Advertisement

 

Tamil Novel

 

தோற்றம் –  17

புகழேந்தி வந்திருந்தான்.. வரவழைக்கப் பட்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். பொன்னி சொல்லி அல்ல.. அவனின் உடன்பிறப்புகள் சொல்லி..

பொறுமை பொறுமை என்று பொன்னிக்கு எதை நினைத்து சொன்னனோ?? ஆனால் அவனின் பொறுமையே சுக்கு நூறாய் உடைந்திருந்தது.

இளங்கோவும் ஜெயபாலும் கொண்டு வந்து இறக்கிய பொருட்களை எல்லாம் வீட்டின் இடத்திற்கு ஏற்ப ஓரளவு அடுக்கியிருந்தான். ஆட்களை வைத்தே என்றாலும் பொன்னி வந்தபிறகு அவளுக்கு பிடித்தமாக மாற்றிக்கொள்ளட்டும் என்று ஓரளவு மட்டுமே பொருட்களை எல்லாம் அடுக்கியிருந்தான்.

“ஜஸ்ட் செட் பண்ணிருக்கேன் கண்ணு.. நீ வந்தப்புறம் உனக்கு பிடிச்சது போல மாத்திக்கலாம்..” என,

“ஹ்ம்ம் இதுக்கு நான் வந்ததுக்கு அப்புறமே எல்லாம் பண்ணிருக்கலாம்..” என்றாள் இவளும்..

“ம்ம்ச் நீ வந்ததும் அத்தனை வேலையும் செய்ய முடியுமா?? இதுன்னா நேரம் கிடைக்கிறப்போ கொஞ்சம் கொஞ்சமா பண்ணிக்கலாம்..”

“ஏன் நேரத்துக்கு என்ன?? எப்படியும் நான் அங்க வர்றபோ நம்ம வீட்ல இருந்து யாராவது வருவாங்க.. அசோக் வருவான்.. எல்லாம் ஹெல்ப் பண்ணுவாங்கதான…”

“அதெல்லாம் வரட்டும் வேணான்னு சொல்லலை.. பட் இங்க உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கே…” என்றான் கொஞ்சம் உற்சாகமாய் புகழ்..

“சர்ப்ரைஸா?? என்ன அது??” என்று பொன்னி வேகமாய் கேட்க,

“சர்ப்ரைஸ்னு சொல்றேன் என்ன அதுன்னு கேட்கிற?? சர்ப்ரைஸோட மீனிங் தெரியாதா??” என்றவனிடம்,

“இதுக்கு நீங்க சொல்லாமையே இருந்திருக்கலாம்..” என்றாள் அவன் சொல்லாமல் விட்ட கடுப்பில்..

“அடடா நல்லது நினைச்சு பண்ணா இப்படியா??”

“சரி அதெல்லாம் விடுங்க.. நீங்க எப்போ வர்றீங்க??” என்றவளுக்கு, “எப்படியும் இந்த வீக்கென்ட் வந்திருவேன்..” என்றிருந்தான்..      

வேலையும் நிறைய இருந்தது.. மும்பையில் இருந்ததை போல் அல்ல.. இங்கே நிறையவே இருந்தது.. அதுவும் இவன் புதியவன் வேறு.. கேட்கவும் வேண்டுமா?  அடுத்து இரண்டு நாட்கள் கழித்து கிளம்பலாம் என்றிருந்தவனை இளங்கோவும் அன்பரசியும் பேசி வரவைத்திருந்தனர்..

அன்பரசியோ “புகழு.. உன் பொண்டாட்டி பேசுறது செய்றது எல்லாம் எதுவும் சரியில்ல வந்து என்னன்னு கேளு…” என்றும்,

இளங்கோ “டேய் புகழ்.. சீக்கிரம் வந்து அந்த புள்ளைய கூட்டிட்டு போடா.. இவங்க எல்லாம் சேர்ந்து அதை ஒருவழி பண்ணிடுவாங்க போல..” என்றும் சொல்லிட, புகழேந்தி மொத்தமாய் குழம்பித்தான் போனான்.

பொன்னிக்கு அழைக்க அவளோ அழைப்பை எடுக்கவேயில்லை.. என்னாச்சோ என்று பதறியவன், மன்னவனுக்கு அழைத்து “என்னப்பா பிரச்சனை அங்க??” என்று கேட்க,

“அது ஒண்ணுமில்ல ப்பா.. நீ எப்போ ஊருக்கு வர??” என்றார் அவர்..

“ரெண்டு நாள்ல நானே வரணும்னு இருந்தேன் ஆனா இப்போ அண்ணாவும் அக்காவும் போன் போட்டு வர சொல்றாங்க?? என்ன பிரச்சனை அங்க??” என்றான் திரும்பவும்..

“நீ வா புகழ் பேசிக்கலாம்..” என்றுவிட்டார்.

அவனுக்கோ அதற்குமேல் அங்கே இருப்பே கொள்ளவில்லை.. என்னவோ எதோ என்று இருந்தது.. பொன்னிக்கு திரும்பவும் அழைத்தாலோ  ‘ஒண்ணுமில்ல நீங்க சீக்கிரம் வந்துடுவீங்க தானே…’ என்றாள் இயல்பாய் பேச முயன்று.

அவள் குரலில் இருக்கும் மாற்றம் அவனுக்குத் தெரியாதா என்ன??

“ம்ம்ச் என்னன்னு சொல்றியா இல்லையா.. எல்லாம் போன் பண்ணி வா வான்னு சொல்றீங்க.. என்னன்னு கேட்டா ஒண்ணுமில்லன்னு சொன்னா என்னர்த்தம்.. நான் இங்க நிம்மதியா வேலைப் பார்க்கக் வேண்டாமா??” என்று மற்றவரிடம் இருக்கும் எரிச்சலை எல்லாம் அவளிடம் தான் காட்டினான்..

பொன்னியோ வேறெதுவும் சொல்லாது, “நீங்க வாங்க பேசிக்கலாம்.. ஒன்னும் அவசரமில்லை எப்படியும் ரெண்டு நாள்ல கிளம்பனும்னு தானே இருந்தீங்க…” என,

“நீயும் சொல்லிடாத…” என்று எரிச்சலாய் போனை வைத்துவிட்டான்.. 

இத்தனைக்கும் மேலே அவனுக்கு அங்கே நிம்மதியாய் இருக்க முடியுமா என்ன??.

மறுநாளே ஆபீஸில் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.. வருகிறேன் என்றும் சொல்லவில்லை.. வரவில்லை என்றும் சொல்லவில்லை.. யாரிடமும் புகழ் பேசவில்லை. பொன்னியிடம் கூட..

கிளம்பும் முன்னே, அமுதாவிற்கு மட்டும் அழைத்து விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள முயன்றான்..

அவளோ “சாரிண்ணா எல்லாமே என்னால தான்…. எப்பவுமே என்னாலதான் பிரச்சனையே வருதுண்ணா…” என்று அழ, அவனுக்கோ ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது..

“என்ன அம்மு நீ ஏன் இப்படி பேசுற???”

“இல்லண்ணா.. ஒண்ணுமில்ல.. நீ எப்போ வருவ??” என்றவளுக்கு அவன் பதிலே சொல்லவில்லை..

“நீ அழாம இரு..” என்றுமட்டும் சொல்லி வைத்துவிட்டான்.

பொன்னியிடம் வீட்டினர் யாரும் பேசுவதேயில்லை மகராசி உட்பட.. யாருக்கும் அவளிடம் அடுத்து என்ன பேச என்று தெரியவில்லை.. அவளுக்கும் அப்படியே.. யாரிடமும் மேற்கொண்டு என்ன சொல்ல என்று தெரியவில்லை.. ஆனால் நடந்தவைகளில் அவளின் தவறுகள் என்று எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. அதனால் பொன்னி உறுதியாகவே இருந்தாள்.

அமுதாவிற்கு நல்லது செய்யவென்றுதான் நினைத்தாள். ஆனால் அது கடைசியில் அவளின் தலையிலேயே விடிந்தது தான் மிச்சம்..

அனைத்தும் இந்த பரஞ்சோதி ஆரம்பித்த வினை..

“ஏண்ணே அமுதாவுக்கும் பொன்னி அண்ணனுக்கும் பேசினா என்ன??” என்று எப்போது கேட்டாரோ அப்போது ஆரம்பித்தது பிரச்சனை..

பொன்னி எந்த பேச்சு வந்துவிட கூடாது என்று நினைத்தாளோ அது அப்படியே சிறிதும் மாறாது வந்திட, அவளும் கொஞ்சம் ஆடித்தான் போனாள்.. மன்னவனும் பரஞ்சோதியும் என்னவோ பேசிக்கொள்ளட்டும் என்று பிள்ளைகளை தூக்கிக்கொண்டு அறைக்கு போகப் பார்த்தாள்..

மன்னவன் சும்மா இருந்தாலும் “ஏம்மா பொன்னி, நில்லு.. என்ன நீ பாட்டுக்கு போற..” என்று பரஞ்சோதி சொல்ல,

“அது.. பிள்ளைங்க தூங்கனும் அதான்..” என்றாள் மற்ற பேச்சை விட்டு..

“அதுக்கென்ன போய் கொடுத்துட்டு வா..” என்றவர்,

“ஏண்ணே அமைதியா இருக்க?? நான் சொன்ன யோசனை சரியில்லையா என்ன??..” என்று பேச்சை வளர்ப்பது, உள்ளே சென்ற பொன்னிக்கு நன்கு கேட்டது..

குழந்தைகளை அன்பரசியிடம் விட்டுவிட்டு, திரும்ப அங்கே ஹாலுக்கு செல்ல வேண்டுமா என்ற யோசனையோடு அவள் வர,

மன்னவனோ “இப்போதைக்கு அமுதா கல்யாணம் வேணாம்னு பாக்குறோம் ஜோதி கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கோம்..” என்று சொல்லிக்கொண்டு இருக்க, இவளுக்கு அப்பாடி என்று கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது..

இவர்கள் பேசுவது கேட்டு மகராசி வந்தவர், “நீ போய் தூங்கலையா கண்ணு..” என்று பொன்னியைப் பார்த்து கேட்க, அவரின் பார்வையோ, இங்கே என்ன உனக்கு பேச்சு கிளம்பு என்பதாய் பட,

“இதோ அத்தை.. போகணும்..” என்றவள், வேகமாய் அவளின் அறைக்கு வந்துவிட்டாள்..

அன்றைய இரவு எல்லாம் அவளுக்கு உறக்கமே வரவில்லை.. கடவுளே அசோக் மனதிலும் அமுதாவின் மீது அப்படியான சிறு விருப்பங்கள் கூட இல்லை.. அமுதா மனதிலோ படிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அப்படி இருக்கையில் இவர்கள் இருவரின் திருமண பேச்சை ஆரம்பித்தால் என்ன சொல்வது என்று இருந்தது??

அதுவும் இந்த பேச்சு, மங்கை அசோக் வரைக்கும் சென்று, அதிலும் அசோக் என் மனதில் அப்படியொரு எண்ணம் இல்லை என்று சொல்லி மறுத்தால் அது இருவீட்டுக்கும் மேலும் ஒரு கசப்புணர்வு கொடுக்கும் அல்லவா?? அதிலும் அசோக் வீட்டிற்கு வராமல் இருப்பதற்கு அனைவரின் மனதிலும் ஒரு சிறு பிணக்கு இருக்கிறது..

இதில், திருமணம் விஷயம் பேசி, அதை மறுக்கும் நிலை வந்தால் என்னாகும்?? கண்டிப்பாய் இரு வீட்டிற்கும் பிரச்சனை வரும்.. ஆக இந்த விசயம் இங்கே  யார் பேசினாலும் அதை இங்கேயே முடித்திட வேண்டும் என்று நினைத்தாள்..

அதே நேரம் அமுதாவின் படிப்பு ஆசையையும் இதையே சாக்காய் வைத்து வீட்டில் சொல்லிவிட வேண்டும் என்று யாருக்கும் பிரச்சனையாகக்கூடாது என்று பொன்னி நல்லதற்கு தான் நினைத்தாள்.

ஆனால் நடந்ததோ வேறு??

மறுநாள் பரஞ்சோதி கேட்டதற்காக மன்னவன் தரகர் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்திருக்க, பரஞ்சோதி தான் அனைவருக்கும் சேர்த்து பேசிக்கொண்டு இருந்தார்.

“பெரிய பொண்ண பொறந்த வீட்ல கொடுத்தது போல சின்னவளையும் அப்படியே கொடுத்திடலாம்னு கனவு கண்டுட்டு இருந்தேன்.. அதுதான் கனவாவே போயிடுச்சே..” என்றவர்,

“மகா, சாமி கும்பிட்டு நம்ம அமுதா ஜாதகமும் கொண்டு வந்து கொடு.. இன்னிக்கு நல்ல நாள் வேற..” என்று சொல்ல, அவரோ மன்னவன் முகம் பார்த்தார்..

“ஜோதி.. சத்யாக்கு முதல்ல பார்ப்போம்.. அமுதாக்கு ஆறு மாசம் போகட்டும்..” என்று மன்னவன் சொல்ல,

“அண்ணே என்னண்ணே நீ.. கல்யாணம் எல்லாம் நம்ம நினைக்கிறப்போவா நடக்கும்.. எப்போ நடக்கனும்னு இருக்கோ அப்போதான் நடக்கும்.. இப்போ இருந்து பார்க்க ஆரம்பிச்சா தானே நல்லது…. பார்த்துட்டே இருப்போம் நல்ல இடம் வந்தா பேசி முடிப்போம்…” என்று சொல்ல,

அமுதாவும் அங்கே ஹாலில் தான் ஒரு ஓரமாய் சத்யாவோடு அமர்ந்திருக்க, பொன்னி அன்பரசி எல்லாம் உள்ளே சமைத்துக்கொண்டு இருந்தாலும் வெளியே நடப்பது நன்றாய் கேட்டது. நித்யா அவளின் அம்மாவோடு அமர்ந்திருந்தாள்..

“ஆமாங்க.. இப்போ இருந்து பார்த்தாதானே ஆச்சு… ஆறு மாசம் எல்லாம் கண்ணு மூடி திறக்கிறதுக்குள்ள ஓடிரும்..” என்று தரகரும் சொல்ல,

நித்யாவும் “மாமா.. அம்மா சொல்றது சரிதான்.. எதுவும் தயங்காம அமுதா ஜாதகம் எடுத்து நீங்களும் அத்தையும் சாமி கும்பிட்டு கொடுங்க மாமா..” என,

“அதில்லம்மா.. பசங்க எல்லாம் வரவும்..” என்று சொல்லும்போதே,

“அவங்க எல்லாம் என்ன மாமா சொல்ல போறாங்க.. நீங்களும் அத்தையும் எடுக்கிற முடிவு தானே..” என்றாள் நித்யா..

“ஆமாண்ணே.. சத்யாக்கு கொடுக்கும்போதே, அமுதாக்கும் கொடுத்தோம்னு வை.. ரெண்டு பேர்ல யாருக்கு முன்ன முடியுதோ முடியட்டும்.. இப்போ பாரு நம்ம புகழு கல்யாணம் எல்லாம் நம்ம நினைச்சா நடந்துச்சு.. நேரம் காலம் வந்தா எல்லாம் நடக்கும்..” என்று பரஞ்சோதியும் அழுத்தி சொல்ல,

அதற்குமேல் மன்னவனுக்கும், மகராசிக்கும் மறுத்து பேச முடியவில்லை.. ஆனால் இதெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த அமுதாவோ உள்ளேயே நொறுங்கிப்போனாள்..

மேற்கொண்டு படிக்கவேண்டும் என்ற அவளது கனவு கானலாய் போவதை அவளால் சகித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. நன்கு படிக்கும் பெண்ணும் கூட.. என்னவோ போறாத காலம், கல்லூரி காலத்தில் காதல் என்று ஒன்று வந்திட, அதுவும் வந்ததோ ஒருதலையாய் வந்திட, அதன் பலனைத் தான் இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறாளே..    

அமுதா செய்த ஒரு சிறு தவறு, இப்போது அவளின் நியாயமான ஆசைகளை கூட வீட்டில் சொல்ல முடியவில்லை.. எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்வாள்.. கண் முன்னே நடப்பதை தடுக்கும் வழி தெரியாது அமுதா குமைந்துகொண்டு இருக்க,

அங்கே சமயலறையில் இருந்த பொன்னியோ அமுதாவை எண்ணி தான் நொந்து கொண்டு இருந்தாள்..

“லூசா இவ… வாய் திறந்து படிக்கணும்னு சொல்ல வேண்டியது தான…” என்று எண்ண,

அன்பரசி “பொன்னி எல்லாத்தையும் ஒதுக்கி போடு நித்யா வந்து கழுவட்டும்…. வா நம்மளும் ஹாலுக்கு போவோம்..” என்றுசொல்ல,

“சரி மதினி..” என்றவளுக்கு பேசாமல் அன்பரசியிடம் சொல்லி பார்ப்போமா என்று தோன்றியது..

சமையல் முடித்து பாத்திரங்களை ஒதுக்கிப் போட்டுக்கொண்டே அன்பரசியை பார்த்தாள் பொன்னி.. அன்பரசியும், “என்ன பொன்னி எதுவும் சொல்லணுமா??” என்று கேட்க,

“இல்ல மதினி.. அது…” என்றவள் கொஞ்சம் தயங்க, “என்ன? என்ன விஷயம் சொல்லு…” என்றாள்..

“இல்ல.. அமுதாக்கு இப்போ என்ன இருபத்தி ரெண்டு வயசு ஆகுமா?? அதுக்குள்ள ஏன் கல்யாணம் அது இதுன்னு.. மேற்கொண்டு படிக்க வைக்கலாம் இல்லையா??” என்று பொன்னி சொன்னதுமே, அன்பரசியின் முகம் அப்படியே மாறிவிட்டது..

“என்ன மதினி?? அமைதியா இருக்கீங்க…??”

“என்ன பேச்சு பொன்னி இது.. நடந்தது எல்லாம் மறந்துபோச்சா உனக்கு.. மறுபடி அவளை படிக்க அனுப்பி இன்னும் எதாவது இழுத்து வைக்கவா??” என்று படபடவென அமுதா பொரிய,

“இல்ல மதினி.. சின்ன வயசு தானே..” எனும்போதே,

“எனக்கு கல்யாணம் ஆகும்போது அமுதாவை விட சின்னவ நான்… எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட எட்டு வருஷம் வித்தியாசம்.. ஏன் நாங்க நல்லா வாழலையா??” என்று கேட்டவளுக்கு பொன்னி என்ன பதில் சொல்வாள்..

ஒருவர் வாழ்வை போலவே இன்னொருவர் வாழ்வும் இருக்காதே.. இருபத்தி இரண்டு ஒன்றும் அத்தனை சின்ன வயது இல்லைதான்.. அதற்காக திருமணம் பற்றி இப்போதைக்கு எண்ணமில்லாது படிக்கவேண்டும் என்று நினைப்பவளை போய் திருமணம் செய் என்று சொன்னால் எப்படி??

ஒருவர் ஒருமுறை தவறு செய்தால், திரும்பவும் அதையே செய்வர் என்று அர்த்தமா என்ன?? அதுவும் அமுதா இந்த வீட்டு பெண்.. அவளைப் பற்றி இங்கிருப்பவர்களுக்கு தெரியாதா என்ன? இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்த்தால் என்னவாம்?? என்று தான் தோன்றியது பொன்னிக்கு..

வேலைகளை முடித்துவிட்டு அவளும் அன்பரசியும் அங்கே ஹாலுக்கு செல்ல, அப்போதுதான் மன்னவனும், மகராசியும் சாமி கும்பிட்டு, அமுதாவின் ஜாதகத்தை அந்த தரகரிடம் கொடுத்துக்கொண்டு இருந்தனர்..

தரகரும் “ரொம்ப சந்தோசம்ங்க.. இதை ஜெராக்ஸ் போட்டு நானே கொண்டு வந்து திரும்ப கொடுக்கிறேன்..” என்றார்..

பொன்னி, அமுதாவைதான் பார்த்தாள்.. அமுதாவோ பொன்னியை நேருக்கு நேராய் பார்க்க முடியாது தலை குனிந்து கொள்ள, சத்யாவோ “என்ன அமுதா இப்போவே தலை குனியுற..” என்று கிண்டல் செய்ய, பொன்னிக்கோ ஆத்திரம் தான் வந்தது..

பொன்னி சென்று அமுதாவின் அருகே அமர்ந்துகொண்டு, “ஏன் இப்படி அமைதியா இருக்க.. வாய் திறந்து பேசவேண்டியது தானே…” என்று மெதுவாய் அவளுக்கு கேட்கும்படி சொல்ல,

அவளோ “என்ன மதினி சொல்ல??” என்றாள் பரிதாபமாய்..

“ம்ம்ச்.. படிக்கணும்னு சொன்னதானே அதை சொல்லு..”

“இல்ல மதினி….” என்று பொன்னி சொல்லும்போதே,  

“அட அண்ணே இங்க பாரேன்..” என்று பரஞ்சோதி, அசோக்கின் புகைப்படம் மற்றும் ஜாதகத்தை தரகர் அவர் கையில் கொடுத்திருந்தா மாப்பிளைகளின் ஜாதகங்களில் இருந்து எடுத்துக் கொடுத்தார்..

மன்னவன் வாங்கிப் பார்த்தவர், பொன்னியிடம் “அசோக் படமும் இதுல இருக்கும்மா..” என்றுமட்டும் சொல்ல, பொன்னியின் மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.

வந்திருந்த தரகரோ “உங்களோட சொந்தமா?? நல்ல இடமுங்க..” என்று சொல்ல,  

மன்னவனோ, “என் மருமகளோட அண்ணன்தான்..” என்றார் கொஞ்சம் பெருமையாய், அவர் நல்ல இடம் என்று சொன்னதில்..

“அப்படிங்களா.. ரொம்ப சந்தோசம்.. வீட்லயே பொண்ணு மாப்பிள்ளையை வச்சுக்கிட்டு, ஏன் வெளிய தேடுறீங்க??” என்று வந்ததற்கு அவரும் கேட்டு வைத்தார்.

“அப்படி சொல்லுங்க.. நானும் நேத்து இருந்து அதையே தான் சொல்றேன்.. ஆனா பாருங்க அதுவே ஜாதகம் கண்ணுல படுத்து..” என்று பரஞ்சோதி எடுத்துக் கொடுக்க, மன்னவன் பொன்னியின் முகத்தை தான் பார்த்தார்..

அவளோ, இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பார்த்துகொண்டு இருக்க,

“என்னம்மா பொன்னி, அமைதியா இருக்க?? உன் அண்ணன் ஜாதகம் இருக்கு, நம்ம அமுதாக்கும் வரன் பாக்கலாம்னு முடிவாகிடிச்சு.. சொல்ல போனா நீதான் ஆளுக்கு முன்ன நின்னு பேசணும்.. அதைவிட்டு அமைதியா இருந்தா எப்படி??” என்று பரஞ்சோதி சொல்ல, அவளோ சட்டென்று என்ன சொல்லவென்று தெரியாமல் மகராசியைப் பார்த்தாள்.. 

பொன்னியின் பார்வையில் மகராசிக்கு என்ன புரிந்ததோ என்னவோ, “மதினி.. நீங்க முதல்ல சத்யாக்கு தோதா வர வரன் இருக்கான்னு பாருங்க.. மத்தது அப்புறம் பேசிக்கலாம்..” என,

“அதும் சரிதான்..” என்ற பரஞ்சோதி, “அய்யா.. அடுத்து வர்றபோ கொஞ்சம் படிச்சு வேலையில இருக்கிற மாப்பிள்ளையா கொண்டுவாங்க..” என்று சொல்ல, அவரும் அதற்கு சரி என்றுசொல்லி, பணமும் வாங்கிக்கொண்டு கிளம்ப,

பொன்னியோ “அமுதா நீ அமைதியா இருக்கிறதுல அர்த்தமே இல்லை..” என்றாள்..

“நான் என்ன மதினி செய்யட்டும்.. என் பேச்செல்லாம் யாரும் கேட்கமாட்டாங்க…” என்று அமுதா புலம்ப,

மன்னவன் “ம்மா பொன்னி..” என்றழைக்க,

“என்னங்க மாமா…” என்றாள் அவளும்..

“நீ என்ன சொல்ற?? நான் பழசு பத்தி எதுவும் நினைக்கலை.. அசோக் பார்க்கவும் பழகவும் தங்கமான தம்பியா இருக்காப்ல.. அமுதா பத்தி உனக்கே தெரியும்.. கேட்க கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு.. இருந்தாலும்.. படிக்கிறப்போ பிள்ளைங்க அது இதுன்னு நினைச்சிக்கிறது இப்போ சகஜமா போச்சு..” எனும்போதே,

“நா.. நான் அமுதா பத்தி என்னிக்குமே குறைவா நினைக்க மாட்டேன் மாமா…” என்றாள் பொன்னியும்..

“சந்தோசம்.. அதான்.. எப்படியும் அசொக்குக்கும் பொண்ணு பார்க்கிறாங்க போல உங்கம்மா.. நம்ம வீட்லயும் பொண்ணு இருக்கே.. நீ என்ன சொல்ற??” என்று மருமகளிடம் நேரடியாகவே கேட்க,

அவளோ ‘என்ன சொல்வது???’ என்று தீவிரமாய் யோசித்துக்கொண்டு இருந்தாள்..

பரஞ்சோதியோ “அட அண்ணே என்ன நீ பொன்னிக்கு என்ன தெரியும்னு அவளை கேட்கிற.. நேரா உன் சம்பந்தியம்மாவை போய் பார்த்து கேளு..” என்று சொல்ல,

“அது.. அது அதெல்லாம் வேண்டாம் மாமா…” என்றுவிட்டாள் பொன்னி பட்டென்று..

கொஞ்சம் யோசிச்சு பேசியிருக்கலாம் தான்.. ஆனால் அந்த நேரத்தில் அவளுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.. ஒருப்பக்கம் அமுதா இன்னொரு பக்கம் அசோக்.. இருவரையும் விட்டுக்கொடுக்காது விசயத்தை சொல்லிட வேண்டும் என்று நினைத்தே வேகமாய் பேசிவிட்டாள்..

அதையும் தாண்டி அமுதாவை பேசலாம் என்று ஒரு எண்ணம் இருந்திருந்தால் மங்கை எப்போதோ சொல்லியிருப்பாரே.. பின்னே எதற்கு அவர் தரகரிடம் அசோக்கின் ஜாதகம் எல்லாம் கொடுத்து இருக்கப் போகிறார்..

பொன்னி புகழ் திருமணத்தின்போது, அவள் சித்தி முறை பெண் கூட ஒருமுறை மங்கையிடம் “என்னக்கா மாப்பிள்ளை தங்கச்சி இருக்கு போல..” என்று கொஞ்சம் விஷமமாய் கேட்க,

“இருக்கட்டும்… நம்ம அசோக்குக்கு பொன்னி எப்படி தங்கச்சியோ அதுபோல மாப்பிள்ளைக்கு அந்த பொண்ணு.. இதுல எடுத்துக்கட்டி பேச என்ன இருக்கு..” என்றுவிட்டார்..

“அதில்லைக்கா.. ஏற்கனவே ஊருக்குள்ள ஒரு பேச்சு…” என்று அந்தப்பெண்மணி இழுக்க,

“ஊரு ஆயிரம் பேசும்.. எனக்கு என் பசங்களை பத்தி தெரியும்.. ஊரு பேசுதுன்னு நாளைக்கு அந்த பிள்ளையை முடிச்சா, அப்போ அதுதான் நிஜமோன்னு அப்பவும் பேசும்.. என்ன இருந்தாலும் அமுதாவும் ஒரு பொண்ணுதான்.. போற இடத்துல சந்தோசமா பிழைக்கட்டும்..” என்று அப்போதே அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்திருந்தார்..

இதெல்லாம் மனதில் வைத்துதான் பொன்னி இப்போது மறுப்பது.. மற்றபடி அவளுக்கு அமுதா மீது தனிப்பட்ட வெறுப்பென்று எல்லாம் எதுவுமில்லை..    

“ஏன்… ஏன் வேண்டாம்???” என்று பரஞ்சோதி கேட்க அனைவரும் அவள் முகத்தைத் தான் பார்த்தனர்..

சரியாய் அதே நேரம் தோட்டத்திற்கு சென்றுவிட்டு இளங்கோவும் ஜெயபாலும் வர,

“என்ன எல்லாம் உக்காந்து கதை பேசிட்டு இருக்கீங்க??” என்றபடி இளங்கோ அமர, நித்யா வேகமாய் தன் கணவனுக்கு நடந்தவைகளை சொன்னாள்.

அனைத்தையும் கேட்ட இளங்கோ அமைதியாய் இருக்க, ஜெயபால் “ஏன்ம்மா பொன்னி எதுக்கு வேண்டாம் சொல்ற??” என்று கேட்க,

“இல்லண்ணா.. அது.. அதுவந்து.. பொண்ணு கொடுத்து.. பொண்ணு எடுத்துன்னு வேண்டாமே..” என்று பொன்னி தயக்கமாய் சொல்லும் போதே,

“நினைச்சேன்.. இதைதான் நீ சொல்வன்னு நினைச்சேன்…” என்று எழுந்து நின்றாள் அன்பரசி..

“என்ன மதினி????” என்று பொன்னி கேட்கும்போதே,

“என்ன என்ன மதினி?? இதுக்குதான் நீ அப்போவே அமுதாவை படிக்கவைக்க வேண்டியது தானேன்னு சொன்னியா??

 நான்கூட ஒருநிமிஷம் என்னவோன்னு நினைச்சேன்.. ஆனா இப்போதானே புரியுது உனக்கு இதுல விருப்பம் இல்லைன்னு…” என்று ஒருவழியாய் பரஞ்சோதி பிள்ளையார் சுழி போட்டதை அன்பரசி ஆரம்பித்து இருந்தாள்..       

 

 

Advertisement