தோற்றம் – 36

“ஏன்ம்மா அமுதா அதான் பொன்னி அவ்வளோ சொல்லிட்டு போறாளே.. ஒருவார்த்தை வாய் திறந்து எனக்கு சம்மதம்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன புள்ளைகளோ நீங்க.. உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறதுக்குள்ள பெத்தவங்க நாங்கதான் திணறிப் போயிடுறோம்….” என்று மங்கை கேட்டேவிட்டார்..

பின்னே அவரும் தான் எத்தனை நேரத்திற்கு பொறுமையாய் இருக்க முடியும்.. விஷயம் இதென்று தெரிந்ததுமே அவர் சொன்னதெல்லாம் “நான் போய் மாப்ளயோட வீட்ல பேசுறேன்…” என்பதுதான்..

ஆனால் அசோக் தான் ‘பொன்னி முதல்ல சரின்னு சொல்லட்டும்மா’ என்றுவிட்டான்..

வீட்டின் பெரிய மனுஷியாய் இதேல்லாம் அவரால் பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியவில்லை.. அதிலும் என்னாவோ அனைவரும் சேர்ந்து பொன்னியை இதில் காரணம் காட்டுவது சுத்தமாய் பிடிக்கவில்லை.. பொன்னி பேசிய அனைத்து வார்த்தைகளும் சரிதான்..

அதே நேரம் புகழேந்தியின் நிலையும் அவருக்கு நன்கு புரிந்தது.. அவன் பொறுப்பில் தங்கையை படிக்கவென்று அழைத்து வந்திருக்கிறான் இதில் இதெல்லாம் தெரிந்தும் அவன் இந்தளவு பொறுமையாய் போனதே பொன்னிக்காக என்றுதான் அவருக்குத் தோன்றியது..

அவனுமே சொல்லியிருந்தான் “அத்தை நீங்க போய் பேசுறதுன்னா பேசுங்க.. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. ஆனா ஒண்ணு இதுல பொன்னிக்கு எந்தவித சங்கடமும் வந்திட கூடாது.. அவ்வளோதான் நான் எதிர் பார்க்கிறது.. சாதாரண நேரம்னா நானே பேசிருப்பேன்.. ஏற்கனவே இந்த பேச்சுனால பொன்னி ரொம்ப சங்கடப்பட்டு போயிருக்கா.. இதுக்குமேல அசோக் கைல தான் இருக்கு..” என்றிருந்தான் ..

ஆனால் இத்தனைக்கும் நடுவில் இந்த அமுதா.. கடைசி வரைக்கும் வாயே திறக்காமல் இருந்தால் எப்படி??

அவளுக்கு பிடித்திருக்கிறது என்றால் அதனை சொல்வதில் அப்டி என்ன பயம் தயக்கம் எல்லாம் வந்துவிட போகிறது.. அவளை இங்கே யாரும் தவறாய் எல்லாம் நினைக்கவில்லையே.. அதனால்தான் மங்கை கேட்டேவிட்டார்..

ஆனால் அமுதாவோ இப்போதும் கண்ணீர் சிந்த அசோக்கோ பாவமாய் பார்த்தான் இருவரையும்..

“என்னை என்னடா செய்ய சொல்ற?? பொன்னி சொன்னதுல என்ன தப்பிருக்கு.. வாழப் போறது நீங்க.. உன் முடிவை நீ சொல்லிட்ட.. ஆனா இன்னும் இந்த பொண்ணு எதுமே சொல்லாம மதினி சொல்லணும் அப்படின்னு சொன்னா.. அவ கேட்கத்தான் செய்வா..” என்றவர்,

“என் வயசுக்கு நான் இதை செய்ய கூடாது.. ஆனாலும் வேற வழியில்லை.. வாழ வேண்டிய பசங்க நீங்க.. ரெண்டு பேரும் பேசி ஒருமுடிவுக்கு வாங்க..” என்று உள்ளே போக எழுந்தவர் மகனைப் பார்த்து,

“ஒண்ணு அமுதாவை சம்மதம்னு சொல்ல வை. இல்லை நாங்க பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணு.. ம்மா அமுதா நீயும்தான் என் மகனை பிடிச்சிருக்குன்னா அதை தயங்காம சொல்லு.. இல்லையா உங்க அண்ணனும் மதினியும் வரவு உன் முடிவை சொல்லிடு நிம்மதியா படிக்கிற வேலை பாரு..” என்று அவளிடமும் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட ,

அவர் சென்றது தான் தாமதம், அமுதா முகத்தினை மூடிக்கொண்டு அப்படியொரு அழுகை அழுதுவிட்டாள்..

அசோக் பயந்துகூட போனான்.. ஆனாலும் ஒரு எண்ணம் இந்த அழுகையினூடே அவளின் வருத்தங்களும் கவலைகளும் எல்லாம் கரைந்து போகட்டும் என்று..

அவள் அழுது ஓயுமட்டும் அமைதியாவே இருந்தவன், அவனள் இப்போது அழுகையை நிறுத்துவதாய் தெரியவில்லை என்றதும் எழுந்து அவளின் அருகே வந்து அமர்ந்தவன்,

“அமுதா….” என்று மென்மையாய் அழைக்க, அவளோ அப்படியேதான் இருந்தாள்..

“அமுதா…” என்று திரும்ப அவளை அழைத்தவன், மெதுவாய் அவளின் கரங்களை பிடித்து விலக்க, முகமெல்லாம் சிவந்து, கண்களும் சிவந்திருந்தது… அப்போதும்கூட அமுதா அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவனை..

தலைகுனிந்தே விசும்பிக்கொண்டு இருக்க, “அழுதது போதும்.. பாரு முகமே எப்படியோ ஆகிடுச்சு..” என்று அசோக் சொன்னதும்,

“என்.. என்னாலதான் எப்பவுமே எல்லாருக்கும் பிரச்சனை.. யாருக்குமே என்னால சந்தோசமில்லை…” என்றாள் கேவிக்கொண்டே..

“அப்படியா யார் சொன்னா அப்படின்னு…???”

“யார் சொல்லணும்.. நடக்கிறது பார்த்தாலே தெரியலையா???” என்றவள் அப்போது தான் அசோக்கை நிமிர்ந்து பார்க்க, அவன் கண்கள் அப்படியே அவன் மனதில் இருக்கும் அவள் மீதான காதலை காட்டிட, அமுதாவிற்கு அடுத்து பேச்சு வரவில்லை..

“இப்போ விசயமே உன்னால எல்லாரும் சந்தோசமா இருக்காங்களா இல்லையான்னு இல்லை அமுதா.. நீ சந்தோசமா வாழணும்.. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும் அதுதான் விசயமே.. நான் ஒண்ணுதான் கேட்பேன்.. உனக்கு என்னை பிடிச்சிருந்தா சரின்னு சொல்லு.. இல்லையா சொல்லிடு.. நான் இப்பவும் உன்னை தப்பா நினைக்கல.. நினைக்கவும் மாட்டேன்..” என்றவனின் வார்த்தைகளை கேட்டவள் திரும்பவும் அழுகையில் உடல் குலுங்கிட,

“ம்ம்ச் என்ன அமுதா நீ எல்லாத்துக்கும் அழுதுகிட்டு.. நல்லாவா இருக்கு..??” என்றான் லேசாய்  கடிந்து..

அவனது குரலில் இருந்த மாற்றம் உணர்ந்தவள், “என் நிலைமைல இருந்து பார்த்தா தான் யாருக்கும் புரியும்..” என்றாள்..

“ஹா ஹா என்ன நிலைமை.. பெரிய இந்த நிலைமை.. நீயா ஏன் உன்னை மட்டமா நினைச்சுக்கிற?? நீ பழசை எல்லாம் நினைச்சு பேசுறதா இருந்தா அதை இதோட இன்னிக்கோட மறந்திடு.. அதெல்லாம் ஒரு விசயமே இல்லை…”

“இல்ல அதுவந்து.. எல்லாரும்…” என்று அவள் சொல்லும்போதே,

“போதும் நிறுத்து அமுதா…” என்று கத்திவிட்டான் அசோக்..

அமுதா திகைத்து விழிக்க, “என்ன பாக்குற, சும்மா எப்போ பாரு எல்லாரும் எல்லாரும்னு சொல்லிக்கிட்டு இருக்க.. ஆமா எல்லாருக்கும் என்ன இப்போ?? எல்லாரும் உன்னை என்ன பண்ணிட்டாங்க இப்போ.. வீட்ல இருக்க பசங்க தப்பு பண்றப்போ கண்டிக்கிறதும் தோற்றதும் பெரியவங்க செயவாங்கதான்..

அதே நேரம் அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னா அவங்களை விட யாரு சந்தோசப்பட போறா… இப்போ உன்னை என்ன கேட்டுட்டேன் என்னை பிடிச்சிருக்குனு உங்க வீட்ல போய் சொல்லுன்னு சொன்னேனா?? இல்லையே.. அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லுன்னுதானே எல்லாம்  சொல்றாங்க.. அதைவிட்டு அழுதுட்டே இருந்தா எப்படி???” என்று அசோக்கும் பொறுமை இழந்துவிட, சுத்தமாய் இவளுக்கு வார்த்தைகள் மறந்துபோனது..

“இத்தனை நாள்தான் புகழ் சொல்லணும்  பொன்னி சொல்லணும்னு சொன்ன, இதோ அவங்கலுமே எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க ஆனாலும் நீ இப்பவும் இப்படி இருந்தா உனக்கு என்னை பிடிக்கலைன்னு தான் தோணுது அமுதா…” என்று பேசிக்கொண்டே போனவன்

“போதும்.. இப்போதான் புரியுது, இவங்க எல்லாம் சரின்னு சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சு நீ இப்படி சொல்லிருக்க, இப்போ எல்லாரும் சரின்னு சொல்லவும் உன் முடிவு முக்கியம்னு கேட்கவும் வெளிய சொல்ல தயக்கம் உனக்கு….” என்று குற்றம் சாட்டுவதுபோல் பேச,

“ஐயோ..!!!! இல்லவே இல்லை…” என்று இரு கைகளையும் ஆட்டி வேகமாய் அமுதா மறுக்க,

“பின்ன ?? பின்ன எப்படி???” என்றான் அதே வேகத்தோடு..

“நான்… நான்.. அது.. என்னை யாரும் தப்பா நினைச்சிட்டா???” என்றாள் தயங்கிப்போய்..

“உன்னை ஏன் தப்பா நினைக்கணும்..??”

“அது… அதுவந்து.. நான் ஏற்கனவே… அது….” என்று அவள் சொல்லத் தயங்க,

“இங்க பார் அமுதா காலேஜ் படிக்கிறப்போ நானே ஒரு பொண்ணு பின்னாடி சுத்தியிருக்கேன்.. அதெல்லாம் சும்மா… பாசிங் க்ளவ்ட்ஸ்… அந்த ஏஜ்ல வர அட்ராக்சன்.. அவ்வளோதான்.. இதெல்லாம் போய் நீ பெருசு பண்றதுதான் சரியில்லை..” என்றான் கொஞ்சம் அறிவுரை சொல்வதுபோல..

இதெல்லாம் ஏற்கனவே புகழேந்தியும் சொல்லியிருக்கிறான் தான்.. ஆனால் என்னவோ அமுதாவிற்கு ஒருமாதிரி மனம் உறுத்தலாய் இருந்தது.. ஆனால் இன்று கொஞ்சம் அது மட்டுபடுவதாய் உணர,

“நீங்க சொல்றீங்க.. ஆனா.. வீட்ல என்னை என்ன நினைப்பாங்க???” என்றாள் அன்பரசி பேசிய வார்த்தைகளை எல்லாம் மனதில் வைத்து..

ஆனால் அசோக்கிற்கோ பொறுமை கரைந்து கொண்டு இருந்தது.. என்ன சொன்னாலும் அவர் என்ன நியிப்பர் இவர் என்ன நினைப்பார் என்று பார்த்துகொண்டு இருந்தால் நம் வாழ்வை நாம் எப்போது வாழ்வது??

உண்மை தான் நிஜம் தான் வீட்டில் இருப்பவர்களின் உணர்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்திட வேண்டும் தான்.. ஆனாலும் அதெல்லாம் சரியான விசயங்களுக்கு.. இதுபோன்ற விசயங்களில் ஒருவரின் பேச்சிற்கு.. அதுவும் புரியாமல் பேசிக்கொண்டு இருக்கும் பேச்சிற்கு எல்லாம் நான் மதிப்பு கொடுத்திட வேண்டிய அவசியமில்லை..

இவர்களின் பேச்சு இப்படியே இருக்க, அங்கே கோவிலுக்கு சென்ற புகழேந்தியும் பொன்னியும் இவர்களைப் பற்றிதான் பேசிக்கொண்டு இருந்தனர்..

“நீ இந்த ஆங்கிள்ல திங் பண்ணுவேன்னு நான் நினைக்கவேயில்லை கண்ணு…” என்று புகழ் கூறிட,

“எனக்கு தோணிச்சு அவ்வளோதான்.. அவளுக்குப் பிடிச்சதுன்னா சரின்னு சொல்ல வேண்டியதுதானே.. அதைவிட்டு நம்மளை ஏன் கை காட்டனும்.. இது தப்பில்லையா??” என்றாள்..

“ம்ம் அமுதாக்கு மனசுல ஒரு பயம்..”

“தெரியும்.. ஆனா அந்த பயத்தை மனசுல வச்சுட்டே எத்தனை நாளைக்கு அவ வாழ முடியும்.. என்னைக்கா இருந்தாலும் இந்த சூழ்நிலைக்கு அவ வந்து தான் ஆகணும்.. இப்போவாது கூட நம்ம இருக்கோம். அதுனால விடுங்க.. யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்..

ஆனா இப்பவும் சொல்றேன், எனக்கு உங்கமேல அசோக் மேல எல்லாம் வருத்தம் தான்.. நீங்க உங்களோட காரணத்தை சொல்லிட்டீங்க.. அசோக்கும் இதுக்குதான் அமைதியா இருந்தான்னு சொல்லிட்டான்.. இருந்தாலும் எனக்கு மாஞ்சு ஏத்துக்கலை..”

“சரி.. சொல்லு.. நான் என்ன செய்யணும்.. என்ன பண்ணா உனக்கு மனசு சரியாகும்..” என்றான் புகழேந்தியும்..

அவனும்தான் என்ன செய்ய முடியும்.. அமுதாவின் நிலை ஒருபுறம்.. பொன்னியின் நிலை ஒருபுறம்.. இருவருக்குமே எவ்வித பாதகமும் நேரக்கூடாது.. ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து எல்லாம் செய்கையில் அவனுக்குமே மனதில் ஒருவித சோர்வு வந்துவிட்டது நிஜம்தான்..

‘அப்பப்பா வீட்ல எல்லாரையும் பேலன்ஸ் பண்ணி கொண்டு போறதுக்குள்ள போதும் போதும் ஆயிடுதுடா சாமி…’ என்று நினைத்தவனுக்கு,

தன்னுடைய நிலை போல அசோக்கிற்கு இப்போதே ஒருநிலை வந்ததில் மனதின் ஓரத்தில் ஒரு அல்ப சந்தோசம்..

“நீங்க ஒன்னும் பண்ண வேணாம்.. சில விஷயங்களுக்கு எல்லாம் நம்ம பதில் செயல் செய்ய முடியாது.. காலப்போக்குல தான் எல்லாம் சரியாகணும்.. அதுனால இனிமே என்கிட்டே உன்முடிவு என்னன்னு கேட்டு இம்சை பண்ணாம இருந்தா போதும்.. நடக்கிறது நல்லபடியா நடந்தா சந்தோசம்…” என்று பொன்னி சொல்லும்போதே, மகராசி அழைத்தார் புகழேந்திக்கு..

“அம்மாதான்…” என்றுசொல்லிக்கொண்டே அழைப்பினை ஏற்றவன் “ம்மா…” என்று சொல்ல,

“டேய் கண்ணு.. எப்படியிருக்க???” என்றார் சந்தோசமாய்..

“ம்மா இதெல்லாம் ஓவரா இல்லையம்மா நேத்து நைட்டு தானேம்மா பேசுன.. இப்போ எப்படி இருக்கவாம்..” என்று அவன் சொல்வதை கேட்டு பொன்னிக்கு இதழின் ஓரத்தில் ஒரு சிரிப்பு பிறக்க,

அதனையும் பார்த்தான் ‘அப்பா சிரிக்கிறா…’ என்று எண்ணிக்கொண்டே ஒரு சிறு நிம்மதி அடைந்தான்..

“போடா.. ஏதாவது சொல்லிக்கிட்டே..” என்று மகனை பதிலுக்கு பேசியவர் “சரி பொன்னி எப்படியிருக்கா?? எங்கயாவது வெளிய கூட்டிட்டு போறியா?? பாவம் வேலைக்கும் போயிட்டு வர்றா.. இந்தமாதிரி நேரத்துல மனசு சந்தோசமா இருக்கணும்…” என்று மருமகளை கேட்க,

“வேலைக்கு நானா போகச் சொன்னேன்.. அதெல்லாம் கூட்டிட்டு போறோம் வெளியா.. இப்போகூட கோவில்லதான் தாயே இருக்கோம்..” என்றான்..

பொன்னிக்கு இவன் பதிலில் வைத்தே மகராசி என்ன சொல்லியிருப்பார் என்பது புரிய, இன்னமும் அவள் புன்னகை நீள, ‘நான் பேசுகிறேன்..’ என்பதுபோல் கையை நீட்டினாள் போனை வாங்க..

“ம்மா இரு.. பொன்னி பேசணுமாம்..” என்றுசொல்லி பொன்னியிடம் கொடுக்க, “அத்தை எப்படி இருக்கீங்க???” என்றாள் இவளும் வாங்கி..

“நல்லாருக்கோம் கண்ணு.. கோவிலுக்கு வந்தீங்களா???”

“ம்மா ஆமா அத்தை.. வார வாரம் வர்றோம்…”

“நல்லது கண்ணு.. அது.. ஒரு முக்கியமான விஷயம்.. அதான் அவரு புகழ் கிட்ட பேசணும்னு சொன்னாரு.. சரி யாருகிட்ட சொன்னா என்ன?? இரு உங்க மாமாக்கிட்ட கொடுக்கிறேன்..” என்று மகராசி சொல்ல,

“இல்லத்தை இதோ அவர்க்கிட்டயே கொடுக்கிறேன்..” என்று பொன்னி போனை புகழிடம் கொடுத்துவிட “என்னம்மா???” என்றான் இவனும்..

அதற்குள் மன்னவன் கரங்களில் அலைபேசி வந்திருக்க “புகழு எல்லாரும் சௌக்கியமா ப்பா??” என்றார் அவரும்..

“நல்லருக்கோம் ப்பா..அங்க எல்லாம் என்ன பண்றீங்க?? எப்படி இருக்கீங்க???”

“எல்லாம் நல்லாருக்கோம் புகழு.. அப்புறம் ஒரு நல்ல விஷயம் பேசலாம்னு தான் போன் போட சொன்னேன்.. பாரு நீயும் கோவில்ல இருக்க.. இதுவே நல்ல சகுனம்தான்..” என்று பீடிகை போட்டார் மன்னவன்..

அவர் எதற்காக இப்படி பேசுகிறார் என்பது புரியாமல், பொன்னியை ஒரு பார்வை பார்த்தவன் “ப்பா என்ன விஷயம்?? எதுன்னாலும் தெளிவா சொன்னாதானே புரியும்..” என்றிட,

“அதுடா எல்லாம் நம்ம அமுதா கல்யாண விசயம்தான்..” என்றதும், இவனுக்கு பக்கென்று ஆனது..

ஒருவேளை அங்கே வீட்டில் அமுதா சரியென்று சொல்லி, மங்கை ஊருக்கே போன் போட்டு பேசிவிட்டரோ என்றுகூட தோன்றிட, ‘ச்சே ச்சே இருக்காது அப்படின்னா இங்கதானே முதல்ல போன் வரும்..’ என்று தன் மனதை சமன் செய்துகொண்டவன்,

“என்னப்பா ??? என்ன சொன்னீங்க??!!” என்றான் சரியாய் அவர் பேசியது கேட்காதவனாய்..

“அதான் புகழு.. அமுதா கல்யாண விசயமா பேசலாம்னு கூப்பிட்டேன்.. ஒரு நல்ல வரன் வந்திருக்கு.. ஜாதகம் எல்லாம் பார்த்தோம் நல்லா பொருந்தி போகுது.. மாப்பிள்ள வீடு கூட அங்க மெட்ராஸ்ல தான் இருக்கு…” என்று அவர் பேசிக்கொண்டே போக, புகழேந்திக்கு முகம் அப்படியே கருத்துப் போனது..

பதிலே எதுவும் சொல்லாது, பொன்னியின் முகத்தினையே பார்த்துகொண்டு இருந்தான். அவளும் என்னவோ என்று அவனின் முகத்தினை பார்க்க,

“புகழு.. லைன்ல இருக்கியா??? புகழு…” என்று மன்னவன் கேட்கவும் தான்,

“ஆ.. அப்பா சொல்லுங்க.. கேட்டுட்டுத்தான் இருக்கேன்..” என்றவன் “அமுதா படிச்சிட்டு இருக்காளே ப்பா…” என்றான் மெதுவாய்..

“ஆமாய்யா… மாப்ள வீட்ல பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறமும் படிக்கட்டும்னு தரகர் கிட்ட சொன்னாங்களாம்.. எங்க எல்லாருக்குமே ரொம்ப திருப்தி.. ஆனா உன்னையும் மருமகளையும் கேட்டுட்டுதானே முடிவு சொல்லணும்..” என்றதுமே

“ப்பா அமுதாவையும் கேட்கணும்..” என்றான் வேகமாய்..

“அட அமுதாக்கிட்ட கேட்காமையா?? எல்லாருக்கும் சரின்னா அமுதாக்கிட்டயும் ஒருவார்த்தை கேட்டுட்டு நம்ம பேசிக்கலாம்.. நீங்க எல்லாம் அங்க இருக்கீங்க.. நீயும் பொன்னியும் அவளுக்கு எடுத்து சொல்ல மாட்டீங்களா  என்ன??” என்று அவரும் சொல்ல, புகழேந்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..

அங்கே வீட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை, ஊரில் இவர்கள் இப்படி திடீரென்று அமுதா திருமணம் பற்றி பேச்செடுப்பர் என்றும் யோசிக்கவில்லை.. இதற்கெல்லாம் நடுவே இப்போது மங்கையையும் இதில் இழுத்துவிட்டாகி விட்டது..

என்னடா செய்வது  என்ற சிந்தனையோடு “என்னப்பா இப்படி திடீர்னு??” என்றான்..

“திடீர்னு எல்லாம் இல்லடா.. படிப்பு ஒருப்பக்கம் இருக்கட்டும் நம்ம பாக்குறது ஒருப்பக்கம் இருக்கட்டும்னு உங்கம்மா சொல்லிக்கிட்டே இருந்தா.. இந்த வரனும் தோதா வந்தது.. ஜோசியர் வேற இன்னும் நாலு மாசத்துல அமுதாக்கு கல்யாணம் செய்யணும் இல்லைன்னா ரொம்ப தாமதமாகும்னு சொல்லிட்டரு.. சரி எதுக்கு நம்மளும் சும்மாவே இருக்கணும்னு தான் இப்போ உனக்கிட்ட பேசுறேன்…” என்றவர்,

“இளங்கோ உனக்கு மாப்பிள்ளையோட போட்டோ, அப்புறம் மத்த விவரம் எல்லாம் அனுப்பிருக்கானாம்.. பார்த்துட்டு என்ன ஏதுன்னு நீயும் ஒருவார்த்தை அங்க விசாரிச்சிட்டு அமுதாக்கிட்டயும் பேசிட்டு நல்ல முடிவா சொல்லுங்க என்ன??” என்றார்..

“ம்ம்ம்ம் சரிப்பா…” என்பதை தவிர அவனால் அந்த நேரத்தில் எதுவும் சொல்ல முடியவில்லை..

‘என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்களா யாரும்..’ என்று கத்த வேண்டும்போல் தான் தோன்றியது அவனுக்கு.. ஆனால் அது முடியுமா?? குடும்பஸ்தானாய் இருப்பது என்றால் சும்மாவா??

‘கடவுளே நீதான் ஒருவழி காட்டனும்…’ என்று இறைவனை துணைக்கு புகழேந்தி அழைக்க,

“புகழு பொன்னிக்கிட்டயும் சொல்லிடு..”  என்றார் மன்னவன்..

“ம்ம் சரிப்பா.. சொல்லிடுறேன்…” என்றவன் அமைதியாகவே இருக்க, “சரிடா நீ பேசிட்டு சொல்லு.. நான் வைக்கிறேன்.. போட்டோ பார்த்துட்டு எப்படின்னு சொல்லு..” என்றவர் வைத்துவிட, புகழேந்தியோ காதில் இருந்து அலைபேசியை எடுக்காது அப்படியே இருந்தான்..

அவனின் நிலை கண்டு, “என்னங்க என்னாச்சு??” என்று பொன்னி உலுக்க,

“ஆ…!!” என்று அவளைப் பார்த்தவன்  “ம்ம்ச்…” என்று எரிச்சல் பட்டான்..

“என்னங்க??!! என்னாச்சு?? மாமா என்ன சொன்னாரு…” என்று பொன்னி கேட்டிட,

“என்ன சொன்னாரா??? ஹ்ம்ம்..” என்று ஒரு பெருமூச்சு விட்டவன் அவர் சொன்னதை சொல்ல, அனைத்தையும் கேட்டவளுக்கும் இப்போது என்ன சொல்வது என்று தெரியவில்லை..

“என்.. என்ன?? இப்படி சொல்றாங்க???!!!” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை..

“எனக்கும் ஒன்னும் புரியலை.. அங்க வீட்ல என்ன பண்றாங்கன்னும் தெரியலை.. இனி எதுன்னாலும் அசோக் அமுதா கைல தான் இருக்கு..”

“ம்ம்ம்… அமுதா சரின்னு சொல்லட்டும் முதல்ல..” என்றவள் “வீட்டுக்கு போலம்ங்க..” என,

“ம்ம் போய்த்தானே ஆகணும்…” என்று அவனும் சொல்ல, இருவருமே மீண்டும் ஒருமுறை இறைவனை நன்கு வேண்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்..

உள்ளே ஹாலுக்கு வந்தாலோ அசோக் ஒருபுறம், அமுதா ஒருபுறம், மங்கை ஒருபுறம் அமர்ந்திருக்க, புகழேந்தியும் பொன்னியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துகொண்டவர்கள் “என்னாச்சு??!!!” என்று ஒரேதாய் கேட்க, அவர்களின் சத்தம் கேட்டுதான் அனைவருமே சுய நினைவிற்கு வந்தனர்.

புகழேந்தி அசோக்கையும் அமுதாவையும் பார்க்க, பொன்னியோ “என்னம்மா என்னாச்சு??!!” என்றாள்..

மறந்தும் கூட மற்றவர்களை அவள் பார்க்கவில்லை, இது புகழேந்தி கவனித்தான் தான்.. ஆனாலும் அவள் சொன்னதுபோல காலப்போக்கில் தான் சில விஷயங்கள் சரியாக வேண்டும்.. அதில் இதுவும் ஒன்று என்று விட்டுவிட்டான்.. எதற்காகவும் அவன் பொன்னியை கட்டாயப் படுத்த விரும்பவில்லை..

மங்கையோ அனைவரையும் ஒருபார்வை பார்த்தவர் “ஒன்னும் ஆகலை.. ஒன்னுமே  ஆகலை.. சரி இவங்க பேசட்டும்னு விட்டா அமுதா அழுதது மட்டும் தான் மிச்சம்..” என்றார் கையை விரித்து..

பொன்னிக்கு உள்ளே அமுதா மீது கோபம் வந்தாலும், எதையும் வெளிக்காட்டாது, புகழேந்தியை பார்த்தவள், “சரிங்க.. நீங்க மாமா சொன்னதை சொல்லிடுங்க.. ஒரு அண்ணனா நீங்க உங்களோட கடமையை செய்யணும்ல…” என,

“அப்.. அப்பா என்ன சொன்னாங்க??” என்பதுபோல் பார்த்தாள் அமுதா..

“உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாம்.. அதைதான் சொல்றார்..” என்றவன் இளங்கோ அவனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை எடுத்துக் காட்ட, அசோக் நொந்து போனான்..

மங்கையோ “என்ன பொன்னி இதெல்லாம்??!!” என்று கேட்க,

“எங்களுக்கு என்னம்மா தெரியும்.. கோவில்ல இருக்கப்போ போன் வந்தது.. விபரம் சொன்னாங்க.. இவரையும் இங்க விசாரிச்சிட்டு அமுதாக்கிட்ட ஒருவார்த்தை பேசிட்டு நல்ல முடிவா சொல்ல சொன்னாங்க..” என்றாள் பட்டும் படாமல் பேசுவதுபோல்..

“என்ன புகழ் இதெல்லாம்…?!!!” என்று அசோக் கேட்க,

“நான் என்ன செய்யட்டும்??!!!” என்றான் அவனும்..

அனைவருமே இப்போது அமுதா முகம் பார்க்க, அவளோ “நீ நீ அப்பாக்கிட்ட எதுவுமே சொல்லலையாண்ணா??” என்றாள் திக்கி திணறி..

“என்ன சொல்ல சொல்ற அமுதா?? நீயே உன் வாழ்க்கைக்காக வாய் திறக்கலங்கிறப்போ… நான் என்ன பேசட்டும்… சொல்லி காட்டுறேன்னு நினைக்காத அமுதா.. இனியும் நீ இப்படி இருக்கிறது உனக்குத்தான் கஷ்டம்..” என, அடுத்து அமுதா பாவமாய் அசோக்கைப் பார்க்க,

“நீ பேசாம உங்க வீட்ல பார்க்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ அமுதா.. உனக்கு எல்லாரும் உன்னை தப்பா நினைச்சிடுவாங்கன்னு பயம்.. இந்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிட்டா யாரும் அப்படி நினைக்க மாட்டாங்க தானே.. நீ பண்ணிக்கோ…” என்றான் கசந்து போன குரலில்..