Advertisement

தோற்றம் – 31

பரஞ்சோதியின் வாயை ஒருவழியாய் மன்னவன் அடைத்துவிட, அதற்குமேல் அவர் எதுவுமே சொல்லிடவில்லை.. பேசவும் இல்லை.. அமைதியாய் கிளம்பிவிட்டார்… அதற்காக தான் செய்ததை எண்ணி வருந்தவும் இல்லை. வெளியில் மட்டும் பாவமாய் முகத்தினை வைத்துக்கொண்டார்..

பொன்னியும் புகழேந்தியும் வேறு எதுவுமே பேசாது, சத்யாவின் திருமணத்தை பற்றி விசாரித்துக்கொண்டதோடு சரி.. ஆனால் நித்யாவிற்கு தான் அனைத்தும் பார்த்து சங்கடமாய் போய்விட்டது.. என்ன இருந்தாலும் பரஞ்சோதி அவளின் அம்மா..

இது அவளுக்கு புகுந்த வீடு என்பதையும் தாண்டி, பரஞ்சோதிக்கு அவரின் பிறந்த வீடு.. அதில் அவரே தன் மதிப்பை கெடுத்துக்கொண்டது அவளுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.. இரண்டு நாட்களாய் முகத்தை தூக்கித்தான் அமர்ந்திருந்தாள்..

இளங்கோதான் “இங்க பாரு இப்போ எதுக்கு நீ இப்படி இருக்க.. உங்கம்மாவை யாரும் தான் எதுவும் சொல்லலையே??!!” என்று அதட்ட,

“யாரும் சொல்லலை.. ஆனா அவங்க மரியாதை போச்சே..” என்றாள் விசும்பி..

“அதுக்கு யார் என்ன செய்ய முடியும்.. இதெல்லாம் அவங்களா தேடினது.. இதேது ஒருவார்த்தை பொன்னியையும் அவங்க அம்மாவையும் போன்ல கூப்பிட்டிருந்தா கூட இந்த பிரச்சனை வந்திருக்காது.. இனியும் இதையே பேசினா எதுவும் ஆகாது…” என்றான் ஓரளவுக்கு சமாதானமாய்..

“ம்ம்ம்….!!!”

“என்ன ம்ம்ம்… வா.. புகழும் பொன்னியும் கிளம்புறாங்க.. நீ உர்ருன்னு இருந்தா நல்லாவா இருக்கு..” என்றவன் மனைவியை சமாதனம் செய்தே அழைத்து சென்றான்..

பொன்னியும் புகழேந்தியும் சென்னை கிளம்ப, அவர்களோடு அமுதாவும் கிளம்பியிருந்தாள். அசோக் மங்கையை ஊரில் கொண்டுவந்து விட்டுவிட்டு எப்போதோ கிளம்பியிருந்தான்.. அசோக் சென்னையில் அனைவரும் இருக்கும்போதே, அத்தனை ஏன் அமுதா இருக்கும்போது கூட அங்கே வந்து சென்றான்..

ஆனால் ஊரில் இன்னமும் இங்கே புகழேந்தியின் வீட்டிற்கு வராது போனது அனைவர்க்கும் கொஞ்சம் சங்கடமாய் இருந்தது.. அத்தனை ஏன் பொன்னிக்கே கூட இப்போது அந்த எண்ணம் வந்துவிட்டது..

ஊருக்கு கிளம்பும் முன்னே மங்கையிடம் சொல்லிக்கொள்ளவென்று சென்றவள் “ஏன் ம்மா அசோக் அங்கெல்லாம் வந்தான் வீட்டுக்கு.. இப்போ இங்க மட்டும் ஏன் வராம இருக்கான்.. எல்லாருக்கும் மனசுக்கு சங்கடமா இருக்கே…” என்று கேட்க,

“நானும் சொல்லிட்டேன் பொன்னி.. ‘அங்க வரலையா.. இங்க போகாமையா இருந்திட போறேன்..’ அப்படின்னு சொல்லிட்டான்.. இதுக்குமேல நான் என்ன சொல்ல முடியும்.. கை பிடிச்சு இழுத்துட்டு வரவா முடியும்..” என,

“சரிம்மா.. அவரும் மனசுக்குள்ளயே ரொம்ப சங்கடப்படுறார்… எல்லாரும் வெளிய எதுவும் காட்டிக்கல ஆனா மனசுல நினைப்பாங்க தானே…” என்றாள் பொன்னி வருத்தமாய்.

“என்னவோ பொன்னி.. அவன் இந்த கொஞ்ச நாளாவே சரியே இல்லை.. எதுவோ யோசனைலயே இருக்கான்.. கேட்டா எரிஞ்சு விழறான்.. சரி வேலைல தான் எதும் பிரச்சனையோன்னு கேட்டா அதுக்கும் பதிலே இல்லை.. சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பார்த்தா அதுக்கும் சரி கொடுக்க மாட்டேங்கிறான்..” என்றவர்,

“நீ ஊருக்கு போனதும், சாதாரணமா போய் அங்கே வீட்ல அவன்கூட கொஞ்சம் பேசி பாரேன்..” என்றார் பெற்ற அன்னையாய் பிள்ளைகள் என்னவோ செய்துகொள்ளட்டும் என்று விட முடியாது..

“ம்ம் சரிம்மா.. நான் பேசி பாக்குறேன்.. நீ கவலைப் படாத..” என்று பொன்னியும் ஊருக்கு கிளம்பி வந்து, இன்றோடு இருபது நாட்களுக்கு மேலாகி விட்டது..

ஆனால் அசோக்கோ தங்கையிடம் எதுவும் பேசினால் தன்னை மறந்தும் கூட எதுவும் உளரிவிடுவோம் என்றோ என்னவோ பிடிகொடுக்காமலே இருக்க, பொன்னிக்குமே வீட்டில் வேலை, பின் கிட்ஸ் கார்டன் வேலை என்று பொழுது சரியாய் நகர்ந்தது..

முன் போல் அல்லாமல், புகழ் வீட்டினரோடு இயலபாகவே பொன்னி பேசிட, அது புகழேந்திக்கு பெரும் நிம்மதி..

“இங்க பாரு.. இனிமே சண்டையோ சமாதானமோ நீங்களே பார்த்துக்கோங்க.. என்னை நடுவில இழுக்கக்கூடாது…” என்று கேலியாய் கூட சொல்லிக்கொண்டான்.. 

அவ்வப்போது சின்ன சின்ன ஊடல்களும், கூடல்களுமாய் நாட்கள் ஓட, பொன்னிக்கு இப்போதெல்லாம் என்னவோ தான் சோர்வாகி விட்டதாகவே தோன்றியது..

கிட்ஸ் கார்டனில் சிறு சிறு பிள்ளைகள் “மிஸ் மிஸ்…” என்று அவளை சுற்றுகையில் அத்தனை மகிழ்வாய் இருக்கும்.. உற்சாகமாகவே தன் வேலையை செய்தாள்.. அதையும் தாண்டி ஒரு சோர்வு ஏற்பட,

‘என்னாச்சு எனக்கு…??’ என்று யோசித்தவளுக்கு எதுவுமே விளங்கவில்லை..

வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.. எப்போதும் போலவே இருக்கிறது.. சொல்ல போனால் முன்னிருந்த டென்சன் கூட இப்போ இல்லை.. அசோக் பிரச்சனை மட்டுமே.. அதுவும் கூட அவள் பெரிதாய் எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளவில்லை..

புகழ் சொன்னது போல ‘கொஞ்சம் பொறுமையா போவோம்…’ என்று இருந்தாள்..

ஆனாலும் அன்றைய தினம் மதியத்திற்கு மேல் எல்லாம் அப்ப்டிய உடல் தளர தொடங்க, இதற்கு மேல் முடியாது என்று தோன்றவும், பெர்மிசன் போட்டுக்கொண்டே, அவளின் ஆக்டிவாவை அங்கேயே நிறுத்திவிட்டு, ஆட்டோவில் வீடு வந்துவிட்டாள்..

வந்தவள் வேறு எதுவும் செய்யவில்லை, அப்படியே உறங்கிவிட, நேரம் போனதே தெரியவில்லை.. அப்படியே உறங்கிப்போனாள்.. புகழேந்திக்கு அன்றைய நாளில் சீக்கிரமே வேலை முடிந்திருக்க, சரி அப்படியே பொன்னியையும் அழைத்துக்கொண்டே வெளியே எங்காவது சென்றுவிட்டு வீடு போவோம் என்று கிட்ஸ் கார்டன் வந்தான்..

பியூன் பார்த்தவரோ “ சார், மேடம் மதியமே கிளம்பிட்டாங்க.. ஒடம்பு சரியில்ல போல.. வண்டி கூட இங்கதான் நிக்குது…” என,

“என்னது???!!!” என்று உள்ளுக்குள் லேசாய் அதிர்ச்சியாய் இருந்தது புகழேந்திக்கு..

‘உடம்பு சரியில்லயா.. காலைல கூட நல்லாதானே இருந்தா…’ என்று யோசிக்க, அவனுக்கு ஒன்றுமே புரிபடவில்லை..

“ஓகே தேங்க்ஸ்… வண்டி இங்கயே இருக்கட்டும்… நான் கொஞ்ச நேரத்துல வந்து எடுத்துக்கிறேன்…” என்று சொல்லி வேகமாய்  வீடு வந்து காலிங் பெல் அடிக்க, அவளோ கதவே திறக்கவில்லை..

திரும்ப திரும்ப புகழேந்தி காலிங் பெல் அடிக்க, அவள் திறக்காது போக, புகழேந்திக்கு பயம் வந்துவிட்டது..

‘கடவுளே என்னாச்சு இவளுக்கு.. உடம்பு சரியில்லன்னு ஒரு போன் பண்ணா என்ன…’ என்று நினைத்தவன், வீட்டின் பக்கவாட்டில், அவர்களின் அறை பக்கம் இருக்கும் ஜன்னல் நோக்கி போய் பார்க்க, நல்ல வேலை ஒரே ஒரு ஜன்னல் மட்டும் திறந்திருந்தது..

பொன்னி அயர்ந்து உறங்கிக்கொண்டு இருப்பது தெரிய, ‘ஹப்பாடி..’ என்று ஒரு நிம்மதி..

“தூங்கிட்டு தான் இருக்கா….” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன்,

“கண்ணு…!!!! கண்ணு….” என்று சத்தமாகவே அழைக்க, முதலில் அசைவே இல்லை பொன்னியிடம்.. அப்படியொரு தூக்கம்..

அவளிடம் அசைவில்லை என்று தெரியவுமே, புகழுக்கு திரும்ப இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பிக்க, “பொன்னி…!!!!” என்று சத்தமாகவே அழைத்துப் பார்த்தான்..

பொன்னிக்கோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அது உறக்கமா இல்லை உடல் கிறக்கமா என்று அவளுக்கு விளங்காத நிலை, யாரோ எங்கே இருந்தோ அழைப்பது போல் உணர, “ம்ம்…” என்று லேசாய் முனகியவள்,  மெதுவாய் அசைந்தாள்..

பொன்னியிடம் சிறிதாய் அசைவு வெளிப்படவும் தான் புகழுக்கு கொஞ்சம் மூச்சு விடவே முடிந்தது..

திரும்ப “கண்ணு.. பொன்னி.. இங்க பாரு…” என்று சத்தமாய் கத்த, 

“ம்ம்ம்…” என்று இன்னும் சத்தமாகவே முனகியவள், கண்களை திறக்க முடியாமல் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்..

பார்வை மங்கலாய் தெரிய “டி.. இங்க பாரு கண்ணு…” என்று என்று ஜன்னல் கதவினை கொஞ்சம் தட்ட, ஒருவழியாய் திரும்பிப் பார்த்தவள் “என்.. என்னங்க,??!!!”  என்றாள் புரியாது..

அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை.. இவன் ஏன் இங்கே நின்று கத்திக்கொண்டு நிற்கிறான் என்று.. வீட்டிற்குள் வராது இதென்னா புதிதாய் என்று எண்ணியவள், முகத்தினை அழுந்த துடைத்துக்கொண்டு “என்னங்க வீடுக்குள்ள வராம இதென்ன…” என்று இறங்க முயற்சிக்க,

புகழேந்திக்கு அத்தனை நேரமிருந்த பதற்றம் சுத்தமாய் மறைந்து, ‘கத்திட்டு இருக்கேன் கேள்வி கேட்கிறா பாரு…’ என்று எரிச்சல் தோன்ற,

“வந்து ஒழுங்கா டோர் ஒப்பன் பண்ணு..” என்றவன், நேராய் வாசலுக்கு வந்து நிற்க, அதன் பின் ஒரு இரண்டு நிமிடம் கழித்தே பொன்னி கதவு திறந்தாள்..

உள்ளே வந்தவன் அவளிடம் ஒன்றுமே கேட்காது சோபாவில் வந்து அமர்ந்துகொள்ள, பொன்னியோ எதுவுமே புரியாது அவனைப் பார்த்தாள்.. புகழேந்திக்கு இத்தனை நேரமிருந்த பதற்றத்தை எல்லாம் இப்போ சமன் செய்துகொள்ள வேண்டியதாய் இருந்தது.. அதனால் கொஞ்சம் அமைதியாய் இருக்க,

இவளோ “என்னங்க.. ஏன் அப்படி வந்து எழுப்புனீங்க.. காலிங் பெல் அடிக்க என்ன வந்தது..” என்று கேட்டபடி அவனருகே வந்து அமர,

அவனோ ‘சொல்லுவ டி சொல்லுவ..’ என்று பார்க்க, “என்னங்க??!!!” என்றாள் சிணுங்கலாய்..

“கிளம்பு ஹாஸ்பிட்டல் போகலாம்..” என்றவன் அவளை ஒருமுறை பார்வையால் அளக்க,

“எதுக்கு??!! ஏன் ஹாஸ்பிட்டல்…” என்றாள் தன் அயர்வையும் மறந்து..

“ஹா!!!” டாக்டர்க்கு உடம்பு முடியலையாம்.. அதான் போய் பார்த்து ட்ரீட்மென்ட் பண்ணிட்டு வருவோம்..” என்று நக்கலாய் உரைத்தவன், அவளின் கண்களில் சுருக்கம் கண்டு,

“கிளம்புனா கிளம்பு.. வந்துட்டா ஏன் எதுக்குன்னு கேட்டிட்டு…” என்றபடி அறைக்கு நடந்தவன்,

“உடம்பு சரியில்லன்னா சொல்லணும் கூட தோணாதா???!! நீயா கிளம்பி வந்து படுத்துட்டா என்ன அர்த்தம்…” என்று கடிந்துவிட்டே செல்ல,

“அச்சோ இதான் கோவமா??!!!” என்று எண்ணியவள் “என்னங்க பெருசா எல்லாம் எதுவும் இல்லை.. என்னவோ டியர்ட்டா இருந்தது.. அதும் இப்போ தூங்கி எழவும் சரியா போச்சு…” என்றபடியே பின்னே போனாள்..

“ஆமா நல்லா தூங்கின… காலிங் பெல் அடிச்சது கூட கேட்காம…!! எதுவா இருந்தாலும் டாக்டர் சொல்லட்டும் கண்ணு.. நீ கிளம்புற…” என்றவன் அப்படியே அங்கேயே ட்ரெஸ் மாத்த,

“அய்யோ…!!! நான் இருக்கேன் கூட இல்லாம என்ன…” என்றவளும் வேறொரு உடை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போக,

“போ டி.. மனுசனுக்கு இருக்க டென்சன் உனக்கு புரியாது.. கிளம்பி வா…” என்றவன் தயாராகி விட்டான்..

பொன்னி வேண்டாம் வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்திருப்பாள் தான்.. ஆனால் என்னவோ புகழேந்தியின் முன்னால் இன்று பிடிவாதம் பிடிக்க தோன்றவில்லை.. அதிலும் அவன் முகமே அவன் டென்சனில் இருக்கிறான் வெளியே காட்டாது இருக்கிறான் என்பதனை சொல்ல, ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள்..

அதையும் தாண்டி அவளுக்குமே ஒரு எண்ணம் தான், திடீரென ஏன் இப்படி ஆகவேண்டும் என்று..

மருத்துவமனை சென்று, டாக்டரை பார்க்க, அவரோ அவளை பரிசோதித்துவிட்டு “ப்ரக்னன்ஷி டெஸ்ட் எடுத்துடலாம்..” எனவும், இருவருக்குள்ளும் ஒரு மெல்லிய அதிர்வு..

அடுத்த நொடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ‘அப்படியும் இருக்குமோ..!!!’ என்ற கேள்வியும் கூடவே ‘அப்படி இருந்திடவேண்டும்…’ என்ற அசையும் இருவருக்குமே தோன்ற, பொன்னி மெதுவாய் புகழேந்தியின் கரங்களை பற்றிக்கொண்டாள்..

புகழேந்திக்கோ இத்தனை நேரம் இல்லாத ஒரு பயம்வேறு சட்டென்று மனதில் வந்து ஒட்டிக்கொள்ள, லேசாய் வியர்க்க கூட ஆரம்பித்துவிட்டது.. பொன்னியின் கரத்தினை இறுகப் பற்றிக்கொண்டான்..

பொன்னிக்கும் உள்ளூர ஒரு பயம் தான் இருந்தாலும் வெளியில் காட்டாது, பரிசோதனைக்கு செல்ல, புகழேந்திக்கோ வெளியே காத்திருக்கும் நிமிடங்கள் எல்லாம் திடுக் திடுக் என்று இருக்க, பேசாது யாருக்கேனும் அழைத்து வர சொல்லிடலாமா என்று கூட தோன்றிவிட்டது..

குழந்தை… இதை பொன்னியும் சரி, புகழேந்தியும் சரி எதிர்பார்க்கவேயில்லை.. ஊரில் கூட ஒருசிலர் விசேசமா என்று கேட்க, புன்னகையோடு கடந்துவிட்டனர்.. வரும்போது வரட்டும் என்று இருக்க, இது நிஜமாய் அவனுள் ஒரு திடீர் மாற்றம் தான் கொடுத்தது..

‘கடவுளே கடவுளே…’ என்று உருப்போட்டு கொண்டு இருக்க, பொன்னியோ புன்னகை முகமாய் வெளியே வந்தாள்..

“என்னாச்சு..!!!!” என்று பதறி விசாரிக்க, “ம்ம்ம்…” என்றவள் இன்னும் இதழ்விரித்து சிரிக்க, அவளது சிரிப்பே அவனுக்கு ஆயிரம் அர்த்தம் கொடுத்தது..

“ஓ..!!! காட்…!!!” என்று அவனுக்குமே இதழ்கள் நடுங்கும் ஒரு சிரிப்பு வர, திரும்ப டாக்டர் அழைக்கவும், இருவரும் உள்ளே சென்றனர்..

“கங்க்ராட்ஸ் பர்ஸ்ட்.. பிளானிங் அது இதுன்னு இல்லாம.. கேசுவலா விட்டு குழந்தை பெத்துக்கிறது தான் பெட்டர்னு நிறைய பேருக்கு இன்னும் புரியலை..” என்றவர்

“கொஞ்சம் ஜெனரல் வீக்னஸ்தான்.. மத்தபடி ஷி இஸ் வெரி நார்மல்…. நெக்ஸ்ட் மன்த் இருந்து ரெகுலர் செக்கப் வாங்க..” என்று சில மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுக்க, அனைத்தையும் வாங்கிக்கொண்டு இருவரும் வீடு வரும் வரைக்கும் கூட இருவருக்கும் நடுவில் மௌனம் மட்டுமே இருந்தது..

என்ன பேசவென்று நிஜமாகவே இருவருக்கும் தெரியவில்லை..!! ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரிப்பதோடு சரி அதற்குமே எப்படி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த என்று இருவருமே தெரியாமல் முழிக்க, வீட்டிற்கு வந்த பின்னோ அவளை தன்னருகே இருத்தி அவனும் ஆமர்ந்து கொண்டான்..

“கண்ணு..!!!!!” என்று லேசாய் அணைத்துக்கொண்டவன், அவளின் நெற்றியில் தோன்றும் போதெல்லாம் முத்தமிட,

“ம்ம்ம்….” என்று அவன் கன்னம் திருப்பியவள், “வீட்ல சொல்லணுமே…” என்றாள்..

“ஆமால்ல.. நீயே சொல்லிடேன்.. நான் எப்படி சொல்ல…??!!!” என்றான் சங்கோஜமாய்..

“என்னது..!!! எப்படி சொல்லவா??!! பின்ன நான் எப்படி சொல்ல…” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, மகராசி அழைத்துவிட்டார் புகழேந்திக்கு..

“அத்தைக்கிட்ட நீங்கதான் சொல்லணும்…” எனும்போதே, “தாயே மகராசி…!!!!” என்று புகழ் சந்தோசமாய் அழைக்க,

“கண்ணு.. சும்மா பேசலாம்னுதான் போன் போட்டேன்..” என,

“சொல்லு தாயே நாங்க இப்போதான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வர்றோம்…” என்றான் இடை சொறுகளாய்..

“ஆஸ்பத்திரியா..??!! எதுக்கு என்னாச்சு??!! கண்ணு நல்லாருக்காளா??”

“நல்லா இருக்கா.. அப்படியே குட்டி கண்ணும் நல்லா இருக்கு…” என்று புகழ் விளையாட்டாய் சொல்வது போல் விஷயத்தை சொல்ல, பொன்னிக்கு சிரிப்பே வந்துவிட்டது..

‘பேச்சை பார்..’ என்று பார்த்தவளுக்கு, அவனும் பதிலாய் ஒரு சிரிப்பை கொடுத்துவிட்டு “மக்களை பெற்ற மகராசி லைன்ல இருக்கியா??!!” என்றான் உல்லாசமாய்..

அவரோ “என்னடா கண்ணு சொல்ற??!!!” என்று புரிந்தும் புரியாமல் கேட்க, “இந்தா நீ உன் மருமக கண்ணு கிட்டயே பேசு…” என்று போனை இவளிடம் கொடுத்துவிட்டான்..

‘அச்சோ என்னதிது…’ என்று பொன்னி மறுக்கும் முன்னே “கண்ணு பொன்னி..!!!” என்று மகராசி அழைத்திட, அவளையும் அறியாது “அத்தை…” என்றுவிட்டாள்..

“அவன் என்னவோ சொல்றான்…??!!! எதும் விசேசமா கண்ணு..??!!” என்று விசாரிக்கையில், அவரின் குரலில் இருந்த உணர்வுகள் பொன்னிக்கு நன்கு புரிய,

“ம்ம்…. ஆமாங்கத்தை…” என்றவளின் முகத்தினை தான் ஆசையாய் பார்த்துகொண்டு இருந்தான் புகழேந்தி..

மகராசி கொஞ்சநேரம் பதிலே பேசாது இருக்க, “அத்தை..” என்று திரும்ப பொன்னி அழைக்க,

“ரொம்ப சந்தோசம் கண்ணு.. இந்த வாரம் போல எல்லாம் வர்றோம்..” என்றவர் “உங்கம்மா கிட்ட சொல்லிட்டியா..” என்றார்..

“இல்லத்தை.. உங்கக்கிட்ட தான் முதல்ல… இப்போதான் வந்தோம்..” என, “அப்படியா முதல்ல சொல்லிடு…” என்றவருக்கு அதிலும் ஒரு அற்ப சந்தோசம்..

“சரிங்கத்தை…” என்று போனை வைத்தவளுக்கு புகழேந்தி அவளையே பார்த்துகொண்டு இருக்கவும், “என்ன??!!!” என்றாள்

“ஒன்னுமில்லையே…!!!!!!” என்று தோள்களை குலுக்கியவன், திரும்பவும் வேகமாய் அவளின் கன்னங்களில் முத்தமிட, “ம்ம் போதும் போதும்..” என்றவள் “அம்மாக்கு சொல்லணும்…” என,

“ஆமா சொல்லணும்…” என்றான் அவனும்..

“ம்ம்ச் கிண்டலா…??!!!” என்றவள் “போன் போட்டு கொடுங்க…” என, அவனும் அமைதியாகவே போட்டுக் கொடுக்க, “ம்மா..!!!” என்றவள் கொஞ்ச நேரம் பேசாது இருந்தாள்..

“என்ன பொன்னி… போன் போட்டுட்டு பேசாம இருக்க…??”

“அதும்மா…!!!!” என்றவள் தயங்கி புகழ் முகம் பார்க்க, “நீ பேசு..” என்றவன் நகர்ந்துவிட்டான்..

அவன் போனதுமே “ம்மா டாக்டர்ட போயிட்டு வந்தோம்…” என்றதுமே, அவளின் தயக்கமும், நிறுத்தி நிறுத்தி பேசும் விதமும் மங்கைக்கு என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து போனது..

“நி… நிஜமா??!!!!!” என்று கேட்க, “ம்மா ஆமா ம்மா…” என்றாள் கொஞ்சம் அழுத்தி..

“ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு டி பொன்னி…” என்றவருக்கு குரல் நடுங்கிவிட,

“ம்மா… ம்மா…” என்றவள் “அண்ணனுக்கு நீ சொல்லிடுறியா??!!” என,

“ஹா ஹா சரி..” என்றுசொல்லி, மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தார்..

“பேசியாச்சா வரலாமா??!!!!” என்று புகழ் உள்ளிருந்து கேட்க,

“ஓ..!!! ரொம்பத்தான்…!!!! வாங்க…” என்று பொன்னியும் சொல்ல, புகழ் வந்தவனோ “கண்ணு உனக்கு என்ன வேணும் கேளு…” என்றான்..

“என்ன??!! எனக்கு என்ன வேணும்???!!”

“ம்ம்ச்.. இதுவரைக்கும் உன்கிட்ட நான் இப்படி கேட்டதே இல்ல கண்ணு.. ஆனா இப்போ தோணுது.. எதாவது கேளு.. உனக்கு பிடிச்சது.. இல்லை வேண்டியது எதுவும்.. ஏதாவது…”  என்று புகழ் சொல்லவும், அவன் முகத்தையே பார்த்தவள்,

“ம்ம்ம்… எனக்கு??!!!” என்று யோசித்தவளுக்கு “சத்தியமா எதுவும் தோணலை…” என்ற பதில் மட்டுமே வந்தது…

“இப்படி சொன்னா எப்படி???”

“எனக்கு தோணலை.. நான் என்ன செய்ய…” என்றவள் “ஆனா பசிக்குது…” என்று சொல்ல,

“இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன??!!!!” என்று கடிந்தவன், “நான் ஏதாவது வாங்கிட்டு வர்றேன்…” என்று வெளியே கிளம்பினான்..

“வேணாம்… வீட்ல பண்றேன்… ஹோட்டல் சாப்பாடு வேணாம்..” என்றவளை முறைத்தவன் “அட்லீஸ்ட் ஒரு ஸ்வீட்டாவது வாங்கிட்டு வர்றேனே…” என, சந்தோசமாய் தலையாட்டினாள்..   

புகழேந்தி கிளம்பியதும், அடுத்தடுத்த அழைப்பு அங்கே ஊரில் இருந்து, நித்யா அன்பரசி எல்லாம் பேசினர்.. பொன்னியும் அவர்களோடு சந்தோசமாகவே பேசியபடி சட்னி செய்து, புகழ் வரவும் தோசை சுடுவோம் என்று இருக்க, ஸ்வீட் வாங்க போன புகழேந்தியோ போகும் போது இருந்த இனிமை சிறிதும் இல்லாது, அப்படியே உணர்வுகளற்ற ஒரு முகத்துடன் வீடு திரும்பினான்..          

                                                         

   

        

 

       

 

Advertisement