Advertisement

                       தோற்றம் – 29
“ம்மா இந்த பேக்ல சத்யாவோட பட்டு சேலை.. நகை எல்லாம் இருக்கு.. எடுத்து பத்திரமா வைம்மா.. மத்த பேக் எல்லாம் தனியா எடுத்து வைச்சிட்டேன். இதைமட்டும் நீ வச்சுக்கோ…” என்று நித்யா சொல்லிக்கொண்டு இருக்க,
“நான் வந்தவங்களை கவனிப்பேனா இல்லை கைல பை வச்சிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா?? நீதான் பார்த்து வைக்கணும் நித்யா…” என்றவர்,
“ஆமா என்ன இன்னும் உங்க வீட்ல இருந்து ஒருத்தரையும் காணோம்…” என்று விசாரிக்க,
“என்ன புதுசா உங்க வீடுன்னு சொல்ற… எப்பவும் என் பிறந்த வீடு எங்கண்ணன் வீடுன்னு சொல்லுவ.. இப்போ என்ன???” என்றபடியே நித்யா வேலைகள் செய்துகொண்டு இருக்க, இளங்கோ அங்கே வந்தான்..
இளங்கோ வந்ததும் அம்மா மகள் பேச்சு அப்படியே நிற்க, நித்யாவோ “எதுவும் வேணுமாங்க???” என்றவள் அவனின் பார்வை கண்டு “வீட்ல எல்லாம் கிளம்பிட்டாங்களா??? புகழும் பொன்னியும் வந்துட்டாங்களா??” என்று வினவ,
“நீ கொஞ்சம் வெளிய வா!!!!” என்றான்  இறுகிய குரலில்…
“எதுக்குங்க.. வேலை நிறைய இருக்கு.. ஆளுங்க வந்துட்டே இருக்காங்க…” என்று நித்யா சொல்ல,
பரஞ்சோதி “மாப்ள தான் சொல்றார்ல.. போய் என்னன்னு கேட்டு வா நித்யா…” என்றவருக்கு மனதினுள்ளே ஒருவித சலனம்..
எதுவும் விஷயம் தெரிந்துபோனதோ என்று…
இளங்கோவிற்கோ அனைவரின் முன்னும் பேச பிடிக்கவில்லைதான் ஆனாலும் பரஞ்சோதி பேசியதுமே அவனின் பொறுமை போய்விட, “பையனை தூக்கிட்டு போய் வெளிய நிக்கிறேன்.. நீ உன்னோட பேக் எடுத்துட்டு வந்து சேறு.. வீட்டுக்கு போறோம்…” என்றவன் சொன்னதுபோலவே அங்கே மற்ற பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டு இருந்த கிஷோரை தூக்கிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்..
இளங்கோ என்ன சொல்கிறான் என்றே நித்யாவிற்கு முதலில் புரியாது போக, பரஞ்சோதியோ ‘ஐயோ..!!!’ என்று பார்த்தார்.. மகள் மருமகனிடம் சென்று பேசுவதற்குள் எதாவது சொல்லி சமாளிக்கலாம் என்று நினைப்பதற்குள் நித்யா “என்னங்க நில்லுங்க…!!!” என்று இளங்கோ பின்னே செல்ல, அவனோ முகத்தை உர்ரென்று தூக்கி வைத்து நின்றிருந்தான்..
“என்னங்க என்ன சொல்றீங்க???”
“ஒருதடவ சொன்னா உனக்கு புரியாதா?? ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா.. இல்லையா இங்கயே இருந்துக்கோ.. நானும் என் மகனும் கிளம்புறோம்..” என்று இளங்கோ நகரப் போக,
“ஏங்க நில்லுங்க…” என்று அவனை பிடித்து நிறுத்தியவள், “என்னாச்சு?? எதுவுமே சொல்லாம இப்படி பேசினா எப்படி?? அப்பா எதுவும் சொன்னாரா??” என கலங்கிப் போய் பார்க்க,
“ஹ்ம்ம் அப்போ உனக்கு எதுவும் தெரியாது??!!!” என்றான் சந்தேகமாய் பார்த்து..
“எனக்கு முதல்ல எதுவுமே புரியலை… எதுன்னாலும் முழுசா சொல்லுங்க…” எனும்போதே பரஞ்சோதி அங்கே வந்தவர்,
“மாப்ள, மண்டபத்துல நம்ம சொந்தமெல்லாம் வந்துட்டு இருக்காங்க. நீங்களும் நித்யாவும் முன்னாடி போனா நல்லாருக்கும்… ” என்று பேச்சை மாற்றும் பொருட்டு வந்து பேச,
அவனோ அவரை ஏகத்தும் முறைத்தவன் “போகத்தான் போறோம் மண்டபத்துக்கு இல்ல எங்க வீட்டுக்கு.. என் தம்பியையும், தம்பி பொண்டாட்டியையும் ஒதுக்கி வச்சிட்டு தான் நாங்க இங்க இருக்கணும்னா அப்படி ஒரு விசேசம் எங்களுக்குத் தேவையே இல்லை.. ” என்றவன் “ஏய் இப்போ கிளம்புறியா இல்லையா??” என்று நித்யாவை பார்த்து கத்தினான்..
பரஞ்சோதியோ விஷயம் வெளிவந்தது எண்ணி கையை பிசைந்துகொண்டு இருக்க, நித்யாவோ “என்ன சொல்றீங்க???” என்று அதிர்ந்து போய் பார்த்துகொண்டு இருந்தாள்..
“ஏன் உங்கம்மா சொல்லலியா… புகழ் எவ்வளோ பெருந்தன்மையா போன்ல கூப்பிட்டா போதும்னு சொன்னான்.. ஆனா அதைகூட இவங்க முழுசா பண்ணல.. பொன்னியையும் அவங்க அம்மாவையும் இப்போ வரைக்கும் உங்க வீட்ல யாரும் கூப்பிடல…” என்று இளங்கோ கத்த, அருகில் இருந்த ஒருசிலர் அவனை திரும்பிப் பார்க்க,
நித்யாவோ “என்னம்மா இது…!!!!” என்று அவளின் அம்மாவை பார்க்க, அவரோ என்ன காரணம் சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தார்..
அன்பரசிதான் இளங்கோவிற்கு சொல்லிவிட்டாள்..
“பொன்னியையும் அவ அம்மாவையும் இதுவரைக்கும் கூப்பிடவே இல்லையாம்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு?? இதுதான் மூத்த மருமகனா உன்னோட குடும்பத்துக்கு அவங்க குடுக்கிற மரியாதையா?? பாவம் பொன்னி சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம தலைவலி வந்து படுத்திருக்கா…” என்று அன்பரசி பொரிந்து தள்ளிட,
இளங்கோ வேகமாய் புகழுக்கு அழைத்து “என்னடா…” என்று கேட்க,
“ஒன்னும் பிரச்னை இல்லை.. நீ அங்க இருந்து பாரு.. நாங்க இல்லைன்னா என்ன.. ஆனா கண்டிப்பா யார் என்ன சொன்னாலும் நானும் கூட வரமாட்டேன்.. எனக்கு என் பொண்டாட்டி மரியாதை முக்கியம்.. மங்கை அத்தையையும் கூப்பிடலை.. வேணும்னே பண்ணிருக்காங்க.. நீ எல்லாம் முடிச்சிட்டு வா போதும்… ”என்றுவிட்டான்..
இளங்கோவிற்கு சும்மாவே பரஞ்சோதி மீது ஓர் கோவம்.. இப்போது இதுவும் சேர்ந்துகொள்ள, போதுமடா சாமி என்ற நிலை.. நித்யாவிடம் கிளம்பு கிளம்பு என்று சொல்ல, அவளோ அவளின் அம்மா செய்த செயலில் கலங்கிதான் போனாள்.
ஏனென்றால் இளங்கோ இங்கே கிளம்பும் முன்னேயே சொல்லித்தான் அழைத்து வந்திருந்தான்..
“விசேச வீட்ல வச்சு உங்கம்மா எதுவும் பேசி அது இதுன்னு யார் மனசாவது சங்கட பட்டுச்சு நடக்குறதே வேற ..” என்று..
“ஏன்ம்மா உனக்கு நான் சந்தோசமா இருக்கிறது பிடிக்காதா??” என்று அவரை சாடியவள்,
“நம்ம போய் கூப்பிடலாமா???” என்றாள் இளங்கோவிடம்…
“எந்த முகத்தை வச்சிட்டு போய் கூப்பிடுவ.. சாயங்காலம் விசேசம் இப்போ போய் கூப்பிடுவியா??? ” என்று எரிந்து விழுந்தவன், “நீ இப்போ வர்றியா இல்லையா??” என்று அதே பிடிவாதத்தில் நிற்க நித்யாவால் எதுவுமே பேச முடியவில்லை..
பரஞ்சோதியோ “ஐயோ இதை இவ்வளோ பெருசு செய்வாங்கன்னு நான் நினைக்கலையே.. நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணு.. இவ்வளவு முறை பார்ப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒருதடவைக்கு பத்து தடவை போய் கூப்பிட்டு வந்திருப்பேனே… பரமார்த்தமா இருந்ததுதான் என் தப்பா…” என்று அப்படியே பேச்சை மாற்ற, இளங்கோவும் சரி நித்யாவும் சரி ஏகத்துக்கும் எரிச்சல் ஆனதுதான் மிச்சம்..
அங்கே வீட்டினிலோ ஆளுக்கு ஒருப்பக்கம் முகம் தூக்கி அமர்ந்திருந்தனர்.. கடைசியில் பொன்னிதான் அனைவரையும் சமாதானம் செய்யும் வேலையில் இருந்தாள்..
அன்பரசியோ “நீ என்ன சொன்னாலும் சரி பொன்னி.. நம்ம வீட்ல, நமக்குள்ள  நம்ம ஆயிரம் சண்டை போட்டுக்கலாம்.. என்னவோ செஞ்சுட்டு போறோம்.. இன்னிக்கு சண்டை போட்டா நாளைக்கு சேர்ந்துட்டு போறோம்.. இவங்க எப்படி இப்படி பண்ணலாம்..?? என்ன இருந்தாலும் நீ என் தம்பி பொண்டாட்டி இந்த வீட்டுக்கு நித்யா எப்படியோ அப்படித்தான் நீயும்..” என்றவள்,
“அப்பா இதை நீங்க சும்மாவே விடகூடாது.. அப்போ நம்மளை எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்காங்க…” என்று சொல்ல,
புகழேந்தியோ என் வேலை முடிந்தது என்பதாய் கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.. மகராசிக்கோ கண்கள் கலங்கி இருந்தது.. என்னதான் நாத்தி என்றாலும் தன் மகன் மருமகளை ஒதுக்குவிட்டு போய் விசேசத்திற்கு முன் நிற்பதா??
எதையும் காட்டாது எப்படி இருக்க முடியுமா???
முடியுமா முதலில்.. என்னவோ தங்களின் மொத்த குடும்பத்தையும் பரஞ்சோதி அவமானப் படுத்தியாதாகவே பட்டது அவருக்கு..
ஜெயபாலோ “மாமா நீங்கதான் சொல்லணும் என்ன செய்யனும்னு…” என்று மன்னவனைப் பார்த்து கேட்க,
அவரோ “நான் என்ன சொல்லட்டும்… அன்னிக்கே புகழ் சொன்னான்.. அடுத்து எதுவும் சொல்லாம இருந்ததால சரி கூப்பிட்டு இருப்பான்னு நானும் நினைச்சிட்டேன்..” என்றவரின் குரலில் வருத்தமே தெரிந்தது..
மகராசி பொறுமையாய் அவர் பேசியது கேட்டவர் “என்னவோங்க.. ஆனா எனக்கு இப்போ மனசில்ல… இது பொன்னிக்கு அவங்க அம்மாக்கு நடந்த விஷயமில்ல நம்மளுக்கு மொத்தமா நடந்தது தான்.. என்ன இருந்தாலும் ஜோதி மதினி இப்படி பண்ணிருக்க கூடாது..” என்றவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்..
ஆளாளுக்கு ஒருப்பக்கம் அமர்ந்திருக்க, பொன்னியோ அனைவரையும் மாறி மாறி பார்த்துகொண்டு இருக்க அன்பரசியோ இளங்கோவிற்கு திரும்ப அழைத்து “கிளம்பிட்டியா இல்லையா??” என்று கேட்க,
புகழ் முகத்தினில் எதையும் காட்டவில்லை.. பேசாமல் இருந்தான்.. ‘நாங்கள் வரவில்லை.. நீங்கள் போவதும் போகாததும் உங்கள் விருப்பம்…’ இது மட்டுமே அவனின் கூற்று..
அமுதா கூட “என்கிட்டே கூட ஒருவார்த்தை சொல்லலை மதினி…” என்று பொன்னியிடம் கேட்க,
“உங்க அண்ணாதான் சொல்ல கூடாது சொல்லிட்டாங்க…” என்றாள் பொன்னி..
மன்னவனுக்கு நிஜமாகவே இது ஒரு தர்மசங்கட நிலை.. யாருக்கு ஏற்று இதில் செயல்பட முடியும்.. ஒருப்பக்கம் உடன் பிறந்த தங்கை.. இன்னொரு பக்கம் தன் வீட்டு மருமகள். ஒரு குடும்பத்தில் ஒருத்தியை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை எல்லாம் அழைப்பு வைத்தால் அது எப்படி??? ஒருவீட்டினில் ஒருவரை அவமானப் படுத்தினால் என்ன இல்லை அந்த குடும்பத்தையே அவமானப் படுத்தினால் என்ன???  மன்னவன் அப்படியே அமர்ந்துவிட்டார்.. பரஞ்சோதி இப்படி செய்தது அவருக்குமே பெருத்த அதிர்ச்சி தான்..
ஆனால் பரஞ்சோதியோ இப்போது வரைக்கும் தான் செய்தது அத்தனை பெரிய தவறில்லை என்றுதான் சாதித்தார் இளங்கோவிடம்..
“நான் நிஜமா சொல்றேன் மாப்பிள்ள இப்படி ஆகும்னு நினைக்கல.. பொன்னி இந்த விசயத்த இவ்வளோ பெரிசு பண்ணுவான்னு நினைக்கல.. அவங்கம்மாவ கூப்பிட போனோம் ஆனா அவங்க வீட்ல இல்லை. சரி நம்ம வீட்டு மனுசங்கதானேன்னு நான் நினைச்சது என் தப்புதான்.. அடுத்து அவங்களே ஒருவார்த்தை என்கிட்ட என்னன்னு கேட்டிருக்கலாமே… ” என்று முராரி பாட,
அவனோ ‘எனக்கு உங்களைப் பத்தி நல்லா தெரியும்..’ என்றுதான் பார்த்தான்..
நித்யாவின் அப்பாவோ “இந்த நேரத்துல விஷயத்தை பெருசு பண்ண வர்றவங்க என்ன நினைப்பாங்க.. நீங்கதான் இருந்து நடத்தனும்.. நீங்க கிளம்பினா எப்படி?? ” என்று இளங்கோவின் கரங்களை பிடித்துக்கொள்ள, நித்யா ஒருப்பக்கம் அழுது கொண்டு இருந்தாள்..
சத்யாவோ அக்காவின் குடும்பம் கிளம்பிவிட்டால்  என்ன செய்வது என்று கைகளை பிசைந்துகொண்டு இருக்க, இளங்கோவோ கிளம்பும் முடிவில் தான் இருந்தான்..
அங்கே வீட்டினில் பொன்னியோ புகழேந்தியிடம் “என்னங்க நீங்க.. இதெல்லாம் மனசுல வச்சுதான் என்னை யார்ட்டையும் சொல்ல கூடாது சொன்னீங்களா??? நம்ம போகலை சரி.. ஆனா இவங்கல்லாம் போகலைன்னா நல்லாருக்காதுங்க…” என்று சொல்ல,
“இல்லாட்டி போகட்டும் எனக்கு என்ன??” என்றான் அசால்ட்டாய்..
“இல்ல வேணாம்…” என்று பொன்னி முகத்தை வருத்தமாய் மாற்ற,
“ஏன்?? ஏன்?? என்ன வேணாம்???” என்றான் புகழ் கோபமாய்..
“இல்ல.. ஏற்கனவே நீங்க என்னை கல்யாணம் பண்ணதுனால தான் அவங்க மதிப்பு இங்க குறைஞ்சதா நினைக்கிறாங்க.. இதுல இவங்க யாரும் போகலைன்னா என்னால தான் அண்ணன் தங்கச்சி பிறிவுன்னு சொல்லிடுவாங்க…” என,
அவள் பேசுவதையே பார்த்தவன் “உனக்கு என்னதான் ஆச்சோ.. கல்யாணம் ஆனதுல இருந்து அப்படியே மாறிட்ட… உன்னை யார் இப்படியெல்லாம் யோசிக்க சொல்றது.. உன்னை அவங்க சொல்லிடுவாங்களா?? அதுவும் நான் இருக்கப்போ…” என்று புகழும் பதிலுக்கு பொரிய,
“அச்சோ… ப்ளீஸ் மெதுவா???” என்று அவனின் வாயை பொத்தியவள்,
“கத்தாம பேசுங்களேன்…” என்றாள் டென்சனில்…
புகழேந்தி தன் வாய்க்குள் சிரிப்பை அடக்குவது அவனின் கன்ன அசைவில் அவளுக்கு புரிய வேகமாய் தன் கரங்களை எடுத்துக்கொண்டவள், “எதுல விளையாடுறதுன்னு அர்த்தமே இல்லையா???” என்றாள் சலிப்பாய்..
“யார் நான் விளையாடுறேனா…?? இத்தனை நாள் அங்க முகத்தை தூக்கிட்டு இருந்துட்டு இப்போ என்ன உனக்கு..”
“சங்கடமா இருக்குங்க…” என்றவளுக்கு நிஜமாகவே மனதில் வருத்தம் குடிகொண்டது..
“நான் இருக்கபோ நீ எதுக்கும் சங்கடப் படக்கூடாது.. அவ்வளோதான்.. நம்ம போகலை.. அவங்க போறதும் போகாததும் அவங்க இஷ்டம்.. சொல்லவேண்டியதை சொல்லிட்டோம்..” என்றுவிட்டான் இதுதான் முடிவு என்பதாய்.. வீட்டினரிடம் மாறி மாறி பேசி பொன்னிதான் கலைத்துப் போனாள்..
“நீ என்ன சொன்னாலும் சரிதான் பொன்னி.. நாங்களும் போறதா இல்லை.. அண்ணனும் கிளம்புறான் அங்கிருந்து… அப்படி எல்லாம் விட்டு கொடுத்திட முடியாது பொன்னி.. நம்மவீட்டுக்குள்ள நம்ம சண்டை போட்டுக்கிறது வேற.. ஆனா இதுவேற…” என்று அன்பரசியும் முடிவாய் சொல்ல,
‘யப்பா ஒவ்வொருத்தர் பிடிவாதமும் இருக்கே…’ என்று எண்ணிக்கொள்ளத்தான் முடிந்தது..
ஆனாலும் பொன்னியின் மனம் ஒருவித பெருமிதம் உணர மறுக்கவில்லை.. எனக்காக என் குடும்பத்தினர் இதனை செய்கிறார்கள் என்ற எண்ணம் அவளுக்கு வெகுவான ஒரு தைரியம் கொடுக்க, அதுவே அவளுக்கு ஒரு மகிழ்வையும் கொடுத்தது.. அந்த மகிழ்வே அவளுக்கு பரஞ்சோதியின் இந்த செயலை பின்தள்ளவும் வைத்தது..
நேராய் புகழேந்தியிடம் சென்றவள் “இளங்கோ மாமாக்கு போன் போட்டு கொடுங்க…” என,
“ஏன்???” என்றான் அவன்..
“ம்ம்ச் போட்டு கொடுங்க.. அவங்க அங்க இருந்து கிளம்புறாங்கலாம்…”
“அதுக்கு.. நான் எல்லாம் போட்டு கொடுக்க மாட்டேன்.. உனக்கு வேணும்னா உன் போன்ல இருந்து பேசு..” என்று புகழ் சொல்லிட,
‘கடவுளே இதென்ன இப்படி…’ என்றுதான் பொன்னி பார்த்தாள்..
“என்ன பாக்குற போடி.. இப்போ என்ன அடுத்து சமாதானம் செய்ய போறியா???”
“என்னவோ பண்ண போறேன்.. நம்ம போகலை சரி.. ஆனா இவங்களும் போகாம இருந்தா நல்லாருக்காது.. நித்யாக்கா சங்கட படுவாங்க இல்லையா…” என்றவள் அவனோடு பேசியபடியே இளங்கோவிற்கு அழைத்தாள்..
அவனோ அவள் பேசும் முன்பே “நாங்க வந்துட்டு இருக்கோம் பொன்னி.. நீ எதுவும் கவலைப் படாத…” என்றுவிட்டு போனை வைத்துவிட, பொன்னியோ தலையில் கை வைத்தே அமர்ந்துவிட்டாள்..
“இப்போ என்ன கப்பல் கவுந்துச்சு…???”
“ஹ்ம்ம் இதுக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம்.. நீங்களும் கூடாது சொல்லிட்டீங்க.. இப்போ விசேச வீட்ல இருந்து கிளம்பி வர்றாங்க…” என்று முகத்தினை தூக்க,
“ஏன் டி.. நேத்தும் இப்படிதான் தூக்கி வச்சிட்டு இருந்த.. இப்போ இது செஞ்சாலும் கவலைப் படுற.. என்னதான் உனக்கு பிரச்சனை இப்போ???” என்று புகழ் கேட்க, அவனுக்கு நிஜமாகவே இவள் ஏன் இப்படி செய்கிறாள் என்றுதான் தோன்றியது..
“ம்ம்ச் எனக்கு எங்க என்னை கூட்டிட்டு போய்டுவீங்களோன்னு தான் டென்சன் ஆச்சு.. மத்தபடி இவங்க போறதுல எனக்கு எதுவும் இல்லை…” என்று பொன்னி சொல்ல, புகழேந்தி பார்த்த பார்வையில் அறையை விட்டே வெளியே வந்துவிட்டாள்..
ஜெயபால் கிளம்பி வெளியே சென்றிருக்க, அன்பரசியும் மகராசியும் தான் பேசிக்கொண்டு இருந்தனர்.. அமுதா ஒருப்பக்கம் இருக்க, மன்னவனோ அப்படியே அங்கிருந்த கட்டிலில் சாய்ந்திருந்தார்.. போன் மேல் போன் வந்துகொண்டு இருந்தது அவருக்கு பரஞ்சோதியிடம் இருந்து.. ஆனால் எடுக்கவே இல்லை அவர்..
இதனை எல்லாம் பொன்னி பார்த்தவள், மகராசியிடம் வந்து “அத்தை நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க… நீங்க எல்லாம் போறது தான் சரி..” என்றிட,
“அப்போ நீயும் அவனும்??” என்றார் மகராசி..
“இல்ல அது…”
“வேணாம் கண்ணு.. அங்க போனாலும் எனக்கு மனசு கேட்காது.. ஏதாவது பேசிடுவேன்.. எல்லார் முன்னாடியும் அது பிரச்சனை ஆகும்…” என்று மகராசி சொல்லும்போதே,
“நீங்க போகலைன்னாலும் பிரச்சனை தானே அத்தை ஆகும்..” என்றாள் பொன்னி..
அன்பரசி இவர்களின் பேச்சில் தலையிடவில்லை.. மற்றவர்களும் ஆனாலும் கவனித்துதான் இருந்தனர்.. புகழ் கூட வெளியே வந்து என்ன என்று பார்க்க,
“உண்மைதான் அத்தை.. இன்னிக்கு நம்ம வீட்டுக்குள்ள நடந்தது நீங்க யாரும் அங்க போகலைன்னா எல்லாருக்கும் தெரியவரும்.. நானும் இவரும் வரலைன்னா கூட யாரும் பெருசா நினைக்கமாட்டாங்க.. ஆனா நீங்க எல்லாம் போகலைன்னா அதுதான் வித்தியாசமா படும்.. அதுவும் மாமா.. சத்யாக்கு தாய் மாமா வேற.. ப்ளீஸ் எனக்காக போயிட்டு வாங்களேன்…” என, அனைவருமே அமைதியாய் இருந்தனர்..
திருமணவிழா இவர்கள் ஊருக்கு அருகே இருக்கும் கிராமத்தில் தான் என்பதால், இப்போது கிளம்பினால் கூட போதும் தான்.. ஆனால் யாரும் கிளம்பவேண்டுமே.. பரஞ்சோதி அழைத்துக்கொண்டே இருக்க, பொன்னி மன்னவனிடமும் பேசினாள்..
“எனக்காக எல்லாரும் போயிட்டு வாங்க…” என்று அவள் சொல்கையில் புகழேந்தி முறைக்க,
‘நீ கிளம்பின கொன்னுடுவேன்…’ என்று அவனை பார்த்தவள்,
“மதினி.. நீங்களும் தான் அண்ணனை வர சொல்லிட்டு எல்லாம் கிளம்பி போயிட்டு வாங்க.. நம்ம மொத்தமா போகலைன்னா நல்லாருக்காது.. எல்லார் முன்னாடியும் ரொம்ப வித்தியாசமா தெரியும்…” என, யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை..
போவதா வேண்டாமா ?? போகாமல் இருந்தால் பொன்னி சொல்வது போல் அனைவர்க்கும் பதில் சொல்லும் நிலை வரும்.. போனால் அங்கே பொன்னியை விட்டுகொடுத்து போலாகிடும்.. இரண்டிற்குமே மனமில்லை அவர்களுக்கு.. நேரம் வேறு நெருங்கிக்கொண்டே இருக்க, இளங்கோ வந்துவிட்டான்..
பின்னோடு நித்யா அழுதபடி..
நித்யாவை பார்க்கவே அத்தனை கஷ்டமாய் இருந்தது பொன்னிக்கு.. என்ன இருந்தாலும் உடன்பிறந்தவளின் திருமணம் இல்லையா…  இளங்கோ வந்ததும் புகழ் வந்து அவனோடு பேச, நித்யாவோ யாரிடமும் பேசாது அழுதபடியே இருந்தாள்..
பொன்னிக்கு தனக்காக இவர்கள் செய்கிறார்கள் என்பதனை எல்லாம் தாண்டி இந்த சூழல் அவளுக்கு மகிழ்வு கொடுக்கவில்லை.. நித்யா அழுவது என்னவோ கஷ்டமாய் இருந்தது..
புகழேந்தியை பார்த்து ‘எதாவது பேசு…’ என்று பொன்னி ஜாடை காட்ட, அவன் வாய் திறக்கும் முன்னமே இளங்கோ “இதை ஏன் டா நீ முன்னாடியே சொல்லல..” என்றான் கடுப்பாய்..
“அப்போ சொல்லிருந்தா நீங்க எல்லாம் பேசி அத்தை வந்து ஒரு பேச்சுக்கு கூப்பிட்டு இருப்பாங்க.. நாங்களும் வேறவழி இல்லாம கல்யாணத்துக்கு போயிருப்போம்…” என,
நித்யாவோ “எங்கம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை..” என்றாள் அழுகையை விழுங்கி…
பொன்னிக்கு இத்தனை நாள் இவர்கள் அனைவரோடும் தான் வகுத்துக்கொண்ட அந்த எல்லை காணமலே போயிருந்தது.. பேச்சு அனைவரோடும் அவளுக்கு சரளமாய் வந்தாலும் எப்படியாவது இவர்களை கிளப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் பொன்னி தன் மாற்றத்தையே உணரவில்லை..
“அக்கா நீங்க அழாம இருங்களேன்.. எல்லாம் வருவாங்க…” என்றவள், மன்னவனிடம் “நீங்க சொல்லுங்க மாமா….. எல்லாரும் போகலைன்னா அதுதான் வித்தியாசமா தெரியும்.. இல்லை என்னை அவங்க அவமானப் படுத்தினது எல்லாருக்கும் தெரியனும்னு நினைக்கிறீங்களா???” என்று கேட்க,
‘இப்படி வேற இருக்கோ…’ என்று முணுமுணுத்துக்கொண்டாள் அன்பரசி..
அனைவருமே ‘போகலாமா போகலாமா…’ என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, இளங்கோவோ புகழேந்தியைப் பார்த்தான் “என்னடா சொல்ற…” என்பதாய்..
அவன் இப்போதுமே கூட, “போறதும் போகாததும் உங்க விருப்பம்.. ஆனா நாங்க வரலை.. நீங்க போனாலும் நானும் பொன்னியும் தப்பா நினைக்கபோறதில்லை…” என்றிட,
பொன்னிக்கோ “சரின்னு சொன்னா என்ன வந்தது…” என்றுதான் எண்ணத் தோன்றியது..
வெளியே போயிருந்த ஜெயபாலும் வந்திட, பரஞ்சோதியோ அழைப்பு மேல் அழைப்புவிட்டு அது எடுக்கப்படவில்லை என்றதும் அங்கிருந்து ஆளே அனுப்பிவிட்டார்.. சொந்தத்தில் ஒருவர் வந்து என்னவென்று விசாரிக்க,
மன்னவனோ “எல்லாரும் கிளம்பிட்டுதான் இருக்கோம்…” என்றார் வெளியில் எதுவும் சொல்லாது..
“அங்க அக்கா நீங்க யாரும் வரலைன்னு அழுது ஊரைக்கூட்டிட்டு இருக்காங்க.. விசேச வீட்ல இதெல்லாம் நல்லாவா இருக்கு…” என்று வந்தவர் சொல்ல, நித்யாவோ இன்னமும் அழுகையை கூட்டினாள்..
பொன்னியோ இளங்கோவிடம்  “மாமா.. ப்ளீஸ் கூட்டிட்டு போங்க எல்லாரையும்…” என, கிளம்பவே மனமில்லாது தான் அனைவரும் கிளம்பினர்..
நித்யாவோ “எனக்காக மனசுல எதுவும் வச்சுக்காம வாங்களேன் ரெண்டுபேரும்…” என்று பொன்னியிடம் கேட்க,
“அக்கா.. கண்டிப்பா இப்போவும் எங்க மனசுல ஒண்ணுமில்ல.. ஆனா என்னை கூப்பிட்டு இருந்தா கண்டிப்பா வந்திருப்போம்.. இப்போ என்ன சத்யா கல்யாணம் முடிஞ்சு இங்க விருந்துக்கு வருவாங்கதானே.. அப்போ பார்த்துக்கிறோம்..” என்று பொன்னி நோகாமல் மறுத்துவிட, நித்யாவிற்கு அதற்குமேல் அழுத்திக் கேட்க முடியவில்லை..
அன்பரசியோ கிளம்புகையில், “போறோம்.. தலையை காட்டிட்டு.. முறை செஞ்சிட்டு நாளைக்கே கிளம்பிடுறோம்….” என்றுதான் சொல்லி கிளம்பினாள்..
பொன்னிக்கு இவர்கள் எல்லாம் கிளம்பிச் சென்ற பின்னர்தான் நிம்மதியாய் மூச்சுவிடவே முடிந்தது..
‘யப்பாடி…’ என்று அமர்ந்தவளை பார்த்த புகழுக்கு சிரிப்புதான் வந்தது..
வாய் விட்டே சிரிக்க, “எதுக்கு சிரிப்பு???!!!” என்றாள் புரியாமல்..
“ஒண்ணுமில்ல.. நீ இன்னும் கொஞ்சம்கூட பேஸ்ல ரியாக்சன் காட்டு பாக்க நல்லாத்தான் இருக்கு…” என,
“என்னது பாக்க நல்லாத்தான் இருக்கா?? அப்போ.. அப்போ இவ்வளோ நேரம் அதைதான் பார்த்தீங்களா???” என்று பொன்னி கடிய,
“வேற என்ன பாக்காட்டும்…??” என்றவன் இன்னமும் சிரிக்க, “ஐயோ சிரிக்காதீங்க…” என்று சிணுங்கியவள்,
“நம்மனால பிரச்சனை ஆகக்கூடாதுங்க..” என்றாள் உணர்ந்து…
“ஹ்ம்ம் ஒருசில பிரச்சனைகள் ஆனாதான் ஒருசில நல்லதும் நடக்கும்…” என்றவன் எழுந்து செல்ல,
“என்ன சொல்றீங்க??!!!!” என்றாள் புரியாது..
“சொல்லமாட்டேன்… ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நீ மாறிட்ட.. அதுமட்டும் நல்லா தெரியுது…” என்றான் அவளையே ஆழ்ந்து பார்த்து..           
       
           

Advertisement