Advertisement

     தோற்றம் – 22

ஊடல் கொஞ்சமாகவும், கூடல் மிஞ்சலாகவும் நாட்கள் பொன்னிக்கும் புகழேந்திக்கும் இனிதே நகர்ந்தது.. அவரவர் வீட்டினரை பற்றிய கவலைகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும், அதனை எல்லாம் தாண்டி, இது எங்கள் வாழ்வு, இது எங்களுக்கான நேரம் என்ற எண்ணமே மேலெழும்ப அவர்களுக்கான பொழுதுகள் எல்லாம்  அவர்காலேயே அழகாக்கப்பட்டது..

“கண்ணு கண்ணு…” என்று அவனும்,

“என்னங்க ஏங்க…” என்று அவளும்,

மற்றதை எல்லாம் மறந்து, ஒதுக்கி, அவர்களுக்கான உலகத்தில் சஞ்சரிக்க, எப்போதடா வேலை முடிந்து வீட்டிற்கு போவோம் என்று அவனும், எப்போதடா வருவான் என்று அவளும் காத்திருப்புகளில் காதல் பேசத் தொடங்கினர்..

அன்று புகழ் ஆபீஸில் இருந்து கிளம்புகையிலே அவனின் நண்பர்கள் அவனை பிடித்துக்கொண்டனர்.. ட்ரீட் கொடு என்று..

சந்த்ருவோ “லீவ் போட்டு போன.. மேரேஜ் முடிச்ச.. ட்ரீட் கூட வைக்கலை.. நானெல்லாம்  எப்படி என் வீட்ல விருந்து வைச்சேன்..” என்று சொல்ல,

“டேய் டேய்.. இப்போ என்ன.. உங்களுக்கு விருந்து வேணும்.. அவ்வளோதானே..” என்று புகழ் சொல்ல,

இன்னொருவன் புனீத்தோ  “கண்டிப்பா வேணும்..” என்றுசொல்ல, அன்றைய தினம் மாலை வீட்டிற்கு வந்ததும் பொன்னியிடம் சொன்னான் ‘பிரண்ட்ஸ் ட்ரீட் கேட்கிறாங்க…’ என்று..

“அதுக்கென்னங்க.. கூட்டிட்டு போய் ட்ரீட் வைங்க..” என்று பொன்னியும் சொல்ல,

“ஹ்ம்ம் இல்ல கண்ணு… வீட்டுக்கு வரணும் சொல்றாங்க.. ரெண்டுபேருமே மேரேஜ் ஆனவங்கதான் சோ வொய்ப் கூட வருவாங்க..” என,

“ஓ.. அப்போ லீவ்ல ப்ளான் பண்ணுங்க…” என்றுவிட்டாள்..

அப்புறமென்ன, அந்த வார இறுதியில், சந்த்ருவும் அவன் மனைவியும், புனீத்தும் அவன் மனைவியும் வர, புகழ் வீடே சிரிப்பிலும் பேச்சிலும் அதிர்ந்தது..

புனீத்தின் மனைவி மலையாளி, அவளுக்கு இன்னும் தமிழ் அத்தனை சுலபமாய் பேச வந்திடவில்லை.. இவர்கள் அனைவரும் பேசுவதையும் சிரிப்பதையும் பாதி புரிந்தும் புரியாததுபோல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.. பொன்னி இதனை கவனித்தவள் அவளோடு ஓரளவு மலையாளத்திலும் கொஞ்சம் ஆங்கிலத்திலும் கலந்துகட்டி உரையாட, மற்றவர்களை விட புகழேந்தி தான் கண்களை விரித்து வியப்பாய் பார்த்துகொண்டு இருந்தான்..

காரணம், மூன்றாண்டுகளுக்கு மேலாய் அவன் மும்பையில் இருந்தும் அவனுக்கு ஹிந்தி நுனி நாக்கில் கூட ஒட்டவில்லை.. பிறர் பேசுவது அவனுக்குப் புரியும் ஆனால் அவனுக்கு பேச வரவில்லை அவ்வளவே.. மற்றபடி ஆங்கிலமும் தமிழும் தான்..

நண்பர்கள் யாரேனும் கிண்டல் செய்தால் “போடா டேய் போடா.. தாய் மொழி தமிழ் என்னை வாழ வைக்கும்..” என்றுவிடுவான்..

ஆனால் இன்று அவன் மனைவி அவனின் நண்பர்கள் முன்னிலையில் தனக்கு தெரியாத வேறொரு மொழியை சர்வ சாதரணமாய் பேசுகையில், பல்லிடுக்கில் எப்போதாவது சிக்கிக்கொள்ளும் சிறு கடுகு போல் அவனின் மனதின் ஓரத்தில் ஒரு பொறாமை எட்டிப் பார்த்ததுதான்..

ஒருவழியாய் அனைவரும் கிளம்பவும், பொன்னியும் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு வந்து அமர, அவளை ஓட்டிக்கொண்டே அமர்ந்தவன், “உனக்கு வேறென்ன லாங்குவேஜ் எல்லாம் தெரியும்…” என்றான் சாதாரணமாய் கேட்பதுபோல்..

“ஏங்க????” என்றவள் லேசாய் நகர,

“ஹ்ம்ம் சொல்லேன்..” என்றவன் அவளை நெருக்கி அமர்ந்தான் அவளை நகரவிடாது..

அவன் பேச்சு வேறென்றாலும், பார்வையும் தொடுகையும் வேறு உணர்த்த, “ஏன் சொல்லுங்க சொல்றேன்…” என்றவள் கொஞ்சம் நெளிய,

“நீயேன் நெளியுற…” என்றவன் அவளை இடையோடு சேர்த்தணைத்து, “சொல்லு வேறென்ன லாங்குவேஜ் எல்லாம் தெரியும்..” என்று திரும்ப கேட்க,

“ஹ்ம்ம் தமிழ்.. இங்கிலீஷ்… கொஞ்சம் மலையாளம்.. கொஞ்சம் ஹிந்தி..” என்று சொல்ல,

“அப்போ உனக்கு ஹிந்தியும் தெரியுமா…??” என்றான் இன்னும் கண்களை விரித்து.

“ஏன் ஏன்?? கொஞ்சம்தான் தெரியும்.. எல்லாம் படம் பார்த்து பழகினது தான்..” என்றவள் ஏனிப்படி என்று பார்க்க,

“ஹ்ம்ம் சரி சரி…” என்றவன் “அப்போ எனக்கும் சொல்லிக்கொடு…” என்றபடியே அவளின் கூந்தலில் முகம் புதைக்க,

“ம்ம்ம்.. என்னாச்சு உங்களுக்கு…” என்று அவளும் விலகப் பார்க்க, அது அவளால் முடியத்தான் இல்லை..

“சொல்லி குடு இல்லாட்டி இப்படிதான்…” என்றவன் செல்லம் கொஞ்ச, “இல்லைன்னா???” என்றாள் அவளோ மிஞ்சப் பார்த்து..

“இல்லைன்னாலும் சொல்லிக்கொடு…” என்றவன் வார்த்தையை இழுத்தபடி அவளையும் இழுத்து அணைக்க, அதே நேரம் அவளின் அலைபேசியும் என்னை கொஞ்சம் பாரேன் என்று சப்தமிட்டது..

“போன் ரிங் ஆகுது…” என்று பொன்னியின் குரல் ஹஸ்கியாய் ஒலிக்க,

“அப்புறம் பேசிக்கலாம்…” என்று அவனோ அவளை மேலும் மேலும் தன் கைகளுக்குள் சிறைவைக்க, அலைபேசியோ திரும்ப திரும்ப அலறிக்கொட்ட,

“ம்ம்ச் இருங்க பேசிக்கிறேன்…” என்றவள் அவளின் போனை எடுத்துப் பார்க்க, அழைப்பது மங்கை என்று தெரியவும், அதுவும் இந்த நேரத்தில் என்றதும் வேகமாய் “ஹலோ அம்மா…” என்றாள்..

பேசுவது மங்கை என்றதும் புகழ் தொல்லை செய்யாது எழுந்து போக நினைக்க, பொன்னி தான் அவனை பிடித்து நிறுத்தி மீண்டும் தன்னருகே அமர வைத்துகொண்டாள்..

“என்னம்மா இந்த நேரத்துல கால் பண்ணிருக்க???” என்றவள் லேசாய் புகழ் மீது சாய்ந்துகொள்ள, அவனுமே கொஞ்சம் அவளின் தோள் மீது கரம் போட்டு அமர்ந்துகொண்டான்..

“கொஞ்சம் மனசு சரியில்ல பொன்னிம்மா.. அதான் உன்கிட்ட பேசலாம்னு…” என்றவரின் குரலே அவரின் மன வருத்தத்தை காட்டிக்கொடுக்க,

“ஏன் ம்மா என்னாச்சு..??” என்றவள் புகழின் முகத்தினையும் ஒருமுறை குழப்பமாய்  பார்த்துக்கொண்டாள்.

“இல்ல பொன்னி அசோக்குக்கு பொண்ணு பார்க்க சொல்லிருந்தோம்ல…” என்று மங்கை சொல்லும்போதே,  ‘அய்யோ..’ என்று பொன்னி புகழின் மீது சாய்ந்திருந்தவள் நிமிர்ந்துவிட, அவனுக்குமே என்னானதோ என்ற அதிர்வு தொற்றியது..

ஆனால் பொன்னியின் மனத்தில் வேறு எண்ணம்.. எங்கே புகழின் வீட்டினர் யாரும் மங்கையிடம் இதை பேசி அதனால் எதுவும் ஆகிவிட்டதோ என்று..

“அம்.. அம்மா.. என்னாச்சு????”

“ஒரு பொண்ணு  ஜாதகம் சரியா பொருந்தி வந்தது.. அசோக்கிட்ட கேட்டதுக்கு அவனும் சரின்னு சொல்லிட்டான்.. சரி தரகர் வரவும் அவர்கிட்ட சொல்லி பொண்ணு வீட்ல கேட்டிட்டு சொல்லுங்கன்னு சொன்னேன்.. அவங்க சரின்னு சொல்லிட்டா அடுத்து உன்னையும் மாப்பிள்ளையும் கூட்டிட்டு போய் பேசலாம்னு…” என்றவர் அப்படியே நிறுத்த,

“ம்மா முழுசா சொல்லு.. உன் குரலே எப்படியோ இருக்கு…” என்றவளுக்கும் என்னானதோ என்ற பதற்றம்..

“தரகரும் போய் பேசிருக்கார் பொன்னி, அவங்களும் சரி நாங்க ஜாதகம் பார்த்திட்டு விசாரிச்சிட்டு சொல்றோம்னு சொல்லிருக்காங்க.. நானும் சரின்னு சொல்லிட்டேன்.. ஆனா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  தரகர் வந்தார், பொண்ணு வீட்ல வேண்டாம் சொல்லிட்டாங்கன்னு சொன்னார்…” என,

“ம்மா… இதுக்கா இவ்வளோ வருத்தம்.. இப்போ என்ன வேற பொண்ணு பாக்கலாம் அவ்வளோதானே… அதுக்கேன் இவ்வளோ பீல் பண்ற.. அசோக்கிட்ட இப்படிதான் பேசினியா???” என்று பொன்னி இதெல்லாம் சாதாரணம் என்று பேச,

புகழுக்கு அப்போதுதான் ஓரளவு இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரிந்தது.. அவனின் முகம் யோசனையாய் மாறியது..

“இல்ல பொன்னி.. அவங்க வேண்டாம் சொன்னதுக்கு காரணம் இங்க நம்ம ஊர்ல நடந்த பிரச்சனை…” என்று மங்கை அழாத குறையாக சொல்ல, பொன்னிக்கு பகீர் என்றது..

“ம்மா…!!!! என்ன சொல்ற???” என்றவள் அதே அதிர்ச்சியோடு புகழைப் பார்த்தாள் இப்போது..

“ம்ம் ஆமா… ஊர்ல பையனை பத்தி விசாரிச்சோம்.. சொல்லிக்கிற போல ஒன்னும் இல்லையேன்னு சொல்லி, கடைசில நடந்ததை மூடி மறைக்கத்தான் உன்னை அங்க கல்யாணம் பண்ணி கொடுத்திருக்குன்னும் சொல்லிட்டாங்கலாம்…” என்று மங்கை சொன்னதுமே,

“ம்மா??!!!!!!!” என்று குரலை உயர்த்தியவள், எழுந்தே விட்டாள்..

“இதை அசோக்கிட்ட சொன்னா ரொம்ப வருத்தப்படுவான்னு தான் உன்கிட்ட சொல்றேன் பொன்னி. சங்கடமா போச்சு…” என்று மங்கையின் குரல் தன் மக்களின் வாழ்வை எண்ணி கலங்க,

தன் மனதில் இருக்கும் கலக்கத்தை விடுத்தது, “ம்மா இதெல்லாம் நீ பெருசா நினைக்காதம்மா.. இப்போ என்ன அசோக்குக்கு பொண்ணு கிடைக்காதா என்ன?? அசோக் மேல யார் தப்பு சொல்ல முடியும்.. அவன்தான் எந்த தப்பும் பண்ணலையே…” எனும் போதே புகழேந்தி எழுந்து உள்ளே சென்றுவிட்டான்..

அதுவேறு பொன்னிக்கு நெஞ்சுக்குள் பிசைய, “ம்மா ப்ளீஸ் ம்மா.. நீ எதுவும் நினைக்காத.. இப்போ என்ன இந்த பொண்ணு இல்லைன்னா வேற பொண்ணு பாக்கலாம்…” என்றவள் ஒருவிதமாய் மங்கையை சமாதானம் செய்து பேசி முடிக்கவும் அவளுக்குமே மனது எப்படியோ ஆனது..

இதென்னடா ஒன்று போய் ஒன்றாய் வருகிறது என்று. இதுபோலவே பார்ப்பவர்கள் அனைவரும் சொன்னால் என்ன செய்ய??  அசோக் வாழ்கையை எண்ணி ஒருவித கலக்கம் பிறக்க அதுவே அவளுக்கு கோபமாய் வெளிப்பட்டது..

புகழைத் தேடி அறைக்குள் போக, வேலை செய்வதுபோல் அவனின் மடிக் கணினியில் அமர்ந்திருக்க, இத்தனை நேரம் கொஞ்சிக்கொண்டு இருந்தவன் இப்போது மட்டும் வந்து கனகச்சிதமாக வேலை செய்யவும் பொன்னிக்கு சொல்லவும் வேண்டுமா??

மெத்தையில் சட்டென்று அவளின் அலைபேசியை தூக்கிப் போட்டவள், “அம்மா போன் பண்ணாங்க…” என்றாள் எங்கோ பார்த்து.

“ஹ்ம்ம் தெரியும் கண்ணு.. அதான் நீங்க பேசட்டும்னு வந்துட்டேன்..” என்றவனின் பார்வையும் அவனின் வேலையில் இருக்க,

“அப்படி தெரியலையே..!!!” என்றாள் நக்கலாய்..

“ம்ம்ச் என்ன கண்ணு????” என்று புகழ் நிமிர,

“ஏன் நாங்க பேசினது வச்சு உங்களுக்கு ஒண்ணுமே கெஸ் பண்ண முடியாதோ..” என்றாள் குத்தலாய்..

“இப்போ என்ன பண்ண சொல்ற நீ???”

“என்ன விசயம்னு கேட்காம எனக்கென்னனு வந்து இப்படி உட்காந்து இருக்கீங்க…” என்றவளுக்கு நிஜமாகவே அவளின் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த என்று தெரியவில்லை..

“சரி சொல்லு என்ன விஷயம்???” என்றவன் கொஞ்சம் பொறுமையாகவே பேச, அவனை முறைத்தபடி தான் மங்கை சொன்னதை சொன்னாள் பொன்னி..

அனைத்தையும் கேட்டவன் முகம் மாறினாலும் “சரி இதுக்கு நான் என்ன செய்யணும்???” என்றான் புரியாது..

புகழேந்திக்கு உண்மையாகவே இதில் அவன் என்ன செய்ய முடியும் என்பது புரியவில்லை.. முதலில் இப்படியெல்லாம் பேச்சு வரும் என்பதுகூட அவன் நினைக்கவில்லை.. இதில் பொன்னி அவனை முறைத்தாள் அவனும் தான் என்ன செய்வான்..

கேள்வி கேட்டவனைப் பார்த்தவள் “நீங்க ஒண்ணுமே பண்ண வேணாம்..” என்று கடுப்பாய் கூறிவிட்டு படுத்துவிட, அவனுக்குத் தான் எப்படியோ போனது..

“ம்ம்ச் பொன்னி..” என்று அவளை தன் புறம் திருப்ப முயன்றவன் தோற்றுப் போக, “ஏய் இப்போ திரும்புரியா இல்லையா டி??” என்று ஒரு அதட்டலை வைத்த பின்னே தான் அவள் திரும்பினாள்..

பொன்னியின் விழிகளில் மெல்லிய நீர் படலம் தெரிய அதனைப் பார்த்தவன் “கண்ணு இப்போ ஏன் நீ அழற???” என்றான் புரியாது..

“அழாம.. அசோக் லைப்ல இதுவரைக்கும் ஒருவிசயம் கூட நல்லதா நடந்ததில்ல. அப்பா இருக்கும்போதே ஒவ்வொரு விசயமும் அவனுக்கு அவனே பண்ணிக்கிட்டான்.. இப்போ அவனுக்கு ஒரு நல்லது செய்யனும்னு நினைக்கிறப்போ இப்படி ஒரு பேச்சு..” என்று சொல்ல,

“சரி சரி.. கஷ்டம்தான்.. ஆனா நீயே பாரேன் அசோக்குக்கு நல்ல லைப் அமையும்.. இனிமேல் ஒருத்தியா பிறந்து வர போறா…” என்று புகழ் சாமாதானம் செய்ய,

அவனை ஒருநொடி ஆழ்ந்து பார்த்தவள், “உங்களுக்கு நடந்தது எல்லாம் செவி வழி செய்தி தான்.. இப்படி இப்படி ஆச்சுன்னு.. கண்ணு முன்னாடி பார்த்திருந்தா தெரிஞ்சிருந்திருக்கும் அதோட வலி என்னன்னு…” என்றவளின் குரலில் சுத்தமாய் எந்த உணர்வும் இல்லை..

பொன்னியின் இந்த வார்த்தைகளில் புகழேந்தியே கொஞ்சம் திடுக்கிட, “என்ன பாக்குறீங்க.. என்னதான் அசோக் மேல தப்பில்லைன்னாலும் ஊர்ல அத்தனை பேர் முன்னாடி அடி வாங்கினது யார்னால மறக்க முடியும்??” என்று பொன்னி கேள்வி கேட்க, புகழேந்திக்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அமுதாவை அசோக்கிற்கு பேசவேண்டாம் என்று பொன்னி வீட்டிற்குள் வீட்டு ஆட்களிடம் சொன்னதையே பெரிய கௌரவ குறைச்சலாக நினைத்து அப்படி பேசினார்.. இன்று இதோ இந்த கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்வான்..

“சொல்லுங்க… யார்னால மறக்க முடியும்.. அவன் நல்லது நினைச்சுதான் பண்ணான்.. ஆனா அப்போ அமுதா ஒருவார்த்தை தைரியமா பேசிருந்தா எல்லார் முன்னாடியும் உண்மை வெளிய வந்திருக்கும்.. இப்போ.. யார் நம்புவா?? அட உள்ளூர் காரங்களை விடுங்க.. அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையுறப்போ இதுனால பிரச்சனை ஆகாதா என்ன???” என்று பொன்னி பேச பேச புகழேந்தி ஆடித்தான் போனான்..  

உண்மைதானே அசோக் நல்லது நினைத்தே செய்திருக்கலாம்.. புகழும் பொன்னியை விரும்பியே திருமணம் செய்திருக்கலாம்.. ஆனால் பிறர் அதெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதுவுமில்லையே.. அட ஊர் ஆயிரம் பேசும் என்று கண்டுகொள்ளாது நம் வாழ்வை பார்த்துகொண்டு இருக்கலாம் தான்..

ஆனால் அசோக் வாழ்வில் இதனால் ஒரு பிரச்சனை என்றால்?? அதை மங்கையும் சரி இல்லை பொன்னியும் தான் தாங்கிக்கொள்வாளா??

பொன்னிக்கு மனதினுள் ஒருவித பயம் கூட சூழ்ந்துவிட்டது..

ஆனால் புகழேந்தியோ அவன் முகத்தில் எதையும் காட்டாது, அவளைத் தான் பார்த்துகொண்டு இருந்தான்..

“என்ன அப்படி பாக்குறீங்க???”

“ஹ்ம்ம் அசோக் மேல தப்பில்லைதான்.. ஆனா இந்த விசயத்துல அமுதா பேரும் தானே வந்தது.. அதையேன் கொஞ்சமும் யோசிக்கலை  நீ..??” என்றான் ஒருவித குரலில்..

“என்ன???!!!” என்று பொன்னி திகைத்துக் கேட்க,

“ஹ்ம்ம் இப்போ ஒரு பொண்ணு வீட்ல வேண்டாம் சொன்னதுக்கே நீ இவ்வளோ பீல் பண்ற.. அப்போ அப்படித்தானே அமுதாக்கும்.. நாளைக்கு அவளுக்கும் மாப்பிளை பார்க்கிறப்போ ஊர்ல விசாரிக்க மாட்டாங்களா என்ன?? அப்போ இந்த பேச்சு வராதா என்ன??” என்று புகழ் கேட்க,

“அதுக்கு.. அதுக்கு.. அப்.. அப்போ அதுக்குதான் அமுதாக்கு அசோக்கை பேசணும்னு எல்லாம் சொல்றாங்களா???” என்றாள் ஒருவித ஆத்திரத்தில்..

கடைசியில் இவன் மனதிலும் இதே எண்ணமா?? என்ற எண்ணம் பொன்னிக்கு வந்ததும் மனதில் ஒரு சின்ன ஏமாற்றம் கூட பரவியது..

“ம்ம்ச் நான் அதை பத்தியே பேசலை கண்ணு.. ஆனா அசோக் லைப் இதுனால பிராப்ளம் வரும்னு சொல்றப்போ அதே நேரம் அமுதா பத்தியும் யோசிக்கணுமே…” என்றவன் அவளின் இடுக்கிய பார்வை கண்டு,

“சரி வீட்ல அவ்வளோ நடந்ததே நீ ஏன் அத்தைக்கிட்ட அசோக்கிட்ட சொல்லலை..?? இதுக்கு பதில் சொல்..” என்று கொஞ்சம் பிடிவாதமாகவே கேட்டான்..

“அது…” என்று பதிலை பொன்னி தேட,

“நீ ஆன்சர் பண்ணிதான் ஆகணும் கண்ணு..” என்றான் பிடிவாதமாகவே..

“சொன்னா எல்லாருக்கும் சங்கடம்.. நாளைக்கு அவங்களும் எல்லாரையும் நேருக்கு நேரா பாக்க வேண்டாமா?? அதான்.. அதுவுமில்லாம…” என்று நிறுத்தியவள் புகழைப் பார்த்து, பேச்சை மறந்தாள்..

“ஹ்ம்ம் சொல்லு அதுவுமில்லாம???”

“இவ்வளோ நடந்தது.. இதுனால தான் நான் கிளம்பி இங்க வந்தேன்.. வீட்ல யாரும் என்கிட்டே பேசுறது இல்லைன்னு தெரிஞ்சா ஒருவேளை அசோக் எனக்காக, என் லைப்ல எந்த மன கசப்பும் இருக்க கூடாதுன்னு கூட அவன் அமுதாவை கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்வான்.. ஆனா….”

“ஆனா??!!!!!”

“ஆனா… முதல்ல ஒருவிசயம், அசோக் மனசுல அமுதா மேல அப்படியொரு எண்ணமில்லை.. அப்படியே அவன் சரின்னு சொன்னாலும் அது அமுதாக்கு தான அசிங்கம்..” என்று பொன்னி இத்தனை நாள் தன் மனதினில் இருந்ததை எல்லாம் சொல்லிட,

“ஹ்ம்ம் இவ்வளோ யோசிக்கிற நீ.. பின்ன ஏன் அமுதாக்கிட்ட இப்போவரைக்கும் பேசலை…” என்றான் புகழும், அனைத்தையும் நானும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்பதுபோல்..

“பேசலை. அவ்வளோதான்.. அசோக்கும் சரி.. நானும் சரி.. அமுதானால நிறைய பேச்சு வாங்கியாச்சு.. நான்கூட அமுதா பயப்படுறான்னு நினைச்சேன்.. நமக்கொரு பிரச்னை வருதுன்னா கூட பயப்படலாம்.. ஆனா நம்மனால அடுத்தவங்களுக்கு ஒரு பிரச்சனை ஆகுதுன்னா கண்டிப்பா அந்த இடத்துல பேசணும்.. அதை அவ பண்ணல..” என்றவள் போதுமா விளக்கம் என்று பார்க்க,

“ஹ்ம்ம்….” என்று பெருமூச்சை விட்டவன், “சரி பீல் பண்ணாத தூங்கு…” என்று அவளை படுக்கவைக்க முயல,

“ம்ம்ச் எனக்குத் தூங்க தெரியும்…” என்றவள் “உங்க கேள்வி எல்லாம் முடிஞ்சதா???” என்றாள் அப்போதும் கடுப்பு மாறாத குரலில்..

“இருக்கு.. ஆனா இப்போ வேணாம்..”

“பரவாயில்லை கேளுங்க…”

“இல்லை நீ தூங்கு..”

“ம்ம்ச் கேளுங்கன்னு சொன்னேன்….”

“இல்ல.. இவ்வளோ இருக்கு.. பின்ன எப்படி எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க…??” என்று புகழ் கேட்டுவிட, பொன்னி அத்தனை நேரம் முகத்தினில் இருந்த இறுக்கத்தை விடுத்தது,

“ஹா ஹா…” என்று பலமாய் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்..

“கண்ணு என்ன இது…” என்று புகழ் அவளின் கரங்களை பிடிக்க,

“என்ன இது??? ஹா… என்ன இது… எப்போ கேட்கிறீங்க இந்த கேள்வி???” என்று பொன்னி கேட்டுக்கொண்டே சிரிக்க,

“பதில் சொல்லு….” என்றவன் சிரிக்காதே என்பதுபோல் கைகளை ஆட்ட,

“ஹ்ம்ம் இவ்வளோ இருக்கு ஆனாலும் ஏன் என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க.. தெரியலையா…. ஹா.. ஒரே ஒரு காரணம் தான்.. உங்களை எனக்கு பிடிச்சது.. அதுமட்டும் தான் காரணம்..” என்றவள் சிரிப்பை நிறுத்தி அவனின் கண்களைத் தான் பார்த்தான்..

நிஜமாய் புகழ் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது, அவனின் கண்கள் விரிந்ததிலேயே தெரிய, பொன்னி “எனக்கு தூக்கம் வருது…” என்றுசொல்லி படுக்க,

“ஏய்.. கண்ணு.. இப்.. இப்போ நீ என்ன சொன்ன???” என்றான் அவளை படுக்க விடாது..

“எதுவுமில்லையே.. தூக்கம் வருது சொன்னேன்…” என்றவள் அவனின் கரங்களில் இருந்து திமிர,

“இல்ல அதுக்கு முன்னாடி…” என்றவன் அவளை வீம்பாய் அமர வைத்தான் மீண்டும்..

“என்ன சொன்னேன்.. எல்லாம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.. சும்மா திரும்பக் கேட்டா சொல்ல முடியாது…”

“அப்.. அப்போ அன்னிக்கு கேட்டதுக்கு பிடிச்சிருக்கா தெரியலைன்னு சொன்ன..???!!!”

“ஆமா.. ஒருத்தி நம்மளை பிடிச்சு கல்யாணம் பண்ணாளா இல்லையான்னே தெரியாத மனுஷன் கிட்ட என்ன சொல்ல…” என்றவள் பேசும் பேச்சு எங்கோ ஆரம்பித்து எங்கோ போவதாய் உணர்ந்தாள்..

“சரி அப்போ சொல்லு.. ஏன் என்னை பிடிச்சது…???” என்று புகழ் அவளின் முகத்தினை அவன்புறம் திருப்ப,

“நீங்கதானே என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு சொன்னீங்க அதனால தான் பிடிச்சது.. வேறெதுவும் இல்லை..” என்றவள், அவன் யோசிக்கும் நேரத்தில் திரும்ப படுத்துக்கொண்டாள்..

ஆனால் புகழேந்தி பொன்னியிடம் அடுத்து எதுவுமே கேட்கவில்லை.. இத்தனை நாள் மனதினில் உறுத்திக்கொண்டு இருந்த ஒருவிசயம் இப்போது தெளிவானது போல் இருக்க, இத்தனை விஷயங்கள் நடந்தும், அவையனைத்தையும் தாண்டி பொன்னியும் சரி அவள் வீட்டினரும் சரி அவனையும் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாய் ஏற்றிருக்கிறார்கள் என்றால் அது பெரிய விசயம்தானே.

அதிலும் அசோக்… இப்போதுவரைக்கும் அவன் கொடுக்கும் மரியாதையில் எவ்வித குறைவும் இல்லை..

இதனை எப்படி அவன், அவன் வீட்டில் சொல்வான்?? சொல்லித்தான் புரிய வைக்க முடியுமா???

இதில் அனைவருமே என்னவோ இவர்களின் திருமணமே நடந்திருக்கக்கூடாது என்பதுபோல் நினைக்க, அந்த பேச்சு பொன்னிக்கு எப்படியான ஒரு வலியை கொடுத்திருக்கும் என்று புகழேந்திக்கு இப்போது புரிந்தது..

முன்னை விட பொன்னியை இன்னமும் புரிந்தது..                     

             

 

   

             

           

                       

                       

Advertisement