Advertisement

தோற்றம் – 33

“ஆமா மதினி… வாந்தி எல்லாம் இல்லை.. ஆனா அப்பப்போ தலை மட்டும் கிர்ருன்னு சுத்துது…” என்றவளுக்கு,

மங்கை “இந்தா ஜூஸ் குடிச்சிட்டே பேசு…” என்றுவந்து ஜூஸ் கொடுக்க, அவரை பார்த்து புன்னகைத்தவள், ஜூஸை ஒரு மிடறு விழுங்கியபடி 

“இல்ல மதினி.. ஸ்கூல் என்ன.. கொஞ்ச நேரம்தானே அதுவும் குழந்தைங்களோட இருக்கிறது சந்தோசமா இருக்கு.. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே.. ஏழு  மாசமாவது ஆகட்டும் அதுக்கப்புறம் பாத்துக்கலாம்…” என்று அன்பரசியோடு பேசிக்கொண்டு இருந்தாள் பொன்னி..

மூன்று மாதங்கள் வேகமாய் உருண்டோடிவிட, பொன்னியை கவனிக்கவென்று மங்கை இங்கேயே இருந்துகொண்டார்..

புகழ் வீட்டினர் ஆள் மாற்றி ஆள் வந்து வந்து இங்கே தங்கி பார்த்துவிட்டு சென்றனர்..

என்னவோ மன்னவன் சொல்லிவிட்டார் “புகழும் ரொம்ப நாள் வெளியவே இருந்துட்டான்…. இப்பவும் நம்ம அப்படியே விட முடியாது.. மாறி மாறி போயி பார்த்துக்கணும்…” என்று..

பொன்னி உண்டாகியிருப்பது தெரியவுமே பரஞ்சோதி வந்தார், பூ, பலகாரம் அது இதென்று வாங்கிக்கொண்டு.. அதுவும் புகழ் வீட்டிற்கு சென்னைக்கே..

“என்ன இருந்தாலும் எங்க அண்ணன் வீட்டு வாரிசு இல்லையா…” என்று சொல்லிக்கொண்டே..

எப்போதும் போல் பொன்னி “வாங்க..” என்றதோடு சரி..

அதற்குமேல் எதுவும் பேசவில்லை.. பரஞ்சோதி வந்தநேரம் மகராசியும் நித்யாவும் இளங்கோவும் அங்கே இருக்க, பரஞ்சோதியின் பேச்சிற்கு எல்லாம் மகராசிதான் பதில் சொன்னார்..

“என்ன மகா… மருமகளை கவனிக்கிற சாக்குல, எங்க அண்ணனை கவனிக்காம இங்கயே இருந்துட்டா எப்படி…” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போக, 

புகழேந்தியோ “நீ ஊருக்கு கிளம்பு ம்மா…” என்றுவிட,

இளங்கோவோ “ஏன்டா நீ வர வர இப்படியாகிட்ட…” என்றான் தம்பியின் போக்கு புரியாமல்..     

நிஜம் தான்.. புகழேந்திக்கு இப்போதெல்லாம் மனதினில் ஒரு அழுத்தம் வந்து குடிகொண்டதாகவே இருந்தது.. என்னவொரு விசயத்தையும் பேசியே சரி செய்து விடுபவன், இன்றும் அசோக் அமுதாவால் எதுவுமே பேச முடியா நிலைக்கு தள்ளப்பட்டான் என்றுதான் சொல்லவேண்டும்..   

அன்று முதன்முதலில் அனைவரும் பொன்னியை காண வந்திருக்க, புகழேந்தி கண்டிப்பாய் சொல்லிவிட்டான் “யாராவது இங்க இருந்துதான் ஆகணும்..” என்று..

மகராசி மாறி மாறி ஊருக்கு போய் வருவதாக சொல்ல, “ஏன் அக்காக்கு, மதினிக்கு எல்லாம் கூட வச்சே பார்த்த இப்போ என்ன??” என்று அவன் முகத்தை தூக்க,

அன்பரசி சும்மா இராமல் “அப்போ பொன்னி எங்க கூட ஊருக்கு வரட்டும்.. நாங்க இத்தனை பேர் இருக்கோமே நல்லா பார்த்துப்போம்…” என்று சொல்லிட,

“நீ மாசமா இருக்கப்போ மாமா கூட தானே இருந்த..” என்றான் வல்லென்று..

‘அடடா.. இதென்ன.. இப்படியொரு பேச்சு..’ என்று எல்லாரும் பார்க்க,  

“டேய் கண்ணு.. நான் மாட்டேன்னு சொல்லலையே.. மாறி மாறி வந்து பாத்துக்கிறோம்னு தானே சொல்றேன்..” என்றார் மகராசி சமாதானமாய்..

பொன்னி தான் இடையில் வந்து “அத்தை உங்களுக்கு என்ன தோதோ அப்படி செய்யுங்க..” என்றவள் “சும்மா சும்மா எல்லார்கிட்டயும் சண்டை போடாதீங்க…” என்றுவிட்டு போனாள்..

‘சண்டையா.. நானா??? என் நேரம்…. சண்டை போட்டிருக்க வேண்டிய நேரத்துல போட்டிருக்கணும்.. அப்போ தெரிஞ்சிருக்கும்..’ என்று எண்ணியவன் முகத்தை உர்ரென்று வைத்து நின்றிருந்தான்..

பொன்னி  சொன்னது நிஜம்தான், என்னவோ புகழ் அனைவரிடமும் ஏதாவது ஒரு காரணம் கொண்டு கடிந்து விழுவதாகவே பட்டது.. சும்மாதான் இருப்பான்,  யாராவது பேச்சுக்கொடுத்தால் எரிந்து விழுவதுபோல் பேசினான்..

‘என்னாச்சு இவருக்கு…’ என்றுதான் பார்த்தாள்..

அதிலும் பொன்னி அசோக்கோடு பேசுகையில், புகழின் பார்வை எல்லாம் அசோக் மீது தான் இருந்தது.. அதுவும் முறைப்பதாகவே தெரிய, ‘இதென்னடா…’ என்று பார்த்தால், அசோக்கோ பார்வையை வேறெங்கோ வைத்திருந்தான்.

புகழேந்திக்கு அசோக்கின் மீது அப்படியொரு கோபம் வந்தது நிஜமே.. அமுதாவிற்கு அசோக் நல்ல சாய்ஸ்தான்.. ஏன் இவர்கள் திருமணம் நடக்கவேண்டும் என்று வீட்டினரே விரும்பினார்களே.. ஆனாலும் என்னவோ அசோக் மீது ஒரு கோபம்.. காரணம் சொல்ல முடியவில்லை.. ஆகையால் முறைத்துக்கொண்டே தான் இருந்தான்.. 

பொன்னி அசோக்கிடம் “எனக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா???” என்று கேட்டவளுக்கு தான் கேட்ட கேள்விகூட மறந்து, புகழேந்திக்கு என்ன ஆனது என்ற யோசனையில் மனம் நின்றுவிட, அதே எண்ணத்தோடு தான் சுற்றிக்கொண்டு இருந்தாள்..

அசோக்கோ வேறெதுவும் பேசாது “அம்மா இங்க இருக்கட்டும் பொன்னி..” என,

“இருக்கட்டுமே யார் வேணாம் சொன்னா.. அப்படியே நீயும் இங்கேயே இரேன்..” என்று அவளும் சொல்ல,

“இல்ல இல்ல அதெல்லாம் வேணாம்..” என்றான் வேகமாய்..

அமுதா இவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்துகொண்டு இருக்க, அவளைப் பார்த்த புகழேந்தியோ “அமுதா.. என்ன வாய் பார்த்து அப்படியே நின்னுட்டு இருக்க.. எழுத எடுத்துட்டு வந்த தானே.. போ.. போய் எழுது..” என்று அதட்ட,

“ஆ.. ச.. சரி.. சரிண்ணா…” என்று வார்த்தைகளை தட்டுத்தடுமாறி உச்சரித்தவள் உள்ளே சென்றுவிட,

“அதையே கொஞ்சம் பொறுமையா சொன்னா என்னங்க..” என்று பொன்னி அவனிடம் மெதுவாய் கேட்க,

“ம்ம்ச் எப்போ யார் கிட்ட எப்டி பேசணும்னு எனக்கு தெரியும்.. போ. போய் முதல்ல ஏதாவது சாப்பிடு..” என்றவன் அமுதாவை தேடித்தான் போனான்..

மன்னவன் கூட கேட்டுவிட்டார் “என்னாச்சு இவனுக்கு.. எல்லாரையும் பிடிச்சி இப்படி பேசிட்டு இருக்கான்…” என்று..

பொன்னி என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாது பார்க்க, இளங்கோதான் “அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்பா.. அவனுக்கு எல்லாரும் சேர்ந்து பொன்னிய கவனிக்கவும் அவனை கண்டுக்கலைன்னு கோவம் அதான்..” என,

ஜெயபாலும் “இருக்கும் இருக்கும்.. சின்னவயசுல இருந்து அவனுக்கு இப்படிதான.. எப்பவும் அவனை முன்னாடி வைக்கணும்..” என்று எடுத்துக்கொடுக்க,

பொன்னி ‘அப்பாடி…’ என்று நினைத்துக்கொண்டாள்..

அமுதாவை தேடி போனவனோ, ஒன்றுமே பேசாது அவளின் முன் அமர, அவளோ கொஞ்சம் பயந்து போய்தான் பார்த்தாள்.. இதுவரைக்கும் புகழேந்தி அவளை திட்டவில்லை..

ஆனால் திட்டினால் என்ன பதில் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.. சொல்லப்போனால் அசோக் வந்து இவளிடம் பேசவும் பயந்துதான் போனாள்.. அந்த பயத்தினில் இரண்டு நாட்களாய் சரியாய் உண்ணவும் கூட இல்லை.. முகமே வாட்டமாய் இருந்தது அவளுக்கு..

புகழ் பொன்னி திருமணத்தின் போது, அவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்தாள் தான்.. ஆனால் அசோக் ஒதுங்கி ஒதுங்கி போகவும் அப்படியே விட்டுவிட்டாள்.. என்றாவது ஒருநாள் இதற்கு ஒரு விடை கிடைக்கும் என்றெண்ணி.. ஆனால் அசோக் தேடிவந்து அவளின் முன்னே நிற்கையில், அதிலும் அவனின் விருப்பத்தை தெரிந்தபிறகோ, கேட்கவே வேண்டாம்..

“இல்லை இல்லை.. இதெல்லாம் சரியே வராது..!!!” என்று முதலில் மறுத்தவளை,

“ஏன் சரி வராது…??? நான் உன்னை உனக்காக மட்டும் தான் விரும்புறேன்.. வேற எதுக்காவும் இல்லை..” என்றவனின் பேச்சு அப்படியே நிற்க வைத்தது…

காரணாம் அமுதாவின் மனதினில் அப்படியொரு குற்றவுணர்வு இருந்தது… அசோக்கை முன்னிட்டு.. பின் பொன்னியை முன்னிட்டு.. தன்னால் தான் இவர்கள் இருவருக்கும் எத்தனை பேச்சுக்கள் என்ற கவலையும், எல்லாம் தெரிந்தும்  உணர்ந்தும் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற எண்ணமும்,

அசோக்கோ தன்னால் தான் தங்கையை மணம் முடித்துக்கொடுத்த பின்னும் கூட அங்கே வீட்டிற்கு வராது இருப்பதும், பின் பொன்னியை தன் வீட்டினரே புரியாது பேசி சண்டை போட்டதுமாய் என்று… இப்படி ஏகப்பட்ட காரணங்கள் அவளின் மனதினுள்..

அத்தனை நட்பாய் பழகிய பொன்னி, இறுதியில் அவளோடு பேசாமல் விட்டு, பின் போனால் போகிறது என்று பேசி, ஏதோ இப்போது தான் எல்லாம் சரியாகி இருக்கிறது என்று நினைக்கும் வேளையில் அசோக் வந்து இப்படி சொல்லவும் அவளால் மூச்சு விடக்கூட முடியாத நிலைதான்..  

அதிலும் ‘உன்னை உனக்காகத்தான் விரும்புறேன்..’ என்று சொன்னது, நிச்சயம் அவள் மனதில் ஒருவித அலை பரப்பியது தான்..

நியாயமாய் பார்த்தால் அவனெல்லாம் அவளோடு நின்று பேசக்கூட கூடாது. அப்படித்தான் இருந்தான் அவனும்.. அவன் ஒருமுறை பேசுவது என்ன, பார்த்துவிட்டால் கூட போதும், மனதார ஒருமுறை அவனிடம் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று எண்ணியிருந்தவளுக்கு, ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தவன், அவனே வந்து விரும்புகிறேன் என்று சொல்ல, ஆடித்தான் போனாள் அமுதா..

‘நானா??!! என்னையா??? என்னை போய் விரும்புகிறானா????!!! அதுவும் எனக்காக என்னை…’

இப்படியான ஆச்சரியமும் அதிர்ச்சியும் தான் அவளுள்….

இதயம் தட தடவென அடித்துக்கொள்ள, கண்களை இறுக மூடிக்கொண்டாள் அமுதா.. மூடிய கண்களுக்குள் பழையது எல்லாம் நினைவு வர, அப்படியே தடதடப்பு எல்லாம் நொடியில் அடங்கிப்போனது..

‘இல்ல இல்ல… இதெல்லாம் சரிவராது.. அதுவும் எனக்கு…. வேண்டவே வேணாம்…’ என்று நினைத்தவள் அதனை அசோக்கிடம் சொல்லியும்விட்டாள்..

“ஏன்??? உனக்கு பிடிக்கலைன்னு சொல்லு சரின்னு போயிடுறேன்.. ஒத்துவராதுன்னு சொன்னா என்ன அர்த்தம்??? இல்ல வேற எதுவும் மனசுல வச்சிட்டு நீ இப்படி சொல்றியா அமுதா???” என்று அவளைப் பார்க்க, அவளோ மௌனமாய் இருந்தாள்..

கண்கள் கலங்கிப்போனது அவளுக்கு.. என்ன சொல்லிட முடியும்.. கல்லூரியில் ஒருவனை காதலிப்பதாய் நினைத்து, அது நடக்கவில்லை என்றதும் சாவு வரைக்கும் போய், கடவுளே அதெல்லாம் அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை..  

“ப்லீஸ்ங்க.. இப்படி எல்லாம் என்கிட்டே பேசவேணாம்.. எங்க அண்ணன் ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ என்ன மேற்படிப்பு படிக்க கூட்டிட்டு வந்திருக்காங்க. மதினி என்னால ரொம்ப கஷ்டப்பட்டாங்க வீட்ல… அப்படியிருக்கப்போ நான்.. இது.. நீங்க.. ம்ம்ஹும்.. இது வேண்டாம்… சரிவராது…” என்றவள் சொன்னதை கேட்டு புரியாது பார்த்தான் அசோக்..

‘பொன்னி என்ன கஷ்டப்பட்டா..??’ இந்த கேள்விமட்டுமே அவனுக்கு தோன்ற, அதை அப்படியே அவளிடமும் கேட்க,

‘ஐயோ உளறிட்டேனோ…’ என்று முழித்தவளிடம்,

“நீ சொல்றதுலதான் என்னோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு அமுதா.. என்னோட வாழ்க்கை இல்லை.. நம்மோட வாழ்க்கை.. நீ என்னை ஏத்துக்கிறதுக்கும், பொன்னிக்கும் என்ன சம்பந்தம் இருக்கு??” என்றான் பிடிவாதமாய்.

அமுதாவால் தப்பிக்கவே முடியவில்லை.. அதுவும் கல்லூரியில்.. அவளைப் பார்க்கவென்று வந்து நிற்பவனிடம் முகம் திருப்பி போக முடியவில்லை.. அதிலும் பொன்னி சொல்லாத ஒரு விஷயத்தை தான் எப்படி சொல்ல முடியும்?? என்ற தயக்கமும் சேர்ந்தே இருக்க, பதிலே பேசாது இருந்தாள்..

“சொல்லு அமுதா?? பொன்னிக்கு என்னாச்சு?? சரி இதை முன்னிட்டு நீ சொல்ல வேணாம்.. ஆனா ஒரு அண்ணனா என் தங்கச்சிக்கு என்னசுன்னு எனக்கு தெரியனும்…” என, அதற்குமேல் நேரத்தை கடத்த விரும்பாது நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள் அமுதா..

எல்லாவற்றையும் கேட்டவனுக்கோ, என்ன மாதிரியான எண்ணங்கள் தன் மனதில் தோன்றுகின்றது என்றே தெரியவில்லை.. அதிலும் பொன்னி.. அவனுக்கு தங்கை மட்டுமல்ல.. தோழியும் கூட.. இதுநாள் வரைக்கும் எதையும் மறைத்தது இல்லை..

திருமணம் செய்துகொள் என்று சொல்லி வற்புறுத்தவும் தான் அவளிடம் கடுமையாய் நடந்துகொண்டான்.. அதுகூட அமுதாவிடம் பேசி அவளின் சம்மதம் பெற்று, பொன்னியிடம் போய் சந்தோசமாய் இதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான்.. கண்டிப்பாய் பொன்னி இதற்காக மகிழ்வாள் என்று நினைத்தவனுக்கு புகழ் வீட்டினில் நடந்த இந்த விஷயங்கள் எல்லாம் அதிர்ச்சியே..

“இது.. இதெல்லாம் எனக்கு தெரியாது…” என்றவனுக்கு வியர்த்துவிட்டது..

“ம்ம் அதான் சொல்றேன்.. இதெல்லாம் சரி வராது.. கண்டிப்பா மதினி மனசு ரொம்ப பாதிக்கும்.. வீட்ல திரும்ப ஏதாவது பேச்சு வரும்.. அண்ணன் சங்கடப்படுவான்.. தயவு செஞ்சு இதை நீங்க இதோட விட்ருங்க.. இப்போதான் எல்லாரும் நிம்மதியா இருக்காங்க…” என்றவளை பாவமாய் பார்த்தான் அசோக்.

அவன் மனதில் இருக்கும் விருப்பத்தை அவளிடம் சொல்லாமல் போயிருந்தால் கூட மனதிலேயே போட்டு புதைத்திருப்பான், ஆனால் ஒரு பெண்ணிடம் தன் விருப்பம் சொல்லி, இறுதியில் என் தங்கைக்கு இதெல்லாம் பிடிக்காது என்றுசொல்லி பின்வாங்கி, சொன்ன விருப்பத்தை திரும்ப எடுத்து வருவது அவனுக்கு சரியா என்ற எண்ணமே தோன்றியது..

அதிலும் பொன்னிக்காகவே இதை மறுக்கும் அமுதாவின் மனம் மேலும் காயம் தானே படும்..

அவளும்தான் வாழ்வில் எத்தனை நிராகரிப்புகள்.. அவமானங்கள்… பேச்சுக்கள் எல்லாம் சந்தித்துவிட்டாள்..

இல்லை இல்லை முன் வைச்ச காலை பின் வைக்க கூடாது.. என்று தனக்கு தானே சொல்லியவன்,

“அப்போ.. பொன்னியும் புகழும் ஓகே சொன்னா உனக்கு ஓகே வா..” என்று அடுத்த கேள்வி கேட்டு மேலும் அவளை அதிர வைத்தான்..

“ப்ளீஸ்.. இந்த பேச்சே வேணாம் சொல்றேன்…” என்று கலங்கியவளை,

“நானும் அதான் சொல்றேன்.. வேணாம்.. தோதுவராது.. ஒத்துவராது.. சரிவராது.. இந்த பேச்சே வேணாம்.. பொன்னியும் புகழும் சரின்னு சொன்னா உனக்கு சரியா அது மட்டும் சொல்லு.. மத்தபடி நான் உன்னை எந்த டிஸ்டர்பன்ஸும் பண்ணமாட்டேன்…” என்று உறுதியாய் பேசியவனை கண்டு,

மேலும் மேலும், ‘தனக்காகவா ???!!!’ என்ற எண்ணம் அமுதாவின் மனதில் எழாமல் இல்லை..  

ஆனாலும் “இல்லங்க.. அது.. என்.. எனக்கு ஹாஸ்டல் போகணும்.. விசிட்டர்ஸ் டைம் முடியபோது…” என்றுதான் மறுத்தாள்..

“இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை….”

“என்னோட பதில் எப்பவுமே இதுமட்டும் தான்.. என்னால இனிமேலும் யாருக்கும் எந்தவொரு பிரச்சனையும் வந்திடக்கூடாது அதுமட்டும் தான் …” என்றவள் எழுந்து சென்றேவிட்டாள்..

ஆனால் அதற்குபிறகும் அசோக் விட்டானா என்ன??? முதலில் பொன்னியிடம் சண்டை போடவேண்டும் என்றுவேறு தோன்றியது.. என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று.. அப்படி சொல்லியிருந்தால் மட்டும் இவன் என்ன செய்திருப்பான்.. தங்கையின் வீட்டில் பிரச்சனை வந்திட கூடாது என்று எண்ணிக்கூட அப்போதே அமுதாவை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்லியிருப்பான்..

ஆனால் இப்போ அவன் மனதில் தானாக நேசம் வளர்ந்து, அதன் பின் அவளை திருமணம் செய்து, அப்படி வாழும் வாழ்வு எப்படியிருக்கும்.. அனைவரும் சொல்கிறார்கள் என்று திருமணம் செய்திருந்தால் அந்த வாழ்வு எப்படியிருக்கும்??

நிதானமாய் யோசித்தான்.. எப்படி யோசித்தாலும் பொன்னி கண்டிப்பாய் இதனை தவறாய் எண்ணிட மாட்டாள் என்றே தோன்றியது அவனுக்கு.. அப்படியே அவள் கோபமாய் ஏதாவது சொன்னால் கூட, பொன்னியின் மனம் முழுதாய் சம்மதம் சொன்ன பிறகே வீட்டில் பேசி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டான்..

அதையே அமுதாவிடம் அவன் சொல்ல, அப்போதும் அவள் சொன்னது ஒன்றுதான், “இதுல என்னோட முடிவு எதுவுமே இல்லை.. எங்க வீட்லயும்.. அதிலும் புகழ் அண்ணாவும், பொன்னி மதினியும் சரின்னு சொல்லணும்..” என்றுவிட்டாள்..

“அப்போ இவங்க எல்லாம் சரின்னு சொன்னா உனக்கு சம்மதமா??”

‘திரும்ப இதே கேள்வியா??!!!’ என்றுதான் பார்த்தாள்..

“சரி எல்லார் முடிவும் கேட்டுட்டு வந்தே உன்கிட்ட பேசுறேன்…” என்றவன் தான் அடுத்து புகழிடம் பேசினான்..

ஆனால் அசோக் எதிர்பார்க்காதது, பொன்னி குழந்தை சுமப்பது.. மங்கை அழைத்து சொல்லும்போது, அவனால் சந்தோசத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. நேராய் சென்று பொன்னியை காணத்தான் கிளம்பினான்.. ஆனால் அதே நேரம் அமுதாவே அவனுக்கு அழைத்து,

“இந்த நிலைமைல மதினிக்கிட்ட எதுவும் சொல்லி அவங்களை டென்சன் பண்ணிட வேண்டாம் ப்ளீஸ்..” என, அப்படியே அமர்ந்துவிட்டான்..

அசோக் நினைத்தது, இந்த மகிழ்ச்சியான நிலையில், பொன்னியிடம் தன்னுடைய விருப்பத்தையும் சொன்னால் கண்டிப்பாய் அவள் ஏற்பாள் என்று.. ஆனால் அமுதா சொல்லவும் அவனின் வேகம் அப்படியே குறைந்து போனது.. என்ன செய்வது என்று யோசிக்கும்போது தான் புகழிடமாவது இதனை பேசுவோம் என்று நினைத்து பேசியது..

ஆனால் புகழேந்தியும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிட, அசோக்கிற்கு ஏமாற்றமே.. அதிலும் இப்போது அமுதாவிற்கு, தன்முன் அமைதியாய் வந்து அமர்ந்திருக்கும் புகழேந்தியை பார்த்து மனது திக் திக் என்று அடித்துக்கொண்டு இருக்க,

“ண்ணா…” என்றாள் மெதுவாய்..

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “எழுதிட்டியா???!!!” என்று கேட்க,

“இல்ல அது… எதுவும் பேசணுமா??? அமைதியா வந்து உட்காந்திருக்க??” என்றாள் கொஞ்சம் தைரியம் கூட்டி..

“ஏன்… நான் சும்மா வந்து உட்கார கூடாதா???”

“இல்லண்ணா… அது…..”

“ம்ம்.. இங்க பார் அம்மு.. வீட்ல எல்லாரும் உன்னை படிக்க அனுப்ப முடியாதுன்னு சொன்னப்போ, நான்தான் பிடிவாதமா கூட்டிட்டு வந்தேன்..” எனும்போதே,

“அண்ணா நான் இப்பவும் சொல்றேன்.. நீ என்மேல வச்ச நம்பிக்கைக்கு நான் எப்பவுமே உண்மையா இருப்பேன்…” என்றாள் அழுதுவிடும் குரலில்..

அவளது முகத்தைப் பார்த்தவன், “அடுத்தவங்களுக்கு உண்மையா இருக்கிறது பெருசில்ல அம்மு.. முதல்ல நமக்கு நம்ம உண்மையா இருக்கணும்..” என, அமுதாவிற்கு என்ன சொல்கிறான் என்று புரியவில்லை..

“என்ன பாக்குற…. அசோக்கோட விருப்பம் சரியா தப்பான்னு நான் சொல்லவே முடியாது.. ஏன்னா நடந்த எல்லாம் தெரிஞ்சப்போவே நான் போய் பொன்னியை கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு நின்னேன்.. அசோக்குக்கு சொல்லபோனா எதுவும் தெரியாது.. ஆனா நான் பொன்னிக்காகவும் யோசிக்கணும்..

பட் அதே நேரம், ஒரு அண்ணனா என்னோட கடமையும் நான் செய்யணுமே.. இதெல்லாம் போட்டு என்னை எவ்வளோ டென்சன் பண்ணுதுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. உன்கிட்ட நான் கேட்கிறது எல்லாம் ஒரே ஒரு விசயம் மட்டும் தான்.. அசோக் வீட்ல பேசி எல்லார்கிட்டயும் சம்மதம் வாங்குறது வரைக்கும், ரெண்டுபேரும் பேசுறது.. வெளிய போறது.. பாத்துக்கிறது இதெல்லாம் வேணாம்….” என்றான் ஒரு அண்ணனாய்..

“நான்.. நான் அப்படி செய்வேனா ண்ணா???” என்றவளுக்கு அடக்க முயன்றும் அழுகையே வந்துவிட,

“ம்ம்ச்.. இதான் எனக்கு பிடிக்காது.. சும்மா அழறது… நீ அப்படி செய்வன்னு சொல்லலை.. இது சொல்லவேண்டியது என்னோட பொறுப்பு… அவ்வளோதான்.. மத்தபடி எதுவுமில்லை…” என்றவன் வெளியே போக கிளம்ப,

பொன்னி அப்போதுதான் இவனையும் அமுதாவையும் அழைக்கவென அங்கே வர, அமுதா வேகமாய் கண்களை துடைத்துக்கொள்ள,

“என்னாச்சு??? உன்னையும் திட்டினாரா???” என்றாள் புகழை முறைத்து..

“இல்ல மதினி.. அது….”

“நானும் பார்த்துட்டு தானே இருக்கேன்.. எல்லாரையும் கோவமா பேசிட்டு இருக்கார் உங்கண்ணா.. நீ எதும் பெருசா நினைக்காத அமுதா.. வா வந்து சாப்பிடு..” என்றவள்,

“ஏங்க இப்படி பண்றீங்க.??” என்று அவனையும் கடிந்துவிட்டே சென்றாள்..

அன்றிலிருந்து இன்றுவரைக்கும், இதோ நான்கு மாதங்கள் சென்றுவிட்டது, அசோக் அமுதா விசயத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.. நாள் செல்ல செல்ல புகழேந்திக்கு ஒருவித டென்சன் கூடிக்கொண்டே போவதாய் இருந்தது.. எல்லாம் தெரிந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற உறுத்தல்..

நாளைக்கு பின்னே இதனை அசோக் வீட்டினில் பேசி ‘முன்னாடியே உனக்கு தெரிஞ்சும் நீ இப்படி சும்மா இருக்கலாமா?? என்ன இருந்தாலும் இது உன் தங்கச்சி வாழ்க்கை இல்லையா???’ என்று யாராவது கேள்வி கேட்டால், அவன் என்ன பதில் சொல்வான்..

புகழேந்தியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தே இன்றுவரை அசோக்கும் எதுவும் பேசாமல் இருக்கிறான்..

ஆனால் எத்தனை நாளைக்கு?? என்றாவது ஒருநாள் விஷயம் வெளியே வந்துதானே ஆகவேண்டும்.. ஆனால் அப்படியான சூழலும் தன்னைப்போல் அமைந்தது..

 

      

  

  

     

  

          

Advertisement