Advertisement

Tamil Novel

தோற்றம் -18

அன்பரசியின் வார்த்தைகள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், யாராலும் அதை எதிர்த்தோ இல்லை பதிலாகவோ ஒன்றும் சொல்ல முடியவில்லை.. காரணம் அன்பரசியின் பேச்சை விட பொன்னி மறுத்து பேசியதுதான் அங்கே பெரிதாய் பட்டது.  

அதுவும் மன்னவனே கேட்ட பிறகு.. அதிலும் அமுதாவின் கண் முன்னேயே பொன்னி மறுக்கும் பொழுது.. அவள் பேச்சுதானே அங்கே பிரச்னைக்கான அடித்தளமாகும்..

அன்பரசியின் இந்த பேச்சுக்கு பொன்னி என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும்போதே,

பரஞ்சோதி “ஹ்ம்ம் இதுக்குதான் அண்ணே அன்னிக்கே சொன்னேன் அன்னியத்துல முடிக்கவேணாம்னு.. நம்ம முன்னாடி பேசி வச்சது போலவே சத்யாவை புகழுக்கு முடிப்போம்னு சொன்னேனே.. யார் கேட்டா???

விருப்பமில்லாத வாழ்க்கையை திணிக்கக் கூடாது, அது இதுன்னு சொல்லி என் மனசையும் என் பொண்ணு மனசையும் எல்லாம் நோகடிச்சீங்க.. இப்போ பார்த்தியா.. அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம பொண்ணு வாழ்க்கைக்கே வேட்டு வைக்கிறா…” என்று சொல்ல,

இது பொன்னிக்கு அடுத்ததாய் ஒரு அதிர்ச்சி.. என்ன சத்யாவை புகழுக்கு பேசி வைத்திருந்தனரா?? என்று.. இவ்விசயம் புகழேந்திக்கு தெரியுமா தெரியாதா என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது.. ஆனால் என்னவோ தெரியவில்லை இப்போது இந்த பேச்சு மேலும் அவளை பலவீனப் படுத்தியது.

ஏதோ நித்யாவை இங்க கொடுத்தது போல, பரஞ்சோதி  சத்யாவையும் இங்கே கொடுக்க நினைத்திருப்பார் போல என்றே நினைத்தாள் பொன்னி. ஆனால் இவர்கள் பேசி வைத்திருந்தது எல்லாம் அவளுக்குத் தெரியாது.

தெரிந்திருந்தால் கண்டிப்பாய் இந்த திருமணத்திற்கு பொன்னி சரி என்றே சொல்லியிருக்க மாட்டாள்.. மன்னவனும் மகராசியும் வந்து பெண் கேட்டபோது கூட யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை..

‘புகழுக்கு பிடிச்சிருக்கு.. எங்களுக்கும் இதுல சம்மதம்.. நீங்க என்ன சொல்றீங்க??’ என்றுதான் கேட்டனர்..

ஆக பொன்னிக்கு பரஞ்சோதி சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாய் இருக்க,  அன்பரசியின் பேச்சுக்கு பதில் சொல்வதா?? இல்லை பரஞ்சோதியின் பேச்சை ஜீரனிப்பதா எதுவும் விளங்கவில்லை அவளுக்கு..

“என்ன பொன்னி.. அமைதியா இருக்க?? பதில் சொல்ல முடியலையோ… நான்கூட என்னவோ அமுதா மேல இருக்க பாசத்துல அவளை படிக்கவைக்கணும்னு சொல்ற போலன்னு நினைச்சேன்.. ஆனா நிஜமாவே உனக்கு அமுதா மேல அன்பிருந்தா நீ என்ன நினைச்சிருக்கணும்.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நினைச்சிருக்கணும்..”  என்று அன்பரசி பேச,

“நான் நிஜமா அப்படியெல்லாம் நினைக்கல மதினி..” என்றாள் மெதுவாக.

“பின்ன பின்ன என்ன நினைச்சம்மா நீ?? பெரியவங்க கேட்கிறாங்களே சந்தோசமா எங்கம்மா கிட்ட பேசுறேன்னு சொல்றதை விட்டு.. இது ஒத்து வரதுன்னு சொன்னா என்னர்த்தம்?? பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறது எல்லாம் தோது படாதுன்னு சொன்னா எப்படி??” என்று பரஞ்சோதி கேட்க,

“இங்க பாருங்கம்மா.. என்கிட்ட ஒருவிசயம் கேட்டா அதுக்கு என் மனசுல என்ன பதில் இருக்கோ அதைதான் சொல்ல முடியும்.. ஏற்கனவே இங்க நடந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கே தெரியும்…. இன்னும் கூட எங்கண்ணன் இங்க வந்து போகலை.. அதுவும் உங்களுக்குத் தெரியும்..

எனக்கு ஒரு பிரச்னைன்னா அசோக் எப்படி உதவி செஞ்சிருப்பானோ அதே மனநிலைல தான் அமுதாக்கும் அன்னிக்கு பண்ணினான்.. அதை தாண்டி வேறெதுவும் இல்லை.. அமுதாக்கு படிக்கணும்னு ஆசை இருக்கு.. இதெல்லாம் மனசுல வச்சுதான் நான் சொன்னேன்..” என, கொஞ்ச நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர்..

ஜெயபாலோ “அமுதா உனக்கு மேல படிக்கனுமா??” என்றுகேட்க,

“ஏன் மாமா.. நடந்தது எல்லாம் போதாதா.. நம்ம வீட்டுக்கு வந்த மருமகளே இவ லட்சணம் தெரிஞ்சு அவ அண்ணனுக்கு வேணாம்னு சொல்றா.. இதுல மேற்கொண்டு படிக்க வேற அனுப்பி.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்..” என்று அன்பரசி சொல்லவும், அமுதாவிற்கு அத்தனை பேரின் முன்னிலும் அசிங்கமாய் போய்விட, அழுதபடி எழுந்து உள்ளே ஓடிவிட்டாள்..

அன்பரசி அவ்வப்போது இப்படி பேசுவது உண்டுதான்.. ஆனாலும் இன்று வார்த்தைகள் சற்று அதிகப்படியாகி போனது.. அமுதா போனதையே பார்த்த பொன்னியோ,

“ஏன் மதினி.. நான் அப்படியெல்லாம் அவளை நினைக்கல..” என்று சொல்லும்போதே, 

 “நீ நினைக்கலம்மா.. நீ நினைக்கல.. அப்படி நினைச்சிருந்தா தான்.. இந்நேரம் மாமா கேட்டதுக்கு சரின்னு சொல்லிருக்கனுமே…” என்று அடுத்து அடி எடுத்து வைத்தது நித்யா..

நித்யா பேசவுமே இளங்கோ அவளை முறைத்தவன் “இங்க பாருங்க முதல்ல இப்படி ஆளாளுக்கு பேசுறதை விடுங்க..” என்று அதட்ட,

“ஏன்?? ஏன் பேசக் கூடாது.. அப்போ இவளுக்கு மட்டும்தான் இங்க பேச உரிமை இருக்கா?? எங்களுக்கு இல்லையா??” என்றாள் பொன்னியைக் காட்டி..

மன்னவனுக்கோ இப்போது இந்த பேச்சை ஆரம்பித்ததே தவறோ என்று தோன்றியது.. லட்சம் இருந்தாலும் பொன்னி சிறுபெண். அதிலும் இப்போது தான் திருமணம் முடித்து வந்திருக்கிறாள்.. இதை நேராய் மங்கையிடம் தானே பேசியிருக்க வேண்டும். அதைவிட்டு இவளிடம் கேட்டு, இப்போது இத்தனை பேச்சுக்கள் என்று கலங்கிப்  போய்தான் மகராசியைப் பார்த்தார்.

மகராசியோ, நெற்றியை சுருக்கி அனைவரையும் பார்த்திருக்க, “அக்கா என்னக்கா நீ இப்படி அமைதியா இருக்க?? எதாவது பேசுக்கா??” என்று ஜெயபால் உலுக்க, பரஞ்சோதிக்கும் சத்யாவிற்கும் இதெல்லாம் நல்லதொரு வேடிக்கையாய் போனது..

“நான் என்ன பேச?? என்ன பேசன்னு ஒன்னும் விளங்களை..” என்றவர், எழுந்து உள்ளே சென்றுவிட்டார்..

மகராசிக்குமே பொன்னியின் இந்த பதில் ஒரு ஏமாற்றம் கொடுத்ததுவோ என்னவோ.. ஆனால் அவளது பதிலில் அவரின் மனது சோர்வுற்றது நிஜமே..

ஏனெனில் அசோக்கைத் தான்  அவர் பார்த்தாரே.. பொன்னி புகழேந்தியின் திருமணத்தில், அவனது பாங்கு, பண்பு எல்லாம் அவரும் கவனித்தார் தானே.. இவர்கள் வீட்டினரோடு எப்படியான பிரச்சனை நடந்தது, அதெல்லாம் முகத்தில் சிறிதும் காட்டாது, அவனின் தங்கையின் திருமணத்தை எப்படி நடத்திக்காட்டினான்..

என்ன இங்கே வரவில்லை அவ்வளவே.. ஆனால் அவன் குணம் அனைவரின் மனதிலும் பதிந்தது. புகழேந்தி கூட அதனால் தானே சும்மா இருப்பது..

அதுவும் திருமணத்திற்கு வந்திருந்த இவர்கள் பக்கம் உறவினர்களே சிலர்,  “என்னக்கா பொண்ணுக்கு அண்ணன் இருக்காப்ல போல.. பாக்கவும் நல்லாத்தான் இருக்கான்.. பழக்கமும் நல்லாத்தான் இருக்கு.. பேசாம நம்ம அமுதாக்கு பேசி முடிங்க..” என்று எத்தனை பேர் சொல்லியிருப்பர்..

அப்போதெலாம் மகராசி மறுத்துவிட்டார்.. ஏற்கனவே நடந்தது எல்லாம் போதும்.. மேலும் எதையாவது பேசி அது இதென்று இழுத்து வைக்கக்கூடாது என்று..

அதிலும் அமுதாவும், அசோக்கும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராய் பார்க்கவே அத்தனை சங்கடம் கொள்ளும்போது இதில் அவர்களுக்கு திருமணமாவது இன்னொன்றாவது என்றே நினைத்தார்..

ஆனால் மனதின் அடியாழத்தில் அமுதாவை அசோக்கிற்கு கட்டி கொடுத்தால் அமுதாவின் வாழ்வும் சரி அவளும் சரி பாதுகாப்பாய் இருக்கும் என்ற எண்ணம் இருந்தது.. இப்போது பரஞ்சோதி வந்து திரும்ப திரும்ப அதையே சொல்ல, இது நடந்தால் நன்றாய் இருக்குமே என்று தோன்றவே ஆரம்பித்து விட்டது..

அதிலும் தரகரிடமே அசோக்கின் ஜாதகம் இருக்க, எல்லாம் சேர்ந்து மகராசிக்கு மனதிற்குள் மிகுந்த நிம்மதியாய் போனது..

வீட்டினரும் அதற்கு சரி என்பதுபோல் பேச, கண்டிப்பாய் இதில் புகழேந்தியும் மறுக்க மாட்டான் என்றே நினைத்தார்.. ஆனால் பொன்னி மறுத்து பேசுவாள் என்று மகராசி சிறிதும் நினைக்கவில்லை.. அமுதாவின் வாழ்வை எண்ணி ஒரு அன்னையாய் மகராசி மனதளவில் கலங்கிப் போய்தான் இருந்தார்….

“ம்மா.. அங்க எல்லாம் ஆளாளுக்கு பேசிட்டு இருக்காங்க.. நீ என்ன உள்ள வந்து உட்காந்துட்ட.. பாவம் அந்த புள்ள என்ன செய்யும்..?? அதுக்கிட்ட கேட்டா அது மனசுல என்ன இருக்கோ அதைதான் சொல்லும்..” என்று இளங்கோ உள்ளே வந்தான் மகராசியை தேடி.

அதே அறையில் இன்னொரு பக்கம் அமுதா அமர்ந்திருந்தாள் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக்கொண்டு..

“நான் என்னடா செய்ய??” என்று அவர் கேட்க,

“என்ன செய்யவா?? அதுசரி.. அன்பு பேசுறான்னு நித்யாவும் பேசிட்டு இருக்கா.. ஒரு அளவுக்கு மேல நான் இதுல பொன்னிக்கு தோதா பேச முடியாதும்மா.. ஒழுங்கா வந்து என்ன ஏதுன்னு பேசி முடி..” என்று இளங்கோவும் பிடிவாதமாய் சொல்ல,

“எனக்கு நிஜமாவே என்ன பேசன்னு தெரியலைடா இளங்கோ..” என்றார் மகராசி  முகத்தை துடைத்தபடி.

“ஏன்?? நீயும் அசோக்குக்கு அமுதாவை கல்யாணம் பண்ணி கொடுக்க நினைச்சியா???” என்றதும் அமுதா வேகமாய் அவளின் அம்மாவைப் பார்க்க,

“ஏன் நினைச்சா என்ன?? நல்லவன் கைல பிடிச்சு குடுக்கனும்னு யார் தான் நினைக்க மாட்டா??” என,

“அதுக்கு நம்ம கொஞ்சமாவது நல்லது செஞ்சிருக்கணும்மா.. தப்பு நம்ம மேல.. நானும் மாமாவும் அசோக்கை ரோட்ல போட்டு புரட்டி எடுத்தோம்.. இன்னிக்கு அவங்க பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்திருக்குன்னு நம்ம இஷ்டத்துக்கு பேச கூடாது..” என்று இளங்கோ பொரிந்து தள்ளிவிட்டான்..

அவன் பேசிய சத்தம் கேட்டு, வெளியே இருந்தவர்கள் எல்லாம் இங்கே  அறைக்கு வந்துவிட்டனர்..

பொன்னியைத் தவிர.

உள்ளே அனைவரும் ஆளாளுக்கு ஒன்று பேசுவது தெரிந்தது.. அவளைப் பொருத்தமட்டில் அவள் பேச்சில் எந்தவொரு தவறும் இல்லை.. அவளிடம் கேட்டால், தன் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தானே அவள் சொல்ல முடியும்.. அதை சொன்னால் எப்படி இப்படி சொல்லலாம் என்று பதில் கேள்வி கேட்டால் என்ன செய்ய..

அத்தனை பெரிய வீட்டில் தான் மட்டுமே தனித்து அமர்ந்திருப்பதே அவளின் சூழலை விளக்கியது.. கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் பின் எழுந்து அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்..

அங்கே நித்யாவோ “மதினி, பேசாம உங்க தம்பிக்கு போன் போடுங்க.. அவர் வந்து கேட்கட்டும் அவர் பொண்டாட்டிய..” என்று அன்பரசியை நன்றாய் ஏத்திவிட,

“ஏய்.. வாயை மூடு.. அறிவில்ல உனக்கு..” என்று சீறினான் இளங்கோ… 

ஜெயபாலோ “யாரும் யாருக்கும் இப்போ போன் பண்ண வேண்டாம்.. இந்த பேச்சை கொஞ்ச நாளைக்கு விடுங்க….” என்றவன்

“மாமா நீங்க வாங்க.. தோட்ட வேலைக்கு நாளைக்கு ஆள் பாக்கணும் சொன்னீங்கல்ல.. போயிட்டு வருவோம்.. மாப்பள.. பார்த்துக்கோ…” என்று இளங்கோவிடம் சொல்லிவிட்டு, மன்னவனை வம்படியாய் அழைத்துக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டான்..

ஆனால் பரஞ்சோதியோ, வந்தது வந்தாகிற்று, குட்டையை இத்தனை குழப்பினால் போதாது அடி ஆழத்தில் இருந்து இன்னும் நன்றாய் குழப்பிட வேண்டும் என்று நினைத்துவிட்டார் போல..

“ஹ்ம்ம் என்ன மகா.. உன் தம்பி இப்படி பேசிட்டு போறான்.. கண்ண கசக்கிட்டு  மனசு நொந்து போய் அழுதுட்டு நிக்கிறது நீ பெத்த பொண்ணு.. உன் மருமகளுக்கு எவ்வளோ தைரியம் இருந்தா நம்ம பையன் கையாலேயே தாலி வாங்கிட்டு வந்துட்டு, நம்ம பொண்ண இன்னிக்கு வேண்டாம்னு சொல்வா??” என்று அடுத்த அம்பை எய்திட, மகராசியோ கலங்கிப் போய் அமுதாவைப் பார்த்தார்…

இளங்கோவிற்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, “ச்சே வீடா இது.. ஒருதடவை சொன்னா புரியாது உங்களுக்கு.. வயசுக்கு ஏத்தது போல பேசுங்க எல்லாம்….” என்றுவிட்டு அவனும் எழுந்து வெளியே சென்றுவிட்டான்..

பொன்னி அவளின் அறையிலும், மற்ற பெண்கள் மற்றொரு அறையிலும் இருக்க, நேரம் கடந்தது தான் மிச்சம்..

ஸ்வேதாவும், முகேஷும் உறங்கி எழுந்து வந்து ‘பசிக்குது…’ என்று சொன்ன பின்னே தான் சாப்பாடு நேரம் கூட தாண்டியது தெரிந்தது..

“ஹ்ம்ம் இவ பண்ண வேலைல பிள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுக்க கூட மறந்திடுச்சு..” என்று அன்பரசி முனங்கியபடி, இரண்டு குழந்தைகளுக்கும் ஒரேதாய் போட்டு உணவை ஊட்ட, நித்யா அனைவருக்கும் சேர்த்து எடுத்து வைத்தாள்..   

அமுதாவிற்கோ போய் பொன்னியிடம் பேசி அவளை சமாதானம் செய்யவேண்டும் என்று உள்ளம் பரபரக்க, இவர்களின் முன்னே போனால் அதற்கும் ஏதாவது ஒரு பேச்சு வரும் என்று அமைதியாய் இருந்தாள்.. ஆனாலும் அவளுக்கு மனம் துடித்துக்கொண்டு தான் இருந்தது..

மகராசி “நித்யா வெளிய போனவங்களுக்கு தனியா எடுத்து வச்சிடு..” என்றுவிட்டு “மதினி நீங்களும் சத்யாவும் முதல்ல சாப்பிடுங்க..” என்றுசொல்ல,

“இல்ல எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்..” என்று பரஞ்சோதி சொல்லவும், மகராசி “அமுதா போய் பொன்னியை கூட்டிட்டு வா..” என்றுசொல்ல, பரஞ்சோதியும் நித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்..

அமுதா இது தான் சாக்கென்று பொன்னியைத் தேடித் போக, அவளோ முகத்தை மூடிப் படுத்திருந்தாள்.. அழுகை வரவில்லை மாறாய் மனம் கனத்து போயிருந்தது.. ஒருவிதமான அழுத்தம் அவளுள் சூழ்ந்திருந்தது..

புகழேந்தி இருந்திருந்தால் கூட இதெல்லாம் தெரியாதோ என்னவோ, இவர்களுக்குள் தனியே வந்து சிக்கிக்கொண்டதாய் ஓர் உணர்வு.. மங்கைக்கு அழைத்து பேசலாம் தான்.. அனைத்தும் சொல்லலாம் தான்.. ஆனால் இதெல்லாம் கேட்டால் அவர் சங்கடப்படுவாறே..

அதிலும் திரும்பவும் அசோக் விசயமாய் பிரச்சனை என்றால் .. இன்னும் நொந்து தான் போவார்.. அசோக்கிடம் சொன்னாலோ அவனும் வேதனை தானே படுவான்..

நாளைக்கு பின்னே, இவர்களை எல்லாம் நேரில் காணவே அவனுக்கு எப்படியிருக்கும்.. இதெல்லாம் யோசித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் படுத்திருந்தாள்..

புகழிடம் பேச மனம் ஆசைகொண்டது.. ஆனால்…???

இந்த ஆனால் என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.. ஏற்கனவே அசோக் இங்கே வராது போனது புகழேந்திக்கு மனதினுள் ஒரு கோபம் இருப்பது தெரியும். இப்போது இதுவும் சேர்ந்துகொண்டால் இன்னும் என்னென்ன நடக்குமோ, இதோடு இதை விட்டுவிடுவோம், மேலும் மேலும் நானும் எதையும் பேசி வளர்க்க வேண்டாம் என்று தான் மௌனித்திருந்தாள்.

வார்த்தைகளுக்கு வேலி போட்டாலும், மனது அப்படி இருக்குமா என்ன?? அமுதா வந்து இரண்டு முறை அழைத்தது கூட அவளுக்கு கேட்கவில்லை.. திரும்பவும்,

“மதினி..” என்று அமுதா தொட்டு எழுப்ப, அதன்பின்னேயே கண்களைத் திறந்து பார்த்தாள்..

பார்வைதான் பார்த்தாளே தவிர, என்ன என்று கேட்கவில்லை.. பொன்னியின் இந்த மௌனமே அமுதாவிற்கு எதோ செய்தது..

“ம.. மதினி சாப்பிட வாங்க.. அம்மா கூப்பிட்டாங்க..” என, பதிலே பேசாது அவளோடு எழுந்து வந்தாள்..

பொன்னி அங்கே வருவதற்கு முன்னமே தட்டில் சாப்பாடு போடப்பட்டு இருந்தது.. அவ்வளவுதான் அதற்குமேல் யாரும் அவளிடம் பேசவில்லை. அவளும் பேசவில்லை.. நித்யாவும் அன்பரசியும் முகத்தை திருப்பிக்கொண்டனர். பரஞ்சோதியோ இப்போது எதுவுமே நடவாதது போல,

“பொன்னி.. இந்தாம்மா இந்த காய் கொஞ்சம் போட்டுக்கோ..” என்று சகஜமாய் பேச,.

‘ச்சே என்ன மனுசி…’ என்றுதான் எரிச்சலாய் இருந்தது அவளுக்கு..

சாப்பிட்டு முடிக்கவும், எப்போதும் போல் போய் பாத்திரங்களை ஒதுக்கிப் போடப் போக, வேகமாய் வந்த அன்பரசி “இதெல்லாம் நாங்க பண்ணிக்கிறோம்..” என்று அவள் கையில் இருந்த பாத்திரங்களை பிடுங்கிக்கொண்டாள்..

பொன்னிக்கு சிவுக்கென்று போனது.. ஒரே வீட்டில்.. ஒரே குடும்பத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இடையே ஒரு தயவு தாட்சண்யம் வேண்டாமா ?? என்று தோன்ற,

“இல்ல.. நானே செய்றேனே..” என்றாள்..

“வேணாம்.. நீ செஞ்சதெல்லாம் போதும்..” என்று அன்பரசி வெடுக்கென்று சொல்லிவிட்டு சென்றுவிட மிக மிக சங்கடமாய் போனது பொன்னிக்கு.

கூட்டு குடும்பத்தில் சண்டைகள் வருவது வேறு.. ஆனால் ஒருவரை இப்படி உதாசீனப்படுத்தி பேசுவது என்பது வேறல்லவா.. இவர்கள் சொல்வதற்கு எல்லாம் சரி சரி என்று சொன்னால் சிரித்து பேசுவதும், இல்லையென்று மறுத்து பேசினால் முகத்தினில் அடித்தாற்போல் பேசுவதும் என்றால் எப்படி??

இந்த அன்பரசி அடுத்து சும்மாவாவது இருந்திருக்கலாம், நேராய் சத்யாவிடம் சென்று, “சத்யா போ.. எல்லாத்தயும் ஒதுக்கிப் போடு..” என்று சொல்ல, பொன்னிக்கு அது அவளின் தன்மானத்தை சீண்டியதாகவே பட்டது.. 

என்ன இருந்தாலும் சத்யா இந்த வீட்டிற்கு வந்த விருந்தினள்.. பொன்னி இந்த வீட்டின் மருமகள்.. இதை யாரும் யோசிக்கவில்லையா என்றிருக்க, பொன்னி ஒன்றும் பேசாமல் போய் அமர்ந்துகொண்டாள்..

கொஞ்ச நேரத்திலேயே பிள்ளைகள் இருவரும், அவர்களின் ஸ்லேட் குச்சியோடு இவளிடம் வர, அதிலும் முகேஷோ எப்போதும் போல் “மிஸ்…” என்று சொல்ல, அத்தனை களேபரத்தையும் தாண்டி பொன்னிக்கு சிரிப்பு வந்தது..

“டேய் குட்டி சித்திடா நானு..” என்றுசொல்லி அவனை முத்தமிட, அவனும் அவளுக்கு பதிலுக்கு முத்தமிட, நித்யா இதனைப் பார்த்தவள், வேகமாய் வந்து மகனைப் பிடுங்கிக்கொண்டாள்..

“நித்யாக்கா..!!!!”

“போதும்மா தாயே.. என் மகனுக்கு சித்தின்னா அது என் தங்கச்சி மட்டும் தான்..” என்றுவிட்டு செல்ல, பேசாமல் பொன்னிக்கு கிளம்பி மங்கையிடம் சென்றுவிடலாமா என்றுகூட ஆனது..

இப்படி ஆளாளுக்கு அவளை ஒதுக்கித் தள்ளினால் அவளும் தான் என்ன செய்வாள்.. மகராசியோ அனைத்தும் பார்த்தாலும் பார்க்காதது போல இருக்க,  பொன்னி அப்படியே உறைந்துபோய் அமர்ந்திட, அமுதாவோ அழுதபடி அவளின் அருகே வந்தமர்ந்தாள்.. அந்த சூழலில் அவளால் அழ மட்டுமே முடிந்தது.. எப்போது பார்த்தாலும், அவளை முன்னிட்டே இந்த வீட்ல பிரச்னைகள் எழும்புவதால் அமுதா மனதளவில் நொறுங்கித்தான் போனாள்..

பொன்னியோ அருகேயே இருந்தாலும், அவளிடம் ஒருவார்த்தை கூட பேசாது இருப்பதை கண்டு, “மதினி…” என்று அழுகையோடு அவளின் கரங்களைப் பற்ற,

பொன்னியோ வேகமாய் அவளைப் பார்த்தவள், அதனினும் வேகமாய் தன் கரங்களை உருவிக்கொண்டாள்..

“மதினி…!!!!!”

“மதினி தான்… மதினியே தான்… இப்போ திறக்கிற வாய் இவ்வளோ நேரம் எங்க போய் பூட்டு போட்டு தொங்கிட்டு இருந்தச்சு…. உனக்காகத்தானே பேசினேன்.. ஒருவார்த்தை ஆமா எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை நான் தான் சொன்னேன் படிக்க ஆசையா இருக்குன்னு எல்லார் முன்னாடியும் சொல்லிருந்தா எனக்கு இவ்வளோ பேச்சு தேவையா என்ன??” என்றவள்,

“இங்க பார் அமுதா, இப்போ சொல்றதுதான்…. இனி உனக்கு வேணுங்கிறதை நீதான் பேசிக்கணும்…. போதும்.. நல்லது நினைச்சு நான் பேச அது கடைசியில என் தலையில விடிஞ்சது.. அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரைக்கும் எப்பவுமே பேச்சு வாங்குறது நாங்களாதான் இருக்கோம்..” என்று அனைவரின் முன்னயுமே பேசிவிட,

மகராசி என்னதிது என்று பார்க்க, பரஞ்சோதியோ “யப்பா என்ன பேச்சு இது.. ஏன்மா இப்படி பேசுறா..?? அதுவும் கட்டி குடுக்காத பிள்ளையை இப்படி பேசலாமா..??” என்று வாயில் கை வைக்க, பொன்னியின் பொறுமை பறந்துவிட்டது..

“ஏன்?? என்னை எல்லாரும் பேசுறப்போ சும்மாதானே இருந்தீங்க.. கட்டிட்டு வந்த பிள்ளையை மட்டும் என்னவேனா பேசலாமா??” என்றாள் பதிலுக்கு..

பொன்னி பதில் பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லையோ என்னவோ, லேசாய் முகத்தில் திகைப்பை காட்டியவர், “என்ன மகா.. இதான் உன் மருமகளுக்கு தெரிஞ்ச மரியாதையா?? எல்லாம் புகழை சொல்லணும்.. மரியாதை தெரிஞ்ச ஆளுங்க வீட்ல சம்பந்தம் பண்ணிருந்தா தானே…” எனும்போதே,

“ஆமா நாங்க மரியாதை தெரியாத ஆளுங்க தான்.. அப்புறம் ஏன் திரும்பவும் அமுதாவை எங்கண்ணனுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறீங்க..” என்றுவிட்டாள் பொன்னி..

அப்போதுதான் உண்டுவிட்டு உறங்கச் சென்றிருந்த இளங்கோ எழுந்து வர, நித்யாவோ “ம்மா நீ எதுவும் பேசாத…. எல்லாம் என்ன பண்ணாங்களோ புகழ் ஒரேடியா பிடிவாதம் பிடிச்சிட்டான்.. வேறென்ன செய்ய.. இப்போ கல்யாணம் முடிஞ்சா மிதப்புல எல்லாம் பேசுறாங்க..” என்று ஜாடையாய் பேச,

“பொதுக்கா நிறுத்துங்க.. நானும் பாக்குறேன் சும்மா தாலி வாங்கிட்டா.. கல்யாணம் முடிஞ்சா மிதப்பு அப்படின்னே சொல்றீங்க.. நீங்க எப்படி இளங்கோ மாமாவ முறைப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்தீங்களோ அதே போல தான் நானும் அவரை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கேன்.. நாங்க ஓடிப் போயோ இல்லை திருட்டுத் தனமாவோ கல்யாணம் பண்ணிக்கலை.. இனிமே எங்க கல்யாணத்தை பத்தி யாராவது பேசினீங்க நல்லாருக்காது..” என்றவள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து உள்ளே சென்றுவிட்டாள்..

என்னவாக இருந்தாலும் சரி புகழேந்தி இரண்டு நாளில் வந்துவிடுவான்.. எதுவானாலும் அவன் வந்ததும் பார்த்துகொள்வோம்.. இவர்கள் பேசினால் பேசட்டும் இல்லையோ இருக்கட்டும் என்று விட்டுவிட்டாள்..

இதற்கு பின்னே தான் அன்பரசியும், இளங்கோவும் புகழேந்திக்கு அழைத்து வர சொன்னது..

அவனும் வருகிறேன் என்றெல்லாம் சொல்லாது, கிளம்பி வந்திட, புகழ் மறுநாள் கிளம்பி வருகையில் இரவு நெருங்கிவிட்டது.. வந்தவன் யாரிடமும் ஒன்றும் பேசாது நேராய் அவனின் அறைக்குள் செல்ல,

அங்கே பொன்னியோ பல நாள் கழித்து அன்றுதான் அசோக்கிடம் பேசுகிறாள் போல, அவளையும் மீறி மனக்குமுறலை கொட்டிக்கொண்டு இருந்தாள்..

“நான்.. நான் ரொம்ப அவசரப்பட்டுட்டேன் அசோக்…. கொஞ்சம் யோசிச்சிருக்கணும்..” என்று சொல்லிக்கொண்டு இருக்க, சரியாய் அங்கே புகழேந்தியும் இதனைக் கேட்டிருந்தான்..                        

         

    

 

Advertisement