Advertisement

                        தோற்றம் – 28
சத்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒருநாளே இருந்தது.. நாளை மறுநாள் திருமணம்.. நாளை மாலையில் இருந்து விசேஷங்கள் ஆரம்பித்துவிடும்.. ஆனால் இப்போது வரைக்கும் கூட, பரஞ்சோதியோ இல்லை அவரின் கணவரோ பொன்னியை அழைக்கவில்லை.
முதலில் புகழேந்தி கூட, போன் கட் என்றுதான் நினைத்தான்.. சரி எப்படியும் மறுநாள் அழைப்பார்கள் என்று நினைக்க அவன் எண்ணியது நடக்கவில்லை.. ஒருமுறை மன்னவனிடம் கூட சொல்லிவிட்டான்.
“ப்பா பொன்னியை கூப்பிடலை…” என்று.
“அப்படியா.. சரி நான் என்னன்னு கேட்கிறேன்…” என்றவர் மறக்காது பரஞ்சோதிக்கு அழைத்துக் கேட்க,
“அடடே அப்படியாண்ணே.. அன்னிக்கு பேசிட்டு இருக்கப்போவே லைன்னு கிடைக்கல.. இந்தா கூப்பிட்டு பேசிடுறேன்…” என்று நல்லவிதமாகவே சொன்னவர், அடுத்து அழைக்கவேயில்லை..
அடுத்த சிறிது நாட்களில் மன்னவன் கேட்டதற்கு பரஞ்சோதி அது இதென்று பேசி பேச்சை மாற்றிவிட்டார், புகழேந்தியும் அடுத்து எதுவும் சொல்லாததால் மன்னவனும் சரி அழைத்திருப்பார்கள் என்று விட்டுவிட்டார்.. ஆனால் சத்யா வீட்டில் யாரும் அழைக்கவேயில்லை..
பரஞ்சோதிக்கு தெரியும், இப்படியெல்லாம் விசாரிப்புகள் வரும் என்று.. ஆனாலும் என்னை என்ன செய்திட முடியும் என்ற திண்ணம்.. என்ன இருந்தாலும் மன்னவனுக்கு அவர் தங்கை அல்லவா.. அதிலும் பெண் வேறு கொடுத்து இருக்கிறார்.. அப்படியெல்லாம் எதுவும் ஆனால் பார்த்துப்போம் என்றுவிட்டார்..
வேண்டுமென்றே தான் அதிலும் பொன்னியை கலங்கடிக்க என்றுதான் இதனை செய்தார்.. என்னவோ அவருக்கு பொன்னியை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை..
அதிலும் இப்போதெல்லாம் மன்னவனும் சரி மகராசியும் சரி பொன்னி பற்றிய பேச்சென்றால் ஒன்று பரஞ்சோதியை எதுவும் சொல்ல விடுவதில்லை இல்லையோ பதிலுக்கு பதில் ஏதாவது சொல்லிட, அவரையும் அறியாது அவரின் மனத்தில் ஒரு வன்மம் வளர்ந்தது நிஜம்..
அதிலும் முன்னெல்லாம் நித்யாவும் அவர் சொன்னதற்கு ஏற்ப ஆடிக்கொண்டு இருக்க, இப்போது அதுவும் மாறியிருந்தது….
கொஞ்சம் கொஞ்சம் நித்யா மாறியிருந்தாள் தான், அதுவும் புகழேந்தி அழைத்து சென்னை சென்று அங்கே தங்கிவிட்டு வந்தபிறகு மனதில் ஒரு மாற்றம், அதனோடு சேர்த்து இளங்கோவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
“நீதானே மூத்த மருமக.. நீதான் நாளைக்கு அம்மா போல எல்லாரையும் அனுசரிச்சு இழுத்து பிடிச்சு கொண்டு போகணும்.. இப்போவே நீ இப்படி சண்டை போட்டா நாளைக்கு யார் உன்னை மதிப்பா…” என்று அவளை ஏற்றிவைத்தே பேசி பேசி ஒரு வழிக்கு கொண்டுவர,
“ஓ….!!!! இதெல்லாம் வேற இருக்கோ…” என்று யோசிக்கத் தொடங்கியிருந்தாள்..
ஒருநாள் மன்னவனோ “இங்க பாரு ஜோதி.. அது வாழ வந்த பொண்ணு.. அவங்க வாழ்க்கை.. அவங்க விருப்பம்.. சும்மா பொன்னி பத்தி பேசிட்டு இங்க வராத…” என்றுவிட்டு இருந்தார்..
ஆக, இதெல்லாம் பரஞ்சோதிக்கு ஒரு எரிச்சல் தர, அதிலும் பொன்னி மீதிருந்த மனகசப்பு வேறு மன்னவன் வீட்டில் அனைவருக்குமே மாறியிருக்க இதெல்லாம் சேர்த்து அவருக்கு மொத்தாமாய் ஒரு வெறுப்பையே அவள்மீது கொடுத்தது.. அனைத்தையும் மனதினில் வைத்தே தன் வயதிற்கு தகுந்த காரியம்தான் செய்கிறோமா என்றெல்லாம் பாராது இப்படி செய்துவிட்டார்..
எப்படியோ ஒன்று நொடிபொழுதேனும் பொன்னி சங்கடத்திற்கு உள்ளாவாளே என்று… அதிலும் அவளை அழைக்கவில்லை என்றாலும், புகழை அழைத்ததினால் எப்படியானும் இந்த திருமணத்திற்கு வருவாள், அதுவே அவள் தோற்றதுபோல் தானே என்று நினைத்திருந்தார்..
அல்பத்தனம் தான்.. ஆனாலும் தெரிந்தே செய்தார்.. ஒருசிலர் வயதானாலும் திருந்தமாட்டார்கள் அதுபோல்தான் பரஞ்சோதியும்..  
புகழேந்தியும் சரி.. பொன்னியும் சரி இன்று அழைப்பர் நாளை அழைப்பர் என்று காத்திருந்தது தான் மிச்சம்…. இதோ நாட்களும் போய்விட்டது.. ஊரிலிருந்து ஓயாத அழைப்புகள் எப்போது வருகிறீர்கள் என்று..
நித்யா கூட பொன்னிக்கு அழைத்து “ஒரு ஆரஞ்சு கலர் சேலை எடுத்தோமே அதை கட்டுவோம்… ஒரேமாதிரி…” என்றுசொல்ல, பொன்னிக்கோ “சரிக்கா…” என்பதை தவிர வேறெதுவும் சொல்ல முடியாத நிலை..
அதிலும் மேலாய் மங்கை அழைத்திருந்தார்.. பொன்னிக்கு அவரின் அழைப்பை பார்த்ததுமே ஒரு எண்ணம் ஒருவேளை மங்கையை அழைத்திருப்பார்களோ என்று..
ஆனால் மங்கையோ “பொன்னி நித்யாவோட அம்மா வீட்ல இருந்து இப்போ வரைக்கும் வந்து கூப்பிடலை…” என்றுசொல்ல, அவள் திடுக்கென்று தான் இருந்தது..
“என்னம்மா சொல்ற???!!!!!” என்று அதிர்ச்சியாய் தான் கேட்டாள்..
“ஆமா பொன்னி… அன்னிக்கு உங்க மாமியார்.. நித்யவோட அம்மா எல்லாம் வந்திருந்தாங்க போல, நான் தோட்டத்துக்கு மாடுங்கள கூட்டிட்டு போயிட்டேன்.. பக்கத்து வீட்ல சொல்லவும் சரின்னு திரும்ப உங்க மாமியார்க்கு கூப்பிட்டு பேசினேன்.. ஆனா அடுத்து இப்போ வரைக்கும் வந்து யாரும் கூப்பிடலை…” என்று மங்கை சொல்லவும்,
பொன்னிக்கு “ச்சே ….” என்றுதான் ஆனது..
என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்… நாளைக்கு பின்னே ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ளவேண்டாமா?? இன்றோடு முடியும் விசயங்களா இது… என்று பொன்னிக்கு ஏக கடுப்பாய் போனாலும், ஒருமாதிரி அவமானப்பட்டதாகவே இருந்தது..
அவளால் அவளின் அம்மாவினையும் அசிங்கப்படுத்தி விட்டதாகவே தோன்றியது.. அவளை அழைக்காதது எல்லாம் பின்னே போய் இப்போது மங்கையை உதாசீனப்படுத்தியது தான் பொன்னியால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை..
பேசாமல் மகராசிக்கு அழைத்து அனைத்தையும் சொல்லிடலாமா என்றுகூட தோன்றியது ஆனால் முதல்நாளே புகழேந்தி கண்டிப்பாய் சொல்லிவிட்டான், இப்போதைக்கு இதை யாரிடமும் சொல்லிடவேண்டாம் என்று..  
இப்போது இதுவும் சேர்ந்துகொள்ள புகழ் வந்தவனிடம் அப்படியொரு சண்டை போட்டாள்.. யாரின் மீதோ இருக்கோம் கோபம் எல்லாம் இப்போது புகழ் மீது தான் இறக்க முடிந்தது அவளால்..
“என்ன நினைச்சிட்டு இருக்காங்க அவங்க… வேணும்னே எல்லாம் பண்ணிட்டு இப்போ எதுவும் தெரியாதது போல இருப்பாங்க.. கடைசில எல்லாரும் என்னை பேசுவாங்க.. இப்.. இப்போ எங்கம்மாவையும் கூப்பிடலை.. நீங்கமட்டும் இதை என்னன்னு பார்க்கலை அப்புறம் நான் என்ன செய்வேன் தெரியாது…” என்று பொன்னி சத்தம் போட,
புகழேந்திக்கோ என்னடா இது இப்படியா அடுக்கடுக்காய் வரவேண்டும் என்றுதான் தோன்றியது..
அவனுக்குமே பரஞ்சோதி மீது கோபம் தான்.. வேறு எதையும் சிந்திக்காது  அழைத்து நன்றாய் பேசிவிடலாமா என்று தோன்றியது.. ஆனால் அதனை காட்டும் நேரம் இதுவல்லவே.. அப்படியே வீட்டில் ஏதாவது சொன்னாலும், கடைசி நேரத்தில் என்று அதை இதை எதாவது சொல்லி அத்தனை ஏன் அனைவரின் வாயை அடைக்கவென்று பரஞ்சோதியே கூட நேரில் இங்கே கிளம்பி வந்திடுவார்..
அப்படியான பிறவிதான் அவர் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன??
“இரு…  இரு… கண்ணு.. கொஞ்சம் பொறுமையா இரு.. நான் அம்மாக்கிட்ட கேட்டு பாக்குறேன்.. ஏன்னா ஊர்ல இருக்க எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்க அம்மா அப்பாவும் கூட போனாங்க…” என்று புகழேந்தி சொல்ல,
“அப்போ எங்கம்மா பொய் சொல்றாங்களா???” என்றாள் எரிச்சலாய்…
“நான் அப்படி சொன்னேனா??? இரு நான் கேட்கிறேன்னு தானே சொல்றேன்..” என்றவன் அவளை அமர வைத்து அவளின் முன்னேதான் மகராசிக்கு அழைத்து பேசினான்..
அவரோ எடுத்ததுமே “என்ன கண்ணு கிளம்பிட்டீங்களா?? எல்லாரும் உன்னையும் பொன்னியையும் தான் கேட்கிறாங்க எப்போ வர்றாங்கன்னு..???” என்றார்..
“அதும்மா…” என்றவன் பொன்னியின் முகத்தினை பார்த்துவிட்டு “நாளைக்கு காலைல கிளம்புறோம்…” என, பொன்னியோ அப்படியே அவனை ஏகத்துக்கும் முறைக்க,
‘இரு இரு…’ என்று சைகை செய்தவன், “ம்மா… அன்னிக்கு நீங்க பத்திரிக்கை வைக்க போனப்போ அத்தை வீட்ல இல்லையாமே…” என்று சொல்ல,
“ஆமா கண்ணு.. தோட்டத்துக்கு போயிருந்தாங்களாம்.. வந்து எனக்கு போன் போட்டாங்க.. நானும் அடுத்து மதினிக்கிட்ட சொன்னேன்.. அவங்களே போய் பத்திரிக்கை வச்சுக்கிறேன் சொல்லிட்டாங்க.. ஏன் கண்ணு கேட்கிற???” என்று மகராசி எதுவும் தெரியாமல் கேட்க,
“சும்மாதான் ம்மா.. பொன்னி சொல்லிட்டு இருந்தா.. அதான்…” என்றான் வேறு எதுவும் சொல்லாது..
பொன்னியோ ‘சொல்லு சொல்லு…’ என்று சைகை காட்ட, புகழேந்தியோ ‘இரு இரு…’ என்று அவளை அடக்கியவன், மகராசியோடு பேச, பொன்னிக்கு அனைத்தும் சேர்த்து தலைவலிதான் வர வைத்தது.
கடைசியில் அதை இதை சொல்லி புகழேந்தி தன்னை அழைக்காத வீட்டிற்கு அழைத்து சென்றிடுவானோ என்ற எண்ணம் வந்திட, “ச்சே போங்க…” என்று அவனின் கரங்களை உதறிவிட்டு போய் அறையினில் முடங்கிக்கொண்டாள்..
புகழேந்தியும் மகராசியோடு மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்குள் வர, பொன்னியோ கண்களை இறுக மூடி கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தாள்.
“கண்ணு இங்க பாரு..” என்று அவளருகே வர, அவளோ பார்க்கவும் இல்லை அவன் சொன்னதை கேட்கவுமில்லை.. அப்படியே தான் அமர்ந்திருக்க,
“நாளைக்கு நம்ம கிளம்பித்தான் ஆகணும்..” என்றான்  முடிவாய்..  அதற்கும் அவளிடம் எவ்வித அசைவும் இல்லை..  
“ம்ம்ச் பொன்னி.. நான் பேசிட்டே இருக்கேன்.. நீ இப்படி பண்ணா எப்படி???” என்று புகழேந்தி கொஞ்சம் அலுத்து சலித்தே கேட்க,
“நான் என்ன பண்ணேன்..??” என்றாள் மெதுவாய் கண்களை திறந்து..
“இப்படி இருந்தா என்ன அர்த்தம்???”
“எனக்கு தலை வலிக்குது.. போதுமா…”
“ஹ்ம்ம் சரி.. நானே பேக் பண்றேன்…” என்றவனை ஒருவித கலவையான உணர்வுகளோடு பொன்னி பார்க்க,
“என்ன பாக்குற பொன்னி.. எப்படி இருந்தாலும் நாளைக்கு ஊருக்கு போய்தானே ஆகணும்…”  என்றதுமே பொன்னிக்கு கண்கள் கலங்கிட,
“ஏய் ஏய் கண்ணு ஏன் இப்போ அழற…” என்றவன் வேகமாய் அவளின் அருகே வந்து அமர,
“ஒண்ணுமில்ல போங்க.. கடைசில எல்லாருக்கும் அவங்கவங்க சொந்தம் தான் முக்கியம்.. என்னோட கௌரவம் முக்கியமில்லை.. எனக்கு எவ்வளோ அசிங்கமா இருக்கு தெரியுமா???” என்றவளின் குரல் நடுங்க,
“எனக்கு புரியுது பொன்னி.. ஆனா இப்போ ஊருக்கு போகாம எதுவும் நடக்காது….” என்றான் அழுத்தமாய்..
“ஊருக்கு எதுக்கு போகணும்…????” என்று பொன்னி பல்லைக் கடித்து கேட்க,
“போகணும் அவ்வளோதான்…” என்றவன் பேச்சை முடித்து எழுந்து சென்றுவிட்டான் திரும்பவும் பெட்டி அடுக்கவென்று…     
பொன்னிக்கு ஒருமாதிரி உள்ளே ஒரு உதறல் எடுக்கத் தொடங்கியது.. ஒருவேளை ஊருக்கு அழைத்துச் சென்று அங்கே ஏதாவது பேசி திருமண வீட்டிற்கு தன்னையும் அழைத்து சென்றுவிடுவானோ என்று.. ஆனால் ஒருப்பக்கம் ச்சே ச்சே அப்படி எல்லாம் செய்யமாட்டான் அவனுக்கும் கோவம் தான் என்று சொல்ல, மங்கை வேறு அழைத்து இப்போது என்ன செய்யவென்று கேட்க,
“இந்தாங்க.. அம்மாதான்.. என்ன செய்யன்னு கேட்கிறாங்க.. அதையும் நீங்களே சொல்லிடுங்க…” என்று புகழேந்தியின் பக்கம் போனை தூக்கிப் போட்டாள்.
புகழேந்திக்கு பொன்னியின் அனைத்து உணர்வுகளும் புரிந்தது.. ஆனால் அவளைப் போல் அவன் கோவப்பட்டு எதையும் செய்யவும் முடியாது பேசிடவும் முடியாது.. காரணம் இளங்கோ….
பரஞ்சோதி அவனுக்கு வெறும் அப்பாவின் தங்கையாய் இருந்திருந்தால் இந்நேரம் ‘நாங்கள் வரவில்லை…’ என்று சொல்லியிருப்பான்..
ஆனால் நித்யாவின் அம்மாவும் கூட.. அதாவது இளங்கோவின் மாமியாரும் கூட.. அப்படியிருக்கையில் சட்டென்று உறவுகளை தூக்கிப் போடா முடியாது இல்லையா..
பொன்னியையே பார்த்து நிற்க, “என்ன பாக்குறீங்க?? எடுத்து பேசுங்க…” என்றாள் ஆங்காரமாய்..
“ம்ம்…” என்று தலையை ஆட்டியவன் “ஹலோ அத்தை…” என,
மங்கையோ பதறிபோய் “மாப்ள.. எது.. எதுவும் சண்டையா???” என்றார்..
அவரின் பதறிய குரல் அவனுக்கு என்ன செய்ததோ பதிலுக்கு பொன்னியை முறைத்தவன் “அதெல்லாம் எதுமில்ல அத்தை… நீங்க.. நீங்க சொல்லுங்க…” என மங்கை சுருக்கமாய் விவரம் சொல்ல,
“ஹ்ம்ம்” என்று கேட்டவன் மணி பார்த்துவிட்டு “அத்தை இப்போ ஒரு பஸ் இருக்குமே சென்னைக்கு.. பேசாம அதுல கிளம்பி வந்துடுங்க இங்க அசோக் வீட்டுக்கு.. ஊர்ல இருக்கவேணாம்.. நான் பார்த்துக்கிறேன்…” என,
அவன் சொன்னதை கேட்ட பொன்னிக்கு ‘என்ன சொல்றான்…’ என்று நெற்றி சுருங்கியது..
மங்கையோ “இல்ல மாப்ள. அது… நாளைக்கு ஒரு பேச்சு ஆகிடாதா???” என்று தயங்க,
“அவங்க உங்களை கூப்பிட்டு நீங்க வரலைன்னாதான் காரணம் சொல்லணும்.. நீங்க கிளம்பி வாங்க அத்தை.. நாளைக்கு காலைல நாங்க இங்கிருந்து கிளம்புறோம்.. நான் பார்த்துக்கிறேன்….” என்றுசொல்ல மங்கையால் மறுக்க முடியவில்லை..
“சரி மாப்ள…” என்று வைத்துவிட்டார்..
திரும்பவும் பொன்னியை போதுமா என்பதாய் ஒருமுறை பார்த்தவன், அவளைப்போலவே அவளின் அருகே போனை தூக்கி போட்டுவிட்டு திரும்ப உடைகளை எல்லாம் எடுத்து வைக்க, பொன்னிக்கோ இவன் என்ன செய்ய காத்திருக்கிறான் என்பதே புரியவில்லை..
ஒருப்பக்கம் மங்கையை கிளம்பிவா என்று சொல்லிவிட்டான் இன்னொரு பக்கம் பொன்னியை ஊருக்கு கிளம்பு என்று சொல்கிறான்.. என்னதான் செய்யப் போகிறான் என்று இருக்க திரும்பவும் தலை வலி அதிகம் தான் ஆனது..
பழையபடி அதேபோல் கண்களை மூடி அமர்ந்துகொள்ள, கொஞ்ச நேரத்தில் புகழேந்தியின் கரங்கள் அழுத்தமாய் அவளின் தலையில் பதிந்தது… கூடவே ஒரு இதமான குரலும்,
“ரொம்பவும் வலிக்குதா???” என்று…
“ம்ம்…” என்றவள் அப்படியே தலையை இன்னும் கொஞ்சம் பின்னே சரித்து அவனை பார்க்க, மெதுவாய் அவளின் தலையை இருபுறமும் புகழ் பிடித்துவிட, அவன் கைகள் கொடுத்த இதத்திலும் அழுத்தத்திலும் திரும்ப அவள் கண்கள் தானாய் மூடிக்கொள்ள, புகழேந்தியின் வருடல்களும் பிடிதல்களும் இன்னும் அலுத்தமாயின..
இரண்டொரு நொடி அமைதியாய் கழிய பொன்னி “ஒருமாதிரி அசிங்கமா பீல் ஆகுது….” என்றாள் கண்களை திறவாமல்…
“ம்ம்…. புரியுது….” என்றவன் இப்போது அவளின் கழுத்தினை இதமாய் மிதமாய் பிடிக்க,
“ம்ம்ம்….” என்றவள் “பின்ன ஏன் ஊருக்கு போகணும் சொல்றீங்க???” என்றாள்..
“இங்க இருந்து என்ன செய்ய போறோம்.. லீவ் டேஸ் தான்… சோ போலாம்….”
“அங்க போனா எல்லாம் கல்யாணத்துக்கு போவாங்களே….”
“போகட்டும்….”
“நீங்க போவீங்களா???”
“……..”
“சொல்லுங்க நீங்க போவீங்களா????” என்று பொன்னி அவனின் கரங்களை பிடித்துக்கொள்ள,
“நீ என்ன நினைக்கிற???” என்றான்..
“என்ன நினைக்கிறதுன்னு தெரியலை….”என்று பொன்னி சொல்லும்போதே அவளின் விரல்களை தன் விரல்களால் இறுக்க,
வலியில் லேசாய் முகம் சுளித்தவள் திரும்பவும், “என்னை அவமானப் படுத்திட்டாங்க.. என்னோட சேர்த்து அம்மாவையும்….” என்றாள்..
புகழ் எதுவும் பேசாமல் இருக்க, பொன்னியும் பதில் பேசாமல் இருந்தவள், இன்னும் கொஞ்சம் பின்னே சாய்ந்து அவனின் வயிறில் தலை வைத்துக்கொள்ள புகழேந்தியோ அவளின் கரத்தோடு சேர்த்து இன்னும் அழுத்திப் பிடித்துக்கொண்டான்..
“கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு…..” என்று குனிந்து அவளின் காதில் முணுமுணுக்க,
“ம்ம்….” என்றவள் அப்படியே இருக்க,
புகழேந்திக்கு மனதினில் யோசனையாகவே இருந்தது பொன்னியை எப்படி சரி செய்யலாம் என்று.. ஊருக்கு போகாது இங்கிருந்தால் எதுவும் செய்ய முடியாது.. ஆனால் ஊருக்கு போனால் நிச்சயம் பொன்னிக்கு சங்கடம் தான் நேரும்.. அவன் பார்த்துகொள்வான் தான்..
ஆனால் எத்தனை முறை தான் அவளின் மனம் நோகடிக்கப் படுவதை அவன் அனுமதிக்க முடியும்…??? ஒவ்வொரு முறையும் அவனுக்காகத்தான் அவளும் பொறுக்கிறாள்… இதெல்லாம் ஓட அப்படியே அவளை அணைத்த வாக்கிலேயே நின்றிருந்தான்..
பொன்னிக்கும் அவனின் இருந்த அருகாமை கொஞ்சம் மனதை அமைதியடைய செய்ததுவோ என்னவோ மௌனமாய் இருந்தவள் திரும்ப அவனை பின்னே சாய்த்து பார்த்து,
“நம்ம கல்யாணம் பண்ணது அவ்வளோ தப்பா???” என்று கேட்கையில் அவளின் இதழ்கள் நடுக்க,
“ஹேய் கண்ணு… என்ன நீ?? என்ன பேசுற…??” என்றவன் அப்படியே அவளின் நெற்றியில் தன் நெற்றி வைத்து அழுத்த,
“ம்ம்.. அதுனாலத்தானே அவங்க அப்போயிருந்து பிரச்சனை பண்றாங்க…” என்றாள்..
“அவங்க பண்ணா பண்ணட்டும்.. ஆனா நீ இப்படி நினைக்கலாமா???”
“நான் நினைக்கல.. ஆனா எல்லாம் அப்படித்தான் நினைக்கிறாங்க…” என,
“யார் வேணா என்ன வேணா நினைக்கட்டும்.. ஆனா நீ அதெல்லாம் நினைக்காத…” என்றவன் மெதுவாய் நெற்றி கன்னம் என்று இதழ் பதிக்க, அவளும் அவனின் முத்தத்திற்கு எதுவாய் முகம் திருப்ப,
அவளின் இதழ்கள் மட்டும் திரும்ப “எனக்கு ஒருமாதிரி அசிங்கமா பீல் ஆகுதுங்க.. நாளைக்கு அவங்களை எப்படி பேஸ் பண்ணுவேன்…” என,
“அதையும் நீ நினைக்கவேண்டியது இல்லை…” என்றவன் அவளின் இதழில் தன்னிதழ் பதிக்க, இதம் கொஞ்சம் மிதமாய் மாறி வன்மையாய் மாற பொன்னியின் கரங்கள் அப்படியே உயர்ந்து பின்னே அவனின் கேசத்தில் நுழைந்துகொண்டது…
நீ எதுவும் நினைக்காதே நினைக்காதே என்று சொல்லி சொல்லியே மொத்தமாய் அவனை நினைக்க வைத்தவன், அவன் இடும் முத்தங்களின் வழியாகவே அவளை மற்றது மறக்கச் செய்ய, அவளோ அவன் பிடியில் இருந்து விலகும் எண்ணமே இல்லாது இருந்தாள்..
புகழேந்தியின் அணைப்பு, எப்போது அவளதாய் மாறியது… இருவருக்கும் தெரியாது.. அவனின் அந்த முத்தம் அவள் எப்போது தொடர்ந்தாள் இருவருக்கும் தெரியாது… அவன் எப்போது முன்னே வந்திருந்தான் அதுவும் தெரியாது..
பொன்னி எதுவோ பேச வருகையில் எல்லாம் புகழ் ‘எதும் நினைக்காத…’ என்று சொல்லியே அவளின் இதழ்களை தீண்ட, கொஞ்சம் கொஞ்சமாய் பொன்னிக்கு எதுவமே நினைவில் இல்ல புகழேந்தியை தவிர..
அடுத்த கொஞ்ச நேரத்தில் புகழேந்தி எதுவோ கேட்கவர ‘நான் எதுவும் நினைக்கல…’ என்று அவளே சொல்லி அவன் கன்னம் பற்றி தன்னருகே இழுக்க, புகழேந்திக்கும் எல்லாம் மறக்கத் தொடங்கியது..
பொழுது மெல்ல தன் விடியல் வேலையை தொடங்கியிருக்க, புகழேந்தியின் அலைபேசியில் அலாரம் அடிக்க, அதன் சத்தத்தில் கண் விழித்தவனுக்கு எழவே மனமில்லை..
அலாரம் சத்தம் நின்றதுமே இளங்கோ அழைத்தான்..
“என்னண்ணா…” என்றான் புகழும் அதே கரகர குரலில்..
“டேய் இன்னும் கிளம்பலையா நீங்க???” என்று இளங்கோ கேட்க, அவன் கேட்ட கேள்வியில் மறந்துபோன அனைத்தும் அடித்து பிடித்து நினைவில் வர,
“இல்ல அது…” என்று திணறியபடி புகழ் எழுந்து அமர, பொன்னியும் அவனின் அசைவில் கண்கள் திறந்தவள், எழுந்து அமர,
“இதோ.. இதோ கிளம்பப் போறோம்…”  என்றான் புகழேந்தி..
“ஹ்ம்ம் நான் நித்யா.. பையன் எல்லாம் ரெண்டு நாள் முன்னாடியே இங்க வந்துட்டோம் டா.. நீயும் பொன்னியும் வரவும் அப்படியே கிளம்பி வந்திடுவோம்னு அப்பா சொன்னார்.. அதான் கேட்டேன்.. நம்ம வீட்டு ஆளுங்கன்னு இங்க நான் மட்டும்தான் இருக்கேன்.. நீங்க எல்லாம் வந்துட்டா கொஞ்சம் நல்லாருக்கும்…” என்று இளங்கோ சொல்ல,
“ம்ம் சரிண்ணா.. நான் வந்துட்டு பேசுறேன்…” என்றவன் வைத்துவிட்டான்…
பொன்னி எதுவும் பேசவில்லை அமைதியாய் புகழேந்தியோடு கிளம்ப, மங்கையோ அசோக் வீட்டிற்கு வந்துவிட்டதாக அழைத்து சொன்னார்..
புகழேந்தியோ காரில் ஏறியதும் “தைரியமா இரு.. நான் இருக்கேன்ல…” என்றுசொல்ல,
“ம்ம் …” என்றுமட்டும் சொல்லிக்கொண்டாள்..
ஒருவழியாய் கிளம்பி இருவரும் அங்கே வீடு வந்து சேர, அனைவரும் கிளம்பித் தயாராய் இருந்தனர்..
அனைவரின் முகத்திலும் விசேசத்திற்கு செல்லும் மகிழ்வு இருக்க அது இவர்கள் இருவரின் முகத்திலும் சிறிதும் இல்லை என்பது அவர்களை பார்த்தாலே தெரிந்தது..
“என்ன கண்ணு.. இப்படி வந்திருக்கீங்க ரெண்டுபேரும்…” என்று மகராசி கேட்க,
“அதானே.. உடம்பு எதும் சரியில்லையா??” என்றாள் அன்பரசி..
மன்னவனோ “உள்ள வந்ததுமே என்ன கேள்வி.. புகழ் போ உள்ள போய் கை கால் கழுவிட்டு வா.. பொன்னி நீயும் போ மா..” என்றுசொல்ல,
ஜெயபாலோ “மாமா நீங்களும் அக்காவும் அமுதாவும்  முன்னாடி கூட போங்க.. நாங்க எல்லாம் அடுத்து கிளம்பி வர்றோம்..” என்றான்..
“நீ சொல்றதும் சரிதான்…அப்போயிருந்து ஜோதி போன் போட்டுட்டே இருக்கா…” என்றவர், புகழேந்தி வெளியே வரும் அதையே சொல்ல,
“இல்லப்பா நீங்கல்லாம் போங்க.. நாங்க இருந்துக்கிறோம்…” என்றவனிடம் அனைவருமே
“ஏன்???” என்ற கேள்வியைதான் முன்வைத்தனர்..  
“ஏன்னா??? கூப்பிட்டாதானே வர..” என்று புகழேந்தி அசால்ட்டாய் சொல்ல, பொன்னியும் உள்ளிருந்து வந்தவள்,
“மதினி கொஞ்சம் காப்பி குடுக்குறீங்களா நேத்துல இருந்து ஒரே தலைவலி…” என்றுசொல்ல, அனைவருமே இவர்களை வித்தியாசமாய் தான் பார்த்தனர்..
            
                           
     
    
 
 

Advertisement