Advertisement

தோற்றம் – 24

புகழ் என்ன சொல்லியும் பொன்னி சமாதானம் அடைவதாய் இல்லை.. சொல்லப்போனால் அவனும் கூட அவளை ஒதுக்கியதாகவேதான் பட்டது அவளுக்கு. கடைசியில் நீயும் இப்படியா என்ற எண்ணம்??  

அமுதாவை இங்கே படிக்கவைக்க அழைத்து வருவது என்பது சாதாரண விசயமில்லை. வீட்டில் நடப்பது என்ன, அனைவரின் எண்ணங்களும் என்னவென்று புகழேந்திக்கு மிக மிக நன்றாகவே தெரியும்..

ஆக அவனொன்றும் போன பிறகு நேரம் பார்த்து பேசி அமுதாவை அழைத்துவர எண்ணியிருக்கவில்லை. ஊருக்கு போவது என்று முடிவானதுமே இங்கிருந்து போகும்போதே அவன் மனதளவில் எல்லாம் யோசித்துதான் கிளம்பியிருக்கவேண்டும்..

அப்படி யோசித்தவன், ‘இந்தமாதிரி வீட்ல பேசலாம்னு இருக்கேன் கண்ணு..’ என்று பொன்னியிடம் சொல்லியிருந்தால் அவளொன்றும் வேண்டாம் என்று சொல்லியிருக்க போவதில்லை.

அவளுக்கு நல்லவனாய் அசோக்கோடு அனுப்பிவிட்டு, இவனும் கிளம்பி ஊருக்குச் சென்று, இரண்டே நாளில் வீட்டினர் அனைவரையும் சம்மதம் சொல்லவைத்து, இதோ இப்போது அம்மா.. தங்கை.. அண்ணன்.. அவனின் மனைவி என்று அனைவரையும் கிளப்பிவிட்டு பின் சொல்வது என்பது அவனின் புத்திசாலித் தனத்தை காட்டுவதாகவே இருந்தது பொன்னிக்கு..

ஆனால் ஒருவார்த்தை அவளிடம் சொல்லியும்தானே இருக்கவேண்டும்..

மனதில் ஒருவித ஏமாற்றம்.. சொல்ல முடியாத ஒருவித அழுத்தம் போட்டு அழுத்துவதாய் இருந்தது பொன்னிக்கு..

அன்று வீட்டினர் அனைவரும் ஒன்றுகூடி அவளை பேசும்போது, “என்னவோ செய்யுங்க.. அவர் வரட்டும் பார்த்துக்கலாம்..” என்றுதான் திடமாய் இருந்தாள்..

ஆனால் இன்று.. அந்த அவளின் அவனே, அவளிடம் ஒன்றை சொல்லாது இத்தனை பெரிய முடிவை எடுக்கையில் அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை… 

புகழேந்தி ஊரில் இருந்தபடியே சொல்லவும் “சரி…” என்றுமட்டும் சொன்னவள் கொஞ்ச நேரத்திலேயே அசோக்கை படுத்தி வீட்டுக்கு கொண்டு போய் விடு என்றுவிட்டாள்..

“அவங்க வர நைட்டாகிடும்.. இப்போவே ஏன் போகனும் சொல்ற பொன்னி.. இருந்து சாப்பிட்டு போ…” என்று மங்கை சொல்ல,

“இல்லம்மா… வீடெல்லாம் கிளீன் பண்ணி வைக்கணும்.. எல்லாரும் வந்து ஸ்டே பண்றதுக்குன்னா கொஞ்சம் ஒதுங்க செய்யணும்…” என்று பொன்னி பிடிவாதமாய் கிளம்ப,

“சரி அப்போ நானும் வர்றேன்.. நீ ஒருத்தியா எத்தனை செய்வ…??” என்று மங்கையும் கிளம்பினார் மகளோடு..

ஆனால் பொன்னி அவரையும் மறுத்து, “அவங்கெல்லாம் வரவும் ரெண்டு நாள்ல வந்து பார்த்துட்டு போங்க போதும்..” என்றவள், “என்னை டிராப் பண்றியா?? இல்லை நானே போயிக்கவா??” என்று அசோக் முன் சென்று நிற்க,

“சரி சரி வா…” என்று அவனும் அழைத்து வந்துவிட்டவன், திரும்ப போய் அவள் மதியம் உண்பதற்கு கடையில் பார்சலும் வாங்கி வந்து கொடுத்து  விட்டுச் சென்றான்..

அசோக்கிற்கும், மங்கைக்கும் பொன்னியை தனியே விடவும் சங்கடமாய் இருந்தது. அவர்கள் அங்கே இல்லை என்றாலும் கூட பரவாயில்லை.. ஆனால் அவர்கள்  இருக்கும்போது அவள் வந்து இப்படி திரும்ப கிளம்பி போனது சங்கடமாய் இருந்தது.. அவரவர் வீட்டில் ஆயிரம் வேலைகள் இருக்கும் என்று மங்கை மனதை தேத்திக்கொள்ள, பொன்னிக்குத் தான் மனம் புகைந்தது..

வீட்டிற்கு வந்தவள், அறைகளை ஒதுக்கம் செய்து, மடிக்காது போட்டிருந்த துணிகளை எல்லாம் மடித்து எடுத்து வைத்து, கொஞ்சம் சுத்தம் செய்து வைக்க, புகழ் திரும்பவும் அழைத்தான்..

“கண்ணு என்ன பண்ற?” என்று..

“வீட்டுக்கு வந்துட்டேன்..” என்றவள் அதற்குமேல் எதுவும் சொல்லாது வைத்துவிட்டாள்..

அவனுக்கும் தெரியும், பொன்னிக்கு இதில் மனகசப்பு இருக்குமென்று.. இருந்தும் என்ன செய்ய, ஓரளவு இருபக்கமும் சமாளித்து தானே ஆகவேண்டும்.. எதுவென்றாலும் போய் பேசிக்கொள்வோம் என்று எண்ணியவன் அசோக்கிற்கு அழைத்துப் பேசினான்..

“இல்ல புகழ்.. நீங்க கால் பண்ணதுமே, வீடெல்லாம் கிளீன் பண்ணனும்னு கிளம்பிட்டா..” என,

“ஹ்ம்ம் சரி அசோக்.. நாங்களும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்..” என்றவனுக்கு இவளை எப்படி சமாளிக்க என்றுதான் இருந்தது..

நித்யா என்னவோ சந்தோசமாய் கிளம்பி வருவதாய் தான் இருந்தது. தூண்டிவிட அவளின் அம்மாவும் தங்கையும் இல்லையே, அதையும் தாண்டி இளங்கோ பார்த்துகொள்வான் என்பதால் அவர்களைப் பற்றிய எவ்வித குழப்பமும் இல்லை..

ஆனால் அமுதா??

அவள் வந்தாள் பொன்னி அவளோடு பேசுவாளா??? முகத்தையேனும் பார்ப்பாளா?? சந்தேகம் தான்.. அவனிடமே தைரியமாய் சொன்னாளே, “என்னால பேச முடியாது…” என்று..

புகழேந்தியின் இதே எண்ணம் அமுதாவிற்கும் இருந்ததுவோ என்னவோ, தயங்கி தயங்கி அவனிடம் வந்தவள், “அண்ணா.. மதினி…” என்று இழுக்க,

“ம்ம் சொல்லு அம்மு…” என்றான் இவனும்..

“இல்லண்ணா.. அது.. மதினிக்கு என்மேல கோபம் இருக்கும்…”

“ஆமா இல்லாம இருக்குமா??”

“அதுதான்.. நான் அங்க வந்தா.. மதினி எதுவும்…” என்று அமுதா சொல்லும்போதே,

“ஹ்ம்ம் கோபப்பட்டு நம்ம வீட்டு ஆளுங்க பேசின மாதிரி பேசுவான்னு நினைக்கிறியா??” என்று புகழ் கேட்டுவிட்டான்..

“அச்சோ.. இல்ல இல்ல.. இல்லண்ணா.. நான் அப்படி சொல்லலை.. ஆனாலும் கொஞ்சம் சங்கடமா இருக்கு..” என,

“சரி அதுக்கு என்ன பண்ணலாம்.. இங்கயே இருந்துக்கிறியா.. நான் வீட்ல சொல்லிடுறேன்.. அம்முக்கு படிக்க இஷ்டமில்லன்னு..” என்று புகழ் எழுந்துவிட,

“ஐயோ அண்ணா ப்ளீஸ்…” என்று அவன் கரங்களை பிடித்து அமர்த்தியவள், “ப்ளீஸ் ண்ணா.. ப்ளீஸ்..” என்றாள் கெஞ்சலாய்..

“ம்ம் அப்புறமென்ன.. பொன்னி மனசு காயப்பட்டிருக்கு.. அதுக்காக நீ அவளோட பேசாமையே இருந்திட போறியா என்ன?? பேசு.. அவ திட்டினா வாங்கிக்கோ.. ஏன்னா தப்பு அவபேர்ல இல்லையே..” என்று புகழேந்தி சொல்ல,

“ம்ம்…” என்று தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள் அமுதா.

இருந்தாலும் அங்கே போவதை எண்ணி அமுதாவிற்கு மனதினுள் ஒரு பிசைவு உண்டாகாமல் இல்லை.. எப்படியானாலும் பொன்னியிடம் பேசி அவளிடம் மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டாள்..

மன்னவன் மகராசியிடம் என்ன சொன்னாரோ, கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன் அவரே பொன்னிக்கு அழைத்து பேசிட, அவளுக்கு ஆச்சர்யமாய் போனது..

மகராசியும் அது இதென்று எதுவும் சொல்லவில்லை, “நாங்க எல்லாம் ஊருக்கு வர்றோம் கண்ணு…” என்றுமட்டும் சொல்ல,   

அவர் அவராக அழைத்து பேசியதிலேயே அவளுக்குப் புரிந்துவிட்டது, சரி அமுதா வாய் திறந்துவிட்டாள் போல என்று.. “சரிங்கத்தை வாங்க…” என, சொல்லி வைத்துவிட்டாள்..                

ஒருவழியாய் அனைவரும் சென்னை வந்திறங்க, இரவு பத்து மணி.. வீடு நெருங்கும்போதே “கடைல எதுவும் வாங்கிட்டு வரணுமா??” என்று புகழ் பொன்னிக்கு அழைத்து கேட்க,

“எல்லாம் சமைச்சு வச்சிருக்கேன்…” என்று பொன்னி வெடுக்கென்று சொல்ல, “ம்ம்..” என்றவன் அவளை சந்திக்க கொஞ்சம் மனதை தயார் படுத்திக்கொண்டே  வீடு செல்ல, பொன்னியோ இவனின் கார் சத்தம் கேட்டு வாசலில் சிரித்த முகமாய் வந்து நின்றாள்..

அனைவரையும் வாங்க வாங்க என்று வரவேற்றவள், அமுதாவைப் பார்த்து, ஒரு தலையசைப்பு மட்டுமே.. புகழும் சரி, மகராசியும் சரி பொன்னி அமுதாவை என்ன சொல்கிறாள் என்றுதான் பார்த்தனர். பொன்னியின் தலையசைப்பு அவர்களுக்கு சங்கடமாய் இருந்தாலும், அவர்களால் எதுவும் பேச முடியாத நிலை..

பொன்னி தேவையில்லாது யாரோடும் எதுவும் பேசவில்லை.. ஆனாலும் அவள் அதிகம் பேசாமல் இருக்கிறாள் என்றும் குறை சொல்லும்படியாகவும் நடந்திடவில்லை.. இதுதான் என் எல்லை இனி என்று அவள் ஒரு கோடு போட்டு இருந்துகொள்ள, மறந்தும் கூட பொன்னி புகழ் முகத்தினை பார்க்கவில்லை என்பது புகழ் மட்டுமே அறிந்த ஒன்று..

இரவு உறங்கும்போது கூட அவள் எதுவும் கேட்காதிருக்க, அவனாக எதுவோ சொல்ல வர, “போதும்..” என்பதுபோல் கைகளை உயர்த்தியவள், திரும்பிப் படுத்துக்கொண்டாள்..

“கண்ணு நான் சொல்றத கேளேன்…” என்று அவன் நெருங்க,

“ஒன்னும் தேவையில்லை..” என்றவள் தள்ளி ஓரமாய் படுத்துக்கொண்டாள்..

“சரி நான் எதுவும் சொல்லலை.. அதுக்காக விழுந்துடாத..” என்றவனும் அவனிடத்தில் படுக்க, இருவருக்குமே உறக்கம் மட்டும் வரவில்லை.. 

புகழேந்திதான் பொன்னி ஏதாவது கேட்பாள் கேட்பாள் என்று அவள் முகத்தினை அவ்வப்போது பார்க்க அவளோ ம்ம்ஹும்.. அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை.. வெறுமெனே மொபைலில் கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருக்க, தன்னை கவனிக்காது அவள் இப்படி செய்வது வேறு அவனுக்கு ஒரு கடுப்பை கொடுத்தது..

“ஏய் இப்போ பேசுவியா மாட்டியா டி???” என்று எரிச்சலாய் தான் கேட்டான்..

இப்படி பேசக்கூடாது என்றுதான் நினைத்தான்.. ஆனாலும் முடியவில்லை.. அவன் பேசிய அதே முக பாவனையில் பொன்னி திரும்பி என்னவென்று பார்க்க,

“நானும் அப்போயிருந்து பாக்குறேன் கேம்ஸ் தான் உனக்கு முக்கியமா???” என்றான்..

“ஓ.. சரி.. சொல்லுங்க…” என்றவள் போனை வைத்துவிட்டு திரும்ப,

“என்ன சொல்ல, இப்படி முகத்தை திருப்புனா நான் என்ன செய்ய???” என்றான் புருவங்களை சுருக்கி…

“உங்களை நான் எதுவுமே செய்ன்னும் சொல்லலை.. செய்யவேண்டாம்னு சொல்லலை… உங்களுக்கு எது தோணுதோ அதைதானே எப்பவும் செய்வீங்க…” என்றவள்,

“நானொருத்தி இதெல்லாம் ஏன் உங்கக்கிட்ட சொல்றேன் தெரியலை..” என்று தானாகவே நெற்றியில் அடித்துக்கொள்ள,

“ம்ம்ச் கண்ணு…” என்று அவளின் கரங்களை புகழ் பற்ற, வெடுக்கென்று கைகளை உருவிக்கொண்டாள்..

“நீ ஏன் இப்படி பண்ற?? நீயும் அமுதா படிக்கணும்னு தானே ஆசைப்பட்ட…” என்றவன் இறுக்கமாகவே அவளின் கரங்களைப் பற்றிக்கொள்ள,

“அமுதா படிக்கணும்னு அமுதாதான் ஆசைப்பட்டா… அதைத்தான் நான் சொன்னேன்.. நான் சொன்னா தப்பு.. நீங்க சொன்னா தப்பில்லை.. அவ்வளோதான்..” என்றவளுக்கு இன்னமுமே கூட அன்று அனைவரும் பேசியது மனதினில் வந்துபோனது..

“சரி சரி கண்ணு.. எல்லாமே எப்பவும் ஒரேமாதிரி இருக்காதுல்ல.. இப்போ நீ என்கிட்டே கோவப்பட்டு என்ன அர்த்தம் இருக்கு???”

“பின்ன. வீட்டுக்கு வந்திருக்கவங்கக்கிட்ட கோவிக்கவா?? சொல்லுங்க.. நித்யாக்கா கிட்ட போய் கேட்கவா அன்னிக்கு அப்படி பேசினீங்க.. பையனை கூட தூக்க விடலை.. இப்போ எப்படி எந்த முகத்தை வச்சு வந்தீங்கன்னு கேட்கட்டுமா ???

இல்லை அமுதாக்கிட்ட, நான் பேசும்போது வாயே திறக்காம இருந்தியே.. இப்போ மட்டும் எப்படி வாய் திறந்து பேசினம்மா??? அன்னிக்கு எல்லாரும் என்னை பேசுறப்போ வேடிக்கைதானே பார்த்தன்னு கேட்கவா???” என்றவள் அப்படியே எழ,

“ஏய் ஏய் பொன்னி என்ன நீ படு.. படு முதல்ல…” என்றவன், “சரி நான் எதுவும் கேட்கலை.. நீ ரிலாக்ஸ் பண்ணு…” என்று சொல்ல,

“ஹ்ம்ம்.. ரிலாக்ஸ்.. நானு.. வெரி குட்.. இப்படி வீட்ல பேசலாம்னு இருக்கேன்னு ஒருவார்த்தை சொல்ல முடியாது உங்களுக்கு.. எங்க அம்மா அண்ணன்கிட்டயும் இதுதான் பிரச்னைன்னு என்னால மனசுவிட்டு பேசமுடியாது.. இதுக்கு நடுவில நீங்க எல்லாருக்கும் நல்லவர் ஆகிடுவீங்க.. ஆனா நான்?? எந்தபக்கமும் பேச முடியாம தவிக்கணும்.. இதெல்லாம் தாண்டி நான் ரிலாக்ஸ்டா வேற இருக்கனுமா?? ரொம்ப சந்தோசம்…” என்றவள் போர்வையால் முகத்தினை மூடிக்கொண்டாள்..

ஹ்ம்ம் பொன்னி சொல்வது நூற்றுக்கு நூறு நியாயம் தான்.. யாருமே இல்லை என்று சொல்லிட முடியாது.. ஆனால் குடும்பங்களில் நியாய தர்மங்கள் எல்லாம் தாண்டி சிறு சிறு அனுசரிப்புகளும் புரிந்துணர்வுகளும் இருக்கிறதே.. அவைதானே குடும்பத்தை தாங்கிப் பிடிகிறது..

அதெல்லாம் விட்டு நீ பேசியது தப்பு.. உன்னோடு எனக்கு எவ்வித உறவும் வேண்டாம் என்று சுலபமாய் நாம் சொல்லிட முடியாதல்லவா??!!! புகழேந்தியும் பொன்னியை யாரும் அப்படி சொல்லிட கூடாது என்றுதான் எண்ணுகிறான். அவள்பேரில் நியாயம் இருந்தாலுமே கூட..

புகழேந்தி கொஞ்ச நேரம் பொன்னியை பார்த்துகொண்டு இருந்தவன், அப்படியே உறங்கிட, அடுத்த நாள் எப்போதும் போல விடிய, பொன்னி எழுந்து போகும் முன்னமே நித்யா அங்கே சமையல்  அறையில் நின்றிருந்தாள்..

பொன்னிக்குத் தான் திக்கென்று ஆனது.. நாம்தான் ஒருவேளை லேட்டாக எழுந்தோமா என்று..

“சின்னத்துக்கு பால் சூடு பண்ணனும்.. அதான்…” என்று நித்யா இழுக்க,

“ஓ.. சரிக்கா…” என்றவள் வேகமாய் அவள் கேட்டதை செய்து கொடுத்து, அடுத்து வழக்கமான சமையல் வேலையை ஆரம்பிக்க, மகராசியும் வந்துவிட்டார் நானும் கூட செய்கிறேன் என்று..

“வேண்ணாத்தை நானே பண்றேன்…” என்று பொன்னி சொன்னாலும் அவர் விடவில்லை..

“இத்தனை பேருக்கும் நீயா என்ன பண்ணுவ??” என்று சொன்னபடி அவரும் கூட வேலைகளை செய்ய, நித்யாவும் வந்துவிட்டாள்..

முகத்தை உர்ரென்று வைத்துகொண்டு வந்ததிலேயே புரிந்தது இளங்கோ அனுப்பியிருக்கிறான் என்று.. வேண்டா வெறுப்பாய் வேலை செய்வதுபோல் இருந்தது. இருந்திருந்து ஊருக்கு வந்தும் இப்படியா என்ற தோற்றம்..

பொன்னி கொஞ்ச நேரம் பார்த்தவள், நேரே ஹாலுக்கு சென்று இளங்கோவிடம் “மாமா இங்க தள்ளி ஒரு பார்க் இருக்கு.. குட்டிய தூக்கிட்டு நீங்களும் அக்காவும் போயிட்டு வரலாமே…” என்றாள்  சாதாரணமாய்.

“இல்லம்மா.. இருக்கட்டும்.. வேலை இருக்கும்ல..” என்றவனிடம்,

“என்ன வேலை.. அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா.. நீங்க கூட்டிட்டு போயிட்டு வாங்க…” என்று பொன்னி சொல்லவும், அவனும் சரியென்று நித்யாவை அழைக்க, இவர்கள் பேசியது காதில் விழும்போதே அவள் கிஷோரை தூக்கி வெளியே போக தயாராய் நின்றிருந்தாள்..   

புகழேந்தி ஆபிஸ் கிளம்பியவன் அவளை கொஞ்சம் மெச்சுதலாய் பார்த்தபடி, திரும்ப அறைக்குள் சென்று “பொன்னி…” என்று சத்தமாய் அழைக்க,

“கண்ணு.. புகழு கூப்பிடுறான்…” என்று மகராசியும் சொல்ல, அவன் வேண்டும் என்றே தான் அழைக்கிறான் என்று தெரிந்தும் மறுக்க முடியாது உள்ளே போனவளை தன்னிடம் இழுத்துக்கொண்டவன்,

“தேங்க்ஸ்…” என்று சொல்ல,

“ம்ம்ச் லஞ்ச் எடுத்து வச்சிருக்கேன்..” என்றவள் நகரப் போக,

“நீ நல்ல பொண்ணு.. அப்புறம் ஏன் இப்படி உர்ருன்னு இருக்க..” என்றான் அவளை விடாது..

“எனக்கு யாரும் சர்டிபிகேட் கொடுக்கவேண்டாம்.. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்வேன்..”

“சரி செய்.. நானும் வேணாம் சொல்லலை.. அமுதாவும் பாவம்தான.. ஒரு வார்த்தை அவக்கிட்டயும் பேசேன்.. இப்போ மதினி முகத்தை பார்த்தே நீ அவங்களை வெளிய அனுப்பலையா???” என்றான் அவளை அனைவரோடும் சமாதானம் செய்யும் நோக்கில்..

“ஓ.. நீங்க அப்படி நினைச்சீங்களா?? முகத்தை சுருக்கிட்டே வேண்டா வெறுப்பா எல்லாம் பண்ணாங்க. அது எனக்கும் எரிச்சல் கொடுக்கும்.. அப்புறம் இன்னொன்னு நான் ஒன்னும் நித்யாக்கா கிட்ட நேரா சொல்லலை.. பார்க் போயிட்டு வாங்கன்னு.. எனக்கு இன்னும் அவங்கக்கிட்ட சகஜமா பேச வரலை.. அப்படியிருக்கப்போ…” என்றவள் தோளை குலுக்க,

“ஹ்ம்ம் சரி.. நான் எதுவும் உன்னை கம்ப்பல் பண்ணலை.. பட்.. நீயும்தான் எத்தனை நாள் இப்படி இருப்ப..??” என்று புகழ் சொல்ல,

“ஏன் அவங்க எல்லாம் அப்படிதானே இருந்தாங்க.. இதுவரைக்கும் யாரும் யாராவும் எனக்கு பேசலை.. நீங்க போய் பேசின பிறகு, அமுதா பேசின பிறகுதானே அத்தை கூட எனக்கு கூப்பிட்டு பேசினாங்க….” என்றவள்,

“இங்க பாருங்க.. எல்லாருக்கும் நான் மரியாதை கொடுப்பேன்.. என்கிட்ட கேட்கிறதுக்கு பதில் சொல்வேன்.. இங்க வர்றாங்களா நல்லா கவனிச்சு அனுப்புவேன்.. ஊருக்கு போறோமா வீட்ல எல்லாருக்கும் என்னவோ அதுதான் எனக்கும்.. இப்போதைக்கு இதுமட்டும் தான் சொல்ல முடியும்…”  என்றுவிட்டு சென்றுவிட, அதற்குமேல் புகழேந்தியால் ஒன்றும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை..

அவன் உண்டு முடித்து கிளம்பிட, மகராசியும் பொன்னியும் தான் இருந்தனர்.. அமுதா அந்த வீட்டில் இருக்கிறாளா என்றே தெரியவில்லை.. பொன்னி அவளோடு சகஜமாய் பேசாதது அவளாலும் அந்த வீட்டில் சஜகமாய் இருந்திட முடியவில்லை..  இது ஒன்றே புரியவில்லையா இங்கே யார் முக்கியம் என்று.. 

மகராசியோ “நீ ஏன் கண்ணு என்கிட்டே கூட சொல்லலை.. ஒருவார்த்தை சொல்லிருந்தா இதெல்லாம் இவ்வளோ ஆகியிருக்காதே…” என்றுசொல்ல,

அவரைப் பார்த்தவள் “எல்லார் முன்னாடியும் தானே அத்தை சொன்னேன்.. அதுக்கே நீ எதுவும் சொல்லலை..” என்றுவிட்டு குக்கர் விசில் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து உள்ளே சென்றிட, மகராசிக்கு பொன்னியின் பக்கம் இருக்கும் வலி அப்போது தான் புரிந்தது..

அமுதாவை அழைத்து “நீயா பேசினாதான் ஆச்சு..” என்றுவிட்டார்..

அமுதாவும் தயங்கியே, பொன்னியைத் தேடி போக, அவளோ என்னவென்று கூட கேட்கவில்லை..

“மதினி….” என்றழைக்க,  அவளை திரும்பிப் பார்த்தவள், தன் வேலைகளைத்தான் பார்த்துகொண்டு இருந்தாள்..

“மதினி சாரி மதினி..” என்று அவளின் கரங்களை அமுதா பற்ற,

“என்ன வேணும் அமுதா???” என்றாள் தீர்க்கமாய் அவளின் முகம் பார்த்து..

அமுதாவிற்கு அவளை நேருக்கு நேர் பார்க்கவே முடியவில்லை.. ஆனாலும் என்ன பார்த்துதானே ஆகவேண்டும்.. பேசித்தானே ஆகவேண்டும்..

“இல்ல மதினி.. நான்…” என்று அமுதா ஆரம்பிக்கும் போதே,

“நான் எதையும் பேச விரும்பல அமுதா.. படிக்கணும்ங்கிற உன்னோட எண்ணம் நடக்கபோகுது.. அதை சரியா பண்ணு… உங்க அண்ணன் தானே கூட்டிட்டு வந்தார் அவருக்கு நல்ல பேர் வாங்கி குடு போதும்.. வேற எனக்கு எதுவும் வேணாம்..” என்றுவிட்டு நகர,

மகராசி வந்தவர் “கண்ணு.. உன்னோட கஷ்டம் எனக்கும் புரியுது.. ஆனாலும் அப்போ ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி பேசிட்டாங்க.. அந்த நேரத்துல நானோ இல்லை மாமாவோ ஏதாவது பேசிருந்தா அது கண்டிப்பா ஏதாவது பெரிய சண்டை வந்திருக்கும்…” என,

“அத்தை.. நான் இப்பவுமே யாரையும் எதையும் கேட்கலை.. யாரும் எனக்கு எதுவும் சொல்லவும் வேணாம்.. அப்புறம்.. அவர் ஊருக்கு வர்றபோ இதை பேச போறேன்னு என்கிட்ட சொல்லவுமில்லை.. நீங்க எல்லாம் கிளம்பி வர்றீங்கன்னு சொல்றப்போ தான் எனக்கும் தெரியும்…. அவர் எதுக்காக உங்களை அமுதாவை கூட்டிட்டு வந்தாரோ அது நல்லபடியா நடக்கட்டும்.. போதும்..” என்றுவிட்டாள்..

இந்த அளவில் நான் நிற்கிறேன்.. நீங்கள் உங்கள் அளவில் இருங்கள். யாருக்கும்  யாரும் பிரச்னைகள் இழுத்துவிடாது இருந்தால் போதும் என்றளவில் பொன்னி வந்திட, அவளின் பேச்சில் மகராசிதான் கொஞ்சம் திடுக்கிட்டு போனார்..

நல்லபடியாய் வீட்டில் வாழ வந்த பெண்ணை நாம்தான் அனைவரும் பேசி பேசியே மனதை மாற்றிவிட்டோமோ என்று தோன்றியது..  அன்பரசியும் நித்யாவும் அன்று பேசும்போதே கொஞ்சம் அதட்டி பேசியிருந்தால் பொன்னிக்கும் இப்படி ஒரு மாற்றம் வந்திருக்காதோ என்று யோசித்தார்..

 

 

Advertisement