Advertisement

தோற்றம் – 3

“ண்ணா.. நீதான் இப்படியிருக்க.. அவங்க எல்லாம் நல்ல கல்லு மாதிரிதான் இருக்காங்க.. அடுத்த வாரம் ஊருக்கு வா.. என்ன நடக்குதுன்னு பாப்போம்..” என்று பொன்னி அசோக்கிடம் சொல்ல,

அவனோ, “அதெல்லாம் வேணாம் பொன்னி.. தேவையில்லாத பிரச்சனை வரும். அப்புறம் அம்மா வருத்தப்படும்….” என, அவனையே ஒரு பார்வை ஆழமாய் பார்த்தவள்,

“ஏன்டா இப்படியிருக்க.. நீயென்ன அவ்வளோ நல்லவனா?? அந்த பொண்ணுக்காக அடிவாங்கின சரி..ஆனா இப்படி வீட்டுக்கு வரமாட்டேன்னு இருந்தா எப்படி..” என்றவளுக்கு இம்முறை குரலில் சற்று எரிச்சலும்..

அசோக்கிற்கு தனியார் கம்பனி ஒன்றில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை.. தன்னோடு இங்கேயே வந்துவிடும்படி அம்மாவையும் தங்கையையும் அழைக்க, மங்கை ‘எனக்கு இந்த பட்டணத்து வாழ்க்கை வேணாம் சாமி..’ என்றுவிட்டார்..

பொன்னி படித்தது வேலைப் பார்த்தது எல்லாம் சென்னையில் என்றாலும், இப்போது மங்கைக்காக அவரோடு அங்கே கிடைத்த ஒரு வேலையைப் பார்த்துகொண்டு இருக்க, வசதிகள் இருந்தாலும் அதனை விரும்பாத எளிமையான கிராமிய வாழ்வு அவர்களுக்கு, அசோக் இங்கேயே சொந்தமா ஒரு ப்ளாட் வாங்கி குடியிருந்தான்..

“ம்ம்ச் கொஞ்ச நாள் ஆகட்டும் பொன்னி..” என்றவன் இருவரும் உண்ட தட்டை எடுத்துக்கொண்டு சின்க் நோக்கி செல்ல,

“இதேதான் நீ இந்த ரெண்டு மாசமும் சொல்லிட்டு இருக்க.. தப்பு உன்பேர்ல இல்லை, ஆனாலும் நீ வாய் மூடிட்டு இருக்க.. அதைகூட விடு.. ஆனா வீட்டுக்கு வாண்ணா.. எங்களுக்கு அங்க யார் இருக்கா..” எனும்போதே, அசோக் திரும்பியவன்,

அவளின் மண்டையில் லேசாய் கொட்டி “நீ இருக்கியே.. போதாதா.. அன்னிக்கே அப்படி நின்ன..” என்று அசோக் சற்று பெருமையை பார்க்க,

“ம்ம்ச் ஆமா.. அதுக்குதான் எப்போ பார் அவங்கம்மா என்னை சண்டிராணின்னு சொல்றாங்க…” என்று பொன்னி முகத்தை சுருக்க, “யாரு… யாரு அம்மா???” என்றான் அசோக் புருவத்தை சுருக்கி..

“அது.. ஆ.. அதான்.. அந்த அமுதாவோட அம்மா.. எப்போ பார் சண்டிராணின்னு சொல்றாங்கண்ணா..” என்றவள், “அவங்க ரெண்டாவது பையன் கிட்ட கூட அப்படித்தான் சொன்னாங்க..” என்றபடி மெல்ல புருவத்தை மட்டும் உயர்த்தி அசோக்கைப் பார்த்தாள்.  

அசோக்கும் அவளைப் பார்த்தவன் “என்ன விஷயம் பொன்னி.. எதுன்னாலும் முழுசா சொல்லு..” என,

“அது…” என்று தயங்கியவள்,

“தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்கிறது தான் பெரிய தப்பு.. நம்மதான் சொல்லல.. ஆனா அமுதா.. அவளாவது சொல்லிருக்கலாம் தானே.. அப்போ விடு.. இப்போவரைக்கும் அவ ஊமைக்கொட்டான் போலதான இருக்கா…” என, இரண்டு நொடிகள் வரை அமைதியாய் இருந்த அசோக்,

“அந்த பொண்ணுக்காகன்னு முடிவு பண்ணியாச்சு.. அதுனால விட்டிடு பொன்னி.. எல்லாமே கொஞ்ச நாள்ல சரியாகிடும்.. இதெல்லாம் பெருசா எடுத்துக்காத..” என்று சொல்ல,

“ஹ்ம்ம்.. உனக்கெல்லாம் ஊருக்கு முன்னாடி ஒரு சிலை வைக்கணும்.. அவ்வ்வ்வளோ நல்லவன் நீ..” என்றவள் “ஆனா நான் அப்படியில்ல..” என்று சொல்ல,

“ஹா ஹா நீ.. நீயா இரு போதும்..” என்றவன், மேலும் தங்கையோடு பேச, இருவருக்கும் பேச்சும் வேலையுமாய் பொழுது கழிந்து.

அசோக்கும் பொன்னியும் ஒருவருக்கு ஒருவர்  அப்படியே நேர்மார்.. அவன் பரம சாது.. இவளோ படபட சடசட.. ஆனாலும் குணத்தில் இருவருமே ஒன்று.. ஆகையால் மட்டுமே மங்கை இந்தளவில் மக்களைப் பற்றி கவலையில்லாமல் இருப்பது..  

இருவருமே  உறங்குவதற்கு முன்னர் மங்கையிடம் பேசிவிட்டு உறங்க, அங்கே புகழேந்தியோ உறக்கம் வராது புரண்டுக்கொண்டு இருந்தான்..

வீட்டில் அடுத்து யாரிடமும் அவன் பேசவேயில்லை.. மகராசி வந்து என்ன ஏதென்று கேட்க, ஒரேதாய்  “நாளைக்கு ஊருக்கு போறேன்..” என்றவன், அடுத்து தெரிந்த மெக்கானிக்கை அழைத்து அவனது காரை சரி செய்துகொண்டான்..

ஞாயிற்று கிழமை விடிந்ததுமே புகழேந்தி கிளம்பும் விஷயம் அனைவர்க்கும் தெரியவர,

“டேய் புகழு.. ஏன்டா…” என்று இளங்கோ வர, இவனோ பதிலே சொல்லாது இருக்க,

“புகழு லீவுக்குன்னு வந்திட்டு கிளம்புறேன் சொன்னா எப்படிடா கண்ணு….” என்று மகராசியும் வர, “ஏன் இருக்கணும்..??” என்றான் பட்டென்று..

“டேய் என்னடா கேள்வி இது.. நீ வர்றதே எப்போவோ.. வந்ததும் இப்படி கிளம்புறேன்னு சொல்ற..” என்று இளங்கோ கேட்க,

“என்னோட இடம் இந்த வீட்ல என்னன்னு நேத்தே தெரிஞ்சு போச்சு.. அதான்.. கிளம்புறேன்..” என்றான் முகத்தை இறுகிப் போய் வைத்து..

நிஜமாகவே அவனுக்கு அப்படித்தான் இருந்தது.. இங்கே நான் இல்லை என்றால் நான் இந்த வீட்டினன் இல்லையா.. இத்தனை நாள் தான் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் இப்போது அவனாக கேட்டும் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்??

சொல்லத் தேவையில்லையா..?? இல்லை இவனிடம் எல்லாம் என்ன சொல்லிக்கொண்டு என்ற எண்ணமா??.. இது தான் புகழேந்தியின் மனதில்..

அனைவரிடமும் கேட்டு சண்டை போடும் வேகம் அவனுள் இருந்தது.. ஆனாலும் யாருக்குமே என்னிடம் என்னவென்று சொல்ல மனதில்லை எனும்போது நான் மட்டும் எதற்காக யாரிடமும் கேட்டுக்கொண்டு நிற்கவேண்டும் என்ற எண்ணம் வரவும்  கிளம்பும் முடிவிற்கு வந்துவிட்டான்..

வீட்டினரோ ஆளாளுக்கு வந்து சமாதனம் செய்ய, மன்னவனோ “புகழ்.. நீயே ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க.. உன்னை எதுக்கு டென்சன் பண்ணனும்னு தான் நாங்க எதுவும் சொல்லலை..” என்று சொல்ல,

“நீங்களா சொல்லலை சரிப்பா.. ஆனா நானா கேட்டும் சொல்லலைன்னா என்ன அர்த்தம்..” என்றான் அவனும் வீம்பாய்..

வீட்டில் இத்தனை களேபரம் நடந்துகொண்டு இருக்க, புகழின் தங்கை அமுதாவோ அமைதியாய் ஒரு ஓரத்தில் நின்று நடப்பவைகள் அனைத்தையும் ஒரு அச்சம் நிறைந்த பார்வையோடு பார்த்துகொண்டு இருந்தாள்..

நிஜமாகவே அச்சம் தான் அவளுக்கு.. புகழுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் நடப்பதே வேறு.. ஆனால் உண்மை என்பது அசோக்கிற்கும் அவளுக்கும், பொன்னிக்கும் மட்டுமே தெரியும்.. மங்கைக்கு கூட தெரியாது..

அப்பாடி எல்லாம் ஒருவழியாய் முடிந்தது, இன்னும் கொஞ்ச நாளில் அனைத்தும் சரியாகிவிடும் என்று அமுதா நினைத்து கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் தான் புகழேந்தி வந்து சேர்ந்தான்..

புகழ் எத்தனைக்கு எத்தனை கலாட்டா பேர்வழியோ அத்தனைக்கு அத்தனை கோபமும் வரும்.. இதோ இப்போதே தெரிகிறதே.. வீட்டினர் தன் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்றதும் கிளம்பிவிட்டான்..

ஆனால் அவன் கிளம்புகிறேன் என்றதுமே வீட்டினர் அனைவர்க்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது.. காரணம் அவன் வருவதே வருடத்திற்கு ஒருமுறையோ இல்லை இரண்டு முறையோ..

மும்பையில் வேலை.. முன்பு திருவள்ளூர் ஹிந்துஸ்தான் யூனிலிவரில். இப்போது இரண்டு வருடங்களாய் மும்பையில்.. விடுமுறை கிடைக்கும்.. ஆனால் இரண்டோ அல்ல மூன்றோ நாட்கள்.. ப்ரோமோசனுக்காக இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டுக் கொண்டு இருந்தான்.. அதன்பொருட்டே ஊருக்கு வருவது கூட அரிதாகி போனது..

அப்படி வரும்போதும் வீடு வீடு வீடு மட்டுமே அவனுக்கு.. அப்படியிருக்கையில் இப்போதுதான் ஒரு வாய்ப்பு.. சென்னையில் ஒரு மீட்டிங்.. அதனை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை.. அத்தோடு இவனும் மூன்று நாட்கள் லீவ் சொல்லி ஆக மொத்தம் ஒருவாரம் வீட்டில் இருப்போம் என்று வந்தால் இங்கே இப்படி.

மீட்டிங் நாளைதான்.. எப்படியிருந்தாலும் கிளம்பத்தான் வேண்டும்.. போனதும் இரவே வந்துவிடலாம்.. ஆனால் இப்போதோ அவனுக்கு அங்கே நிற்க கூட பிடிக்கவில்லை.

“புகழு.. இப்போ என்ன.. நடந்தது என்னன்னு உனக்குத் தெரியனும் அவ்வளோதானே..” என்ற இளங்கோ, அமுதாவின் முகம் பார்க்க, அவளோ இன்னமும் கலக்கமாய் தான் பார்த்தாள்.

“வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. எனக்குத் தெரியவே வேண்டாம்.. நான் இத்தனை கேட்டு கிளம்பி நின்னப்புறம் யாரும் சொல்லவேண்டாம்..” என்று புகழ் சொல்ல,

“டேய் மாப்ள என்னடா.. உனக்கு இவ்வளோ கோபம்..” என்று ஜெயபால் சொல்ல,

மன்னவனோ “புகழ்.. எதுன்னாலும் பேசிக்கலாம்.. போ உள்ளபோய் பேக் வச்சிட்டு வா.. என்ன இது இருந்திருந்து வந்திட்டு இப்படி..” என்று கடிகிறாரா வருந்துகிறாரா என்றே கணிக்க முடியாது சொல்ல,

“இல்லப்பா இருக்கட்டும்..” என்றவன் நகரவேயில்லை..

“புகழ் இப்போ உனக்கு என்ன தெரியனும்.. அந்த டீச்சரம்மா இருக்காளே.. அவளோட அண்ணன் நம்ம அமுதக்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான்.. அதுக்குதான் நாங்க போய் ஒரு கை பார்த்துட்டு வந்தோம்.. போதுமா இதான் பிரச்சனை..” என்று அன்பரசி போட்டு உடைக்க,

அமுதாவின் கண்களில் மழுக்கென்று கண்ணீர் சுரக்கவும், இதனை கேட்டவனும், பார்த்தவனும் நிச்சயமாய் இப்படியான ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவனது முகத்திலேயே தெரிந்தது..

“என்ன…??!!!” என்று அதிர்ந்து அமுதாவைப் பார்க்க, அவளோ வந்த அழுகையை கட்டுபடுத்திக்கொண்டு வேகமாய் உள்ளே ஓடிவிட்டாள்.

“இதான் புகழு நடந்துச்சு.. அவனை ஊருக்குள்ள வரவே கூடாதுன்னு அடிச்சு தொரத்திடோம்.. இப்போதான் எல்லாம் கொஞ்சம் அமைதியாகிருக்கு..” என்று ஜெயபால் சொல்ல,

“இதை.. இதை ஏன் என்கிட்ட முதல்லயே சொல்லல..” என்றவனின் குரலில் அப்படியொரு தீவிரம்..

என் தங்கையிடம் ஒருவன் தவறாய் நடப்பதா?? அடித்து துரத்துவதற்கு பதில் அவனை வெட்டியல்லவா போட்டிருக்கவேண்டும் என்ற கோவம் வர, அவன் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த பேக்கை அப்படியே கீழே போட்டவன்,

“அவன் வீடெது??” என்றான் ஆக்ரோசமாய்.

“இதுக்குதான் நாங்க சொல்லல.. இதைவச்சு ஊருக்குள்ளே ரொம்ப பிரச்சனை ஆகிருச்சு.. இப்போதான் எல்லாமே கொஞ்சம் அமைதியா இருக்கு.. அமுதாவும் இப்போதான் கொஞ்சம் நல்லாகிட்டு வர்றா..” என்று மன்னவன் சொல்ல, அவனுக்குத் தான் என்ன உணர்கிறோம் என்றே விளங்கவில்லை..   

இப்போதும் கூட இதெல்லாம் பார்த்து, மகராசி கண்களில் கண்ணீர் சுரக்க, வீட்டினர் அனைவருமே நடந்ததை நினைத்து, ஒருமாதிரி கசந்து போய் நிற்க, புகழேந்திக்கு அந்த அசோக் யாரென்று தெரியாது.. அவன் வீடு எதுவென்று தெரியாது..

ஆனால் அவன் தங்கையை தெரியுமல்லவா?? அவளின் பெயர் தெரியாது.. ஆனால் அவளைத் தெரியுமே..

‘என்ன தைரியம்..?? என்கிட்ட எவ்வளோ திமிரா போய் உன் வீட்ல கேளுன்னு சொன்னா…’ என்று அவளை எண்ணி மனதில் ஒரு வெறுப்பை வளர்க்கும் போதே,

நித்யா “அந்த பொண்ணும், அவ அம்மாவும் பாவம் நல்ல மாதிரி தான்.. ஆனா அவனை அடிக்கவும் அவங்களும் ரொம்ப பேசிட்டாங்க.. அதுவும் அந்த பொண்ணு.. யப்ப்பா.. பேச்சா அது.. அவளும் அவ பார்வையும்..” என்று சொல்ல,

“ஹ்ம்ம் அவளை பால்வாடில வேலையே பார்க்க விட்டிருக்க கூடாது.. அப்பாவும் மாமாவும் தான் நாங்க சொன்னதை கேட்கவேயில்லை..” என்று சொல்ல,

இளங்கோ “ம்ம்ச் போதும்.. சும்மா திரும்ப திரும்ப அதையே பேசி என்ன செய்ய..” என்று ஒரு அதட்டல் போட,

“இல்லண்ணா.. இதை இப்படியே சும்மா விடக்கூடாது.. அவனை அடிச்சு ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டா சரியா போச்சா.. அடி உடம்புக்கு மட்டும் போதுமா.. மனசுல அடிக்கணும்.. மனசு வலிக்கணும்.. இப்போ நமக்கு எல்லாம் வலிக்குதே.. அதுபோல..” என்று புகழேந்தி பல்லைக் கடித்து கூற,

“புகழ்.. வேண்டாம்.. இந்த பிரச்சனை இதோட முடியனும்.. முடிஞ்சிருச்சு.. இனியும் எதுவும் வேண்டாம்…” என்று மன்னவன் சொல்ல,

“உங்க பங்குங்கு நீங்க அடிச்சு துரத்திட்டீங்கப்பா.. ஆனா ஒரு அண்ணனா.. நான் எதுவும் செய்யலையே.. என் பங்கு அப்படியே தானே இருக்கு…” என்று புகழேந்தி ஒரு நியாயம் பேசினான்.

“டேய் கண்ணு அதெல்லாம் வேண்டாம்டா.. அடுத்த மாசம்போல, நம்ம குலசாமி கோவில்ல பொங்கல் வச்சிட்டு அமுதாக்கு வரன் பாத்து நல்லபடியா கல்யாணம் பண்ணி கொடுத்துடலாம்.. இனியும் எந்த பிரச்சனையும் வேணாம்..” என்று மகாராசி சொல்ல,

புகழேந்தியின் மனதில் வேக வேகமாய் சில பல கணக்குகள்.. அதெல்லாம் இங்கே இப்போது பேசினால், இவர்கள் எல்லாம் சேர்ந்து தன் வாயைத் தான் அடைப்பர் என்று நன்கு புரிந்துபோனது.. ஆனாலும் இதை இப்படியே சும்மா விடுவதா என்று நினைத்தால் அது கண்டிப்பாய் முடியாது என்பதுபோல் இருந்தது.

‘என்ன தைரியம் அவனுக்கு??அவன் வீட்லயும் தானே ஒரு பொண்ணு இருக்கு.. அதுகூட தெரியாம.. இன்னொரு பொண்ணுகிட்ட தப்பா நடக்க என்ன ஒரு எண்ணம் ச்சே…’ என்று கடிந்தவன்,

‘இருக்குடா உனக்கு…’ என்று எண்ணிக்கொண்டான்..

எவனோ அவன்.. அவன் முகம் தெரியாது.. ஆனால் இந்த எண்ணமெல்லாம் வர வர, அவனுக்கு பொன்னியின் முகம் மட்டுமே மனதில் நின்றது.. அவளை முதல் நாள் கண்டதும்.. அவளோடு பேசியபடி ஊருக்குள் வந்ததும்..

அடுத்து அவளை பால்வாடியில் பார்த்ததும்.. அவள் பேசிய பேச்சுக்கள் எல்லாம்.. அனைத்துமே ஒரு சுவையான சுகமான விஷயங்கள் என்று எண்ணியிருந்தான்.. மனதினில் கொஞ்சம் வித்தியாசமான பெண் என்ற எண்ணம்கூட வந்திருந்தது..

அவள் பிரச்சனை பிரச்சனை என்று சொல்லும்போதெல்லாம் என்ன பெரிதாய் ஒரு பிரச்சனை வந்திருக்க போகிறது.. அவள் வீட்டின் ஆடோ மாடோ இவர்களது வயலிலோ இல்லை தோட்டத்திலோ இறங்கி மேய்ந்திருக்கும் என்று அவனது எண்ணமெல்லாம் புல்லுக்கட்டு பிரச்சனை அளவே இருந்தது..

ஆனால் இப்போதோ..???

யார் என்ன சொல்லினாலும் அவனது மனம் சமாதானம் அடையாது.. அடைய விரும்பவில்லை.. வீட்டினருக்காக அமைதியாய் நிற்க,

“புகழ்.. எதோ மீட்டிங்னு நேத்து சொன்னல்ல.. எப்போ கிளம்பனும்..” என்று மன்னவன் கேட்க,

“நாளைக்கு மீட்டிங்ப்பா..” என்றன் இன்னமும் இறுக்கம் மாறாத குரலில்..

“எப்போ கிளம்பனும்..??” என்று ஜெயபால் கேட்க, “ம்ம்ச் மாமா.. இப்போ என்ன நான் கிளம்பனுமா??” என்றான் சற்றே எரிச்சலாய்..

“டேய் கண்ணு உன்ன அப்படி சொல்லுவோமா..” என்று மகராசி கேட்க,

“தாயே… நீ எதுவேணாலும் சொல்லுவ…” என்றவன், வேகமாய் அவனது முகத்தையும் குரலையும் மாற்றிக்கொள்ள, அவனது எண்ணங்கள் அங்கே யாருக்கும் தெரியவில்லை..

தாங்கள் சொன்னதில் கொஞ்சம் அடங்கிவிட்டான் என்றே தோன்றியது அனைவர்க்கும்..     

“நைட் போயிக்கிறேன்..” என்றவன் அமுதாவை தேடிச் சென்றான்..

அவளோ அவளின் அறையை உள்வாக்கில் பூட்டியிருக்க, “அம்மு..” என்று கதவை தட்டியவனுக்கு, “ப்ளீஸ் ண்ணா.. நம்ம அப்புறம் பேசலாம்..” என்ற குரலே பதிலாய் வந்தது..   

அதற்குமேல் அவன் என்ன சொல்ல முடியும்.. ஒருமுறை அடைத்திருந்த கதவை வெறித்துப் பார்த்தவன், என்ன நினைத்தான் என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்..

மன்னவனும், ஜெயபாலும் வெளியே கிளம்பிட, இளங்கோ கொஞ்ச நேரம் வீட்டில் இருந்து புகழேந்தியிடம் இன்னமும் பேசி அவனை சமாதனம் செய்ய,. அனைத்திற்கும் சரி சரி என்று தலையை ஆட்டினான் ஒன்றும் காட்டிக் கொள்ளாது.             

இரவு வரைக்கும் வீட்டில் ஒருவித மௌனமாகவே பொழுது நகர, அமுதா அவனது கண்ணில் படவேயில்லை.. இவனும் சரி சங்கடப்படுகிறாள் என்றெண்ணி அதற்குமேல் எதுவும் பேசாது விட்டுவிட்டான்.. கிளம்பும் போது மட்டும்,

“தைரியமா இரு அம்மு.. உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம்..” என, மௌனமாய் தலையை மட்டும் அசைத்தாள்..

அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவன், எதோ ஒரு எண்ணவோட்டத்தில் காரை செலுத்திக்கொண்டு இருக்க, ஊரைவிட்டு கொஞ்சம் தூரம் வந்தவனின் கண்களில் எதிரே பொன்னி நடந்து வருவது தெரிந்தது..  

அவளைப் பார்த்ததுமே மீண்டும் ஒரு கோபம்.. இத்தனை நேரம் கொஞ்சமே கொஞ்சம் மட்டுப்பட்டிருந்த கோபம் இப்போது கனலைக் கக்கிக்கொண்டு வெளிவருவது போலிருந்தது..

அப்படியே காரை வேகமெடுத்து அவளின் மீதும் இடித்துத் தள்ளினால் என்னவென்று தோன்றியது.. இங்கே தட்டினால்.. அங்கே அவனுக்கு.. இவளின் அண்ணனுக்கு வலிக்குமே என்றும் தோன்றியது..                 

    

Advertisement