லிருப்பாங்க போல..” என்று புகழேந்தி இழுக்க, இளங்கோ கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தான்..

“ஹலோ.. அண்ணா… இருக்கியா….”

“ம்ம் இருக்கேன்டா சொல்லு…”

“இல்ல அதான்… ஒரே யோசனையா இருக்கு…” என்று புகழ் இழுக்க, அமுதாவோ பயந்து போய் பார்த்துகொண்டு இருந்தாள்..

“ம்ம் இது பொன்னிக்கு தெரியுமா???”

“தெரியும் ண்ணா..”

“என்ன சொல்லுச்சு??”

“அது.. கட்டிக்கபோறவங்களுக்கு சம்மதம்னா எனக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டா…” என்று புகழ் சொல்லி முடிக்கும் முன்னே,

“அப்போ அமுதாக்கு தெரியுமா???” என்றான் வேகமாய் இளங்கோ..

“அது….” என்று புகழ் அமுதாவின் முகத்தினைப் பார்க்க, அவள் முகத்தினில் இருக்கும் உணர்வு புரிந்தே “இல்லண்ணா.. இன்னும் சொல்லல.. இன்னிக்கு லீவ்தானே கொஞ்ச நேரம் கழிச்சுதான் போய் கூட்டிட்டு வரணும்.. அசோக் அத்தை எல்லாம் இப்போதான் கிளம்பி போனாங்க..”  என்றான்..

“ஓ..!!!!” என்று இளங்கோ யோசிக்க, “என்னண்ணா??” என்றான் இவன்..

“என்ன சொல்றதுன்னு தெரியலைடா.. நல்ல விசயம்தான்.. ஆனா ஒரு ரெண்டுநாள் முன்னாடி இதை நீ சொல்லிருந்தா கூட கொஞ்சம் பிரச்சனை ஆகாம வீட்ல பேசிருக்கலாம்.. இப்போ பரஞ்சோதி அத்தை நம்ம வீட்ல தான் இருக்காங்க.. அதான் யோசனையா இருக்கு…” என்றவன்,

“நீ ஒன்னு பண்ணுடா.. பேசாம மங்கை அத்தை, அசோக்க வந்து அவங்களா பேசுறது போல பேச சொல்லு.. முடிஞ்சா நீயும் வா.. அமுத்தாக்கிட்ட பொன்னிய பேச சொல்லு…” என “ம்க்க்கும்…” என்று நினைத்துக்கொண்டான் புகழ்..

“டேய்  என்னடா…??”

“இல்ல யோசிச்சேன்…”

“இங்கபாரு யோசிக்க எல்லாம் நேரமில்லை.. அடுத்து அப்பா உனக்குத்தான் கூப்பிடுவார் மாப்பிள்ளை ஓகேவா?? விசாரிச்சியா அப்படின்னு.. அப்போ என்ன சொல்லுவ.. இப்போ அவங்களே வந்து கேட்கிறதுபோல கேட்டுட்டா நல்லது.. இல்லையா தேவையில்லாத பேச்சு எல்லாம் வரும்.. இப்போதான் எல்லாமே கொஞ்சம் சுமுகமா போயிட்டு இருக்கு…” என்று இளங்கோ சொல்வதும் சரியாய்தான் தோன்றியது புகழேந்திக்கு..

“ம்ம் சரிண்ணா நான் இங்க பேசிட்டு சொல்றேன்..” என்று போனை வைத்தவனுக்கு முன் இருந்ததை விட இப்போது இன்னமும் யோசனைகளின் படையெடுப்பு..

ஒருவேகத்தில் இளங்கோவிடம் சொல்லிவிட்டான் தான்.. ஆனால் இப்போது என்று எண்ணுகையில்,

அமுதா “அண்ணா…” என்றழைக்க, “ம்ம் சொல்லு அம்மு…” என்றான் குரலில் சுரத்தே இல்லாது..

“சா.. சாரிண்ணா.. என்னால…” என்று அவள் பேசும்போதே,

“என்னாலதான் எல்லாருக்கும் கஷ்டம்… இதானே சொல்ல போற??? இதைதான் அம்மு நீ ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்க… எனக்கு ஒன்னுமட்டும் புரியலை.. அசோக்கை உனக்கு பிடிச்சிருந்தா நீ சரின்னு சொல்லிருக்கணும்.. பிடிக்கலைன்னா நீ அப்போவே அவர்கிட்டவே சொல்லிருக்கணும்.. அதைவிட்டு எங்களை கை காட்டிட்ட..

சரி விடு.. உனக்கு மனசுல ஒரு பயம்.. எனக்கு அது புரியுது.. ஆனா பயத்தை தாண்டி நம்ம வாழ்க்கை நம்மதான் வாழ்ந்தாகணும்.. அதுமட்டும் மனசுல வை.. இப்போ இளங்கோ வந்து வீட்ல பேசுங்கன்னு சொல்றான்.. நீ இருக்கிறது கூட சொல்லலை.. ஆனா இப்போ நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்.. நீ சொல்றது வச்சித்தான் எல்லாமே இருக்கு..” என்று பொறுமையை இழுத்து பிடித்தே புகழ் பேச,

“ம்ம் எனக்கு அவரை பிடிக்கும்ணா…” என்றிருந்தாள் ஒருவழியா..

“என்ன?? என்ன சொன்னா???!!!!” என்று புகழ் நம்ப முடியாது கேட்க,

“அதான் அண்ணா.. என்.. எனக்கு அவரை பிடிக்கும்.. ஆ.. ஆனா.. என்னோட பயமே வேற…” என்றாள் வார்த்தைகளை மென்று முழுங்கி..

‘யப்பா இப்போவாது சொன்னாளே…’ என்றுதான் புகழேந்திக்கு இருந்தது.. ஆனாலும் அவள் இன்னமும் முழுதாய் சொல்லாமல் இருக்க,

“இன்னுமென்ன??!!” என்றான்..

“இல்லண்ணா.. ஒருவேள நம்ம வீட்லயும் சரின்னு சொல்லி, இந்த கல்யாணம் நடந்தா, அது.. அது முன்னாடி அவரு என்கிட்டே தப்பா நடந்துக்க பார்தாருன்னு பிரச்சனை ஆச்சே.. அது உண்மைன்னு தானே எல்லாம் பேசுவாங்க.. ஏற்கனவே எங்களுக்குள்ள பழக்கம் இருந்திருக்கு அப்படி இப்படின்னு…

நம்ம அக்காவே எப்படி பேசும்னு உனக்கு தெரியும்… கடைசில நல்லது பண்ண போய் அவருக்குத்தானே அப்போவும் பேச்சு வரும்…” என்று ஒருவழியாய் அவள் மனதில் இத்தனை நாள் அடைத்துக்கொண்டு இருந்ததை சொல்லிவிட்டாள்..

அனைத்தையும் கேட்டவனுக்கோ ‘அப்பாடி இவ்வளோதானா???!!!!’ என்று ஒருநொடியில் மனம் லேசாகிவிட,

“இவ்வளோதானா???!!!” என்றான் லேசாய் சிரித்து..

ஆமாம் என்று அமுதா தலையை ஆட்ட, “இதை அசோக் யோசிக்க மாட்டாரா?? இல்லை நான் யோசிச்சிருக்க மாட்டேனா???” என்று கேட்டவனுக்கு அமுதா தன் அமைதியையே பதிலாய் கொடுக்க,

“இங்க பாரு அம்மு.. எது எப்படி இருந்தாலும் எல்லாத்தையும் தாண்டி நம்ம வாழ்ற வாழ்க்கை முக்கியம் நமக்கு.. அதை முடிஞ்ச அளவு சரியாய் நேர்மையா வாழனும் அவ்வளோதான்.. அதை தாண்டி இவங்க என்ன நினைப்பாங்க அவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைச்சா நம்ம ஒரு செக்கன்ட் கூட வாழ முடியாது…” என்று நிதர்சனத்தை சொல்ல,

“என்.. எனக்கு பேச்சு கேட்டு கேட்டு மனசு ரொம்ப நொந்து போச்சுண்ணா.. அதான் என்னால தைரியமா சரின்னு கூட சொல்ல முடியலை.. மதினி பேசினது.. அவர் பேசினது.. அத்தை பேசினது எல்லாமே சரிதான்.. இந்த கல்யாணம் நடந்தா நான் சந்தோசமா இருப்பேன்தான்.. ஆனா அவர் பண்ணாத தப்புக்கு அவரையே கடைசியில எல்லாம் சொல்லிடுவாங்களோன்னு இருக்கு…” என,

“சரி வேணும்னா ஒரு போஸ்டர் அடிச்சு ஒட்டிடலாமா???” என்றான் புகழேந்தி நக்கலாய்..

“ண்ணா!!!!”

“பின்ன என்ன அம்மு… யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு உன்னோட சந்தோசம் ரொம்பவே முக்கியம்.. நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா வந்து நிக்க போறதும் நாங்க தான்.. பேசுற எல்லாரும் இல்லை.. அப்படி யார் பேசிட போறாங்க??

அப்படியே பேசினாலும் ஒரு நாள் பேசுவாங்களா இல்லை ரெண்டு நாள் பேசுவாங்களா?? அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கைன்னு போவாங்க.. இல்லை வேற யாரையாவது பேச போயிடுவாங்க.. அவ்வளோ ஏன் எங்க கல்யாணம் நடந்தப்போ யாரும் எதுவும் சொல்லலையா என்ன?? நாங்க வாழ்ந்திடலையா என்ன?” என்று புகழ் கேட்கவும் கொஞ்சம் அமுதாவிற்கு புரிவது போல் இருந்தது..

“நீ நல்ல பொண்ணு அம்மு.. அதை முதல்ல நீ நம்பு.. உனக்கு பிடிச்சிருக்கு சொல்லிட்ட தானே.. அந்த அளவுல மட்டும் இரு.. மத்தது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்…” என, தலையை மட்டும் ஆட்டினாள் சரியென்று..

“ரொம்ப சந்தோசம்…” என்றவன் பொன்னியை அழைக்க, அவளோ “சமையல் முடிச்சிட்டேன் சாப்பிட எழுந்து வாங்க…” என்று இவர்களை அழைத்தாள்..

“ஓ… பாரு இப்படியே உட்கார்ந்துட்டே இருக்கேன்…” என்று அமுதா முதலில் வேகமாய் செல்ல, புகழேந்தியும் சிரித்துக்கொண்டே சென்றான்..

அவனின் முகத்தில் இருக்கும் புன்னகை கண்டே பொன்னிக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிய ‘எப்படிதான் பேசி பேசியே எல்லாரையும் ஒரு வழிக்கு கொண்டு வர்றாங்களோ…’ என்று நினைத்தவள், அமுதாவிற்கும் தட்டு வைக்க,

“மதினி நீங்களும் உட்காருங்க.. சேர்ந்தே சாப்பிடுவோம்..” என்றவளைப் பார்த்தவள்,

“ம்ம் இப்போ தெளிவாகியாச்சா???” என்றாள் வேறெதுவும் கேளாது..

“ம்ம்…” என்று அமுதா சொல்லவும், “இளங்கோ போன் பண்ணான்…” என்று புகழ் சொல்லும் போதே, “எல்லாம் காதுல விழுந்தது…” என்றாள் பொன்னி ஒருமாதிரி..

‘இப்போ இவளுக்கு என்னாச்சு??!!’ என்று புகழ் பார்க்க,

“எப்போ கிளம்புறீங்க???” என்றாள்..

“அது.. அத்தையும் அசோக்கும் சொல்லணும்…”

“ம்ம் நீங்களே கேட்டிட்டு, கூட்டிட்டு போயிட்டு வந்திடுங்க…” என்றவள் உண்ணத் தொடங்கிட, அது அத்தனை சரியாய் வரும் என்று அவனுக்குத் தோன்றவில்லை..

அமுதா இருவரையும் பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் உண்ண, புகழேந்தியோ “இல்ல எல்லாம் ஒண்ணா போனா சரியா இருக்காது கண்ணு.. நான் நைட் கிளம்புறேன்.. அத்தையும் அசோக்கும் காலைல கிளம்பி அங்க வரட்டும்.. அதுக்கு முன்ன நான் வீட்ல கொஞ்சம் பேசி வைக்கணும்…” என,

“ம்ம் எதுவோ பார்த்து பண்ணுங்க…” என்றுவிட்டாள், இதுமட்டும் தான் என்னால் முடியும் என்பதுபோல்..

ஆனால் பொன்னி மனதில் ஒரு கேள்வி அசோக் செல்வானா என்று?? இத்தனை நாள் வராதவன் இன்றெப்படி போவான் என்று ஒரு யோசனை.. இருந்தாலும் புகழேந்தி பேசட்டும் என்றுதான் இருந்தாள்.. ஆனால் புகழ் கேட்கையில் மங்கையும் சரி அசோக்கும் சரி சந்தோசமாகவே சரி என்று சொல்ல, பொன்னிக்கு மனதின் ஒரு ஓரத்தில் சுருக்கென்று தைத்தது..

‘இல்ல பொன்னி… இல்ல இப்போ நீ எதுவும் நினைக்க கூடாது…’ என்று தன்னை தானே உலுக்கிக்கொண்டவள்  “போயிட்டு வாங்க…” என்றுமட்டும் சொல்ல,  

புகழேந்தியோ “நீ இருந்துப்பியா??!!!” என்று அவளின் கரங்களை பற்றிக்கொண்டான்..

“அதான் அமுதா இருக்காளே…” என்றவள் அவனைப் பார்த்து புன்னகைக்க முயல,

“சிரிக்க ட்ரை பண்ணாம, சிரிச்சிடேன்…” என்றவனைப் பார்த்து தன்னைப்போல் அவளின் புன்னகை விரிந்தது..

அமுதா வேறொரு அறையில் இருக்க, புகழ் இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை எடுத்து வைக்க, அப்போதுதான் இந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம். பொன்னி புகழேந்தியை பார்த்துக்கொண்டே இருக்க,

“என்ன கண்ணு? அப்படி பாக்குற???” என்றான் அவனும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக,

“இல்ல நீங்க எப்படி பேசி பேசியே எல்லாரையும் ஒரு வழி பண்ணிடுறீங்க.. பேசாம நீங்க லா படிச்சிருக்கலாம்…” என்றாள் அவனை கிண்டலாய் ஒரு பார்வை பார்த்து..

“ஹா ஹா கண்ணு பேசுறது முக்கியமில்லை.. ஆனா என்ன பேசுறோம் எப்படி பேசுறோம் தான் முக்கியம்..”

“ம்ம் ஆமா ஆமா…”

“ஓய் என்னடி கிண்டல் பண்ற… நான் பேசுறதுல சரியா இருக்கபோய் கேட்கிறவங்க சரின்னு சொல்லிடுறாங்க…” என,

“ஹா ஹா அப்படிவேற நினைப்பா??” என்றாள் திரும்பவும் சிரித்து..

“ஏன்?? வேற எப்படியாம்??” என்று புகழ் நெற்றியை சுருக்கி கேட்க,

“விட்டா ப்ளேட் போட்டே கொன்னுடுவீங்கன்னு வேற வழியே இல்லாம எல்லாம் சரின்னு சொல்லிடுறாங்க…” என்று பொன்னி கலகலவென்று சிரிக்க,

‘அடிப்பாவி புல்லுக்கட்டு….’ என்று முனுமுனுத்தவன், வெகு நாட்களுக்கு பிறகு இப்படி சிரிக்கிறாள் என்று பார்த்துகொண்டு நின்றான்..

“ஹா ஹா ஹா என்னங்க அப்படிதானே….” என்று பொன்னி திரும்பவும் கேட்க, அவளுமே இப்போது கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பது அவனுக்கு புரிந்து,

“போ டி.. உனக்கெல்லாம் என்னோட அருமை எங்க புரிய போகுது.. ஆனா நம்ம ஜூனியர்க்கு புரியும்…” என்றவன், குனிந்து அவளின் வயிற்றினில் இதழ் பதிக்க, அதே நேரம் உள்ளிருக்கும் குழந்தையும் அசைய,

“பார்த்தியா???!!!” என்று அவனும் கேட்க,

“ஆ.. சரி சரி.. கிளம்புங்க நேரமாச்சு… இப்போ கிளம்புனாத்தான் நைட் வீட்டுக்கு  போக முடியும்..” என்று அவனை கிளப்ப,

“நீ பார்த்து இருந்துக்கோ கண்ணு.. எதுன்னாலும் அமுதாக்கிட்ட கேளு.. நீயா எல்லாம் பண்ணாத…” என்று புகழ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லவும் பொன்னி இப்போது முறைப்பாய் அவனை பார்த்தாள்..

“நீ முறைச்சாலும் சரி.. நான் சொல்றதை சொல்லிட்டுதான் இருப்பேன்…” என்றவன் திரும்பவும், அவளுக்கு நெற்றியிலும், குழந்தைக்கென்று அவளின் வயிற்றினிலும் இதழ் பதித்து கிளம்ப, அமுதா பொன்னி இருவருமே வாசல் வந்து வழியனுப்பினர்….

பொன்னி அமுதா இருவருக்குமே அங்கே ஊரில் என்ன நடக்குமோ என்றிருக்க, புகழேந்தி திடீரென்று வருகிறேன் என்று சொன்னது அங்கிருப்பவர்களுக்கும் ஒருவித எதிர்பார்ப்பை கொடுத்தது தான்..

“ஏன் மாமா உங்கக்கிட்ட கூட எதுவும் சொல்லலையா???” என்று அன்பரசி நிறைய தடவை ஜெயபாலிடம் கேட்டுவிட,

“போன் பண்ணேன் வந்துட்டு இருக்கேன் மாமான்னு மட்டும்தான் சொன்னான்..” என்றவனோ இதற்குமேல் இதை கேட்டாய் என்றால் பார்த்துக்கொள் என்று முறைத்தான்..

பரஞ்சோதியும் அங்கே இருக்க, மகராசி தான் மன்னவனிடம் “என்னவோங்க சின்னவன் வர்றான், இந்த மதினி அது இதுன்னு சொல்லி எதுவும் பேசாம இருக்கணும்..” என்று அவரின் ஆதங்கத்தை கொட்ட, ஒருவழியாய் புகழேந்தி அங்கே சென்று சேர்ந்தான்..

நிறைய நாட்கள் ஆகியிருந்தது ஊருக்கு வந்துகூட.. ஆக வந்ததுமே எதுவும் ஆரம்பிக்காமல் அனைவரோடும் கொஞ்ச நேரம் பேசிவிட்டுத்தான் மெதுவாய் பேச்சை தொடங்கினான்..

 

    

                                        

           

   

      

        

        

   

        

Advertisement