Advertisement

தோற்றம் – 2௦

பொன்னி சென்னைக்கு வந்தும் ஒருவாரம் ஆகிவிட்டது..

ஆனால் அவளின் மனநிலை ஊரில் இருந்தது போலவே தான் இன்னமும் இருந்தது.. சொல்லப்போனால் இன்னமும் குழப்பம் தான் மனதில்.. அவளை அழைக்கவென்று புகழேந்தி வந்ததுமே மனதில் அப்படியொரு நிம்மதி.. ஆனால் இப்போது அந்த நிம்மதி இருக்கிறதா என்றால் கேள்விகுறி தான்…

காரணம்.. புகழேந்தி தான்…

சொன்னது போலவே அன்று மாலையே சென்னைக்கு அழைத்தும் வந்துவிட்டான்… ஆனால் அதன் பின்னே… இந்த ஆனால்களுக்கு பதில் கண்டுபிடிக்கவே பொன்னிக்கு போதும் போதும் என்றாகும் போல..   

பொன்னி அவளின் அம்மாவிடம் சொல்ல சென்றிருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் “வரவா??” என்று கேட்க அழைத்தான் புகழ்.

அவளும் “ம்ம்…” என்றுமட்டும் சொல்ல, புகழேந்தியும் சிறிது நேரத்தில் சென்றான்.. மங்கை அவனை எப்போதும் போல் வரவேற்க, அவரின் முகமே காட்டியது பொன்னி எதுவும் சொல்லியிருக்கவில்லை என்று..

கேள்வியாய் பொன்னியின் முகத்தினை புகழ் பார்க்க, அவளோ இல்லை என்று தலையை ஆட்டினாள். அடுத்து புகழும் ஒன்றும் காட்டாதிருக்க,

“பொன்னி சொன்னா, அவசரமா கிளம்பனும்னு.. முன்னமே தெரிஞ்சிருந்தா நானும் கிளம்பியிருப்பேன்.. முறைப்படி நாங்க தான் கொண்டு வந்து விடனும்..” என்றுசொல்ல,

“அதுனால என்ன அத்தை…. உங்களுக்கு ப்ரீ ஆகவும் வாங்க… இல்லைன்னா அசோக்குக்கு சொல்லிட்டா அவர் வந்திடுவார்தானே…” என,

‘அசோக்கா…!!!!!!’ என்று பொன்னி அதிர்ந்து தான் பார்த்தாள்..

அவளுக்குத் தெரியும் இந்நேரேம் வீட்டில் ஒரு பஞ்சாயத்து ஓடியிருக்கும் என்று.. அதற்குமேலும் அசோக்கை வர சொல்வோம் என்று புகழ் சொல்கிறான் என்றால், நிஜமாகவே அவன் இதெல்லாம் பெரிதாய் நினைக்கவில்லையா என்றுதான் தோன்றியது.. ஆனாலும் எப்படி??

பேசும் தன் கணவனையும் அம்மாவையும் சும்மா பார்த்துகொண்டு இருந்தாள்..

“நாளைக்கு வெள்ளி கிழமைதான்.. காலைல நல்ல நேரம் பார்த்து பொன்னி அங்க பால் காய்ச்சிட்டா நல்லது…” என்று மங்கை சொல்ல,

“ஓ.. சரிங்கத்தை.. அப்பா அம்மாக்கிட்ட ஒருவார்த்தை கேட்டிட்டு என்னன்னு சொல்றேன்.. நேரம் இங்கேயே குறிச்சிட்டா அசோக்குக்கும் நானே சொல்லிடுறேன்.. நீங்க அடுத்து எப்போன்னு சொல்லுங்க நானே கூட வந்து கூட்டிட்டு போறேன்..” என,

பொன்னியோ ‘இவ்வளோ நல்லவனா நீ…!!!!’ என்றுதான் பார்த்துகொண்டு இருந்தாள்..

நேரம் மேலும் கடக்க, அவரோ இம்முறை இருவரையும் அத்தனை சீக்கிரம் விடவில்லை சாப்பிட்டுத் தான் போகவேண்டும் என்று சொல்ல, புகழேந்தியும் மறுக்கவில்லை.. முடிந்த அளவு அங்கே அவனது வீட்டில் பொன்னி இருக்கும் நேரத்தை குறைக்கவேண்டும் என்று நினைத்திருந்தான் போல..

பொன்னிதான் “இல்லம்மா வேண்டாம்..” என்று மறுக்க,  “இருக்கட்டும்.. அன்னிக்கும் நம்ம சாப்பிடாம கிளம்பிட்டோம்..” என்று புகழ் சொல்ல, மங்கை மனம் மகிழ்ச்சியானது..

மங்கை அப்புறம் நகர்ந்ததும், “அம்மாக்கு எதுவும் தெரியவேணாம்..” என்று பொன்னி சொல்ல,

“எனக்கே நீ இன்னும் ஒன்னும் சொல்லலை..” என்று இவன் சொல்ல, “ஏன் வீட்ல எதுவும் சொல்லலையா???” என்றாள் அவளும்..

“சொன்னாங்க.. சொன்னாங்க.. ஆனா நீ சொல்லலையே..” என்றவன், “சொல்லியிருக்கணும்…” என்றும் சொல்ல, கண்களை சுருக்கி அவனைப் பார்த்தாள் பொன்னி..

“என்ன பாக்குற.. போ.. போய் அத்தைக்கு ஹெல்ப் பண்ணு.. ரொம்ப எதுவும் செய்யவேண்டாம்..” என்றவன்,

மகராசிக்கு அழைத்து “ம்மா இங்க சாப்பிட்டு வந்திடுவோம்.. எங்களுக்குன்னு எதுவும் பண்ண வேண்டாம்..” என்று அன்று நித்யா சொன்னதை மனதில் வைத்து கொஞ்சம் வார்த்தைகளை அழுத்தி சொல்ல,

பொன்னிக்கு ஒன்று மட்டும் புரிந்தது, ஒருவிசயம் மனதில் விழுந்தால் அதனை அத்தனை எளிதில் இவன் விடமாட்டான் போல என்று..

அதற்கு சாட்சியாய் அவர்களின் திருமணமே இருக்கிறதே..

“என்ன பாக்குற கண்ணு.. போ.. சிம்பிளா மட்டும் போதும்… சாப்பிட்டு கிளம்பி.. சாயங்காலம் கோவில் போயிட்டு தென் அப்படியே ஊருக்கு கிளம்பலாம்..” என,

“இல்ல, விளக்கு வைக்கிறதுக்கு முன்ன கிளம்பிடனுமாம்..” என்று பொன்னியும் சொல்ல,

“ம்ம் பார்த்துக்கலாம்…” என்றுவிட்டான்..

அதன்பின் அங்கே உண்டுமுடித்து, இருவரும் மங்கையின் காலுக்கு விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, பொன்னி மீண்டும் அவளின் பசுமாடு கன்னுக்குட்டி என்று கொஞ்சி புகழேந்தியின் வீட்டிற்கு வர, மதியம் இரண்டு ஆகிப்போனது..

கதவு வெறுமெனே சாத்தியிருக்க, வீட்டில் அவரவர்கள் அவரவர் அறையினில் இருக்க, மகராசி மட்டும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துகொண்டு இருந்தார். அதாவது இவர்களின் வருகைக்கு காத்துக்கொண்டு இருந்தார்.. வீட்டினுள் வந்ததும் புகழ் சென்று அவரிடம் அமர, பொன்னி வெறுமெனே அங்கே நிற்க,

“நீயும் உட்கார்…” என்பதுபோல் பார்க்க, அவளோ மகராசியின் அருகேதான் அமர்ந்தாள்..

“ம்மா அப்பா எங்க??” என்று புகழ் சகஜமாய் கேட்க, “தோட்டத்துக்கு போயிருக்கார் கண்ணு..” என்றவர், பொன்னியையும் சேர்த்தே பார்த்தார்..

புகழோ ‘சொல்லு..’ என்பதுபோல் பொன்னிக்கு சைகை செய்ய, அவளோ நீயே சொல் என்று பார்க்க, அவனோ பல்லைக் கடித்து அவளை உறுத்து விழிக்க,

“அது அத்தை.. நாளைக்கு அங்க போய் பால் காய்ச்சனும்.. நல்ல நேரம் பார்த்து சொல்றீங்களா?? எப்போ காய்ச்சனும்னு.. நம்ம வீட்டு பழக்கம் எதுவும் இருக்கா?? முறைப்படி செய்ய…” என்று கொஞ்சம் தயங்கியே தான் கேட்டாள்..

புகழேந்தி முதல்முறையாக பொன்னி இப்படி தயங்கி பேசுவதை காண்கிறான்.. முதன் முதலில், பொழுது புலர்ந்தும் புலராத அந்த நேரத்தில் கூட,

‘ஏன் பொண்ணுங்க லிப்ட் கொடுத்தா வரமாட்டீங்களோ..??!!!’ என்று எடக்காய் தைரியமாய் கேட்ட பொன்னியா இது என்றுதான் தோன்றியது..

அவள் முகத்திலும், உடல்மொழியிலும் அப்பட்டமாய் அப்படியொரு தயக்கம், ஒரு யோசனை தெரிய, என்ன இப்படி மாறிப்போனால் என்றே தோன்றியது அவனுக்கு…. வீட்டில் ஒருவருக்கு ஒருவர் மனஸ்தாபம் உண்டுதான் ஆனால் ஒருவரின் இயல்பு கூட மாறுமா??

ஆச்சர்யமாய் தான் இருந்தது புகழேந்திக்கு.. கொஞ்சம் வருத்தமாகவும்..

மகராசி “ம்ம்.. அவர் வரவும் சொல்றேன்…” என்றுமட்டும் சொல்ல, “சரிங்கத்தை..” என்று சொன்னவளுக்கு தெரியாதா இன்னமும் அவள் கேட்ட கேள்விக்கு முழுதாய் பதில் வரவில்லை என்று..

பொன்னி அவரின் முகத்தையே பார்க்க, “நம்ம வீட்டு பழக்கம்னா வீட்ல இருக்க பெரியவங்க தான் பால் காய்ச்சனும்.. மதினி முறை இருக்கவங்க உப்பு மஞ்சள் வாங்கி வந்து வைக்கணும்…” என்றுசொல்ல,  பொன்னி இதற்கென்ன செய்வது என்று புகழேந்தியின் முகத்தைப் பார்க்க,

அவனோ அசராமல் “சரி அப்போ எல்லாருமே கிளம்பலாம்..” என்றான்..

மகராசியும் சரி, பொன்னியும் சரி இருவருமே திடுக்கிட, “என்ன பாக்குறீங்க.. நம்ம வீட்டு பழக்கம் அதானே.. ம்மா அப்படி பார்த்தா நீதான் வந்து அங்க பால் காய்ச்சனும்.. அக்கா மாமாக்கு சொல்றேன்.. அண்ணன் வரட்டும் பெரிய வண்டி சொல்லி எல்லாம் கிளம்பலாம்…” என,

“இதெல்லாம் நீ முன்னாடியே செஞ்சிருக்கணும் கண்ணு.. சாயங்காலம் கிளம்பிட்டு இப்போ கூப்பிட்டா எப்படி??” என்றார் அவரும்..

“ஏன்.. இங்க நான் இல்லைங்கிறதுக்காக இது என் வீடில்லைன்னு ஆகிடுமா?? அதுபோல தான் அங்கயும்.. குவார்ட்டர்ஸா இருந்தாலும் அது உங்க எல்லாருக்கும் சொந்தவீடு தான்…. இங்க எனக்கும் பொன்னிக்கு என்ன இருக்கோ, அதேபோல்தான் அங்கயும்.. அப்பாவரவும் சொல்றேன் ட்ரெஸ் எடுத்து வைங்க.. நேரம் பாருங்க…” என்று படபடவென்று பேசியவன்,

அடுத்து அவரை ஒன்றுமே பேசவிடாது, “வா போய் அக்கா மாமாக்கிட்ட சொல்லிட்டு வரலாம்…” என்று ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கே அழைப்பு வைக்க போனான்..

பொன்னிக்கு என்ன இவன் இப்படி செய்கிறான் என்று அதிர்ச்சியாய் தான் இருந்தது.. எதுவோ ஒன்று அவனே பேசிக்கொள்ளட்டும், நான் பேசினால்தானே பிரச்சனை ஆகிறது.

அவனே பேசட்டும்.. என்று அவனோடு அன்பரசியை தேடி செல்ல, அப்போது தான் ஜெயபாலும் வந்திருப்பான் போல, பின் கட்டில் அவனுக்கு பரிமாறிக்கொண்டு இருந்தாள் அன்பரசி..

இவர்கள் இருவரும் செல்லவும், பார்த்தும் பார்க்காதது போல இருந்தவள், ஜெயபாலை கவனிக்கும் சாக்கில் திரும்பிக்கொள்ள,

“என்ன மாப்பிள்ள சாப்பிட்டாச்சா??” என்று ஜெயபால் கேட்க, “ஆச்சு மாமா…” என்றவன், “அக்கா கொஞ்சம் திரும்பு பேசணும்..” என்றான்..

அவன் சொல்வது காதில் கேட்டாலும் கேட்காதவள் போல இருக்க, “நீங்க பேசுங்க நான்வேணா போறேன்..” என்று பொன்னி திரும்பப் போக, அவளை கைகளை பிடித்து நிறுத்தியவன்,

“அக்கா மாமா.. நாளைக்கு வெள்ளிகிழமை அங்க சென்னை குவாட்டர்ஸ்ல பால் காய்ச்சறோம்.. அப்பா வரவும் நேரம் பார்த்து சொல்வார்.. நம்ம எல்லாரும் தான் போகணும்.. நீங்கவந்து கண்டிப்பா உப்பு மஞ்சள் வைக்கணும்..” என்றுசொல்ல,

“இதுக்கு மட்டும் எதுக்கு நானு??? சாயங்காலம் கிளம்பிட்டு இப்போ வந்து சொன்னா எப்படி???” என்று திரும்பாமலே பதில் சொன்னாள் அன்பரசி..

புகழேந்தியோ, பொன்னியிடம் நீயும் கூப்பிடு என்று சொல்வதாய் அவள் கைகளை அழுத்தி பிடிக்க, “மதினி.. அண்ணா.. கண்டிப்பா நீங்க வரணும்..” என்றுசொல்ல,

அன்பரசி அவளை ஒருபார்வை பார்த்தவள், “என்னங்க ரசம் ஊத்தவா??” என்று கணவனிடம் கேட்டாள் இவர்களுக்கு பதில் சொல்லாது.

ஜெயபாலோ “கண்டிப்பா வர்றோம்.. எல்லாரும் போறப்போ நாங்க வராம இருப்போமா…”என,

“நான் வரலை.. வீட்ல இத்தனை பேர் இருக்க, எல்லாரும் போகணும்னு அவசியமில்லை.. தோட்டத்துல வேலை இருக்கு…” என்றாள் பிடிவாதம் பிடிக்கவென்றே..

தம்பியும் தம்பி மனைவியும் வந்து அழைக்கவும் உள்ளே சந்தோசம் தான். ஆனாலும் அதை உடனே பிரதிபலிக்க ஒரு பிடிவாதம்.. அதென்ன இவர்கள் அழைக்கவும் அப்படியே சரி என்று சொல்லிடவேண்டுமா என்று.

அதிலும் புகழ், பொன்னியை விட்டும் அழைக்கவிடுவான் என்று நினைக்கவில்லை.. ஆக இன்னும் கொஞ்சம் பிடிவாதம் கூடியது. அன்பரசி இப்படியென்றால் அவளின் தம்பி எப்படி இருப்பான்..

பொன்னியிடம் “பால் காய்ச்ச என்னென்ன வாங்கணுன்னு அம்மாக்கிட்ட கேளு.. போ..” என்று சொல்லி அனுப்பிவிட்டு,

“நீ வர அவ்வளோதான்க்கா..” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

பொன்னி இல்லை என்றதுமே அன்பரசி எழுந்து அவனிடம் வந்தவள், “என்னடா உன் பொண்டாட்டியை அனுப்பிட்டு அவ்வளோ பேசின.. இப்போ அவளை விட்டே கூப்பிட வைக்கிற?? என்ன இதெல்லாம்…” என்று எரிச்சல் பட,

“இப்போ என்ன அவமுன்னாடி உன்னை பேசலைன்னு கவலையா???” என்றான் நக்கலாய்..

“டேய் மாப்ள நீ போய் ஆகவேண்டிய வேலைய பாரு..” என்று ஜெயபால் சொல்ல,

“மாமா சும்மாயிருங்க.. அவ அவ்வளோ பேசுறா.. இவன் அப்படி பேசுறான்.. இப்போ ஒண்ணுமே தெரியாதது போல வந்து கூப்பிட்டா என்னர்த்தம்??” என்று ஜெயபாலையும் அன்பரசி கடிய,

“இப்போ என்ன வேணும் உனக்கு?? உனக்கு உன் தம்பி முக்கியம்னா வா அவ்வளோதான்…” என்றுவிட்டு சென்றுவிட்டான் புகழேந்தி..

ரொம்பவும் எல்லாம் கெஞ்ச முடியாது.. வந்தால் வா.. இல்லையா போ.. இதற்குமேல் என்னால் இழுத்து பிடிக்க முடியாது என்றுவிட்டான்.. புகழ் அப்படி சொல்லி போனதுமே அன்பரசி கொஞ்சம் திடுக்கிட்டு தான் அவன் போவதைப் பார்த்தாள்..

“என்ன மாமா இப்படி சொல்லிட்டு போறான்…” என்று அதிர்ச்சி மாறாது கேட்க,

“ஹ்ம்ம் அவன் சொல்றப்போவே சரின்னு நல்லவிதமா சொல்லிருந்தா மதிப்பா பேசிருப்பான்… சும்மா சும்மா பொன்னியை பேசினா அவனுக்கும் கோவம் வரும்தான…” என்று ஜெயபால் சொல்ல,

“ஆகமொத்தம் எல்லாரும் என்னைத்தான் சொல்வீங்க.. இப்போ வரைக்கும் அவன் அவளை ஏதாவது கேட்டானா???” என்று நொடித்தாள் அன்பரசி..

“அந்த பொண்ணு முன்னாடியா நம்மக்கிட்ட பேசினான்?? அதுபோல தனியா கேட்டுப்பான் விடு.. ஒருநல்ல விசயம்னு கூப்பிடுறாங்க போறதுதான் முறை..” என்றவன் சாப்பிட்டு எழுந்துசென்றுவிட, அன்பரசி யோசனையாய் அமர்ந்திருந்தாள்..

பொன்னி மகராசியை தேடிச் செல்ல அங்கே மன்னவனும் இருக்க, இருவரும் காலேண்டர் வைத்து நல்ல நேரம் பார்த்துகொண்டு இருக்க, இவள் சென்று நிற்கவும், 

மன்னவன் “உங்கம்மாக்கு சொல்லியாச்சாம்மா??” என்று வினவ,

“இல்.. இல்ல மாமா.. நீங்க நேரம் பார்த்து சொல்லாம எப்படி சொல்ல??” என்றாள் இவளும் கொஞ்சம் பணிவாய்..

மகராசிக்கு பொன்னியின் பதிலில் மனதில் ஒரு சிறு நிம்மதி.. எங்கே அங்கே போய்தான் பால்காய்ச்சுவது பற்றி முடிவு செய்து பின் இங்கே வந்து மகனும் மருமகளும் பேசுகிறார்களோ என்று..

ஆனால் இன்னும் மங்கைக்கு அழைப்பு வைக்கவில்லை என்றதும், மனதில் ஒரு நிம்மதி பரவ,

“போனவங்க அப்படியே சொல்லிட்டு வந்திருக்கவேண்டியது தானே..” என்றார்..

“ஊருக்கு போறோம்னு சொன்னோம் அத்தை ஆனா பால் காய்ச்ச சொல்லலை..” என,

“ம்ம்… நாளைக்கு காலைல வெள்ளன காய்ச்சிடலாம்.. அப்புறம் சமையல் செஞ்சுக்கலாம்..” என்றவர், “கண்ணு புகழு…” என்று மகனை அழைத்தார்..

“சொல்லு தாயே..” என்று அவனும் உள்ளிருந்து வர “பொன்னி அம்மாக்கு போன் போட்டு சொல்லிடு.. இல்ல இல்ல வேணாம்.. ஒரு எட்டு நேர்ல போய் சொல்லிட்டு வாங்க..” என்றுசொல்ல,

“ம்மா இப்போதானே அங்கிருந்து வந்தோம்..” என்று புகழ் சொல்ல,

“டேய் முறைன்னு ஒண்ணு இருக்கு.. போங்க. ரெண்டு பேரும் சொல்லிட்டு நைட் நம்ம கிளம்பும் போதே கூட வர சொல்லிட்டு வாங்க..” என்றுசொல்ல, பொன்னியோ என்னடா இது என்று பார்த்துகொண்டு இருந்தாள்..

நேற்று இவர்கள் எல்லாம் பேசியது என்ன இன்று என்னடாவென்றால் இப்படி பேசுகிறார்கள் என்று இருந்தது.. குழப்பமாகவும் இருந்தது.. ஆச்சர்யமாகவும் இருந்தது.. ஆனாலும் எதையும் வெளிக்காட்டவில்லை.. எப்பொழுதும் போல் இருந்தாள்..

திரும்ப புகழேந்தியும், பொன்னியும் சென்று மங்கையிடம் சொல்லிவிட்டு வர, வீட்டில் அப்போது இளங்கோ இருந்தான். அவனிடம் மங்கையும் மன்னவனும் சொல்லியிருப்பர் போல், புகழை கண்டதும்,

“என்னடா பெரிய வண்டி பிடிக்கனும்ல..” என்று கேட்க, “ஆமாண்ணா…” என்று புகழ் சொல்லும்போதே,

“இப்போ உங்களை யார் அழைச்சான்னு நீங்க கிளம்பியிருக்கீங்க??” என்றாள் நித்யா..

“ஏன் யார் கூப்பிடனும்.. இவன் யாரு என் தம்பிதான..” என்று இளங்கோ சொல்ல, “எல்லாம் சரிதான்.. ஒரே வீட்ல எல்லாருக்கு அழைப்பு வைக்கிறாங்க.. உங்களை கூப்பிடலை என்கிட்டே ஒருவார்த்தை சொல்லலை.. அம்மா சத்யா இருக்காங்க அவங்களை கூப்பிடலை..” என்று குற்றபத்திரிக்கை வாசிக்க,

அத்தனை நேரம் வீட்டில் இருந்த ஒரு அமைதியான நிலை மாறி மீண்டும் சலசலக்கத் தொடங்கியது..

உள்ளிருந்து பரஞ்சோதியும் சத்யாவும் வந்திட, அமுதா கூட எட்டிப் பார்த்தாள்..

“டேய் அண்ணா.. நீ வரவும் சொல்லனும்னு இருந்தேன்..” என்று புகழ் சொல்ல, “டேய் அவ சொல்றான்னு நீயும் காரணம் சொல்லிட்டு இருக்க.. எனக்கு ஒண்ணுன்னா நீ செய்ய மாட்டியா??” என்றவன்,

நித்யாவிடம் “நீ வந்தா வா.. நாங்க போறோம்..” என்று சொல்ல, “நான் வரலை எங்கம்மா தங்கச்சி இருக்கப்போ அவங்களை கவனிக்கணும்..” என்றுசொல்ல,

புகழேந்தி பரஞ்சோதியிடம் “அத்தை நீங்களும் சத்யாவும் கண்டிப்பா வரணும்..” என,

“அதுக்கில்ல புகழு.. சொந்த வீடு பால் காய்ச்சுறதுன்னா எல்லாம் கிளம்பி மொத்தமா போகலாம்.. இதுக்கு எதுக்கு இத்தனை கூட்டம் போடணும்..” என்று அழகாய் குவாட்டர் வீட்டிற்கா இத்தனை அலப்பறை என்று சொல்லாது சொல்லி மட்டமாய் பேசிவிட்டார்..

இளங்கோவுக்கு கோவம் கொந்தளிக்க, நித்யாவை முறைத்தவன், “வரணும்னு நினைக்கிறவங்க வந்தா போதும்.. நானும் என் பிள்ளையும் போறோம்…” என,

“பிள்ளையா?? அவன் எதுக்கு அதெல்லாம் முடியாது…” என்று நித்யா அடுத்த சண்டையை ஆரம்பிக்க, “தொலைச்சிடுவேன்…” என்று இளங்கோ எழும்போதே,

மன்னவன் “ம்ம்ச் என்ன இது.. குடும்பமா இது?? இளங்கோ.. புகழ் போய் வண்டி ஏற்பாடு செய்ங்க… ஆகவேண்டிய வேலையை பாருங்க.. சும்மா சண்டை போட நினைச்சுக்கிட்டே.. வர இஷ்டம் இருக்கவங்க வாங்க இல்லையா அமைதியா வீட்ல வேலையை பார்த்துட்டு இருங்க..” என்று கடிய, அடுத்தநொடி அங்கே கப்சிப்..

இத்தனைக்கு அமுதாவை யாரும் வருகிறாயா என்று ஒன்றும் கேட்கவில்லை.. அமுதாவும் வருவாள் என்று யாரும் சொல்லவுமில்லை.

புகழ் பார்த்தான் வா என்பதுபோல் அவளோ இல்லை என்று மறுக்க அதற்குமேல் விட்டுவிட்டான்.. ஆனால் பொன்னி போய் அன்பரசியை கூட அழைத்துவிட்டாள் அமுதா பக்கம் திரும்பவும் இல்லை..

பொன்னியிடம் கேட்டான் அமுதாவை கூப்பிடு என்று.. அவளோ ‘என்னால முடியாது.. நீங்க கூப்பிடுங்க நான் வேணான்னு சொல்லலை..’ என்றுவிட, திரும்ப அமுதாவை அழைத்தான் அவளோ இப்போது வரவில்லை என்றுவிட்டாள்..

ஒருவேளை பொன்னி அழைத்திருந்தாள் வந்திருப்பாளோ என்னவோ..

இளங்கோதான் சொன்னான் ஒரே வண்டி வேண்டாம் என்று.. “டேய் உன்னோடதுல நீ, நான் பொன்னி.. பொன்னியோட அம்மா.. போவோம்.. இன்னொரு கார்ல அப்பா அம்மா அன்பு மாமா பசங்க எல்லாம் வறட்டும்..” என்று..

அவன் ஏன் சொல்கிறான் என்று புரியாமல் இல்லை புகழுக்கும்.. ஒரேதாய் அமர்ந்துகொண்டு போனால் நிச்சயம் ஏதாவது ஒரு பேச்சு வந்து அது சண்டையில் முடிந்தால் அது சங்கடம் தானே.. ஆக அவனும் சரியென்றுகொண்டான்..

கிளம்புகையில் கிஷோர் பொன்னியிடம் “மிஸ் மிஸ்..” என்றுவர, நித்யா அன்றுபோல் குழந்தையை இன்று அவளிடம் இருந்து பிடுங்க முடியாது பார்த்துகொண்டு இருந்தாள்..

பொன்னியோ எந்த பிகுவும் இல்லாது கிஷோரை அவளோடு வைத்துகொள்ள, ஒருவழியாய் அனைவரும் மாலை சென்னை கிளம்ப, வீட்டிலோ நித்யா, பரஞ்சோதி சத்யா அமுதா மட்டும் இருந்தனர்.

குவாட்டர்ஸ் சென்று சேரவே இரவு ஆகிட, வழியிலேயே அனைவரும் ஹோட்டலில் முடித்துக்கொள்ள, வீடு போய் சேர்ந்ததுமே அனைவர்க்கும் உறக்கம் தான் சொக்கியது..

பெரிய வீடுதான்… தனி வீடு… டவுன்ஷிப் போல இருந்தது அந்த ஏரியாவே.. இவனுக்கு கொடுத்தது தனிவீடாய் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடாய் முன்னும் பின்னும் காலி இடம் விட்டு காம்பவுண்ட் சுவர் வைத்து கட்டப்பட்டு இருந்தது.. கொஞ்சம் பழைய கட்டிடம் தான், ஆனால் சுத்தமாய் நன்றாய் இருந்தது..

குவாட்டர்ஸ் என்றதும் அனைவரின் மனதிலும் வேறுவிதமான கற்பனைகள் இருந்ததுபோல ஆனால் இந்த வீட்டினை பார்க்கவும் கொஞ்சம் திருப்தியாய் தெரிய,

“ம்மா ஆபிஸர் க்ரேட் நானு.. சும்மயில்லா.. அதான் இந்த் வீடு..” என்று புகழ் மகராசியிடம் கெத்தாய் சொல்ல, பொன்னி மௌனமாய் சிரித்துக்கொண்டாள்.. 

ஊரில் இருந்து அனுப்பி வைத்திருந்த பொருட்கள் எல்லாம் ஓரளவு அடுக்கியிருக்க, அனைத்தையும் மகராசிதான் பார்த்தார்..

பொன்னிக்கு எப்போதாடா உறங்குவோம் என்றுதான் இருந்தது.. இது அவள் வாழப் போகும் வீடு.. மனதில் ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் அதனை இப்போது வெளிப்படுத்தலாமா என்றுகூட தெரியவில்லை.. மகராசி தேவைக்கு பேசினார்.. அன்பரசி அதுவும் இல்லை..

மங்கை இதனை எல்லாம் கவனித்துவிட்டு “உனக்கும் உன் நாத்துனாக்கு எதுவும் சண்டையா??” என்றுகேட்க,

“அதெல்லாம் இல்லையே…” என்று வேகமாய் மறுத்தாள்..

இவர்களின் இந்த பேச்சு அங்கே எதார்ச்சையாய் உள்ளேவந்த மகராசியின் காதில் விழ, “அப்போ இவ சொல்லலையா??” என்றுதான் பொன்னியை நினைத்தார்.. ஆனாலும் மருமகளிடம் ஒன்றும் கேட்கவில்லை..

மறுநாள் விடியலில் நல்ல நேரத்தில் அங்கே பால் காய்ச்சி, சாமி கும்பிட, முறைப்படி அன்பரசியும் ஜெயபாலும் உப்பு மஞ்சள் வைத்து அதில் மொய் வேறு வைக்க,

“இதெல்லாம் எதுக்கு மாமா??” என்றான் புகழ்..

“அட சும்மா இரு மாப்ள…” என்று ஜெயபால் மறுத்திட, அதேபோல் மங்கையும் அசோக்கும் வேறு மொய் செய்ய மறுக்க முடியாது வாங்கிக்கொண்டனர்..

பொன்னி அவள் வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை என்பதே அனைவர்க்கும் ஒரு அவஸ்தையை கொடுக்க, அசோக் வந்தபோது கொஞ்சம் திணறித்தான் அனைவரும் பேசவேண்டியதாய் இருந்தது.. புகழேந்தி உட்பட..

காரணம் அசோக் எப்போதும் போலவே இருக்க, புகழேந்தியோ “அப்போ இவ என்ன சொன்னா?? எதை சொன்னா? அவசரப்பட்டுட்டேன் அப்படின்னு..” என்று யோசிக்கத் தொடங்கியிருந்தான்..

புது வீட்டில் நிறைய வேலை இருக்கும் என்று நினைத்த பொன்னிக்கு ஒரு வேலையும் இல்லை.. அடுக்காமல் இருந்த பொருட்கள் சிலதை மகராசியும் அன்பரசியுமே எல்லாம் எடுத்து வைத்து அடுக்க, என்னவோ சொல்ல போன பொன்னியை மங்கை தடுத்துவிட்டார்..

“அவங்க செய்றாங்கன்னா விட்டுட்டு.. அப்புறம் நாங்க கிளம்பின அப்புறம் உனக்கு தோதா மாத்தனும்னா மாத்திக்கோ..” என்றுவிட்டார்..

சமையல் கூட அன்பரசிதான் இத்தனை பேருக்கும் செய்தாள்.. பொன்னி மேல்வேளை மட்டும் பார்க்க, மகராசி மகள் மருமகளோடு இருக்க, மதிய விருந்தும் வீட்டோடு முடிந்தது.. அசோக் சிறிது நேரத்தில் கிளம்ப அவனோடு மங்கையும் கிளம்பிவிட்டார்..

“ம்மா என்னம்மா…” என்று பொன்னி கேட்க,

“இருந்துட்டு போலாமே..” என்று புகழ் சொல்ல, “இல்லை வந்தது வந்தாச்சு அப்படியே எங்க வீட்டுக்கும் போயிட்டு வரலாம்னு…” என்ற மங்கை,

“எல்லாரும் கண்டிப்பா அங்க வரணும்..” என்று அசோக் இருக்கும் வீட்டிற்கு அழைப்பு வைக்க, யாராலும் அதனை மறுக்கமுடியவில்லை..

புகழேந்தி அன்ருமட்டுமே விடுப்பு எடுத்திருந்தான்.. சனிக்கிழமையும் அவனுக்கும் வேலைக்கு போகவேண்டும்.. ஆக மறுநாள் அவன் எப்போதும் போல் வேலைக்கு கிளம்பிட, பொன்னிதான் தவித்துப் போனாள்..

“என்ன ஷாக் ஆகி நிக்கிற கண்ணு.. எல்லாரும் மனுசங்கதான்…. நீ உன் வேலையை மட்டும் செய்.. அவ்வளோதான்.. அசோக் வீட்டுக்கு போகணும் சொன்னா நீயே கூட்டிட்டு போ.. நான் ஆபிஸ்ல இருந்து நேரா அங்க வந்துக்கிறேன்..” என்று கிளம்பிவிட்டான்..

“சாப்பாடு கூட எடுக்காம போறான்..” என்று அன்பரசி யாரிடமோ பேசுவதுபோல் பேச,

“அங்க கேண்டீன்ல எடுப்பாரம் மதினி..” என்று இவள் நேரடியாகவே பதில் சொல்ல,

“ஹ்ம்ம் தினம் வெளிய சாப்பிட்டா என்னாகுறது.. நாங்க எல்லாம் போகவும் நீயே சமைச்சு கொடுத்தனுப்பு கண்ணு..” என்று மகராசி சொல்ல, தானாக பொன்னியின் தலை சரியென்று  ஆடியது..

அவளுக்கு இப்போது பெருத்த சந்தேகமே.. ‘என்னடா நடக்குது இங்க…’ என்று.. ஆனால் கேட்க முடியுமா என்ன??

மதியத்திற்கு மேலாக மன்னவன் தான் பொன்னியிடம் “பொன்னி உங்கம்மா சொல்லிட்டு போனாங்க.. அங்க போகணுமே.. புகழ் எதுவும் சொன்னானா?? இதென்ன ஊரு.. சுத்தமா பொழுதே போகலை..” என்று சொல்ல,

பொன்னியோ வந்த சிரிப்பை அடக்கி, “இப்போ கிளம்புறதுன்னா போகலாம் மாமா.. அவர் நேரா அங்க வந்திடுறேன்னு சொல்லிட்டுதான் போனார்..” என,

“ஓ.. சரி அப்போ கிளம்பலாம்..” எனவும் பொன்னி கால் டாக்சி புக் செய்ய, அனைவரும் சிறிது நேரத்தில் கிளம்பி அங்கே அசோக்கின் வீடு செல்ல, அடுத்து நேரம் போனதே தெரியவில்லை..

அன்பரசி பொன்னியிடம் தான் சரியே பேசவில்லை ஆனால் மங்கையிடம் நல்ல முறையிலேயே பேசினாள்.. அதுவே பொன்னிக்கு போதுமானதாய் இருந்தது.. புகழேந்தியும் அங்கே வந்திட, இரவு உணவை அங்கே முடிந்துவிட்டு இரவு மீண்டும் அனைவரும் இங்கே வர, மறுநாள் வீட்டில் சும்மா இருப்பதா என்று புகழ் அனைவரையும் பீச்சிற்கு அழைத்து செல்ல, குழந்தைகள் மட்டுமே குதூகலித்தனர்..

“மகராசியோ இதென்ன காசு தண்ணியா செலவாகுது இங்க..” என்று வாய்விட்டே புலம்ப ஆரம்பித்தவர்,

அன்று மாலை கிளம்புகையில் பொன்னியிடம் “செலவு பண்றதுக்கு எல்லாம் கணக்கு எழுதி வை.. சுக்குசெட்டா வாழனும் கண்ணு.. புகழு அப்படித் தெரியலை.. ஆனா நீ கொஞ்சம் இறுக்கி பிடி..” என்றுசொல்ல,

‘இவர் என்னமாதிரி..’ என்று குழம்பித்தான் போனாள்..

இரண்டே நாளில் அனைவரும் கிளம்பிட, மறுநாளோ புகழேந்தி திரும்ப அலுவலகம் கிளம்பிப்போக, அவசர அவசரமாய் பொன்னிதான் சமைத்து எடுத்து வைத்தாள்..

“உனக்கேன் கண்ணு இவ்வளோ டென்சன்.. நான் அங்க பார்த்துப்பேனே..” என்றவன் சந்தோசமாகவே அவள் எடுத்துவைத்த உணவை எடுத்துசெல்ல, அடுத்து வந்த வார நாட்கள் எல்லாம் இப்படியே போனது..

இரவு அவன் வர எப்படியும் பத்துமணி போல ஆகிடும்.. வந்ததுமே திரும்ப உணவு.. கொஞ்ச நேரம் டிவி.. பின் உறக்கம்.

வேலையின் அசதி அவன் முகத்தில் தெரிய வேறெதுவும் பொன்னி கேட்கமாட்டாள். ஆனால் தினம் தினம் இப்படியே போக, வாய் வார்த்தைக்கு கூட பஞ்சம் என்றாகும் போதுதான் பொன்னியால் தாங்க முடியவில்லை..

சரி ஏதாவது பேசுவான் என்று அவன் முகம் பார்க்க, அவனோ ஒன்று வேலை இருப்பதாய் சொல்லி லேப் டாப்பில் கவனம் செலுத்துவான், இல்லையோ “தூங்கு கண்ணு..” என்று அவளின் மீதே கரங்களைப் போட்டு படுத்து உறங்கியும் விடுவான்.. 

புகழின் இந்த செயலில் பொன்னி குழம்பித்தான் போனாள்..

   

Advertisement