Advertisement

                        தோற்றம் – 19

பொன்னியின் வார்த்தைகள் புகழேந்தியின் மனதை சுருக்கென்று தைத்தாலும், ‘இவள் என்ன சொல்கிறாள்?? எதை சொல்கிறாள்..??’ என்று மனம் யோசித்தாலும், முழுதாய் என்னவென்று தெரியாமல் எதுவும் சொல்லிடக்கூடாது என்று அமைதியாகவே அவளின் முன்னே சென்று நின்றான்.

அசோக்கிடம் பேசிக்கொண்டிருந்தவளோ, திடீரென்று தன் முன்னே புகழேந்தி வந்து நிற்கவும், நொடிப் பொழுது அதிர்ந்தவள், நிஜமாகவே அவன்தானா என்று கண்களை விரித்துப் பார்க்க, இத்தனை நேரம் பேசிக்கொண்டு இருந்தவளின் வாயோ மூடாது இருக்க, வார்த்தைகளும் அதனுள்ளேயே தங்கிட,

அலைப்பேசியின் எதிர்புறம் அசோக்கோ, “ஹலோ ஹலோ..” என்று கத்திக்கொண்டு இருந்தான்..  

பொன்னியோ புகழேந்தியைப் பார்த்து அப்படியே உறைந்திட, அவளின் கண்கள் மட்டும் ‘அப்பாடி வந்துவிட்டாயா..??’ என்றுசொல்வது போல் இருக்க, அவளின் பார்வை அர்த்தம் புரிந்தவனுக்கோ, இறுக்கமான மன நிலையில் வந்தவனுக்கோ இப்போது சிரிப்பு வந்தது..

லேசாய் அவளின் நெற்றியில் தட்டி, பேசு என்பதுபோல் சைகை செய்ய அவளோ “அ.. அசோக்.. நா.. நான் அப்புறம் பேசுறேன்..” என்றவள், அவன் பதிலைக் கூட கேட்காது, அலைபேசியை அணைத்துவிட, இப்போதும் புகழேந்தி அவளை அப்படியே சிரித்தபடி தான் பார்த்துகொண்டு இருந்தான்..

பொன்னிக்கு இன்னமும் நம்ப முடியவில்லை. மதியம் போல் தான் அழைத்து என்னவென்று கேட்டான்.. எப்படியும் வருவான் என்று தெரியும்.. ஆனால் இன்றே வருவான் என்று தெரியாது.. சட்டென்று தொண்டை அடைத்து, கண்கள் கலங்குவதாய் இருக்க, வேகமாய் பார்வையை தழைத்துக் கொண்டாள்..

புகழேந்திக்கு அத்தனை நேரம் இருந்த புன்னகை மறைந்து இப்போது மீண்டும் ஓர் இறுக்கம் வந்து அவனை சூழ்ந்துகொள்ள, வேறெதுவும் கேட்காது, “நாளைக்கு சாயங்காலம் கிளம்பலாம்..” என்றுமட்டும் சொல்ல, அவனது பேச்சில் வேகமாய் நிமிர்ந்து பார்த்தாள்..

“என்ன பாக்குற?? உன்னை கூட்டிட்டு போகத்தான் வந்தேன்…” என,

அவளோ ‘நிஜமா??!!!’ என்றுபார்க்க,

“இன்னிக்கு என்ன வெறும் பார்வை பாசைதானா???” என்று புகழ் கேட்கவும், அவளுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை..

நிஜமாக அப்போது பொன்னிக்கு என்ன பேச என்றும் தெரியவில்லை.. புகழேந்தியின் வருகை நிஜமாகவே அவளை வாயடைக்க செய்திருந்தது..

மனதினுள்ளே ஒரு ஓரத்தில் ‘இனி என்ன நடக்குமோ…’ என்ற எண்ணம் இருந்தாலும், புகழ் வந்தது அவளுக்கு ஒரு நிம்மதியையும் சேர்த்தே தான் கொடுத்தது..    

அவன் சொன்னதற்கும் கேட்டதற்கும் ஒன்றுமே சொல்லாது “சாப்பிடீங்களா??” என்று பொன்னி கேட்க,  அவனோ ‘நான் என்ன சொல்றேன் இவ என்ன கேட்கிறா??’ என்பதுபோல் பார்த்தான்..

“சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்..” என்றாள் திரும்பவும் வார்த்தைகளை அழுத்தி சொல்லி..

புகழேந்தியோ இல்லையென்று தலையை ஆட்ட, “ஹ்ம்ம் பிரெஷ் பண்ணிட்டு வாங்க.. நான் எடுத்து வைக்கிறேன்..” என்று வேகமாய் சமையல் அறை செல்ல கிளம்பியவளை,

“கண்ணு..” என்று பிடித்து நிறுத்தியவன், அவள் திரும்பிப் பார்க்கும் முன்னே அவளை இறுக அணைத்துக்கொண்டான்..

என்ன ஏதென்று பொன்னி எதுவும் கேட்கவில்லை.. அமைத்தியாய் அவன் முதுகில் தன் கரங்களை பதித்து அவளும் நின்றிருக்க,

“இங்க என்ன நடந்ததுன்னு தெரியாது.. யார் தப்பு யார் சரின்னும் எனக்கு தெரியாது.. ஆனா உன்னை இப்படி தனில விட்டுட்டு போயிருக்கக் கூடாதுன்னு மட்டும் தெரியுது..” என்று, பொன்னியின் காதில் புகழ் சொல்ல,

அந்த நேரத்தில் பொன்னிக்கு புகழேந்தியை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.. மனதில் ஒருவித பயமும் இருந்தது வந்து எதுவும் கோபத்தில் கத்துவானோ என்று.. ஆனால் நிச்சயமாய் புகழ் இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை..

கொஞ்சம் அவனின் அணைப்பில் இருந்து விலகி, அவனின் முகம் பார்க்க, “என்ன பாக்குற.. என்ன விசயம் தெரிஞ்சாதானே நான் கோவப் பட முடியும்.. இப்போ உன்னைப் பார்க்கிறப்போ நீ ரொம்ப ஹர்ட் ஆகிருக்கன்னு மட்டும் தெரிஞ்சது அதான்..” என, பொன்னியின் இதழ்களில் மெல்லிசாய் ஒரு புன்னகை.

“ஹ்ம்ம் தெரிஞ்சதுக்கு அப்புறம் கோவமும் படுவீங்க…” என்றவள் “பிரெஷ் ஆகிட்டு வாங்க..” என்றுமட்டும் சொல்லி வெளியே போக, அங்கே சமையலறையிலோ அன்பரசி ரெடியாய் நின்றிருந்தாள் தோசை கல்லை காய வைத்து..

அவள் பக்கத்திலே மகராசி..

பொன்னி அங்கே போனதுமே, “ம்மா தம்பி வந்திட்டான் போல.. அவனுக்கு தோசை சுடுறேன்.. நீ பரிமாறு..” என்று சொல்ல, மகராசியோ பொன்னியைத் தான் பார்த்தார்..

“என்னம்மா நிக்கிற??? தட்டு எடுத்து வை.. புகழ் வந்திடுவான்..” என்று அன்பரசி விரட்ட, மகராசியோ பொன்னியைப் பார்த்துக்கொண்டே தட்டு வைக்க, பொன்னி ஒன்றுமே பேசவில்லை, அப்படியே அங்கேயே நின்றிருந்தாள்..

அன்பரசியும் அவளைப் பார்த்தவள்,  “நித்யா…” என்றழைக்க, நித்யா வரவில்லை பதிலுக்கு சத்யா வந்து, “அக்கா பசங்களை தூங்க வைக்கிறா..” என்றுசொல்ல,

“ஓ.. சரி.. தோசை சுடுறேன்.. எடுத்து கொண்டுபோய் அம்மாக்கிட்ட குடு.. புகழுக்கு பரிமாறட்டும்..” என, பொன்னிக்கு சுல்லென்று வந்தது.

சத்யாவோ பொன்னியை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தபடி செல்ல, பொன்னிக்கு அப்படியே அவளை பிடித்து நிறுத்தி நன்றாய் நாலு கேள்வி கேட்கவேண்டும் போல் இருக்க, இப்போது தான் பபுகழேந்தி வந்திருக்கிறான் வந்ததுமே எதுவும் ஆரம்பிக்கக் கூடாது என்று அமைதியாகவே இருந்தாள்..

ஆனாலும் அன்பரசியின் இந்த செயல் மனதினுள்ளே ஒருவித எரிச்சலை தான் கொடுத்தது.. இவள் புரிந்து செய்கிறாளா புரியாமல் செய்கிறாளா?? அவன் மனைவி நான் குத்து கல் போல் நிற்கிறேன்.. என்னை ஓரங்கட்டி இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் என்று பார்த்துகொண்டு இருக்கும்போதே புகழ் வந்துவிட,

“டேய் எப்போடா வந்த???” என்றபடி இளங்கோவும் அங்கே வந்து அமர்ந்தான்..

“இப்போதாண்ணா…” என்றவன்,

பொன்னியை பார்த்து  “தோசை சுடுறேன்னு சொல்லிட்டு இங்க நிக்கிற??” என்று கேட்க, அவளோ மௌனமாய் சமயலறையைப் பார்த்தாள்..

அன்பரசி சுட்டுக் கொடுக்க, சத்யா வந்து அதை மகராசியிடம் கொடுக்க, அவரோ புகழேந்திக்கு அதை தட்டில் வைக்க, இளங்கோ லேசாய் புகழேந்தியின் தொடையை தட்டினான்..

தன் அண்ணனைப் பார்த்த புகழ், “எல்லாம் சாப்பிட்டாச்சா??!!” என்று பொதுவாய் வினவ,

“ம்ம் ஆச்சு கண்ணு.. நீ வருவன்னு தெரியாது.. தெரிஞ்சிருந்தா அப்போவே சேர்த்து செஞ்சிருப்போம்..” என்றுசொல்ல,

“அப்போ நான் வர்றது தெரியாதா??” என்றான் புகழேந்தி அனைவரையும் ஒரு பார்வை பார்த்து..

அவனின் அத்தை, அத்தை மகள் யாரையும் வா என்றுகூட ஒரு வார்த்தை கேட்கவில்லை.. அவர்களை பார்த்ததுமே புரிந்தது பிரச்னைகளின் மூலகாரணம் யாராய் இருக்கும் என்று..

“என்ன கண்ணு சொல்ற நீ வர்றன்னு சொன்னியா???” என்று மகராசி திரும்ப கேட்கவும்,

“ஹ்ம்ம்..” என்றுமட்டும் சொல்லி சாப்பிட, பொன்னி அப்போதும் தள்ளியே தான் நின்றிருந்தாள்.

இரண்டு வாய் சாப்பிட்டவன், “இப்படி சும்மா நிக்கத்தான் வந்தியா நீ?? ஏன் நீ வாங்கிட்டு வந்து வைக்க வேண்டியது தானே…” என்று அவளை கடிந்து கேட்க, அனைவருமே என்ன பேசுகிறான் என்றுதான் பார்த்தனர்.

புகழின் பேச்சு சத்தம் கேட்டு, மன்னவனும் ஜெயபாலும் உள்ளிருந்து வர, நித்யாவும் பரஞ்சோதியும் கூட வந்துவிட்டனர்.. அமுதாவை தவிர மற்ற அனைவரும் அங்கிருக்க,

புகழேந்தியோ மற்றவர்களை கவனிக்காது “உன்னைத்தான் கேட்கிறேன் பொன்னி.. இப்படி சிலையாட்டம் நிக்கதான் வந்தியா.. போ போய் நீ சூடு..” என்று சற்று சூடாகவே சொல்ல, பொன்னிக்கு இப்போது சிரிப்பதா முறைப்பதா என்று தெரியவில்லை..

ஆனால் என்னவோ ஒன்று மனதிற்குள் கொஞ்சம் இதமாக இருந்தது.. புகழேந்தியின் பேச்சு உள்ளே அன்பரசிக்கும் கேட்டது போல, கையில் இருந்த கரண்டியை நொங்கென்று வைத்துவிட்டு வெளியில் வர, அடுத்து பொன்னி உள்ளே போனாள்..

“ஏன் புகழு நான் சுட்டா நீ சாப்பிட மாட்டியா??” என்றபடி வந்தவளை, “நான் எப்போ அப்படி சொன்னேன்..” என்று பார்த்தான்..

“பின்ன நான்தான் தோசை சுடுறேன்ல..” எனும்போதே,

“இப்போ என்ன பிரச்னைக்கா உனக்கு?? நீ தோசை சுடுறதா இல்லை நான் நிம்மதியா சாப்பிடுறதா?? அப்போ ஊருக்கு போறவன் இன்னித்குதான் வந்திருக்கேன்.. ஒரு வாய் நிம்மதியா சாப்பிட விடமாட்டீங்களா…??” என்றவன் எழப் போக,

“டேய்…” என்று இளங்கோ அவனை நிறுத்த,  

மகராசியோ “கண்ணு நீ சாப்பிடு..” என்றவர், “அன்பு கொஞ்சநேரம் சும்மாயிரு…” என்று மகளை அதட்ட, அன்பரசி முணுமுணுத்துக்கொண்டே நின்றாள்.

மன்னவனோ “அவன் ஒருத்தன் சாப்பிடுறதுக்கு இத்தனை பேரா. எல்லாம் போய் தூங்குங்க…” என்றுசொல்ல, யாருமே அசையவில்லை..

பொன்னி தோசையை சுட, சத்யா அதை வாங்கிவரவென்று அங்கேயே நிற்க, பொன்னியோ அவளை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.. சுட்டு எடுத்து தட்டில் வைத்தவள், அவளே எடுத்துக்கொண்டு வந்து மகராசியின் அருகே வைத்துவிட்டு திரும்ப உள்ளே போய்விட,  ‘என்னடா இது..’ என்றுதான் பார்த்தார் மகராசி..

“ம்மா தாயே மகராசி என்ன… எடுத்து என் தட்டுல வை.. அதுக்குதானே இங்க உக்காந்திருக்க.. அதைவிட்டு இப்படி பார்த்தா…” என்று புகழ் சொல்லவும்,

இவன் என்ன பேசுகிறான், எந்த அர்த்தத்தில் பேசுகிறான் என்பது அங்கே யாருக்கும் புரியவில்லை. எல்லாம் தெரிந்து பேசுகிறானா?? இல்லை பொன்னிக்கு ஏதுவாய் பேசுகிறானா?? யாரையும் கடிந்து பேசுகிறானா?? என்று யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை..

ஆகமொத்தம் எல்லாருமே அவன் உண்டு முடிக்கும் வரைக்கும் அமைதியாய் இருக்க, பாத்திரங்களை ஒழித்து போட்டு கழுவி வைத்துவிட்டு பொன்னி அறைக்குள் சென்றுவிட்டாள்..

நிச்சயம் அது இதென்று யாராவது பேசுவர்.. என்னவோ செய்துகொள்ளட்டும் என்றுதான் அவளுக்கு இப்போது தோன்றியது.. யாரும் அவள் சொல்வதை புரிந்துகொள்ள மாட்டேன் என்கையில் அவளும் தான் என்ன செய்திட முடியும்..

புகழேந்தியை யார் வர சொன்னார்கள் என்று தெரியாது ஆனால் வர சொன்னவர்கள் நிச்சயம் பேச்சைத் தொடங்குவர் என்று தெரியும்.. ஆக வெறுமெனே அறையில் படுத்திருந்தாலும், அவளின் கவனமெல்லாம் வெளியில் தான் இருந்தது..

“என்னய்யா புகழு.. எல்லாரும் இங்க இருக்கோம் உன் பொண்டாட்டி மட்டும் யாருக்கு வந்த விருந்தோன்னு உள்ள போறா…??” என்று ஆரம்பித்தது வேறு யாராய் இருக்கும், பரஞ்சோதிதான்.

“அட அத்தை நீங்க எப்போ வந்தீங்க??” என்று அப்போது தான் அவரைப் பார்ப்பவனைப் போல புகழ் பார்க்க,

பரஞ்சோதியோ “என்ன மருமகனே இப்படி கேட்குற?? நான் வந்து ரெண்டு மூணு நாளாச்சு..” என்றவர் திரும்பவும் “பொன்னி..” என்று எதையோ சொல்ல வர,

“அப்புறம் அத்தை எப்போ கிளம்புறீங்க??!!” என்று அடுத்த கேள்வியைக் கேட்க, அறையில் படுத்திருந்த பொன்னிக்கோ பொசுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது..

இளங்கோ கூட வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுபோனான்.. மகராசியோ முகத்தினில் ஒன்றையும் காட்டாது வைத்திருக்க பெரும்பாடு பட, பரஞ்சோதியின் உணர்வுகளை நாம் சொல்லவா வேண்டும்..

முகத்தை ‘ஞே’ என்றுவைத்து பார்க்க, “என்னத்தை விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குத்தானே.. தெரியாதா..” என்று புகழ் சொல்ல,

“அப்போ.. அப்போ எங்கம்மா என்ன விருந்தாளியா??” என்று வேகமாய் வந்தது நித்யா தான்.

இளங்கோ அவளை முறைக்க, “நானும் பாக்குறேன்.. கொஞ்சம் கூட எங்கம்மாக்கும் என் தங்கச்சிக்கும் இங்க மரியாதையே இல்லை.. அவ என்னடான்னா சத்யாவை அடிக்க போறா.. நீ என்னடான்னா எங்கம்மாவ எப்போ போறன்னு கேட்கிற… புகழு இதெல்லாம் சரியே இல்லை..” என,

புகழேந்தி தன் அண்ணனின் முகத்தைப் பார்த்தவன், “அத்தை நான் உங்கக்கிட்ட தானே பேசினேன்… ஏன் உங்கக்கிட்ட பேச எனக்கு உரிமை இல்லையா??” என்றதும்,

‘அய்யோடா…’ என்று அனைவரின் பார்வையும் மாறிவிட்டது..  

மன்னவனோ “இதுக்கு தான் அப்போவே போய் எல்லாம் தூங்குங்கன்னு சொன்னேன்.. ஒரு பேச்சு பேசினா அதை அதோட விடனும்.. சும்மா அதையே பிடிச்சு எல்லாம் பேசி பேசி பெருசு பண்ண கூடாது..” என,

“அப்போ நான் என்ன விருந்தாளியாண்ணே.. எனக்கு இந்த வீட்ல உரிமை இல்லையா??” என்று பரஞ்சோதி அடுத்த பஞ்சாயத்தை தொடங்கிவிட்டார்..

இளங்கோவோ “ஏன்டா…” என்பதுபோல் புகழைப் பார்க்க,

அவனோ, “அத்தை உங்களை அப்படி சொல்லலை.. வந்து ரெண்டு மூணு நாள் ஆச்சுன்னு சொன்னீங்க இல்லையா அதுனால அப்படி சொன்னேன்..” என்றவன்,

“நாளைக்கு நான் பொன்னியை கூட்டிட்டு சென்னை போறேன்…” என்று சொல்ல,

‘என்னது…!!!’ என்றுதான் எல்லாரும் அதிர்ந்து பார்த்தனர்..

நடந்த சண்டைகளின் காரணமாய்தான் வந்திருக்கிறான் என்று நினைக்க, அவனோ மனைவியை அழைத்துச் செல்கிறேன் என்று கூறியதும் ஒருசிலருக்கு கொஞ்சம் சப்பென்று தான் போனது..

ஆனால் அன்பரசியோ “புகழ் நான் என்ன சொல்லி உன்னை வர சொன்னேன்…” என்றுசொல்ல,

“க்கா நீ சொன்னது எல்லாம் இருக்கட்டும்.. நாளைக்கு நான் அவளைக் கூட்டிட்டு ஊருக்கு போறேன்.. ஏன் இதுல என்ன பிரச்சனை உங்களுக்கு??” என்று வினவ,

“அவ.. அவ என்ன பேசினா தெரியுமா…” என்று நித்யா சொல்லும் போதே, போதும் என்று கையை உயர்த்தியவன்,

“காலையில இருந்து சரியான வேலை.. இங்க இருந்து போன் வரவுமே என்னவோன்னு கிளம்பி வந்தேன்.. இப்போ எந்த பேச்சும் வேணாம்.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்…” என்றவன் அமுதா அங்கில்லை என்பதை கவனித்துக்கொண்டான்..

ஓரளவிற்கு விஷயம் என்னவென்று அவனால் யூகிக்க முடிந்தது..

“ஏன் கண்ணு நாளைக்கு எந்நேரம் கிளம்பனும்…” என்று மகராசி கேட்க,

“சாயங்காலமா கிளம்பனும் ம்மா…” என்றவன் “காலைல பேசிக்கலாம்..” என்றுவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்..

புகழ் வரும் அரவம் உணர்ந்து பொன்னி உறங்குவதாய் காட்டிக்கொள்ள, அவளைப் பார்த்தபடி வந்தவன், அடுத்து எதுவுமே கேளாது அமைதியாய் அவனும் அருகே படுத்துக்கொள்ள, பொன்னிக்கு தான் திக் திக் என்றது..

ஏதாவது வாய் திறந்து கேட்டால் பரவாயில்லை.. ஒன்றுமே கேட்காது இப்படி இருந்தால் என்ன செய்ய என்று மனம் அடித்துக்கொள்ள, கொஞ்ச நேரம் பொறுத்தவள், பின்

“என்னங்க…” என்றழைக்க,

அவளின் மேலே கரங்களைப் போட்டவன், “உனக்கும் தான் சொல்றேன்.. தூங்கு.. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்..” என்றுசொல்லி, அவளை ஓட்டிப் படுத்தவன் அடுத்து உறங்கியும் போனான்..

ஆனால் பொன்னிக்கு வெகு நேரம் உறக்கமே வரவில்லை.. திரும்ப திரும்ப நடந்தவைகளையே நினைத்துப் பார்த்தாள்.. ஒருவேளை தான் எதுவும் அதிகப்படியாய் பேசினோமா என்றுகூட நினைத்துப் பார்த்தாள்..

ஆனால் மற்றவர்கள் பேசியதற்கு தான் பதில் சொன்னோமே தவிர அவளாய் எதுவும் அதிகப்படியாய் பேசிடவில்லை என்பது அவளுக்குக் நன்கு புரிந்த பின்னே தான் பொன்னிக்கு கொஞ்சம் உறக்கமே வந்தது..

விடியல் எப்போதும் போல் அழகாய் அதன் வேலையை செய்ய, அங்கே வீட்டிலோ அப்படியொரு அமைதி நிலவியது.. ஆளாளுக்கு ஒவ்வொரு வேலைகள் செய்துகொண்டு இருந்தாலும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி தான் இருந்தனரே தவிர எதும் யாரும் பேசிக்கொள்ளவில்லை..

புகழ் வரவும் பொன்னியை பற்றி சொல்லவேண்டும், அவன் நன்றாய் ஏதாவது சுருக்கென்று கேட்பான் என்றே அன்பரசி நித்யா பரஞ்சோதி எல்லாம் நினைத்திருக்க, அவனோ சாவகாசமாய் உண்டு உறங்கி என்று இருக்க, சரியான நேரத்திற்காக தான் காத்துகொண்டு இருந்தனர் எல்லாம்..

அங்கே அறையிலோ புகழ், “கண்ணு ட்ரெஸ் எல்லாம் பேக்கிங்ல தானே  இருக்கு??” என்று கேட்க,

“ம்ம் அப்போவே பேக் பண்ணித்தான் வச்சேன்…” என்றவள் அவன் முகம் பார்க்க,

“என்ன???!!” என்றான் அவனும்..

“இல்ல.. அம்.. அம்மாக்கிட்ட சொல்லிட்டு வரணும்.. ஊருக்கு போறோம்னு..” என்றுசொல்ல,

“அதுக்கென்ன தாராளமா சொல்லிட்டு வரலாம்.. போ போய் அம்மாக்கிட்ட அங்க போறோம்னு சொல்லிட்டு வா..” என, பொன்னி அப்படியே தயங்கி நின்றுவிட்டாள்..

“என்ன கண்ணு??!!!”

“இல்ல.. அது.. அத்தை என்கிட்ட பேசலை..”

“ஹ்ம்ம் அதுனால நீயும் அப்படியே இருக்கனுமா.. நீ சொன்னதுல நீ பேசினதுல தப்பில்லன்னு நீ நினைச்சா நீ எப்பவும் போல இரு..” என்றுமட்டும் புகழ் சொல்ல, அவனை வேகமாய் ஒரு பார்வை பார்த்தவள்,

“சரி நானே சொல்லிக்கிறேன்…” என்றுவிட்டு மகராசியைத் தேடித் போக, அவரோ அமுதாவின் அறையில் இருந்தார்..

அறையினுள்ளே செல்லாமல் பொன்னி வெளியில் நின்றே “அத்தை…” என்றழைக்க, மகராசிக்கு நேற்றிலிருந்து அவளும் பேசாமல் இருந்தவள், இப்போது வந்து அழைக்கவும் கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தாலும்,

“என்ன…” என்று கேட்காது பார்வையில் பார்க்க, “அம்மாவீட்ல போய் சொல்லிட்டு வர்றோம்.. ஊருக்கு போறோம்னு..” என்றுசொல்ல,

“ம்ம்…” என்று மட்டும் சொல்லி தலையை ஆட்டினார்..

மகராசிக்கு பொன்னியின் மீது எந்த கோபமும் இல்லை.. மகளுக்கு ஒரு நல்வாழ்வு அமைந்திட வேண்டும் என்ற அவரின் எண்ணத்தில் பொன்னி கல் எரிந்தது, அமுதாவை அசோக்கிற்கு முடிக்க வேண்டாம் என்றுவிட்டாளே என்ற கவலைதான்..

அப்படியென்ன அமுதா குறைச்சலாய் போய்விட்டாள்.. எதோ படிக்கிற காலத்தில் கொஞ்சம் மனம் அப்படி இப்படி என்று தடுமாறியது நிஜம்தான்.. ஆனால் அதற்காக அவளை குண குறைவு என்று நினைத்திட முடியாதே.. ஒருவேளை பொன்னி அப்படி நினைத்து தான் அமுதாவை வேண்டாம் என்றாளோ என்ற எண்ணம்தான் அவருக்கு..

மற்றபடி பரஞ்சோதியும் சத்யாவும் அவர்களுக்கு ஏற்றுக்கொண்டு நித்யாவும் பேசுவது எல்லாம் அதிகப்படி என்று அவருக்குத் தெரிந்தே இருந்தது.

சிறிது நேரத்தில் பொன்னியும் புகழேந்தியும், மங்கையை காண செல்ல, அங்கே வீடு வரைக்கும் சென்றவன், “நீ போ கண்ணு.. பேசிட்டு கிளம்புறப்போ கால் பண்ணு.. நான் வந்து கூட்டிட்டு போறேன்..” என்றுசொல்ல,

பொன்னியோ “என்னதிது.. நீங்க வரலையா???!!!” என்றாள்..

“இல்ல நீ போ.. நான் வரும்போது அத்தைக்கிட்ட சொல்லிக்கிறேன்..” என்றவன் “கால் பண்ணு..” என்றுமட்டும் சொல்லிவிட்டு நடக்க, பொன்னி அங்கே வாசலில் நின்று அப்படியே தான் பார்த்துகொண்டு இருந்தாள்..

கொஞ்ச தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்க, அவள் அப்படியே நிற்பது கண்டு “உள்ள போ…” என்று சைகை செய்ய, அவளோ மாட்டேன் என்று தலையை ஆட்ட,

“நீ போற…” என்பதுபோல் கையை ஆட்டியவன், அடுத்து வேகமாய் நடந்துவிட்டான்..

அங்கே வீடு போனாலோ… இவன் வரவேண்டும் என்பதற்காகவே அனைவரும் காத்திருப்பதாய் இருந்தது.. உள்ளே போய் புகழேந்தி ஹாலில் அமர்ந்ததுமே,

“புகழு நீ பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லை.. உன்னை எதுக்கு கூப்பிட்டா நீ வந்து சாவகாசமா சாப்பிடுற.. தூங்குற.. இப்போ ஹாயா ஊருக்கு கிளம்பி நிக்கிற.. என்ன புகழ் இதெல்லாம்..” என்று அன்பரசி ஆரம்பிக்க,

“ஏன் நீங்க யாருமே சாப்பிடலையா?? இல்ல தூங்கலையா???” என்றான் பட்டென்று..

“டேய் மாப்பிள்ள அதில்லடா..” என்று ஜெயபால் என்னவோ சொல்ல வர,

“என்ன மாமா.. எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா சொல்லுங்க..” என, இளங்கோதான் அனைவருக்கும் முந்திக்கொண்டு “நான் சொல்றேன்டா..” என்று நடந்தவைகளை அப்படியே சொல்ல,

இதுதான் நடந்திருக்கும் என்று முன்னமே யூகித்திருந்தவன், இப்போது தலையை மட்டும் ஆட்டி மௌனமாய் அமர்ந்திருக்க,

“என்ன மருமகனே இவ்வளோ நடந்திருக்கு இப்படி ஒண்ணுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்.. என்ன இருந்தாலும் அமுதா நம்மவீட்டு பொண்ணு.. அவளை எந்த இடத்துலயும் விட்டு கொடுக்க கூடாதுல்ல..” என்று பரஞ்சோதி கேட்டதும்,

“அப்போ பொன்னி யாரு???” என்றான் அவரை நேருக்கு நேராய் பார்த்து..

புகழேந்தியின் இந்த கேள்வியில் அனைவருமே திகைத்துப் பார்க்க, “என்ன பாக்குறீங்க… பொன்னி யாரு..?? இப்போ அவளும் இந்த வீட்டு பொண்ணுதானே…” என,

மன்னவன் “புகழ்.. இப்போ எதுவுமே பேசவேண்டாம்.. பேச பேச எல்லாருக்கும் தான் கஷ்டம்.. நல்லபடியா ஊருக்கு கிளம்புற வழியைப் பாருங்க..” என்றுசொல்ல,

“ப்பா பின்ன எதுக்கு என்னை வர சொல்லணும்..” என்றான் காட்டமாய்.

“புகழு இதெல்லாம் பேசுக்கு லட்சணம் இல்லை.. வந்து உன் பொண்டாட்டிய என்ன ஏதுன்னு கேட்டு ஏன் இப்படி நடந்துக்கிறான்னு கண்டிக்கிறதை விட்டு இங்க எங்க எல்லார்கூடவும் மல்லுக்கு நிக்கிற…” என்று நித்யா சொல்ல,

“மதினி…” என்று பார்த்தவன்,

“பொன்னி பேசினது சரின்னு நான் சொல்லலை.. ஆனா நீங்க எல்லாரும் நடந்துக்கிட்ட விதமும் சரி கிடையாது..” என்றவன்,

“முதல்ல அமுதா, அசோக்  கல்யாண விசயம் பேசுறதா இருந்தா, நேரா போய் அவங்க அம்மாக்கிட்ட பேசிருக்கணும்.. அதைவிட்டு அவக்கிட்ட கேட்டா அவ மனசுல என்ன இருக்கோ அதை தான் சொல்வா…” என்றான் தீர்க்கமாய்..

“அட அட என்ன பேச்சு.. இங்க ஒருத்தி நம்ம வீட்டு பொண்ணையே மட்டமா நினைச்சு வேணாம்னு சொல்வாளாம்.. அவளுக்கு இவன் சப்பை காட்டு கட்டுறான்..” என்று அன்பரசி சொல்ல,

“போதும்க்கா நிறுத்து..” என்று புகழ் கத்திவிட்டான்..

“என்ன பேசுற நீ… இந்த கல்யாணம் தோது வராதுன்னு பொன்னி சொன்னதுக்கும், அமுதாவை மட்டமா நினைக்கிறான்னு நீ சொல்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.. அப்படி பார்த்தா நீ பேசாத வார்த்தைகளா?? சொல்லு..

அவளாவது படிக்க அனுப்புங்கன்னு தான் சொன்னா.. நீயோ எங்க அம்மு வீட்டை விட்டு வெளிய போனா கூட எங்கயாவது ஓடிப்போய்டுவா அப்படிங்கிறது போல தான் பேசுற…” என்று புகழ் கேட்டுவிட,

நடப்வைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த அமுதாவின் மனம் மிக மிக நொந்து போனது.. மௌனமாய் எழுந்து அவளின் அறைக்கே சென்றிவிட, அதை பார்த்த புகழேந்தியோ “ம்ம்ச்…” என்று தலையில் அடித்துக்கொண்டான்.

மன்னவனுக்கும் மகராசிக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. கடைசியில் தங்களின் பிள்ளைகளுக்கு நடுவே பிரச்சனை ஆகிவிடுமோ என்று இருந்தது அவர்களுக்கு.. இத்தனை ஆண்டுகளாய் ஒற்றுமையாய் உறவாய் இருந்த குடும்பம் இன்று ஆளுக்கு ஒருவராய் முகம் தூக்கி பேச என்றொரு நிலை வருமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை..

“என்னடா மாப்பிள்ளை நீயும் புரிஞ்சுக்காம பேசுற..” என்று ஜெயபால் சொல்லவும்,

“வேற என்ன மாமா செய்யணும் நானு.. இல்ல வேற என்ன செய்யணும்.. என் தங்கச்சிய நீ உன் அண்ணனுக்கு வேணாம்னு சொன்ன.. அதுனால நீ எனக்கு வேணாம்னு நான் அவளை திருப்பி அணுப்பனுமா??? இல்லை அதைதான் எல்லாம் எதிர்பார்க்கிறீங்களா??” என்று புகழேந்தியின் வார்த்தைகள் சூடாகவே வெளி வர,

“டேய் கண்ணு புகழு…” என்று மகராசி வேகமாய் பதறி வந்து அவனின் கரங்களை பற்றிக்கொள்ள, அன்பரசியோ அப்படியே வாயடைத்து போனாள்..

நித்யாவும் பரஞ்சோதியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள, பரஞ்சோதி நீ ஒன்றும் பேசாதே என்று மகளுக்கு சைகை செய்ய, அவளும் சரியென்று தலையை ஆட்டிக்கொண்டாள்..

“சொல்லுக்கா அதுதான் எல்லாம் எதிர்பார்க்கிறீங்களா??” என்றவன்,

“நல்லா கேட்டுக்கோங்க.. நான் பொன்னிக்கு சப்போர்ட் பண்ணி பேசலை.. அதே நேரம் நீங்க எல்லாரும் பேசினதும் சரியில்லை.. கல்யாண விசயம் பேசணும்னா நேரா அவங்க வீட்ல போய் பேசிருக்கணும்..

இல்லையா நான் வரவும் என்கிட்டே சொல்லி பேச சொல்லிருக்கணும்.. ஏன் நடந்தது எல்லாம் மறந்துபோச்சா..?? எங்க கல்யாணம் முடிஞ்சு இன்னும் முழுசா ஒருமாசம் கூட ஆகலை.. அதுக்குள்ள இப்போ இன்னொரு கல்யாணத்துக்கு என்ன அவசரம்… நான் தெரியாமத்தான் கேட்கிறேன் ஏன் அசோக்கை தவிர ஊர் உலகத்துல வேற மாப்பிள்ளை இல்லையா??” என்றுகேட்க,

மகராசி “அதுக்கில்ல கண்ணு… ஒன்னுக்குள்ள ஒண்ணா…” என்று சொல்ல வரவும்,

“போதும்மா.. இதுதான் நடக்கனும்னு இருந்தா நடந்து தான் தீரும்.. அதுக்காக யாரும் யாரையும் குத்தம் சொல்ல முடியாது.. முதல்ல இந்த விஷயம் இப்போ பேசினதே தப்பு.. இங்க நான் உட்பட நீங்க எல்லாருமே அவளுக்கு புதுசு… எனக்கும் அப்படித்தான்..

பிடிச்சது.. பிடிவாதமா கல்யாணம் பண்ணேன்.. அதுமட்டும் தான்.. நான் கேட்டேன்னு மட்டும் தான் அவ வேற எதையுமே யோசிக்காம சரின்னு சொன்னா.. என்னை அவளுக்கு எந்தளவு பிடிக்கும்னு கூட எனக்கு இன்னமும் தெரியாது.. இப்படி எங்க வாழ்க்கையே பிள்ளையார் சுழி கூட பார்க்காம இருக்கிற நேரத்துல இப்போ இன்னொரு விஷயம் பேசி, உங்களோட சேர்த்து என்னையும் பிடிக்காம பண்ணிடுவீங்க போல..” என்று சொல்ல, யாருமே வாய் திறக்கவில்லை..

புகழேந்தி மட்டும் தான் பேசினான்.. என்னை பேச என்றுதானே அழைத்தீர்கள் அப்போ நான் பேசுவதை கேளுங்கள் என்ற ரீதியில்..

நித்யவோ “ஹ்ம்ம் அவளை கேளுன்னு சொன்னா. இங்க நம்மளை கத்த வேண்டியது…” என்று முணுமுணுக்க,

“மதினி.. நான் சத்தமா எல்லாருக்கும் கேட்கிற மாதிரிதானே பேசுறேன்.. நீங்களும் அப்படியே பேசலாமே….” என,

“யப்பா..!!! நான் ஒண்ணுமே சொல்லலை.. நீங்க என்னவோ பண்ணுங்க.. கடைசில என் தலைதான் உருளும்..” என்றவள், “ம்மா வா உள்ள போவோம்…” என்று பரஞ்சோதியையும் அழைத்துக்கொண்டு,

சத்யாவை பார்த்து “நீயும் வா..” என்றுசொல்லி உள்ளே சென்றுவிட்டாள்..

இப்போது அன்பரசி மட்டுமே முகத்தை தூக்கி நிற்க, “க்கா உனக்கு என்ன ஆச்சு?? என் கல்யாணம் நடக்கனும்னு நீ அப்போ அவ்வளோ பேசின இப்போ நீயே இப்படி பேசுற??” என்று புகழ் கேட்க,

“என் மனசுக்கு தப்புன்னு பட்டா நான் கேட்கத்தான் செய்வேன் புகழ்.. பொன்னி வேண்டாம்னு மறுத்தது நம்ம அமுதாவை.. அவ உன்னோட தங்கச்சி அதை மனசுல வச்சுக்கோ..” என,

“சரி இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்.. பொன்னியை நான் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லித்தான் அங்க விட்டிட்டு வந்தேன்.. இப்போ அப்படியே போகாம இருந்திடவா?? சொல்லுக்கா.. இருந்திடவா.. கண்டிப்பா நான் போகாம அவளும் இங்க வரமாட்டா…” என்று சொன்னவனின் பார்வையில் இதை செய்யவா??? என்ற கேள்வி இருந்தது..

                   

Advertisement