Advertisement

மறுநாளும் அதிகம் யாரோடும் பேச்சு வைத்துகொள்ளவில்லை, அப்பா அண்ணா மாமாவோடு என்று தோட்டம் வயல் என்று சென்றுவிட்டான்.. பக்கத்து தொட்ட ஆட்கள் அவர்களின் நிலத்தை சர்வே செய்ய  கொடுத்திருக்க, அருகே இருப்பது இவர்களின் நிலம் அதுவும் புகழ் பேரில் இருக்கும் நிலம் என்பதால் அவனின் கையெழுத்து தேவைப்பட்டது.. அதற்குதான் மன்னவன் அழைத்திருந்தார்..

“திங்க கிழமை இதை கொண்டு போய் முனிசிபல்ல குடுக்கணும்…” என்று மன்னவன் சொல்லும்போதே,

“சரிப்பா நானும் நாளைக்கு மதியம் போல கிளம்பிடுவேன்..” என்று புகழ் சொல்ல,

“ஏன் புகழு தங்கச்சிய மட்டும் விட்டுட்டு வந்த.. கூட்டிட்டு வந்திருக்கலாம்ல…” என்று ஜெயபால் சாதாரணமாய் தான் கேட்டான்..

“இல்ல மாமா.. பொன்னி அசோக் வீட்ல இருக்கா. தனியா விட்டு வரலை.. அவங்க அம்மாவும் அங்க இருக்காங்க…” என்று புகழ் சொல்லும் போதே,

“அதானே பார்த்தேன்..” என்று நித்யா முணுமுணுக்க, இளங்கோ வேறு பேச்சை பேச ஆரம்பித்துவிட்டான்..

மகராசியும் எதுவும் கேட்கவில்லை.. அன்பரசியோ பொன்னி பற்றி பேசவேயில்லை.. புகழேந்திக்கு புரிந்தது, சென்னையில் இருந்து இங்கே வந்ததும் மன்னவன் கண்டித்திருக்கிறார் என்று.. அமுதாவோ அப்போதும் வாயே திறக்காமல் இருந்தாள்..

யாரும் எதுவும் பேசாது அமைதியாய் இருக்க, கொஞ்ச நேரத்தில் ஒரு முடிவாய் புகழ், “ப்பா அம்முவ மேல படிக்கவைக்கலாம்..” என்றான்..

“ஏன் ஏன் ப்பா.. அதெல்லாம் வேணாம்.. நமக்கு தோதா இடம் அமைஞ்சா கட்டி கொடுத்துடலாம்…” என்று மன்னவன் சொல்ல, புகழ் அவருக்கு பதில் சொல்லாதவன்,

“அமுதா… இங்க வா…” என்றழைக்க,  அவளோ பயந்துபோய் அவனைப் பார்த்தாள்..

அன்பரசி “எதையோ ஏத்திவிட்டு அனுப்பியிருக்கா…” என்று முணுமுணுக்க,

“அக்கா யாரும் ஏத்திவிடல.. நான் சின்ன பையனும் இல்லை…” என்றவன் “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வாய் மூடி அழுதுட்டு இருப்ப அம்மு???” என்றான் சாதாரணமாய் கேட்பது போல்..

ஆனால் அவன் கேட்பது சாதாரண விஷயமல்லவே.. சரி இதோடு எல்லாம் முடிந்தது ஏதாவது ஒரு நல்ல இடமாய் பார்த்து அமுதாவை கட்டிக்கொடுத்து விடலாம் என்று வீட்டினர் இருக்க இப்போது புகழேந்தி வந்து திரும்ப அவளை படிக்கவைப்போம் என்று பேச அது அனைவர்க்கும் ஒருவித அதிர்ச்சி தான்..

ஏன் திரும்பவும் என்ற சலிப்பும் கூட..

நடந்தது போதாதா என்ற எரிச்சலும் கூட..

“இல்லண்ணா அது..” என்று அமுதா தயங்க,

“நமக்கொரு பிரச்சனையா நம்ம தயங்கலாம்.. பயப்படலாம்.. ஆனா நம்மனால அடுத்தவங்க பேச்சு வாங்குறான்னா யோசிக்கக் கூடாது…” என்றான் அன்று பொன்னி சொன்ன அதே வார்தைகளை சொல்லி..

“இங்க பார் அம்மு.. உன் மனசுல என்ன இருக்கோ அதை அப்படியே சொல்லு.. பயப்படாத.. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.. உனக்கு படிக்க விருப்பம்னா சொல்லு நான் படிக்கவைக்கிறேன்.. இல்லையா கல்யாணமா அதுவும் சரிதான்.. எது உன் இஷ்டம்…” என்று அவன் கேட்க,

“அவளை என்ன கேட்கிறது…” என்று நித்யா சொல்ல, “அவளைத்தான் கேட்கணும்…” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

வீட்டினர் அனைவரும் அமுதாவை பார்க்க, அவளோ குனிந்த தலை நிமிரவேயில்லை..

“ஹ்ம்ம் சொல்லு அம்மு.. உன்னோட ஆசை என்ன??” என்று புகழேந்தி திரும்பக் கேட்க,

“என்.. என.. எனக்கு படிக்கணும்னு தான் ஆசை.. அதைதான் அன்னிக்கு மதினிக்கிட்ட சொன்னேன்.. அவங்களும் என்னால தான் அன்னிக்கு அப்படி பேசினாங்க…” என்று ஒருவழியாய் உண்மையை சொல்லிட, புகழேந்தி அனைவரையும் இதுதான் விஷயம் என்று பார்க்க, அனைவர்க்கும் பக்கென்று ஆனது..

மகராசி “என்னடி சொல்ற…” என்று எழுந்தேவிட்டார்..

மன்னவனும் ஜெயபாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, இளங்கோதான் “ஹ்ம்ம் அன்னைக்கு அவ்வளோ நடந்தப்போ எங்க போச்சு இதெல்லாம்…” என்று அமுதாவை கடிய,

அன்பரசி “ஏன் அதை எங்கக்கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானே.. அதைவிட்டு பொன்னிக்கிட்ட சொல்லி.. இதெல்லாம் தேவையா??” என்று அப்போதும் குறைப்பட,

நித்யாவோ “ஹ்ம்ம்… போச்சு..” என்று முனுமுனுத்து கொண்டாள்..

புகழ்தான் “கொஞ்சம் எல்லாம் அமைதியா இருக்கீங்களா??” என்றவன் “இப்போ அம்மு மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சு போச்சு.. இனிமே அடுத்து என்ன செய்றதுன்னு தான் யோசிக்கணும்..” என,

“என்ன செய்ய முடியும்.. ஆனா மாப்பிளை பார்க்க சொல்லியாச்சே…” என்றார் மன்னவன்..

“அது ஒருப்பக்கம் பாருங்கப்பா.. உடனேவா எல்லாம் அமைய போகுது… நல்ல இடமும் வரணுமே.. அதுவரைக்கும் அமுதா இன்னொருபக்கம் படிக்கட்டும்..” என்று இலகுவாய் சொல்வது போல் சொல்ல,

“எல்லாம் சொல்றதுக்கு ஈசிதான் மாப்ள.. ஆனா திரும்ப படிக்க அப்படின்னு எப்படி அனுப்ப..” என்று ஜெயபால் தயங்க,

“நான் சென்னை கூட்டிட்டு போறேன் மாமா..” என்றான் புகழும்..

அதற்குப்பின் ஆளுக்கு ஒன்றாய் பேச பேச, அனைவருக்கும் தக்க ஒவ்வொரு பதில் சொல்லி கலைத்துப் போன புகழ்,

அமுதாவிடம் “அம்மு நான் பேசிட்டேன்.. இதுக்கு மேல நீதான் பேசணும்.. நீ சொல்றதுல தான் இருக்கு.. என்னை நம்பி அனுப்புங்கன்னு அவங்களுக்கு உத்தரவாதம் குடு… நீயே பேசு..” என்று எழுந்துவிட்டிருந்தான்..

அமுதாவிற்கு அனைத்தும் சேர்த்து இப்போது மனதில் ஒரு தைரியம் .. என்னவோ புகழ் வந்து பேசியதும் ஒரு தைரியம் வந்திருந்தது தான்.. கிடைக்கும் வாய்ப்பை விடுவிட கூடாது என்றெண்ணி,

“ம்மா ப்ளீஸ் ம்மா.. ப்ளீஸ் நான் படிக்கிறேனே… கண்டிப்பா நான் நல்லவிதமா நடந்துப்பேன் ம்மா… என்னால அடுத்து எந்த பிரச்சனையும் வராது…” என்று சத்யம் செய்யாத குறையாய் பேச, மகராசியோ மன்னவன் முகம் பார்த்தார்..

“ப்பா ப்ளீஸ் ப்பா..” என்று அமுதா மாறி மாறி கேட்க, அனைவரும் மௌனம் காத்தனர்..

புகழ் உள்ளே அறைக்கு சென்றுவிட்டான்.. இனி என்னவோ பேசி முடிவுக்கு வாருங்கள் என்று. எதையுமே ஓரளவு தான் இழுத்துக்கொண்டு போகமுடியும்.. ரொம்பவும் எல்லாம் தாங்கிப் பிடிக்க முடியாது.. அது யாராக இருந்தாலும் சரி..

பொறுத்து பொறுத்து பார்த்த அன்பரசி உள்ளே வந்து “புகழு என்ன இது.. அவபாட்டுக்கு இருந்தா இப்போ வந்து நீ ஏன் இப்படி சொல்ற..” என,

“அவபாட்டுக்கு தான் க்கா இருக்கா.. ஆனா மேல படிக்கிறதுல என்ன தப்பு..” என்றான் இவனும்..

“தப்பு இல்லடா.. ஆனா.. ஏற்கனவே எவ்வளோ பிரச்சனை ஆச்சு…” என்று அன்பு சொல்லும்போதே,

“இனியும் அப்படி ஆகாதுக்கா…” என்றான் உறுதியாய்..

“அதெப்படி நீ உறுதியா சொல்ற??”

“தோணுதுக்கா.. அம்முவும் இப்போ எவ்வளோ கண் முன்னாடி பாக்குறா.. அசோக் அடிவாங்கினது.. பொன்னி எல்லார்டையும் பேச்சு வாங்குறது.. எல்லாம் பாக்குறா தானே.. அவளுமே தானே பேச்சு வாங்குறா.. இதெல்லாம் கண்டிப்பா அவளை சரியான ஒரு வழியில கொண்டு போகும்.. நீவேனா பாரு அவ கண்டிப்பா நல்ல ஒரு லைப் வாழ்வா… ” என,

அன்பரசிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.. பொன்னிக்கு சார்ந்தும் புகழ் பேசவில்லை.. ஆனாலும் இவர்கள் அவளைப் பேசியது நியாயம் என்று அவன் சொல்லவில்லை..

“என்னவோ பண்ணுங்க…” என்று அன்பரசி எழுந்து சென்றுவிட, புகழேந்தியும் திரும்ப எழுந்து சென்றான் வெளிய..

மன்னவன் அரைகுறை மனதாய் அமர்ந்திருக்க, “ப்பா என்னை நம்பி அம்முவ அனுப்புங்க.. நான் படிக்கவைக்கிறேன்..” என,

“அட என்ன புகழு.. அதெல்லாம் இல்லை..” என்று கொஞ்சம் யோசித்தவர், “காலேஜ்ல சேருறது எல்லாம் உடனே முடியுமா என்ன??” என்றார் சந்தேகமாய்..

“காலேஜ் எல்லாம் ஒப்பன் ஆக இன்னும் ரெண்டு மாசமிருக்கு.. ஆனா இப்போவே அப்ளை பண்ணனும்.. அங்க எங்க ஏரியா சுத்தி நெறைய காலேஜஸ் இருக்குப்பா.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. ” என்று அவனின் பேச்சிலேயே உறுதியாய் நின்றான்..

அப்படி இப்படி என்று பேசி ஒருவழியாய் அமுதாவை படிக்க அனுப்ப சரி என்று மன்னவன் சொல்லிட,

மகராசியோ “இப்போதான் இவனுக்கு கல்யாணம் ஆகிருக்கு.. இதுல அமுதா போய் அங்க இருக்கிறது சரியா இருக்குமா??” என்றார் அடுத்து..

“ம்மா… முதல்ல அமுதாவை காலேஜ்ல சேர்ப்போம்.. அப்புறம் மத்ததை பாப்போம்..” என,

“அதுக்கில்ல கண்ணு.. அது சரி வராது..” என்றார் முடிவாய்..

“ஹ்ம்ம் சரி.. அப்போ நீயும் அம்முவும் வந்து அங்க இருங்க.. காலேஜ் பார்த்து அட்மிசன் எல்லாம் வாங்கலாம். அடுத்து பாப்போம்..” என்று புகழும் சொல்ல,

“கண்ணு புகழு நீ சொல்ற எல்லாமே சரிதான்.. ஆனா இதெல்லாம் ஒத்துவருமா???” என்று குழம்பிய முகத்துடன் கேட்டார் மகராசி..

பொறுத்து பொறுத்துப் பார்த்த இளங்கோ தான் “ம்மா முதல்ல காலேஜ் பாப்போம்.. அப்புறம் மத்தது எல்லாம் பேசலாம்..” என்றிட

அமுதாவோ தன் அண்ணன்கள் இருவரையும் பிடித்துக்கொண்டு “தேங்க்ஸ் தேங்க்ஸ்..” என்று சொல்லிக்கொண்டாள்.. இது அவளுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பல்லவா..

புகழ் அவளைப் பார்த்து சிரித்தவன் “அப்போ நாளைக்கு என் கூட வர்றீங்களா??” என்றழைக்க,

“நாளைக்கேவா??” என்றனர் வீட்டினர்..

“இல்ல வந்து அங்க பாருங்க.. அம்முக்கு எந்த காலேஜ் பிடிக்குதோ அங்க ட்ரை பண்ணலாம்..” என,

மன்னவன் “இல்ல புகழு.. இங்க வேலை இருக்கு வேலை முடிஞ்சது வர்றோம்..” என்றார்..

“ப்பா நீங்க வேலை முடிஞ்சதும் வாங்க .. இல்லை நானே வந்து கூட்டிட்டு போறேன்.. இப்போ அம்மாவும் அமுதாவும் வரட்டுமே..” என, மகராசிக்கும் அதுவே சரியெனப் பட்டது..

அவருக்கு பொன்னியும் புகழும் மட்டும் இருக்கும் வீட்டில் அமுதாவை தனியே அனுப்ப இஷ்டமில்லை..

“ஹ்ம்ம் சரிதான் கண்ணு.. நானும் அமுதாவும் வர்றோம்..” என்று அப்போதும் அமுதா படிக்கவேண்டுமா என்று இஷ்டமில்லாதது போல்தான் சொன்னார்..

சரியாய் அதேநேரம் இளங்கோ புகழுக்கு சைகை செய்ய, அதனை சரியாய் புரிந்துகொண்டவன் “மதினி நீங்களும் வாங்களேன்.. பால் காய்ச்சினதுக்கு தான் உங்கனால வர முடியலை.. இப்போ அம்மா அமுதா எல்லாம் வர்றாங்க தானே.. நீங்களும் வந்து ஒரு ரெண்டு நாள் இருங்களேன்..” என்று நித்யாவை அழைத்தான்..

அவளோ ‘என்னையா…??!!!!!’ என்று அதிர்ந்து பார்க்க,

இளங்கோ “அவ எதுக்கு.. அதெல்லாம் வேணாம்…” என்றான் பட்டென்று..

“இல்லண்ணா.. அது.. நம்ம வீட்ல எல்லாம் அங்க வந்துட்டாங்க.. அமுதாவும் அடுத்து வரா.. மதினி மட்டும் வரலை.. நல்லாவா இருக்கும்..” என்று சமாளிக்க,

“இல்ல புகழு நான் மட்டும் எப்படி…” என்று நித்யாவும் தயங்க,

“ஏன் மதினி நீங்க இளங்கோ.. குட்டி எல்லாம் வாங்க…” எனவும், போகலாமா என்று கணவனைப் பார்த்தாள் நித்யா..

அவளுக்கு மனதினுள் ஒரு ஆசை.. அங்கே செல்லவேண்டும் என்று.. ஊருக்கு போய் வந்ததில் அன்பரசியும், மகராசியும் அங்கே அப்படி இப்படி என்று கதை சொல்லியிருக்க அவளுக்கும் உள்ளே ஆசை முளைவிட்டது.. ஆனால் வீராப்பாய் முடியாது என்றுசொல்லி அடுத்து கூட்டிட்டு போ என்று இளங்கோவிடம் சொன்னால் அவ்வளவு தான்..

ஆனால் இப்போது புகழேந்தியே அழைக்க, போகலாம் என்ற முடிவிற்கே வந்துவிட்டாள் நித்யா..

இளங்கோ மறுத்துப் பேசவும் சங்கடமாய் போக, “என்ன பாக்குற.. அங்க வந்து அது இதுன்னு எதுவும் பேசக்கூடாது.. இல்லையா போகவே வேணாம்..” என்று இளங்கோ சொல்ல,

“நான் என்ன சொல்ல போறேன்..” என்று நொடித்துக்கொண்டாள்..

ஒருவழியாய் நாளை புகழேந்தியோடு, மகராசி, அமுதா மற்றும் இளங்கோவின் குடும்பம் செல்வதாய் முடிவானது..

இது பொன்னிக்கும் புகழ் சொல்ல, “அப்படியா சரி…” என்றுமட்டும் சொன்னாள்..

இதை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள் என்பது அவளின் குரலே புகழேந்திக்கு காட்டிக் கொடுத்தது..

     

             

 

Advertisement