Advertisement

தோற்றம் – 25

ஐந்து மாதங்கள் கடந்திருந்தது…

ஒவ்வொருவரின் வாழ்வில் ஒவ்வொரு மாற்றம்.. பொன்னிக்கும் சரி புகழேந்திக்கும் சரி வாழ்வு ஒரு சீராக செல்வது போல்தான்  இருந்தது.. மனதில் இருவருக்கும் இருந்த சில பல பிணக்குகள் காலப்போக்கில் மாறியும் மறைந்தும் போயிருந்தது.. அதுதானே எதார்த்தமும் கூட..

ஆனால் அவளை சமாதானம் செய்வதற்குள் புகழேந்திக்கு தான் போதும் போதும் என்றாகிப்போனது..

“ப்ளீஸ் கண்ணு… நீ இப்படி இருக்காத…” என்று ஆரம்பித்து..

“நீ நார்மலா இல்லாட்டி நான் சாப்பிடமாட்டேன்..” என்று உண்ணாவிரதம் தொடங்கி…

“போ.. நீ இப்படி பண்ணா நான் கிளம்பி எங்காவது போறேன்.. அப்போ நான் சொல்ற வார்த்தைல உனக்கு நம்பிக்கை இல்லைல…” என்று மிரட்டி,

கடைசியில் “ப்ளீஸ் டி புல்லுக்கட்டு.. ப்ளீஸ்…” என்று திரும்பவும் கெஞ்சலில் புகழ் வந்து நிற்க,

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் அவன் பறக்க விட்ட சமாதான கொடிகள் எல்லாம் கொஞ்சம் பொன்னியின் மனதை அசைக்கத்தான் செய்தது..   கடைசியில் ‘போ போ.. பொழச்சி போ…’ என்று இறங்கிவந்தாள்..

“ஹப்பாடி… இனிமே தண்ணி குடிக்கிறதுன்னா கூட சொல்லிட்டுதான் குடிப்பேன்…” என்று சிரித்தவனை,

“ஹா ஹா.. நீங்கதானே.. ஹ்ம்ம்.. பொழச்சி போங்கன்னு விடுறேன்..” என்று கெத்தாய் சுடிதார் ஷாலை ஆட்டிக்கொண்டாள்..

ஆனாலும் பொன்னி, புகழ் வீட்டினரிடம் தான் வகுத்த எல்லைக்குள் தான் நின்றுகொண்டாள்.. இந்த ஐந்து மாதங்களில் அவள் நன்கு அறிந்த ஒன்று, ஒருவிசயம் அவள் சொன்னால் அது பெரிதாகிறது, ஒருவேளை இது கூட்டுக் குடும்பங்களில் பெண்களுக்கு இருக்கும் ஈகோவோ என்னவோ?? இதுவே புகழ் சொன்னால் அதை ஓரளவு அனைவரும் சரியென்று அனுசரித்து போகின்றனர்..

ஆக, நீயே பேசிக்கொள் என்றுவிட்டாள்.. அதற்காக அவளும் அவள் கடமைகளில் தவறவில்லை.. ஆனால் ரொம்பவும் யாரோடும் ஈஷிக்கொள்ளவில்லை.. யார் இங்கே வந்தாலும் நல்லபடியாய் கவனித்து அனுப்பினாள்.. அங்கே அவள் போனாலும் அவளது வேலைகள் என்னவோ அதனை சரியாய் செய்தால்..

அன்பரசியும் நித்யாவும் கூட தேவையில்லாத பேச்சுக்கள் எதுவும் வைத்துகொள்ளவில்லை என்பதால் ஓரளவு சுமுகமாய் தான் அனைத்தும் போனது.. நித்யா வந்து சென்றவளும் கொஞ்சம் வாய் துடுக்காய் எதுவும் பேசாது போக, அடுத்தும் கூட ஒருதரம் அமுதாவை காலேஜ் சேர்க்கையில் எல்லாருமே வந்திருந்தனர்..   

அமுதா கல்லூரி சென்று முழுதாய் இரண்டு மாதங்கள் முடியப்போகிறது..

முதல் ஒரு மாதம் வீட்டில் இருந்து தான் கல்லூரி சென்றாள், பின் மகராசி உறுதியாய் சொல்லிவிட்டார் அமுதா இங்கே இருக்கக்கூடாது என்று.. அவரும், அமுதா கல்லூரி சென்ற முதல் ஒருமாதம் இருந்தவர், அமுதா நல்லபடியாய் தான் சென்றுவருகிறாள் என்று தெரியவுமே,

“கண்ணு.. நானும் எத்தனை நாளைக்கு இங்க இருக்க முடியும்??” என்று புகழிடம் கேட்க,

“ஏன் தாயே… நீ இங்க இருக்க நாள் கணக்கு எல்லாம் இருக்கா??” என்று புகழ் திரும்ப கேட்க,

“அதில்லடா கண்ணு.. ஊர்ல இருந்து வந்தும் இத்தனை நாள் ஆச்சு… அமுதா தான் நல்லா போயிட்டு வர்றாளே… நான் ஊருக்கு போகணும்…” என்றுவிட்டார்..

புகழேந்தி பொன்னியின் முகத்தினை பார்க்க, அவளோ நீங்கள் இருவரும் பேசுங்கள் நான் கேட்கிறேன் என்ற பாவனையில் இருந்தாள்.. மகராசியும், அவளைப் பார்த்தவர் “என்ன கண்ணு நீயும் சொல்லேன்.. எத்தனை நாளைக்கு இங்க நான் இருக்க முடியும்…” என்று அவளையும் பேச்சில் இழுத்தார்..

“இதுல நான் சொல்ல என்னத்தை இருக்கு.. நீங்களும் அவரும் பேசி எடுக்கிற முடிவுதான்…” என்றுவிட்டாள் அப்போதும்..

“ஹ்ம்ம்.. இல்ல கண்ணு. நான் ஊருக்கு போறதுதான் சரி.. என்ன இருந்தாலும் அவரை நான் கவனிக்கிற மாதிரி வராது…” என்று மகராசி அழுத்தம் திருத்தமாய் சொல்லிட, புகழேந்தியால் அதற்குமேல் எதுவும் மறுக்க முடியவில்லை..

“ம்ம் சரிம்மா.. இந்த வாரம் ஊருக்கு கூட்டிட்டு போய் விடுறேன்..” என்றுவிட்டான்..

ஆனால் அமுதா இருக்கிறாளே.. மகராசி அப்படியே கிளம்புவாரா என்ன??

“கண்ணு இன்னொன்னு நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேணாம்..” என்று மகன் மருமகள் இருவர் முகத்தையும் பார்த்தவர்,

“நீங்களும் இப்போதான் கல்யாணம் பண்ணிருக்கீங்க.. அதுனால நான் ஊருக்கு போனதுக்கு அப்புறம் அமுதா இங்க இருக்கவேணாமே…” என்று தயங்கியே சொல்ல, புகழ் பொன்னி இருவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சி தான்..

“ம்மா என்ன சொல்ற நீ.. என் பொறுப்புல கூட்டிட்டு வந்திருக்கேன்.. ஏன் அவ இங்கிருந்தா என்ன??” என்று புகழ் கொஞ்சம் காட்டமாய் கேட்க,

“கண்ணு முழுசா சொல்றத கேளு.. கோவப்பட்டு கத்தாதா…” என்றவர், “கண்ணு உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்..” என்றுவிட்டு,

“அமுதாவ எதாவது இந்த.. அது என்ன.. ஆ.. ஹாஸ்டல்னு சொல்றாங்களே அதுல சேர்த்து விடலாம்.. அவ காலேஜ்லயே இருக்காமே…” என்றுசொல்ல, இப்போது திரும்பவும் புகழேந்தியும் பொன்னியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..

“நான் சொல்றது தப்பா எடுத்துக்க கூடாது…” என்றவர், “நீங்களும் சின்னஞ்சிறுசுக.. அவளும் வயசு பொண்ணு.. வேணாமே…” என்றார் அதற்குமேலும் சொல்லத் தயங்கி..

“ம்மா என்ன பேசுற நீ.. எங்களுக்கு எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா என்ன??” என்று புகழ் அப்போதும் எகிற,

“ம்ம்ச் சும்மா இப்படி எல்லாத்துக்கும் கத்தாதடா.. நான் சொன்னா சொன்னது தான்.. உங்கப்பா கிட்ட கூட நேத்து பேசிட்டேன்.. இதுதான் சரி.. இதுக்கு நீ சரின்னு சொன்னா அவ படிக்கட்டும் இல்லையா என்னோடவே ஊருக்கு கூட்டிட்டு போறேன்..”  என்று பிடிவாதமாய் மகராசி சொல்ல, இருவராலும் ஒன்றுமே சொல்ல முடியவில்லை..

புகழேந்தி கையில் இருந்த பேப்பரை தூக்கி வீசிவிட்டு எழுந்து உள்ளே போய்விட்டான்..

பொன்னி அப்படியே இருக்க, “என்ன கண்ணு நீயே சொல்லு.. நாங்க யோசிக்காம எதுவும் செய்வோமா.. அமுதாவும் இப்போ முன்னமாதிரி இல்லை.. நல்லபடியாதான் இருக்கா.. நானும் ரொம்ப நாளைக்கு இங்க இருக்க முடியாது.. அங்க குடும்பம் ஓடவேணாமா?? இங்க நீங்களும் கொஞ்சம் இயல்பா இருக்கணும்..” என்று சொல்ல,

“ம்ம் சரிங்கத்தை.. உங்க முடிவுதான்…” என்றுவிட்டாள்..

அவர் சொல்வதும் சரிதான்.. அப்படியிருக்கையில் இதில் மறுத்து பேச என்ன இருக்கிறது என்ற எண்ணம் பொன்னிக்கு.. அமுதா இங்கேயே இருந்தாலும் அவளுக்கோ இல்லை புகழேந்திக்கோ எதுவும் சங்கடம் இருக்கப் போவதில்லை.. ஆனால் மகராசியும், மன்னவனும் கலந்து பேசி ஒரு முடிவை சொல்கிறார்கள் என்றால் அதுவும் சரியாய்தான் இருக்கும் என்ற உணர்வு அவளுக்கு..

ஆனால் புகழேந்திக்கோ ‘நான் என்ன பார்த்துக்கொள்ள மாட்டேனா?? பார்த்து நடந்துகொள்ள மாட்டோமா??’ என்று கோவம்..

அதிலும் மகராசி, மன்னவனோடு பேசிவிட்டு ஒரு முடிவாய் சொல்லவும் அவனால் அதனை மீறவும் முடியாத நிலை.. எதாவது பேசிவிடுவோம் என்றே எழுந்து வந்துவிட்டான்..

“நீ கொஞ்சம் அவனுக்கு சொல்லு கண்ணு.. சட்டு சட்டுன்னு கோபம் மட்டும் வந்துடுது…” என, அதுக்கும் சரிங்கத்தை என்பதை தான் பதிலாய் கொடுத்துவிட்டு புகழேந்தியை காணப் போனாள் பொன்னி..

இப்போதெல்லாம் பெரும்பாலும் பொன்னியின் வாயில் இருந்து சரி என்பதனை தாண்டி எதுவும் வருவதில்லை என்பதை மகராசி நன்கு கவனித்திருந்தார்..  மகனிடம் காட்டும் பிடிவாதத்தை, ஏனோ இந்த மருமகளிடம் அவரால் காட்ட முடியவில்லை..

முன்னொரு நாளில் சண்டிராணி என்று எண்ணியவர் தான்.. ஆனால் இன்று அந்த எண்ணம் அடியோடு தவிடுபொடியாகிப் போனது.. நித்யாவும் சரி அன்பரசியும் சரி, உறவுக்குள் திருமணம் என்ற ஒரு சுமுக சுற்ற நிலையிலேயே இருந்துவிட்டனர்.. ஆனால் பொன்னி அப்படியல்ல..

அதிலும் பொன்னி இந்தளவு அனைவரையும் அனுசரித்து போவதே அவருக்கு பெரிய விசயமாய் இருந்தது.. பொன்னி எழுந்து போனதை பார்த்தவரோ “ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது..

அங்கே அறையிலோ புகழேந்தி கோபமாய் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்தான்.. பொன்னி போய் “என்னங்க…” என்றழைக்க, அவனின் முகத்தில் சிறு மாற்றமும் இல்லை..

“உங்களைத்தான்.. இப்போ எதுக்கு இவ்வளோ கோபம் உங்களுக்கு???” என்றபடி அவனருகே அமர,

“பின்ன கோபப்படாம?? அம்மா என்ன சொல்றாங்கன்னு கேட்டாதானே…” என்று புகழ் அப்போதும் எகிறிக்கொண்டு வர,

“அவங்க அவங்க முடிவை சொல்றாங்க.. இதுல நீங்க ஏன் இவ்வளோ கோவப்படனும்..” என்றாள் பொன்னி மிக மிக சாதாரணமாய்..

“என்ன சொல்ற நீ??? அமுதாவை படிக்கணும்னு கூட்டிட்டு வந்தது நான்.. ஏன் நாம அவளை பார்த்துக்க மாட்டோமா?? இப்போ வந்திட்டு ஹாஸ்டல்ல விடுன்னு சொன்னா என்ன அர்த்தம்.. வீட்டுக்கு வந்தவளை ஹாஸ்டல் போன்னு எப்படி சொல்ல முடியும்???”

“ஓ.. அப்போ இதான் உங்க பிரச்சனையா?? அமுதாகிட்ட எப்படி சொல்றதுன்னு…??”

“ம்ம்ச் நான் என்ன சொல்றேன் நீ என்ன கேட்கிற பொன்னி…” என்று திரும்பவும் எரிச்சல் பட்டவன், “நான் வெளிய போறேன் என்னவோ செய்யுங்க…” என்று கிளம்பப் போக,

“நான் இன்னும் பேசி முடிக்கலை…” என்று அவனை இழுத்து பிடித்து அமர வைத்தாள்..

“என்ன?? அதான் எல்லாம் பேசுறீங்களே.. இன்னுமென்ன…”

“சும்மா எல்லாத்துக்கும் எல்லாத்துக்கும் கோவப்படாம வந்து அத்தைக்கிட்ட பேசுங்க.. எழுந்து வந்துட்டா சரியா போகுமா?? வாங்க வந்து பேசுங்க…” என்று பொன்னி எழப்போக, இப்போது அவன் நிறுத்தினான் அவளைப் பற்றி..

“இப்போ வந்து இவ்வளோ பேசுற நீ.. அப்போ அம்மா பேசும்போதே சொல்லவேண்டியது தானே.. அம்மா ஊருக்கு போறேன்னதும் உங்க முடிவுன்னு சொல்ற.. ஏன் ஒருவார்த்தை இருந்துட்டு போங்க சொன்னா என்ன???”  என்று பார்த்தவனை பொன்னியும் தீர்க்கமாய் தான் பார்த்தாள்.

“என்ன பொன்னி கேட்குறேன்ல.. சொல்லு…” என்று புகழ் அவளின் கரத்தை இன்னும் இறுக பற்ற,

“என்ன சொல்லணும்???” என்று பார்த்தவளின் பார்வையும் தொனியும் அப்படியே மாறிபோயிருந்தது.

“அம்மா சொல்றப்போ ஒரு பேச்சுக்குக் கூட இருங்க சொல்லலை.. உங்க முடிவுன்னு சொல்ற…” என்று புகழ் திரும்பவும் கேட்க,

“ஆமா இதுல அவங்க முடிவுதான்.. இங்க பாருங்க, கூட்டிட்டு வர்றபோ என்கிட்ட சொல்லியோ இல்லை கேட்டோ நீங்க அவங்களை கூட்டிட்டு வரலை.. அதேபோல அவங்களும் ஊருக்கு போறதுன்னு முடிவு எடுக்கிற முன்னாடி என்கிட்டே சொல்லவும் இல்லை கேட்கவும் இல்லை.. அப்படியிருக்கப்போ நான் சொல்ல இதுல என்ன இருக்கு… சொன்னாலும் கேட்பாங்களா என்ன??” என,

“ஓ…!!!!!” என்றுமட்டும் சொன்னவன் அமைதியாய் இருக்க, அவன் ஏதாவது சொல்வான் என்று காத்திருந்தவள் அவன் எதுவும் சொல்லாமல் போகவும் கொஞ்சம் தன்மையாகவே பேச ஆரம்பித்தாள். 

“முதல்ல ஒருவிசயம் புரிஞ்சுக்கோங்க, முடிவு எடுக்கிற அதிகாரம் எல்லாருக்கும் இருக்கு. உங்களுக்கு மட்டும் அது சொந்தமில்லை.. அத்தையும் மாமாவும் ஒரு முடிவு எடுக்கிறாங்கன்னா அது அமுதாவை கேட்காம எடுத்திருப்பாங்களா என்ன?? ” என்று பொன்னி பொறுமையாகவே சொல்ல,

‘என்ன சொல்ற….’ என்றுதான் அவளைப் பார்த்தான்..

“அமுதாவை படிக்கவே கூடாதுன்னு சொன்னவங்க இன்னிக்கு ஹாஸ்ட்டல் சேர்க்கலாம்னு சொல்ற அளவு வந்திருக்காங்கன்னா, கொஞ்சம் அவங்களும் மாறியிருக்காங்கன்னு தானே அர்த்தம்.. அது ஏன் உங்களுக்கு புரியலை.. இதுல உங்களையோ இல்லை நம்மளையோ யாரும் தப்பு சொல்ல போறதில்லை…” என்று பொன்னி ஸ்திரமாய் சொன்னபின்னே தான் புகழேந்திக்கு கொஞ்சம் கோவம் எரிச்சல் எல்லாம் மட்டுப் பட்டது..

“ம்ம்ம்…” என்று நெற்றியை சுருக்கித்தான் அமர்ந்திருந்தான் அப்போதும்.

பொன்னி அதற்குமேல் எதுவும் பேச விரும்பவில்லை.. அவனே யோசிக்கட்டும் என்று எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

அதன் பின்னும் புகழ் இதைபற்றி யாரிடமும் பேசவில்லை.. மகராசி அமுதாவிடம் என்ன சொன்னாரோ, அவளே வந்து “ண்ணா நீ எதுவும் சங்கடப்படாத.. நான் கவனமா இருந்துப்பேன்..” என,

“ம்ம் …” என்றுமட்டும் சொல்லிக்கொண்டான்..

அடுத்த இரண்டு நாட்களில் மன்னவன் வந்திட, பின் அமுதாவை  அவளின் காலேஜ் ஹாஸ்டலில் சேர்த்துவிட, இன்னும் ஒருநாள் இருந்துவிட்டு மகராசியும், மன்னவனும் ஊருக்கு கிளம்பிவிட்டனர்.. அந்தா இந்தாவென்று நாட்கள் அதன்போக்கில் சென்றிட, இடைப்பட்ட இந்த நாட்களின் தனிமை பொன்னிக்கும் புகழேந்திக்கும் சுதந்திரமான சுகமாய் இருந்தது..

ஒருநாள் ஹாலில் பொன்னி இருக்க, இவனோ வந்ததும் அவளின் மடியினில் விழ, “ஹ்ம்ம் இதுக்குத்தான் அத்தை சொன்னாங்க…” என்றபடியே அவனின் தலையை கோத,

“எல்லாம் எனக்குத் தெரியும் போ டி…” என்றவன் அவளை சரசமாகவே அணைத்தான்..   

இந்த நாட்கள் எல்லாம் இருவருக்கும் இனிமையாகவே இருக்க, பொன்னியின் பிறந்த நாலும் வந்தது.

பொன்னி அதனை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், புகழ் அப்படியில்லை. இரவு பன்னிரெண்டு மணிக்கு எழுப்பி, “ஹேப்பி பர்த்டே கண்ணு……” என்று கட்டியணைத்து முத்தமிட்டு அவனின் பரிசை கொடுக்க,

“வாவ்… தேங்க்ஸ்ங்க…” என்று சொல்லி அவளும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாள்.. மறுநாள் விடிந்ததும், அமுதாவிற்கும் அன்று கல்லூரி விடுமுறை என்பதால், அவளும் இங்கே வந்திருந்தாள்..

“ஹேப்பி பர்த்டே மதினி…” என்று அவளும் வாழ்த்துசொல்ல, “தேங்க்ஸ் அமுதா…” என்றாள் சிரித்த முகமாகவே..  

அடுத்த கொஞ்ச நேரத்தில் மங்கையும், அசோக்கும் அங்கே வர, “ம்மா… வர்றேன்னு சொல்லவேயில்லை..” என்று பொன்னி ஆச்சர்யம் காட்ட,

“சொல்லிட்டு வந்தா நீ இவ்வளோ சந்தோசப்படுவியா..??” என்ற அசோக், உள்ளிருந்து வந்த அமுதாவை கண்டதும் கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனான்..

பொதுவாய் அமுதா அங்கிருக்கும் நேரங்களில் அசோக் அங்கு வருவதை தவிர்த்துவிடுவான்.. அப்படியே அவன் வரவேண்டிய சூழல் இருந்தாலும், பொன்னியே நேரம் பார்த்து சொல்லிடுவாள்.. ஆக இதுவரைக்கும் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலை என்பது இல்லை..

ஆனால் இன்று..??

அசோக்கின் முகத்தில் நொடிப்பொழுதில் தோன்றிய அந்த திடுக்கிடல், பொன்னியின் பார்வையிலும் சரி புகழேந்தியின் பார்வையிலும் சரி அழகாய் பட்டது, அமுதாவும் அதனை கவனித்திருப்பாள் போல, பொதுவாய் ‘வாங்க..’ என்று கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

பொன்னி அப்படியே கொஞ்சம் தயங்கி நிற்க, புகழேந்தி தான் சுதாரித்து “என்ன இப்படியே நின்னுட்டே இருக்கீங்க.. கண்ணு ஏதாவது குடிக்கக் கொடு…” என்று பொன்னியை உசுப்ப,

“ஹா.. ஆமா.. உட்காருண்ணா.. ம்மா ஏன் நிக்கிற…” எனும்போதே, வெளியே எதோ வண்டி சத்தம் கேட்க,

அசோக் தான் “ம்மா வந்துட்டாங்க போல..” என்றபடி முன்னே வெளியே செல்ல, பொன்னியும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் பார்த்துகொண்டு அவர்களும் வெளியே செல்ல, அவர்கள் வீட்டின் வாசலில் அழகாய் ஒரு ஆக்டிவா நின்றிருந்தது..

அசோக் வந்திருந்த ஆட்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டு இருக்க, புகழேந்தி ஒன்றும் புரியாது பொன்னியை பார்க்க, அவளோ “ம்மா என்னம்மா இதெல்லாம்..??” என்று மங்கையை கேட்க, இவை அனைத்தையும் உள்ளிருந்து ஜென்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாள் அமுதா..

அசோக், வந்த ஆட்களை அனுப்பிவிட்டு வந்தவன், “ஹேப்பி பர்த்டே தங்கச்சி…” என்றுசொல்லி அந்த புதிய ஆக்டிவாவின் சாவியை அவளிடம் நீட்ட, 

“வாவ்… அண்ணா…. தேங்க்ஸ்..” என்று கொஞ்சம் சந்தோஷத்தில் குதித்தவள், “ம்மா நீயும் சொல்லலை பாரேன்…” என்று மங்கையையும் கட்டிக்கொண்டவள்,

“வாவ்… வாவ்…!!!” என்று சொல்லி அந்த ஆக்டிவாவை சுற்றி வர, புகழேந்தி தான் அப்படியே வெறுமெனே நின்றிருந்தான்..

என்னவோ பொன்னிக்கு, அவன் இரவு வாழ்த்து சொல்கையில் இத்தனை மகிழ்ச்சி இல்லையோ என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.. அசோக், மங்கை எல்லாம் சிரித்த முகமாய் பொன்னியை பார்த்துகொண்டு நிற்க, புகழேந்தியும் பார்த்தான் தான் ஆனால் அவனின் முகத்தினில் சிரிப்பு இல்லை..

ஆக்டிவாவில் சும்மா வெறுமெனே ஏறி அமர்ந்தவள், வண்டி ஓட்டுவது போல் ஒரு பாவனை செய்து “என்னங்க எப்படி??? செமல்ல…” என்று புகழேந்தியைப் பார்த்து கேட்க,

அவளின் புன்னகை… அவள் கண்களில் தெரிந்த பிரகாசம்… முகத்தினில் தெரிந்த ஜொலிப்பு… மொத்தத்தில் அவளின் இந்த உற்சாகம் இத்தனை நாளில் புகழேந்தி கண்டதில்லை..

“என்னங்க….!!!!!!” என்று பொன்னி திரும்பவும் அவனை அழைக்க,  அவனோ வேண்டா வெறுப்பாய் தலையை ஆட்டினான், வழிய வரவைத்த புன்னகையோடு..

“ஹ்ம்ம் ஒரு ரவுண்ட்ஸ் போவோமா???!!!!” என்று பொன்னி கேட்க,

“இப்போவே என்ன அவசரம்..??!!!” என்றார் மங்கை..

“விடும்மா போகட்டும்.. அவளுக்குன்னு எப்போ இருந்து வண்டி வாங்கி தர்றேன்னு சொன்னேன்.. வேண்டாம்னு சொல்லிட்டா.. இப்போதான் நேரம் வந்திருக்கு…” என்று அசோக் சொல்ல,

“இதுவும் நீ முன்னாடியே சொல்லிருந்தா வேணாம் தான் சொல்லிருப்பேன்..” என்று சந்தோசமாகவே சொன்னவள்,

“என்னங்க வாங்களேன்.. பர்ஸ்ட் உங்களை வச்சு ரவுண்ட்ஸ்…” என்று புகழை ஆசையாய் அழைக்க,

“போங்க புகழ்..” என்று அசோக்கும் சொல்ல, புகழ் சும்மா பொன்னியை ஒரு நொடி பார்த்தவன்,

“இல்லை பொ… இல்லை கண்ணு.. பர்ஸ்ட் அசோக் இல்லை அத்தை இவங்கள்ல யாரையாவது கூட்டிட்டு போ..” என்று மறுக்க, பொன்னி அவனின் மறுப்பை பெரிதாய் எடுக்காமல்,

“ம்மா வா ம்மா..” என்று மங்கையைப் பார்த்து கேட்க,

“இல்ல பொன்னி.. நான் வேணாம்.. அண்ணன் வரட்டும்..” என்றுசொல்ல,

“அட யாராவது வாங்கப்பா.. ரொம்பத்தான்…” என்று சொல்லியபடி வண்டியை கிளம்பியவள், ஸ்டார்ட் செய்து நிற்க,

அசோக் தான் ஒரு புன்னகையோடு அவளின் பின்னே ஏறி அமர, சந்தோசமாய் பொன்னி புகழேந்திக்கும் மங்கைக்கும் “டா டா…” என்றுசொல்லி கிளம்பிச் சென்றுவிட்டாள்..

புகழேந்தி இன்னமும் அப்படியே நின்றிருக்க, மங்கை அவனைப் பார்த்தவர், “அசோக்குக்கு ரொம்ப நாள் ஆசை மாப்ள பொன்னிக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுக்கணும்னு…” என்று சொல்ல,

“ம்ம் சரிங்கத்தை..” என்று அவரைப் பார்த்து சிரித்தவன், உள்ளே சென்றுவிட்டான்..

என்னவோ புகழேந்திக்கு மனதில் சுருக்கென்று இருந்தது.. தான் பொன்னியை சந்தோசமாய் பார்த்துகொள்ளவில்லையோ என்ற பெருத்த கேள்வி வந்து அவனின் மனதில் வந்து அமர்ந்துகொள்ள இரவிலிருந்து அவனுக்கு இருந்த உற்சாகம் இப்போது காணாமல் போய்விட்டது.

அமுதா மட்டும் ஹாலில் இருக்க, மங்கை அவளோடு பேசியபடி அமர்ந்திருக்க, பொன்னியோடு நேரம் கழிக்கவேண்டும் என்று புகழ் வொர்க் ப்ரம் ஹோம் போட்டிருக்க, இப்போதோ அவன் மட்டும் தனித்து இருப்பதாய் ஓர் உணர்வு..  அறைக்கு வந்த புகழேந்தியை கட்டில் அப்படியே இருந்த அவன் கொடுத்த பரிசு வா வா என்று வரவேற்றது..

காலையில் இருந்து ‘அந்த சேலை கட்டு…’ என்று ஒரு ஐந்து முறையாவது சொல்லியிருப்பான்..

பொன்னிதான் “ஒரு அஞ்சு நிமஷம் சமைச்சு வச்சிட்டு பிரெஷ்ஷா கட்டிக்கிறேன்.. எண்ணெய் ஏதாவது பட்டா சங்கடமா போயிடும்..” என்று அவனை தாஜா செய்துகொண்டு இருந்தாள்…

இதற்கும் அவள் காலையில் முதன்முதலில் அணிந்திருந்ததும் அவன் பரிசளித்த ஒரு சுடிதார் தான்.. ஆனால் அதெல்லாம் புகழேந்திக்கு இப்போது கருத்தில் பதியவில்லை..

வேக வேகமாய் வேலைகளை முடித்து பொன்னி அவன் வாங்கிக்கொடுத்த சேலையை கட்டவென்று அறைக்குள் வரும்போது தான் அமுதா வந்தாள்.. அவளோடு அப்படியே ஓரிரு வார்த்தைகள் பேசி நிற்க, அடுத்து அப்படியே அசோக்கும் மங்கையும் வந்திட, இப்போது அந்த அழகிய பட்டுசேலை புகழை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தது.. 

    

     

 

Advertisement