Advertisement

                        தோற்றம் – 27
அசோக் திருமணம் வேண்டாம் என்றது, மங்கைக்கும் சரி பொன்னிக்கும் சரி பெரும் மன குழப்பத்தை கொடுத்தது. அவர்களை பொறுத்தமட்டில் அசோக் என்பவன் வெறும் அண்ணனோ, இல்லை மகனோ என்ற உறவில் மட்டுமல்ல, இவ்விரண்டு பெண்களின் தைரியத்தின் ஆணிவேரே அவன்தான்…
அவனுக்கு ஒன்று என்றாலோ, இல்லை அவன் ஏதாவது செய்துவிட்டான் என்றாலோ அது இவ்விருவரையும் மிக மிக பாதிக்கும்… அதிலும் இத்தனை நாள் திருமணத்திற்கு சரி என்று சொல்லி, அவனின் சம்மதத்தோடு தான் அனைத்தும் செய்ய ஆரம்பித்தது..
ஆனால் இப்போது… பார்க்கும் பெண்கள் பிடிக்கவில்லை என்றால் கூட வேறு பார்க்கலாம்.. ஆனால் திருமணமே வேண்டாம் என்கையில் என்ன செய்வது என்று இருவருக்கும் தெரியவில்லை..
மங்கை சொன்னதுமே பொன்னி அசோக்கிற்கு அழைத்துப் பேச அவனோ “ஏன் இப்போ மாத்தி மாத்தி நீயும் அம்மாவும் இப்படி பேசுறீங்க…” என்று எரிந்து விழுந்தான்..
“நீ ஏன் ண்ணா இப்போ இப்படி பேசுற.. உன்கிட்ட கேட்டுதானே எல்லாம் பண்றோம்… இப்போ கல்யாணமே வேணாம் சொன்னா எப்படி???”
“பொன்னி.. நல்லா கேட்டுக்கோ நான் கல்யாணமே வேணாம் சொல்லலை .. எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு தான் சொல்றேன்.. கொஞ்ச நாள் போகட்டும்..” என்றான் பிடிவாதமாய்..
“அதுதான் ஏன்.. சரி நீ சொல்ற கொஞ்ச நாள் ஓகே.. பட் நாங்க பாக்குறது பார்த்துட்டு இருக்கோமே…” என,
“அதுவும் வேணாம்..” என்றான் முடிவாய்..
“ஏன்.. ஏன் வேணாம் சொல்ற?? ரீசனாவது சொல்லு..” என்று பொன்னி கொஞ்சம் டென்சனாகவே கேட்க,
“ம்ம்ச்.. ஒருத்தன நிம்மதியா வேலை செய்ய விடமாட்டீங்களா…” என்று கத்தியவன் அப்படியே அழைப்பை துண்டித்து விட, பொன்னிக்கு ‘அச்சோ என்ன இது…’ என்றுதான் இருக்க,
புகழேந்தியோ வேறுவித எண்ணத்தில் இருந்தான்.. அவனுக்கு என்னவோ அமுதாவின் நினைவு வந்தது.. என்ன இருந்தாலும் அவனின் தங்கை அல்லவா அவள்..
அவளை வேண்டாம் என்றுசொல்லி, இப்போது அவனே அசோக்கிற்காக வேறு ஒருவரிடம் பெண் கேட்பதா??? பொன்னிக்கு நல்ல கணவன் தான்.. ஆனால் இந்த இடத்தில் அவனால் அமுதாவையும், அவனின் வீட்டினரையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை..
பின்னாளில் அவன் வீட்டில் ‘அமுதாவை வேணாம் சொல்லிட்டு நீ வேற பொண்ணு பேசிருக்க…’ என்று கேட்டால் நிச்சயமாய் அவனால் எந்தவித பதிலும் சொல்ல முடியாது..
இதெல்லாம் புகழ் மனதில் ஓட, பொன்னியோ அவளின் நிலை வேறாய் இருந்தது.. பொதுவாய் பொன்னிக்கும் புகழேந்திக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித பிரச்சனையும் இல்லை.. ஆனால் சுற்றி இருப்பவர்களால், அவர்கள் இருவருக்குள்ளும் சரி,  இல்லை அவர்கள் மனதளவிலும் சரி ஏதாவது ஒரு பிசகு.. ஒரு பிணக்கு வந்துகொண்டு தான் இருக்கிறது..
அதிலும் ஒன்று, இந்த அசோக் விசயமும் சேர்ந்துகொள்ள, பொன்னி ஒருமுறை நீங்கள் பேசி பாருங்கள் என்று புகழை அசோக்கிடம் பேசு என்று சொல்ல, புகழேந்தி மறுத்துவிட்டான்..
“நீயும் உங்கம்மாவும் சொல்லியே கேட்கலை.. நான் என்ன சொல்ல முடியும் இதுல..” என்று சொல்லிவிட்டான்..
அடுத்து மங்கை ஒருபாடு பேசி புலம்ப, பொன்னியோ அப்படியே முகத்தை கவலைக்கு குத்தகைக்கு கொடுத்து அமர்ந்திருக்க, புகழும் சொல்லி சொல்லி பார்க்க, முடிவில்  கத்தியேவிட்டான்..
“இப்போ எதுக்கு டி நீ இடி விழுந்த மாதிரி இருக்க?? இப்போ என்ன கல்யாணம் வேணாம் சொல்றான்.. கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப கேட்கலாம்..” என்று பொன்னியை சத்தம் போட்டுவிட்டான்..   
“என்னங்க நீங்க இப்படி சொல்றீங்க..???” என,
“பின்ன.. ஒருநாள் சந்தோசமா இருக்கலாம்னா முடியுதா.. எல்லார் பிரச்சனையும் இங்கதான் வந்து விடியுது….” என்று புகழேந்தியும் டென்சனில் வார்த்தையை விட,
“உங்களுக்கு அசோக்கிட்ட பேச இஷ்டமில்லை.. அதுக்குன்னு இப்படி சொல்ல வேண்டியதில்லை..” என்று கடுகடுத்துவிட்டு அவளும் எழுந்து உள்ளே போய்விட,
“என்னது என்ன சொன்ன???!!!” என்றபடி புகழும் பின்னே போக,
“உண்மைதான்.. உங்களுக்கு மனசுக்குள்ள ஒரு கோவம் சாரி கோவம் கூட இல்லை.. ஒரு வருத்தம் இல்லைன்னு சொல்லுங்க.. அன்னிக்கு மாமா கேட்டதுக்கு நான் சரின்னு சொல்லலைன்னு..” என்று பொன்னி நேருக்கு நேராகவே புகழேந்தியிடம் கேட்டுவிட,
அவளை ஒருநொடி இமைக்காது பார்த்தவன், “தங்கச்சி வச்சிருக்க எந்த அண்ணனுக்கும் அந்த வருத்தம்.. ஏன் கோபம் இருக்கத்தான் செய்யும்.. அது அசோக்குக்கும் இருந்திருக்கும்…” என்றுவிட்டான் அழுத்தம் திருத்தமாய்..
“ஓ.. அப்.. அப்போ இத்தனை நாள் அதெல்லாம் மனசுக்குள்ள வச்சிட்டுதான் வெளிய எதுவுமே இல்லைங்கிறதுபோல இருந்தீங்களா…” என்பவளின் தொனியே
‘நீ இப்படி செய்யலாமா???’ என்று கேட்பதாய் இருக்க,
“இங்க பார் பொன்னி.. நடந்த விசயத்துல உன் பக்கம் நியாயம் இருந்தது.. அதுனால தான் நான் எதுவும் உன்கிட்ட சொல்லவும் இல்லை.. கேட்கவும் இல்லை.. ஆனா ஒரு அண்ணனா எனக்கு மனசுல வருத்தமும் இருக்கு.. இந்த பேச்சு வரவேயில்லைன்னா கூட எனக்கு எதுவும் தெரிஞ்சிருக்காது.. ஆனா வந்திடுச்சு.. அதைப்பத்தி நினைக்காம இருக்க முடியாது…” என்றவனின் வார்த்தைகளுமே இதற்குமேல் இதில் மறைத்துப் பேச எதுவுமில்லை என்று சொல்லியது..
“ஓஹோ…!!!! சோ இதுக்குதான் என்னை அவ்வளோ அவசரமா இங்க கூட்டிட்டு வந்தீங்களா.. ரொம்ப தேங்க்ஸ்.. ஆனா நிஜமாவே நீங்க உங்க மனசுல எதுவும் வச்சுகலைன்னு தான் நினைச்சேன்..” என்று பொன்னி ஏளனமாய் உதடு பிதுக்க,
“ம்ம்ச் திரும்ப திரும்ப அதையே பேசாத பொன்னி.. இப்போ அசோக்குக்கு ஒண்ணுன்னா உனக்கு டென்சன் ஆகுதுல்ல.. அப்போ அதே போலதானே எனக்கும்… ஆனா அதை பேசி உன்னை ஹர்ட் பண்ண நான் விரும்பலை.. வெளிக்காட்டிக்களை.. ரெண்டு பேருக்குமே ஒரு நல்ல லைப் அமைஞ்சா சரின்னுதான் இருந்தேன்..” என்றவன்,
“இங்க பாரு நல்லா கேட்டுக்கோ.. நானும் சாதாரண மனுஷன் தான்.. எனக்கு நீ எவ்வளோ முக்கியமோ அதேபோல்தான் நம்ம வீட்ல இருக்கவங்களும்.. இதை முன்னாடியே சொல்லிருக்கேன்.. என்னால உன்னையும் விட்டுக்கொடுக்க முடியாது அவங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது…” என்று வார்த்தைக்கு வார்த்தை பிடிவாதமாய் பேசுபவனை விழிகள் இமைக்காது தான் பார்த்தாள்..
“என் நிலைமை இதுதான் பொன்னி.. புரிஞ்சிக்கிறது உன்னோட விருப்பம்..” என,
“சரி இனிமே நான் உங்கக்கிட்ட எதுவும் சொல்லலை.. போதுமா.. எப்பவும் போல எல்லாத்தையும் எனக்குள்ளயே போட்டுக்கிறேன்..” என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்..
 “ச்சே…” என்று புகழேந்தி எரிச்சலில் சுவற்றை குத்திக்கொண்டான்.
இருந்திருந்து அவளோடு வீட்டில் நேரம் செலவிடவேண்டும் என்று அதுவும் அவளின் பிறந்தநாளுக்காக என்று வீட்டில் இருக்க நினைத்தால் இல்லாத விஷயங்கள் எல்லாம் அன்றுதான் முளைக்கும் போல.. பொன்னிக்கு புகழேந்தி சாதாரண நாளில் இப்படி பேசியிருந்தால் கூட இதை பெரிதாய் நினைத்திருக்க மாட்டாள்..
ஆனால் இன்று அசோக்கும் சேர்த்து அவளை கத்திவிட ஏற்கனவே புகழேந்தி வேறு காலையில் கோவித்து சென்றது என்று எல்லாம் சேர்ந்து ஒருவித எரிச்சலை கொடுத்தது.. திருமணம் செய்தோம்.. நிம்மதியாய் வாழ்வோம் என்று நினைத்தால் முடிகிறதா என்ற ஒரு சலிப்பு….
அவன் ஒருப்பக்கம் அவள் ஒருப்பக்கம் அமர்ந்திருக்க, திரும்ப அசோக்கே பொன்னிக்கு அழைத்தான்.
“இங்க பாரு பொன்னி.. அம்மாதான் எல்லாத்துலயும் அவசரப்படுதுன்னா.. நீயுமா?? இப்போ என்ன கொஞ்ச நாள் போகட்டும்னு தானே சொல்றேன்…” என்று தன்மையாகவே சொல்ல,
“இது இப்படி நீ முன்னாடி பேசிருக்கணும்.. அப்படி கத்திட்டு வைக்கிற…” என்றாள் இவள்..
“சரி தப்புதான் சாரி.. ஆனா இப்பவும் சொல்றேன்.. இப்போதைக்கு எதுவும் வேணாம்..” என்றவனின் உறுதியான குரலை கண்டு, பொன்னிக்கு என்ன தோன்றியதோ,
“அ.. அசோக்.. நீ யாரையும் லவ் பண்றியா???” என்று கேட்டுவிட்டாள்..
பொன்னி அப்படி கேட்கும்போதே புகழேந்தியும் அங்கே வந்திட, பொன்னி கேட்ட கேள்வியில் தன்னிச்சையாய் புகழின் கால்கள் அங்கேயே தேங்கி நின்றுவிட, பொன்னியும் புகழ் முகத்தினை பார்த்தவள் அசோக்கின் பதிலுக்காக காத்திருந்தாள்..
“அண்ணா… சொல்லு….”
“ம்ம்.. இதென்ன கேள்வி..????”
“ம்ம்ச் கேள்வி கேட்டா பதில் சொல்லு…”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்று அசோக் சொன்னதுமே,
“பின்ன.. பின்ன ஏன்… இப்போ வேணாம் சொல்ற…” என்று பொன்னி திரும்ப ஆரம்பிக்க,
‘நீ திருந்தவே மாட்ட…’ என்று ஒருபார்வை பார்த்து புகழ் திரும்ப உள்ளே சென்றுவிட, அசோக்கோ, “எத்தனை டைம் கேட்டாலும் என்க்கிட்ட பதில் இல்லை பொன்னி…” என்று வைத்துவிட்டான்..
அவ்வளவுதான் அத்தோடு முடிந்தது.. அடுத்து பொன்னி அசோக்கோடு பேசவேயில்லை.. மங்கையும் திரும்ப ஊருக்கே சென்றுவிட்டார்.. அவரிடமும் சொல்லிவிட்டாள்.. ‘விடும்மா அவன் என்னிக்கு சொல்றானோ அப்போ பார்த்துக்கலாம்..’ என்று..
ஆனால் மறுநாளே புகழேந்தி ஆபிஸிலிருந்து பொன்னிக்கு அழைத்து “கொஞ்சம் ரெடியா இரு.. வெளிய போகணும்..” என்றுமட்டும் சொல்ல,
“எங்க ???” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லவில்லை..
“ரெடியா இரு.. அவ்வளோதான்…” என்றவன் வைத்துவிட்டான்..
‘ச்சே.. எனக்குன்னே எல்லாம் வந்து சேருறாங்க.. என்ன கேட்டாலும் யாரும் பதில் சொல்றதில்லை..’ என்று முணுமுணுத்தபடியே பொன்னியும் தயாராகி இருக்க, புகழ் அன்று சீக்கிரமே வீடு வந்துவிட்டான்..
அவன் சொல்லி தயாராகி நின்றவளோ, “எங்க போறோம்…” என்று திரும்பவும் கேட்க,
“இங்கதான் பக்கத்துல…” என்றவன், கொஞ்சம் பிரெஷ் செய்துகொண்டு வந்து, “போலாம்..” என்றுசொல்ல,
“சொல்லிட்டு கூட்டிட்டு போனா தான் என்ன???” என்றாள்.
“ஏன் இல்லைன்னா என்கூட வரமாட்டியா???” என்றவனின் பார்வையில் என்ன இருந்ததுவோ ஆனால் பொன்னிக்கு அதனை எதிர்கொள்ள முடியவில்லை..
“ம்ம்…” என்றபடி வெளிய வந்துவிட, புகழ் தான் வீட்டினை பூட்டிக்கொண்டு கிளம்பினான்..
வேறெங்கிலும் இல்லை.. ஒரு ப்ளே ஸ்கூல்.. அவர்கள் குவாட்டர்ஸ் இருக்கும் ஏரியாவில் இருந்து கொஞ்சம் தள்ளி.. ஒரு ஐந்து நிமிட பைக் பயணம் அவ்வளவே..
“கிட்ஸ் கார்டன்…” என்ற பெயர் பலகையை பார்த்து பொன்னிக்கு இது ப்ளே ஸ்கூல் என்று புரிந்தாலும் இங்கே ஏன் அழைத்து வந்தான் என்று அவளுக்குப் புரியவில்லை..
“இங்க எதுக்கு..???” என்று அவனைப் பார்க்க,
“உள்ள வா.. ரொம்ப முன்னாடி.. யோசிச்சது.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு.. உன்கிட்ட கூட சொன்னேன்.. ஆனா எங்க…” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போக,
நிறைய குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் உடன் வீட்டிற்கு சென்றுவிட, ஒருசில குழந்தைகள் அவர்களின் பெற்றவர்களுடனே அங்கிருந்த சிறுவர் பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்தனர்..

Advertisement