Advertisement

தோற்றம் – 30

“அண்ணே நீயும் மகாவும் மேடைக்கு வாங்கண்ணே.. இப்படி யாரோ போல வந்து உட்கார்ந்திருந்தா எப்படிண்ணே…” என்று கெஞ்சாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தார் பரஞ்சோதி..

மன்னவனோ “கல்யாணத்துக்கு வந்ததே பெருசு.. போ போய் ஆகவேண்டியதை பாரு ஜோதி.. சும்மா அதை இதை பேசி எங்களை கிளம்ப வச்சிடாத..” என்ருசொல்ல,

மகராசியோ “மதினி.. நாங்க இங்க வந்தது எங்க ரெண்டு மருமகள்களுக்காக மட்டும்தான்.. நீங்க போய் உங்க வேலையை பாருங்க.. எங்க முறையை நாங்க பண்ணிட்டோம்.. இதுக்கு மேல எதுவுமில்ல…” என்று அவர் பங்குங்கு முகத்தினை திருப்பிவிட

பரஞ்சோதியோ நித்யாவை தான் பார்த்தார்.. ஏதாவது செய்யேன் என்று.. அவளோ இளங்கோவிற்கும் மகராசிக்கும் இடையில் அமர்ந்திருந்தாள்.. இதில் அவள் என்ன சொல்ல முடியும். அவளுக்கே பரஞ்சோதி செய்தது எண்ணி மனம் பதறிக்கொண்டு இருந்தது..

‘இதோடு உனக்கு பிறந்த வீடு உறவு அவ்வளோதான்…’ என்று இளங்கோ சொன்னாலும் சொல்லிடுவான் என்ற பயம் நித்யாவிற்கு..

பரஞ்சோதியோ மகளை பார்த்து “நித்யா நீயும் இப்படி வந்து யாரோ போல உட்கார்ந்துட்டா எப்படி??” என்று நீலி கண்ணீர் வடிக்க..

“ம்மா நீ போ.. போய் சத்யா பக்கத்துல இரு..” என்றவள் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை..

ஆனாலும் நித்யாவிற்கு கண்களில் கண்ணீர் கோர்த்திருக்க, குரலும் கரகரப்பாய் வர, மகராசி அவளைப் பார்த்தவர், என்ன நினைத்தாரோ “நித்யா நீ போ.. போய் சத்யா கூட இரு…” என,

இளங்கோவோ வேகமாய் “ம்மா அதெல்லாம் வேணாம்.. அவ இருக்கட்டும்.. நம்ம கிளம்புறப்போ கிளம்பனும்..” என்றான் நித்யாவையும் பரஞ்சோதியையும் பார்த்து..

மகராசியோ “இல்லடா போகட்டும்.. சத்யா என்ன செஞ்சா பாவம்.. அவளுக்காகவாது போகட்டும்…” என்றவர் நித்யாவை நீ போ என்று சொல்ல, அவளோ தயக்கமாய் இளங்கோ முகம் பார்க்க,

“ம்ம் போ.. ஆனா நாங்க கிளம்பவும் கூட வந்திடனும் ..” என, சரி என்று தலையாட்டி விட்டு போனாள் நித்யா..

நடந்து செல்லும் போதே பரஞ்சோதி என்னவோ சொல்ல, “இங்கப்பாரும்மா நீ பண்ணதுக்கு இங்க எல்லாரும் வந்ததே பெருசு.. சும்மா அதை இதை எதுவும் சொல்லாத. பின்ன நானே கூட கிளம்பிடுவேன்..” என்று மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் காட்ட, பரஞ்சோதி கப்சிப் என்றாகிப் போனார்..

முதல் நாள் நிச்சயதார்த்தம், முஹூர்தக்கால் நடுதல் எல்லாம் சிறப்பாய் நடந்து, மறுநாள் அதிகாலையில் திருமணமும் நன்றாய் நடந்தேறிட, மன்னவன் குடும்பத்தினர் அனைத்திலும் ஒரு எட்டு ஒதுங்கியே இருந்துகொண்டனர்… பரஞ்சோதி கொஞ்சம் அடக்கி வாசிக்க, நித்யாவோ பார்த்து பார்த்து தான் நடந்துகொண்டாள்..

நித்யாவின் அப்பாதான் “என்ன மச்சான் ஜோதி பத்தி தான் தெரியுமே.. நீங்களும் இப்படி செய்யலாமா???” என்று மனம் கேளாமல் பேசிட,

“எங்க வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுக்கும் நாங்க முக்கியத்துவம் கொடுக்கணுமே மச்சான்.. இப்போ வரைக்கும் பொன்னி ஒருவார்த்தை குறையா எதுவும் பேசலை…. என்னை கூப்பிடலை நான் வரலைன்னு தான் சொல்லிச்சு..” என, அதற்குமேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை..

உண்மையும் அதானே.. புகழ் சொன்னது இதுதான் ‘பொன்னியை கூப்பிடலை அதுனால நானும் வரலை…’ தப்பித்தவறி கூட அவன் மங்கையை அழைக்கவில்லை என்ற சொல்லை சொல்லவில்லை… நாளைக்கு இதுவே எப்படி வேண்டுமானாலும் திரும்பும் என்று தெரியும்.. ஆனால் அதனை பொன்னியை சொல்லவைத்தான்..

“என்னையும் கூப்பிடலை.. அம்மாவையும் கூப்பிடலை.. பின்ன எப்படி வர்றது???” இதுமட்டும் தான் பொன்னியும் சொன்னது..

இதற்குமேல் பரஞ்சோதி பற்றியோ, இல்லை வேறு எதுவுமோ அதிகமாய் புகழேந்தியும் சரி பொன்னியும் சரி வாய் திறக்கவில்லை.. அவர்கள் இப்படி சொன்னதே மன்னவனுக்கு மனதில் ஒரு தாக்கம் கொடுத்திருந்தது..

வயதில் சிறியவர்கள் என்றாலும் எத்தனை நாகரிகமாய் நடந்துகொண்டனர் என்று.. அவர்களின் அந்த நடத்தைக்கு மரியாதை செய்யவேண்டாமா என்றுதான் இருந்தது அவருக்கு.. என்னதான் உடன்பிறந்த தங்கை என்றாலும் பரஞ்சோதி செய்ததை யார் ஏற்றுகொள்ள முடியும்??

திருமணம் முடிந்து அனைவரும் கிளம்ப, சத்யாவோ நித்யாவின் கரங்களை பிடித்துக்கொண்டு “நீயாவது இரேன் க்கா…” என்றாள்..

நித்யாவிற்கு மத்தளத்திற்கு இருபக்கம் அடி போல்தான் நிலை.. தன்கையின் திருமணம்.. அவளோடு இருந்து எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசை.. இன்னொருபுறம் அவளின் கணவன் வீட்டார்..

“இல்ல சத்யா… அவர் ஏற்கனவே கோபமா இருக்கார்…” என்று நித்யா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

அன்பரசி வந்தவள் “நித்யா நீ வேணும்னா இருந்துட்டு வா.. நாங்க போறோம்…” என்றாள்..

“இல்ல வேணாம் மதினி நான் வர்றேன்…” என்று நித்யாவும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப, பரஞ்சோதியோ “கூட பிறந்த தங்கச்சி கல்யாணம்.. அதுக்கே யாரோ போல வந்துட்டு போனா எப்படி???” என்று நித்யாவை கேட்க,

அன்பரசி பொறுத்துப் பார்த்தவள் சொல்லியேவிட்டாள் “அத்தை இதுக்கு காரணம் நித்யா இல்லை நீங்க…” என்று..

என்ன நடந்தாலும் இந்த பரஞ்சோதிக்கு பிறவி குணம் என்பது மாறவே மாறாது போல. அவ்வப்போது அனைவரிடமும் வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்க, மகராசியும் இளங்கோவும் மேடைக்கு வந்தவர்கள், சத்யாவிடம் அவளின் கணவனிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப, நித்யாவோ அவர்களை பாவமாய் பார்த்துகொண்டு இருந்தாள்..

இளங்கோ “கிளம்பு..” என்றுசொல்ல,  பரஞ்சோதியோ மகளின் கரங்களை பிடித்து நிற்க,

மகராசி அவர்களை பார்த்தவர், “இளங்கோ.. நித்யா வேணும்னா இன்னிக்கும் நாளைக்கும் இருக்கட்டும்.. கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்.. பையனை நம்ம கூட்டிட்டு போகலாம்…” என்றதும் நித்யாவின் முகம் அப்படியே கணவனை கண்டது..

அவனோ, “நீ என்னவோ பண்ணு.. ஆனா நான் வந்து கூப்பிட மாட்டேன்.. நீதான் வரணும்..”  என்றதுமே,

“நான்.. நானே கொண்டு வந்து விட்டுட்டு போறேன்…” என்றார் பரஞ்சோதி….

ஒருவழியாய் நித்யா இங்கேயே இருந்துவிட, மற்றவர்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர்.. உறவுகளில் சிலரோ “என்ன இது இப்படி விருந்தாளிங்க போல உடனே கிளம்புறீங்க???” என்று கேட்க,

இன்னும் சிலரோ “எங்க புகழேந்தி பொன்னி வரலையா???” என்றும் விசாரிக்க, யாருக்கும் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை..

அதிலும் ஒருவரோ “என்ன மகராசி உன் ரெண்டாவது மருமகளுக்கு எதுவும் விசேசமா ?? அதான் கூட்டிட்டு வரலையா??” என்று விசாரிக்க,

‘இதேதடா.. ஒன்றுபோனால் இன்னொன்று என்று ஒவ்வொரு விதமாய் பேசுகின்றனர்’ என்றுதான் போனது… ஆனாலும் எப்படியோ அங்கிருந்து சமாளித்து கிளம்பிவிட்டனர்..

இங்கே வீட்டிலோ பொன்னியும் புகழேந்தியும் மட்டும் இருக்க, மங்கை ஒருமுறை அழைத்து பேசினார், பொன்னியும் அனைத்தையும் சொல்லிட,

“என்னவோ டி.. ஆனா அவங்க வீட்டுக்கு வந்தாங்கன்னா நல்லபடியா பேசு.. வேற எதுவும் கேட்டுடாத…” என்றுமட்டும் மங்கை சொல்ல,

“ம்மா நான் அவங்கக்கிட்ட பேச என்ன இருக்கு.. வந்தாங்கன்னா வாங்கன்னு கேட்பேன் அவ்வளோதான்… அசோக் என்ன பண்றான்?? பொண்ணு பாக்குறது பத்தி எதுவும் சொன்னானா??” என்றாள் அசோக் கொஞ்சம் எதுவும் மாறினானா என்று பார்த்து..

பொன்னி இந்த பேச்சு பேசவுமே புகழேந்தி அவளை முறைக்க, அவனைப் பார்த்து ‘இருங்க…’ என்று சைகை காட்டிவிட்டு, “ம்மா உன்னைத்தான் கேக்குறேன்… அசோக் எதும் சொன்னானா?? ஏன் அமைதியா இருக்க??” என்றாள்..

“என்ன சொல்ல சொல்ற பொன்னி… இதை பத்தி வாயே திறக்கல.. நான்தான் கேட்டேன், அதுக்கும் முறைச்சான்.. சரி கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போமேன்னு விட்டேன்.. இன்னிக்கு ராத்திரி நானும் அசோக்கும் ஊருக்கு வர்றோம்.. நீ எப்போ கிளம்புற??”

“ஹ்ம்ம் தெரியலைம்மா… எப்படியும் ரெண்டு நாள் ஆகும் நினைக்கிறேன்..” என்றவள், அப்படிதானே என்பதுப்போல் புகழைப் பார்க்க, அவனும் ஆம் என்றுதான் தலையை ஆட்டினான்..

“ஓ.. சரி பொன்னி.. நாளைக்கு காலைல வந்து விசேசம் எப்படி நடந்ததுன்னு விசாரிச்சுக்கிறேன்…” என்றவர் வைத்துவிட,

“சரிம்மா…” என்று இவளும் பேச்சை முடிக்கவும், திரும்பவும் புகழேந்தி பொன்னியை முறைத்தான்.

“என்ன நீங்க சும்மா சும்மா முறைக்கிறீங்க????”

“அசோக் கல்யாணம் பத்தி பேசி பேசி நீதான் அத்தையையும் டென்சன் பண்ற.. நீயும் டென்சன் ஆகிக்கிற…” என்றவனின் பார்வையில் என்ன இருந்ததுவோ பொன்னிக்கு சுத்தமாய் புரியவில்லை, ஆனால் புகழேந்தியின் குரலில் அப்பட்டமாய் அவள் இப்படி பேசுவது பிடிக்கவில்லை என்பதுமட்டும் நன்கு புரிந்தது..

“அதெப்படி பேசாம இருக்க முடியும்..??? நான் அசோக்கிட்ட கேட்கலையே.. அம்மாக்கிட்ட தானே கேட்டேன்…”

“அதைதான் சொல்றேன் கண்ணு.. சில விஷயம் நீயும் விடுறதில்ல.. ரொம்ப பிடிவாதம் பண்ற… அசோக் ஒன்னும் கல்யாணமே வேணாம் சொல்லலை.. இப்போ வேணாம்னு தான் சொன்னான்…” என்றான் புகழ் ஒருவித எரிச்சலில்..

“அதைதான் நானும் சொல்றேன்ங்க.. அண்ணனை கேட்டுதான் பொண்ணு பாக்கவே ஆரம்பிச்சோம்.. இப்போ நடுவில எதும் வேணாம் நிறுத்துன்னு சொன்னா என்ன அர்த்தம்.. அவன் ஆயிரம் சொல்லட்டும் எங்க மனசு பதறாதா என்னவோ ஏதோன்னு…” என்று பொன்னியும் கொஞ்சம் வேகமாய் பேச,

“இதான்.. இதைதான் சொன்னேன் நீ கல்யாணத்துக்கு அப்புறம் மாறிட்டன்னு..” என்றான் புகழ் நேருக்கு நேராய் அவளைப் பார்த்து.

புகழேந்தி இப்படி சொன்னதுமே பொன்னிக்கு அத்தனை நேரம் இருந்த கொஞ்ச பொறுமையும் போய், கண்கள் அப்படியே விரிய, “என்ன மாறிட்டேன்.. நானும் பாக்குறேன் சும்மா அதையே சொல்றீங்க??? என்ன மாறிட்டேன் சொல்லுங்க…” என்று படபடவென பேச,

“இதோ.. இதுதான்.. இப்படி எல்லாத்துக்கும் டென்சன் ஆகறது.. முன்னாடி இப்படிதான் இருந்தியா.. சின்ன சின்ன விசயத்தை கூட எவ்வளோ அழகா புரிஞ்சு  நடந்துட்டு இருந்த நீ…” என,

பொன்னியோ ‘வா வா இதுக்கு தான் காத்துட்டு இருந்தேன்..’ என்பதுபோல் தலையை ஆட்டி, அவனுக்கு நேராய் அமர்ந்தவள்,

“அதெல்லாம் நீங்க கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போயிருந்தா தெரிஞ்சிருக்கும்… அதுவும் இவ்வளோ பெரிய குடும்பத்துல கல்யாணம் பண்ணி வந்திருந்தா இன்னும் நல்லா தெரிஞ்சிருக்கும்.. மாமனார்.. மாமியார்… நாத்தனார்னு.. எல்லாருக்கும் நடுவில புதுசா வந்திருந்தா இன்னும் நல்லா புரியும்…” என்றவள் புகழேந்தியை நக்கலாய் தான் ஒரு பார்வை பார்த்தாள்..

‘என்ன சொல்ற கண்ணு….’ என்று கண்களை இடுக்கி புகழ் பார்க்க,

“புரியலையோ…!!!” என்று இதழ்களை குவித்தவள்,

“நான் எல்லாத்துக்கும் டென்சன் ஆகறேன் சொல்றீங்க.. ஆனா ஓரளவாது நான் சரியா நடந்துக்க போய்தானே நீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்க.. இல்லைன்னா என்னாகிருக்கும் சொல்லுங்க… என்னைவிட நீங்கதான் டென்சன் ஆகிருப்பீங்க..” என, யோசனையாய் புகழேந்தி பார்த்தான்..

“நான் கொஞ்சம் உங்களை எதுக்காது கம்ப்பல்  பண்ணிருந்தா நீங்க என்ன செஞ்சிருப்பீங்க..??” என்று பொன்னி புருவங்களை உயர்த்திட,

“ம்ம்.. நீ சொல்றது எல்லாம் எனக்கும் புரியுது கண்ணு.. ஆனா…” என்று அவன் பேசும்போதே,

“இருங்க.. அசோக் உங்களை பொறுத்த வரைக்கும் எனக்கு அண்ணன்ங்கிற உறவு மட்டும் தான்.. ஆனா அவன் எனக்கு அண்ணனுக்கும் மேல.. எங்கப்பா போனப்புறம் அவன்தான்  எனக்கும் அம்மாக்கும் எல்லாமே.. இப்போ நான் செட்டில் ஆகிட்டேன்.. எனக்குன்னு நீங்க வந்துட்டீங்க.. அதுக்காக நான் என் அண்ணனை நினைக்காம இருக்க முடியுமா???” என்று அவள் கேட்டதில் கொஞ்சம் புகழேந்தி ஆடித்தான் போனான்..

லேசாய் திகைத்துப் பார்த்தவன் “கண்ணு.. நான் அப்படி எல்லாம் சொல்லலை….” என்று வேகமாய் புகழ் மறுக்க,

“நீங்க அப்படி சொல்லலை.. பட் நான் மாறிட்டேன்னு சொன்னீங்க இல்லையா அதனால சொன்னேன்… கல்யாணத்துக்கு முன்னாடி நான் எது பண்ணாலும் நான்தான் பொறுப்பு.. இப்போ அப்படியில்லை..

சட்டுன்னு ஏதாவது நான் பண்ணாலும் அதுக்கு நீங்களும் சேர்த்து தான் பதில் சொல்லணும்.. என்னால நீங்க யார் முன்னாடியும் பதில் சொல்ற சூழ்நிலை வந்தா அது எனக்கு பிடிக்காது.. கஷ்டமா இருக்கும்.. இப்போ புரியுதா நான் ஏன் மாறிட்டேன்னு…” என்று பொன்னி கேட்டிட,

புகழுக்கு ‘எனக்காகவா??’ என்று தோன்றினாலும் மனதிற்குள் அது ஒருவித பெருமையாய் இருந்தது..

‘நான் இப்படிதான் இருப்பேன்.. நீ என்னவோ செய்…’ என்று இல்லாமல், ‘என்னால நீ யாருக்கும் பதில் சொல்ற நிலைமை வரக்கூடாது…’ என்று பொன்னி நினைப்பது எத்தனை மேலானது..

இதற்காகவே புகழ் யாரிடம் வேண்டுமானாலும், யார் முன் வேண்டுமானாலும் பொன்னிக்கு ஏற்றுக்கொண்டு பேசுவானே..

தானாகவே புகழேந்தியின் இதழ்கள் ஒரு புன்னகையில் விரிய, எழுந்து அவளருகே போய் அமர்ந்தவன் “என் கண்ணுன்னா  கண்ணுதான்…” என்று கொஞ்சிட,

“போதும் போதும்.. இவ்வளோ விளக்கம் கொடுத்தா தான் சாருக்கு புரியுது.. இல்லைன்னா புரியாது.. டியூப் லைட்…” என்று வேண்டுமென்றே பொன்னி நக்கல் பேச,

“சரிதான்.. நீ புல்லுகட்டா இருக்கும்போது நான் டியூப்லைட்டா இருந்துட்டு போறேன்….” என்று புகழ் இரண்டு கைகளையும் விரித்து தோளை குலுக்க, பொன்னியோ அவன் செய்கையை பார்த்து கலகலவென்று சிரித்துவிட்டாள்..

அவள் சிரிப்பதையே பார்த்தவன் “ஹப்பாடி சிரிச்சுட்டியா.. இதான்.. இந்த புன்னகை புல்லுக்கட்டு தான் அடிக்கடி மிஸ் ஆகிடுறா.. அதுமட்டும் மிஸ் பண்ணாம பார்த்துக்கோ எனக்கு அது போதும்…” என்று அவள் கன்னங்களை லேசாய் வருடினான்..

“ஆ.. ஆ.. சரி சரி.. இப்போ சார் எதுக்கு புல்லுக்கட்டு புல்லுக்கட்டுன்னு கொஞ்சிட்டு இருக்கீங்க தெரியுது.. அதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது…” என்று செல்லமாய் அவனை மிரட்டியவள்,

“எல்லாம் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க.. வேலை இருக்கும்..” என்றுசொல்லி நகர்ந்தாள்.        

“ஹ்ம்ம் அப்பப்போ இவ பால்வாடி டீச்சராவும் மாறிடுறா..” என்று புகழ் சத்தமாகவே முணுமுணுக்க,  “என்னது..!!!” என்று திரும்பியவள் விரல் நீட்டி லேசாய் மிரட்டிவிட்டு செல்ல,

“ஹா… ஒண்ணுமில்லைங்க மிஸ்…” என்று வேண்டுமென்றே கிண்டல் செய்து புகழ் சிரிக்க, அவனது சிரிப்பும் சேர்த்து பொன்னிக்கு இன்னமும் சிரிப்பு கொடுத்தது..

அதே சிரிப்பினூடே வீட்டில் இருந்த வேலைகளை பார்த்தவளுக்கு புகழேந்தியும் உதவ, சத்யாவின் திருமணத்திற்கு போனவர்களும் வீடு வந்துவிட்டனர்..

“கல்யாணம் எப்படி நடந்தது…??” என்று புகழ் விசாரிக்க, பொன்னியும் அதையே தான் மகராசியிடம் கேட்டாள்..

“நல்லா நடந்துச்சு கண்ணு.. எல்லாம் உங்களைத்தான் கேட்டாங்க..” என்று மகன் மருமகள் இருவருக்கும் பொதுவாய் பதில் சொல்ல,

“கூப்பிட்டிருந்தா கண்டிப்பா வந்திருப்போம்…” என்றுமட்டும் சொன்னான் புகழ், பொன்னி அதுவும் சொல்லவில்லை..

“நித்யாக்கா எங்க??” என்றுமட்டும் கேட்டுக்கொண்டாள்..

“அவளை இருந்து ரெண்டுநாள் கழிச்சு வர சொல்லிருக்கேன்.. வேலை இருக்கும்தானே அங்கே..”

“அதும் சரிதான் அத்தை..” என்று பொன்னி சொல்லவும், மன்னவன் “மா பொன்னி, உங்க அம்மா போன் எதுவும் பண்ணாங்களா???” என்று விசாரித்தார்..

‘என்ன திடீர்னு…!!’ என்று வியந்தவள் “ம்ம் பண்ணாங்க மாமா.. இன்னிக்கு நைட் அம்மாவும் அண்ணனும் ஊருக்கு வர்றாங்க போல.. நாளைக்கு வந்து இங்க விசேசம் விசாரிச்சுக்கிறேன் சொன்னாங்க…” எனவும்,

“ம்ம் ஜோதி சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கணும்…” என்று மன்னவன் சொல்லவும்,

“ஐயோ அதெல்லாம் வேணாம்..!!!!” என்று புகழேந்தியும் சரி, பொன்னியும் சரி வேகமாய் ஒரேதாய் பதில் சொல்ல, மன்னவனோ இருவரையும் மாறி மாறித்தான் பார்த்தார்…

பொன்னி புகழை நான் பேசிக்கிறேன் என்று பார்த்தவள் “வேணாம் மாமா… மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை.. அதெல்லாம் வேணாம்.. நீங்க என்ன தப்பு பண்ணீங்க.. அம்மா விசாரிக்கத்தான் வர்றாங்க.. நீங்க இப்படி மன்னிப்பு கேட்பேன் அது இதுன்னு சொன்னா நான் அம்மாவை வரவேணாம் சொல்லிடுவேன்..” என்றிட,

அனைவருமே ‘அம்மாடியோ…’ என்றுதான் பார்த்தனர்..

ஜெயபால்தான் இறுதியில் “எல்லாரும் இந்த பேச்சை விடுங்க.. போங்க போய் எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க…” என்று அனைவரையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தான்..

புகழ் அறைக்கு வந்ததுமே பொன்னியிடம் “என்னோட புல்லுக்கட்டு மாறவேயில்லை..” என்று அவளை இறுக கட்டிக்கொள்ள,

“கடவுளே…!!!!!!” என்று பொன்னி தலையில் கை வைத்துக்கொண்டாள்.

சொன்னது போலவே மங்கை வந்து மறுநாள் விசேசம் விசாரித்து செல்ல, மன்னவன் வேறெதுவும் சொல்லவில்லை “மனசுல எதுவும் வச்சுக்கவேணாம்..” என்றுமட்டும் சொல்ல,

“நான் எதுவும் அப்படி தப்பா நினைக்கலை..” என்று மங்கையும் சொல்லிட, அத்தோடு இது முடிந்தது..

அசோக் வந்தவன், இம்முறையும் அங்கே வரவில்லை.. அதுமட்டுமே அனைவருக்கும் குறை, புகழ் கூட கேட்டுவிட்டான், “சென்னைல எல்லாரும் இருக்கப்போ வர்றான்.. இங்க வர்றதுக்கு என்னவாம்???!!” என்று பொன்னியிடம்..

“அதை நீங்களே அசோக் கிட்ட கேளுங்க… நான் நடுவில வரமாட்டேன்..” என்று பொன்னி ஒதுங்கிக்கொள்ள,

“போடி… நாளைக்கு பின்ன எதுக்காவது இந்த மச்சான் தயவு வேணும் அப்போ இருக்கு..” என்று புகழ் விளையாட்டாய் மிரட்ட,

“அப்பவும் இதான் சொல்லுவேன்.. என்னை நடுவில இழுக்காதீங்கன்னு…” என்று பொன்னி சொல்ல,

“நீ சரியான ஆளுதான்…” என்று சொல்லிக்கொண்டான் புகழேந்தியும்..

நித்யா அப்படி இப்படி என்று இரண்டு நாளில் வந்து சேர்ந்திட, பரஞ்சோதியும் அவர் கணவரும் தான் விட வந்தனர்.. வந்தவர்களை பொன்னியும் சரி புகழேந்தியும் சரி ‘வாங்க..’ என்றதோடு சரி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை..

பொன்னி, நித்யாவிடம் “என்னக்கா எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா…” என்றுமட்டும் வினவிக்கொண்டாள்..

பரஞ்சோதியோ “நீங்க இவ்வளோ பெருசா இதை நினைப்பீங்கன்னு நான் நினைக்கலியே.. என் அண்ணனே யாரோ போல வந்திட்டு போனாரே…” என்று அழாத குறையாய் பேச,

“அத்தை நாங்க இப்பவும் எதையும் பெருசா நினைக்கலை.. அதான் நாங்க மட்டும் வரலை..” என்று புகழ் சொன்னது எந்த அர்த்தம் என்று அவனுக்கு மட்டுமே வெளிச்சம்..

ஆனால் மன்னவனோ “ஜோதி.. இதுபத்தி பேசுறதுன்னா அதுக்கு இந்த வீடு இடமில்ல…” என்றுவிட, அவ்வளவுதான் பரஞ்சோதி வாயை மூடிக்கொண்டார்.. அதற்கு பிறகும் ஏதாவது பேச அவர் என்ன முட்டாளா என்ன…      

 

Advertisement