Advertisement

தோற்றம் – 32

புகழேந்திக்கு அன்றைய தினம் உறங்கவே முடியவில்லை. என்ன முயன்றும் கண்கள் மூடினால் அசோக் பேசியதே மனதில் ஓட, அவனால் மனதை ஒருநிலைப் படுத்தி எதுவும் செய்ய முடியவில்லை.. சொல்ல போனால் இன்று அவனுக்கு சந்தோஷத்தில் தூக்கம் வந்திருக்க கூடாது. ஆனால் இப்போதோ குழப்பத்தில் தூக்கம் வராது போனது..

நொடியில் ‘ச்சே என்னடா வாழ்க்கை..’ என்றுகூட தோன்றிவிட்டது..

‘ஏன்டா நான் அப்பா ஆகப்போறேன்னு கொஞ்சம் சந்தோஷக்கூட பட்டுக்க விடமாட்டீங்களாடா..’ என்றுதான் நொந்துகொண்டான்..

லேசாய் தலையை திருப்பிப் பார்த்தான், பொன்னி நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. அவளின் இதழில் மெல்லியதாய் ஒரு புன்னகை ஓட்டிக்கொண்டு இருந்தது.. இனிய கனவு எதுவும் காண்கிறாளோ என்னவோ என்று புகழுக்கு தோன்ற, அவளின் இந்த புன்னகை என்றுமே அப்படியே இருக்கவேண்டும் என்றும் நினைத்துகொண்டான்..

ஆனால் அசோக் சொன்னவைகள் எல்லாம் பொன்னிக்குத் தெரிந்தால் நிச்சயம் இப்படி புன்னகைக்க மாட்டாள்..

மெதுவாய் அவளின் கேசம் தடவியவன், அதைவிட மெதுவாய் அவளின் கன்னத்தில் இதழ் பதிக்க, இன்னமும் பொன்னியின் புன்னகை நீண்டது..  கொஞ்ச நேரம் அவளின் முகத்தினையே பார்த்துகொண்டவனுக்கு மனதினுள் பயமாய் கூட வந்துவிட்டது..

‘வேணாம் புகழ்…’ என்று நினைத்தாலும், அதை அப்படியே விட முடியாதே.. சம்பந்தப் பட்டிருப்பது அவனோடு பிறந்தவளின் வாழ்வல்லவா..?? விட்டுவிட முடியுமா??

அசோக் போன்ற ஒருவன் அமுதாவிற்கு வாழ்கை துணையாய் வந்தால், அது நிச்சயம் அனைவர்க்கும் மகிழ்ச்சியே.. புகழுக்கும் மகிழ்ச்சிதான்.. ஆனால் பொன்னிக்கு??

அதுவும் அவள் வயிற்றினில் பிள்ளை சுமந்துகொண்டு இருக்கையில் இந்த விஷயம் சொன்னால் என்னாகும்?? என்ன நினைப்பாள்?? என்று எதுவுமே அவனால் அனுமானிக்க முடியவில்லை..

திரும்ப திரும்ப அசோக் பேசியவைகளே மனதினில் வந்து போக, அவனால் அங்கே அறையினுள் இருக்கக்கூட முடியவில்லை.. எழுந்து ஹாலுக்கு வந்தவன் குறுக்கும் நெடுக்கும் யோசனையாய் நடந்துகொண்டே இருந்தான்..

அசோக் அழைத்து “எங்க இருக்கீங்க புகழ்..?” என்று கேட்டதும், நேரில் வாழ்த்தவென்று தான் கேட்கிறானோ என்று நினைத்தவன்,

“ஸ்வீட் வாங்கலாம்னு வந்திருக்கேன் அசோக்..” என,

“பொன்னிக்கு போட்டேன் லைன் பிஸின்னு வந்தது.. பார்ஸ்ட் என்னோட வாழ்த்துக்கள் புகழ்.. ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு..” என்று அவனும் சொல்ல,

“தேங்க்ஸ்..” என்று சொல்லிக்கொண்டான் லேசாய் சங்கோஜப்பட்டு..

“எங்க இருக்கீங்க..??” என்று அசோக் திரும்ப கேட்க,

‘எதுக்கு..??!!’ என்று யோசித்தவன்  இருக்குமிடம் சொல்ல, “ஒரு டென் மினிட்ஸ் நான் அங்க வர்றேன் கொஞ்சம் பேசணும்..” என்றுவிட்டு அசோக் வைத்துவிட, புகழேந்திக்கு எதுவுமே புரியவில்லை.

ஆனாலும் அசோக்கிற்காக காத்திருந்தான். அசோக்கும் சொன்னதுபோலவே பத்து நிமிடத்தில் வந்துவிட, மீண்டும் ஒரு முறை நேரில் அவன் வாழ்த்து சொல்ல,

“சொல்லுங்க அசோக்.. வீட்ல போய் கூட பேசலாமா??” என்று புகழ் கேட்டதும்,

“நோ நோ.. உங்கக்கிட்ட தனியா பேசணும்னு தான் வந்தேன்..” என்றவனை புரியாது பார்த்தான் புகழேந்தி..

“ம்ம் சொல்லுங்க அசோக்..” என்றவனுக்கு அப்படியென்ன பொன்னியிடம் கூட சொல்லாது என்னிடம் பேச என்ற யோசனை..

“அது… அது வந்து…” என்று தயங்கிய அசோக், இறுதியாய் “நான் அமுதாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்..” என்று சொல்லிவிட, புகழேந்திக்கு திகைப்பு என்று சொல்வதை விட அதனைக் காட்டிலும் மேல்நிலை என்றுதான் சொல்லிட வேண்டும்..

“என்ன… என்ன சொன்னீங்க அசோக்…??!!!!!!”

“ம்ம்… எனக்கு அமுதாவை கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா…??” என்றான் அசோக் திரும்ப.

இதற்கு புகழ் என்ன பதில் சொல்ல வேண்டும்?? என்ன சொல்ல முடியும்..?? எதுவும் புகழேந்திக்கு தெரியவில்லை.. ஆனாலும் சந்தோசமா… அதிர்ச்சியா.. குழப்பமா.. கோவமா எந்த உணர்வு தான் உணர்கிறேன் என்றுகூட புகழேந்திக்கு தெரியாமல் போனது தான் அதிசயம்..

வார்த்தைகள் தேட, மௌனமாய் இருந்தான்.

“இது நான் பொன்னிக்கிட்ட தான் முதல்ல சொல்லிருக்கணும்.. ஆனா.. அவ எப்படி எடுத்துக்குவா தெரியலை.. எனக்கு அமுதா சொல்லித்தான் உங்க வீட்ல நடந்த பிரச்சனை எல்லாம் தெரியும்…” என்று அடுத்த குண்டை அசோக் போட,

‘அமுதாவா??!!!’ என்று புகழேந்தியின் இதழ்கள் முணுமுணுத்தன..

“ம்ம் அமுதா தான்…”

“அப்.. அப்போ அமுதாக்கிட்ட நீங்க பேசினீங்களா???” என்று புகழேந்தி மேலும் அதிர்ச்சியாய் கேட்க,

“ம்ம் எஸ்…” என்றான் அசோக் பார்வையை வேறெங்கோ பதித்து..

“எப்.. எப்போ.. எங்க..???”

“அமுதா காலேஜ்ல….” என்றதும்  புகழேந்திக்கு மேலும் மேலும் எல்லாமே அதிர்ச்சி தரும் விசயமாகவே இருந்தது.

“காலேஜ்லயா???!!!!!!” என்றவனிடம், “புகழ் நான் புல்லா எல்லாம் சொல்லிடுறேன்..” என்ற அசோக்,

“எனக்கு ஸ்டார்டிங்ல கண்டிப்பா மனசுல எந்த மாதிரியான எண்ணங்களோ ஆசைகளோ இல்லை.. அது பொன்னிக்கும் தெரியும்.. மே பி அதுனால கூட பொன்னி உங்க வீட்ல இந்த அரேஞ்மென்ட் வேணாம் சொல்லிருக்கலாம்.. அமுதா என்கிட்டே உங்க மேரேஜ் அப்போ சாரி கேட்க ட்ரை பண்ணப்போ கூட நான் ஒதுங்கி தான் போனேன்..

ஆனா எது எப்போ நடக்கும்னு யாருக்கும் தெரியாதே.. ஏன் எனக்கு அமுதாவை ஏன் பிடிச்சதுன்னு இப்போகூட எனக்கு தெரியலை.. ஆனா எங்க கல்யாணம் நடந்தா கண்டிப்பா நாங்க சந்தோசமா இருப்போம்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும்..” என்று முழுமூச்சாய் சொல்லி முடித்தவனை  நம்ப முடியாத ஒரு பார்வைதான் பார்த்தான் புகழேந்தி..

அவனால் நிஜமாய் நம்பிடத்தான் முடியவில்லை.. அமுதா எப்படி இதனை என்னிடம் சொல்லாமல் இருக்கிறாள் என்றதிலேயே ஒருவேளை இதில் அமுதாவிற்கு இஷ்டமில்லையோ அதனால் தான் தன்னிடம் வந்து பேசுகிறானோ என்றெல்லாம் கூட நினைக்கத் தோன்றியது அவனுக்கு.

“அமுதா என்ன சொன்னா???!!” என்று கேட்கும்போதே, ‘கண்டிப்பா மாட்டேன் தான் சொல்லிருப்பா.. என் தங்கச்சி அவ..’ என்று அவன் மனம் நினைக்க,

“அமுதா முதல்ல என்கிட்ட பேசவே அவ்வளோ பயந்தா.. ஆனா நான் தான் விடாம பேசி பேச வச்சேன்..” என்று அசோக் சொன்னதும்,

‘இதெல்லாம் எப்போடா நடந்துச்சு…’ என்றுதான் பார்த்தான்..

கூடவே ஒரு குற்ற உணர்வும், அமுதாவை படிக்கவைக்கிறேன் என்று அழைத்து வந்து தான் சரியாய் கவனிக்கவில்லையோ என்று.. தான் கண்டுகொள்ளவில்லையோ என்று..

அப்படி இருந்திருந்தால் இந்நேரம் அவளல்லவா “அண்ணா இப்படி ஒரு இஸ்யு…” என்று சொல்லிருக்கவேண்டும்..

மனதிற்குள் இதெல்லாம் ஓடவும் புகழேந்தியின் முகம் அப்படியே சுனங்கிவிட,  “புகழ்.. நானே ரொம்ப கஷ்டப்பட்டு அமுதாவை பேச வச்சிருக்கேன்.. நீங்க யாரும் எதுவும் திட்டிட கூடாது…” என,

“ஏதேது என் தங்கச்சிய திட்டக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு..” என்று கேட்கும் வேகம் புகழேந்திக்குள் தோன்றினாலும் அடக்கிக்கொண்டான்.

எதுவும் பேசாது நின்றிருந்தவனிடம் “கண்டிப்பா உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்.. பர்ஸ்ட் பொன்னிக்கிட்ட தான் சொல்லணும் நினைச்சேன்.. ஆனா அமுதா உங்க வீட்ல நடந்த பிரச்சனை எல்லாம் சொல்லவும் எனக்கு அவக்கிட்ட இதை பேச மனசு வரலை.. அதுவும் இந்த மாதிரி நேரத்துல இதெல்லாம் பேசி பொன்னிக்கு டென்சன் கொடுக்க விரும்பல..” என்று தன்னிலை விளக்கம் சொல்ல,

“ஹ்ம்ம் பின்ன நான் மட்டும் எப்படி பொன்னிக்கு டென்சன் கொடுக்க விரும்புவேன்.. அதுவும் இந்த மாதிரி நேரத்துல???!!!” என்று கொஞ்சம் இடக்காகவே கேட்டான் புகழேந்தி..

“புரியுது.. ஆனா எனக்கும் வேற வழி தெரியலை.. பொன்னியும் உங்களையும் விட்டா வேற யார்கிட்டவும் பேச முடியாது.. ஈவன் அமுதா கூட இதான் சொன்னா.. எங்க அண்ணாவும் மதினியும் சொல்றதுதான் எதுவும்னு.. நான் உங்கக்கிட்டா பேச வர்றது கூட அமுதாக்கு தெரியாது..” என, புகழேந்தியின் மனத்தில் லேசாய் ஒரு பெருமை கூட..

“ம்ம்ம்.. நிஜமாவே உங்களுக்கு எங்க வீட்ல நடந்த எந்த பிரச்சனையும் தெரியாதா???” என்று திரும்ப புகழ் கேட்க,

“நிஜமா தெரியாது புகழ்.. பொன்னி சொன்னது எல்லாம் ஒரே ஒரு விஷயம் தான்.. உங்க அத்தை பொண்ணுக்கும் உங்களுக்கும் ஏற்கனவே பேசி வச்சிருந்தாங்கன்னும், நம்ம அவசரப்பட்டு யோசிக்காம முடிவு எடுத்துட்டோமோன்னும்  மட்டும் தான் சொன்னா..” என்றதும், புகழேந்திக்கு மனது அப்படியே பொன்னியை தான் நினைத்தது..

அவள் சொன்ன அந்த வாக்கியத்தை தான் அவனும் கேட்டானே.. கேட்டதுமே அவள் மீது கோபம் கூட வந்ததே.. அதனையும் கூட வெளிக்காட்டாது மனதினில் அடக்கினானே.. பொன்னியும் தான் அனைத்தையும் தாண்டி வந்தாள்.. 

“என்ன புகழ் எதுவும் பேசாம இருக்கீங்க…???”

“எனக்கு என்ன சொல்ல தெரியலை… கொஞ்சம் யோசிக்கணும்.. ஆனா இப்போ பொன்னிக்கிட்ட எதுவும் பேச முடியாது…”

“ஹ்ம்ம் அது எனக்கும் தெரியுமே.. ஆனா உங்க ரெண்டுபேர் சம்மதம் கிடைக்காம் உங்க வீட்லயும் பேசக்கூடாதுன்னும் சொல்றா அமுதா. நான் என்ன செய்யட்டும்…” என்று கேட்டவனின் நிலையும் புகழேந்திக்கு நன்கு புரிந்தது..

“ஹ்ம்ம் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க அசோக்…” என்றவன் வீடு வந்து, இதோ இப்போது வரைக்கும் அவனால் அந்த சிந்தனையில் இருந்து வெளிவர முடியவில்லை..

அமுதாவிடம் அழைத்து பேசலாம் என்றாலும் அதற்கும் இது நேரமில்லை என்று தோன்ற, என்ன செய்வது என்றே அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.. எத்தனை நேரம் இப்படி நடந்தானோ, பொன்னி வந்து “இப்போ நீங்க ஹால்ல என்ன பண்றீங்க??” என்றதும் திடுக்கிட்டு திரும்பியவன்,

“நீ தூங்கலையா கண்ணு..??” என்றான்..

“அதை நானும் கேட்கணும்… தூங்காம என்ன செய்றீங்க…??”

“இல்ல.. தூக்கம் வரலை…” என்றவனின் பார்வை வேறெங்கோ இருக்க, “எதுவும் பிரச்சனையாங்க.. முகமே சரியில்லையே..” என்று கேட்டபடி அவனின் அருகே வர,

“ம்ம்ச் மெதுவா நடந்து வா பொன்னி..” என்றவன் அவளின் கரங்களை பிடித்து அமர வைத்து அவனும் அமைதியாய் அமர்ந்திருந்தான்..

“என்னாச்சுன்னு கேட்டேன்..”

“ம்ம் ஒன்னும் ஆகலை… சும்மாதான்…”

“சும்மாவா??? பார்த்தா அப்படி தெரியலையே…” என்றவள் அவனின் முகத்தை திருப்பி, “எல்லாரும் அப்பா ஆகப்போறதை நினைச்சு சந்தோஷப் பாடுவாங்கன்னு பார்த்தா நீங்க என்னவோ அரண்டு போன மாதிரி இருக்கு…” என்றுசொல்லி கிண்டலாய் சிரித்தாள்..

‘அடிப்பாவி.. உங்க அண்ணன் எங்க டி என்னை சந்தோசப்பட வைச்சான்… இன்னிக்கு பேசாம நாளைக்கு கூட பேசிருக்கலாமே…’ என்று முணுமுணுக்க,

“சத்தமா பேசுங்க.. அதென்ன வாய்குள்ள பேசுறது..” என்றவளின் பேச்சில் துள்ளல் தான் தெரிந்தது..

பொன்னியின் மகிழ்வு அவளின் ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் வெளிப்பட, புகழேந்தியோ அவளுக்கு அப்படியே நேர்மாறாய் இருந்தான்..

“ஒண்ணுமில்ல சொல்றேனே கண்ணு… சரி வா தூங்குவோம்…” என்று அவளை எழுப்பிட,

“இப்போ என்னோட தூக்கம் போச்சு.. ஆனா உங்களை தூங்க வைக்கவா??!!!” என்று ஆசையாய் கேட்டவளை, புகழேந்தி பாவமாய் பார்த்தான்..

பேசாமல் அசோக் சொன்னதை சொல்லிடலாமா என்றுகூட தோன்றியது, ஆனால் பொன்னி வாங்கிய பேச்சிற்கு கண்டிப்பாய் இந்த விஷயம் இப்போது தெரிந்தால், மனதளவில் மிகவும் கயப்படுவாள் என்பதும் அவனுக்கு உறுதியாய் தெரியும்.. ஆக, இந்த பேச்சை விட எண்ணியவன்,

“நீ நான் நம்ம பாப்பா.. மூணு பேருமே தூங்கலாம்.. வா…” என்று அவளை எழுப்பிக்கொண்டு சென்றான்..

மறுநாள், சீக்கிரமே ஆபிஸ் கிளம்ப, ஊரில் இருந்து அனைவரும் வருகிறோம் என்ற தகவலும் வர, “கண்ணு உனக்கு லீவ் சொல்லிடறேன்.. பைக் சாவி கொடு, பியூன் கிட்ட சொல்லி எடுத்து வந்து தர சொல்றேன்..” என்றவனை முறைத்தாள் பொன்னி..

“என்ன டி முறைக்கிற???!!!”

“இப்போ எதுக்கு லீவ்..??”

“அது இல்ல.. நீ இப்படி.. அதெல்லாம் வேணாம் வீட்ல ரெஸ்ட் எடு…”

“ரெஸ்ட் தானே எடுக்க வேண்டிய நேரத்துல எடுக்கலாம்…” என்றவள், “என்னை டிராப் பண்ணுங்க.. நான் மேம் கிட்ட சொல்லிட்டு, ஈவ்னிங் சீக்கிரமே வந்துக்கிறேன் போதுமா…” என அவனுக்கோ மனமே சமாதானம் அடையவில்லை..

“ம்ம்ச் இப்போ நீங்க கொண்டு போய் விடுறீங்களா இல்லை அசோக்கிட்ட சொல்லி வந்து கூட்டிட்டு போக சொல்லவா???” என்று பொன்னி சத்தம் போட்டபின்னே தான்,

“இல்ல இல்ல.. நானே கூட்டிட்டு போறேன்..” என்று வேகமாய் பதில் வந்தது அவனிடம்..

பொன்னியை சென்று கிட்ஸ் கார்டனில் விட்டு, அலுவலகம் வந்தவன் முதல் வேலையை அசோக்கிற்கு அழைத்து “என்னால கண்டிப்பா பொன்னிக்கிட்ட இதை இப்போ பேச முடியாது அசோக்.. நீங்க உங்களுக்கு வேணும்னா அத்தைக்கிட்ட சொல்லி எங்க வீட்ல அமுதாவை கேட்க சொல்லுங்க..” என்றுவிட்டான்..

அப்படி சொன்ன பிறகுதான் அவனுக்குமே ஒரு நிம்மதி வந்தது..

அவன் அசோக்கிடம் பேசிய அடுத்த ஐந்து நிமிடத்தில், அமுதா அழைத்தாள்..

எடுத்து “ஹலோ..” என்றவனுக்கு, பதிலே வராது போக,

“பேசு அம்மு.. போன் போட்டாச்சு பேசாம இருந்தா எப்படி??” என்றான் ஆழ்ந்த குரலில்..

“இல்லண்ணா அது…” என்று அமுதா இழுக்க,

“எனக்கு இதுல சம்மதம் தான்.. ஆனா பொன்னி மனசு நோகடிக்க நான் விரும்பலை.. அசோக்தான் நம்ம வீட்லயும் அவங்க வீட்லயும் பேசணும்.. அதுக்கும் மேல பொன்னியை நீங்க வேணும்னா பேசி கன்வின்ஸ் பண்ணுங்க.. என்னால முடியாது.. அதுவும் இப்போ யாரும் அவக்கிட்ட இதை பேசிடவே கூடாது..” என்றவனுக்கு,

அமுதாவோ “சரிண்ணா…” என்பதை தவிர வேறென்ன பதில் சொல்ல முடியும்..

அசோக்கிடம் பேசிவிட்டு கொஞ்சம் தெளிந்த மனது, இப்போது அமுதாவிடம் பேசிவிட்டு மீண்டும் குழம்ப ஆரம்பித்துவிட்டது. ஒரே யோசனையாகவே இருந்தவனை, சந்த்ருவும், புனீத்தும் வந்து பிடித்து கொண்டனர்..

“டேய் மாப்ள.. வாழ்த்துக்கள் டா..” என்று வந்து அவனை வாழ்த்தியவர்களுக்கு ஈஈ என்று அனைத்து பற்களையும் காட்டினான்..

“என்னடா நீ சிரிக்கிறதே சரியில்லையே…” என்ற சந்துருவிடம், “நத்திங் மச்சி..” என,

“மச்சி கண்டிப்பா ட்ரீட் வேணும்டா…” என்று புனீத் சொல்லவும், “அதானே பார்த்தேன்.. கொடுக்குறேன் டா கொடுக்குறேன்..” என்றவன் நண்பர்களின் பேச்சில் கொஞ்சம் தன் எண்ணங்களை மறந்தான்..

சொன்னதுபோலவே மாலை பொன்னி சீக்கிரமே வீடு வந்திட, அவள் வந்த கொஞ்ச நேரத்திலேயே அசோக்கும், மங்கையும் வந்துவிட்டனர்..

“ம்மா நீ எப்போ ஊர்ல இருந்து வந்த??!!!” என்று சந்தோசமாய் பொன்னி கேட்க,

“பின்ன எனக்கு மனசு கேட்குமா.. அதான் நானே வந்துட்டேன்…” என்றார் மங்கை சந்தோசமாய்..

அடுத்த கொஞ்ச நேரத்தில் புகழ் வீட்டினர் மொத்தமும் வந்திட, புகழேந்தி வீட்டிற்கு வரும்போதே, அமுதாவையும் அழைத்து வந்துவிட்டான்..

பொன்னிக்கு மனம் மிகவும் சந்தோசமாக இருந்தது.. தன்னை காண்பதற்கு என்று இத்தனை பேர் வந்திருக்க, அதுவும் அவள் நின்றால், எழுந்தால், அமர்ந்தால் என்று ஒவ்வொரு அசைவிற்கும், யாராவது  ஒருவர்

“பார்த்து.. மெதுவா..” என்று மாறி மாறி சொல்ல, பொன்னி சிரித்தபடி தான் வளைய வந்தாள்..

புகழ் உடை மாற்ற வந்தனிடம் வந்து “பார்த்தீங்களா.. எல்லாம் எப்படி கவனிக்கிறாங்கன்னு…” என்று சிரித்தபடி சொல்ல,

“அடடா…!!!! நான் உன்னை நல்லா கவனிச்சதுனால தான் எல்லாரும் உன்னை கவனிக்கிறாங்க…” என்று இவனும் கூற,

“ஹா ஹா சொல்லிக்கோங்க..” என்றவள் அவளாகவே அவன் கன்னத்தில் இதழ் பதித்து “ரொம்ப சந்தோசமா இருக்குங்க..” என்றாள் உணர்ந்து..

பதிலுக்கு அவனும் அவளை அணைத்து, “எப்பவும் நீ இப்படியே இருக்கணும் கண்ணு.. அதுமட்டும் தான் எனக்கு வேணும்..” என்றவனுக்கு மனதில் என்னென்னவோ எண்ணங்கள்..

‘கடவுளே எல்லாமே சரியா நடக்கணும்…’ என்று மனதார வேண்டிக்கொண்டான்..

அன்பரசியோ “நாங்க இருக்க வரைக்கும் நீ எதுவும் செய்யாத..” என்றுவிட்டு அவளும் நித்யாவுமே சமையல் பொறுப்பை ஏற்க, மங்கையும் மகராசியும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, ஒருப்பக்கம் ஆண்களும் பேசிக்கொண்டு இருக்க, அமுதாவோ சும்மா அசோக் முகத்தினை பார்ப்பதும் பின், பொன்னியைப் பார்ப்பதுமாய் இருந்தாள்..

அவனும் அதையே செய்ய, புகழேந்தி இவர்கள் இருவரையும் கண்டவன், தனக்கு எதுவும் தெரியாது என்பதாகவே இருந்துகொண்டான்..

ஆக மொத்தம் பொன்னிக்கு எந்த வேலையும் இல்லாது போக, அனைவர் கேட்பதற்கும், பேசுவதற்கும் பதில் மட்டும் சொல்லிக்கொண்டு இருக்க,  அசோக்கிற்கு நிச்சயமாய் பொன்னியிடம் இதனை பேசும் தைரியம் வரவில்லை..

வெகு நேரம் பொன்னியையே பார்த்துகொண்டு இருந்தான்..

அதனை கவனித்தவள் “என்னண்ணா பார்த்துட்டே இருக்க..” என்றவள், “அதெல்லாம் சரி, நீ என்ன வெறும் கையை வீசிட்டு வந்திருக்க.. எதுவும் வாங்காம..” என்று குறும்பாய் கேட்க,

“அச்சோ..!!! அப்படியே வந்துட்டேன்.. மறந்திடுச்சு…” என்று அசோக் தலையில் கை வைத்துக்கொள்ள,

“விடு விடு.. நேத்து அவர் ஸ்வீட் வாங்கிட்டு வந்தார்.. ஆனா நீ நேத்தே வருவன்னு நினைச்சேன்…” என்றதும், புகழ் ஒரு குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான் அசோக்கை..

அசோக்கிற்குமே தான் செய்த தவறு புரிய, ஒன்றும் சொல்லாது தலையை குனிந்துகொண்டான்..

                     

                                                                                             

Advertisement