Advertisement

தோற்றம் – 34

“என்னை மாறிட்ட மாறிட்டன்னு சொன்னீங்க.. ஆனா இப்போ நீங்கதான் மாறிட்டீங்க…?” என்று புகழேந்தியின் முகத்தினை கேள்வியாய் பார்த்து கேட்டவளின் முகத்தில் லேசானதொரு ஏக்கமும் எட்டிப் பார்த்தது..

“அதெல்லாம் இல்லையே..” என்றபடி தன்மீது பொன்னியை சாய்த்துக்கொண்டு, மெதுவாய் அவள் தலை கோதிவிட,

“ம்ம்ம் இப்படி பண்ணா நான் தூங்கிடுவேன்னு டெய்லி நான் பேசறப்போ இப்படியே பண்ணி தூங்க வச்சிடுறீங்க… ஆனா இன்னிக்கு நானும் தூங்க மாட்டேன் உங்களையும் தூங்க விடமாட்டேன்…” என்று அவனது கரங்களை தட்டிவிட்டு பொன்னி எழுந்து அமர,

‘ஆகா மாட்டிக்கிட்டோமோ…’ என்றுதான் அவளைப் பார்த்து சிரித்தான் புகழேந்தி..

“என்ன சிரிப்பு… நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.. நான் கன்சீவ் ஆனதுல இருந்து நீங்க ரொம்ப டென்சனா இருக்கீங்க… எல்லார்கிட்டயும் சண்டை போடுறீங்க.. கேட்டா ஒண்ணுமில்லை சொல்றீங்க.. என்கிட்ட சரியா கூட பேசறது இல்லை…

வேலைல டென்சனா அதுவும் இல்லை.. ஆனா ஏன் நீங்க இப்படி ஆகிட்டீங்க???” என்றவளின் முகத்திலும் குரலிலும் தெள்ளத் தெளிவாய் அவளின் வருத்தங்கள் எட்டிப் பார்க்க,.

‘எனக்கு மட்டும் ஆசையா… எல்லாம் உங்க அண்ணன் பண்ண வேலை…’ என்று வாய்வரைக்கும் வந்துவிட்டது புகழேந்திக்கு.. ஆனாலும் சொல்ல முடியுமா… முகத்தினை திருப்பியவன் பார்வையை மட்டும் அவள்புறம் வைத்திருக்க,

“என்ன அப்படி ஒரு பார்வை..” என்றவள், “இப்போ நீங்கதான் மாறிட்டீங்க…” என்றாள் திரும்ப..

“ம்ம்ச் அதெல்லாம் இல்ல கண்ணு.. தேவையில்லாம அது இதுன்னு நினைச்சு நீயா டென்சன் ஆகாத…”

“அது இதுன்னு எதையும் நினைக்கல.. உங்களைதான் நினைக்கிறேன்.. எனக்கு நினைக்க வேற எதுவும்கூட இல்லை..” என்றவள், மெதுவாய் அவனின் கரம் பற்றி, 

“நான்.. அது.. நமக்கு இப்போ குழந்தை வேணாம்னு நினைச்சீங்களா?? அப்படி எதுவும்…” என்று பொன்னி சொல்லி முடிக்குமுன்னே,

அவள் கரத்தினூடே இருந்த அவனின் கரத்தை வேகமாய் உருவியவன் “ஏய் என்ன டி பேசுற நீ…??” என்று அவளின் தோள்களை இறுக பற்றி உலுக்கிவிட்டான்..

பொன்னி ஒருநொடி பயந்து தான் போய் பார்த்தாள்.. என்ன செய்தான் இவன் என்று.. புகழேந்தி அத்தனை இருக்கமாய் பற்றியிருக்க, அந்த இடமே கந்திப் போனதாய் வலி கொடுத்தது.. எப்போதுமே புகழேந்தி இப்படி அவளிடம் நடந்துகொண்டது இல்லை..

இப்போதும் அவள் சாதாரணமாய் பேசிக்கொண்டு இருக்க, புகழது இந்த கோபம் பொன்னிக்கு அதிர்வாய் தான் இருந்தது.. கண்கள் கூட கலங்கிவிட அவனை ஏறிட்டு பார்த்தவளுக்கு இன்னமும் புகழேந்தியின் கோப முகமே கண்களுக்கு தெரிந்தது..

“என்ன பேச்சிது கண்ணு.. நான்.. நான் அப்படி நினைப்பேனா?? எப்படி டி உன்னால இப்படி யோசிக்க முடிஞ்சது… அப்போ இவ்வளோதான் நீ என்னை உணர்ந்ததா???!!!!”

கத்தியேவிட்டான்… என்ன முயன்றும் அவனுக்கும் தன் உணர்வுகளை அடக்கும் வழி தெரியவில்லை.. இத்தனை மாதங்களாய் மனதினுள்ளே போட்டு போட்டு அமிழ்த்தி.. குழம்பி.. ஒரு முடிவுக்கு வர முடியாமல்.. வெளியே சொல்லவும் முடியாது.. சொல்லாமல் இருக்கவும் முடியாது இருந்த அவனின் தவிப்புகள் எல்லாம் இப்போ பொன்னி கேட்ட ஒருகேள்வியில் பொசுக்கென்று வெளிவந்துவிட்டது.. 

பொன்னிக்கு ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்ற எண்ணம்.. மற்றபடி அவனை தவறாய் எல்லாம் அவள் நினைத்திட வில்லை.. ஏனெனில் அன்றிலிருந்து தானே புகழேந்தியிடம் இந்த மாற்றங்கள் எல்லாம் வந்து ஒட்டிக்கொண்டது… அதனாலே தான் அப்படிக் கேட்டாள்..

ஆனால் அவனோ கொந்தளிதுவிட்டான்…

“எப்படி உனக்கு மனசு வந்தது.. அதுவும் இப்படி கேட்க… ச்சே…” என்று எழுந்தவன், “பின்னாடி வந்திடாத…” என்று விரல்நீட்டி சொல்லிவிட்டு வேகமாய் மாடி ஏறி விட்டான்..

பொன்னி அப்படியே தான் பார்த்துகொண்டு இருந்தாள் போகும் அவனை.. இத்தனை நாளில் இப்படியொரு புகழேந்தியை அவள் கண்டதில்லை.. கோவம் வரும்.. சண்டை வரும்.. அதெல்லாம் சரி.. ஆனால் இப்படி ஒரு முக பாவத்தில் அவனைக் கண்டதில்லை.. அவளொன்றும் மனதினில் எதையும் வைத்து கேட்கவில்லை..

மசக்கை வேறு.. உடலில் பலவித மாற்றங்கள்.. அது உள்ளத்திலும் எதிரொலித்தது.. இத்தனை நாளாய் நன்றாய் இருந்தவன் இப்போது திடீரென்று எல்லாரிடமும் முறுக்கிக்கொண்டு அலைவது கண்டு அவளுக்கு பெரும் கேள்வி என்னாச்சு என்று..

இப்படியேதேனும் மனதினில் இருக்குமா??? என்ற எண்ணத்தில் தான் அப்படியொரு கேள்வி கேட்டாள், ஆனால் அதுவும் பிசகாகிப் போனது….

‘பின்னாடி வந்திடாத…’ என்றுவிட்டு போனான்..

ஆனாலும் அவளின் மனம் அவன் பின்னே போவது என்ன?? அவனோடு சேர்ந்து தானே எப்போதும் செல்கிறது.. கண்களை துடைத்தவள், மெதுவாய் எழுந்து அவனைத் தேடி சென்றாள்..

மாடிக்கு சென்றவனுக்கோ அவனது உணர்வுகள் அடங்கவேயில்லை.. இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தான்.. அசோக் மீது அப்படியொரு கோபம் வந்தது..

‘அவனுக்கு பிடிச்சா நேரா போய் வீட்ல பேசவேண்டியது தானே… என்கிட்ட சொல்லி.. நான் யார்கிட்டயும் சொல்ல முடியாம தவிச்சு.. இதுக்கு நடுவில அமுதாவும்.. பொன்னியும்..’ என்று தோன்றும்போதே அவனின் விரல்கள் அசோக்கின் எண்ணை அழுத்திவிட்டது அவனது அலைபேசியில்..

கொஞ்சமும் புகழேந்தி யோசிக்கவேயில்லை.. அசோக் எடுத்ததுமே,

“அசோக்.. நீங்க என்ன செய்வீங்க எனக்கு தெரியாது.. என்னால இதுக்குமேல சமாளிக்க முடியாது.. ஒண்ணு அத்தைக்கிட்ட பேசி நீங்களே முறைப்படி அமுதாவை வீட்ல பொண்ணு கேளுங்க… இல்லையா வந்து பொன்னிக்கிட்ட நீங்களே பேசிக்கோங்க..” என்றுவிட்டான்..

“ஏன் என்னாச்சு??? எதுவும் பிரச்சனையா???” என்று அசோக் பதறி கேட்கும்போதே,

“இதுக்குமேல நீங்க டிலே பண்ணாதான் பிரச்சனை ஆகும்..” என்றான் புகழேந்தி அழுத்தம் திருத்தமாய்..

பிரச்சனை ஆகும் என்றால், என்ன அர்த்தம்.. தானாக ஆகுமா இல்லை இவனே செய்வான்.. அதுவும் இப்போது பொன்னி அவனிடம் கேட்ட கேள்விக்கு புகழேந்திக்கு பிரச்சனை செய்யும் எண்ணம் தான் வந்தது..

‘என்ன கேள்வி கேட்டுட்டா… குழந்தை பிறக்குறது பிடிக்காம போகுமா எனக்கு.. ச்சே.. எப்படியான ஒரு கேள்வி…’ என்று மனதில் குமைய,

“ஹலோ.. ஹலோ புகழ் இருக்கீங்களா????” என்று அசோக் கேட்க,

“ம்ம் சொல்லுங்க…” என்றான் இறுகிய குரலில்..

இத்தனை நாட்களில் கூட புகழேந்தி இப்படி நடந்துகொள்ளவில்லை என்பதால் அசோக்கிற்கும் சங்கடமாய் போக,

“என்னாச்சு புகழ் பொன்னி ஏதாவது கேட்டாளா???”

“பொன்னி என்கிட்டே பேசறதுக்கும் இதுக்கும் எதுவுமில்லைன்னு சொல்லிடவே முடியாது.. என்னால தான் இதெல்லாம் மனசுல வச்சிட்டு அவக்கிட்ட நார்மலா இருக்க முடியலை… அது அப்பட்டமா பொன்னிக்கு தெரியுது. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..” என்று புகழ் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பொன்னி அங்கே வந்துவிட்டாள்..

யாரோடோ கோபமாய் போனில் பேசுகிறான் என்பது மட்டும் அவளுக்கு தெரிய, அது யாரிடம் என்று தெரியவில்லை..

‘என்னதான் ஆச்சோ இவருக்கு.. எப்போ பார் அப்படியென்ன கோபம்…’ என்று நினைத்துக்கொண்டே

“இங்கதான் இருக்கீங்களா.. கீழ புல்லா தேடிட்டு வர்றேன்…” என்றவளின் குரலில் வேகமாய் திரும்பியவன், ‘கேட்டிருப்பாளோ???!!!’ என்று அதிர்ந்து பார்க்க,

“இப்போ யாரை திட்றீங்க…” என்றபடி அவனின் அருகே நிற்க,

“இல்.. இல்ல…” என்றவன் “நான் நாளைக்கு பேசுறேன்…” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க, அவனது முக மாற்றங்களை கண்டவள்,

“நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா..?? அப்பட்டமா சேஞ்சஸ் தெரியுது.. என்னன்னு கேட்டாலும் சொல்றது இல்லை.. நான்.. நான் ஏதாவது தப்பா நடந்துக்கிட்டேனா??” என்று ஒருவேளை இப்படிகூட இருக்குமோ என்று பொன்னி கேட்க,

“ச்சே ச்சே என்ன கண்ணு இது.. அது.. அது எல்லாம் எதுவுமே இல்லை… நீ போய் தூங்கு.. நான் வந்திடுறேன்..” என்று அவளை அனுப்ப முயன்றான்..

“நான் அப்போ கேட்ட கேள்வி தப்புதான்.. ஆனா என்னால கேட்காம இருக்க முடியலை… எதுன்னாலும் பரவாயில்லை.. என்கிட்ட ஷேர் பண்ணிடுங்க.. இப்படி இருக்காதீங்க.. கஷ்டமா இருக்கு…” என்றவள், மௌனமாய் திரும்பி நடக்க, அப்படியே தலையில் கை வைத்துக்கொண்டான் புகழேந்தி..

அசோக் மட்டும் இப்போது கண் முன்னே இருந்திருந்தால் நடப்பதே வேறு.. ஆனால் மறுபுறம் அமுதாவின் கண்ணீர் நிரம்பிய முகமும் வந்துபோனது.. அசோக்கோடு அவளுக்கு ஒரு வாழ்வு அமைந்துவிட்டால் அது அமுதாவிற்கு இறுதிவரைக்கும் பாதுக்கப்பாய் இருக்கும் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது..

புகழேந்தி இத்தனை தூரம் பொறுத்து போவதே அதற்குதான்.. மற்றொன்று பொன்னியின் இப்போதைய நிலை.. அவளுக்கு ஏதாவது ஒன்றேன்றால் அது அவனால் தாங்க முடியுமா என்ன????

இதற்கு கூடிய சீக்கிரம் முடிவு கட்டியே ஆகவேண்டும் எண்ணிக்கொள்ள, அங்கே அசோக்கோ இன்னும் அமைதியாய் காலம் தாழ்த்துவது சரியல்ல என்று யோசித்துக்கொண்டு இருந்தான்..

அமுதா திட்டவட்டமாய் கூறிவிட்டாள், ‘வீட்ல சம்மதம் வாங்கிட்டு கல்யாணம்னா மட்டும் தான் என்கிட்டே நீங்க பேசணும்.. பார்க்க வரணும்.. அதுவரைக்கும் நீங்க வேற எதுவும் எதிர்பார்க்காதீங்க…’ என்று..

அவளது சூழல் புரிந்து அதற்கும் சரியென்று தான் அசோக் இருந்தான்.. அவனுக்கு இப்போதையே பயமே பொன்னி தான்.. புகழேந்திக்கு இருக்கும் அதே பயம்.. இதெல்லாம் தெரிந்து டென்சனில் அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால்??  இந்த கேள்வியே அவனை அனைத்திற்கும் தடுத்துக்கொண்டு இருந்தது..

ஆனாலும் காலம் செல்ல செல்ல, யார்தான் இன்னமும் பொறுமையாய் போவர், மங்கையை அழைத்து விஷயத்தை சொல்லி பொன்னியிடம் மெதுவாய் பேச சொல்ல வேண்டும் என்று நினைத்தவன், மறுநாளே பொன்னி வீட்டிற்கு செல்ல, புகழ் அப்போதுதான் ஆபிஸ் கிளம்பிக்கொண்டு இருக்க,

அசோக்கை பார்த்தவன் “வாங்க..” என்றதோடு கிளம்பிவிட்டான்..

எப்போதுமே அசோக்கை பார்த்து மகிழ்வாய் பேசுபவன், இன்று ஒரு வார்த்தையில் செல்வது கண்டு பொன்னியோ “அ.. அவருக்கு கொஞ்சம் வேலை டென்சன்…” என்று சமாளிக்க,

“நீ ஸ்கூல் போகலையா???” என்றான் அசோக்..

“இ.. இதோ.. அவர்க்கூட தான் போறேன் ண்ணா.. நீ.. உனக்கு ஆபிஸ் இல்லையா???”

“இருக்கு.. அம்மாவ பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்.. நீங்க கிளம்புங்க.. நான் பேசிட்டு கிளம்பிடுவேன்..” என,

“ஓ.. நைட் இங்க வந்திடுறியா.. உன்கூட உட்கார்ந்து பேசி ரொம்ப நாளாச்சு…” என்று பொன்னி கேட்க, புகழேந்தி வெளியே ஹார்ன் அடித்துக்கொண்டு இருந்தான்..

“வர்றேன் பொன்னி.. நீ கிளம்பு.. லேட்டாச்சு போல..” என, அசோக்கை திரும்பி திரும்பி பார்த்துகொண்டு சென்றாள் பொன்னி..

என்னவோ அவளுக்கு, இன்றைய தினம் வீட்டில் அம்மா அண்ணனோடு நேரம் செல்விட வேண்டும் என்று தோன்றியது.. அதை அப்படியே புகழேந்தியிடம் சொல்ல, அசோக்கின் வருகைக்கான காரணத்தை ஓரளவு புரிந்திருந்தவன்,

“கொஞ்ச நேரத்துல அசோக் கிளம்பிடுவாப்ள.. அப்புறம் அத்தையும் நீயும்.. போர் அடிக்குதுன்னு எனக்கு போன் போடுவ.. ஒழுங்கா கார்ல ஏறு..” என்று செல்லமாய் மிரட்டுவது போல் சொல்ல,

“ஆமாமா.. அப்படியே நீங்களும் ஆபிஸ்ல இருக்கப்போ பேசிட்டாலும்…” என்று சிரித்துக்கொண்டே தான் அவளும் ஏறினாள்.. பொன்னிக்கு என்ன நிலையோ, ஆனால் புகழேந்திக்கு திக் திக்கென்றது..

அதைவிட அசோக்கிற்கு..

மங்கை அவனை கண்டதும் “என்னடா இப்போ வந்திருக்க… ஆபிஸ் இல்லையா…” என்று கேட்க,

“இருக்கும்மா.. லேட்டா போனா கூட போதும்…” என்றவன், “உன்கிட்ட பேசணும்மா…” என்றான் முகத்தை ஒருமாதிரி வைத்து..

“பேசு.. அதுக்கு ஏன் முகத்தை இப்படி வைக்கிற..” என்றவர், “வர வர எல்லாருக்கும் என்னதான் ஆகுமோ..” என்று முனங்க,

“ம்மா….” என்று அழைத்தவன், எதுவும் பேசாது அவரின் முகத்தை காண,

“என்ன அசோக்.. சொல்ல வந்ததை சொல்லு.. அம்மா அம்மான்னு கூப்பிட்டிட்டு சும்மா இருந்தா என்ன அர்த்தம்.. பொன்னியும் அப்பப்போ இப்படிதான் பண்றா.. இப்போ நீயும்.. எனக்கும் வயசு ஆகுதுடா..” என்று பொரிந்துவிட்டார் அவரும்..

“ம்மா ப்ளீஸ் ப்ளீஸ்.. டென்சன் ஆகாத… அது.. வந்து.. என் கல்யாண விசயமா தான் பேச வந்திருக்கேன்..” என்றதுமே மங்கைக்கு அத்தனை நேரமிருந்த பதற்றம் எல்லாம் போய்,

“டேய்.. நிஜமாவா சொல்ற.. அப்பாடி….. நீ இதை பத்தி பேசமாட்டியான்னு நானும் பொன்னியும் பேசாத நாள் இல்லை தெரியுமா… சொல்லுடா.. பொண்ணு பார்க்கவா திரும்ப?? இல்லை உனக்கு யாரையும் பிடிச்சிருக்கா.. எதுவா இருந்தாலும் சரிதான்..” என்று மங்கை பரபரக்க,

அசோக்கிற்கு கண்டிப்பாய் மங்கை சம்மதிப்பார் என்றே தோன்றியது.. ஆனால் பொன்னி???

‘கடவுளே.. எல்லாமே நல்லதா நடக்கணும்..’ என்று வேண்டிக்கொண்டே,

“அதும்மா.. அது வந்து.. நான்.. எனக்கு.. எனக்கு அமுதாவை பேசுறீங்களா???” என்று அசோக் சொல்லி முடிப்பதற்குள் தவித்துத்தான் போனான்..

“அசோக்…!!!” என்று அவனைப் பார்த்தவருக்கு இவன் நிஜமாய் தான் சொல்கிறானா? என்றுகூட சந்தேகமாய் இருக்க, நம்ப முடியாமல் தான் பார்த்தார்..

“ம்மா நிஜமாதான் சொல்றேன்… அமுதாவை எனக்கு பிடிச்சிருக்கு.. நான் பொண்ணு பார்க்கவேணாம் சொன்னதுக்கு கூட இதான் காரணம்..” என,

“ரொம்ப சந்தோசம்டா.. எனக்கு கூட அந்த பொண்ண பார்க்கும் போதெல்லாம் இது தோணிச்சு. அமுதாவை பேசுவோமான்னு.. ஆனா நீதான் பொண்ணே பார்க்கவேணாம் சொன்னியா.. இதை ஏன்டா முன்னாடியே சொல்லலை..” என்றார் சந்தோசமும் நிம்மதியுமாக..

“அதும்மா…!!!”

“ம்ம்ச் இன்னமும் என்னடா அதும்மா இதும்மான்னு.. சாயங்காலம் மாப்பிள்ளை வரட்டும்.. அவர்கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு பொன்னிக்கிட்டயும் சொல்லிட்டு அடுத்து அவங்க வீட்ல பேசுவோம்.. இல்லை இப்பவே பொன்னிக்கு சொல்றேன்..” என்று மங்கை வேகமாய் அடுத்தடுத்த படிகளுக்கு போக,

“ம்மா ம்மா.. பொறும்மா..” என்றவன்,

“பொன்னிக்கிட்ட நீதான் ம்மா பேசணும்.. ஆனா.. இப்படி இல்லை.. ரொம்ப பார்த்து பேசணும்..” என்றவன் முகத்தினை பார்த்தவர்,

“ஏன் டா ஏன் இப்படி சொல்ற???” என்றார் ஒன்றும் புரியாது..

“அதெல்லாம் அப்படித்தான் ம்மா.. ஆனா பொன்னிக்கிட்ட இது பேசறப்போ கொஞ்சம் பார்த்து தான் பேசணும்.. அவளுக்கு டென்சன் ஏத்திடாம..”

“லூசாடா நீ.. அவ எவ்வளோ சந்தோசப்படுவா…”

“ம்மா…!!!!” என்று பல்லைக் கடித்தவன், நடந்த அனைத்தையும் சொல்ல, ‘ஆ…’ என்று அதிர்ந்து தான் போனார்..

“என்ன அசோக் சொல்ற??? இவ ஒருவார்த்தை நம்மகிட்ட சொல்லலையேடா.. அவ்வளோ அழுத்தமா போச்சா பொன்னிக்கு….” என்றவருக்கு கொஞ்ச நேரம் வார்த்தையே வரவில்லை..

மங்கை மௌனமாய் இருக்க, “எனக்கு பொன்னி முகத்தை பார்க்கவே தைரியம் வரலைம்மா.. புகழும் அதுனாலதான் டென்சனாவே இருக்கார்.. அமுதா யார்க்கிட்டயும் எதுவும் பேச முடியாது.. நீதான்ம்மா ஏதாவது செய்யணும்..” என, அப்போதும் மங்கை அமைதியாகவே தான் இருந்தார்..

“ம்மா பதில் பேசும்மா…”

“என்னடா பேச சொல்ற… இல்ல என்ன பேச.. நம்ம மனசு கஷ்டப்படும்னு நடந்த எதையுமே சொல்லாத பொண்ணு.. எதுவுமே தெரியாம மனசுல அசை வளர்த்துட்டு, தெரிஞ்ச பின்னாடி என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கற நீ.. உங்க ரெண்டுபேருக்கும் நடுவில நான்.. இதுல மாப்பிள்ளை எப்படிதான் இத்தனை நாள் பொறுமையா போனாரோ….” என்ற மங்கைக்கும் இதனை எப்படி தன பெண்ணிடம் சொல்ல போகிறோம் என்றுதான் இருந்தது..

மௌனமாகவே நேரம் செல்ல, மங்கை என்ன நினைத்தாரோ “சாயங்காலம் நான் பேசுறேன்.. ஆனா நீயும் இருக்கணும்..” என்றுசொல்ல, சரியென்று தலையை ஆட்டிவிட்டு சென்றான் அசோக்..

புகழேந்திக்கும் அழைத்து அசோக் சொல்லிவிட, “ம்ம் என்னவோ எப்படி பேசுவீங்களோ தெரியாது.. ஆனா பொன்னிக்கு எதாதுன்னா… நான் என்ன செய்வேன் எனக்கே தெரியாது..” என்றதும்,

அசோக்கிற்கு ஒருமாதிரி ஆகிட “நான் செல்பிஷ் இல்லை புகழ்.. எனக்கு என் வாழ்க்கையை விட என் தங்கச்சி எப்பவும் முக்கியம்தான்..” என்றுவிட,

“அதெல்லாம் நீங்க என் தங்கச்சிக்கிட்ட உங்க விருப்பத்தை சொல்றதுக்கு முன்னாடி.. அவ மனசுல ஒரு நம்பிக்கை கொடுக்கிறதுக்கு முன்னாடி.. இப்போ ரெண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ணிதான் ஆகணும்.. அப்போதான் என்னோட கஷ்டம் புரியணும்..” என்றான் இவனும் விடாது..

“எனக்கு உங்க நிலைமையும் புரியுது.. ஆனா எனக்கு இதைவிட்டா வேற வழியில்ல..” என்ற அசோக்கின் நிலை  புகழேந்திக்கு புரியாமல் இல்லை..

திருமணமான அனைத்து ஆண்களுக்கும் ஒருமுறையாவது, உடன்பிறந்தவளா இல்லை கட்டிய மனைவியா என்ற நிலை வந்துதானே ஆகும். என்ன அசோக்கிற்கு அது திருமணத்திற்கு முன்னமே வந்துவிட்டது..

புகழேந்திக்கு ஒருமுறை ‘அப்பா ஆகப்போற சந்தோசத்தை கூட என்னை அனுப்பவிக்க விடலையேடா..  நல்லா அனுபவி…’ என்று நினைக்கக்கூட தோன்றியது..

என்ன நடக்கப் போகிறதோ என்று அனைவருமே நினைத்துகொண்டு இருக்க, மங்கை தன்மையாய் அனைத்தையும் எடுத்து சொல்ல, பொன்னி எல்லாவற்றையும் கேட்டவள், எதுவுமே பேசவில்லை.. தன்னை சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தாள் அவ்வளவே..

புகழ்… அசோக்.. இருவருமே அவளின் பார்வையை எதிர்கொள்ள தைரியமில்லாது தங்களின் பார்வையை திருப்ப,

 

“ஓ..!!!!” என்று மட்டும் மங்கைக்கு பதில் கொடுத்தவள், மேலும் சிறிது நேர அமைதிக்கு பிறகு,“என்ன செய்யணுமோ செஞ்சுக்கோங்க..” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்..

 

       

                                    

      

 

          

 

                    

    

 

 

Advertisement