Advertisement

தோற்றம் – 23

“கண்ணு புகழு நீ சொல்ற எல்லாமே சரிதான்.. ஆனா இதெல்லாம் ஒத்துவருமா???” என்று குழம்பிய முகத்துடன் கேட்ட மகராசியை, இன்னும் எத்தனை சொல்லி புரியவைக்க என்பதுபோல் தான் பார்த்தான் புகழேந்தி..

மகராசி மட்டும் குழம்பி நிற்கவில்லை, வீட்டில் இருந்த அனைவருமே அப்படித்தான்.. பொன்னியைத் தவிர.. ஏனெனில் அவள் அங்கேயில்லை.. ஊருக்கே வரவில்லை..

அவள் சென்னையில் அசோக்கின் வீட்டில் மங்கை அசோக்கோடு இருந்தாள்.. புகழேந்தி மட்டும் தான் இங்கே ஊருக்கு வந்திருந்தான்.. வா என்று அழைத்திருந்தார்கள்.. அவனின் கையெழுத்து தேவைப்பட்டதால்..

ஊருக்கு அவனாய் கிளம்பவில்லை ஆனாலும் ஊருக்கு போகிறோம் என்றதுமே மனதினில் ஒரு முடிவும் சேர்ந்தே பிறந்திருந்தது..

மன்னவன்தான்  போன் போட்டு அழைத்தார்..

“சரிப்பா வர்றேன்…” என்றவன் பொன்னியையும் அழைத்தான்.. “கண்ணு நாளைக்கு ஊருக்கு போயிட்டு வரலாமா..” என்று..  

ஆனால் அதற்கு கொஞ்ச நேரம் முன்னே தான் அசோக் அழைத்து “நேத்து நைட் ஊருக்கு வந்துட்டேன் பொன்னி.. இன்னிக்கு அம்மாவை கூட்டிட்டு அங்க வந்திடுவேன்..” என்றிருந்தான்..

பொன்னியாகவே மனதினுள் “அம்மா இங்க வந்துட்டா போய் பார்த்துட்டு வரணும்…” ஒரு கணக்கு போட்டிருக்க, இப்போது புகழ் அவளையும் ஊருக்கு அழைக்க,

யோசனையோடே “ஹ்ம்ம் போயிட்டு எப்போ வருவோம்..??” என்றாள்..

ஊருக்கு போவோம் என்றதும் சந்தோசமாய் சரி சொல்வாள் என்று பார்த்தால் அவள் யோசனையாய் சொன்னதும் புகழும் “ஏன் கண்ணு??? லீவே வீக்கென்ட் மட்டும் தானே..” என,

“ஓ……” என்றவள் “ஹ்ம்ம் சரி கிளம்பலாம்…” என்று ஏமாற்றத்தை மறைத்து சொல்ல,

“இங்க பாரு.. என்னாச்சு உனக்கு டக்குன்னு டல்லாகிட்ட…” என்று பிடித்து நிறுத்தி கேட்டபின்னே தான் சொன்னாள் அம்மா இங்கே வருகிறார்கள் என்று..

“ஓ…” என்று அவளைப் போலவே இதழைக் குவித்தவன், “கேட்டதுமே சொல்றதுக்கு என்ன கண்ணு…” என,

“அதான் இப்போ சொல்லிட்டேனே…” என்றாள் அப்போதும் ஊருக்கு போகவேண்டுமா என்பதுபோல்..

அவளின் முகத்தினை கொஞ்ச நேரம் பார்த்தவன், “நான் பார்த்து ஆசைப்பட்ட பொன்னி நீயில்ல.. என்னை அசரவைச்ச பால்வாடி டீச்சரும் நீயில்ல…” என்று தலையை ஆட்டி ஆட்டி புகழ் சொல்ல,

அவன் சொன்ன விதத்தில் “ஹா ஹா ஹா…” என்று சிரித்தவள், “ஏன் எனக்கென்ன இப்போ…” என்று தன்னை தானே சுற்றி காட்ட, அவளை திரும்பவும் பிடித்து நிறுத்தியவன்,

“அந்த பொன்னி படபடன்னு மனசுல இருக்கிறதை அப்படியே பேசிடுவா.. ஆனா இந்த பொன்னி.. ம்ம்ஹும் ஒவ்வொரு வார்த்தையையும் வாங்குறதுக்குள்ள எர்வாமேட்டின் யூஸ் பண்ற நிலை வந்திடும் போல…” என்று புகழேந்தியும் சிரித்தே சொன்னாலும், அவன் குரலிலும் இப்படி ஏன் மாறினாய் என்ற கேள்வி இருக்கத்தான் செய்தது..

“எர்வாமேட்டின்னா ஹா ஹா” என்று இன்னும் சிரித்தவள், அவனைப் பார்த்து கைகளை நீட்டி   “இருங்க.. இருங்க… உங்களை அப்படி இமேஜின் பண்ணிக்கிறேன்….” என்று அப்போதும் சொல்லி சிரித்தவள், ஒருவழியாய் சிரித்து முடித்து,

“அதெல்லாம் பொண்ணா பிறந்திருந்து, இன்னொரு வீட்டுக்கு கல்யாணம் ஆகி போனாதான் உங்களுக்குப் புரியும்.. ஏன் இப்படி மாற்றம் எல்லாம் வருதுன்னு…” என்று சகஜமாய் சொல்வது போல் பொன்னி சொல்லி நகர்ந்திட, அவள் சொன்ன பதிலில் பேச்சு மறந்துதான் நின்றான்..

அதன்பின் அவன் போவோமா என்றும் கேட்கவில்லை, வருகிறாயா என்றும் கேட்கவில்லை.. நான் மட்டும் போகவா என்றும் சொல்லவில்லை.. ஆனால் மறுநாள் புகழ் ஆபிஸ் விட்டு வருவதற்கு முன்னே அசோக் வந்திருந்தான்..

“அசோக்….!!!!!” என்று பொன்னி விழிகளை விரிக்க,

“நீ ரெடியா இருப்பன்னு புகழ் சொன்னாரு..” என்று அசோக் கேட்கவும்,  

‘ஊருக்கு போகணும் சொன்னது இவனுக்கு எப்படி தெரியும்…’ என்று பொன்னி யோசிக்கும் போதே புகழ் வந்துவிட்டான்..

“ஹாய் அசோக்…” என்று கரம் குலுக்கியவன், “நீ இன்னும் ரெடி ஆகலையா??” என்று பொன்னியைப் பார்த்து கேட்க,

“இல்லை.. அது.. அம்மா…” என்று பொன்னி திக்க,

“சரிதான்.. போ போ போய் ட்ரெஸ் எடுத்து வை.. நானும் அப்படியே ஊருக்கு கிளம்புறேன்.. நீ அசோக் கூட போ…” என்று புகழ் சொல்லியபடி உள்ளே செல்ல,

“என்னது… ஏங்க என்ன சொன்னீங்க???” என்று அவன் சொன்னதை நம்ப முடியாது அவன் பின்னேயே போக, அசோக் தான் அங்கே தனியாய் நின்றிருந்தான்.

பொன்னி அவன் பின்னேயே வந்திட, வேகமாய் புகழ் வந்தவன் “அசோக் நீங்க உட்காருங்க ஒரு பை மினிட்ஸ் பொன்னி ரெடியாகிடுவா…” என்றுவிட்டு திரும்ப உள்ளே வந்தவன்,

“அசோக் தனியா இருக்காங்க நீ பாட்டுக்கு வந்திட்ட…” என்று அவளை கடிய,

“இதெல்லாம் நீங்க ஏன் முன்னாடியே சொல்லலை.. சோ உங்க தப்பு தான்…” என்றவள், கைக்கு கிடைத்த உடைகளை வேகமாய் ஒரு பையினுள் வைக்க,

“ஹ்ம்ம் சொல்லுவ சொல்லுவ…” என்றவனும் அவனது உடைகளை மற்றொரு பையில் திணித்தான்..

“நீங்க சாப்பிடல…” என்று பொன்னி சொல்லும்போதே, “போற வழில பாத்துக்கிறேன்..” என்றவன்,

“ஓகே கண்ணு.. சண்டே வந்திடுவேன்…” என்று சொன்னவன் அவளின் நெற்றியில் இதழ் பதிக்க,

“ஹ்ம்ம்..” என்றவள், “வீட்ல நான் வரலைன்னு கேட்டா என்ன பண்றது..??” என்றாள்..

“ப்ரீயா விடு.. நான் பேசிக்கிறேன்..” என்றவன் வெளியே வர, அவனின் பின்னே பொன்னியும் வர, அசோக் எழுந்துகொண்டான் போகலாம் என்பதுபோல்..

“தேங்க்ஸ் அசோக்..” என்று புகழ் சொல்ல,

“இதில என்ன இருக்கு.. நீங்க வர்றபோ சொல்லுங்க பொன்னியை வந்து விடுறேன்..” என்று அசோக்கும் சொல்ல,

“என்ன இது.. எனக்கென்ன போக வர தெரியாதா..” என்றாள் பொன்னி கடுப்பாய்..

என்னவோ சின்ன பிள்ளைகளை கை பிடித்து அழைத்துப் போய் விட்டு அழைத்து வருவதுபோல் இருந்தது அவளுக்கு.. அதென்ன சின்னபிள்ளை போல் என்னை நடத்துவது என்று ஒரு எரிச்சல் கூட இப்போது..

“அது மத்த டைம்ல போயிக்கோ…” என்று புகழேந்தி சொல்லிட, அசோக் அந்த பேச்சில் தலையிடவில்லை..

புகழேந்தி அவனின் நானோவில் கிளம்பிட, இன்னொரு பக்கம் பொன்னி அசோக்கின் பின்னே அமர்ந்து டா டா காட்டிவிட்டு சென்றாள்.. பொன்னிக்கு தன்  அம்மா அண்ணனோடு இரண்டு நாட்கள் இருக்கப் போகிறோம் என்ற எண்ணம் சந்தோசம் கொடுத்தாலும், புகழ் மட்டும் தனியே செல்வது கொஞ்சம் சங்கடமாய் இருந்தது..

அசோக்கோடு வீட்டிற்கு போனதுமே மங்கையை கட்டிக்கொண்டவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் புகழுக்கு அழைத்தாள் “சாப்பிட்டீங்களா…” என்று..

“இல்ல கண்ணு நான் சப்பிட்டுப்பேன்…” என்றுவிட்டான்..

அதன்பின் மங்கை, அசோக்கோடு பேச்சு நகர, மங்கை தான் மகளை கடிந்துகொண்டார்..

“நீ ஊருக்கு போயிருக்கனும்..” என்று..

“ம்மா நான் என்ன செய்ய.. அவர்தான் அனுப்பினார்…” என்றவள் சொல்லவா முடியுமா, என்னிடம் யாரும் அங்கே பேசுவதும் இல்லை.. அழைக்கவும் இல்லை என்று..

“மாப்பிள்ளை சொன்னா.. நீ கிளம்பி வந்துடுறதா.. உங்க வீட்ல என்ன நினைக்க மாட்டாங்க.. இங்க வந்துட்டு அடுத்து அங்க போகவேயில்லை” என்று மங்கை சொல்ல,  பொன்னிக்கு பொசுக்கென்று கோவம் வந்துவிட்டது..

உடனே புகழுக்கு அழைத்தவள் “எங்க இருக்கீங்க..??” என்று கேட்க, அவனும் சொல்ல,

“அங்கேயே வெய்ட் பண்ணுங்க நான் வர்றேன்.” என்று பொன்னி எழுந்துவிட்டாள்..

“ஏய் ஏய் என்ன பேச்சு…” என்று அசோக் அவளை அதட்ட, மங்கையோ “என்ன இவ இப்படி பண்றா…” என்று பார்த்தார்..

புகழேந்தியோ “பொன்னி… அங்க இருக்கவங்களை டென்சன் பண்ணாம இரு.. நான் ஊருக்கு போனதும் கால் பண்றேன்…” என்று வைத்துவிட்டான்..

“பொன்னி என்ன இப்படி…” என்று அசோக் கடிய,

அவளோ ஒரு வேகத்தில் “பின்ன நான் என்ன செய்ய…. அங்கயும் கூப்பிடலை.. இங்க வந்தா ஏன் வந்தன்னு அம்மா கேட்கிறாங்க… நான் என்ன செய்யட்டும் இதுக்கு நான் தனியாவே இருந்திருப்பேன்ல.. ” என்று வார்த்தைளை விட்டிருந்தாள்..

பொன்னி இதெல்லாம் சொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை.  ஆனால் பேசிவிட்டாள். போகட்டும் போகட்டும் என்று கண்டுகொள்ளாது எத்தனையை தான் விட முடியும்.. என்ன இருந்தாலும் புகுந்த வீட்டினரின் இந்த உதாசீனம் அவளை கொஞ்சம் வருந்த செய்தது தான்..  

அதையும் மீறி இதெல்லாம் சொல்லிட வேண்டும் என்று அவள் நினைக்கவேயில்லை. சொன்ன வார்த்தைகளை உணர்ந்த பின்னரே தான் அவளுக்கும் புரிய, ‘அச்சோ..’ என்று அவள் அம்மாவையும் அண்ணனையும் பார்க்க, அவர்களோ என்னாச்சு என்றுதான் பார்த்தனர்..

“அது.. அது.. அவர் சைன் வேணும்னு வர சொன்னாங்க.. அதான்..” என்று பொன்னி இழுக்க, அசோக் நம்ப மாட்டாதவன் போல் பார்க்க,

மங்கை “பொன்னி எதுவும் மறைக்கிறியா?? ஊருக்கும் திடீர்னு போகணும்னு சொன்ன.. அன்னிக்கே உன் நாத்துனா மாமியார் எல்லாம் சரியா உன்கிட்ட பேசலை.. என்னன்னு கேட்டதுக்கும் நீ ஒண்ணுமில்லை சொல்லிட்ட..” என்றுகேட்க,

“நிஜமாவே ஒண்ணுமில்ல ம்மா.. அவருக்கு அங்க வேலை இருக்கு போறார்.. நீ இங்க வரன்னு சொன்னேன்.. சரின்னு என்னை இங்க அனுப்பிட்டார்.. எனக்கே தெரியாது.. அசோக் வந்தப்புறம் தான் தெரியும்..” என்றவள்

“அப்படிதானே அசோக்..” என்று அவனை பார்த்தவள், ஆமா சொல்லு என்றாள் கண்களில்..

அசோகும் அவளைப் பார்த்துக்கொண்டே ஆமாம் என்று சொல்ல, மங்கை அப்போதுதான் ஓரளவு சமாதானம் ஆனார்..

அங்கே புகழேந்தி வீடு போய் சேர்ந்ததும், முதலில் மன்னவனும் மகராசியும் கேட்டது பொன்னி எங்கே என்றுதான்..

அவனோ சாவகாசமாய் அன்பரசி கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்தவன் “யார் அவளை கூப்பிட்டீங்க??” என்று கேட்க, அதற்குமேல் யாரும் ஒன்றும் பேசவில்லை..

உண்மை அதுதானே.. யாருமே அவளிடம் இதுவரைக்கும் பேசவில்லை.. ஊருக்கு கூட புகழைத் தான் வர சொன்னார் மன்னவன்.. அவன் வந்தால் பொன்னியும்தானே வருவாள் என்ற எண்ணம்.. அதைவைத்தே வீட்டிலும் சொல்லிருந்தார்..

“சும்மா அந்த பொண்ணுக்கிட்ட யாரும் வம்பு செய்ய கூடாது….” என்று..

ஆனால் இப்போது பொன்னி வரவில்லை என்றதுமே “என்ன புகழ்…!!!” என்றுதான் கேட்டார்..

அவனும் ஒன்றும் தெரியாதவன் போல “என்னப்பா??” என்று கேட்க,

மகராசியோ “முதல்ல அவன் சாப்பிடட்டும்..” என்றவர் “கண்ணு போ வேற உடுப்பு போட்டு வா…” என்றுசொல்ல,

“ம்மா நான் சாப்பிட்டு தான் வந்தேன்…” என்றவன் “தூக்கம் வருது காலையில பேசிக்கலாம்…” என்று அறைக்கு சென்றுவிட்டான்..

நல்லவேளை அங்கே பரஞ்சோதியும் சத்யாவும் இல்லை.. இருந்திருந்தால் நிச்சயம் இப்போதும் பொன்னி வரவில்லை என்பது கண்ணு காது மூக்கு வைத்து பல ரூபங்களில் பேசப்பட்டு இருக்கும்..

அறைக்கு வந்தவன், பொன்னிக்கு அழைத்துப் பேச, அவளும் அதேதான் கேட்டாள் என்னை கேட்டார்களா என்று.. பொன்னிக்கு தக்கன அவளுக்கும் ஒரு பதிலை சொல்லி வைத்தவன் நிஜமாகவே அலுப்பில் உறங்கிவிட்டான்..

Advertisement