Advertisement

தோற்றம் – 16

பொன்னிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. முதலில் என்ன இப்படி பேசுகிறான் என்றுதான் தோன்றியது. புகழேந்தி மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கும் என்றும் அவள் நினைக்கவில்லை.. அசோக் இங்கே வராது போனதில்  அவனுக்கு ஒரு வருத்தம் இருப்பது தெரியும்..

ஆனாலும் அசோக்கின் உணர்வுகள் அவனுக்கு புரிந்திருக்கும் என்றே நினைத்தாள். ஏறக்குறைய ஒரே வயதினர்கள், ஆக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது மிக சுலபம் என்றுதான் நினைத்திருந்தாள்.  

நடந்த பிரச்சனைகள் முடிந்திருக்கலாம் ஆனால் அதனை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாதே. மறந்துவிட்டு ஒன்றும் நடவாதது போலவும் இருந்திட முடியாதே..

அசோக் இவர்களை எல்லாம் நேரில் கண்டு கொஞ்சம் சகஜமாய் பேசவே எத்தனை பாடுபட்டான் என்பது அவளுக்குத்தான் தெரியும்.. புகழேந்தியும் இளங்கோவும் இவர்கள் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்கையில் பெருந்தன்மையாய்  சரி சரி என்றுவிட்டான்..

ஆனால் பொன்னிக்கு புகழேந்தியோடுதான் திருமணம் என்று முடிவானதும் அசோக்கிற்குள் உண்டான ஒரு சங்கடத்தை பொன்னி அருகில் இருந்தே பார்த்தாளே..

அப்போது தான் அவளுக்கு புரிந்தது எத்தனை முட்டாள்தனமாய் அவள், புகழ் வந்து கேட்டதும் கடைசியில் சரி என்று சொல்லிவிட்டாள் என்று.. அசோக்கை பற்றி சிறிதும் யோசிக்கவில்லை என்று பொன்னிக்கு மனதினுள்ளே பெரும் கஷ்டமாய் போனது..

“அசோக். சா.. சாரி.. நான்.. நான் அவசரப்பட்டுட்டேன்.. உன்னை நினைக்கலையே..” என்றவளிடம்,

“ச்சி லூசு.. இதென்ன இப்படி பேசிட்டு இருக்க.. சூழ்நிலை சந்தர்ப்பம் தான் எல்லாத்துக்கும் காரணம்.. புகழ் நல்ல டைப்பா இருக்காப்ல. அவங்க குடும்பமும் குறை சொல்ற அளவுக்கு ஒண்ணுமில்ல.. ஒரே ஊரு.. இதைவிட வேறென்ன வேணும்..

எல்லாத்தையும் தாண்டி புகழுக்கு உன்னை அவ்வளோ பிடிச்சிருக்கு.. உனக்கும் பிடிச்சிருக்குன்னு தெரியுது.. அப்படியிருக்கப்போ மத்ததை எல்லாம் பெருசா நினைக்க கூடாது…” என்றான் ஆதரவாய்..

“இல்ல.. அது.. நீ.. உனக்கு சங்கடமா இருக்காதா???”

“இருக்கும் தான்.. ஏன் உனக்கே இவ்வளோ சங்கடமா இருக்கப்போ எனக்கு இருக்காதா என்ன?? அவங்களுக்கும் அப்படிதானே இருக்கும்.. இத்தனை நாள் அவங்களும் தப்பா புரிஞ்சிட்டுதானே இருந்தாங்க.. இப்போ பார் வந்து உன்னை பொண்ணு கேட்கலையா?? அதேபோல்தான் எனக்கும்.. என்ன உடனே எதுவும் நடக்காது.. கொஞ்ச நாளாகும்..”

“ஹ்ம்ம்.. நான்தான் தப்பு பண்ணிட்டேன் அசோக்.. அவர் வந்து கேட்கவும் நான்.. ம்ம்ச்.. ச்சே…” என்று தன்னை தானே நொந்துகொண்டவளைப் பார்த்தவன்,

“அடடா.. இப்போ என்ன உனக்கு.. எனக்கு சங்கடமா இருக்குன்னு நினைச்சு நீ சங்கடப் படுறியா?? இங்க பார் பொன்னி சில விஷயங்கள் நடக்கனும்னு இருந்தா அதை கண்டிப்பா யாராலும் மாத்த முடியாது.. அப்படித்தான் முன்னாடி நடந்ததும், இனிமே நடக்க போற உங்க கல்யாணமும்..

நான் என் தங்கச்சி எதிர்காலம் பத்தியும் யோசிக்கணுமில்லையா?? அதேநேரம் என்னால எல்லாத்தையும் மறந்துட்டு சகஜமா இருக்கவும் முடியாது.. கொஞ்ச நாளாகும்.. நீ அந்த வீட்ல சந்தோசமா இருந்தா அதுவே போதும்… இதுக்கு மேல அதை இதை சொல்லி குழப்பிக்காத…” என்றுவிட்டான்..

அசோக் நினைத்திருந்தால், அன்று புகழ் வந்து பொன்னியிடம் பேசியதற்கு அவனை உண்டு இல்லையென்று ஆக்கியிருக்க முடியும்.. ஆனால் அப்படியல்லாமல் ஆக்கப்பூர்வமாய் அல்லவா சிந்தித்தான்..

ஆனால் இங்கேயோ இவர்கள் பேசுவது எல்லாம் வேறுவிதமாய் இருந்தது.. அதிலும், புகழேந்தி சத்யாவின் வார்த்தைகளை நியாயப்படுத்தி பேசியது கொஞ்சமும் பொன்னிக்கு பிடிக்கவில்லை.. மற்றவர்கள் பேசுவதெல்லாம் விட கடைசியில் புகழும் அதையே சொல்ல,

“என்னங்க?? என்ன சொல்றீங்க???!!!” என்று திரும்பவும் கேட்டாள்..

புகழேந்தியோ தன் நெற்றியை அழுந்த தடவியவன், “ம்ம்ச் கண்ணு.. ஒண்ணுமில்ல விடு..” என்றான் இதைப்பற்றி பேச பிடிக்காது..

“என்ன விடு?? லாஸ்ட்ல நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்களா?? அந்த சத்யா யாருங்க உங்களை பேச.. நீங்களும் அதுக்கு ஏத்துக்கிட்டு பேசுறீங்க??”  என்று பிடி பிடியென பிடித்துவிட்டாள்.

“அடடா.. பொன்னி…” என்று ஒருமுறை அவளை அழுத்தி அழைத்தவன்,

“நமக்குள்ள இந்த பேச்சே வேண்டாம்.. தேவையில்லாத பேச்சுக்கள் தான் வளரும்.. நான் உனக்கு கூப்பிட்டதே வேற காரணமா..” என்று சொல்ல,

“இல்ல.. பரவாயில்ல எதுவா இருந்தாலும் உங்க மனசுல இருக்கிறதை சொல்லிடுங்க.. திடீர் திடீர்னு ஷாக் ஆகவேண்டாம் பாருங்க…” என்றாள் பொன்னி.

“நீ எதுக்கு ஷாக் ஆகுற.. இங்க பார் கண்ணு, உன்னை எந்த இடத்துலயும் நான் விட்டுக் கொடுத்திட மாட்டேன்.. நீதான் வேணும்னு கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கேன்..

நான் இப்பவும் கேட்கிறது எல்லாம் ஒன்னே ஒண்ணுதான் நான் வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா போ.. எனக்காக…” என்று புகழ் கேட்கும்போது கடைசியில் அவனது குரல் மிக மிக மென்மையாய் மாறிட,

பொன்னி எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்.. இப்படி பேசுகையில் அவள் என்ன சொல்ல முடியும்.. இல்லை இல்லை நீ முதலில் சொன்னது தப்பு என்று அவனோடு சண்டையிட முடியுமா என்ன??

அவன் சொன்ன வார்த்தைக்கு, புசுபுசுவென்று பொங்கிய கோபமெல்லாம் இறுதியில் புகழ் சொன்ன  ‘எனக்காக..’ என்ற ஒரே வார்த்தையில் அடங்கிப் போய்விட்டது பொன்னிக்கு..

பதிலே சொல்லாது அமைதியாய் இருந்தவளை  “கண்ணு..” என்று புகழ் அழைக்க,

“ம்ம்..” என்றுமட்டும் சொன்னாள்..

“என்ன சைலென்ட் ஆகிட்ட.. மை டியர் புல்லுக்கட்டு கலகலன்னு இருந்தாதானே பசுமையா இருக்கும்..” என,

‘ஆகா இப்படியெல்லாம் இவருக்கு பேச தெரியுமா???’ என்று யோசித்தவள், வேறெதுவும் கேட்காது, “ஹ்ம்ம் சொல்லுங்க எதுக்கு கால் பண்ணீங்க??” என்று விசயத்திற்கு வந்தாள்..

“நீ விவரமான ஆளு தான்…” என்றவன் “அம்மாக்கிட்ட சொல்லி இளங்கோவையும் மாமாவையும் ஒரு டெம்போல திங்க்ஸ் எல்லாம் அனுப்ப சொல்லு.. குவாட்டர்ஸ் ரெடியாகிடுச்சு.. திங்க்ஸ் வந்துட்டா ஆளுங்களே செட் பண்ணிடுவாங்க.. நீ வந்து அப்புறம் உனக்கு தேவைப்போல லைட்டா அல்ட்டர் மட்டும் பண்ணிக்கலாம்..” என,

அவ்வளவு நேரமிருந்த குழப்பம், சோர்வு, எல்லாம் மறைந்து சீக்கிரம் அங்கே போக போகிறோம் என்ற எண்ணமே பொன்னிக்கு ஒரு உற்சாகம் கொடுக்க,

“அப்படியா?? சரி சரி.. அப்போ நீங்க சீக்கிரமே இங்க வருவீங்களா???” என்றாள் ஆவலாய்..

“ஹா ஹா.. வந்தா என்ன குடுப்ப??” என்றான் அவனோ ஆசையாய்..

“ஹா…. என்ன குடுப்பாங்க.. வாங்க சூடா தோசை சுட்டு குடுக்கிறேன் அன்னிக்கு போல…” என்றுசொல்ல,

“எல்லாம் என் நேரம்… பால்வாடி டீச்சர் தானே நீ சோ அப்படித்தான் யோசிப்ப..” என்றான் அவனும் கிண்டலாய்..

“ஹலோ ஹலோ.. ரொம்பத்தான்..” என்று சொன்னவளுக்கும் சிரிப்பில் முகம் மலர்ந்தது..

“ஹ்ம்ம் தட்ஸ் குட் இப்படிதான் சிரிச்ச முகமா இருக்கணும்..”

“என்னவோ நேர்ல பார்க்கிறது போல சொல்றீங்க..”

“சிலது எல்லாம் நேர்ல பார்க்கமையே தெரியும்..” என்றவன்,

“சரி கண்ணு.. அம்மாக்கிட்ட சொல்லிடு.. உன்னோட ட்ரெஸ் மட்டும் நம்ம போறப்போ எடுத்துக்கலாம்.. அத்தை உனக்கு கொடுத்ததுல என்னென்ன திங்க்ஸ் வேணுமோ அதை மட்டும் பேக் பண்ணி அனுப்பு.. மத்தது எல்லாம் இங்க என்ன வேணுமோ வாங்கிக்கலாம்.. ஓகே வா…” என,

“ஹ்ம்ம் எல்லாம் சரி.. நீங்களே அத்தைக்கிட்ட சொல்லிடலாமே..” என்றாள்..

“நான் சொல்லிக்கிறேன்.. மாமாக்கிட்ட இளங்கோக்கிட்ட சொல்லிக்கிறேன் அம்மாக்கிட்ட நீ பேசு..” என்றுவிட்டான்..  

“ஹ்ம்ம் சரி..” என்றவள், வேறெதையும் நினைக்காமல், நேராய் மகராசியை தேடிப்போக, அவரோ அங்கே சமையல் செய்தபடி நித்யாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்..

சமயலறைக்குள்ள செல்ல கொஞ்சம் தயங்கி, வெளியேவே பொன்னி நிற்க, அவளைப் பார்த்த நித்யாவோ மகராசி இருப்பதால்,

“என்ன பொன்னி…” என்றாள் சகஜமாய் கேட்பதுபோல்..

‘இதென்னா டா…’ என்று பார்த்தவள், பதில் சொல்லும்முன்னே “என்ன கண்ணு..” என்றார் மகராசியும்..

“அது..” என்று பொன்னி இருவரையும் மாறி மாறி பார்க்க, “அட என்ன வெளிய நின்னு முழிக்கிற.. உள்ள வா..” என்றார் மகராசி..

அவர்தானே போகச் சொன்னார், இப்போது அவரே அழைக்கவும் தான் உள்ளே போனாள் பொன்னி.. அவளது செய்கை மகராசிக்கு அப்படித்தான் தெரிந்தது..

“ஹ்ம்ம் நேரா உள்ள வராம வெளிய நிக்கிற..” என்றபடி சமையலை கவனிக்க,

“இல்லத்தை.. அவரு போன் பண்ணார்..” என்று விஷயத்தை சொல்ல,

“ஓ நல்லது.. வீடு கிடைசிடுச்சாமா??” என்றார் மகராசியும்..

“அப்படித்தான் சொன்னார் அத்தை..”

“சரிதான் பெரியவனும் தம்பியும் வரட்டும் சொல்லிக்கலாம்.. சரி இவன் என்னிக்கு வர்றான்???” என்று மருமகள் முகத்தைப் பார்க்க,

“அது தெரியலையே???!!!” என்றாள் பொன்னி..

“இவ்வளோ நேரம் பேசினவ எப்போ வர்றீங்கன்னு கூட கேட்கலையா??” என்று மகராசி கிண்டல் செய்ய,

“ஷ்.. அது கேட்டேன்.. ஆனா அவர் சொல்ல மறந்திட்டார் போல..” என,

“நல்ல புள்ளைங்க போங்க.. நாளைக்கு அங்க போயும் இப்படியே இருந்தா சரிபடாது என்ன…” என்று கண்டிப்போடு அறிவுரையும் மகராசி வழங்க வேகமாய் தலையை தலையை ஆட்டினாள் பொன்னி.

இருவரும் பேசும்போது நித்யா வாயே திறக்கவில்லை.. மகராசி அவளுக்கும் மண்டகப்படி நடத்தியிருப்பார் என்பது பொன்னிக்கு நன்கு புரிந்தது.. நித்யாவின் அம்மாவும் தங்கையும் வீட்டில் இருக்கும் அரவமே தெரியவில்லை..

எது எப்படியோ இத்தோடு எல்லாம் முடிந்து தான் இங்கிருந்து கிளம்புகையில் பிணக்கில்லாத மனதோடு கிளம்பிச் செல்ல வேண்டும் என்றுமட்டும் நினைத்துகொண்டாள் பொன்னி..

“என்ன கண்ணு அப்படியே நிக்கிற.. போ போ.. சமையல் முடிஞ்சது.. எல்லாம் எடுத்து வை..” என்றவர் நித்யாவிடம் “பெரியவன் எங்க??? அவனுக்கு போன் போட்டு வர சொல்லு..” என்றார்..

நித்யா சரியென்று நகர்ந்துவிட, மகராசி பொன்னியிடம் “இங்க பாரு கண்ணு கூட்டு குடும்பத்துல ஆயிரம் இருக்கும்.. சட்டுன்னு நம்ம எதுவும் பேசிட கூடாது.. நாளைக்கு பின்ன ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாக்கணுமா இல்லையா??”  என்றார்..

அவர் சொல்வதும் சரிதானே.. குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும்.. அனைவரும் ஒன்றுபோல் இருப்பர் என்று எதிர்பார்க்கவும் முடியாது, அப்படி இருந்திடவும்  முடியாதே… கொஞ்சம் நாமும் அனுசரித்து தான் போகவேண்டும் அனைவரையும் என்று பொன்னி நினைத்துக்கொண்டாள்…

“சரிங்கத்தை…” என்றவள் அடுத்து வேறெதுவும் சொல்லாது, அவர் சொன்ன வேலையை செய்ய, அன்றைய நாள் அடுத்து அமைதியாய் கழிந்தது..

மறுநாள் ஜெயபால் வந்ததும் இளங்கோவிடமும், ஜெயபாலிடமும் மகராசி புகழேந்தி சொன்னதை சொல்ல,

“தெரியும்மா நேத்தே போன் பண்ணினான்…” என்று இளங்கோ சொல்ல,

“ம்மா பொன்னி.. என்னென்ன கொண்டு போகணும்னு பார்த்து எல்லாம் எடுத்து வைங்க.. நானும் இளங்கோவும் போறோம்..” என்று ஜெயபால் சொல்ல, “சரிங்கண்ணா..” என்றவள் மீண்டும் மகராசி முகம்தான் பார்த்தாள்..

புகழேந்தி ஒன்றுமட்டும் அவளுக்கு நன்கு சொல்லியிருந்தான், “எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்ட விஷயத்தை சொல்லிடு அவங்க பார்த்துப்பாங்க…” என்று..

அதையே தான் பொன்னியும் பின்பற்றினாள்.. என்னவோ ஒன்று வீட்டில் இருக்கும் அமைதி தன்னால் கேட்டுவிட கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்..

மகராசியோ “அன்பு போ.. நீயும் பொன்னியும் வேண்டியது பார்த்து எடுத்து வைங்க..” என,

பொன்னியோ ‘பரவாயில்லை சரியாதான் சொல்லிருக்கார்…’ என்று மகராசி பற்றி புகழ் சொன்னதை நினைத்துக்கொண்டாள்..

அடுத்து வேலைகள் மளமளவென்று நடக்க, ஒருவழியாய் குவாட்டர்ஸ் வீட்டிற்கு தேவைப்படும் பொருள் எல்லாம் மூட்டை கட்டியாகிவிட்டது..

மகராசி பொன்னியிடம் “உன் அம்மாக்கு போன் போட்டு வர சொல்லு.. அவங்களும் ஒருதடவ பார்த்துக்கட்டும்..” என்றுசொல்ல, பொன்னி கொஞ்சம் தயங்கினாள்..  

பரஞ்சோதியும் சத்யாவும் இருக்கும்போது அவர் வந்தால் தேவையில்லாது எதுவும் பேசுவாரோ என்று தோன்றியது..

“இல்லத்தை அம்மா எதுக்கு…??” என்று தயங்க,

“இல்ல கண்ணு.. எல்லாம் அவங்க உனக்கு கொடுத்தது தான வந்து ஒருதடவை பார்க்கட்டும்..” என்றார் மகராசி..

அதற்குமேல் மறுக்க முடியாது, மங்கைக்கு அழைத்து விஷயம் சொன்னாள் பொன்னி.. அவரும் சாதாரணமாய் “அதுக்கென்னா கொஞ்ச நேரத்துல வர்றேன்.. உனக்கு வேறெதுவும் வேணும்னா சொல்லு, அசோக் கிட்ட சொல்லி அங்கேயே வாங்கிக்கலாம்..” என்றுசொல்ல

“ம்மா அதெல்லாம் எதுவும் வேணாம்….” என்றவள் கொஞ்சம் சுற்றி முற்றி பார்த்து யாரும் இல்லை என்று தெரியவும்  “ம்மா.. இங்க நித்யாக்கா அம்மா தங்கச்சி எல்லாம் இருக்காங்க.. அது..” என்று தயங்க,

“என்ன பொன்னி?? எதுவும் பேசினாங்களா அவங்க??” என்றார் மங்கை சரியாய் யூகித்து..

“ம்மா??!!!!” என்று பொன்னி ஆச்சர்யமாய் கேட்க,

“ஹா ஹா நான் உன் அம்மா டி.. என் வயசுக்கு எத்தனை பேரை பார்த்திருப்பேன்.. நீ தயக்கமா அம்மான்னு கூப்பிடும்போதே தெரிஞ்சது.. ஒன்னும் கவலைப்படாத, உன் மாமியார் வர சொல்லி சொல்லிருக்காங்க.. நான் வராமா இருந்தா சரியா இருக்காது.. வந்து பார்த்துட்டு ஒரு பத்து நிமிசம்ல கிளம்பிடுவேன்..” என,  பொன்னிக்கு சங்கடமாய் போனது..

ஆனாலும் அவளால் என்ன சொல்லிட முடியும் “சரிம்மா…” என்றுமட்டும் சொல்லி வைத்துவிட்டாள்..

மங்கை அங்கே வந்தபோது பரஞ்சோதியும் சத்யாவையும் தவிர மற்றவர்கள் எல்லாம் நன்றாகவே பேசினார். அமுதா ஆரம்பத்தில் பேச கொஞ்சம் தயங்கினாலும் மங்கையாகவே “என்னம்மா எப்படி இருக்க??” என்று விசாரிக்க, அதன் பிறகு அவளின் தயக்கம் கொஞ்சம் குறைவதாய் பட்டது..

நித்யா கூட கொஞ்சம் சகஜமாய் இருப்பது தெரிந்தது.. பரஞ்சோதி தான் அனைத்தையும் ஆராய்ச்சியாய்ப் பார்த்துகொண்டு இருந்தார்..

மங்கை வந்ததற்கு அவர்களிடமும் ஓரிரு வார்த்தைகள் பேச, பரஞ்சோதி சும்மா இருக்காமல் “அப்புறம் பொண்ணுக்கு உள்ளூர்லயே மாப்பிள்ளை பிடிச்சுட்டீங்க.. பையனுக்கு எப்போ கல்யாணம்??” என்று கேட்க, பொன்னிக்கு திக்கென்று ஆனது..

ஆனால் மங்கையோ “அவனுக்கும் பார்த்துக்கிட்டே தான் இருக்கோம்.. தரகர் கிட்ட சொல்லி வச்சிருக்கு.. நல்ல இடம் தோதா வந்தா முடிக்கணும்..” என்றார் பரமார்த்தமாய்…

மற்றவர்களும் இந்த பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தாலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.. மன்னவனும் அப்போது தான் வீட்டிற்கு வந்தவர், பெண்கள் பேசிக்கொள்ளட்டும்  என்று ஒதுங்கி அமர்ந்திட,

பொன்னிக்கு தான் மனம் அடித்துக்கொண்டது எங்கே இருக்கமாட்டாமல் அமுதாவை பேச வேண்டியது தானே என்று யாராவது ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?? என்று முழித்துக்கொண்டு இருந்தாள்..

நல்லவேளை சரியாய் அதே நேரம் இளங்கோ வந்தவன் “டெம்போ வந்திடுச்சு.. பொருள் எல்லாம் ஏத்தி வச்சிடலாமா??” என்று கேட்க,  ‘யப்பாடி…’ என்று நிம்மதியாய் மூச்சுவிட்டாள் பொன்னி..

ஒருவழியாய், கட்டில் பீரோ பாத்திரம் பண்டம் என்று அனைத்தையும் ஏற்றி ஜெயபாலும், இளங்கோவும் கிளம்பிட, அடுத்து மங்கையும் சொல்லிக்கொண்டு கிளம்ப, பொன்னிக்கு இன்றைய நாள் பிரச்னைகள் இல்லாது முடிந்ததில் பரம நிம்மதி..

ஆனால் வீட்டிற்கு பிரச்சனை செய்யவென்றே இரு ஜீவன்கள் வந்திருக்கையில், அதெப்படி அவளால் நிம்மதியாய் இருந்திட முடியும்.. இரவு உணவு உண்டுவிட்டு, கொஞ்ச நேரம் ஹாலில் அமர்ந்திருந்தாள், பிள்ளைகள் இருவரும் இவளையோட்டி அமர்ந்து ஸ்லேட்டில் எதையோ கிறுக்கிக்கொண்டு இருந்தனர்..

ஸ்வேதா அழகாய் ‘அத்தை..’ என்று சொல்ல பழகிவிட்டாள், முகேஷ் தான் இன்னமும் ‘மிஸ் மிஸ்..’ என்று சொல்லிக்கொண்டு இருக்க,

“டேய் குட்டி நான் உனக்கு சித்திடா..” என்று அப்போதும் சொல்லிக்கொண்டு இருந்தாள்..

வீட்டில் முதல்நாள் நடத்த சிறு சிறு பூசல்கள் எல்லாம் மகராசி மூலமாய் மன்னவனுக்கு தெரியும் என்பது ஓரளவு அவளால் யூகிக்க முடிந்தது.. அதுவும் அவராகவே வந்து “புகழ் கிட்ட சொல்லியாச்சாம்மா இளங்கோவும் ஜெயபாலும் கிளம்பினதை…” என்று கேட்க, இந்த பேச்சு தனக்கான சமாதான படலம்  என்று அவளால் புரிந்துகொள்ள முடியாதா என்ன?

“ம்ம் சொல்லிட்டேன் மாமா..” என்றவள் அடுத்து பிள்ளைகளை கவனிக்க, பரஞ்சோதி அங்கே வந்தவர்,

“அண்ணே இப்போவாது உன்கூட பேச நேரம் கிடைக்குமா??” என்று இடக்காய் கேட்டபடி அமர்ந்தார்..

“என்ன ஜோதி ஏன் இப்படி கேட்கிற??”

“அதில்ல வீட்ல முன்னமாதிரி எதையும் சாதாரணமா பேச முடியுறதில்லை..” என்றவரின் பார்வையோ பொன்னியை பார்த்தது..

மன்னவனுக்கு அது புரியாமல் போகுமா என்ன??

“என்ன ஜோதி.. சும்மா சொல்லு.. என்ன விஷயம்..”

“அது உனக்கு தெரிஞ்ச தரகர் யாராவது இருந்தா சொல்லு.. நம்ம சத்யாக்கு வரன் பார்க்க சொல்லணும்..” என,

“அதுக்கென்ன நாளைக்கே கூட வர சொல்றேன்.. நானே கூட இருந்து பேசுறேன்…” என்றான் சந்தோசமாய்..

“ஹ்ம்ம் என்னவோ… இத்தனை வருஷம் தான் நான் எதை எதையோ நினைச்சு சத்யாக்கு வரன் எதுவும் பார்க்காம இருந்தேன்.. ஆனா இனியும் அப்படி இருக்க முடியுமா என்ன?? இல்ல முன்ன மாதிரி தான் இங்க வந்துபோக முடியுமா என்ன??” என,

பொன்னிக்கு இதோடு எழுந்து உள்ளே சென்றுவிடலாம் என்று தோன்ற, “குட்டீஸ் உள்ள போயி எழுதுவோமா??” என்று சொல்லிக் கொண்டே எழ,

“ஏம்மா பொன்னி.. உங்க அண்ணனுக்கு கூட பொண்ணு பார்க்கிறதா உங்கம்மா சொன்னாங்களே, சத்யாக்கு முறை வராது.. ஆனா நம்ம அமுதாக்கு முறை வருமே..” என்றவர்

“ஏண்ணே அமுதாவுக்கும் பொன்னி அண்ணனுக்கும் பேசினா என்ன??” என்று அழகாய் ஒரு குண்டை போட்டார் அங்கே..          

 

Advertisement