Advertisement

தோற்றம் – 15

“என்ன சொன்ன???!!!” என்று கண்களை இடுக்கி, வேகமாய் சத்யாவின் புறம் நெருங்கியவளின் தோற்றமே சத்யாவிற்கு பயம்கொள்ள செய்தது..

புதிதாய் வந்தவள் தானே, பதில் கொடுக்கமாட்டாள் என்றே எண்ணியிருந்தனர் பரஞ்சோதியும் சத்யாவும்.. ஆனால் பொன்னியை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்..??

பொன்னியோ சத்யாவைப் பார்த்த பார்வையிலேயே எரித்துவிடுவாள் போல் இருக்க, மகராசி தான் வேகமாய் பொன்னியை திரும்பவும் பிடித்தவர்,

“கண்ணு நீ.. நீ உள்ள போ..” என்றார் அவளை அங்கிருந்து கிளப்பும் முயற்சியாய்..

“ஏன்?? ஏன் அத்தை… அவங்க பேசினது உங்க பையனை… உங்களுக்கு கஷ்டமா இல்லையா??” என்றவளின் பார்வை நீ பேசுகிறாயா இல்லை நானே பேசவா என்பதாய் தான் தோன்றியது மகராசிக்கு..

“நான் பேசிக்கிறேன்.. நீ போ கண்ணு…” என்றவர், அமுதாவை அழைத்து, பொன்னியை உள்ளே அழைத்துக்கொண்டு போக சொல்ல, பொன்னியோ மகராசியின் வார்த்தைகளுக்காக மட்டுமே உள்ளே சென்றாள்..

சத்யாவோ பொன்னி அவளைப் பார்த்த பார்வையிலேயே கொஞ்சம் அதிர்ந்திருக்க, அடுத்து வாய் திறக்கவில்லை..    

பொன்னி உள்ளே சென்றதுமே, பரஞ்சோதி “அம்மாடியோ என்னா பேச்சு.. கல்யாணம் முடிஞ்சு முழுசா பத்துநாள் கூட முடியல??? அதுக்குள்ள இவ்வளோ பேச்சா??..” என்று மீண்டும் ஆரம்பிக்க,

மகராசி “மதினி.. அவ சின்ன பொண்ணு.. இப்போதான் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கா.. அதுமில்லாம யாருக்குமே அவங்கவங்க புருஷனை பேசினா கோவம் வரத்தான் செய்யும்…” என,

“அடேங்கப்பா.. இது நல்லாயிருக்கு மகா.. அப்போ நாங்க என்ன வேத்து மனுசங்களா?? எப்பவும் வருசத்துக்கு ஒருதடவ அண்ணன் வீட்ல வந்து தங்கிட்டு போவேனே.. அதுபோலத்தான் இப்பவும் வந்தேன்.. போதாத குறைக்கு பொண்ணையும் கொடுத்திருக்கேன்.. இது எனக்கு பிறந்த வீடு.. சம்பந்தம் பண்ண வீடும் கூட…” எனும்போதே, வெளியே சென்றிருந்த நித்யாவும் இளங்கோவும் வந்திட,

சத்யா  வேகமாய் சென்று நித்யாவை கட்டிக்கொண்டு அழவே தொடங்கிவிட்டாள்..

“ஏய் என்னாச்சு?? ஏன் இப்படி அழற.. சத்யா???”  என்று நித்யா அவளிடம் கேட்க, அவளோ மேலும் மேலும் சத்தம் கூட்டிக்கொண்டே போக,

இளங்கோ மகராசியிடம் “ம்மா என்னம்மா ஆச்சு..”  என்றான் ஒன்றும் புரியாமல்..

பொதுவாய் இளங்கோவிற்கு நித்யாவை பிடிக்கும், ஆனால் அவள் வீட்டினரை பிடிக்காது. என்னதான் அப்பாவின் உடன் பிறந்த அத்தை என்றாலும் பரஞ்சோதியின் பேச்சு அவனுக்கு பிடிக்காது.. இருந்தாலும் மனைவியின்  உறவுகள் என்று வருகையில் அவர்களை அவனால் விட்டுக்கொடுத்தும் பேச முடியாதே.. ஆகையால் நேராகவே மகராசியிடம் தான் பேசினான்..

மகராசி பதில் சொல்வதற்கு முன்னமே, “நான் சொல்றேன் மாமா…” என்று நிமிர்ந்த சத்யா,

“என்ன.. என்னைய.. அந்த பொன்னி அடிக்க வந்துட்டா….” என்றவிட்டு மீண்டும் அழத் தொடங்க..

“என்னது???!! அடிக்க வந்தாளா??” என்று நித்யா அதிர்ச்சியாய் கேட்க, இளங்கோவோ நம்ப முடியாமல் மகராசியைப் பார்த்தான்..

“ஆமா நித்யா.. சாதாரணமாதான் பேசிட்டு இருந்தோம்.. சத்யா புகழேந்திப் பத்தி பேசவும் அந்த பொன்னி அடிக்க போயிட்டா..” என்று பரஞ்சோதியும் பிடித்துக்கொள்ள,

“சத்யா ஏன் புகழ் பத்தி பேசணும்…” என்று இளங்கோ முகத்தை சுருக்க,

“அத்தை என்ன அத்தை இதெல்லாம்??!!” என்று நித்யா கேட்க,

இளங்கோவோ என்னவோ நடந்திருக்கு என்று யூகித்தவன் “என்னவோ செஞ்சு தொலைங்க…” என்றுவிட்டு திரும்பவும் வெளியே சென்றுவிட்டான்..

ஆனால் நித்யாவோ விடாமல் “அத்தை என்ன இதெல்லாம்.. நீங்க பார்த்துட்டு சும்மாவா இருந்தீங்க??” என்று கேட்க,

“நித்யா முதல்ல என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத…” என்றவர் நடந்ததை சொல்ல, நித்யா பரஞ்சோதியை முறைத்தவள்,

“ம்மா இதெல்லாம் உனக்கு தேவையா?? வந்தோமா இருந்தோமான்னு இருக்கணும்.. அதைவிட்டு கண்ட பேச்செல்லாம் பேசினா இப்படித்தான் அசிங்கப்படனும்.. ஆமா உனக்கேன் இந்த பேச்சு சத்யா..

விருந்தாட வந்தீங்களா இருந்தீங்களான்னு இருக்கணும்.. யாரோ யாரையோ கல்யாணம் பண்றாங்க.. உங்களுக்கு என்ன..??” என்றவளின் பேச்சில் விஷமம் இருப்பதாகவே மகராசிக்கு பட்டது..  

“என்ன நித்யா சொல்ற ?? நாங்க என்ன விருந்தாளியா???” என்று பரஞ்சோதி திரும்ப ஆரம்பிக்க, மகராசி நித்யாவை ‘சொல்லி வை..’ என்பதுபோல் பார்த்துவிட்டு பொன்னியைத் தேடி போனார்..                        

அவரைப் பொறுத்த மட்டில்  வீட்டில் இப்போது அதுவும் புகழ் இல்லாத இந்த நேரத்தில் எந்த பிரச்சனையும் வேண்டாமே என்று தான் தோன்றியது.. காரணம் பரஞ்சோதி பற்றியும் சத்யா பற்றியும் அவர் நன்கு அறிவாரே..

நித்யா தனியாய் இருக்கும்போது ஒரு ரகம் என்றால், இவர்களோடு இருக்கையில் வேறு மாதிரி இருப்பாள்.. அதுவும் அவருக்குத் தெரியும்..  சொந்தம் விட்டு போய்விடக்கூடாது என்பதாலேயே நித்யாவை இளங்கோவிற்கு மணமுடித்தது..

வீட்டினர் யாரிடமும் கூட மன்னவன் கேட்கவில்லை.. ஒருநாள் பரஞ்சோதி வீட்டிற்கு சென்று வந்தவர், இளங்கோவிற்கு நித்யாவை பேசி முடித்திருப்பதாக சொல்ல, மகராசி சரி என்றவர், வேறெதுவும் சொல்லவில்லை..

ஏனெனில் இப்படிதான் நடக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.. அன்பரசிக்குத் தான் முதலில் திருமணம் நடந்தது.. அதுவும் தன்னுடன் பிறந்த தம்பிக்கே தான் மகராசி கொடுக்க எண்ணியதால் அப்போதே பரஞ்சோதி,

“அண்ணே மகா எப்படி பிறந்த வீட்ல பொண்ணு கொடுக்கிறாளோ அதுபோல தானே எனக்கும் எண்ணம் இருக்கும்.. நானும் ரெண்டு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்கேன்…” என்று பேச்சை ஆரம்பித்து இருந்தார்..  

அன்பரசி திருமணம் முடிந்து ஓராண்டுகளில் இளங்கோவிற்கும் திருமணம் செய்யவேண்டும் என்று பேச்சு வரவுமே, மன்னவன் நித்யாவை தான் பேசி முடித்தார்..

தன்னிடம் கேட்கவில்லை என்ற எண்ணமிருந்தாலும் மகராசிக்கு இதில் மறுத்து பேசினாலும் எதுவும் பலனில்லை என்று தான் தோன்றியது.. அதற்கும் மேலாய் நித்யாவை பற்றி வேறு மாற்று கருத்துக்கள் எதுவுமில்லை என்பதால் சரி என்றுவிட்டனர்..

இதைத்தான் இளங்கோவும் அன்று புகழேந்தியிடம் சொன்னான்.. என் திருமணத்தை பற்றி என்னிடம் யாரும் எதுவும் சொல்லவில்லை.. பிடித்திருக்கா.. இல்லையா இதெல்லாம் எதுவுமே கேட்டதில்லை என்று…

மகராசி இந்த அளவில் இதை அப்படியே முடித்துவிடவே எண்ணினார்.. ஆனால் அது முடியுமா?? அதுவும் பிரச்சனை இழுக்கவேண்டும் என்றே வந்திருப்பவர்களுக்கு மத்தியில் நாம் என்னதான் சமாதானம் செய்தாலும் அது நடக்குமா என்ன??

நித்யா அவர்களிடம் என்ன சொன்னாளோ, ஆனால் அமுதா பொன்னியிடம் கொஞ்சம் பொறுமையாய் போகுமாறு தான் சொல்லிக்கொண்டு இருந்தாள்.. அங்கே மகராசியும் போக, பொன்னி ஒன்றும் பேசவில்லை.. அமைதியாய் இருந்தாள்..

“என்ன கண்ணு நீ… கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதா??” என்றவரை பார்த்தவள்,

“அவங்க பேசினது உங்க பையனை பத்திதான்… மான ரோசமில்லாம என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்தார்ன்னு சொல்றா?? என்னை முறைப்படி தானே கல்யாணம் பண்ணிட்டு வந்தார்.. அதுவும் நீங்களும் மாமாவும் தானே வந்து பொண்ணு கேட்டீங்க???” என்றவளுக்கு என்ன முயன்றும் சத்யா புகழை அப்படி பேசியது பொறுக்கவே முடியவில்லை..

யார் இவள்?? இவளுக்கு என்ன ?? என்று கோபம் கோபமாய் தான் வந்தது…

“நீ சொல்றது எல்லாம் சரிதான் கண்ணு.. ஆனா அவங்கக்கிட்ட இப்படியெல்லாம் பேசினா நம்ம நிம்மதிதான் போகும்.. அவங்க பேசிக்கிட்டே இருக்கட்டும்னு நீ உன் வேலையைப் பார்த்துட்டு இருந்தா ஒருநேரத்துல அவங்களே பேச்சை நிறுத்திடுவாங்க..

அதைவிட்டு அவங்க வம்பு வளர்க்க நினைச்சா நீ அதுக்கு இன்னும் தண்ணி ஊத்தி வளர்ப்ப போல…” என்று மகராசி பேசிய விதத்தில் பொன்னிக்கு அத்தனை நேரமிருந்த கோபம் போய் லேசாய் புன்னகை பூக்க,

“ஹ்ம்ம் இது தான் லட்சனம்.. புது பொண்ணு சிரிச்சுட்டு சந்தோசமா இருந்தா தான் அழகு.. அதைவிட்டு அவங்க பேசினாங்க இவங்க பேசினாங்கன்னு  இருக்கக்கூடாது.. விட்டுடு.. ரெண்டு நாள் இருந்துட்டு கிளம்பிடுவாங்க.. நீ ஊருக்கு கொண்டு போகவேண்டியது எல்லாம் இப்போ இருந்தே எடுத்து வை..” என்றுவிட்டு சென்றுவிட்டார்..

பொன்னிக்கு சுத்தமாய் மகராசியை புரிந்துகொள்ளவே முடியவில்லை.. புகழேந்தி திருமணம் பற்றி பேசியதும், முதல் எதிர்ப்பு அவரிடம் இருந்துதான் வரும் என்று நினைத்தாள்.. ஆனால் அவரோ மன்னவனோடு சேர்ந்து வந்து பெண் கேட்டு அவளது நினைப்பை உடைத்தார்..

ஆகமொத்தம் வீட்டின் ஒற்றுமையும் அமைதியும் மகராசியின் கவனிப்பில் தான் இருக்கிறது என்பது பொன்னிக்கு நன்கு புரிந்துபோனது.. அத்தனை முன்னிட்டுதான் இப்போது அவர்சொல்லவும் அங்கிருந்து நகர்ந்தால்.. இல்லையோ சத்யாவின் கத்தி அதோகதி தான்..

“என்ன மதினி நான் இவ்வளோ சொல்லியும் கோபமாவே இருந்தீங்க.. இப்போ அம்மா வந்து சொல்லவும் சிரிச்சிட்டீங்க..??” என்று அமுதா கேட்கவும்,

“ஹ்ம்ம் தெரியலை.. ஆனா நானும் சட்டுன்னு கோபப்பட்டிருக்க கூடாது தானோ..” என்றாள் லேசாய் நெற்றியை சுருக்கி..

“உங்க கோபம் சரிதான்.. ஆனா கொஞ்சம் சட்டுன்னும் பேசிருக்க வேண்டாம்..” என்றாள் அமுதாவும்..

“ஹ்ம்ம்.. இனிமே பார்த்து நடந்துக்கிறேன்..” என்ற பொன்னியும், ‘ச்சே.. அவசரப்பட்டு நடந்துக்கிட்டோம்..’ என்று எண்ணினாள்..

“எப்பவும் அத்தை வருசா வருசம் வந்து ஒரு ரெண்டுநாள் இருப்பாங்க மதினி.. அதுனால ஒண்ணுமில்ல சீக்கிரம் கிளம்பிடுவாங்க..”

“இருக்கட்டும் அமுதா.. நானும் இப்போ இதை பெருசு பண்ணலை..” என்றவள்

“அப்புறம் உங்க அண்ணன் போன் பண்ணார்னா இதெல்லாம் நீ சொல்லிட்டு இருக்காத.. தேவையில்லாம சங்கடப்படுவார்..” என்றவளுக்கு சரி என்று தலையை ஆட்டினாள் அமுதா..

கூட்டு குடும்பங்களில் நடக்கும் சாதாரண சண்டைதான் என்றே பொன்னி நினைத்திருந்தால், ஆனால் இந்த விஷயம் பல பல பிரச்சனைகளுக்கு அடிபோடும் என்று நினைக்கவில்லை….

கொஞ்ச நேரம் அறைக்குள் இருந்துவிட்டு பின் எப்போதும் போல் அவளது வேலைகளை பார்த்துகொண்டு இருக்க, நித்யா அவளோடு ஒருவார்த்தை பேசினால் இல்லை… முதலில் இதை பொன்னி கவனிக்கவில்லை.. எப்போதுமே சமையல் அன்பரசியும் நித்யாவும் தான் செய்வர்.

இன்றோ அன்பரசியும் ஜெயபாலும், மன்னவனும் ஒரு திருமணத்திற்கு என்று பக்கத்து ஊர் சென்றிருக்க, மகராசி பொன்னியை நித்யாவோடு சேர்ந்து சமைக்க சொன்னார்..

பொன்னிக்கு சமையல் தெரியும்.. ஆனால் இத்தனை பேருக்கு சேர்த்து சமைப்பது என்பது அவளுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆகா ஒவ்வொன்றையும் நித்யாவிடம் கேட்டே செய்வோம் என்று அவளிடம் கேட்க அவளோ பதிலே சொல்லவில்லை..

“அக்கா.. உப்பு சரியா இருக்கான்னு கொஞ்சம் பாருங்களேன்..” என்றவளுக்கு பதிலே வராது போக, திரும்பிப் பார்க்க,

நித்யாவோ முகத்தை உர்ரென்று வைத்து வேலை செய்கிறேன் என்ற பெயரில் சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்களை எல்லாம் அங்கே இங்கே மாற்றி நங் நங் என்று மாற்றி வைத்துக்கொண்டு இருக்க,

“அக்கா..!!!” என்று கொஞ்சம் சத்தமாகவே அழைத்தாள் பொன்னி..

அவளின் அழைப்பை கேட்டு, “என்ன?? என்ன பொன்னி வேணும் இப்போ உனக்கு?? எப்படி உன்னால இப்படி ஒண்ணுமே நடக்காதது போல பேச முடியுது..??” என்றாள் வேகமாய்..

“என்னக்கா??!! என்ன சொல்றீங்க???!!!”

“என்ன சொல்றேனா?? ஆகா…!! அப்போ உனக்கு ஒன்னும் தெரியாதோ…” என்று எகத்தாளமாய் நித்யா கேட்க,

“இப்போ நான் உங்களை என்னக்கா சொல்லிட்டேன்.. இதுல உப்பு சரியா இருக்கான்னு பார்த்து சொல்லுங்கன்னு தானே கேட்டேன்..” என்றாள் இவளும்..

“அட அட.. என்ன நடிப்புடா சாமி.. என்ன இருந்தாலும் படிச்சவ இல்லையா.. அதான் பாசாங்கு காட்டுற.. உன்னமாதிரி எனக்கு வராதும்மா. எதுன்னாலும் முகத்துக்கு நேரா பேசிடுவேன்..” என்றவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவள்,

அடுப்பை அணைத்துவிட்டு, கைகளை கட்டி, சமையல் மேடையில் சாய்ந்து நின்று, “ம்ம் சரி பேசுங்க..” என்றாள் கொஞ்சம் அழுத்தமாய்..

“என்ன பொன்னி… உன் பேச்சும் செயலும் வர வர மாறிக்கிட்டே போகுது.. முன்னாடி எல்லாம் இப்படி நீ இல்லையே… புகழ் வேணும்னா நீ சொல்றதுக்கு எல்லாம் ஆடலாம்.. ஆனா நான் அப்படி இல்லை..” என்றவளைப் பார்த்து,

‘நீ என்ன லூசா..’ என்றுதான் பார்த்தாள் பொன்னி..

“என்ன நான் பேசிட்டே இருக்கேன்.. நீ அமைதியா பார்த்தா என்னர்த்தம்???”

“ஒரு அர்த்தமும் இல்லை.. நைட் சாப்பாட்டுக்கு நேரமாச்சு.. சமையல் முடிக்கணும்.. நீங்க பேசினதை நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்கக்கா.. உங்களுக்கே புரியும்..” என்றவள் மீண்டும் சமையல் செய்யத் தொண்டங்கிட,

“ஏய்… நான் பேசிக்கிட்டே இருக்கேன்.. நீ…” என்று நித்யா குரலை உயர்த்தும் போதே,

“ஏய் கீய்னு பேசுற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்…” என்றிருந்தாள் பொன்னி..

இவர்களின் சத்தம் கேட்டு மகராசியும், பரஞ்சோதியும் அங்கே வந்துவிட்டனர். மகராசிக்கு ஐயோ என்றிருந்தது. இதில் யார் மீது சரி தவறு என்று ஆராயும் முயற்சியில் அவர் இறங்கவில்லை.. மாறாக வீட்டை எப்படி அமைதியாய் கொண்டுபோவது என்பதே அவரது சிந்தனை..

“என்ன இது… சமையல் பண்ண சொன்னா ரெண்டுபேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க…” என்று மகராசி கேட்க,           

“இத்தனை நாள் இந்த குடும்பத்துல ஏதாவது பிரச்சனை வந்துச்சா மகா.. அன்னிக்கே சொன்னேன்.. வெளி இடத்துல இருந்து பொண்ணெடுத்தா தேவையில்லாத பிரச்சனை வரும்.. இத்தனை வருஷம் ஒன்னுக்குள்ள ஒண்ணா இருந்தாச்சு.. இப்போ அடுத்த ஆளு உள்ள வந்தா பிரச்சனை வரும்னு அன்னிக்கே சொன்னேன்..

ஆனா எங்கண்ணன் தான் கேட்கவேயில்லை.. புகழ் விரும்பிட்டான்.. அது இதுன்னு பேசி என் வாயை மூடிருச்சு.. இப்போ பாரு வந்து ரெண்டுநாள் கூட அமைதியா இருக்க முடியலை..” என்று பரஞ்சோதி சொல்லவும்,

மகராசி பொன்னியைப் பார்த்து “உன்னை பொறுமையா போன்னு தானே சொன்னேன்.. அவ்வளோ சொல்லியும் என்ன கண்ணு நீ??” என்று சலிப்பாய் கேட்டுவிட்டார்..

“அத்தை நான்…” என்று அவள் பதில் சொல்ல வர,

“ஒன்னும் வேண்டாம்.. நீ போ போய் ஊருக்கு போறதுக்கு உன் துணியெல்லாம் எடுத்து வை.. நான் பார்த்துக்கிறேன்..” என,

“இல்லத்தை.. அது..” என்று பொன்னி தயங்கி நின்றாள்..

“ம்ம்ச் போன்னு சொல்றேன்ல… ஒருதடவ சொன்னா கேட்கப் பழகு.. இங்க இருக்கவரைக்கும் எல்லாருக்கும் அனுசரிச்சு போ.. மெட்ராசுக்கு போய் உன் விருப்பப்படி இரு…” என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்லிவிட, பொன்னிக்கு மனம் ரொம்ப ரொம்ப சங்கடமாய் போய்விட்டது..

அதாவது இங்கே இருக்கும் வரைக்கும் எங்கள் பேச்சை கேட்டு நட, நீ தனியே போன பிறகு எப்படிவேண்டுமானாலும் இருந்துகொள் என்பதுதானே மகராசி பேச்சின் கருத்து.. இது அவளுக்கு புரியாமல் இருக்குமா என்ன??

நித்யாவையும், மகராசியையும் பார்த்தவள், ஒன்றும் சொல்லாமல் அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்..

‘ச்சே கடைசில அத்தையும் இப்படி பேசிட்டாங்க..’ என்றெண்ணியவளுக்கு எப்போதடா சென்னை செல்வோம் என்றாகிவிட்டது..

பொறுமையாய் போகலாம் தான்.. அனைவரையும் அனுசரித்து போகலாம் தான்.. ஆனால் அதையே மற்றவர்களும் நினைக்கவேண்டும் அல்லவா.. இவள் மட்டுமே அதெல்லாம் செய்ய முடியுமா என்ன..??

‘கொஞ்சமாது அத்தை நான் சொல்றதை கேட்டாங்களா??’ என்றெண்ணியவளுக்கு புரியவில்லை பெரும்பாலான குடும்பங்களில் சரி எது தவறு எது என்று ஆராய்வது இல்லை.. அதற்குமாறாக பிரச்சனை வராது இருந்தால் போதும் என்று தான் நினைக்கின்றனர் என்று..

அறையினுள்ளே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவளுக்கு புகழேந்தியிடம் பேசவேண்டும் என்று தோன்ற, நேரம் பார்த்தாள்..

அவன் இன்னும் வேலை முடிந்து வந்திருக்கமாட்டான் என்று நினைக்கும் போதே புகழேந்தியே அழைத்துவிட்டான் “கண்ணு….” என்று..

“ஹப்பாடி.. நூராயிசு…” என்றுதான் பொன்னி ஆரம்பித்தாள்..

“ஏன் கண்ணு என்னை நினைச்சியா???” என்றவனின் குரலில் கொஞ்சம் உல்லாசம் எட்டிப் பார்த்தது..

“இல்ல உங்களுக்கு கால் பண்ணனும் போல இருந்தது.. ஆனா நீங்க ரூமுக்கு வந்திருக்க மாட்டீங்கன்னு பண்ணலை..” என்றவளுக்கு என்ன முயன்றும் குரல் உள்ளே போவதை தடுக்க முடியவில்லை..

“கண்ணு.. என்னாச்சு?? ஏன் எப்படியோ பேசுற??” என்று புகழ் கேட்டுவிட,

‘ஷ்…!!!’  என்று நெற்றியைத் தட்டியவள், “ஒண்ணுமில்ல சும்மாதான்..” என்றாள்..

“இல்லையே.. பொதுவா இந்நேரம் நீ வேலையா இருப்ப.. கால் பண்ணாலும் எடுப்பியோன்னு யோசனை பண்ணிட்டே கால் பண்ணேன்.. ஆனா நீ எடுத்தும் இப்படி சொல்ற.. சொல்லு கண்ணு என்னாச்சு??” என,

அமுதாவை புகழிடம் எதுவும் சொல்ல கூடாது என்று சொல்லி வைத்தவள், அவன் கேட்டதும் அதனை எல்லாம் மறந்து, அவனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டாள் பொன்னி..

அனைத்தையும் கேட்டவன், “ஓ…!!!” என்றுமட்டும் சொல்ல,

“என்னங்க ஓன்னு சொல்றீங்க??” என்றாள் இறங்கிப்போன குரலில்..

“வேறென்ன சொல்ல சொல்ற??”

“என்னங்க இப்படி சொல்றீங்க..?? சத்யா உங்களை பேசினது சரியா?? அது புரியாம நித்யாக்காவும் இப்படி பண்றாங்க..” எனும்போதே,

“இங்க பாரு இதுல யார் மேல சரி.. யார்மேல தப்புன்னு எல்லாம் நான் சொல்ல வரலை.. ஆனா ஒருதடவை அசோக் நம்ம வீட்டுக்கு வந்துட்டு போயிருந்தா இன்னிக்கு இந்த பேச்சே வந்திருக்காது..” என்றான் புகழ் பல்லைக்கடித்து..

“என்ன?? என்ன சொல்றீங்க??” என்று பொன்னி அவன் சொன்னது புரியாது திரும்பக் கேட்க,

“நான் சொல்றது புரியலையா??” என்றவன் திரும்பவும் சொல்ல, “என்னங்க நீங்க எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்படி பேசுறீங்க??”என்று பொன்னி சொல்ல,

“அப்போ நீ சொல்றதை வச்சுப் பார்த்தா சத்யா என்னை சொன்னது சரின்னு சொல்லாம சொல்ற அப்படித்தான…” என்றான் புகழேந்தியும் பதிலுக்கு..             

                             

Advertisement